79 – ருத்ராதித்யன்
“கூறுங்கள் வனயட்சி.. பெரியம்மா என்ன மந்திரங்களை கற்றார் ? யார் அவரை கொன்றது ? இந்த விஷயம் மட்டும் ஏன் யாரும் எங்கள் யாரிடமும் கூறுவதில்லை ?பைரவக்காட்டினை பற்றிய வதந்திகள் உண்மை தானா ?”, என யாத்திரை மெல்ல திடமாக ஒவ்வொரு கேள்வியாக கேட்டாள்.
“நீ இன்னும் உறங்கவில்லையா யாத்திரை ?”, வனயட்சி எதிர் கேள்விக் கேட்டார்.
“எனது கேள்விகளுக்கான பதில் தான் முதலில் கேட்க விழைகிறேன் யட்சி.. இனியும் காலம் தாழ்த்தாமல் எங்களுக்கு அந்த மர்மத்தினை விளக்கவேண்டும்.. இதோ உங்களின் செல்ல மகள் ஆருத்ராவும் வந்துவிட்டார் …”, என யாத்திரை கூறவும் ஆருத்ரா அந்த அறையின் உள்ளே வரவும் சரியாக இருந்தது.
“என்ன தீவிரமான ஆலோசனை நடப்பது போல தெரிகிறது ?”, தங்கையின் முகத்தை ஆராய்ந்தபடி அமரனின் அருகே வந்து அமர்ந்தாள்.
“ஆலோசனை இல்லை.. மறைக்கப்பட்டுவரும் உண்மையை பற்றி கேட்டுக்கொண்டிருக்கிறேன் .. என்னைவிட உனக்கு இது மிகவும் தேவைப்படும் தமக்கையே .. நீயே உனது யட்சியிடம் கேளேன் ..”
“எதைப்பற்றி கேட்க சொல்கிறாய் ?”
“பைரவக்காட்டினைப் பற்றி .. பெரியம்மாவின் மரணத்தைப் பற்றி .. உனது ஆராய்ச்சிக்கான முக்கிய திறவுகோளின் குறிப்பு பற்றி … “, யாத்திரை கூறக் கூற யட்சி சிரித்தார்.
“இவள் சரியான கள்ளியாக இருக்கிறாள் ஆருத்ரா… நமது அத்தனை ரகசியங்களையும் கண்டு வைத்து நம்மிடையே கேள்வி எழுப்ப வைக்கிறாள்.. இவள் காட்டினில் உலாவுகிறாள் என்று அலட்சியமாக இருந்தது பெரும் தவறு.. உனது ஆராய்ச்சி கூடம் வரையிலும் அவளுக்கு கண்களும் கைகளும் நீண்டு இருக்கிறது..”, யட்சி கூறியபடி யாத்திரையின் காதினைத் திருகினார்.
“யட்சி எனது குருநாதர் ஒரு சொல்லாடலைக் கூறுவார்.. மறுக்கப்பட்ட நீதி மட்டுமல்ல, காலம் வந்தும் மறைக்கப்படும் உண்மைகளும் யாருக்கும் உபயோகப்படுவதில்லை … இந்த பூமியின் சக்தி வாய்ந்த மற்றும் முக்கியமான காலகட்டத்தில் நாம் வசிக்கிறோம்.. வனதேவியின் அருளால் நமக்கு இயற்கை பற்றிய ஞானமும், இயற்கையான முறையிலேயே பல விஷயங்களை உருவாக்கும் வாய்ப்பும் நமக்கு அமைந்திருக்கிறது. பல உயிரினங்கள் தங்களின் பலத்தையும், இனத்தையுமே இழக்கும் காலம் தொடங்கியது.. இலையுதிர் காலம் போல இனங்களின் அழிவு காலமும் தொடங்கிவிட்டது. பல அறிய இனங்கள் வருங்காலத்தில் இல்லாமல் போகப்போகிறது .. அவற்றை பாதுகாக்க, நமது வலிமைமிக்க ஆராய்ச்சிகளின் தரவுகளை பாதுகாக்க, இந்த பூமியின் மகாசக்தியை பாதுகாக்க நமக்கு ஓர் பெட்டகம் தேவை. அது நிச்சயம் பைரவக்காடு மட்டுமே.. மந்திரங்களின் மூலமே அதை அறிந்து, அதில் நுழைய முடியும் என்பது வரை மட்டுமே நான் அறிவேன். இயற்கையின் உயிர் பெட்டகம் அது.. அதில் சில உயிர்களை இப்போதே நாம் சேர்க்கவேண்டும். மீண்டும் இந்த பூமி வசந்த காலத்தை அடையும் போது அவைகள் இந்த பூமியை வளமாக்க தேவை… உனக்கு தெரிந்த விஷயங்களை நீ மறைக்காமல் கூறவேண்டும் …”
“இது உனது ஆணையா இளவரசி ?”
