37 – ருத்ராதித்யன்
கண்மயா மயங்கி விழுந்ததும் அவளுக்கு அடுத்த அறையில் வேலை செய்துக்கொண்டிருந்தார்கள் வந்து அவளை தூக்கி மற்றொரு படுக்கையில் படுக்கவைத்து
மயக்கத்தை தெளிவித்தனர்.
“கண்மயா…. கண்மயா…”
“நகருங்க… ஜீனியஸ்…ஹே ஜீனியஸ்…..”, என முகத்தில் தண்ணீர் அடித்து ஒருவன் அவள் கன்னத்தை தட்டினான்.
“என்னாச்சி மாயாக்கு?”, எனக் கேட்டபடி ரிஷித் அங்கே வந்தான்.
“ஓவர் ஸ்ட்ரெஸ்ல மயங்கிட்டாங்க சார்….”, மற்றொருவர் பதிலளித்தார்.
“சரி …. நீங்க எல்லாம் கிளம்புங்க…. அவங்க ரெண்டு பேருக்கும் உடம்புல நடக்குற மாற்றம் ஒரு நேனோ செகண்ட் கூட விடாம எனக்கு ரிப்போர்ட் வரணும். அத பாருங்க…. “, எனக் கூடிநின்ற கூட்டத்தை கலைத்தான்.
“யாழன்…. நீ கண்மயா பக்கத்துல இருந்து அவ சொல்றத செய்…. நான் முக்கியமான வேலையா இன்னொரு லேப் போறேன்.. கண்மயாகிட்ட இந்த லிஸ்ட் குடுத்துடு…. “, என ஒரு கோப்பை கொடுக்கச்சொல்லிக் கொடுத்தான்
“ஓக்கே சார்….. நம்ம சாலக்குடி லேப்க்கு போறீங்களா சார்?”, என யாழன் கேட்டான்.
“யாழன்…. “, என அழைத்தபடி ராஜ்கர்ணா உள்ளே வந்தான்.
“சார்….”
“உனக்கு எத்தன தடவை சொல்றது? கேள்வி கேக்காம சொல்றத மட்டும் செய்னு…”, ராஜ்கர்ணா அதிராத குரலில் மிரட்டலாக கூறினான்.
“சாரி சார்…. பிறவிகுணம் அவ்ளோ சீக்கிரம் மாறாது…. “, என பதில் கொடுத்துவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்.
“அவன திட்றத விடு… நான் கேட்டது எங்க? எப்ப எனக்கு கெடைக்கும்?”, என ரிஷித் இப்போது ராஜ்கர்ணாவை மிரட்டலாக பார்த்தான்.
“அந்த பசுவும் கண்ணுகுட்டியும் வீட்ல இல்ல ரிஷி…. எங்க இருக்குன்னு பாக்க சொல்லியிருக்கேன்… அதிகபட்சமா டாக்டர்கிட்ட கூட்டிட்டு போய் இருப்பாங்க… “, என அசால்ட்டாக கூறினான்.
“என்ன பேசறன்னு தெரிஞ்சி தான் பேசுறியா ராஜ்? அது யார் வீடுன்னு தெரியுமா?”, என கேட்டுவிட்டு அர்ஜுனைப் பார்த்தான்.
“அர்ஜுன் வீடு தான்… அவன் அங்க சேப்டி செஞ்சிருப்பான்னு சொல்றியா?”
“ஏன் இருக்காது… ? இவன் சொல்றத தட்டாம செய்ய ஒரு கூட்டமே இருக்கு ….. அந்த சென்னை சேரி தாஸ் அங்க தான் இருக்கான் கூட்டத்தோட…. ஜாக்சன காட்டிக்குடுத்ததுக்காக இவனும் இவன் அண்ணனும் அங்க எல்லாருக்கும் வாழ்வாதாரம் அமைச்சி குடுத்திருக்காங்க.. இவன் குடும்பத்த கண் இமைக்காம பாதுகாத்துட்டு இருக்காங்க… “
“ஆதி நல்ல பிஸ்னஸ்மேன்… ஆனா இந்த அளவுக்கு இதுல யோசிச்சி செய்வான்னு சொல்றியா? இவன கடத்தி இவ்ளோ நேரமாகியும் எந்த ரியாக்ஷனும் இப்பவரை இல்லையே…. ஏன் நாமலே போய் தலையை குடுக்கணும்….?”
