75 – ருத்ராதித்யன்
அடுத்த நாள் காலைப் பொழுது புலர்ந்ததும் ஆருத்ராவும், வனயாத்திரையும் ஆதித்த கோட்டையை விட்டு கிளம்பத் தயாராகி வெளிவந்தனர்.
“மகளே .. பத்திரமாக சென்று சேருங்கள். வழியில் திருடனை பிடிக்கிறேன் என எங்கும் செல்லவேண்டாம்.. அமரா.. அங்கு சென்று சேர்ந்ததும் தகவல் அனுப்பு.. விரைவில் சந்திப்போம்..”, என மஹாராஜா கூறினார்.
“அதெல்லாம் சரி அரசே.. எங்கள் இளவரசியை தாங்கள் தங்களது மகனுக்கு எப்போது பெண் கேட்டு வரப்போகிறீர்கள் ? அந்த ஏற்பாட்டையும் கவனிக்க வேண்டும் அல்லவா ?”, யாத்திரை சிரித்தபடிக் கேட்டாள்.
“அதிகப்பிரசங்கி .. அமைதியாக இரு.. அது பெரியவர்கள் பேசும் விஷயம் ..“, ஆருத்ரா கண்டித்தாள்.
“பேச வேண்டிய விஷயத்தை பெரியவர்கள் பேசினால் என்ன? சிறியவர்கள் பேசினால் என்ன ? நான் நினைவுப்படுத்துகிறேன் அவ்வளவு தான்.. நீ தான் நேரடியாக கேட்கக்கூடாதே தவிர பெண் வீட்டு சார்பாக நான் கேட்கலாம் தப்பில்லை.. சரிதானே மகாராணி ?”
“ஹாஹாஹாஹா .. யாத்திரை நீ இங்கேயே இருந்துவிடேன் .. உன்னை அனுப்ப மனமே இல்லை எனக்கு .. “, அவளைக் கட்டிக்கொண்டபடிக் கூறினார் மகாராணி.
“கவலை வேண்டாம் மகாராணியாரே .. நிச்சயமாக தங்களது இரண்டாவது புதல்வனை உருவாக்க எனது ஆராய்ச்சி கூடம் அமைக்க இங்கு தான் வருவேன். நேற்றே உங்களது மூலிகை கிடங்கை பார்வையிட்டேன்.. எனக்கு தேவையான அனைத்தும் இங்கே விரைவாக கிடைக்கும் என்று தோன்றியது.. தவிர தாய் தந்தை பங்கில்லாமல் எப்படியும் இதை செய்ய முடியாதல்லவா ? அதனால் விரைவில் மீண்டும் இங்கே திரும்பி வந்து எனது ஜாகையை போட்டுக் கொள்கிறேன். . எனது பணிக்கு தேவையானவற்றை தாங்கள் ஏற்பாடு செய்து தரவேண்டும் என்றும் தாழ்மையுடன் விண்ணப்பம் வைக்கிறேன் ..”, என யாத்திரை ஏற்ற இறக்கமாகக் கூற அங்கிருந்தவர்கள் சிரிப்புடன் அவளை கட்டிக்கொண்டு விடை கொடுத்தனுப்பினர்.
“மிகவும் சூட்டிகையான பெண் அல்லவா ?”, ராணியார் கேட்டார்.
“ஆம் திலகா .. எனக்கொரு பெண்பிள்ளை இல்லையென்ற ஏக்கம் தீர்கிறது இவளைக் காணும்போதெல்லாம்.. ஆனாலும் நாம் இன்னொரு மகனை ஈன்று இருந்தால் நன்றாக இருந்திருக்கும்..”, பெருமூச்சுடன் கூறினார்.
