82 – ருத்ராதித்யன்
சேயோனும் அவனது தந்தையும் கிழக்கு காடு நோக்கி பயணத்தை தொடங்கினர். அந்த நேரத்தில் தான் மகதனை அந்த விடலை சிறுவன் வேட்டையாட முனைந்து நரசிம்மனிடம் சிக்கியதும் நிகழ்ந்தது.
“தாங்கள் யார்?” அதிகுணன் ஆர்வமுடன் கேட்டான்.
“நான் வனத்தில் திரிபவன்.. இந்த புலிக்கு இணை தேடி வந்தேன்.. யார் நீ? விஸ்வக் கோட்டையை சேர்ந்தவனா? அந்த வீரன் யாரை சேர்ந்தவன்?”, என மகதன் பிடித்து வைத்திருந்தவனை பார்த்தபடி கேட்டான்.
“அவர் எனது அத்தான்.. அவர் அரசவை அதிகாரி சேயோனின் கீழ் பணிபுரியும் வீரர்.. நன்றாக வேட்டையாட தெரிந்தவர்களை எல்லாம் திரட்டிக் கொண்டிருக்கின்றனர் என்று கேள்வியுற்றேன். அதனால் தான் எனது வேட்டை திறமையை காட்ட இங்கே அழைத்து வந்தேன்.. ஆனால் எனது குறியில் இருந்து இந்த புலி எப்படி தப்பியது? எனது அம்பு சரியாக தானே அடிவயிற்றை தாக்கியது..” அவனின் மிகமுக்கியமான சந்தேகத்தைக் கேட்டான்.
“இந்த புலியை எந்த அம்பும் துளைக்காது.. அம்பு வரும் திசை அறிந்ததும் பட்டென நகர்ந்து விடும்..” நரசிம்மன் அவனது கைகளை பின்னால் இழுத்து கட்டிவிட்டு மகதனுக்கு சீழ்க்கை அனுப்பினான்.
மகதன் அந்த வீரனை கடித்து இழுத்தபடி அந்த அடர்ந்த மரத்தின் அடியே வந்து நின்றான்.
அதிகுணன் கண்களில் ஆச்சரியம் மின்ன மகதனை பார்த்தான். அவனுக்கு அந்தப் புலியை தொட்டு பார்க்க ஆசை எழ அதன் அருகே செல்ல முயன்றான். மகதன் அவனது கால் அசையும் முன்பே உறும, அதிகுணன் தயங்கி நின்றான்.
“இடம் விட்டு அசையாதே.. மகதன் உன்னை தாக்கினால் நீ உயிர் பிழைக்க வாய்ப்பிருக்காது..” எனக் கூறிவிட்டு சற்று தூரமாக அதிகுணனை அழைத்து சென்று விசாரிக்க ஆரம்பித்தான்.
“எதற்காக வேட்டையாட ஆட்களை திரட்டுகிறார்கள்? என்ன நடக்கிறது இங்கே? இனப்பெருக்க காலமான அடுத்து வரும் 4 மாதங்கள் எந்த மிருகத்தையும் வேட்டையாடக்கூடாது என்பது கடுமையான விதியல்லவா?”
“எனக்கு அதெல்லாம் தெரியாது. மிருகங்களை வேட்டையாடுவதில் எனக்கு ஆர்வம் அதிகம். அதனாலேயே ஆயுத பயிற்சி மேற்கொண்டேன். அதில் சிறந்தவன் நான் என்பதை காட்டத்தான் அரசரின் புதிய திட்டத்தில் சேர ஆர்வம் கொண்டு இங்கு எனது திறமையை நிரூபிக்க வந்தேன்.. எனது குறியில் தப்பிய முதல் மிருகம் இந்த புலி தான்..” எனக் கூறி மகதன் இருக்கும் பக்கம் பார்த்தான்.
“என்ன திட்டம் உங்கள் அரசர் அறிவித்திருக்கிறார்?”
“தங்களுக்கு எதற்கு? தாங்கள் இந்த நாட்டவராக தெரியவில்லையே..”
