81 – ருத்ராதித்யன்
தூரத்தில் தெரியும் மலைமுகடுகளை பார்த்தபடி, பறவைகளின் சத்தத்தை உன்னிப்பாக கவனித்துக் கொண்டே அரசகேசரியை அருகே அழைத்தான்.
“இங்கே பார் நண்பா.. என்னவோ எனக்கும் உனக்கும் பிரிக்கமுடியாத பந்தம் உருவானது போல இருக்கிறது. நமது நாடும், மொழியும், வாழ்வியல் முறைகளும் வேறு வேறாக இருந்தாலும் நீ என் மனதிற்கு மிகவும் நெருக்கமாக இருக்கிறாய். நான் புத்தியில் நினைப்பதை நிஜத்தில் நடத்தி காட்டுகிறாய்.. நமது லட்சியம் பெரிதாக இருக்க வேண்டும். எனக்கு ஏனோ இந்த இயற்கை என்ற விஷயமே பிடிப்பதில்லை.. பல வித்தியாசங்களையும், ஏற்ற தாழ்வுகளையும் இது வைத்துக் கொண்டு நம்மை ஏமாற்றுகிறது.. இது எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. மனிதனின் மனமும் நிலையாக நிற்பதே இல்லை.. அவனுக்கு சந்தர்ப்பம் சரியாக இருந்தால் எனது திறமை என்கிறான், இல்லையென்றால் எல்லாம் விதி என்கிறான். வெற்றியை தோளில் சுமப்பவன் தோல்வியையும் அதே போல அவனது தோளில் சுமக்க வேண்டுமல்லவா ? ஏன் அதை மட்டும் விதி என்றும், நேரம் என்றும் இன்னொரு தோளுக்கு தூக்கி தருகிறான்?”
அரசகேசரி அவன் என்ன கூற வருகிறான் என்று கவனித்துக் கொண்டிருந்தான். அவனது மூர்க்கத்தானமான பிதற்றலையும் ஆசான் கூறும் பாடம் போல கவனமாக கேட்டுக் கொண்டிருந்தான்.
“நான் கூறுவதை கவனமாக கேள்.. எதிலும் ஒரு ஒழுங்கும், நேர்மையும் இன்றி இருக்கும் உயிர்கள் எல்லாம் மிகவும் ஆபத்தானவை.. இதுவே நாம் உருவாக்கி ஒரு ஒழுங்கும், நேர்மையும், அவைகளை நன்றாக வாழவைப்போம் என்ற எண்ணமும் விதைத்து உருவாகி வரும் உயிர்கள் எப்போதுமே விஸ்வாஸமாக, நமக்கு உண்மையாக இருக்கும். அப்படியான ஒரு உலகத்தை உருவாக்கி நாம் ஆளவேண்டும் என கனவு காண் நண்பா..” எனக் கூறியபடி அவனை அருகே அழைத்து காதருகில் பல ரகசியங்களைக் கூறினான். அதைக் கேட்க கேட்க அரசகேசரி கண்களில் அந்த உலகம் உருபெற தொடங்கியது.
“நிஜம் தானா நண்பா ? நம்மால் அப்படி ஒன்றை செய்துமுடிக்க முடியுமா ?” அரசகேசரி ஆர்வமுடன் கேட்டான்.
“நிச்சயமாக முடியும் நண்பா.. அதற்கான வழிகளை நான் தேடத் துவங்கியத்தோடு, நடக்கவும் தொடங்கிவிட்டேன்.. இந்த கனவு நமக்கு பல நல்ல விஷயங்களை சொல்லிக் கொடுக்கிறது. நமது ஆசைகள் மட்டுமின்றி நாம் நினைத்துக் கூட பார்க்காத பல விஷயங்களை இது எனக்கு வழிகாட்டி வருகிறது.. நிச்சயம் இந்த பாதையில் நான் தனியாக பயணிக்க முடியாது. எனது ஆருயிர் நண்பனான நீ என்னுடன் பயணிக்க தொடங்கவேண்டும். நாம் இருவரும் பல பிறவிகள் இனி ஒன்றாகவே பயணிப்போம்.. நமது நட்பிற்கு எப்போதும் முடிவோ, அழிவோ இல்லை…” எனக் கூறி அவனைக் கட்டி அணைத்துக் கொண்டான்.
“நிச்சயமாக நமக்கு பிரிவினை என்பது எப்போதும் வராது நண்பா.. சொல் உனக்கு நான் என்ன செய்ய வேண்டும்.. உனக்காக எதுவும் செய்வேன்..” என அரசகேசரி கூறவும் அபராஜிதன் அவனுக்கு சில ஓலைகளை கொடுத்து அதில் இருப்பவைகளை எல்லாம் இன்னும் பன்னிரண்டு மாதத்திற்குள் கொண்டு வந்து ஓரிடத்தில் சேர்த்துக் வைக்கச் சொன்னான்.
