83 – ருத்ராதித்யன்
அமரபுசங்கனின் உடல் மறைய தொடங்கி இரண்டு நாழிகையில் அவனது உடலே முழுவதுமாக மறைந்து போனது. வனயட்சி தவிர மற்றவர்கள் நெஞ்சம் பதறி அவன் உடல் கிடத்தப்பட்டிருந்த திட்டிற்கு வேகமாக வந்தனர்.
“யாரும் அருகே செல்ல வேண்டாம்.. அவரது உடல் அந்த திரவத்தை முழுதாக உள்வாங்கி இருக்கிறது. இன்னும் ஒரு நாழிகையில் அவரது உடல் நமது கண்களுக்கு தெரியும்.. சிங்கம்மா.. இங்கு வாருங்கள்.. இந்த வரைப்படத்தை சரியாக பொருத்துங்கள்..” எனக் கூறி ஒரு கல் மேடையை அவளிடம் காட்டிவிட்டு அரசரின் அருகில் வந்து நின்றார் வனயட்சி.
“அரசே.. இந்த உலகம் தோன்றிய காலத்திலேயே அதன் பெட்டகமும் உருவாகிவிட்டது. நமது உடலில் ஆன்மாவின் சரியான ஆதிக்கம் இடைவிடாது நிகழும் சமயங்களில் எல்லாம் நமது செயல்கள் மனித சக்திக்கு அப்பாற்பட்டதாக இருக்கும். இப்போது தாங்கள் வனத்தில் இருக்கும் மிருகங்களை தங்களின் சக்திக்கு மீறி பாதுகாத்து வருவது போல, இன்னமும் பல ஆயிரம் மடங்கு நமது உடலை முழுதாக ஆன்மாவின் கட்டுப்பாட்டில் விட்டுவிட்டால் பல அதிசயங்கள் நிகழ்வதை நாமும் காணலாம். அப்படியான ஒரு அதிசயத்தை தான் அமரனின் தாயான காஞ்சன ரத்னா தேவியார் எனக்கு காட்டினார். அவர் எப்போதும் அதீத பழமையான, மிருகங்களின் காலடி கூட படாத இடங்களை கண்டுப்பிடித்து அங்கே சென்று அமர்ந்து கொள்வார். சில சமயம் பல நாட்கள் கூட அங்கேயே தங்கியதும் உண்டு. அப்படி அவர் அவரது மனம் கூறிய இடங்களுக்கு எல்லாம் சென்ற போது தான் அமரக்கோட்டை அரசரான அமர தேவ நேத்திரரையும் சந்தித்தார். இவரை போலவே அவரும் பல கானகங்களில் வாழ்ந்தபடி சுற்றிக் கொண்டிருந்தார். இருவரும் ஒரே இடத்தில் ஒரு முறை தங்கும் சூழ்நிலை வந்தது. இருவரும் ஓர் வாரகாலம் அந்த குகையில் இருந்து தியானம் செய்து தங்களது ஆத்ம சக்தியை பெருக்கிக் கொண்டிருந்தனர். அப்போது இருவருக்கும் ஓர் பாதை மனதில் தோன்ற, அதை தேடி புறப்பட்டனர். இருவரும் மீண்டும் ஒரே புள்ளியில் சந்திக்க, அதன்பின் இருவரின் பயணமும் ஒன்றாகவே சென்றது. நாட்போக்கில் இருவரின் மனமும் சங்கமித்தது. அவர்களின் காதல் எல்லாம் நமது வனங்களில் வாழும் உயிர்கள் மட்டுமே அறியும். அப்படி ஒரு ஆத்மார்த்தமான காதல். இருவரும் நல்ல வாலிப பருவத்தில் இருந்தனர். இருவரின் அழகும், வனப்பும் அவர்களின் காதலினால் மென்மேலும் கூடியது. இருவரும் காதலின் ஆழம் காணவும் அமரபுசங்கன் கருவில் உதித்தான். அதன்பின் தான் இருவருக்கும் நமது பேரரசர் திருமண சடங்கை முடித்து அமரக்கோட்டை அனுப்பிவைத்தார். அப்போது இவன் 4 மாத கருவாக காஞ்சனையின் வயிற்றில் இருந்தான்..” என வனயட்சி மீண்டும் உருவம் பெற தொடங்கிய நிலையில் இருந்த அமரனை புன்னகையுடன் பார்த்தபடி கூறினார்.
