37 – அகரநதி
தன் வீட்டு முற்றத்தில் அதிகாலை இளமஞ்சள் வெயிலில் நின்று தலைமுடியை உலர்த்தியபடி நின்றிருந்த தன் மனைவியை, கண்களால் வருடியபடி அகரன் படிகளில் இறங்கி வந்தான்.
அஞ்சனம் தீட்டாத விழிகளும், நீர்துளிகள் ஆங்காங்கே கூந்தலில் அடர்காட்டில் மின்னும் வைரங்களாய், என்றும் இல்லாத புதுப்பொலிவை தான் கட்டிய புது பொன் மஞ்சள் தாலி கொடுக்க, பாந்தமான காட்டன் புடவையிலும் மகாலட்சுமி போல மென்முறுவலுடன் அருகில் இருந்தவர்களிடம் உரையாடிக்கொண்டே சாப்பிட வந்து அமர்ந்தவளை, கண் இமைக்காமல் சுற்றமும் உணராமல் பார்த்திருந்தவன் திடீரென அலற, அனைவரும் பதறியபடி அருகில் வந்தனர்.
“என்னாச்சி கண்ணு ? ஏன் கத்துன?”, மீனாட்சி.
“ஏன்டா கத்துன?”, சரண்.
அகரன் அமைதியாக அவர்களை பார்த்து விழித்தான்.
“ஏன் திருதிருன்னு முழிக்கற வாய தொறந்து சொல்லுடா”, மதுரன்.
“ஏன் சார் எறும்பு எதாவது கடிச்சிரிச்சா?”, திலீப்.
“ஆமாமா…. எதாவது கடிச்சி இருக்கும் ஆனா அது எறும்பா இருக்காது…….”, சஞ்சய் அருகில் இருந்த நதியாளைப் பார்த்தபடிக் கூறினான்.
சஞ்சயின் கூற்றில் இருக்கும் அர்த்தத்தை புரிந்தவர்கள், அகரனையும் நதியாளையும் ஒருமுறை ஏற இறங்க பார்த்துவிட்டு அங்கிருந்துச் சென்றனர்.
“ஏன்டி கிள்ளுன?”, அகரன் நதியாளின் காதில் முணுமுணுத்தான்.
“நீ ஏன்டா கத்தின?”, நதியாளும் முணுமுணுத்தாள்.
“கிள்ளினா வலிக்காதா? அதான் கத்தினேன்…. இப்படியா கிள்ளுவ என் இடுப்பே போச்சி. எவ்வளவு வலிக்குது தெரியுமா?”, அகரன் தன் இடுப்பைத் தேய்த்தபடிக் கூறினான்.
” சாப்பிடறப்ப கண்ணு தட்டுல இருக்கணும் என்னை ஏன் சாப்பிடறமாதிரி பாக்கற? அதான் கிள்ளினேன். சாப்புட்டு சீக்கிரம் ரெடி ஆகி வா. கோவிலுக்கு போகணும்”, எனக் கூறிவிட்டு அவசரமாக சாப்பிட்டு எழுந்துவிட்டாள்.
“ராட்சசி…..”, அகரன் அவளை திட்டிவிட்டு சாப்பிட ஆரம்பித்தான்.
“என்ன மச்சான் கூப்பிட்டியா?”, சரண் அருகில் அமர்ந்தான்.
“அவன் ஏன் மச்சி உன்ன கூப்பிட போறான் இனிமே? “,எனக் கூறியபடி மதுரனும் அகரனின் அருகில் வந்தமர்ந்தான்.
“என் மச்சானுக்கு நான் தான் உயிர்டா”, சரண்.
“வேணாம்….. பெரியவங்க சின்னபசங்க எல்லாம் இருக்காங்க இங்க… கம்முனு சாப்பிட்டு வா. கோவிலுக்கு போகணும் “, மதுரன்.
“என்னங்கடா ஓவரா கலாய்க்கறீங்க? “, அகரன் அவர்களை முறைத்தபடிக் கேட்டான்.
