5 – வேரோடும் நிழல்கள்
“இருக்கட்டும் பார்த்தி.. அதுக்காக விருப்பம் இல்லாத பொண்ணு பின்னாடி சுத்தறதும், கல்யாணம் பண்ணிக்க சொல்லி நெருக்கறதும் ரொம்ப தப்பு.. நானும் ஒரு பொண்ண பெத்தவன். எம்பொண்ணு பின்னாடி ஒருத்தன் இப்படி கேட்டுட்டு வந்தா நான் சும்மா விடுவேணா? அதே போல தான் மத்த வீட்டு பொண்ணுங்களும்..” என பாலதேவன் சூடாக பதில் கொடுத்தார்.
“கொஞ்சம் பொறுமையா இருங்க.. நம்ம பையன் ஒண்ணும் பொண்ணுங்க பின்னாடி சுத்தறவன் இல்ல.. அவனுக்கு அந்த பொண்ண ரொம்ப பிடிச்சி போச்சி போல.. அதான் அவனே நேரடியா முயற்சி செஞ்சி பாக்கறேன்னு சொல்றான். இதுல ஒரு தப்பும் இல்ல. அந்த பொண்ணுக்கு கல்யாண வாழ்க்கை மேல பிடிப்பு இல்லாம போக என்ன காரணம்ன்னு தெரிஞ்சிக்கட்டும். எனக்கு தெரிஞ்சி அந்த பொண்ணுக்கு பயமும், அவநம்பிக்கையும் இருக்கணும். இவனால முடிஞ்சா அந்த பொண்ணோட நம்பிக்கைய சம்பாதிக்கட்டும்.” எனக் கூறி மகனுக்கு ஆதரவாக பேசினார் கனகா.
“அப்பறம் நம்ம பையன் வாழ்க்கை என்னாகறது? அந்த பொண்ணு சரின்னு சொன்னா பிரச்சனை இல்ல.. வேணாம்னு சொல்லிட்டா இவனுக்கு பொண்ணு தேடறதுல பல சிக்கல் வரும் கனகா…”
“மாமா.. அத்தைக்கும் அந்த பொண்ண ரொம்ப பிடிச்சி போச்சி.. விடுங்க நம்ம நீரஜ் அவனோட பேர கெடுத்துக்க மாட்டான். நானும் விசாரிச்சேன், அந்த பொண்ணோட அப்பா அம்மா பேசிக்கறது விட்டு பல வருஷம் ஆச்சாம். அதனாலயே அந்த பொண்ணுக்கு கல்யாண வாழ்க்கை மேல வெறுப்பும், பிடித்தமின்மையும் வந்திருக்கலாம். நம்ம குடும்பம் எப்படி இருக்குன்னு அந்த பொண்ணு பாத்தா மனசு மாறும். கல்யாணம் பண்ணி வாழணும்ன்னு ஆசையும் வரலாம்.. என்ன மைதிலி ?” சடகோபன் கூறினார்.
“ஆமாப்பா.. நான் அந்த பொண்ணுகிட்ட 5 நிமிஷம் பேசினப்போவே அந்த பொண்ணோட குணம் தெரிஞ்சிடிச்சி.. நம்ம குடும்பத்துல அந்த பொண்ணு வாழ வந்தா நல்லா இருக்கும்.. குடும்பம்னா என்னனு புரிஞ்சிக்கும்..” மைதிலியும் தம்பிக்கு உடன்போக பாலதேவன் அரைமனதாக 6 மாதம் அவகாசம் கொடுத்தார்.
“ரொம்ப தாங்க்ஸ் மச்சி.. உன்னால இன்னிக்கி எனக்கு நல்லது நடந்திருக்கு..” என நீரஜ் பார்த்திபன் கன்னத்தில் முத்தம் கொடுத்தான்.
“டேய் .. ச்சீ.. தள்ளிப் போ.. நானும், என் கன்னமும் என் கிரிஜாவுக்கு மட்டும் தான்..” எனக் கூறியபடி அவனைத் தள்ளிவிட்டான் பார்த்திபன்.
“ரொம்ப பண்ணாதடா.. அப்பறம் உனக்கு வேற எடத்துல ஆப்பு வச்சிடுவேன். இப்ப நீ என்ன பண்ற.. தங்கச்சிக்கிட்ட நிழலினியோட மொத்த ஹிஸ்டரி எடுத்து அழகா ஆர்கனைஸ் பண்ணி எனக்கு வாங்கி குடுக்கற. அத வச்சி நான் நிலாவ கரெக்ட் பண்ணுவேணாம்.. சரியா?” என சிரித்தபடி கூறினான்.