“ராஜ்…. இப்ப நாம பண்ணிட்டு இருக்கறது இன்னிக்கு நேத்து ஆரம்பிச்சதுன்னு நினைக்கறியா?”, ரிஷித் கண்மயாவின் உடலில் கைகளை ஊறவிட்டபடி கேட்டான்.
“நம்ம சின்ன வயசுல இருந்தே இது பத்தி பேசி அதுக்காக படிச்சி எல்லா ஏற்பாடும் செஞ்சிகிட்டோம்…”
“அதுக்கான ஆரம்பம் என்னனு ஞாபகம் இருக்கா ராஜ்?”
“நல்லா ஞாபகம் இருக்கு…. உன் பப்பி நீ சொல்றத கேக்காம அதோட நேச்சர்ல நடந்தது தான்…. “
“அந்த நேச்சர் மேல இவ்வளவு கோபமோ வன்மமோ அந்த சின்ன நாயால வந்ததுன்னு நம்பறியா?”
“உன்னோட பிடிவாதம் தான்…”
“அது இந்த பிறவில ஆரம்பிக்கல ராஜ்…”
“ரிஷி…. நீ என்ன சாமியார் மாதிரி பேசற? பிறவி அது இதுன்னு….”, எனக் கூறி ராஜ் சிரித்தான்.
“சாமியார்ங்கற வார்த்தைக்கான அர்த்தம் முழுசா தெரியுமா?”, ரிஷித் ராஜ் அருகில் நெருங்கி நின்று கேட்டான்.
“வேஷம் போடறவங்க….”
“நீ பணத்த மட்டுமே தான் இதுவரைக்கும் சேத்தியிருக்க அறிவ கொஞ்சம் கூட வளத்தல ராஜ்…. இந்த மனுஷ மிருக ஆராய்ச்சி நான் ஆரம்பிச்சப்பறம் எனக்கு நிறைய தகவல்கள் ஓலைச்சுவடிகள்ல தான் கிடைச்சது. அப்படி அதுல தேடினதுல எனக்கு நிறைய கேள்விக்கான பதில் மதுரைல கிடைச்சது… ஒரு வயசான ஆளு பை நிறைய சுவடியோட வந்தான். ஒன்னு மட்டும் கீழ விழுந்தது… அத பாத்தப்ப ஒரு பகுதி தகவலாக தான் இந்த “மீடியேட்டர் லிக்விட்” நீ அருணாச்சல்ல கண்டுபிடிச்சி கொண்டு வந்த…. “
“ரிஷி….”, அதிர்வுடன் பார்த்தான்.
“ஆமா ராஜ்…. என்னோட கணிப்புப்படி நம்மோட முந்தின பிறவியோட தொடர்தல் தான் இப்ப நாம செஞ்சிட்டு இருக்க அத்தனை விஷயமும்… இதுக்கான ஆரம்பம் எனக்கு தெரியணும்…. அது அந்த வயசான ஆளுக்கு தெரிஞ்சிருக்கலாம்… இல்லையா அந்த ஆளுகிட்ட இருக்க மத்த சுவடிகள்ல கிடைக்கலாம்….”
“நீ சொல்றதுல எனக்கு நம்பிக்கை இல்ல ரிஷி. அப்படி இருக்கலாம் இல்லாமலும் போகலாம் தான்… ஆனா அந்த சுவடில உன் ஆராய்ச்சி முழுமையடைய தேவையான தகவல்கள் இருக்கலாம்… அதுக்காக அந்த கிழவன கண்டுபிடிக்கலாம்… ஆனா இதோட முடிவுல நீ ஜெயிக்கணும்… உன்னோட கனவு நடக்கணும். செயற்கையா நீ ஒரு உலகத்தையே உருவாக்கணும்… எல்லா உயிரினமும் நம்ம கட்டுப்பாட்டுல கொண்டு வரணும்… அது மட்டும் பண்ணிட்டா நம்மல மிஞ்ச இங்க எவனுமே இருக்கமாட்டான்…. நாம் தான் எப்பவும் டாப்…. “, ரிஷியை கட்டிப்பிடித்து கூறினான்.