“நானும் வேட்டையாடுவதில் வல்லவன் தான். நான் ஊர் ஊராக சுற்றும் நாடோடி.. எனக்கென்று நிலையான வேலை கிடைத்தால் எனது ஜீவனும் நடக்கும் அல்லவா? அதற்கு தான்..”
“பின் ஏன் எனது கைகளை கட்டிவைத்திருக்கிறாய் ? முதலில் கட்டை அவிழ்த்து விடு..” எனக் கூறி திமிரத் தொடங்கினான்.
“நான் கேட்பதற்கு நீ சரியான பதில் கூறினால் தான் அவிழ்த்து விடுவேன்.. நீ மீண்டும் இந்த புலியை தாக்க முனைந்தால்? அதனை இனப்பெருக்கம் செய்ய வைக்க இணை தேடி தருவதாக வாக்கு கொடுத்திருக்கிறேன். அதனால் உனது கைகட்டுகளை அவிழ்த்துவிட முடியாது. நான் கேட்பதற்கு விவரம் கூறு உனை விடுதலை செய்து இங்கிருந்து பத்திரமாக அனுப்பி வைக்கிறேன்..” நரசிம்மன் அந்த சிறுவனுக்கு சமமான வயதுள்ளவன் போல வாய் பேசினான்.
“அதுவும் சரி தான். நான் எய்த அம்பு தவறிய கோபம் எனக்கு இன்னும் இருக்கிறது.. எனக்கு தாகமாக இருக்கிறது நீர் கொடு முதலில்..” நரசிம்மன் வேலை கேட்பவன் என்று அறிந்ததும் அதிகுணன் உடல் மொழியும், பேசு மொழியும் மாறியது.
“தருகிறேன்.. நீ முதலில் அந்த அரச திட்டத்தைப் பற்றிக் கூறு..” எனக் கூறியபடி கொஞ்சம் கொஞ்சமாக அவனுக்கு நீரைப் புகட்டினான்.
“புதிதாக ஆராய்ச்சி கூடங்கள் அமைத்து பல இனங்களையும் ஆராய்ச்சி செய்து அழிவு பாதையில் இருக்கும் மிருகங்களை எல்லாம் பெருக்க போகிறார்களாம்.. அதனால் காட்டினில் வேட்டையாடும் திறன் உள்ளவர்களை எல்லாம் ஒன்று திரட்டி, குழுக்களாக பிரித்து, பல சமஸ்தான கானகங்களுக்கு அனுப்ப போகிறார்கள்.. இது ஒரு வருட காலமாக நடந்து வருகிறது.. ஆனால் அந்த வீரர்கள் போதுமான மிருகங்களை இன்னும் தொடமுடியாமல் தவிக்கிறார்கள். அதனால் உத்வேகம் கொண்ட ஆயிரம் வீரர்கள் வேண்டும் என்று இப்போது என்னை போல 15 வயது நிரம்பிய பிள்ளைகளையும் சேர்க்க ஆணை வந்திருக்கிறதாம். எனக்கு 16 அகவையாதலால் நானும் அதில் இணையலாம் என்று வந்தேன். ஆனால் எனது அன்னையும், தந்தையும் இதில் சேரக் கூடாது என்று தடுக்கிறார்கள். அதனால் தான் எனது அக்காளை கட்டப்போகும் அத்தானின் துணை நாடி வந்தேன்..”
“ஓ.. ஏன் உன் பெற்றோர் வேண்டாம் என்று கூறுகிறார்கள்?”
“இதில் பல அரிய மிருகங்களை கொல்லவேண்டிய சூழல் வரும். அவைகளை கொல்லும் பாவம் வேண்டாம் என்கிறார்கள்.. நாம் உணவில் ஊண் சேர்க்கும்போது வேட்டையாடுவது எவ்வகையில் தவறாகும் ?”
“பசிக்கு புசிப்பதும், ஆணவத்தில் ஓர் உயிரை கொல்வதும் ஒன்றாகுமா?”
“அது .. அது..” என அதிகுணன் பதில் கூற திணறினான்.