“இங்க பாரு மச்சி.. நீ தான் லவ் பண்ற அதனால நீ தான் எல்லா தகவலும் அலைஞ்சி திரிஞ்சி தெரிஞ்சிக்கணுமே தவிர என்கிட்ட ஒருங்கிணைச்சி தர சொல்லக்கூடாது.. அதனால நாளைல இருந்து உச்சி பிள்ளையார சுத்தறத நிறுத்திட்டு, உன் ஆள சுத்தி விவரம் தெரிஞ்சிக்க ஆரம்பி.. உனக்கு கிடைக்காத விஷயம் மட்டும் என் ஆளுகிட்ட வாங்கி தரேன்.” எனக் கூறிவிட்டு பார்த்தி அங்கிருந்து கிளம்பினான்.
“டேய்.. நீயெல்லாம் என் நண்பனாடா? இப்படி என்னை அத்துவிட்டுட்டு போற?”
“இது எல்லாம் செஞ்சா தான் ஒரு பொண்ண உஷார் பண்றது எவ்ளோ கஷ்டம்ன்னு உனக்கு புரியும்.. உன்னால இதுவரைக்கும் நான் 2000 தோப்புக்கரணம் போட்டு இருக்கேன்.. இப்போ என் டர்ன்.. சோ.. நாளைக்கு காலைல இருந்து ஆரம்பி.. வரட்டா..” என சந்தோஷமாக சிரித்தபடி தன் இல்லம் கிளம்பினான் பார்த்திபன்.
அடுத்த நாள் காலை நிழலினி சுடிதார் அணிந்து தயாராகி விஷாலிக்காக காத்திருந்தாள். நேற்று இல்லம் திரும்பி வந்ததில் இருந்து அவள் பெற்றவர்களுடன் உரையாடவில்லை. அவர்களும் சற்று அமைதியாக அவளைக் கவனித்துக் கொண்டிருந்தனர்.
“நிலா.. தோசை ரெடியா இருக்கு சாப்பிடு டா..” என மெல்ல அவளின் தாய் விஜயம் பேச்சு கொடுத்தார்.
“எம்பொண்ண பண்ற இம்சையெல்லாம் பண்ணிட்டு நல்லவளாட்டம் பேச வர்றத பாரு..” என முனகியபடி ஞானப்பெருமாள் அவளுக்காக கடையில் இருந்து பூரி வாங்கி வந்து அவளின் தட்டில் வைத்து சாப்பிடக் கொடுத்தார்.
நிழலினி இருவரையும் பார்த்து ஏதும் கூறாமல் அமைதியாக வெளியே சென்று தன் கைப்பையுடன் அமர்ந்துக் கொண்டாள்.
“ஏன் நிலா உனக்கு பூரி பிடிக்கும்ல? வயிறு காலியா வெளிய கிளம்பாத டா.. உனக்கு வேற என்ன வேணும்ன்னு சொல்லு நான் வாங்கிட்டு வரேன்..” என மகளிடம் பேசியபடி அருகில் அவர் அமர்ந்தார்.
“இப்ப உங்களுக்கு என்ன வேணும்?” உணர்ச்சிகள் ஏதுமற்ற குரலில் வினவினாள்.
“அப்பா பாத்த மாப்பிள்ளை யாரையுமே உனக்கு பிடிக்கலையா டா?” என மெல்ல ஆரம்பித்தார்.
“அதானே பாத்தேன் என்னடா திடீருன்னு பாசம் பொங்கி வழியுதுன்னு.. அவளுக்கு மொத என்ன பிடிக்கும் பிடிக்காதுன்னு தெரிஞ்சிக்க பாருங்க.. உங்க வரட்டு பிடிவாதத்த என் பொண்ணு வாழ்க்கைல காட்டி அவ வாழ்க்கைய கெடுத்தறாதீங்க..” என விஜயம் சண்டையைத் துவங்கினார்.
“நீ வாய மூடு.. உனக்கு எல்லாம் தெரியுமோ? அவளுக்கு எது நல்லதோ அது தான் நான் செய்வேன்.. உன்னமாறி தரங்கெட்ட எடத்துல எல்லாம் நான் மாப்ள பாக்கமாட்டேன். நான் பாத்த அத்தனை மாப்பிள்ளைங்களும் நல்ல வேல, சம்பளம், சொத்து சுகத்தோட இருக்கறவங்க.. உன்னமாதிரி அன்னக்காவடி பசங்கள நான் பாக்கல..” என இவரும் எகிற ஆரம்பித்தார்.