“அவளின் ஆராய்ச்சி மீது எனக்கு நம்பிக்கையுள்ளது அரசே. அவளின் ஆசான் யாரென்று மறந்து விட்டீர்களா ? நமது சிங்கத்துரியன் அல்லவா ? அவன் இங்கே அடவியில் பிறந்து அவற்றுடன் உயிராக கலந்து வளர்ந்தவன். வனயட்சியும் நமது மருத்துவ குழுவின் தலைவியாக இருந்தவர் அல்லவா ? யாத்திரையின் ஆராய்ச்சி கட்டுரையை முழுதாக படித்தேன்.. அதன் நுணுக்கங்கள் எல்லாம் அற்புதமாக கணக்கிட்டு வகுத்திருக்கிறாள். தவிர இது வனயட்சியின் ஆராய்ச்சி. அவளது கணவனை மீண்டும் பிறப்பெடுக்க வைக்க அவள் முயற்சித்து முடியாமல் மனம் கலங்கி இங்கிருந்து சென்றவள், இப்போது முழுதாக அந்த ஆராய்ச்சியினை முடித்துவிட்டாள் என்றே நினைக்கிறேன்.. நாம் ருத்ர சமஸ்தானம் சென்று ஒருமுறை அவளைக் காணவேண்டும்..”, என ராணியார் கூறவும் அரசர் மனதில் சில கணக்குகளை போட்டபடி கேட்டுக்கொண்டிருந்தார்.
“நிச்சயம் பார்க்கலாம் தேவி.. தவிர இப்போது ஆருத்ராவிற்கு சிங்கத்துரியனின் பாதுகாப்பு அவசியம்.. இன்று அதிகாலை ஒரு விஷயம் நமது செவிக்கு வந்துள்ளது.. அதை பற்றி சற்று நாம் விரிவாக கலந்துரையாட வேண்டும்… நான் இன்றே கிளம்பவேண்டும் .. வா பேசிக்கொள்வோம்..”, எனக் கூறி முன்னே நடந்தார்.
மகாராணியாரும் அவரின் பின்னே பார்வையைச் சுற்றிலும் சூழற்றியபடி உள்ளே நடந்தார். அப்போது கூட்டத்தில் இருந்து ஒருவன் மெல்லக் கோட்டை கதவின் வழியே வெளியேறியதை அவரின் கண்கள் கவனித்துவிட, வெளியே சென்றவனை கண்காணிக்க அடுத்த ஐந்து நிமிடத்தில் இன்னொருவன் சென்றான்.
முக்கிய மந்திராலோசனை சபை விரைவாக கூடியது. அங்கே முக்கிய முதல் மந்திரி, வனம் காக்கும் மந்திரி, வனம் வளர்க்கும் மந்திரி, மூலிகை வன மந்திரி, மிருக பாதுகாப்புதுறை மந்திரி என ஐவரும் கூடியிருந்தனர். மஹாராஜா இன்னும் சில நொடிகளில் அங்கே வந்துவிடுவார் என்று அறிந்து அவர்கள் பதற்றத்தோடு அமர்ந்திருந்தனர்.
“என்ன விஷயமாக இந்த மந்திராலோசனை நிகழ்கிறது மந்திரியாரே? ஏதேனும் அபாயம் சூழ்ந்துள்ளதா ?”, என மூலிகை வன மந்திரியார் கேட்டார்.
“இருக்கும் .. இல்லையென்றால் நம்மை மட்டும் வரச்சொல்லியிருக்கமாட்டார்.. “, முதல்மந்திரி அதற்குமேல் விவாதம் வேண்டாமென்ற தொனியில் கூறிவிட்டு வாசலை பார்த்தார்.
மகாராஜா தனது ராணியாருடன் அங்கே வந்து ஆசனத்தில் அமர்ந்ததும், சுற்றிலும் இருந்த கதவுகள் அடைக்கப்பட்டது. மெய் காவலர்களைத் தவிர வேறு யாரும் அந்த பக்கம் அனுமதிக்கப்படவில்லை.