“இவை எல்லாம் நீ கூறியது போல தயாராக இருக்கும்..” எனக் கூறியவன் இன்றுவரையிலும் அந்த ஓலையில் குறிப்பிட்டிருந்த விலங்குகளை எல்லாம் வேட்டையாடியும், உயிருடனும் கொண்டு வந்து பல இடங்களில் மறைத்து வைத்திருந்தான். மீண்டும் அபராஜிதன் விஸ்வக்கோட்டை வரும் நாளன்று ஒரே இடத்தில் கொண்டு சேர்க்கவேண்டும் என்ற திட்டமும் வகுத்து வைத்திருக்கிறான்.
அபராஜிதன் கூறிய பன்னிரண்டு மாதங்களில் ஒன்பது மாதங்கள் முடிந்திருந்தது. பல மிருகங்களை இத்தனை மாதமாக பல சமஸ்தான காடுகளிலும் வேட்டையாடியும், கடத்தியும் வந்து கொண்டிருந்தவன், இந்த ஒரு மாத காலமாக எந்த மிருகத்தையும் வேட்டையாட முடியாமல் தவித்துக் கொண்டிருந்தான். ருத்ரக்கோட்டை அரசர் பல வழிகளிலும் அவனது முயற்சிகளை தடுத்தபடி வந்துக் கொண்டிருந்தார்.
அபராஜிதன் தனக்கு பச்சை கண்களுடன், மஞ்சள் உடலில் பச்சை கோடுகள் உள்ள புலி வேண்டும் என்று அவசர ஓலை அனுப்பி இருந்தான். இன்னும் இருபது நாட்களில் விஸ்வக்கோட்டை வருவதாகவும் குறிப்பிட்டிருந்தான்.
இப்போது மிருகங்கள் இனப்பெருக்கம் செய்யும் காலமாதலால் அனைத்து வனங்களிலும் மிருகங்களை வேட்டையாட தடைவிதித்திருந்தனர். விஸ்வக்கோட்டையிலிருக்கும் ஆதித்திய வீரர்கள் இந்த காலத்தில் கடலிலும், நிலத்திலும் அதீதமாக காவல் செய்வர். அதனால் சமஸ்தான வீரர்களுக்கும், ஆதித்த வீரர்களுக்கும் கைகலப்பும் அவ்வப்போது நடைபெறும்.
அரசகேசரி கோபத்தை அடைக்கியபடி சேயோனை உயிர் உருவும் பார்வை பார்த்துக் கொண்டிருந்தான். புதிதாக குட்டியை ஈன்ற பெண் யானையை இன்னும் கொண்டு வந்து சேர்க்கவில்லை என்று முறைத்துக் கொண்டிருந்தான். ஆனால் இதற்கிடையில், அவனது வேட்டை வீரர்கள் பலர் உடல்கள் துண்டாக அடவிக்குள் கிடப்பதெல்லாம் இன்னும் அவனது காதுகளை அடையவில்லை. அவையெல்லாம் வந்து சேர்ந்தால் சேயோனின் நிலை யாதென யாவரும் அறிவர்.
“அரசே.. வீரர்கள் காட்டினில் உலாவியபடி தான் இருக்கிறார்கள். சரியாக அந்த அருவியில் யானையை கொல்லும் போது ஒருவன் இடைபுகுந்து கலகம் விளைவித்ததில் யானைகள் அடர்ந்த வனத்திற்குள் சென்றுவிட்டன. மனிதர்களால் அந்த இடங்களை நெருங்கமுடியவில்லை. கொஞ்சம் அவகாசம் கொடுங்கள் எப்படியேனும் பிடித்துக்கொண்டு வந்துவிடுகிறோம்..” என சேயோன் கெஞ்சிக்கொண்டிருந்தான்.
“இன்னும் பத்து நாட்களில் யுவராஜர் இங்கே வந்துவிடுவார். அவர் வரும் பொழுது அவர் கேட்ட அத்தனையும் இருக்கவேண்டும். புரிகிறதா ?” எனக் கேட்டபடி உருமினான் அரசகேசரி.
“இன்னொரு விஷயம் தங்களிடம் கூறவேண்டும்..” சேயோன் சுற்றும் முற்றும் பார்த்தபடி தயங்கி நின்றான்.
‘என்ன?’ என்பது போல புருவம் உயர்த்தி கேட்டான் விஸ்வக்கோட்டை அரசன்.