“என்னடா முறைக்கற? நதியாள் கிட்ட ஒன்ஸ்மோர் உனக்கு கிள்ளு வேணும்னு சொல்லட்டுமா?”, மதுரன்.
“நான் ஸ்டெல்லா கிட்ட நீ ரூட் விடறத சொல்லட்டுமா?”, என அகரன் ஒரு புருவம் உயர்த்தி மதுரனைக் கேட்டான்.
“ஸ்டெல்லாவா யாரது?”, மதுரன் கூறிவிட்டு எழ முயற்சிக்க அகரன் அவனை இழுத்து அமரவைத்தான்.
“இது எப்ப இருந்து?”, சரண் புரியாமல் முழித்தான்.
“சுத்தம்… நீயே இப்படி இருக்க அப்பறம் உன் தங்கச்சி மட்டும் எப்படி இருப்பா?”, என அகரன் தலையில் அடித்துக்கொண்டான்.
“இதுவே உனக்கு என் தங்கச்சி சொல்லி தானே தெரியும்?”, சரண் கேட்டான்.
“ஹிஹிஹி……. அவ தான் சிக்னல் குடுத்தா … ஆனா நான் தானே கம்பார்ம் பண்ணேன்”, அகரன்.
“த்த்தூஊஊஊஊ…. வெட்கமா இல்ல ? சரி சொல்லு மச்சி இது எப்ப இருந்து?”, என அகரனை திட்டிவிட்டு மதுரனைக் கேட்டான் சரண்.
“அது டிசைன் காட்ட ஒரு வாரம் ஸ்டெல்லா தானே வந்தா…. அப்ப தான் ஒரு அட்ராக்சன் மச்சி. ஸ்டெல்லாவும் நதியாள் மாதிரி போல்ட் ஆ என்னை எதிர்த்து பேசினாடா…. நான் திட்டினத இன்சல்ட் பண்ணத எல்லாம் அப்ப அப்ப திருப்பி குடுத்தாளா….அதுல நான் அவகிட்ட சிக்கிட்டேன் டா…. ஆனா இன்னும் அவ மொறச்சிட்டே இருக்கா….நீங்க தான் எனக்கு ஹெல்ப் பண்ணணும் மச்சிஸ்”, மதுரன் அகரனின் சர்ட் பட்டனைத் திருவியபடிக் கூறினான்.
“அடச்சீ சட்டைய விடு….. ஊருக்கே பிஸ்னஸ் டான்….. ஒரு பொண்ணு கிட்ட லவ் சொல்ல பயப்படறாரு”, அகரன் அவனை கலாய்த்தான்.
“கொஞ்சம் உன் நிலைமைய யோசிச்சி பாத்துட்டு பேசு மச்சி.. .நீயும் இப்படி தான் நின்ன இதுக்கு முன்ன. இப்ப கல்யாணம் நடந்துரிச்சின்னு ஓவரா பேசக்கூடாது.. அப்பறம் ஜோசியரே கரெக்ட் பண்ணி ஆறுமாசம்னு இருக்கிறதை ஒரு வருஷமா மாத்திடுவேன் ஜாக்கிரதை”, மதுரன் விளையாட்டாக மிரட்டினான்.
“சரி சரி… அதுல்லாம் இப்ப ஏன் பேசிட்டு… ஸ்டெல்லா நல்ல பொண்ணு. நீ போய் லவ் சொல்லு ஒத்துப்பா”, என அகரன் சமாளித்தான்.
“டேய்…. என்னடா? நிஜமா அந்த வாயாடிய நீ லவ் பண்றியா?”, சரண் மதுரனைக் கேட்டான்.
“ஆமா மச்சி”, மதுரன்.
“யாரு சார் வாயாடி? யார யார் லவ் பண்றாங்க?”, எனக் கேட்டபடி ஸ்டெல்லாவும், மீராவும் சாப்பிட அமர்ந்தனர்.
ஸ்டெல்லா தளர் பின்னலிட்டு பாவாடை தாவணி அணிந்து மிதமான ஒப்பனையில் தேவதையாக மிளிர, மதுரன் அவளை விழி எடுக்காது பார்த்தபடி அமர்ந்திருந்தான்.
