2 – ரெட்டைக் குன்றுக்கோட்டை
கவிநேசன் அன்று இரவு தனது மடிக்கணினியில் தனது தொழில் சம்பந்தமான தரவுகளை சரிபார்த்துக் கொண்டிருந்தான்.
அண்ணன் தம்பி இருவரும் ஒரே காரில் வந்திருந்தாலும் இங்கே வந்ததில் இருந்து ஒருவரின் முகத்தை மற்றவர் பார்க்க முயலவில்லை. இருவருக்கும் எப்போதும் சண்டையும், வாக்குவாதங்களும் தான் நடக்கும்.
கவிநேசன் எப்போதும் தனது நேரத்தை மிகவும் பயனுள்ளதாக தான் செலவழிப்பான். அவனுக்கு நேரத்தை விரயமாக்கினால் பிடிக்காது. ஒவ்வொரு மணித்துளியும் அவனுக்கு அத்தனை முக்கியம். மனதை ஆசுவாசப்படுத்த கூட தனது நேர அட்டவணையில் ஒரு நேரத்தை ஒதுக்கி ஆசுவாசம் கொள்வதையும் சிரத்தையோடு செய்வான் என்றால் பாருங்கள் அவனின் நேர அட்டவணையை.
குலசேகர பாண்டியன், மனமும் புத்தியும் போகும் போக்கில் வாழ்பவன். அவனுக்கு சந்தோஷம் தரும் எதையும் நேரம் காலம் பார்க்காமல் அதிலேயே மூழ்கி அதை வெறுக்கும்வரை விடமாட்டான்.
இப்போதும் அப்படிதான் ஒரு யு ட்யூப் சேனல் ஆரம்பித்து, தொடர்ந்து அதில் ஏதேனும் பதிவேற்றம் செய்து கொண்டே வருகிறான். அவனின் பண்ணை வீடு மற்றும் சொந்த வீட்டின் ‘ஹோம் டூர்’ அதிகமான பார்வையாளர்களையும் ஈர்த்தது. அதிலிருந்து கணிசமாக இப்போது நல்ல தொகையும் வந்துக் கொண்டிருக்கிறது. விரைவில் ‘ல’கரங்களில் அதில் சம்பாதிக்க போவதாக தந்தையிடம் சவாலும் விட்டிருக்கிறான் ஜமீனின் கடைக்குட்டி.
இவர்கள் சென்றுக் கொண்டிருக்கும் குன்றுக்கோட்டை மாளிகை இவர்களுடையது தான். அவர்களின் தாத்தா காலம் வரையிலும் இங்கே தான் வசித்து வந்தார்கள். அவரின் தந்தை பரஞ்சோதி பாண்டியன் பஞ்சு ஆலை தொழிலை தொடங்கியதும் இங்கிருந்து ஜாகையை மாற்றிக் கொண்டனர்.
நான்கு பக்கமும் பெரிய மலைகள் நடுவே இரண்டு குன்றுகள் இருக்கும். அதில் ஒரு குன்றில் தான் இவர்களின் கோட்டை மாளிகை உள்ளது. அவர்கள் சிற்றரசாக இருந்த காலத்தில் கட்டிய கோட்டை மாளிகை அது. சில ஏக்கர் பரப்பளவை கொண்டிருக்கும் கோட்டை என்பதால் கட்டிடமே மிகவும் பெரிதளவில் வியாபித்திருந்தது.
“நம்ம கோட்டைல ஏதேதோ நடக்கறதா அங்கிருக்க ஆளுங்க சொல்றாங்க. நம்ம ஒருதடவை அங்க போயிட்டு வரலாமாங்க?” என பொன்னிழை கேட்டார்.
“எனக்கும் அப்பப்போ செய்தி வந்துட்டு தான் இருக்கு பொன்னி. ஆனா உன் உடம்பு இருக்க கண்டிஷன்க்கு இப்போ நம்ம டிராவல் பண்ண முடியாது. கொஞ்ச நாள் போகட்டுமே..”
“இல்லைங்க நம்ம பெரியவங்க அங்க தான் ஒரே நாள்ல இறந்தாங்க. அவங்களுக்கு நம்ம பண்ணவேண்டியது எல்லாம் செஞ்சிருந்தாலும் நம்ம குடும்பத்துல இன்னும் ஒரு நல்ல காரியமும் நடக்கல. ஒரு தடவை அங்க படையல் போட்டு ஒரு பூஜை பண்ணிடலாம்னு நெனைக்கறேன்..”
“அப்படியா? எனக்கு ஒரு மாசத்துக்கு இங்க வேலை நெருக்கடியா இருக்கு பொன்னி. அப்பா அம்மா நினைவு நாள் எப்ப வருது?”
“அடுத்த மாசம் வருதுங்க..”
“சரி பெரியவன அனுப்பி அங்க என்னன்னு பாக்க சொல்றேன். அவனே அங்க இருந்து ஏற்பாடும் பண்ணட்டும். நம்ம ரெண்டு நாள் முன்ன போலாம் சரியா?”
“இல்ல நானும்..” என அவர் ஆரம்பிக்க, பரஞ்சோதி பார்க்கவும் வாயடைத்துக் கொண்டார்.
“இங்க வந்து உக்காரு.. உன் உடம்பு இப்போதான் கொஞ்சம் கொஞ்சமா சரியாகிட்டு வருது. எனக்கு உன் ஹெல்த் தான் மொதல் மத்தது எல்லாமே அப்பறம் தான். இன்னும் ரெண்டு வாரம் இன்ஜெக்க்ஷன் போடணும். அப்ப தான் சர்ஜரி பண்ண முடியும்…” என பொறுமையாக மனைவியின் முதுகை வருடிவிட்டுக் கூறினார்.