“என்னை விட அதிகம் இந்த இயற்கையை நேசித்த ஓர் உயிர் என்றால் அது காஞ்சனை தான். அவருடன் இருந்து இருந்தே நானும் இயற்கையின் காதலி ஆகிப் போனேன் என்று தான் கூறவேண்டும். அப்படி இருவரும் ஒரு வேரினையும் விடாமல் எடுத்து ஆராய்ந்து புது புது பதப்படுத்தும் முறைகளை கண்டறிந்து, கண்களில் தென்பட்ட அத்தனை மூலிகைகளையும் மருந்துகளாக மாற்றினோம். அப்படி கண்டுப்பிடித்த மருந்துகளின் சில முறைகள் இங்கே வைக்கப்பட்டிருக்கிறது.”
“ஏன் சிலது மட்டும் இங்கே வைக்கப்பட்டிருக்கிறது?” யாத்திரை அந்த மருந்துகளின் அருகே சென்றபடிக் கேட்டாள்.
“இவைகள் நமது உடலையும் ஆத்மாவையும் அதிக நேரம் ஒரே நிலையில் நிறுத்தும். அதாவது மனதை அமைதிப்படுத்திவிட்டு, ஆத்மாவினை முழுதாக செயல்படுத்த தூண்டும். இதனால்..”
“பல அரிய விஷயங்கள் தெரியவரும். பிரபஞ்சத்தின் சக்தியை உடலுக்குள் அதிகளவில் செழுத்தினால், உடலில் உள்ள மர்ம புள்ளிகள் அழுந்த அழுந்த மனித உடல் அடுத்த நிலைக்கு பரிணாமம் கொள்ளுமல்லவா..?” என யாத்திரை கூறியதும் அனைவரும் சில நொடிகள் ஸ்தம்பித்து நின்றனர்.
“ஆம். இவ்வுடலில் மறைந்துள்ள திறன்கள் அனைத்தும் நமது புத்திக்கு தெரியவரும். பிரபஞ்ச சக்தியை கையாளும் வித்தையும் கைசேரும்..”
“அத்துடன் உடலின் தன்மையை நாமே நமக்கு விருப்பமான முறையில் எப்படி வேண்டுமென்றாலும் மாற்றியமைத்து நெடுங்காலம் வாழமுடியும்..” எனக் கூறியபடி அமரன் எழுந்து அமர்ந்தான். அவனது உடலில் பல மாற்றங்கள் ஏற்பட்டிருப்பது அங்கிருந்தவர் கண்களுக்கு ஓரளவு தெரிந்தது. ஆனால் அவனது உடல் முழுக்க முழுக்க அவனது ஆன்மாவின் கட்டுப்பாட்டில் இருப்பதை வனயட்சியும், அமரனும் மட்டுமே அறிந்தனர்.
“இறப்பென்பதே வராதா?” யாத்திரை கேட்டாள்.
“நாம் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு சாவினை தள்ளி வைக்க முடியும். இயற்கையின் நியதிக்கு உட்பட்டு தான் இவ்வுலகில் ஜனித்த உயிர்கள் வாழமுடியும் என்பதும் உண்மை..” சிங்கத்துரியன் அமரனை வணங்கி அவனது உடலை பரிசோதிக்க ஆரம்பித்தான்.
அங்கு நடப்பவற்றை எல்லாம் ஆருத்ரா ஓர் கண்ணில் கவனித்தபடி, அவளிடம் கொடுக்கப்பட்ட வேலையை செய்துக் கொண்டிருந்தாள்.
சிங்கத்துரியன் அமரனை முழுதாக அவனுக்கு தெரிந்த அத்தனை வழிகளிலும் பரிசோதித்து பார்த்தான். அவனது ஒவ்வொரு நரம்பும் மாறுபட்டிருக்கும் விதமும், செயல்படும் விதமும் கண்டு அதிர்ச்சியும், ஆச்சரியமும் கொண்டு அவனது உடலை அணு அணுவாக பார்த்துப் நரம்புகளின் செயல்களையும், ரத்த ஓட்டத்தையும் கணக்கிட்டு ஓலைகளில் குறித்துக் கொண்டிருந்தான்.
யாத்திரை சிங்கத்துரியன் செய்யும் அத்தனை பரிசோதனைகளையும் கவனித்தபடி ஆருத்ரா அருகேயும் சென்று அவள் என்ன செய்கிறாள் என்பதை கவனித்துவிட்டு, மீண்டும் வனயட்சி அருகே வந்து நின்றாள்.
“எல்லோரையும் கவனித்து விட்டாயா? ஏதேனும் நீ அறிந்து கொள்ளவேண்டியது இன்னும் இருக்கிறதா?” என வனயட்சி சிரிப்புடன் கேட்டாள்.
