33 – ருத்ராதித்யன்
ஆருத்ரா அதிர்வுடன் ரணதேவ்வை பார்க்க, அவரும் அதிர்ந்து ஆச்சியைப் பார்த்தார்.
“என்ன விக்ரமா எதுக்கு இவ்வளவு அதிர்ச்சி?”, ஆச்சி ஆயாசமாக அங்கிருந்த மலைவேம்பு மர வேரில் அமர்ந்தபடிக் கேட்டார்.
“பத்து நாள்ல எப்படி கல்யாணம் பண்றதுங்க ஆச்சி? மாப்ள பையன பாக்கணும்… தவிர…”, என இழுத்தார்.
“தவிர என்ன.. ஒரே பேத்தி உன் குடும்ப அந்தஸ்து காட்ட பிரம்மாண்டமா கல்யாணம் பண்ணி வைக்கணும்.. அதானே நீ நினைக்கிற?”, என பைரவனை கையில் ஏந்தி கொஞ்சியபடி கூறினார்.
“ஆமாங்க ஆச்சி….”
“அப்ப பையன பாத்துட்டன்னு சொல்லு… யார் பையன்?”, என ஆச்சி கேட்டதும் மீண்டும் ஆருத்ரா அதிர்ந்து ரணதேவ்வை பார்த்தாள்.
“அது…. “, என இழுத்தார்.
“மிதிலா…. இங்க வா…. விக்ரமன் வீட்டுக்கு அவன் பாத்த மாப்ள பையன் வந்திருப்பான். போய் அவன கையோட கூட்டிட்டு வா… ஏரா அவன் அப்பா அம்மாவ கூட்டிட்டு வர நீயும் இன்னும் இரண்டு பேர் கிளம்புங்க… இத அங்கிருக்க புதுசா பொறந்த கண்ணுகுட்டிக்கு நான் குடுக்க சொன்னதா சொல்லி சாமியய்யன்கிட்ட குடுத்துட்டு வா”, என ஒரு குடுவையைக் கொடுத்தனுப்பினார்.
நடப்பது ஒன்றும் புரியாமல் ஆருத்ரா தனக்குள் குழம்பியபடி உணர்வுகளை அடக்கிக் கொண்டிருந்தாள்.
“கண்ணு சிங்கம்மா… இங்க வாடா… உனக்கு சொல்ல வேண்டிய விஷயம் நிறைய இருக்கு….”, என அவளை தன்னருகே அழைத்து அமரவைத்து கொண்டார்.
“விக்ரமா… நீ போய் அஜகரன கூட்டுட்டு வா…. நுவலி நீ கூட போ…. மத்த எல்லாரும் மூலிகை அடுக்கு தாண்டி காட்டுக்குள்ள யாரும் போகக்கூடாது…. குடிசையோட இருங்க, இல்லையா ஏரன் வீட்ல இருங்க”, என சுற்றி நின்றிருந்தவர்களுக்கும் கட்டளையிட்டார்.
“ஆச்சி….”, ரணதேவ் தயங்கி நின்றார்.
“நீ அப்ப தப்பு செஞ்சதுக்கு இப்ப நீயே தான் பரிகாரமும் செய்யணும் விக்ரமா…. போ…. அவன சமாதானம் பண்ணி கூட்டிட்டு மூலிகை அடுக்கு எல்லைக்கு வா…. நுவலி உனக்கு பாதுகாப்பா இருப்பா… அவள மீறி உன்ன அவன் ஒன்னும் பண்ண மாட்டான்…”, எனக் கூறியனுப்பினார்.
“நுவலி நீ தான் இவனுக்கு முழு பாதுகாப்பு கொடுக்கணும். நான் சொன்னது நினைவிருக்குள்ள…. கிளம்பு…. வீட்ல சாய்ச்சி வச்சிருக்கற கம்ப எடுத்துக்க… வனதேவி உன் கூடவே வருவா… உனக்கு வழி காட்டுவா… “, எனக் கூறியனுப்பிவைத்தார்.
மிதிலன் ரணதேவ் வீட்டிற்கு வரவும், ஆதி அங்கே வரவும் சரியாக இருந்தது.