“ஆதித்ய நாட்டு இளவரசர், யுவராஜர் பட்டம் ஏற்று மலர்கள் சேகரிக்க கிளம்பிவிட்டார் என்ற தகவல் வந்திருக்கிறது..”
“அதற்கென்ன?”
“இல்லை.. எனக்கொரு சந்தேகம் தோன்றியது..”
“என்ன?”
“நமது வீரர்கள் பெண்யானையை வேட்டையாடும் போது இடைபுகுந்தது அவராக இருக்குமோ என்ற ஐயம் எழுகிறது. உடன் ஒரு புலியும் இருந்ததாம்..” எனக் கூறி அரசனின் முகத்தைக் கூர்ந்துக் கவனித்தான்.
“அவர்கள் வம்சத்தின் வழக்கங்கள் தெரிந்தவர் யாரும் இங்கு இல்லையா?” அரகேசரி யோசனையுடன் கேட்டான்.
“இல்லை அரசே.. அது யுவராஜா பட்டம் சூட்டிய பின் அரசனால் தான் கூறப்படுகிறது.. எந்த ஓலையும், குறிப்புகளையும் அவர்கள் வைத்துக்கொள்வதில்லை..”
“எங்கெங்கே அவர்கள் மலர்கள் சேகரிப்பார்கள் ?”
“வனதேவி கோவில்களில் எல்லாம் சேகரிப்பார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.. ஆனால் எந்தெந்த கோவில் என்பது யாருக்கும் தெரியாது அரசே..”
“அந்த புலியை அபாராஜிதனுக்கு பரிசாக கொடுக்கலாம் என்று நான் நினைத்திருக்க அவனே அந்த புலியுடன் காட்டில் அலைகிறான்… சேயா.. நமது வீரர்களில் சிறந்த நூறு வீரர்களை தயார்படுத்தி வைத்து கொள்.. அவனை கொன்றாவது அந்த புலியை நாம் கையகப்படுத்தவேண்டும்..”
“அரசே.. அது அத்தனை எளிதல்ல.. நமது அடவியில் வாழும் அத்தனை புலி இனத்தை விடவும் அது அதீத புத்திசாலித்தனமும், விசுவாசமும் கொண்டுள்ளதாக இருக்கிறது.. அந்த யானை வேட்டையாட சென்ற வீரர்களில் ஒருவர் கூட உயிருடன் இல்லை. நரசிம்மருக்கு இணையாக அந்த புலியும் நமது ஆட்களில் அறுவரை கிழித்து குதறிவிட்டது..” என சேயோன் கூறியதும் அரசகேசரி அவனை உறுத்துவிழித்தான்.
“என் முன்னே அவனையும், அவனை சார்ந்த எதை பற்றியும் நீ பெருமையாக பேசிக்கொண்டிருந்தாய் என்றால் உனது தலை உடலில் இருக்காது.. எனது கட்டளையை நிறைவேற்றும் பணியை பார்.. இன்னும் பத்து நாட்கள் தான்.. உனது உயிர் உன்னுடலில் இருப்பதா வேண்டாமா என்று நீயே முடிவு செய்து கொள்..” என கூறிவிட்டு அந்தபுரம் சென்றான்.
“இந்த அரசனை வைத்து நாம் ஆதாயம் தேடலாம் என்றால் இவன் என் உயிரை குறிவைக்கிறான்.. இப்படியே போனால் சமாளிக்க முடியாது. அந்த ருத்ர கோட்டை அரசன் வேறு கண்கொத்தி பாம்பாக அடவிகளில் அலைந்து கொண்டே இருக்கிறார்.. இன்னொரு பக்கம் அமரக்கோட்டை வீரர்கள்.. இங்கே ஆதித்திய அரச வீரர்கள்.. இவர்கள் அத்தனை பேரையும் மீறி நான் ஒவ்வொரு மிருகத்தையும் கொண்டு வந்து சேர்க்க படும்பாடு இவருக்கு தெரிகிறதா? அந்த இளவரசன் வேறு புதிது புதிதாக கட்டளைகள் அனுப்பிக் கொண்டே இருக்கிறார்…” என முணுமுணுத்தபடி தனது தந்தையைக் காணச் சென்றான்.
“என்ன சேயா ? போன காரியம் என்னானது ?”, என அந்த வயதான மந்திரியார் அவனைக் கேட்டார்.
