11 – வேரோடும் நிழல்கள்
மலை ஏறப் போகலாம் என்று விஷாலியும், கிரிஜாவும் கூறியதும் நீரஜும் அவர்களுடன் அதற்கான முன்னேற்பாடுகள் செய்ய ஏதுவான விவரங்களை தேடத் தொடங்கி ஓர் மலை ஏறும் நிறுவனத்தை தேர்ந்தெடுத்து, அவர்கள் கொடுத்துள்ள இடங்கள் மற்றும் போய் வரும் நாட்கள் போன்றவற்றை பார்த்து விவாதித்துக் கொண்டிருந்தனர். அந்த சமயம் நிழலினி விஷாலிக்கு அலைபேசியில் அழைத்தாள்.
“விஷா.. எங்க இருக்க? இங்க உன் அம்மா உன்னை சாப்பிட கூப்பிடறாங்க..”
“சரி பத்து நிமிஷத்துல வரேன். நீங்க சாப்பிடுங்க..” என நேரம் பார்த்தபடி கூறினாள்.
“இல்ல நீ வா நம்ம ஒண்ணா சாப்பிடலாம். நான் எல்லாம் எடுத்து வச்சிட்டு இருக்கேன். சீக்கிரம் வா..” எனக் கூறி அழைப்பை வைத்தாள்.
“சரி கிரிஜா.. இது என் நம்பர். நம்ம நைட் பேசி ஒரு முடிவுக்கு வரலாம். நம்ம மூணு பேருக்கும் இடைஞ்சல் இல்லாத நாள் நம்ம பிளான் பண்ணிக்கலாம். அவளுக்கு நான் நாள் கேட்டு சொல்றேன்.” என பேசியபடி அனைவரிடமும் விடைப்பெற்றுக் கொண்டு அங்கிருந்து தன் இல்லம் நோக்கிக் கிளம்பினாள்.
“டேய்.. வேற எங்கயாவது போலாம் டா. மலை ஏர்ற வேலை எல்லாம் வேணாம். சொன்னா கேளு டா.. இதோ சக்திக்கும் மலை ஏறினா காய்ச்சல் வருமாம்..” என பார்த்தி ஆரம்பித்தான்.
“நீங்க மலை ஏற பிராக்டிஸ் பண்ணிக்கோங்க டா.. உடம்புக்கு ரொம்ப நல்லது..” எனக் கூறியபடி சக்தியை அழைத்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டான்.
பார்த்தி முகத்தைப் பாவமாக வைத்துக் கொண்டு கிரிஜாவைப் பார்த்தான்.
அவள் அவனை என்ன என்பதை போல பார்த்து புருவம் உயர்த்தினாள்.
“வேணாம் டி.. என்னை பாத்தா பாவமா இல்லையா?”
“இல்ல.. இவ்ளோ குடிக்கறல்ல நீ.. மலை ஏறு அப்ப தான் உனக்கு உடம்பு ஒழுங்கா இருக்கும். நீயும் ஒழுக்கமா இருப்ப..” எனக் கூறிவிட்டு அவனுடன் வண்டியில் ஏறினாள்.
“ஏண்டி மாசம் ஒரு நாள் குடிக்கறேன் அதுக்கா இப்படி ஒரு தண்டனை? இனிமே சத்தியமா குடிக்கவே மாட்டேன் டி. என்னை விட்று டி.. மலை ஏறினா எனக்கு தலை சுத்தும் டி. உயரம், காடு, பெரிய மரம் இதுலாம் பாத்தாலே எனக்கு பயம் டி..” எனக் கெஞ்சத் தொடங்கினான்.
“அதுலாம் நீ குடிக்க பழகறப்போ யோசிச்சி இருக்கணும். இப்ப என்கிட்ட பொலம்பாத.. முன்னாடி பாத்து வண்டிய ஓட்டு. நாளைக்கு புடவை எடுக்க போகணும். காலைல சீக்கிரம் வந்து சேரு. நல்ல நேரத்துல புடவை எடுக்கணும்.”
“அப்ப நீ இப்பவே கடைக்கு போனா தான் நாளைக்கு மதியம் எடுத்து முடிப்ப.. ஒரு மணிநேரம் உனக்கு எப்படி பத்தும்?”
“நான் டிசைன் எல்லாம் ஏற்கனவே பாத்து 20 புடவை தனியா எடுத்து வைக்க சொல்லி இருக்கேன். அதுல மூணு எடுக்கணும். ஒரு மணிநேரம் போதும். நீ அங்க இருக்கணும் அது தான் முக்கியம்.” எனக் கூறியவள் அவனுக்கு சிரித்த முகமாக விடைக்கொடுத்தனுப்பினாள்.