“நான் பாத்த பசங்க எல்லாருமே உழைச்சி மேல வந்தவங்க.. உங்கள மாதிரி திடீர் அதிர்ஷ்டத்த நம்புறவங்க இல்ல.. நேர்மையான உழைப்ப நம்பி வாழ்க்கைய கொண்டு போயிக்கிட்டு இருக்கறவங்க.. அடுத்தவன் சொத்து மேல ஆசைப்படாதவங்க…” என அவர் கூறியதும் ஞானப் பெருமாள் கொதித்தெழ அங்கே மீண்டும் ஓர் யுத்தம் ஆரம்பமானது.
நிழனினி காதுகளை பொத்தியபடி முழங்காலில் தலையை நுழைத்துக்கொண்டு அமர்ந்துக்கொண்டாள். சரியாக அந்த நேரம் நீரஜ் அங்கே வரவும், அங்கு நிலவும் சூழ்நிலையை நொடியில் புரிந்து தூரமாக நின்று கவனிக்கத் தொடங்கினான்.
பெற்றவர்கள் உள்ளே சென்ற பின்பும் அவள் நிலை மாறாமல் அப்படியே இருந்தது அவனது மனதை வதைத்தது. அவளது பயம் ஓரளவிற்கு அவனுக்கு புரியத் தொடங்கியது. உணர்ச்சிகள் ஏதும் இன்றி விரக்தியுடன் இருந்த அவளது முகமதில் சந்தோஷத்தை நிரந்தரமாக குடிவைத்திட ஆடவன் உள்ளம் ஆசைக் கொண்டது.
சிறிது நேரத்தில் விஷாலி வண்டியில் வந்து அவளை அழைத்தாள். அத்தனை நேரம் வரையிலும் உள்ளே வாக்குவாதம் நடந்துக் கொண்டு தான் இருந்தது. விஷாலி எட்டி உள்ளே பார்த்துவிட்டு, “இதுலாம் நீ எவ்ளோ அட்ஜஸ்ட் பண்ணிட்டு போனாலும் உணராத மனுஷ ஜென்மங்க தான். ஒழுங்கா ஒருத்தன கல்யாணம் பண்ணிட்டு போய் உன் வாழ்க்கைய வாழ ஆரம்பி. இவங்கள எல்லாம் தனியா விட்டா தான் உறவோட அருமை புரியும்..”, எனக் கூறியபடி விஷாலி நீரஜைக் கடந்துச் சென்றாள்.
அதன்பின் நீரஜ் தன் பணியிடம் நோக்கிச் சென்றான். அவன் பலத்த யோசனையுடன் வருவதைக் கண்ட பார்த்திபன் அவனருகில் ஒரு கோப்புடன் சென்றான்.
“சார்.. இது என்னனு கொஞ்சம் புரியரமாறி சொல்றீங்களா ?”, என மேலாளர் செல்வதை பார்த்தவுடன் சத்தமாக கேட்டான்.
“என்ன பார்த்தி? அந்த அக்கவுண்ட் செக்ஷன்ல குடுக்கவேண்டிய ஃபைல் இது.. குடுத்துரு.. நான் மேனேஜர் பாத்துட்டு வரேன்..” எனக் கூறியபடி எழுந்தவனை மேலாளர் வெளியே கிளம்புவதைக் காட்டினான்.
“நீ எப்படா வருவ, எப்படா நாம வெளிய போலாம்ன்னு வாசலையே பாத்துட்டு இருந்தான் டா அந்தாளு.. இவன் பண்ண வேண்டிய வேலைய கூட நீ தான் பண்ற.. உன்னயே மேனேஜர் அஹ் போடலாம்.. கேட்டா சீனியாரிட்டி அது இதுன்னு வியாக்கியானம் பேசுவானுங்க..” பார்த்தி அவன் போக்கில் புலம்பியபடி இருக்க, நீரஜ் அமைதியாக அமர்ந்திருந்தான்.
“என்னாச்சி மச்சான்? காலைல போனியே பேசினியா?” என அவன் முகம் வாடி இருப்பதைக் கண்டுக் கேட்டான்.