“உன்னமாதிரி பிரெண்ட் கிடைக்கறது கஷ்டம் ராஜ்… நீ எப்பவும் என்னோட பெரிய பொக்கிஷம்… “, என அவனும் அவனை கட்டிக்கொண்டான்.
“அதுலாம் சரி…. அராப்ல ஒரு பொண்ண கடத்தி வச்சி ப்ரொபசர் பிறைசூடன் ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்காராம். ஏதோ அந்த பொண்ணு அப்டேடட் ஹியூமன்னு சொல்றாங்க…. “
“நிஜமாவா? “
“தெரியல… ஏதோ காத்த படிக்குதாம்….”
“இன்ட்ரெஸ்டிங்…. அவருகிட்ட பேசணுமே…”
“அது கஷ்டம்…. அதித் ஒவிஸ்கர் கஸ்டடில வச்சிருக்கான்….”
“இங்க பாரு ராஜ்… முடியாது கஷ்டம் இதுலாம் நான் எப்பவும் கேக்க விரும்பல…. எனக்கு அந்த பொண்ணு வேணும்…. அதுக்கு வழிய பாரு…. நான் கிளம்பறேன்… நாளைக்கு காலைல அந்த பசுவும் கண்ணுகுட்டியும் இங்க இருக்கணும்…. “, எனக் கூறிவிட்டு ரிஷித் சகஸ்ராவை உடன் அழைத்துக்கொண்டு கிளம்பினான்.
ராஜ்கர்ணாவும் அர்ஜுனையும், யாத்ராவையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு தேனிக்கு ஆட்களை அனுப்பச்சொல்லி ருதஜித்தை அழைத்துப் பேசியபடி வெளியே வந்தான்.
கஜேந்திர நெடுமாறன் அந்த லேப் வாசலில் நின்றபடி அனைத்தையும் கிரகித்துக் கொண்டிருந்தான்.
அவன் அந்த லேப் வாசலுக்கு வரும்போது தான் ரிஷித் வெளியே வந்தான். அவனைக் கடந்து சென்று வாசலில் காவலுக்கு நின்றபடி உள்ளே செல்ல யோசித்துக் கொண்டிருந்தான்.
ஆதி மனதில் கலக்கத்தோடு வேகமாக அந்த பண்ணை வீட்டினை நோக்கி வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தான்.
ஆருத்ரா தன் நெருங்கிய வட்ட ஆட்களைக் கொண்டு அந்த பண்ணைவீட்டினைச் சுற்றி கண்காணிக்க ஏற்பாடு செய்தபடி மகதனை கொண்டு வர பிரத்யேகமான ஒரு வண்டியை சக்தியிடம் கூறி கொண்டு வரும்படி கூறியிருந்தாள்.
“சிஸ்டர்…. அந்த புலிய எதுக்கு கொண்டுவர சொல்றாங்க அந்த பாட்டி?”, சிரஞ்சீவ் நடப்பவைகளை கோர்த்துப்பார்த்துவிட்டு மிருகங்கள் இங்கே மையமாகியிருப்பதை நினைத்தபடி கேட்டான்.
“எனக்கும் தெரியாது சிரஞ்சீவ்… இந்த பாட்டி தேவைக்கு அதிகமா ஒரு வார்த்தை கூட பேசமாட்டாங்கன்னு சொல்வாங்க. நான் பாத்தவரைக்கும் அப்படித்தான். ஆனா நேத்திருந்து அதிகமா பேசி, நினைச்சுபாக்க முடியாத விஷயங்கள செய்ய வைக்கறாங்க எல்லாரையும்…. நம்மல மிஞ்சின ஒன்னு இருக்கு… “, எனக் கூறிவிட்டு தூரத்தில் தெரியும் மலைத்தொடரைப் பார்த்தாள்.