“அனைவரும் இங்கே அமர்ந்திருப்பதன் காரணத்தை யூகித்தேயிருப்பீர்கள் என்று எண்ணுகிறேன்.. நமது வனத்திற்கும், வன விலங்குகளுக்கும் பேராபத்து சூழ்ந்திருப்பதாக தகவல் வந்துள்ளது.. முகம் மூடி விலங்குகளை தகாத முறையில் வேட்டையாடும் கூட்டங்கள் பெருகி வருகிறது… நேற்று இளவரசி ஆருத்ரா குருகுலம் முடித்து வரும் வேளையில் பெண் மான்களை, அதுவும் கற்பமான பெண்மான்களை குறிவைத்து வேட்டையாடும் கூட்டத்தினை கண்டுள்ளார். அந்த கூட்டத்தில் இப்போது யாரும் உயிருடனும் சிக்கவில்லை. ஒருவன் மட்டும் அந்த கூட்டத்தில் இருந்து தப்பித்து நமது அடர்ந்த வனங்களில் மறைந்துள்ளதாக சந்தேகம் கொண்டு இங்கே வந்து முறையிட்டு சென்றிருக்கிறார்… “, ஒரு நொடி நிதானித்து மற்றவர்களின் முகத்தினை கூர்ந்து பார்த்தார்.
இவ்வார்த்தைகளைக் கேட்டதும் வனம் காக்கும் மாதிரி துணுக்குற்று, “மன்னிக்க வேண்டும் அரசே.. வேட்டையாட உள்ளே செல்பவர்களுக்கு முறையாக அனுமதி ஓலை மற்றும் அவர்களின் ஆயுதங்களை சரிபார்த்து, கூட்டத்திற்கு ஒரு காவல் வீரனும் அனுப்பி வைக்கிறோம்.. அப்படியிருக்க இப்படியான முறைகேடுகள் நடப்பதாக கேள்வியுருவதை… “, என வார்த்தைகளை முடிக்காமல் அரசரின் முகம் பார்த்தார்.
“முழுதாக கூறி முடியுங்கள் மந்திரியாரே… உங்களால் நம்ப முடியவில்லையா அல்லது நடக்க வாய்ப்பில்லையா ?”, என அரசர் கேட்டதும் அவரும் நிமிர்ந்து, “மன்னிக்கவேண்டும் அரசே.. திருடுபவன் முன்வாசல் வழியாக செல்வதில்லை தான் ஆனால் பல இடங்களில் ரகசிய வீரர்களையும் வனத்தினில் நிறுத்தி வைத்துள்ளேன் என்பதை தான் கூறவந்தேன். இவர்களை மீறி எப்படி இந்த இழிக் கூட்டம் உள்ளே நுழைந்து வேட்டையாட முடியும் என்ற ஐயம் எழுந்தது..”
“தங்களது ஐயம் சரியானது தான். ஆனால் இந்த கூட்டம் அரசாங்க முத்திரை பெற்றே உள்நுழைந்து தங்களது தகாத வேட்டையை செய்கிறது என்பது தான் இங்கே அரசர் கூறுகிறார்..”, என மகாராணியார் கூறியதும் மந்திரிகள் அனைவரும் ஸ்தம்பித்து எழுந்து நின்றனர்.
“என்ன கூறுகிறீர்கள் அரசே… ?”, வனம் காக்கும் மந்திரி எழுந்து கேட்டார்.
“தங்களுக்கு வயதான காரணத்தினால் சரியாக பணியை பூர்த்தி செய்வதில் சிரமம் வந்து விட்டதா மந்திரியாரே ?”, அரசர் உதட்டினில் சிரிப்புடனும், கண்களில் கோபத்துடனும் கேட்டார்.
“அரசே .. நான் .. நிச்சயமாக இல்லை அரசே ..”, திக்கி திணறி கூறினார்.