“பிரேக் டைம்ல பேசிக்கலாம் மச்சி.. நீ போய் வேலைய பாரு..” என அவனை அங்கிருந்து அனுப்பிவிட்டு வேலையில் மூழ்கினான்.
“என்னமோ பலமா நடந்திருக்கு போல அதான் பயபுள்ள நம்மள வெரட்டி விட்டுட்டு அழ பாக்குது.. விடுவேனா ? மாட்டேன்.. இதோ கொண்டு வரேன் போன வருஷ ஃபைல் அத்தனையும்..” என முணுமுணுத்தபடி தனது இடத்திற்கு சென்று போன வருட கோப்புகள் அத்தனையும் தூக்கிக் கொண்டு வந்தான்.
“டேய் .. என்னடா இது?”
“இதுலாம் நாம பாக்காம விட்ட ஃபைல்.. இது முடிச்சா தான் ஆடிட்டருக்கு அனுப்பமுடியும்.. நம்ம கான்பரன்ஸ் ஹால் போலாமா அசிஸ்டெண்ட் மேனேஜர் சார்?” என ராகமாக அவன் கேட்கவும், நீரஜ் சிரிப்புடன் அவன் கூறிய இடத்திற்கு சென்றான்.
“பழனியண்ணே ரெண்டு டீ, ஸ்நாக்ஸ் இருந்தா கொண்டு வாங்க.. யாரும் கொஞ்ச நேரம் எங்கள தொந்தரவு பண்ணாம பாத்துக்கோங்க…” எனக் கூறியவன் நேராக எதிர்பக்கம் இருந்த இருக்கைகளுக்கு சென்று கோப்புகளை எல்லாம் பரப்பி வைத்து விட்டு ஒரு கையேடுடன் அமர்ந்தான்.
“இவ்ளோ செட்-அப் தேவையா டா? அப்படி யார பாத்து நீ பயந்து நடுங்கார இந்த ஆபீஸ்ல?” எனக் கேட்டபடி நீரஜும் அவனருகில் அமர்ந்தான்.
“பயம் எல்லாம் இல்ல மச்சி..நிஜமா வேலை செய்யறமோ இல்லையோ.. செய்யறமாதிரி பில்ட்அப் குடுத்தா தான் இங்க நிலைக்க முடியும்..”
“ஸ்கூல்ல இருந்து எப்படி டா இதே ஃபார்முலா ஃபாலோ பண்ற?”
“வொர்கவுட் ஆகுதா இல்லயா ? சரி சொல்லு காலைல என்ன நடந்தது?”
“அவ மனசளவுல பாதிக்க பட்டிருக்க வாய்ப்பு அதிகம் மச்சி.. அவ முகத்துல அப்படி ஒரு விரக்தி.. அதுவும் காலைல அவங்க அப்பா அம்மா எதுக்கோ சண்டை போட்டுட்டு இருந்தாங்க. இவ காத அடைச்சிட்டு அவ்ளோ நேரமும் அப்படியே தலைய காலுக்குள்ள குடுத்துட்டு உட்கார்ந்திருக்கா.. அவ ஃப்ரெண்ட் வந்து அவள கூப்பிடர வரைக்குமே அவளோட பொசிஷன் மாறவே இல்ல மச்சி.. பாக்கவே பாவமா இருந்தது..” என அவன் கூறி முடிக்கவும் தேநீர் கொண்டு வந்தார்.
“இவங்களுக்காக நீ உன் வாழ்க்கைய வீணாக்கிகாம ஒழுங்கா வாழற வழிய பாருன்னு அந்த பொண்ணு சொல்லிட்டே போச்சி..” எனக் கூறி பெருமூச்சு விட்டான்.
“அவங்க எங்க போனாங்கன்னு பின்னாடி போய் பாக்கலியா?”
“இல்ல மச்சி.. அந்த பொண்ண பாக்கவே மனசு கஷ்டமா இருந்தது அதான் இங்க வந்துட்டேன்.. சாயிந்தரம் போய் பாக்கணும்..”
விஷாலி சக்திசிவன் கூறிய முகவரிக்கு வந்து நின்றாள். அது ஓர் மனோதத்துவ நிபுணரின் ஆற்றுப்படுத்துதல் மையம்.
சக்திசிவன் ஏற்கனவே அங்கே வந்து காத்திருந்தான். இந்த மருத்துவர் அவனது சிறுவயது கால நண்பர். டாக்டர். தரணிதரன்…