“எப்டி வேண்டுமானாலும் தாங்கள் எடுத்துக் கொள்ளலாம்.. ஆனால் எங்கள் மூவருக்கும் இன்று அந்த உண்மை தெரிய வேண்டும். விரைவில் அத்தானுக்கும் தெரியவேண்டும்.. இனியும் தங்களின் மனக்காயங்களை பொத்தி வைக்காமல், சீழ் பிடித்திருக்கும் புண்ணிற்கு மருந்திட முன்வாருங்கள் யட்சி… “, யாத்திரை முற்றிலும் தோரணை மாறி அங்கே அவரிடம் பேசினாள்.
“யாத்திரை இது விளையாட்டு விஷயமல்ல .. “, அமரன் நடுங்கும் குரலில் கூறினான்.
“நான் விளையாடும் இடம் இதுவல்ல தமையரே.. அந்த நவ வர்ம நாட்டின் இளவரசன் நமது கானகம் புகுந்துவிட்டான். அவன் மந்திரங்களை தேடியும் புறப்படவிருக்கிறான். அதற்கு முன் நாம் நம்மை அனைத்து விதத்திலும் பலப்படுத்திக் கொள்ளவேண்டும் என்றே இப்போது இவரையும், உங்களையும் இங்கே அமரவைத்து கேட்கிறேன்…”
“உனக்கு இந்த விஷயங்கள் எப்படி தெரியும் ?”, ஆருத்ரா கேட்டாள்.
“நான் தான் கூறினேன் இளவரசி.. எனது தலைச்சிறந்த மாணவிக்கு அனைத்து விஷயங்களையும் போதிக்க வேண்டியது குருவின் கடமையல்லவா ?”, எனக் கூறியபடி சிங்கத்துரியன் அங்கே வந்தான்.
“துரியா … “, என வனயட்சி அவனைக் கட்டிக்கொண்டு கண்ணீர் வடித்தார்.
“அழுகாதீர்கள் தாயே .. நான் வந்துவிட்டேன்.. தங்களின் உள்ளம் அறிந்து நடப்பவனால், உங்களை கொல்லும் வேதனையிலிருந்து வெளிவரவைக்க முயலமாட்டேனா ?“, என சிங்கதுரியன் இன்னமும் பலவற்றை கூறியபடி சமாதானம் செய்துக் கொண்டிருந்தான்.
மற்ற மூவரும் அவர்களின் சம்பாஷனையைக் கேட்டபடி அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தனர். இருவரின் இடையே இருக்கும் பிணைப்பு அமரனுக்கு மிகவும் பிடித்தது. மகாராணியார் அவனை தாயன்போடு எத்தனை சீராட்டினாலும், அவனுள்ளே பெற்ற தாயின் அருகாமைக்கு ஏக்கம் மிகுந்திருந்தது.
“போதும் குருநாதரே தங்களின் பாசப்பிணைப்பு சமாதானங்கள்.. தாங்கள் கூறியபடி அனைத்தும் செய்து முடித்துவிட்டேன்.. இனி தாங்கள் தங்களது பகுதியை தொடங்குங்கள்…”, எனக் கூறி யாத்திரை யட்சியின் மடியில் படுத்துக் கொண்டாள்.
“அதென்ன திட்டம் துரியரே ? தங்களின் சீடப்பெண் இத்தனை பணிவாக தங்களிடம் கூறி படுத்துக் கொள்வதை பார்த்தால், தங்களின் இலக்கு நாங்கள் இருவருமா ?”, என ஆருத்ரா கேட்டதும் அமரன் கூர்மையாக அவனைக் கவனித்தான்.
“இங்கே இலக்கென்பது ஒன்று மட்டுமே தேவி.. உயிர்களின் வலு காக்கவும், அவைகளின் மரபணுசார் செயல்களின் இறங்குமுகத்தை முடிந்தவரை தாமதப்படுத்துவதும் தான்… தாங்கள் சென்றமுறை குருகுலம் சென்றபோது தங்களது குருநாதர் ஒரு விஷயத்தை தங்களிடம் கூறினார் நினைவிருக்கிறதா ?”
“பாஷாணங்களை பற்றியா ?”