அகரனும் ,சரணும் மதுரனையும் ஸ்டெல்லாவையும் பார்த்துவிட்டு ஒருவரை ஒருவர் பார்த்துத் தலையசைத்துக் கொண்டனர்.
“என்ன சார் பதிலே காணோம்…. யாரை வாயாடின்னு சொன்னிங்க?”, ஸ்டெல்லா மீண்டும் கேட்டாள்.
“உன்ன தான் வாயாடினு சொன்னாங்க”, எனக் கூறியபடி திலீப் சாப்பிட அமர்ந்தான்.
“உன்ன யாராவது கேட்டாங்களா? இப்ப தானே நீ சாப்பிட்ட…..? எத்தனை தடவை டா சாப்பிடுவ? மத்தவங்க சாப்பிட வேணாம்? பாரு மதுரன் வெறும் தட்ட சாப்பிட்டுட்டு இருக்காரு”, எனக் கூற அனைவரும் மதுரனைப் பார்க்க அவன் ஸ்டெல்லாவை பார்த்தபடி சாப்பிடுவது போல சைகை செய்துக் கொண்டிருந்தான்.
அகரன் மதுரனை இடிக்க , அவன் சுயநினைவு வந்து அசடு வழிந்தபடிச் சிரித்தான்.
“இந்தாங்க மதுரன் வெறும் தட்டை சாப்பிடாம டிபன் சாப்பிடுங்க”, என ஸ்டெல்லா அவனுக்கு பரிமாறினாள்.
ஸ்டெல்லா அத்தனை கரிசனமாக அவனுக்கு பரிமாறிவிட்டு, சஞ்சய் சரண் அகரன் மீரா மற்றும் திலீப்பிற்கும் இரண்டு கொட்டுகள் தலையில் கொடுத்தபின் பரிமாறிவிட்டு, தனக்கும் பரிமாறிக் கொண்டு உண்ண ஆரம்பித்தாள்.
வார்த்தைக்கு வார்த்தை எதிர்த்து பேசினாலும், சண்டையிட்டாலும் , அவளுள் இருக்கும் மனம் இளகியது, இனிமையானது என்பதை அத்தருணம் அனைவரும் உணர்ந்து இதழ்களில் மென்னகைச் சூடிக்கொண்டனர். அகரனும் சரணும் மதுரனை அடக்கவும் இவள் தான் சரியென மனதினுள் நினைத்துக்கொண்டு சந்தோஷத்துடன் உணவுண்டனர்.
“மச்சி ….. உன்னை அடக்க சரியான ஆள் இவ தான் அதனால அதுக்காகவே உன் லவ்வுக்கு ஹெல்ப் பண்றோம் நாங்க”, என அகரனும் சரணும் மதுரனுக்கு வாக்களித்தனர்.
“தேங்க்யூ மச்சிஸ்….. அப்பறம் இன்னிக்கும் கோவில்ல தாலி இருக்குமா ? இருந்தா நானும் கட்டிடலாம்ல “, மதுரன் கேட்க அகரனும் சரணும் அவனை மொத்தினர்.
“நதியாளாவது இவன லவ் பண்றா அதனால இவன் இப்ப உயிரோட இருக்கான். நீ இன்னும் அந்த பொண்ணுகிட்ட லவ்வே சொல்லல. அது மனசுலயும் என்ன இருக்குன்னு தெரியல… தாலி மட்டும் நீ அவளுக்கு தெரியாம கட்டினன்னு வையேன் மவனே உனக்கு கருமாதி அங்கயே இவ பண்ணிடுவா….. இரண்டும் பொண்ணு ரூபத்துல இருக்கற ராட்சசிங்க நியாபகம் வச்சிகங்க நீங்க இரண்டு பேரும்”, என சரண் கூற அகரனும், மதுரனும் ஒருவாறு அவன் கூறும் உண்மையை உணர்ந்துத் தலையசைத்தனர்.