“நீங்க இந்த சாமி பூதம் எல்லாம் நம்புவீங்களா சிஸ்டர்…. ?”
“நான் இயற்கைய நம்பறேன் சிரஞ்சீவ்… அதோட இயக்கத்த இப்பவரை யாரும் மீறமுடியல…. அது உருவானதுல இருந்து எப்படி ? ஏன்? எதனால்? அது ஏன் இந்த வழில தான் நடக்கணும்னு பல கேள்விகளுக்கு நமக்கு விடை இப்பவரை தெரியாது… எத்தன விஞ்ஞான வளர்ச்சி வந்திருந்தாலும் நம்ம மனசுக்கு நிறைவும் அமைதியும் இயற்கையால மட்டும் தான் குடுக்கமுடியுது… செயற்கை எப்பவும் அந்த நிறைவ குடுக்க முடியறது இல்லையே…” , ஆருத்ராவும் இப்போது சற்று நீளமாகத்தான் பேசுகிறாள்..
“இருக்கலாம்… ஆனா நம்ம ஏன் இந்த விஷயத்துல இப்ப சிக்கி இருக்கோம்? அதுக்கான காரணம் என்ன?”, ஆதித்யா அவஸ்தையுடன் கேட்டான்.
“அதுவும் கூட இயற்கையோட வழிநடத்துதலா இருக்கலாம் ஆதி… காலைல இருந்து நானும் அந்த யோசனைல தான் இருக்கேன். ஆனா நம்ம இப்ப களத்துல இருக்கோம். நம்ம தான் சில விஷயங்கள செய்யணும்ங்கற கட்டாயத்துல இருக்கோம். நம்ம பிரியம் வச்சவங்க ஆபத்துல இருக்காங்க… அவங்கள இப்ப காப்பாத்தலாம்… அதுக்கப்பறம் பதில் கிடைக்கலாம்…. சக்திய வச்சி நாம அர்ஜுன் யாத்ரா அண்ட் அந்த புலிய கொண்டு போக வண்டிய ஏற்பாடு பண்ணிட்டேன். உள்ள எப்படி போறது? யார் யார் என்ன என்ன பண்றது? அதுலாம் பேசிட்டா காரியம் தெளிவா நடக்கும்…”, என அடுத்தக் கட்ட பேச்சிற்கு சென்றாள்.
“அந்த புலி இரத்தம் அவங்க உடம்புல ஏறுனத பாத்ததுல இருந்து என்னால அமைதியா யோசிக்க முடியல ஆருத்ரா…. கொஞ்சம் டைம் குடுங்க.. நான் யோசிக்கறேன்….”
“நாம் அந்த இடத்துக்கு போய் சேர இன்னும் இரண்டு மணிநேரம் இருக்கு.. ஒரு மணிநேரத்துல ப்ளான் ரெடி பண்ணணும்… நான் பிஸ்னஸ் வுமன்… தெளிவா ப்ளான் பண்ணி இறங்கினா கண்டிப்பா வேலைய ஈஸியாக முடிக்கலாம்ங்கறத பலமுறை செஞ்சிருக்கேன்…. இது எனக்கு புதுசு…. நான் டிடெக்டீவ் இல்ல…. கொஞ்சம் கராத்தே தெரியும், களரி தெரியும்…. இது சினிமாவும் இல்ல டக்குன்னு இறங்கி சண்டை போட…. “, ஆருத்ரா இருக்கும் நிலையை தனித்தனியாக பிரித்துக் கூறினாள்.
“நீங்க வண்டில இருந்தாலே போதும் ருத்ரா… நாங்களும் கஜாவும் மத்தத பாத்துக்கறோம்…”, ஆதி.