விஷாலி வழியில் நிழலினிக்கும், தன் வீட்டிற்கும் தேவையான திண்பண்டங்கள் வாங்கிக் கொண்டு இல்லம் சென்று சேர்ந்தாள்.
வாசல் கதவைத் தாண்டிய முன்னறையில் நிழலினியும், அவள் அம்மா ஆனந்தியும் சிரித்தபடி பேசிக்கொண்டிருந்தனர். நிழலினி இங்கே வந்தால் இரவு தான் இல்லம் செல்வாள். முன்பு அவளின் பெற்றோரே இங்கே விட்டு செல்வர், இப்போது இங்கிருப்பவர்களுக்கு தொந்தரவு தர விரும்பாமல் வெளியிடங்களுக்கு தனியே சென்று அமர்ந்துக் கொள்கிறாள்.
அவள் வாய்விட்டு நிறைவாக பேசுவது இங்கே தான். சொல்லப்போனால் நன்றாக பேசிப் பழகியதும் கூட இவளின் தாயிடம் தான். இயல்பிலேயே பொறுமையானவர் ஆனந்தி. அவரின் அமைதியான பேச்சும், அவரின் மென்மையான கையாளுதலும் நிழலினிக்கு மிகவும் பிடிக்கும்.
அவ்வப்போது அவள் அவளது அன்னையையும், இவரையும் தராசில் வைத்து பார்ப்பாள். சிறுவயதில் அதிகமாக அப்படி செய்வாள். இன்னும் சொல்லப்போனால் நான் ஏன் இவருக்கு பிறக்காமல் போனேன் என்று விஷாலியிடம் கூட கூறியிருக்கிறாள். தாயின் அரவணைப்பிற்கான ஏக்கம் அப்பட்டமாக அது போன்ற சமயங்களில் அவளது முகத்தில் தெரியும்.
ஆனந்தியும் அவளை விஷாலியை நடத்துவதைப் போலவே நடத்துவார். நீயும் என் மகள் தான் என்று அவளது மனதில் பதியவைத்திருந்தார். அவரின் உதவியால் அவளுக்கு சில நல்ல குணங்களும் வந்தது, அதீத அழுத்தத்தினால் வேண்டாத குணமும் வளராமல் போனது. அவள் ஆசிரியர் பணியைத் தேர்ந்தெடுக்க முக்கிய காரணம் ஆனந்தி தான். அவருக்கு ஆசிரியர் ஆகும் கனவு இருந்தது. ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக அவரால் ஆகமுடியவில்லை.
அதை ஒருமுறை நிழலினி அவரின் கனவு என்னவாக இருந்தது என்று கேட்டபொழுது கூறினார்.
“எனக்கு தமிழ் ஆசிரியை ஆகணும்னு ஆசை நிலா.. என் தமிழ் ஆசிரியர எனக்கு ரொம்ப பிடிக்கும். ஆனா பாரு என்னை பத்தாவது கூட படிக்கவிடாம கல்யாணம் செஞ்சி வச்சிட்டாங்க.. நீங்க ரெண்டு பேரும் உங்களுக்கு பிடிச்சத படிச்சி உங்களுக்கு பிடிச்ச வேலைக்கு போகணும். அதுவரை கல்யாணம் எல்லாம் வேணாம் சரியா?” என அவர் அவளது பத்தாவது பரீட்சை முடிந்த விடுமுறையில் கூறியதை வைத்து, தானும் ஆசிரியர் ஆக வேண்டும் என்று முடிவுசெய்து அதற்கு ஏற்ப படித்து இப்போது ஆசிரியையாகியிருக்கிறாள்.
“எங்க டி போன?” என நிழலினி விஷாலியை பார்த்ததும் கேட்டாள்.
“என் ஃப்ரெண்ட் ஒருத்தன பாக்க போனேன் நினி.. டிஸ்டிரிக்ட் போற பசங்களுக்கு ட்ரைனிங் குடுக்க நல்ல ஆள பாக்கணும். நம்ம வாலிபால் டீம் இன்னும் ஸ்ட்ராங்க் பண்ணனும். ******** ஸ்கூல் நல்லா விளையாடறாங்க. அடுத்த மாசம் போட்டில நம்ம அவங்கள ஜெயிக்கணும்.” என பேசியபடி அவளுக்கு பிடித்த ஒயிட் சாக்லேட் கொடுத்துவிட்டு, அன்னைக்கு பிடித்த பாதுஷாவை அவரிடம் கொடுத்தாள்.
