80 – ருத்ராதித்யன்
நரசிம்மனும் மகதனும் கிழக்கு பக்கமாக தங்களது பயணத்தைத் தொடர்ந்துக் கொண்டிருந்தனர். வடக்கும், வடக்கிழக்கும் முடிந்து நாட்டினை வலப்பக்கமாக சுற்றும்படியாக இந்த பயணம் இனி தொடரும். கோவிலை வலம் சுற்றுதல் போல நாட்டினை வலம் சுற்றி அரியணையில் ஏறும் வைபவம் இது. இதற்கிடையில் அவர்கள் இருவரும் பல இன்னல்களையும், சவால்களையும், ஆபத்துகளையும் கடந்து இந்த பயணத்தை வெற்றிகரமாக முடிக்கவேண்டும்.
நரசிம்மனும், மகதனும் நீண்ட நாட்கள் கழித்து ஒன்றாக நேரம் செலவழிப்பது போலவும் இது அமைந்ததால், இருவரும் ஒருவரின் இருப்பை மற்றவர் அனுபவித்துக் கொண்டிருந்தனர். மகதன் விளையாடி வம்பிழுத்தால் நரசிம்மன் கண்டிப்பதும், நரசிம்மன் விளையாடினால் மகதன் கண்டிப்பதுமாக இருவரும் களைப்பு தெரியாமல் தீராத ஆர்வத்தோடும், வாலிப பலத்தோடும் நிற்காமல் ஓடி, கிழக்கு பக்கமிருக்கும் மலைத்தொடரை வந்தடைந்தனர்.
இடையில் ஒரு நாள் பயணத்தில் முழுதாக கழிந்தது. ஆங்காங்கே வேட்டையாடி கறியை சுட்டு உண்டு, பின் கண்ணயர்ந்து மாறி மாறி தங்களை காவல் காத்துக் கொண்டு கிழக்கு மலைத்தொடரில் வீற்றிருக்கும் வனதேவியை தரிசிக்க அடிவாரம் வந்து சேர்ந்தனர்.
“மகதா .. சற்று இளைப்பாறிவிட்டு மலர் சேகரிக்க தொடங்கலாம்.. நான் சிறிது கண்ணயர்கிறேன் .. கவனமாக இரு .. அதிக தூரம் செல்லாதே.. “, எனக் கூறிவிட்டு நரசிம்மன் ஓர் மரத்தின் வேரில் தலை சாய்த்தான்.
மகதனும் மெல்ல அவனை சுற்றி நடந்து கொண்டு காவல் செய்து கொண்டிருந்தான். அப்போது அடர்ந்த மரங்கள் நிறைந்த இடத்தில் சில மனிதர்கள் நடமாடுவது போல கிளைகள் அசைவதும், தரையில் வீழ்ந்த சருகுகள் மிதிபடும் ஒலி எழுந்தது. சூரியன் உச்சி தொட்டு 4 நாழிகை கழிந்திருந்தது. ஆனாலும் அந்த மரக்கூட்டம் இருக்கும் இடத்தில் மெல்லிய கதிர்கள் மிகவும் லேசாகவே பாய்ந்துக் கொண்டிருந்தது. மகதனை குறி வைத்து ஒருவன் அம்போடு நின்றான்.
மகதன் காவல் இருக்கும் முறைப்படி சில அடிகள் முன்னும் பின்னுமாக நடந்து கொண்டு அவ்வப்போது நரசிம்மனின் முகத்தை அருகே வந்து பார்த்துக் கொண்டிருந்தான். ஒரு நடைக்கு கால் நாழிகை அளவு எடுத்தது. அதைக் கணக்கு வைத்து, குறிப்பார்ப்பவன் நரசிம்மனை விட்டு தூரமாகச் செல்லும் திசையை கூறிவைத்து நின்றான்.
மகதன் மனிதர்கள் வாடை வருவதை ஒலி எழுந்த போதே உணர்ந்திருந்தான் அதனால் மிகவும் ஜாக்கிரத்தையாகவே காவல் செய்யும் சுற்று நடையை மேற்கொண்டான்.
விஷம் தடவிய அம்பு நாணில் பூட்டி குறிப்பார்த்து, அடர்ந்த மரங்களின் ஊடே கனமான கிளையில் அமர்ந்து பார்த்தபடி காத்திருந்தான்.