“கண்டிப்பா முடியாது ஆதி…. அவன் வெல் ஆர்கனைஸ்டு ப்ளான நடத்திட்டு இருக்கான். டக்குன்னு எல்லாம் அப்படி உள்ள இறங்கிறது ரிஸ்க்… தவிர அவன் அர்ஜுன கடத்தின விதமும் தெரிஞ்ச அப்பறம் நேரடியாக மோதக்கூடாது… “
“வேற என்ன தான் பண்ணலாம்னு சொல்றீங்க இப்ப?”, கடுப்புடன் கேட்டான்.
“கலவரத்த ஏற்படுத்தலாம்…. அந்த பண்ணை வீடு இருக்க ஏரியால இருந்து ஒரு கி.மீ தள்ளி தான் என்னோட டேம் ப்ராஜெக்ட் நடந்துட்டு இருக்கு…. இந்த வீடும் அந்த மேப்ல வந்தது. ஆனா கடைசி நேரத்துல அந்த வீடு இருக்கற இடத்த விட்டு தள்ளி மேப் வந்தது… கண்டிப்பா பணம் குடுத்து தான் செஞ்சிருப்பாங்க. அது யாருன்னு நான் விசாரிக்க சொல்லிட்டேன். அந்த வீடு விட்டதால ஒரு கிராமம் டேம் ஏரியாவுல வருது… அங்க இருக்க மக்கள் ஏற்கனவே பிரச்சனை பண்ணிட்டு இருக்காங்க. நானும் வேலைய நிறுத்திவச்சிருக்கேன்… இப்ப அந்த மக்கள வச்சி அந்த வீட்ல பிரச்சினை பண்ண வைக்கலாம்…. போலீஸும் உடனே வந்து நிக்கும்… மக்களுக்கு பெருசா பிரச்சினை வராது… அந்த கலாட்டாவுல லேப்குள்ள நாம போய் ஆளுங்கள தூக்கிட்டு வந்துடலாம்… ப்ளான் ஓக்கே வா?”, ஆருத்ரா மனதிலே அனைத்தையும் நினைத்துப் பார்த்துக் கூறினாள்.
“யப்பா….. சிஸ்டர்…. நீங்க பிஸ்னஸ் வுமன் தானா?”, சிரஞ்சீவ் அதிர்ச்சியுடன் கேட்டான்.
“ஆமா சிரஞ்சீவ்… அரசியல ஆட்டிவைக்கற வியாபார நுணுக்கம் தான் இத்தனை வருஷம் எங்கள நிலைக்கவைக்குது… எத்தனை நல்லது நினைச்சாலும் அதை செய்ய வைக்க இப்படியும் நாங்க யோசிக்க வேண்டியதா இருக்கு….”
“அதனால தான் அதிபன் கம்பெனிக்கு பேர் குடுத்துட்டு நீங்க உள்ள வேலைய பாக்கறீங்களா ருத்ரா…?”, ஆதியும் சின்ன சிரிப்புடன் கேட்டான்.
“நீங்க வளர்ந்துவரும் தொழிலதிபர்… உங்களுக்கு தெரியாதது இல்ல… நான் தாத்தா கிட்ட கத்துக்கிட்டேன்… நீங்க நீங்களாவே கத்துக்கறீங்க… அவ்வளவு தான் வித்தியாசம்… “, ஆருத்ரா பதில் கூறியபடி அந்த வீட்டைச் சுற்றி ஆட்கள் கலவரம் செய்ய ஏற்பாடுசெய்யச்சொன்னாள்.
இவர்கள் அந்த வீட்டினை நெருங்கும்போது மக்கள் கூட்டமும், மீடியாவும், போலீஸும் மூன்று பக்கமும் நின்றிருந்தனர்.
ராஜ்கர்ணாவும், ருதஜித்தும் திடீரென கூடியிருக்கும் கூட்டத்தைக் கண்டு குழப்பத்தில் இருந்தனர்.
யாழன் கண்மயாவை மயக்கம் தெளியவைத்து
அர்ஜுன் யாத்ராவை கவனிக்க கூறிவிட்டு பாரதி இருந்த அறைக்குள் நுழைந்தான்.