“ஐயா… நீங்க நம்ம ஊரு தலைவரு பையன் தானுங்களே?”, என பவ்யமாக அருகில் வந்து கேட்டான்.
“ஆமாங்க.. நீங்க ?”, என ஆதி கேட்டான்.
“வாங்க தம்பி.. வா மிதிலா.. ஐயா உங்க கிராமத்துக்கு தானே வந்தாரு.. நீ என்ன இங்க வந்திருக்க?”, என கேட்டபடி வேலன் அருகே வந்தார்.
“ஐயாவும் சின்னம்மாவும் அங்க தானுங்க இருக்காங்க. ஆச்சி இவர கூட்டிட்டு வரச்சொல்லி அனுப்பினாங்க .. அதான் வந்தேன்….”, என ஆதியை கைகாட்டி கூறினான்.
“எந்த ஆச்சி? நான் எங்க வரணும்..? எனக்கு புரியல”, ஆதி குழப்பத்துடன் கேட்டான்.
“தம்பி நம்ம ஏரனய்யா கிராமம் தெரியுந்தானே உங்களுக்கு?”, வேலன்.
“தெரியும் “
“இவன் பேரு மிதிலன். அந்த கிராமத்துகாரன். அங்க வனயட்சி ஆச்சின்னு ஒரு வயசான அம்மா இருக்காங்க இந்த பக்கம் எல்லாருக்கும் தெரிஞ்சிருக்குமே … அமாவாசைக்கு சாமியாடுவாங்க காட்டுக்குள்ள…. “
“ஆமா… ஒரு தடவை அவங்கள பாத்திருக்கேன்”
“அவங்க உங்கள கூட்டிட்டு வரச்சொல்லி இருக்காங்க… சாதாரணமா அவங்க யார்கிட்டயும் பேசமாட்டாங்க. இப்ப உங்கள கூட்டிட்டு வரச்சொன்னா ஏதாவது முக்கியமான விஷயமா இருக்கும்… கூட போயிட்டு வாங்க. ஐயாவும் அங்க தான் இருக்காங்க. உங்க வேலையும் முடியும்…”, என வேலன் கூறியனுப்பினார்.
அதே நேரத்தில் ஆதியின் வீட்டில் ஏரன் வந்து நின்று தமிழன்பனிடம் விவரத்தை கூறிக்கொண்டிருந்தார்.
“சரிங்க ஐயா.. இதோ வரேன்… தாஸ்… தாஸ்…. சாமியய்யாவ வரச்சொல்லு”, என சத்தம் கொடுத்தார்.
“இந்த ஜுஸ் குடிங்க ஐயா… நாங்க கிளம்பி வரோம்”, என கயலும் அவர்களுக்கு பழச்சாறு கொடுத்துவிட்டு உள்ளே சென்றார்.
“ஐயா கூப்பிட்டீங்களா?”, என கேட்டபடி சாமியய்யா வந்து நின்றார்.
“நம்ம தீரனுக்கு இது குடுக்கச்சொல்லி வனயட்சி ஆச்சி குடுத்தனுப்பி இருக்காங்க… பாத்து பதமா குடு…. நானும் அம்மாவும் வெளியே போயிட்டு வரோம். பொண்ணும் மாப்ளையும் வந்தா சொல்லிடு…”, எனக் கூறி அவர்களுடன் கிளம்பிச் சென்றார்.
உடன் வர எத்தனித்த தாஸையும் வேண்டாமென்று கூறிவிட்டு வந்திருந்த பெரியவர்களுடன் சென்றனர்.
“சார்… ஐயாவும் அம்மாவும் ஏரனய்யா கிராமத்துக்கு கிளம்பி போறாங்க. எங்கள கூடவரவேணாம்னு சொல்லிட்டாங்க….”, என தாஸ் ஆதிக்கு அழைத்துக் கூறினான்.
“நானும் அங்க தான் போறேன். நான் பாத்துக்கிறேன். நீ அங்க பாத்துக்க தாஸ்…”, எனக் கூறி வைத்துவிட்டு மிதிலனை ஓரப்பார்வையில் பார்த்தான்.