“நானே சொல்லணும்ன்னு நெனைச்சேன் நீயே வாங்கிட்டு வந்துட்ட.. சரி வாங்க ரெண்டு பேரும் சாப்பிடுவீங்களாம்..” எனக் கூறிவிட்டு உள்ளே சென்றார்.
“சக்தி வீட்டுக்கு போயிட்டானா?”
“போயிருப்பான்.. சரி வா மூணு பேரும் உக்காந்துக்கலாம்.. உன் வீட்ல இருந்து இன்னும் அழைப்பு வரலியா?”
“அதுலாம் வந்துச்சி நான் எடுக்கல.. நான் இங்க இறங்கினத எங்கப்பா பாத்தாரு. நான் ஆனந்தியம்மா கூட பேசிட்டே உள்ளே வந்துட்டேன். அங்க போகவே எரிச்சலா இருக்கு விஷா.. எங்கயாவது போயிடலாமான்னு இருக்கு..”
“சரி போலாம். என் ஃப்ரெண்ட் மலை ஏற பிளான் பண்ணிட்டு இருந்தான். நானும் அந்த கம்பெனி லிஸ்ட் பாத்தேன். உன் ஞாபகம் வந்துச்சி, உனக்கு புடிக்கும்லன்னு.. உனக்கு டேட் எப்போ? நீ ஓகே சொன்னா நாமளும் போயிட்டு வரலாம்..” என சாதாரணமாக கூறினாள்.
“நிஜமாவா? நானும் நெறைய இடம் பாத்து வச்சிருக்கேன் ஆனா எப்டி போறதுன்னு யோசிச்சிட்டே அமைதியா இருந்துட்டேன்.”
“நீ போகணும்னு ஆசைபட்டா இவகிட்ட சொல்லவேண்டியது தானே நிலா.. இப்போ போகாம எப்போ போறதாம் ? விஷா நல்ல கம்பெனியா பாத்து புக் பண்ணி போயிட்டு வாங்க.. கொஞ்சம் புத்துணர்ச்சியா இருக்கும்..” என ஆனந்தி கூறவும் விஷா சரியென்று கூறிவிட்டு கிரிஜா காட்டிய கம்பனிகள் வைத்திருக்கும் மலை ஏற்ற தரவுகளை எல்லாம் இருவரும் பார்த்தனர்.
“எனக்கு பீரியட்ஸ் டேட் போன வாரமே முடிஞ்சது விஷா. உனக்கு?”
“எனக்கு இன்னும் ரெண்டு வாரம் இருக்கு.. அடுத்த வாரம் போலாமா?”
“சரி எந்த பேட்ச் இருக்குன்னு பாப்போம்..”
“சரி.. உன் ஃப்ரெண்ட் எப்ப போறாருன்னு கேளு. தெரிஞ்சவங்க கூட போனா நமக்கு பாதுகாப்பா இருக்கும்..”
“ஏன் என்னை பாத்த உனக்கு பாதுகாப்பா இருக்கமாதிரி தெரியலையா மேடம்க்கு..” விஷா வம்பிழுத்தாள்.
“நீ மட்டும் பையனா பொறந்து இருந்தா உன்னையே கல்யாணம் பண்ணி இங்க அம்மா கூடவே செட்டில் ஆகி இருப்பேன். நீ ஏண்டி பொண்ணா பொறந்த?”
“நீ உம்னு சொல்லு உடனே நான் போய் பையனா ஆபரேஷன் செஞ்சி மாறிக்கறேன். என்னை கட்டிக்கிறியா பேபி ?” என விஷாலினி அவளின் இடைப்பிடித்து வளைத்து முகத்திற்கு அருகே நெருங்கி நின்றுக் கேட்டாள்.
“ச்சி.. கைய எடு டி.. நான் சும்மா பேச்சுக்கு சொன்னா நீ உடனே அட்வாண்டேஜ் எடுக்கற..” என அவளை பின்னே தள்ளிவிட்டாள்.
“ஏண்டி நான் தொட்டதுக்கே இப்படி குதிக்கற நாளைக்கு உன் புருஷன் பிடிச்சா என்ன பண்ணுவ?”
“நான் தான் கல்யாணமே செஞ்சிக்க போறது இல்லயே அப்பறம் எதுக்கு அதப்பத்தி யோசிக்கணும்?” என தோளை குலுக்கி கூறியபடி ஆனந்தி இருக்குமிடம் சென்றுவிட்டாள்.