“அதோடு உயிர்களின் உயிர்கூறுகளைப் பற்றியும் கூறி, ஆத்மாக்களின் உறைவிடம் பற்றியும் கூறினார் அல்லவா ?”
“ஆமாம்..“
“அதைப் பற்றி நானும் யாத்திரையும் ஆராய்ச்சி செய்து சில விஷயங்களை கண்டறிந்துள்ளோம்.. இதே விஷயத்தை அந்த நவ-வர்ம நாட்டின் இளவரசன் அபராஜித வர்மனும் ஆராய்ந்து கொண்டிருப்பதாக கேள்வியுற்றோம்…”
“அனைத்திலும் அந்த இளவரசன் நுழைவது விசித்திரமாக இருக்கிறது ..”, அமரன் தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்துக் கூறினான்.
“ஒரு இலக்கை அடைய கடும் முயற்சியில் இருப்பவன் அதை அடையும் அத்தனை வழிகளையும் ஆராய்ந்து கொண்டு, அதன் நிறை குறைகளை ஆராய்ந்து கொண்டே தான் வருவான்.. அவன் இப்போது தொட்டிருப்பது ஆத்மாக்களின் ஆராய்ச்சி…”, எனக் கூறி நிறுத்தி தனது தாயின் முகத்தைப் பார்த்தான்.
“என்ன ? ஆத்மாக்களை ஆராய்கிறானா? “, வனயட்சி கண்களில் மிரட்சியுடன் கேட்டார்.
“ஆம் தாயே .. நாம் அறிவியலில் மட்டுமே பலம் கொண்டவர்கள் இல்லை. நமது அன்றாட வாழ்வியலில் ஆத்மாவின் ஒருநிலைப்பாடு எத்தனை முக்கியம் கொண்டுள்ளது என்பதை நாங்கள் நன்கு உணர்ந்துள்ளோம்.. இனியும் இலைமறைக்காயாக கூறாமல் அதன் சாராம்சத்தை எந்தவிதமான பூச்சுகளும் இன்றி எங்களுக்கு விளக்கவேண்டும்… “, என சிங்கத்துரியன் கூறியதும் வனயட்சி எழுந்து வெளியே சென்றார்.
அவர் வெளியே சென்று சிறிது நேரம் கழித்து ருத்ர சமஸ்தானத்தின் அரசரும், அரசியாரும் அங்கே வந்தனர். அவர்கள் பின்னால் வனயட்சி ஒரு பெட்டகத்தை தூக்கிக் கொண்டு வந்தார்.
“அனைவரும் என் பின்னே வாருங்கள்.. “, எனக் கூறி வனயட்சி அந்த உப்பரிகையில் இருந்த பக்கவாட்டு படிகளின் வழியே கீழே சென்றவர், அருகே இருந்த பெரிய தூணின் பின்னால் சென்று ரகசிய கதவினைத் திறந்தார். அந்த தூணின் தரையில் நிலம் நகர்ந்து வழி கொடுத்தது.
அனைவரும் அந்த இருட்டில் மறைந்து சுரங்க பாதையில் நடந்து கொண்டிருந்தனர். ருத்ர சமஸ்தான அரசர் வியப்புடன் அந்த சுரங்கத்தை பார்த்தபடி ஏதும் கேட்காமல் நடந்துக் கொண்டிருந்தார். அரசியாரும் கண்களில் சிறிது கலக்கம் காட்டி அமைதியாக நடந்து கொண்டிருந்தார்.
யாத்திரை அந்த கட்டிட அமைப்பை பார்த்து சுவற்றை முகர்ந்து பார்த்து நக்கி பார்க்க அருகே அவள் செல்லும் போது, “இந்த சுவற்றில் பாஷாணங்கள் தடவப்பட்டு இருக்கிறது மகளே.. நீ நக்கி பார்க்க வேண்டாம். முழு விவரமும் சிறிது நேரத்தில் உனக்கு தெரியவரும். விரைவாக என்பின்னே வா..”, என திரும்பிப் பார்க்காமல் வனயட்சி கூறியபடி முன்னால் வேகமாக நடந்துக் கொண்டிருந்தார்.
சிங்கத்துரியன் சிரித்தபடி அவளை முன்விட்டு அவளின் பின்னே நடந்தான். ஒரு நாழிகை நடைக்கு பின், அந்த விசாலமான அறைக்குள்ளே அனைவரும் நுழைந்தனர்.