“யாழன்…. ரொம்ப தேங்க்ஸ் டா… “
“இருக்கட்டும் பாரதி… இவங்கள எப்படி வெளிய கொண்டு போறது…?”
“அதுக்கு ஏற்பாடு பண்ணியாச்சி… இங்க இருக்கறவங்கள வெளிய அனுப்பிட்டு பின்வழியா கொண்டு போக முடியுமா? வழி இருக்கா?”
“பின்னாடி வழியில்ல…. முன்னாடி மட்டும் தான் புலி கூண்ட தள்ளிட்டு போக முடியும்..”, யாழன் யோசனையுடன் கைவேலையை பார்த்தபடி பேசினான்.
“சரி இரு… நீ போய் முன்னாடி வாசல்ல நிக்கறவர உள்ள கூட்டிட்டு வரமுடியுமா?”
“யாரு?”
“என் பாஸ்….”
“பேரு?”
“வாசல்ல தான் நிக்கறாரு… நீ கண்மயா மேடம கிளம்ப தேவையான விஷயத்தை செய்யசொல்லிட்டு வெளியே போய் பாரு…”, என பாரதி சொல்லிக்கொண்டிருக்கும் போதே ராஜ்கர்ணா உள்ளே வந்தான்.
“யாழன்…. உடனே இங்கிருந்து கிளம்பணும்.. ஏற்பாடு பண்ணு…. “
“சார்…. உடனே எப்படி சார்?”
“எதுவும் சொல்ல நேரமில்லை… இந்த புலி அந்த அர்ஜுன் யாத்ரா எல்லாரையும் இங்கிருந்து உடனே கொண்டு போயாகணும். வெளியே போலீஸ் நிக்குது. ஜனக்கூட்டமும் அதிகமாகுது… மீடியா வேற… கிளம்ப ரெடி பண்ணு நான் வண்டியை அனுப்பறேன். இந்த கார்ட் காட்டு இந்த பக்கம் வழியிருக்கு அப்படியே வண்டில ஏத்தி காட்டுக்குள்ள கொண்டு போயிடலாம்…. கம்மான் சீக்கிரம்….”, எனக் கூறிவிட்டு மற்றவர்களை முன்பக்கமாக செல்ல கூறினான்.
கண்மயாவும் யாழனும் மட்டும் இவர்களுக்கு தேவையான பொருட்களை எடுத்துக்கொண்டு பிக்பக்கமாக அவர்களை தள்ளிக்கொண்டு வந்தனர்.
புலிக்கூண்டை தள்ள முடியாமல் தவிக்கும் சமயம் ருதஜித் உள்ளே வந்து பார்த்துவிட்டு கஜேந்திரனை உள்ளே அனுப்பி கூண்டினைத் தள்ளச் சொன்னான். கஜாவும் தலைவனுக்கு அடிபணிந்து வேகமாக தள்ளிக்கொண்டு பின்பக்கமாக வந்து நின்றான்.
“யாழன்…. இந்தா இத காட்டினா அந்த டோர் ஓப்பன் ஆகும்.. வெளிய காம்பவுண்ட் கர்ணா சார் குடுத்த கார்ட் போட்டா ஓப்பன் ஆகும் . வண்டி ரெடியா நிக்கும். வேகமா வண்டில எல்லாத்தையும் ஏத்திட்டு காட்டுக்குள்ள போயிடு…. அரைமணிநேரத்துல கர்ணா சார் கால் பண்ணி லொக்கேஷன் சொல்வாரு…. அங்க போயிடுங்க…. கண்மயா.. உங்க சகஸ்ரா எங்க சார் கிட்ட தான் இருக்கா… சோ கவனமா நடந்துக்கோங்க… டேய் நீயும் கூடவே போ…. “, என கஜாவிடமும் சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றான்.
பாரதி டக்கென புலிகூண்டின் அடியில் இருந்து வெளியே வந்து கதவினை திறந்தாள். வெளியே சாரதி தயாராக காத்திருக்க, காம்பவுண்ட் பக்கமாக மூன்று கூண்டினையும் தள்ளிக்கொண்டு சென்றனர்.