“வேட்டையாடுதல் நமது ஆதி கால மரபில் வந்தது தான். மிருகத்தை கொன்று அதன் தோலை ஆடையாக்கி வாழ்ந்தோம் தான். அந்த வகையில் பசிக்கென்று வேட்டையாடி உண்டோம். இன்றும் அதற்காக தான் பெரும்பாலும் வேட்டையாடுதல் நடக்கிறது. ஆராய்ச்சி என்ற பெயரில் பல உயிர்களை வதைப்பதும், ஆணவத்திலும், ஆங்காரத்திலும் வேட்டையாடுவதும் பாவம் தான்.. சரி என்ன ஆராய்ச்சி எங்கே நடக்கிறது? யார் செய்கிறார்கள்?” என நரசிம்மன் அடுத்த பேச்சிற்கு தாவினான்.
“அதென்னவோ அரசரின் நண்பராம்.. வடநாட்டில் இருந்து வருகிறாராம்.. ஓலை கொடுத்து இந்திந்த இனங்கள் வேண்டும் என கூறி இருக்கிறாராம் ..”
“இதெல்லாம் எப்படி அறிந்தாய்?”
“எனது அத்தான் எனது அக்காளிடம் கூறும்போது நானும் கேட்டேன்..” என கள்ளப்புன்னகை செய்தான்.
“காதலர்கள் இருக்குமிடத்தில் உனக்கு என்ன வேலை?”
“எனது காதலியை சந்திக்க சென்றபோது எனது காதில் விழுந்தது..”
“உனக்கு காதலியா? விவரமானவன் தான்..” என நரசிம்மன் கூறிவிட்டு சிரித்தான்.
“ஏன் சிரிக்கிறீர்கள்? உங்களுக்கு காதலி இல்லையா?”
“எனக்கும் ஒருத்தி இருக்கிறாள்.. எனை வேலை வாங்காமல் அவளுக்கு நாள் கழியாது.. இப்போதும் அவளுக்காக தான் வேலை தேடிக்கொண்டே, இந்த புலிக்கும் இணை கிடைக்குமா என்று நான்கு நாட்களாக வனத்தில் சுற்றிக் கொண்டிருக்கிறேன்..”
“அப்படியானால் உங்களை நான் என்னோடு அழைத்து சென்று வேலை வாங்கி தரவா?” அதிகுணன் அவன் முகம் பார்த்து கேட்டான்.
“சில நாட்கள் மூலிகை சேகரிக்கும் வேலை இருக்கிறது.. நீ கட்டாயம் வேலை வாங்கி கொடுப்பதாக இருந்தால் இன்னும் 3 வாரங்கள் கழித்து இங்கே வருகிறேன். உனது பெயர் என்ன?”
“அதிகுணன்.. ஆதித்ய வீரர்கள் இருக்கும் கோட்டையில் குதிரைகள் பராமரிப்பு தலைவரின் மகன்.”
“நல்லது.. நான் இப்போது எடுத்திருக்கும் வேலையை முடித்துவிட்டு 3 வாரங்கள் கழித்து உன்னை வந்து சந்திக்கிறேன். நீ இந்த வேலை மட்டுமின்றி வேறு எந்த காட்டில் செய்யும் வேலையாக இருந்தாலும் கூறு.. அநியாயமாக உயிர் எடுக்கும் வேலை மட்டும் செய்ய மாட்டேன். நீயும் செய்யாதே.. நீ கற்ற ஆயுத கலை உனை சபிக்காமல் இருக்க வேண்டும் அல்லவா?”
“கலை சபிக்குமா?” அதிகுணன் அதிர்ச்சியாகக் கேட்டான்.
“ஆம். நாம் கற்கும் அத்தனை கலையும் நாம் அதனை எதற்கு உபயோகம் செய்கிறோம் என்பதை அறியும். அதை தவறான காரியங்களுக்கு பயன்படுத்தினால் நிச்சயம் அக்கலை நமது கைவிட்டு சென்றுவிடும்.. அதோடு சாபமும் கொடுக்கும். நீ புத்திசாலியாக இருந்தால் உனது கலையை நல்ல விஷயங்களுக்கு பயன்படுத்தி கலையை தக்கவைத்துக் கொள்வாய். நான் வருகிறேன்.”