அந்த அறையில் பல வகையான மூலிகைகள் பதப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. ஒரு பக்கம் மனிதன் முதல் நுண்ணுயிர் உயிர்கள் வரையிலான உடற்கூறு வரைபடங்கள் சுவற்றில் வரையப் பட்டிருந்தது. மற்றும் பல சுவடிகள் முதல் பலவகையான உலோகப்பட்டையங்கள் ஒரு பக்கம் அடுக்கப்பட்டிருந்தது. அந்த அறையில் இருந்து பல வழிகளும் வெளியே செல்ல இருந்ததை அனைவரும் கவனித்தனர்.
“எப்படி இத்தனை ஆண்டுகளாக எனக்கு இந்த இடம் தெரியாமல் இருந்தது குருவே ?”, வனயாத்திரை சிங்கத்துரியனிடம் கிசுகிசுத்தாள்.
“சில வாயில்கள் எல்லாம் உரியவர் முன் சென்றால் மட்டுமே திறக்கும் மகளே.. அதனால் இதை நீ அறியவில்லை… அரசருக்கும், அரசியாருக்கும் சந்தேகங்கள் பல தோன்றியிருக்கும்.. தாங்கள் கேளுங்கள் .. பதில் கூற கடமைப்பட்டிருக்கிறேன்… “, என வனயட்சி அவர்கள் அருகே வந்து கூறினார்.
“இதன் கட்டமைப்பை பார்க்கும் போது பல ஆண்டுகள் பழமையானது என்பது புரிகிறது. என் தந்தை கூட இவற்றைப் பற்றி என்னிடம் ஏதும் கூறவில்லையே ..”, என அவர் கூறிமுடிக்கும் முன், “அவர் இதைப்பற்றி அறியவில்லை. இன்னும் சொல்லப்போனால் உங்களது முப்பாட்டன் தான் அறிந்திருந்தார். அவர் தான் நெடுங்காலம் இங்கே உயிரோடு வாழ்ந்தவர். அவருக்கு பின் யாருக்கும் இந்த இடம் பற்றி கூறப்படவில்லை..”
“ஏன் ?”, அரசியார் குழப்பத்துடன் கேட்டார்.
“இதன் சம்பந்தப்பட்ட அறிவும், ஞானமும், அதற்கான சமயமும் வந்தால் மட்டுமே இந்த இடம் அறியப்படும் அரசியாரே.. தவிர பைரவக்காட்டின் மிகப்பெரும் பங்கு இந்த வம்சாவழியை சேர்ந்த ஒருவரால் வகிக்கப்படவேண்டியிருக்கிறது.. “, எனக் கூறி ஆருத்ராவை அவர் பார்த்தார்.
“என்ன விஷயம் என்று முழுதாக கூறுங்கள் தாயே… “, அமரன் பல உணர்வுகளை அடக்கியபடி கூறினான்.
“அமரரே .. உங்களுக்கு இங்கே ஓர் பரிசுண்டு.. அந்த அலமாரியில் உங்களது மனம் சுட்டிக் காட்டும் பொருளை எடுத்து வாருங்கள்… “, எனக் கூறி வலப்பக்கம் அனுப்பினார்.
அந்தபக்கம் சென்றதும் நீண்டு போன வழியின் முன்னே சில படிக்கட்டுகள் இருந்தன. அதில் பல பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன. அதில் அவனது மனம் தடுதடுக்க ஓர் குப்பியை எடுத்துக் கொண்டு மற்றவர்கள் நிற்குமிடம் வந்தான்.
அந்த குப்பி அவனது நீளமான உள்ளங்கையை நிறைக்கும் அளவிற்கு இருந்தது. அது எந்த வகை உலோகத்தினால் செய்தது என்று அவனால் அனுமானிக்க முடியவில்லை. நிச்சயமாக இதன் வேலைப்பாடு சாதாரண மனிதனால் மட்டுமே செய்ய முடிந்திருக்காது என்று மட்டும் உறுதியாக நம்பினான்.
“இந்த குப்பியா .. சரி அதை திறந்து குடித்து விடுங்கள்… “
“என்ன ?”, ஆருத்ரா கேட்டாள்.
“ஆம்.. அதை அவர் குடிக்க வேண்டும்.. அவரது தாயின் திரவ தயாரிப்பு அவனுக்கே கிடைத்திருக்கிறது.. அதை குடியுங்கள்… உடலில் சில மாறுதல்கள் நடக்கும்.. பயம் கொள்ள வேண்டாம்… “, என வனயட்சி கூறியதும் அவன் அதை குடித்தான்.
அதைக் குடித்த சில நொடிகளில் அவனது கண்கள் சொறுக மயங்கி விழுந்தான்.. அவனது உடல் மெல்ல மெல்ல மறையத் தொடங்கியது…