“தாங்கள் முன்னுரையை மட்டுமே உரைத்துள்ளீர்கள் வனயட்சி.. இன்னும் கூறவேண்டிய விஷயங்கள் பலது இருக்கிறது.. இங்கே ஆசனங்கள் இருந்தால் அதில் அமர்ந்து மற்ற விஷயங்களை பேசலாம் என்று தான் சுற்றி பார்த்தேன்.. ஆனால் இங்கே எந்த ஆசனங்களும் போடவில்லையே ஏன்?”
“இது பதப்படுத்தும் இடம். இங்கே அமர்ந்து பேச ஏதும் இல்லை என்பதால் போடவில்லை. நாம் அரண்மனை திரும்புவோம். அரசரின் அந்தரங்க அறையில் மற்ற விஷயங்களை பேசிக்கொள்ளலாம். அதற்கு முன் இளவரசி அவருக்கு கொடுத்த வேலையை முடித்துவிட்டாரா என்று பார்க்கலாம்..” எனக் கூறியபடி ஆருத்ரா அருகே சென்றார்.
அந்த மேடையில் பல வண்ண கற்கள் பதிக்கப்பட்டிருந்தன. ஆனால் அவை இடமாறும் படியாகவும் பொருத்தப்பட்டிருந்தது. அது ஒரு வரைப்படம், களைந்துள்ள நிலையில் இருக்கிறது. அதன் சரியான வடிவத்தையும், அது கூறும் தடத்தையும் அறிந்து பொருத்தும் வேலையில் தான் ஆருத்ரா இருக்கிறாள். பாதி கற்களை சரியான தடத்தில் வைத்துவிட்டாள். மீதியை ஒழுங்குப்படுத்த முயன்றுக் கொண்டிருந்தாள்.
“யட்சி.. இது கிழக்கு மேற்காக இருக்கிறது. இதன்படி பார்த்தால் கிழக்கு பக்கம் இருந்து இந்த பெட்டகத்தின் பாதை ஆரம்பமாகிறது. சரியா?” என ஆருத்ரா தங்களது நாட்டின் நிலப்பரப்போடு அண்டை நாடுகளின் நிலபரப்பையும் மனதில் நிறுத்திக் கேட்டாள்.
“ஆம்.. அப்படியானால் இது பாதாளத்தில் இருக்கிறது. இதில் இருந்து தான் மற்ற பாதைகள் பிரிகிறது. ஆனால் இங்கே இரண்டு அடுக்காக பிரிவுகள் தெரிகின்றன. இதன் பொருள் என்ன?” என அந்த மேடையில் பொறிக்கப்பட்டிருக்கும் இரண்டு அடுக்கு வரிசைகளைக் காட்டி கேட்டாள்.
“உன்னால் இது முடியும் என்று நினைக்கவில்லை சிங்கம்மா.. ஆனால் உனது ஞானம் என்னை வியப்பில் ஆழ்த்துகிறது. நீ பாராளும் மகாராணியாக தகுதியுள்ளவள் தான் என்பதை நூறு சதவீதம் ஒப்புக் கொள்கிறேன்” எனக் கூறி அவளை ஆரத்தழுவிக் கொண்டார்.
“ஆனால் இதற்கு மேல் இதை பொருத்துவது தான் பெரும் விஷயம் என்று தோன்றுகிறது. ஏன் என்றால் இங்கே பாதை பல கிளைகளாக பிரிந்து செல்கிறது..” எனக் கூறி ஒரு செந்நிற கல்லை நடுவே இருந்த குழியில் வைத்தாள்.
அந்த கல்லின் அழுத்தத்தில் அந்த மேடை ஐந்து அடுக்குகளாக பிரிந்து நின்றது. ஆழம் சென்ற பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த மரத்தின் வேர் போல அந்த கல் மேடை செத்துக்கப்பட்டு இருந்தது. ஒவ்வொரு சிறு சிறு கிளையும் அத்தனை மெல்லியதாக சிறிதாக செத்துக்கப்பட்டு இருந்தது. பெரும் பாதைகள் சற்று அகலமாக இருந்தது. ஆனால் அந்த மேடையில் ஆதித்திய அரசின் முழு அமைப்பும் செதுக்கப்பட்டிருந்தது. அதில் அடங்கியிருக்கும் பல சமஸ்தானங்களும் அதன் குறியீடுகளும், அதற்குட்பட்ட வனம் முதல் அருவி, கடற்கரை என அனைத்தும், மொத்தத்தில் மொத்த ஆதித்ய சாம்ராஜ்யத்தின் வரைப்படம் அதில் இருந்தது. மிகத்துல்லியமாக எல்லைகள் குறிக்கப்பட்டிருந்தது. அவளது பூட்டன் தான் இதை தயார் செய்தார்.