பாஷாணத்தின் வாசனை மகதன் அறிந்ததும் மெல்ல நடந்தபடி நரசிம்மன் அருகே சென்று அவன் உடல் படும்படி தரையோடு படுத்துக் கொண்டான். நரசிம்மனின் மார்பில் மகதன் தலை வைத்துப்படுத்தபடி மெல்ல முட்டினான்.
நரசிம்மனின் உணர்வுகள் சட்டென முழித்துக் கொள்ள, சுற்றிலும் கூர்மையாக கவனிக்கத் தொடங்கினான். மரக்கூட்டத்தில் மெல்லிய பேச்சு சத்தம் கேட்டது. மகதனை எழுந்து மீண்டும் காவல் நடைக்கு செல்ல செய்கை செய்தான். மகதன் அங்கிருந்து சற்று தூரம் சென்றதும் வேரில் தவழ்ந்தபடி மெல்ல மெல்ல ஊர்ந்தே அந்த மரக்கூட்டத்தை நெருங்கினான். அவன் அங்கே நெருங்கவும், குறிவைத்தவன் மகதன் மேல் அம்பு எய்யவும் சரியாக இருந்தது.
மகதன் பெரும் சத்ததுடன் கீழே விழுந்தான். அம்பெய்தவனுடன் இன்னும் இருவர் அவனுக்கு பின்னால் நின்று மகதன் வீழ்வதை பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தனர்.
“சரியாக வீழ்த்தினாய் அதிகுணா.. நிச்சயமாக இன்று நீ நமது அரசரிடம் வெகுமதி அதிகம் பெறுவாய். இத்தனை பெரிய புலி.. அதுவும் மரகத பச்சை கோடுகள் உள்ள புலியை நீ வேட்டையாடியது பெரிய விஷயம் தான். சரி வா அருகே சென்று புலியின் உடலை பார்ப்போம்…”, எனக் கூறியபடி திரும்பியவன் முகத்தில் நரசிம்மன் ஓர் குத்து வைக்க, அவன் மயங்கி சரிந்தான்.
“யார் நீ ? எதற்காக எனது நண்பனை தாக்கினாய் ?”, எனக் கேட்டபடி அதிகுணன் நரசிம்மன் மேல் பாய்ந்தான்.
விடலை பருவத்திலிருந்த அதிகுணன் சில நிமிடங்கள் கூட நரசிம்மன் முன் தாக்குப் பிடிக்கவில்லை. நான்கே அடியில் சுருண்டு விழுந்தான். ஆனால் மயக்கமடையாமல் நரசிம்மனைத் திட்டியபடி இருந்தான்.
அவர்களுடன் இருந்த இன்னொருவன் முதலாமவன் தாக்கபட்டதும் அங்கிருந்து ஓடிவிட்டான். அவன் மரக்கூட்டத்தைச் சுற்றிக் கொண்டு புலியை காண சென்றான். அருகே சென்று அதன் கண்களை காண இமை பிரித்து பார்த்தான். ‘சேயோன் கூறிக்கொண்டிருந்தபடி பச்சை கண்களையுடைய புலி இது தான். அப்படியானால் அவர் யுவராஜர் நரசிம்மனா ?’, என மனதிற்குள் நினைத்தபடி மரக்கூட்டத்தைப் பார்த்தான். இவன் நிற்குமிடத்தில் இருந்து அதிகுணன் நரசிம்மனிடம் அடிவாங்குவது கிளைகள் ஆடும் இடைவெளியில் தெரிந்தது. இதை உடனடியாக அரசர் அரசகேசரியிடம் கூறவேண்டும் என அவன் நினைத்து ஓட முற்படும் போதும், நரசிம்மன் சீழ்க்கை எழுப்ப, மகதன் நொடியில் எழுந்து தரையில் தள்ளி அவன் மேல் படுத்துக் கொண்டான்.
இத்தனை நேரம் அசைவில்லாமல் மூச்சு கூட விடாமல் இருந்த புலி நொடி பொழுதில் உயிர்பெற்று எழுந்து தன்னை வீழ்த்தி அமர்ந்திருப்பதுக் கண்டு பயத்தில் உறைந்து போனான்.
மகதன் உறுமிய சத்தம் கேட்டு அதிகுணன் கூட சில நொடி ஸ்தம்பித்து அமைதியானான்.