“எலேய் சரணு…. இன்னும் கிளம்பலியா? நேரம் ஆச்சிடா…அகரனையும் யாளையும் ஹோமத்துல உட்கார வைக்கணும்ல…. திருக்கல்யாண பூஜை ஆரம்பிச்சிட்டாங்க கோவில்ல. வெரசா எல்லாரும் கிளம்புங்க …”, என பரமசிவம் கத்தவும் அனைவரும் அரக்க பறக்க சாப்பிட்டுவிட்டு தயாராக ஓடினர்.
“பெரியப்பா…… நான் ரெடி”,என நதி அவரின் முன்னால் வந்தாள்.
தக்காளி கலர் பட்டுப்புடவையில் தங்கத்தை வார்த்து ஊற்றியதைப்போல இருக்கும் கரையும், அதில் செய்திருந்த வேலைபாடும், அவள் உடுத்தியிருந்த நேர்த்தியும், அகரனின் குடும்ப ஆபரணங்களான வைர வைடூர்ய மரகத கற்கள் பதித்த ஆரம், கைவளையல், மெல்லிய சங்கிலி ஒட்டியாணம், காப்பை போன்ற வங்கி, வித்தியாசமான குடை ஜிமிக்கி, இடைக்கு கீழ் தொங்கிய கருங்கூந்தலில் குண்டுமல்லி சரம் சூடியிருக்க பெண்ணவள் முகத்தில் இருந்த மகிழ்ச்சி கண்களில், பிரதிபலிக்க கல்யாணக் கலையுடன் புதுதாலித் தாங்கி நிற்கும் மகளைக் காண காண பரமசிவம் மெய்மறந்து, அவளை தன்னருகில் அழைத்து அவளை உச்சி முதல் உள்ளங்கால் வரையிலும் கண்குளிரக் கண்டார்.
தனக்கு பெண்பிள்ளை இல்லையென்ற குறை தீர்த்தவள் ஆயிற்றே இவள்…. தம்பி பெண்ணாக பார்க்காமல் தன் உதிரமாக பார்த்துப் பார்த்து வளர்த்தார்கள் இவரும் செல்லம்மாவும்… தன் மகளை இத்தருணத்திலும், இந்த கோலத்திலும் காணத்தானே காத்திருக்கிறார்கள் தந்தையர் அனைவரும்…..
“அடியேய் செல்லா….. இங்க வாடி…. அந்த பொட்டிய கொண்டுவா”, பரமசிவம் செல்லம்மாவை அழைத்தார்.
“ஏங்க கத்தறீங்க…. ? கோவில் பூஜைக்கு தான் எடுத்து வச்சிட்டு இருந்தேன்…. எதுக்கு கூப்பிட்டீங்க?”, எனக் கேட்டபடி செல்லம்மா அங்கு வந்தார்.
“பொசகெட்டவளே…. புள்ளைய பாரு முதல்ல … எங்க அந்த பொட்டி நான் வீட்ல குடுத்தேன்ல…அத எடுத்துட்டு வா வெரசா”, என விரட்டினார்.
“அடியாத்தி… என் ராஜாத்தி…… என் கண்ணே பட்டுறும் போலயே…… இருங்க எடுத்தாரேன்….. அடியே ராதா…. இங்க வா… திலகாண்ணி இங்க பாருங்க…..கொழுந்தனாரே இங்க பாருங்க”, என அனைவரையும் அழைத்தபடி உள்ளே ஓடினார்.
“ஏன்க்கா கூப்பிட்டீங்க? “, ராதா.
“அடியே அங்க வந்து நம்ம புள்ளைய பாரு டி”, எனக் கூறிவிட்டு தான் கொண்டுவந்த பெட்டியை எடுத்துக்கொண்டு முற்றத்திற்கு வந்தார்.
கண்ணன், ராதா, சிதம்பரம், திலகவதி, சுந்தரம் தாத்தா, மீனாட்சி பாட்டி என அனைவரும் அங்கு வந்தனர்.