“அப்படியென்றால் தங்களது மருமகன் அல்லவா அந்த கூட்டத்தின் அத்தனை ஓலைகளுக்கும் கையொப்பமிட்டு, சகல வேட்டை அதிகாரத்தையும் வழங்கியுள்ளார்.. தாங்கள் கூறியபடி எந்த வீரனும் அந்த கூட்டத்துடன் செல்வதும் இல்லை… “, என அரசர் கூறியதும் மந்திரி இடிந்துபோய் ஆசனத்தில் அமர்ந்தார்.
மற்ற மந்திரிகள் தங்களது துறையில் ஏதேனும் குழருபடி நடந்திருக்குமோ என்ற ஐயத்தோடு அரசரின் முகத்தையே பார்த்தபடி இருந்தனர்.
“வனத்தை காக்கும் பொறுப்பை தங்களிடம் வழங்கினால் அதை தாங்கள் மருமகனுக்கு தானமாக வழங்கினீர்களா ? அவன் எப்போது அரச அதிகாரியானான் ? தங்களுக்கு இணையான அதிகாரம் யார் கொடுத்தது ? நானா ? மகாராணியா ? இல்லை வேறு யாரேனுமா ?”, அரசர் ஒவ்வொரு வார்த்தையையும் நிறுத்தி நிதானமாக கேட்க கேட்க, மற்றவர்களுக்கு அடிவயிற்றில் கிலி பிறந்தது.
“அரசே ..”, என அந்த மந்திரி கைக்கூப்பி எழுந்து நின்றார்.
“முதல் மந்திரியாரே .. இவர்களின் துறைகளில் எல்லாம் நடக்கும் சீர்கேடுகள் இன்று நமது தேசத்தின் வளத்தினை சுரண்ட ஏதுவான வழிகளை மாற்றானுக்கு உருவாக்கி கொடுத்திருக்கிறது… இந்த ஓலைகளில் எல்லாம் ஒவ்வொருவரின் துறையிலும் யார், என்ன, எப்போது, என்ன செய்தார்கள், என்ற குறிப்புகள் இருக்கிறது.. அதை பார்த்து சரியான தண்டனை ஓலைகளை தயார் செய்யுங்கள்.. உங்கள் நால்வருக்கும் இதுவே இறுதி எச்சரிக்கை .. இதற்கு மேலும் பிழைகள் தொடரக்கூடாது… மூப்பின் காரணமாக செயலாற்ற இயலவில்லை என்றால் பதவியில் இருந்து விலகிவிடுங்கள்.. திறமையானவர்களுக்கு வழிக்கொடுத்து ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள்.. எனது தந்தையின் காலம் தொட்டு தாங்கள் அரசவையில் இருப்பதினால் தனியாக அழைத்து இப்போது பேசிக்கொண்டிருக்கிறேன்… யுவராஜன் வந்தபின் மற்ற விஷயங்களை பேசிக் கொள்வோம்.. முதல் மந்திரியார் தவிர அனைவரும் கிளம்பலாம் ..”, என ஒருவருக்கு சூடு வைத்து மற்றவர்களின் நெஞ்சில் பயம் கொடுத்து, அவரவர் பணியினை செவ்வனே செய்யவேண்டும் என்ற குறிக்கோளோடு அனுப்பிவைத்தார்.
“அரசே .. மற்றவர்களின் பிழைகளையும் கூறியிருக்கலாமே ?”, முதல்மந்திரியார் கேட்டார்.