“யார் நீங்கள் ? இது வேட்டையாடும் காலமல்லவே.. உங்களுக்கு யார் அனுமதி கொடுத்தது ? அதுவும் கிழக்கு பக்கமிருக்கும் இந்த மலைத்தொடரில் இனபெருக்கு காலம் தொடங்கிவிட்டதல்லவா ? சட்டவிரோதமான செயல்களில் ஏன் ஈடுபடுகிறாய் ?”, என நரசிம்மன் அதிகுணன் கண்கள் கண்டு கேட்கவும் அவனது நாவு மேலன்னத்தில் ஒட்டிக் கொண்டது.
அதிகுணன் இதுவரை இத்தனை கம்பீரமான யாரையும் சந்தித்ததில்லை. அவனுக்கு 16 அகவை தான் பூர்த்தியாகி இருந்தது. விஸ்வக்கோட்டை சமஸ்தானத்தில் மக்கள் மிகவும் அரிதாக தான் அரசவை காண அனுமதிக்கப்படுகின்றனர். கடலும், மலைகளும் கொண்ட நிலவமைப்பை கொண்ட சமஸ்தானம் இது. எதிரி நாடுகளுக்கு நுழைவாயிலும் இது தான் என்பதால் இரண்டு பக்கமும் அதீத காவல் போடப்பட்டிருந்தது. கடல் சார் வணிகமும், கடல் பாதுகாப்பும் ஆதித்த வீரர்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. கடற்கரையில் ஓர் கோட்டை அந்த வீரர்களுக்காகவும், சுங்க அதிகாரிகள் தங்குவதற்காகவும் நிர்மாணிக்கப் பட்டிருந்தது. அதனால் சில காத மைல்கள் வரையிலும் ஆதித்த அரசு வீரகள் தான் உலாவிக் கொண்டிருப்பார்கள்.
அரசகேசரியின் தந்தை இந்த பகுதியை முழுதாக ஆண்டு கொண்டு தான் இருந்தார். ஆனால் சில அந்நிய நாட்டு வீரர்கள் கடல் வழியாக உள்ளே புகுந்து விஸ்வக்கோட்டை சமஸ்தானத்தை கொள்ளையடித்துவிட்டு, கண்களில் கண்ட பெண்களையும், குழந்தைகளையும், பல பொக்கிஷங்களையும் கொள்ளையடித்து கோட்டையையும் பிடித்துவிட்டனர்.
அப்போது ருத்ர கோட்டை அரசரும், அமரக்கோட்டை அரசரும் படைகளுடன் விஸ்வக் கோட்டையை மீட்கச் சென்றனர். அவர்கள் களம் புகும்போது வரத யோகேந்திரர் இடைப்புகுந்து அவரவர் கோட்டைகளைக் கண்காணித்து பலமாக்க கட்டளையிட்டு அனுப்பிவிட்டு, தனது வீரர்களுடன் கோட்டையை தாக்கி உள்ளே சென்று, உள்ளிருந்த வீரர்களை கைது செய்து கடலில் வெகுதூரம் சென்று படகோடு இறக்கிவிட்டு வரச்சொன்னார். அந்த போரில் அரசகேசரியின் தாயும் தந்தையும் இறந்து விட, அரசர் யோகேந்திரர் அவனை தன் பொறுப்பில் எடுத்து குருகுலம் அனுப்பிவைத்தார். அவன் கல்விக்கற்று வரும்வரையிலும் யோகேந்திரர் மேற்பார்வையில் அதிகாரிகளே அங்கே ஆட்சி செய்தனர்.
அரசகேசரி வாலிப பருவத்தை அடைந்ததும் அரசர் அவனுக்கு முடிசூட்டிவிட்டு, “கடல் ஒட்டி உள்ள இடங்களில் எனது படைவீரர்கள் காவல் காப்பார்கள். நீ மலை சார்ந்த இடங்களை காவல் செய்.. இனியாரும் இந்த வழியாக உள் புகக்கூடாது..” எனக் கூறிவிட்டு வந்தார். கடல் வணிக சுங்க வரிகளில் அவனது கஜானாவுக்கும் அவர்களின் பங்குகள் அனுப்பப்பட்டன. ஆனால் அவனுக்கு அந்த சொற்ப வரிகள் போதவில்லை. தனி அரசாக இயங்க ஆசை எழுந்தது. அதற்கு தூபம் போட அவனது அரசவையில் ஓர் வயதான மந்திரியும் இருந்தார். அவரின் மகன் தான் சேயோன். அவனை அரசகேசரியுடன் நெருங்கி பழகவிட்டு அரசகேசரியின் குணத்தில் கேடு விதைத்துக் கொண்டிருந்தனர்.