நதியாளின் முகத்தில் இருந்த தேஜஸும், சிரிப்பும் அனைவரையும் தொற்றிக் கொள்ள அனைவரும் மனநிம்மதி பெற்று அருகில் வந்து அவளை நெட்டி முறித்தனர்.
அவளறியாமல் அவளுக்கு தாலி கட்டியதால் நேற்றிரவு வரையிலும் அவள் முகம் வாடியிருந்தது. பெரியவர்கள் ஏதும் அவளை தேற்ற வழியறியாமல் திணறிக்கொண்டு தான் இருந்தனர். ஆனால் காலை எழுந்தது முதல் அவளின் மலர்ச்சி அவர்களுக்கு சந்தோஷத்தைக் கொடுத்தது. இப்போது அவளின் தோற்றமும் கண்களில் மின்னும் சந்தோஷமும் அவர்களை நிம்மதியுறச் செய்தது.
“என் தங்கம்…..அப்படியே தங்க சிலையாட்டம் இருக்க டி…..”, மீனாட்சி பாட்டி அவளை கொஞ்சி கன்னத்தில் முத்தம் கொடுத்தார்.
“நிஜமாவே மகாராணியாட்டம் இருக்க கண்ணு….. “, சுந்தரம் தாத்தாவும் தாடையைப் பிடித்துக் கொஞ்சினார்.
“எந்த குறையும் இல்லாம நல்லா இருப்ப டா….”, என சிதம்பரமும், திலகவதியும் அவளைக் கட்டியணைத்து ஆசிர்வதித்தனர்.
“என் பொண்ணா இது? எம்புட்டு அம்சமா இருக்கடா கண்ணு…. ஏங்க பாத்தீங்களா …… நாம ஒரு சங்கிலி குடுத்தா கூட போட்டுக்க அவ்வளவு யோசிப்பா….. இப்ப பெரியம்மா குடுத்தத மறுக்காம போட்டுட்டு வந்து நிக்கறா…. “, ராதா.
“அவ எப்பவும் சொல் பேச்சு கேக்கற பொண்ணு தான் டி. நீ தான் அவள திட்டிட்டே இருப்ப…. என் ராசாத்தி டா நீ… இங்க வா”, என கண்ணன் அழைத்து அவளை தன் தோளோடு அணைத்துக்கொண்டார்.
“சரி சரி… போதும் போதும். கொஞ்சம் எங்க மாப்பிள்ளையையும் கொஞ்சறது…… நாங்களும் ஜம்முன்னு தான் ரெடி பண்ணி கூட்டிட்டு வந்து இருக்கோம்”, என சரண் அவர்களை தன் பக்கம் திருப்பினான்.
அகரனும் நதியாளின் புடவை நிறத்திலே சட்டை அணிந்து ,பட்டுவேஷ்டி கட்டி கம்பீரமாக அசத்தும் வசியப்புன்னகையை சிந்தியபடி வந்து நின்றான்.
நதியாளின் அழகிற்கு அகரனின் கம்பீரம் சற்றும் குறைந்தது இல்லை, அவளின் நிமிர்விற்கு இவனின் திமிரும் சற்றும் சளைத்ததில்லை என்பது போல இருவரும் நின்றிருந்தனர்.
“சபாஷ் சரியான போட்டி….. “, என மதுரன் கைதட்டி கூற அங்கிருந்தவர்கள் அனைவரும் சிரித்தனர்.
“செல்லம்மா… அந்த நகைய புள்ளைக்கு போடு”, என பரமசிவம் நினைவுபடுத்த ஒரு நவரத்தின நெக்லஸை போட்டுவிட்டார்.
பின் மீராவிற்கும், ஸ்டெல்லாவிற்கும் ஆளுக்கொரு நெக்லஸை போட்டுவிட்டார் செல்லம்மா.
“என்னம்மா இது? எங்களுக்கு எதுக்கு?”, என இருவரும் கேட்டனர்.
“நேத்து சாமிக்கு தாலி வாங்க போனேன்ல அப்ப தான் உங்க மூனு பேருக்கும் வாங்கினேன். நீங்களும் எனக்கு பொண்ணு தான் கண்ணுங்களா… அப்பா குடுத்தா வாங்கிக்கமாட்டீங்களா?”, என பரமசிவம் குரலில் அன்பு வழிய கேட்கவும், மீராவும் ஸ்டெல்லாவும் அவரை அணைத்துக்கொண்டனர்.