“தங்களின் பெயர் கூறவில்லையே?”
“என் பெயர் நேத்திரன்..”
“எந்த கோட்டையை சேர்ந்தவர் தாங்கள் ?”
“நான் பிறந்தது ஒரு இடம், வளர்ந்தது ஒரு இடம், இனி இருக்க போவது ஒரு இடம்..”
“அப்படியென்றால் தங்களுக்கென்று நிலையான குடில் இல்லையா?”
“இல்லை..”
“அப்படியென்றால் தாங்கள் எனது இல்லம் வந்து தங்கி கொள்ளலாம். எனது தந்தையிடமே தங்களுக்கு ஓர் வேலை ஏற்பாடு செய்து தருகிறேன்..” அதிகுணனுக்கு அவனை மிகவும் பிடித்துவிட்டதால் அவனை தன்னுடன் வைத்துக் கொள்ள ஆசைக் கொண்டு கேட்டான்.
“மீண்டும் சந்திப்போம்.. நான்கு மாதங்கள் வேட்டையாடாதே.. இனப்பெருக்கம் செய்யும் காலத்தில் கர்ப்பமான உயிர்களை வதைத்தால் பெரும் பாவம் பீடிக்கும். அதை எந்த கடலும் கரைக்க முடியாது என்பார்கள்.. வருகிறேன்..”, கைகட்டுகளை அவிழ்த்தபடி கூறிவிட்டு, சீழ்க்கை அடிக்க மகதன் அதிகுணனை ஒருமுறை திரும்பிப் பார்த்துவிட்டு நரசிம்மன் பின்னே ஓடினான்.
இத்தனை நேரமும் அந்த காவல் வீரன் மயக்கத்தில் இருந்ததால் அவர்களின் சம்பாஷணையை அறியவில்லை. அதிகுணன் அவனுக்கு தண்ணீர் தெளித்து மயக்கம் தெளிவித்து எழுப்பினான்.
“அத்தான்.. அத்தான்.. எழுந்திரியுங்கள்..”
“அவர் எங்கே ? புலி எங்கே?”
“அவர் ஒரு நாடோடி எப்போதோ சென்றுவிட்டார். இது இனப்பெருக்கம் நிகழும் காலமாம், அதனால் வேட்டையாடக் கூடாது என கூறிவிட்டு சென்றார். வாருங்கள் கோட்டைக்கு செல்லலாம்..” என பேசியபடி மெல்ல அவனை அழைத்துக் கொண்டு ஊருக்குள் வந்தான்.
“அந்த புலி எனை கடித்ததே.. காயம் ஏதும் ஆகியிருக்கிறதா?”
“இல்லை அத்தான்.. அந்த புலி காயம் ஏற்படுத்தாமல் தான் தங்களது கால்களை இழுத்துக் கொண்டு வந்தது. ஆனால் நீங்கள் அது உங்கள் மீது தாவும் போதே மயங்கிவிட்டீர் போலவே?” எனக் கூறி சிரித்தான்.
“அத்தனை பெரிய புலி இறந்து கிடப்பதாக எண்ணி அருகில் செல்லும்போது கண்விழித்து பாய்ந்தால் யாராக இருந்தாலும் அதிர்ச்சியில் மயங்கத்தான் செய்வார்கள்..” கீழே விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பதாக தொடர்ந்து வாதாடியபடி காட்டினை விட்டு வெளியே வந்தனர்.
எதிரே சேயோன் தனது தந்தையுடன் வருவது கண்டு, அதிகுணனை கோட்டைக்கு செல்லும்படி கூறி அனுப்பிவிட்டு அவனிடம் சென்றான்.
“ஐயா.. ஒரு முக்கியமான விஷயம்..” என சேயோன் குதிரையின் எதிரே வந்து கூறினான்.
“என்ன இரும்பா?” அதட்டலாகக் கேட்டான்.
“நரசிம்மர் நமது காடுகளில் தான் இருக்கிறார். உடன் அந்த பச்சை கண் புலி இருக்கிறது..” எனக் கூறினான்.
“நீ பார்த்தாயா?”