அவனும் அவர்களின் தூபத்தின் பேரிலும், நரசிம்மன் மற்றும் அமரபுசங்கன் மீது கொண்ட வன்மத்திலும் தனி பேரரசு நிறுவும் எண்ணத்தோடு நவ-வர்ம நாட்டின் இளவரசனோடு நட்பு பாராட்ட ஆரம்பித்தான்.
“எனக்கு பேரரசன் ஆகவேண்டும் நண்பா .. அது ஒன்று தான் கனவு.. எனக்கு கீழ் அனைவரும் அடிமைகளாக சேவகம் செய்யவேண்டும்.. மொத்த வரிப்பணமும் என்னிடம் வந்து சேர வேண்டும்… உலகின் அத்தனை அதிகாரமும் என்னிடம் இருக்கவேண்டும்.. “ என கண்களில் பேராசை மின்னக் கூறினான்.
அபாராஜித்த வர்மன் அவனது ஆசை நிறைந்த கண்களைக் கண்டுவிட்டு ஏளனமாக சிரித்தான். அவனது சிரிப்பு அரசகேசரியின் கோபத்தை உசுப்பியது. இடைவெளியின்றி அவனது சிரிப்பு கூடிக் கொண்டே போகவும், அரசகேசரி கோபமாக, “ நிறுத்து நண்பா .. ஏன் இப்படி என்னை எள்ளி நகையாடி சிரிக்கிறாய் ? எனது ஆசையில் என்ன குற்றம் இருக்கிறது ?” எனக் கேட்டான்.
“உனது ஆசையானது இங்கே இருக்கும் விஷயங்களை அடைவத்தில் மட்டுமே அடைபட்டு விட்டது நண்பா.. நாமே ஒரு உலகை உருவாக்கி, அதில் நாம் உருவாக்கிய உயிர்கள் மட்டுமே வாழவேண்டும் என்று ஆசைப்படாமல்.. ஏற்கனவே பலரின் கை தொட்டு வரும் அதிகாரத்தை நீயும் ஆசைப்படுவதை தான் எண்ணி சிரித்தேன்..” எனக் கூறிவிட்டு மதுவை நிரப்பி ஒரு மிடறு அருந்திவிட்டு கேசரியிடம் கொடுத்தான்.
அரசகேசரி தயங்கியபடி அவனைப் பார்த்தான். அவனது தயக்கம் கண்டவன் மீண்டும் சிரித்தான். “என்ன நண்பா தயங்கி நிற்கிறாய் ? உனக்கு பிடித்த மது, உனக்கு பிடித்த தங்கமும், வைரம் இழைத்த கோப்பையில், இந்த பேரரசின் யுவராஜன் உனக்கு நிரப்பி தருகிறேன்.. ஆனாலும் உனது முகத்தில் ஏன் இந்த ஒவ்வாமை எழுகிறது ?” எனக் கேட்டு தானே அதை பருகத் தொடங்கினான்.
“எச்சில் செய்த எதுவும் உண்ணும் பழக்கம் எனக்கில்லை நண்பா… “, என மற்றொரு கோப்பையில் மது நிறப்பி அருந்தினான்.
“இந்த செயலை தான் நான் இந்த உலகையே மாற்றி நமதாக்கி கொள்ளவேண்டும் என்று கூறுகிறேன்.. இயற்கை என்ற ஒன்று தான் இந்த உலகிலேயே பெரியது என்று அனைவரும் கூறுகின்றனர். அது இல்லை என்று நிரூபித்து நமக்கான உலகை உருவாக்கி நமது இஷ்டம் போல அனைத்தும் இயங்கவைக்க வேண்டும் என்பது தான் எனது ஆசை.. இப்போது கூறு நான் சிரித்தத்தில் தவறில்லை தானே ? நீ கையகப்படுத்த நினைக்கும் அதிகாரம் பல பேரின் எச்சில் தானே…” எனக் கூறிவிட்டு உப்பரிகையில் இருந்த ஊஞ்சலில் அமர்ந்தான்.