“அற்புதம் மகளே.. பாதுகாக்கும் கைகள் பட்டதும் தான் இந்த வரைபடத்தின் முழுதான அவதாரம் கண்களுக்கு தெரிகிறது. உனது கைரேகைகளை அப்போதே அவர் கணித்து இதில் பொருத்திவிட்டார் போலும்…”
“எனது கைரேகை இருக்குமா ?” யாத்திரை ஆவலுடன் கேட்டாள்.
“வாய்ப்பு குறைவு தான். முதல் குழந்தையின் கைரேகை தான் இதில் இருப்பதாக காஞ்சனை ஒரு முறை கூறினார். நாங்கள் என்ன முயன்றும் இந்த வரைபடம் தனது முழு உருவத்தை காட்டவில்லை..”
“அவருக்கு எப்படி இது தெரிந்தது?”
“இதை உருவாக்கியவர் ஆத்மாவுடன் காஞ்சனை பேசி அறிந்து கொண்டார். இந்த இடமும், இதில் இருக்கும் அத்தனை பொருட்களும் அவர் சொன்னது தான். அதற்குபின் தான் நாங்கள் எங்களது மருந்துகளை இங்கே பத்திரப்படுத்தி வைத்தோம்..”
“அங்கிருந்து நீங்கள் ஏன் இங்கு வந்து வைக்க வேண்டும்?”
“மூலிகை கலவைகள் தெய்வீகமாக உருமாறும் போதெல்லாம் அதை பத்திரப்படுத்த எங்களுக்கு மிகவும் பாதுகாப்பான இடம் தேவைப்பட்டது. அப்போது காஞ்சனையின் தந்தை இந்த இடத்தை கூறினார். ஆதித்ய எல்லை வனத்தில் இருந்தும் இங்கு வருவதற்கு பாதை இருக்கிறது. முதல் முறை அவர் தான் எங்களுடன் இங்கே வந்து இந்த இடத்தை காட்டிக் கொடுத்தார்.”
“யட்சி தாங்கள் கூறுவதை கேட்டு எனக்கு என்ன பதில் கூறுவது என்றே புரியவில்லை.. காலத்தின் மிக முக்கியமான கட்டத்தில் நாம் இருக்கிறோம் என்பது மட்டும் எனக்கு புரிகிறது. நாம் அரண்மனை திரும்பலாமா?” என ருத்ரக் கோட்டை அரசர் கேட்டார்.
“இதோ கிளம்பலாம் அரசே.. பயம் கொள்ளவேண்டாம்.. சிங்கத்துரியா உனது பரிசோதனைகள் எல்லாம் முடிந்ததா?”
“எனக்கு தெரிந்த வரையில் அவரது உடல் செயல்பாடுகளை அறிந்து குறித்து வைத்திருக்கிறேன் அன்னையே.. மற்ற விஷயங்களை தாங்கள் தான் கூறவேண்டும்..”
“சரி நாம் கிளம்பலாம்.. யாத்திரை நீ தனியாக இங்கே வரக்கூடாது..எனக்கு வாக்கு கொடு..” என வனயட்சி அவளிடம் கேட்டார்.
“கைரேகை பொருத்தாமல் எதுவும் இங்கே வேலை செய்யாது என்கிறபோது நான் எப்படி இங்கே வரமுடியும்? தனியாக இங்கே வரமாட்டேன்..” எனக் கூறிவிட்டு முதல் ஆளாக அந்த அறையைவிட்டு வெளியே சென்றாள்.
அவளின் பின்னே அனைவரும் சென்றனர். அமரபுசங்கன் உடல் எடை மிகவும் லேசாக இருக்க, அவன் மெல்ல நடந்தாலும் அதிக தூரம் மற்றவர்களை விட முன்னேறி இருந்தான். இன்னும் அவனது உடலை அவன் கையாள பழகவேண்டும் என்று அவனுக்கும் புரிந்தது. முழுதாக இப்போது உருவம் பெற்றிருந்தாலும், எப்போது அவனது உடல் மறைகிறது? எப்போது உருவம் கண்களுக்கு தெரிகிறது? என்று அவனுக்குமே இன்னும் புரியவில்லை. சிங்கத்துரியன் அவனை கூர்மையாக கண்காணித்தபடி அவன் வேகத்திற்கு ஈடுகொடுத்து அமரனின் பின்னே சென்று கொண்டிருந்தான்.
வனயட்சி அமரனை கண்டபடி, ‘காஞ்சனை .. ஈசனின் திருவிளையாடல் தொடங்கியது. இனி நீயும் உடனிருந்து எங்களை வழிநடத்தி கூட்டிச்செல்..’ என மனதில் கூறியபடி அரசரின் அந்தரங்க கூடம் வந்து சேர்ந்தனர்.