“நான் தானேடி உங்களுக்கு போட்டு விட்டேன் என்னைய விட்டுட்டீங்க…. “, செல்லம்மா குறைபடவும் அவரையும் தோழிகள் இருவரும் அணைத்து கன்னத்தில் இருவரும் முத்தம் கொடுத்தனர்.
“மச்சான் அப்ப எனக்கு சொத்துல பங்கு இருக்கா டா”, மதுரன் சரணின் காதில் குசுகுசுக்க சரண் அவனை முறைக்க, மதுரன் வாயை மூடிக்கொண்டான்.
“சரி சரி வாங்க கோவிலுக்கு போகலாம்….. நேரமாச்சி”, என அனைவரும் கிளம்பி வெளியே வந்து கார்களில் ஏறி கோவில் சென்று சேர்ந்தனர்.
இத்தனை நேரமும் அகரன் நதியாளை விட்டு தன் கண்ணை அகற்றாது பார்த்தபடி இருக்க, நதியாள் தோழிகளுடன் பேசியபடியே கோவில் வரையிலும் வந்து விட்டாள்.
கோவிலில் திருக்கல்யாண விழா நடந்துகொண்டிருக்க அனைவரும் அங்கே கவனத்தைப் பதித்தபடி கூட்டத்தில் கலந்து கொண்டனர். தேவ்வின் குடும்பமும் அங்கே இவர்களுக்காக காத்திருக்க , அனைவரும் ஒரே இடத்தில் அமர்ந்துக் கொண்டனர்.
மதுரன் ஸ்டெல்லாவையும், அகரன் நதியாளையும், தேவ் மீராவையும் இரசித்தபடி அமர்ந்திருக்க, பெண்கள் மூவரும் அவர்கள் மூவரும் அங்கு இருப்பதாகவே கண்டுகொள்ளாமல் தங்கள் பாட்டிற்கு பேசியபடியும் வேடிக்கை பார்த்தபடியும் இருந்தனர்.
சரண் அவர்கள் மூவரையும் பார்த்து முறைத்தபடி இருக்க, திலீப்பும் சஞ்சயும் அவனின் அருகில் வந்து ,” என்ன சார் ஏதோ கருகற வாடை வருது”, எனக் கேட்டனர்.
“ஏன் உங்களுக்குலாம் கருகலியா டா ? என்னை ஏன் வந்து நோண்டறீங்க நீங்க?”, சரண் அவர்கள் காதுகளைப் பிடித்துத் திருகினான்.
“சார்…சார்….. வலிக்குது சார்….. தெரியாம கேட்டுட்டோம் விட்றுங்க சார்….. “, என இருவரும் கத்த,” ஹ்ம்ம்….. எல்லாம் நம்ம நேரம்… இந்த சில்வண்டுங்க எல்லாம் கலாய்க்குது…. சீக்கிரமே ஒரு பொண்ண பாக்கறோம் லவ் பண்றோம்…..”, எனத் தனக்குத் தானே கூறிக்கொண்டான் சரண்.
“சார் ஒரு பொண்ண நாம மூனு பேரும் எப்படி லவ் பண்ண முடியும்? அது தப்பில்ல?”, திலீப் தன் அதிமுக்கியமான சந்தேகத்தைக் கேட்க சஞ்சயும் சரணும் சேர்ந்து அவன் முதுகில் மிருதங்கம் வாசித்தனர்…..
“ஹலோ மிஸ்டர் அமைதியா சாமிய கும்பிடுங்க…. எல்லாருக்கும் டிஸ்டர்ப் ஆகுதுல்ல…. சண்டை போடறதா இருந்தா வெளியே போங்க”, என ஒரு பெண்ணின் குரல் கேட்க மூவரும் அக்குரலுக்கு சொந்தமானவளைப் பார்த்தனர்……