“இவள எப்படி அந்த இளிச்சவாயன்கிட்ட கோர்த்துவிட்டு கல்யாணம் பண்ணி வைக்கறது? ரொம்ப கஷ்டம் டி விஷா.. சரி மூஞ்சி கழுவிட்டு தூங்குவோம்..” என தனக்கு தானே பேசியபடி துண்டுடன் குளியலறை நோக்கி சென்றாள்.
அவள் குளிக்கும்போது தரணி அவளுக்கு புலனத்தில் செய்தி அனுப்பினான். அரைமணி நேரம் கழித்து குளித்துவிட்டு வெளியே வந்தவள் நிழலினியை அவளது வீட்டில் விட்டுவிட்டு, மீண்டும் தன் இல்லம் வந்து கதவுகள் எல்லாம் பூட்டிவிட்டு, தன்னறைக்கு வந்தாள்.
“யாரு இது.. புது நம்பரா இருக்கு.. தரணிதரன்.. டாக்டர் அஹ்.. இவரு எதுக்கு எனக்கு மெசேஜ் அனுப்பியிருக்காரு..” என யோசித்தபடி அவருக்கு பதிலனுப்பினாள்.
அந்தப் பக்கம் தரணிதரன் அரைத் தூக்கத்தில் இருந்தவன் அவளது மெசேஜ் வந்தவுடன் கண்கள் மின்ன அவளிடம் பேச ஆரம்பித்தான்.
“என்ன பண்றீங்க? சாப்டீங்களா ?”
“ம்ம்.. என்ன விஷயம் மெசேஜ் பண்ணியிருக்கீங்க ?” என விஷயத்தைக் கேட்டாள்.
“எங்க போக பிளான் செஞ்சி இருக்கீங்க?” என அவனும் விஷயத்தைப் பேசினான்.
“மலை ஏற போலாம்ன்னு பேசி வச்சிருக்கோம் டாக்டர்..”
“தரணின்னே நீங்க கூப்பிடுங்க ஃபார்மாலிட்டி வேணாம்..”
“சரி தரணி..”
“மலை ஏற தனியாவா இல்ல கம்பெனி மூலமா போறீங்களா?”
“கம்பெனி மூலமா தான் போகலாம்ன்னு பேசிட்டு இருக்கோம்.”
“சரி சரி… நிழலினிக்கு மலை ஏற பிடிக்குமா?”
“ஆமா தரணி.. அவளுக்கு மலை ஏற ரொம்ப பிடிக்கும். காலேஜ் படிக்கறப்போ ஒரு தடவை டிரெக்கிங் போனோம். அங்க அவ ரொம்ப சந்தோஷமா இருந்தா. அதான் இப்ப போனா அவ மனசு உடனே மாறலாம்னு தோணுச்சி.. கிரிஜாவும் போலாம்னு சொன்னாங்க..”
“நீரஜ்?”
“அவரும் தான். ஆனா ரொம்ப கஷ்டம் இவள கல்யாணத்துக்கு சம்மதம் சொல்ல வைக்கறது.”
“ஏன் இவ்ளோ சலிப்பா சொல்றீங்க?”
சற்று முன்பு நடந்ததை அவள் கூறிவிட்டு, “இப்போ சொல்லுங்க. இவள நல்லவிதமா பேசி எப்படி சரின்னு சொல்ல வைக்கறது? அதுக்குள்ள நீரஜ் கிழவன் ஆகிடுவாரு..” எனக் கூறிவிட்டு சிரித்தாள்.
“அதுலாம் பேசி பேசி கரெக்ட் பண்ணிக்கலாம்.” என தரணி ஒரு விதமாக கூறியதும் விஷாலி கோபமுகம் எமோஜி அனுப்பினாள்.
“சரி குட் நைட்..” என அவள் இணையத்தை தூண்டித்துவிட்டு உறங்க சென்றாள்.
தரணியோ அவளின் புலன புகைப்படம் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான்.
விளையாட்டு ஆசிரியருக்கான உடையில் விசிலை வாயில் வைத்தபடி கையை யாரையோ கை நீட்டி மிரட்டும் தோரணையில் இருந்தாள். மிதமான தேவையான அளவிற்கு முகப்பூச்சும், வயது பெண்ணிற்குறிய நளினம் ஒளித்து, கண்டிப்பை முகத்தில் காட்டி நிற்கும் பெண்ணவள் வதனம் தான் அவன் மனதில் ஆழப்பதிந்து போனது.
“மெரட்டியே என்னை சாச்சிட்ட செல்லம்.. உன்னை பேசி கரெக்ட் பண்ண தான் இனிமே நான் வொர்கவுட் பண்ணனும்..”