“அரசர் என்னை உயிருடன் தின்கிறார் தந்தையே.. அந்த பச்சை கண்களைக் கொண்ட புலியை உயிருடன் பிடித்து வரவேண்டுமாம்.. தவிர அந்த ஓலையில் இருக்கும் மிருகங்களை எல்லாம் பத்து தினங்களில் நாம் சேர்க்கவேண்டும்.. எனது உயிருக்கு கெடு வைத்து அனுப்பியிருக்கிறார்” எனக் கூறியவன் கோபமாக மேலாடையை கழற்றி எறிந்துவிட்டு, வீட்டின் பின்கட்டிற்கு சென்றான்.
அவசரமாக பணிப் பெண்கள் அவன் நீராட வாசனை பொருட்களையும், உடல் தேய்த்து குளிக்கும் மாவினையும் எடுத்து வைத்துக் காத்திருந்தனர்.
அவன் செயற்கை குளத்தில் இறங்கியதும் பெண்கள் இருவரும் உள்ளே இறங்கி அவனை குளிப்பாட்ட தொடங்கினர். இன்னும் இருவர் அவனுக்கு தேவையான உடைகள் எடுத்து வைத்து விட்டு மற்ற வாசனை திரவியங்களை எடுத்து வைத்துக் காத்திருந்தனர். குளிக்கும் வேளையிலும் இரண்டு பெண்களையும் சல்லாபித்து, கசக்கி எறிந்தபின், தனது அறைக்குள் நுழைந்து தயாராகி மீண்டும் முன்கூடம் வந்தான்.
“குளிக்க இத்தனை நேரமா ?”
“வெளியே அலைந்து திரிந்து வேலை பார்ப்பவன், அதிக நேரமெடுத்தால் தான் உடல் சூட்டை தணிக்க முடியும்.. முதலில் இந்த ஓலையில் இருக்கும் மிருகங்களை கொண்டு வர என்ன செய்யலாம் என்று கூறுங்கள்..”
“நிச்சயமாக வேட்டையாட முடியாது.. ஆனால் இனப்பெருக்கம் அதிகரிக்க ஆராய்ச்சி கூடம் கொண்டு வருவதாக கூறி மிருகங்களை உயிருடன் கொண்டு வரமுடியும்.. அளவில் பெரிதான மிருகங்களை கொண்டு வருவது தான் சவாலான விஷயம்..”
“முக்கியமான விஷயத்தை தாங்கள் மறந்துவிட்டீர்கள் தந்தையே.. யுவராஜர் நரசிம்மர் இப்போது கானகங்களில் தான் சுற்றிக் கொண்டிருக்கிறார்.. அவரிடம் இருக்கும் பச்சை கங்களையுடைய புலியை அந்த இளவரசன் கேட்டிருக்கிறான். நமது அரசரும் உயிருடன் கொடுக்கவேண்டும் என்று கூறுகிறார்.. இந்த இரண்டு பெரிய தடைகள் நம்முன்னே இருக்கிறது.. அரசவையில் இருக்கும் சிலர் நம்மை ஒற்றறிய முற்படுவதாக தெரிகிறது.. ருத்ரக் கோட்டை அரசர் அமைதியாக அமர்ந்திருக்கவில்லை. வனத்தில் நாம் ஆங்காங்கே இருத்தி வைத்திருந்த முக்கால் வீதம் வீரர்களை அப்புறப்படுத்திவிட்டார்.. அமரபுசங்கனும் அவருடன் இப்போது கைக்கோர்த்திருப்பதாக தெரிகிறது.. எப்படி நாம் மீதமிருக்கும் 100 இனங்களை கொண்டு வந்து சேர்ப்பது? அதில் யாளிகளும் அடக்கம்..”, என அவன் கூறியதும் மந்திரியார் யோசனையுடன் எழுந்தார்.
“யுவராஜனை நாம் கடத்தினால் அத்தனையும் சாத்தியம் தானே ?”
“வயதானதும் புத்தி பிசகிவருகிறதா தங்களுக்கு?” சேயோன் கோபமுடன் கேட்டான்.
“இல்லை.. அவனை கடத்தி நமது கட்டுப்பாட்டினில் கொண்டு வரவேண்டும் என்று கூறுகிறேன்.. நீ யுவராஜனோடு நெருங்கி பழகினால் அனைத்தும் சாத்தியம்..”
“பத்து தினங்களில் எப்படி நெருங்கி பழக முடியும்? அவரை காணவே முடியுமோ முடியாதோ?”
“முடியும்.. அவர் இப்போது நமது எல்லைக்குள் தான் இருக்கிறார் என்று இப்போது தான் செய்தி வந்தது.. உடனடியாக கிளம்பி கிழக்கு காடு செல்.. நானும் உடன் வருகிறேன்..”, எனக் கூறி இருவரும் வனம் நோக்கிக் கிளம்பினர்.