அனைவரையும் அங்கே வரவைக்க வேண்டிய அவசியம் என்னவென்று சிந்தித்தபடி அந்த கிராம எல்லைக்குள் நுழைந்தான்.
ஆதி இங்கே நுழைந்த நேரம் அங்கே நெடுமாறன் கர்நாடகா பண்ணை வீட்டின் அருகில் நின்றுக் கொண்டிருந்தான்.
உடன் பாரதியும், சாரதியும் அந்த மதில் சுவர் தாண்டிச்செல்ல தேவையான ஏற்பாடுகளை செய்துக் கொண்டிருந்தனர்.
“சார்… இந்த பக்கம் மரங்கள் நிறைய இருக்கு. இங்கேயே குதிக்கலாம்… “, பாரதி கூறினாள்.
“நீங்க இந்த பக்கம் குதிங்க. நான் அந்த வீடுக்கு பக்கம் இருக்க புதர்கிட்ட இருந்து உள்ள குதிக்கறேன்… யார் கண்லையும் படாம வேலை பாக்கணும்… யாராவது ஒருத்தர் மாட்டினாலும் எதுக்காக யாருக்காக வந்தோம்னு வாய தொறக்க கூடாது. புரியுதா?”, மெல்லிய குரலில் கூறிவிட்டு மற்றொரு பக்கம் சென்றான்.
சாரதியும், பாரதியும் சத்தம் செய்யாமல் மதில் தாண்டி உள்ளே குதித்தனர். அவர்கள் எதிர்பார்த்து போல ஆட்கள் ஆங்காங்கே காவலுக்கு நின்றிருந்தனர். தமிழ் பேசும் ஆட்களே அதிகம் இருந்தது அவர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
“எந்த பக்கம் நீ போற?”, சாரதி.
“சிக்னல் எங்க காட்டுதோ அங்க தான். நீ வெளியே என்ன ஏதுன்னு கவனி… நான் உள்ள என்ன நெலவரம்னு பாத்துட்டு வரேன்…”, எனக் கூறி நிழலில் மறைந்து மறைந்து ஆராய்ச்சிக்கூடம் அருகே வந்து நின்றாள்.
சுற்றிலும் ஆட்கள் அதிகமாக இருக்க மரத்தின் மீதேறி கூரைக்கு தாவி அங்கிருந்த கண்ணாடி ஜன்னல்கள் வழியாக உள்ளே இருப்பதை பார்க்க முயன்றாள்.
ஒரு அறையில் புலி மயங்கி இருப்பது தெரிந்தது. மற்றொரு அறையில் சிலர் கணிணியில் வேலை பார்த்துக்கொண்டு இருந்தனர்.
மற்றொரு பெரிய அறையில் அர்ஜுனும், யாத்ராவும் எதிரெதிரே படுக்கவைக்கப்பட்டிருந்தனர்.
அந்த கூரையில் இருந்து ஓரளவு அந்த மொத்த இடமும் தெளிவாக தெரிந்தது.
“சார்… மேடம பாத்துட்டேன்… அர்ஜுன் சாரும் இங்க தான் இருக்காரு. ரெண்டு பேரும் படுத்திருக்காங்க. ஏதேதோ வையர் மாட்டியிருக்காங்க இரண்டு பேருக்கும். அவங்க மயக்கத்துல இருக்க மாதிரி தெரியுது….”, பாரதி கூறினாள்.
“உன் அக்யூரட் லொகேஷன் அனுப்பு…. சாரதி….”, நெடுமாறன்.
“சார்… நான் மரங்கள் அதிகம் இருக்க இடத்துல தான் மறைஞ்சிருக்கேன். அவங்கள வெளியே கொண்டு போக ஏற்பாடு பண்ணவா?”, எனக் கேட்டான்.
“நான் சொல்றவரை அமைதியா இரு. நான் குடுக்கற மெஸேஜ் சிரஞ்சீவ்கிட்ட கொண்டு போய் குடுக்கணும். பரத்க்கு க்ரீன் அண்ட் ரெட் லைட் அனுப்பு”, என கூறிவிட்டு அந்த பண்ணை வீட்டில் இருந்து சில பொருட்களை எடுத்துக்கொண்டு அடியாள் போல வேடமிட்டு காவல் காக்க சென்று நின்றான்.