“நான் பிழைத்து வந்திருப்பதே உங்களுக்கு இதை கூறத்தான். சற்று முன்பு வரை அந்த புலி என் மேல் தலை வைத்து படுத்திருந்தது. நரசிம்மர் நாடோடி வேடத்தில் இருக்கிறார். ஆனால் முகத்தில் அந்த கம்பீரம் அவரை சுலபமாக காட்டி கொடுக்கிறது..”
“எங்கே அவர்?”
“அந்த புலி என் மேல் தாவியதும் நான் மயங்கிவிட்டேன். எனது மச்சினன் தான் அவர் அடர்வனத்தின் நடுபகுதி நோக்கி செல்வதாக கூறினான்..”
“நிச்சயமாகவா?”
“ஆம் ஐயா..”
“அவர் பின்னோடு ஆட்கள் அனுப்ப ஏற்பாடு செய்.. அவரை பிடித்தே ஆகவேண்டும்” எனக் கூறிய சேயோன் தந்தையைப் பார்த்தான்.
“நீ நடுவனம் செல்.. நான் காட்டு கோட்டையின் எல்லையில் காத்திருக்கிறேன்” எனக் கூறிவிட்டு அவனது காதுகளில் சில நிமிடங்கள் ஏதோ கூறிவிட்டு, ரதம் செழுத்தக் கூறினார்.
சேயோன் ஏளன புன்னகையுடன் தனது வீரர்கள் சிலரை அழைத்துக் கொண்டு அந்த நடுப்பகுதி நோக்கி சென்றான்.
நரசிம்மனும், மகதனும் அந்த அடர்ந்த வனத்தில் புகுந்து மலர்கள் சேகரித்துக் கொண்டு, பாறை இடுக்கில் ஊர்ந்து சென்று பாதாளத்தில் இருந்த வனதேவியை தரிசித்தனர்.
அங்கே நீர் ஊற்றும் ஒருபக்கம் ஊறிக்கொண்டிருக்க, அதில் இருந்து நீர் எடுத்து தேவியை குளிர்வித்து, பட்டு உடுத்தி, மலர்களால் அலங்காரம் செய்து ஊதா நிறத்தை தவிர அனைத்து நிற மலர்களும் சமர்ப்பித்து நெடுஞ்சாண்கிடையாக விழுந்தான்.
அவனது கரங்களில் இரண்டு ஊதா நிற மலர்கள் விழுந்தது. அதைக் கண்டதும் நரசிம்மன் மகதனை பார்க்க, மகதன் வந்து தேவியின் பாதம் பணிய ஓர் துளி நீர் அவனது தலையில் விழுந்து உடலுக்குள் நுழைந்தது.
“மகதா செல்லுமிடமெல்லாம் இரண்டு மலர்கள் கொடுக்கும் காரணம் என்னவாக இருக்கும்? உனக்கு ஏதேனும் தெரியுமா?” நடுகாட்டில் இருந்து இருவரும் வெளிவந்து கடற்கரை ஓரமாக தங்களது பயணத்தைத் தொடர்ந்தனர்.
“உர்ர்ர்ர் ..”
“தெரிந்தால் கூறலாமே.. எனக்கும் ஆர்வம் பெருகுகிறது..”
“உர் .. ரர்….”
“சரி கூறாவிட்டால் போ.. நானே தெரிந்து கொள்வேன்.. ஆனால் இந்த விஸ்வக்கோட்டைக்கு மீண்டும் விரைவாக வரவேண்டும்.. நமது பயணத்தின் வேகத்தை கூட்ட வேண்டும்.. வா நாளை காலை நாம் தேவியின் தரிசனம் காண வேண்டும்..” எனக் கூறியபடி வேகமாக சென்றனர்.
இவர்களை தேடி வந்த சேயோன் இவர்கள் சென்ற திக்கு அறியாமல் காட்டினில் சுற்றிக் கொண்டிருக்க, அவன் தந்தையோ காட்டுக் கோட்டை எல்லையில் அமர்ந்து நரசிம்மனுக்காக பார்த்துக் கொண்டிருந்தார்.