யாழன் டக்கென கார்ட் கொண்டு திறக்க வெளியே சக்தி தயாராக கண்டைனரை திறந்துவைத்து காத்திருந்தான். அப்படியே மூன்று கூண்டுகளையும் கஜாவும் ஆதியும் உள்ளே தள்ளிவிட்டு அனைவரும் ஏறிக்கொள்ள சிரஞ்சீவ் வண்டியை கிளப்பினான்.
ஆருத்ரா அர்ஜுனையும் யாத்ராவையும் பார்த்துவிட்டு புலியின் அருகில் வந்தாள்.
மகதன் ஒரு நொடி அவளை கண்திறந்து பார்த்துவிட்டு அவள் கையின் அருகில் நகர முயற்சித்து முடியாமல் அப்படியே மீண்டும் கண்களை மூடியது. ஏனோ ஆருத்ராவின் கண்களில் நீர் நிற்காமல் வழிய மகதனை கட்டிக்கொண்டு படுத்தாள்.
வனயட்சி பாட்டி கொடுத்திருந்த பச்சிலையை நால்வரும் சாப்பிட்ட பின் தான் இந்த வண்டியில் ஏறியிருந்தனர். நால்வருக்கும் உடலின் ஆற்றலுக்கு மிஞ்சிய செயல்கள் செய்ய ஏதுவான சத்தும், தெளிவும், திட்டங்களின் கூர்மையும் கொண்டு மூவரையும் மீட்டுக்கொண்டு தேனி நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
ஆருத்ராவின் கண்ணீர் மகதனின் காயத்தின் வழி அவன் உடலுக்குள் சென்று கொண்டிருந்தது. ஆதி அர்ஜுன் யாத்ராவுக்கு பாட்டி கொடுத்திருந்த மூலிகை சாற்றை வாயில் ஊற்றிவிட்டு மகதன் அருகில் வந்தான்.
“ருத்ரா… இத புலிக்கு கொடுக்கணும்…. “
“சாரி ஆதி… நான் கொடுக்கறேன்…. குடுவைய குடுங்க…. “, என வாங்கினாள்.
“நான் வாய தொறக்கறேன் ஊத்துங்க…. கஜா இந்த பக்கம் வந்து உடம்ப பிடி… சாரதி நீயும் வா….”, என ஆதி மற்றவர்களை அழைத்தான்.
“நானும் வரேன்… இந்த பக்கம் வாயில் ஊத்துங்க கீழ சிந்தாம உள்ள போகும்…”, என யாழனும் உதவிக்கு வந்தான்.
அந்த குடுவையில் இருந்த அனைத்தும் மகதனின் வாயில் ஊற்றிவிட்டு தான் மற்றவர்களைப் பார்த்தாள் ஆருத்ரா.
கண்மயாவுக்கு ஒருபக்கம் மனம் அமைதியானாலும், சகஸ்ராவை நினைத்து மனம் அழுந்தியது.
தலையில் கைவைத்து ஒருபக்கம் அமர்ந்துவிட்டாள்.
யாழன் மூவரின் உடல்நிலையை கண்காணிக்க வயர்களை இணைத்துக்கொண்டு இருந்தான்.
பாரதியும், சாரதியும் தங்களுக்குள் பேசிக்கொண்டு இருந்தனர்.
கஜாவும் ஆதியும் அர்ஜுன் யாத்ரா அருகில் கவலையுடன் நின்றிருந்தனர்.
சிரஞ்சீவும் சக்தியும் வண்டி எங்கும் நில்லாமல் செல்ல வேண்டிய தடத்தை பார்த்து சென்றுக்கொண்டிருந்தனர்.
ஆருத்ரா அனைவரையும் பார்த்துவிட்டு மகதன் அருகில் சென்று அமர்ந்தாள் அவன் மூடியிருக்கும் கண்களைப் பார்த்தபடி….