அவன் அங்கு நிற்பதை கண்ட பாரதி அடுத்த கட்டமாக மெல்ல கீழிறங்கி கூடத்தின் உள்ளே செல்ல ஏதுவான வழியைத் தேடினாள்.
ஆதிக்கு அர்ஜுனும் யாத்ராவும் இருக்குமிடம் பற்றிய தகவல் கிடைத்தவுடன் கூறாமல் நெடுமாறன் அங்கு சென்று ஊர்ஜிதப்படுத்திக்கொண்டு கூறலாம் என்று ஆதியிடம் கூறாமலே ராட்சத வேகத்தில் கர்நாடகாவின் எல்லையில் இருந்த அந்த பண்ணை வீட்டிற்கு சென்றிருந்தான்.
சாரதி சிக்னல் கொடுத்ததும் பரத் முதல் வேலையாக ஆதிக்கு அழைப்பு விடுத்தான்.
“சொல்லு பரத்… “, என ஆதி முதல் ரிங்கிலேயே எடுத்து கேட்டான்.
“தம்பி ஆதித்யா…. இங்க வாப்பா…. “, என காரின் அருகில் நின்றிருந்தவனை கைப்பிடித்து அழைத்துக் கொண்டு தன் குடிசைக்கு சென்றார் வனயட்சி ஆச்சி.
“பாட்டி ஒரு நிமிஷம்… முக்கியமான விஷயம் கேட்டுட்டு வரேன்”, என ஆதி தன் கையை விடுவித்துக்கொள்ள முயன்றும் முடியாமல் அவருடன் நடந்தான்.
“உன் தம்பிக்கும் அந்த பொண்ணுக்கும் ஒன்னும் ஆகாது…. அவங்க பத்திரமா இருக்காங்க… எங்கப்பனும் அம்மையும் ஒன்னா இருக்க அந்த அர்த்தநாரீஸ்வர அவதாரம் அவங்கள எந்த ஆபத்தும் நெருங்காம பாத்துக்கும்…நீ இங்க பண்ண வேண்டிய வேலை நிறைய இருக்கு…. இங்க பாரு மொத…”, என அவன் கண்களை தீர்க்கமாக பார்த்துக் கூறினார்.
“நீங்க யாரு பாட்டி? நான் என்ன பண்ணணும்? எனக்கு என் யாதுவும் அர்ஜுனும் தவிர இப்ப எதுவும் முக்கியமில்ல”
“ஹாஹாஹா… சிங்கம்மா நான் சொன்னது சரியா போச்சு பாத்தியா? நீ சொன்னமாதிரி தான் இவன் இருக்கான்”, என கையை விலக்கியபடி ஆருத்ராவை பார்த்துக் கூறினார்.
“மேடம் … இங்க என்ன நடக்குது? எனக்கு ஒன்னும் புரியல…. யாதுவும் அர்ஜுனும் ஒரு பிரச்சினைல மாட்டிட்டு இருக்காங்க. அவங்கள மீட்க நான் போயாகணும்… ப்ளீஸ்… இவங்களுக்கு புரியவைங்க… லீஸ் பேப்பர் உங்ககிட்ட குடுத்துட்டு போறேன். அப்பறம் வந்து நானே வாங்கிக்கறேன்…. “, ஆதி ஆருத்ராவிடம் தவிப்புடன் பேசிவிட்டு அவள் மறுமொழிக்காக காத்திருந்தான்.
“அவ கழுத்துல தாலிய கட்டிட்டு அதுக்கப்பறம் நீ எங்க வேணா போகலாம். ஆனா அதுக்கு முன்ன நீங்க இரண்டு பேரும் இந்த பிரபஞ்சத்துக்கு செய்யவேண்டிய கடமை காத்திருக்கு…. அதை முடிச்சா உங்க எல்லா பிரச்சினையும் ஒரு முடிவுக்கு வரும்…”, இப்போது திடமாக கனீரென ஒலித்தது ஆச்சியின் குரல்.
அவரின் கூற்றில் ஆதி அதிர்ந்து நின்றிருக்க, ஆருத்ரா மென்சிரிப்புடன் ஆமென்று தலையசைத்தாள்….