“கூறுவதால் நமக்கு தான் காலவிரயம் ஏற்படும்.. நான் கூறாமலே மற்றவர்களுக்கு அவர்கள் சறுக்கிய நேரங்கள் மனதினில் தோன்றியிருக்கும்… அவர்கள் செய்வதை செய்யட்டும்.. நான் இப்போதே வெளியே கிளம்புகிறேன். . நேரில் சென்று பார்க்க வேண்டிய கட்டாயம் இப்போது எழுந்துள்ளது.. அந்தந்த இடங்களில் நேரில் சென்று ஆய்வு செய்யவேண்டும். மகாராணியாரிடம் அனைத்தும் பட்டியலிட்டு கூறியிருக்கிறேன்.. அவரின் சொல்படி இங்கே மற்ற காரியங்கள் நடக்கட்டும்.. வனயாத்திரைக்கு இங்கே வனத்தின் பாதுகாப்பான இடத்தில் குடில் அமைத்து இளவரசி வேண்டும் வசதிகளை செய்து கொடுங்கள்… அவரின் ஆராய்ச்சி கூடம் சுற்றி பலத்த பாதுகாப்பு அரண் இருக்க வேண்டும்.. அங்கே உதவிக்கு வரும் ஆட்கள் மற்றவர்களோடு காலந்துரையாடக் கூடாது.. தனியாக பிரித்து வைத்து சுற்று மாற்றி வேலை செய்யவேண்டும்… அவர் கேட்க்கும் பொருட்கள் அனைத்தும் எத்தனை விரைவாக முடியுமோ அத்தனை விரைவாக அவருக்கு கொடுக்கப்படவேண்டும்.. யுவராஜன் திரும்பும் முன் நானும் கோட்டை திரும்பிவிடுவேன்.. “, எனக் கூறிவிட்டு மாறுவேடத்தில் கோட்டையை விட்டு வெளியேறினார்.
இங்கே நரசிம்மன் கூட்டப்பாறை என்னும் இடத்தை நெருங்கிக் கொண்டிருந்தான். அங்கே தான் மகரயாளிகள் வசிக்கின்றன. மகதனும், நரசிம்மனும் பாறைகளில் தாவித் தாவிக் குதித்துக் கொண்டு பாறைக்காட்டினை அடைந்தனர்.
“மகதா .. இதற்குமேல் நீ தான் என்னை சுமந்து செல்லவேண்டும் .. குதிரையை இங்கே அவிழ்த்து விடுகிறேன்..”, எனக் கூறி குதிரையின் காதில் ரகசியமாக ஏதோ கூறி, அதன் மூக்கு கயிறுகளை அவிழ்த்து ஓடவிட்டான்.
மகதன் நாசியில் விலங்கின் வாசனை எட்டியதும் மகதன் பார்வையை கூராக்கி, சுற்றிலும் பார்த்துவிட்டு நரசிம்மனை இழுத்துக் கொண்டு சற்று தள்ளிக் கொண்டு பின்னே சென்றது.
“என்ன மகதா ? வா முன்னே செல்வோம் .. இங்கே தான் மகரயாளிகள் இருக்கின்றன.. அவற்றினை இதுவரை வரைபடத்தில் தான் பார்த்திருக்கிறேன்.. நேரில் கண்டதே இல்லையடா. இன்று கண்டே ஆகவேண்டும் … “, என நரசிம்மன் கூறும்போது அவர்கள் நின்றிருந்த நிலம் ஆடத் தொடங்கியது. மகதனும் ‘நரசிம்மனும் வேகமாக எதிர்பக்கம் ஓடி திரும்பி பார்க்க, நெடியப் பாறையாக இருந்தவை மெல்ல ஊர்ந்து சென்றுக் கொண்டிருந்தது.
கருகருவென அடற்கருப்பு நிறத்தினைக் கொண்டிருந்த அந்த மிருகம் 30 அடி நீளமும், 10 அடி அகலமும், 15 அடி உயரமும் கொண்டிருந்தது. மகதன் தான் நின்றிருந்த பாறையை கீறி பார்க்க, அதுவும் நகரத் தொடங்கியது. நரசிம்மனின் இடைக்கச்சையை கடித்துக் கொண்டு மகதன் இடது பக்கமாக மண் நிலத்தினை நோக்கி ஓடினான்.
அந்நிலத்தின் எதிரே அடர்ந்த காடு தென்பட்டது. உள்ளிருந்து மஞ்சள் விழிகள் இவர்களை நோக்கி மெல்ல வந்தது.