“சரி.. நான் அவன் டிரஸ் எடுத்து வைக்கறேன்..” எனக் கூறி அங்கிருந்து சென்றார்.
“பாரதி… நம்ம கோட்டை மாளிகை போய் என்ன ஏதுன்னு கவனி. அங்கிருந்து அடிக்கடி ஏதேதோ சொல்லி அழைப்பு வருது. உன் அம்மாவும் மனச போட்டு குழப்பிட்டு இருக்கா. அடுத்த மாசம் தாத்தா பாட்டிக்கு அங்க வச்சி ஒரு படையல் போட்டு திதி குடுத்துடலாம். நாளைக்கு கிளம்பறியா?”
“ஒரு ரெண்டு நாள் இங்க வேலை இருக்குப்பா.. அது முடிஞ்சி கிளம்பறேன்.”
அளந்து பேசிவிட்டு செல்பவனைக் கண்டு பரஞ்சோதி பாண்டியன் பெருமூச்சு ஒன்றை விட்டுவிட்டு தனது வேலையை கவனிக்க சென்றார்.
“அம்மா.. எங்க போறான் அவன்? எதுவும் ஃபாரீன் ட்ரிப் போறானா? இல்ல நாட்டை விட்டே போறானா?” என குலசேகரன் குதித்தபடி வந்து அம்மாவை கட்டிக்கொண்டு கேட்டான்.
“அவன் ஊருக்கு போனா உனக்கு என்னடா இவ்ளோ சந்தோஷம்? அவன நாட்டை விட்டு தொறத்துர அளவுக்கு உனக்கு என்ன பண்ணிட்டான்?” என அவனின் முதுகில் ஒன்று வைத்து கேட்டார்.
“அவன் தான் சிரிக்கறதே இல்லையே.. நீ அவன ஹாஸ்பிடல்ல இருந்து மாத்தி தூக்கிட்டு வந்துட்டன்னு நெனைக்கறேன் ம்மா.. எனக்கும் அவனுக்கும் ஒரு விஷயம் கூட ஒத்துப்போறதே இல்ல..”
“அவன் கோட்டைல பொறந்தான் டா. நீ தான் ஹாஸ்பிடல்ல பொறந்த.. உன் சந்தேகம் இப்ப எனக்கு வருது. நீ எங்க புள்ளை தானான்னு டெஸ்ட் எடுத்து பாக்கலாமா?” எனக் கேட்டபடி அங்கே பரஞ்சோதி வந்தார்.
“அப்பா.. நான் அம்மா மாதிரி எவ்ளோ அழகா இருக்கேன். அவன் தான் உங்க ரெண்டு பேர் மாறியும் இல்ல..”
“அவன் அவனோட தாத்தா மலையசேன பாண்டியன் மாதிரி டா. அந்த கோட்டைல அவரோட சின்ன வயசு ஓவியம் இருக்கும். அதுல அவர் எப்படி இருக்காரோ அப்படியே இவன் இப்ப இருக்கான்..”
“நிஜமாவா? உங்கப்பா இப்படியா உர்ருன்னு இருந்தாரு?” என தீவிர சிந்தனை பாவனையில் கேட்டான்.
“அவரு சிரிச்ச முகமா தான் இருப்பாரு. அதே முகமும் உடலமைப்பும் இவனுக்கு இருக்கு… நம்பலன்னா போய் பாரு..”
“உங்ககிட்ட போட்டோ இல்லையா?”
“இல்ல..”
“சரி நான் போய் பாக்கறேன்..”
“சரி.. பொன்னி இவன் டிரஸ்சும் பேக் பண்ணிடு அண்ணன் தம்பி ரெண்டு பேரும் போய் கோட்டைய சரி பண்ணட்டும்..”
“அவன்கூடவா? நானா? நெவர்..”
“சேகரா ‘ஹோம் டூர்’ மாதிரி ஒரு ‘கோட்டை டூர்’ போட்டா உனக்கு வியூஸ் அதிகமா வரும்ல?” என அவனுக்கு ஆசைக் காட்டினார்.
“ஆமா.. இதுவும் நல்ல ஐடியா தான். ஆனா நான் என் ஃபிரண்ட்ஸ் கூட தனியா போயிக்கறேன்..”
“அடுத்த மாசம் தாத்தா பாட்டிக்கு சாமி கும்பிடணும். அதுக்கு தான் கோட்டைக்கு போய் தேவையானதை செய்ய சொல்ல அவன் போறான். நீயும் போனா உனக்கு ஒரு ஐடியா வரும். அப்பறமா உன் ஃபிரண்ட்ஸ் கூட்டிட்டு தனியா இன்னொரு நாள் போ.. அங்க பக்கத்துல இன்னொரு கோட்டையும் இருக்கு..”
“ரெண்டு கோட்டை இருக்கா?”
“ஆமா.. ரெண்டு கோட்டை பக்கத்துல பக்கத்துல ரெண்டு குன்று மேல இருக்கு. ‘ரெட்டைக்குன்றுக் கோட்டை’ன்னு தான் அந்த இடத்தை சொல்வாங்க. மலைப்பாதை எல்லாம் நல்லா பச்சை பசேல்னு இருக்கும். குன்றுக்கு நடுவுல அருவியும், ஆறும் வரும். பாக்கவே கண்ணுக்கு நிறைவா இருக்கும் டா..”
“இவ்ளோ விஷயம் இருக்கா? அப்போ என் காமிராவுக்கு நல்ல தீனி தான். சரி நான் போய் எங்க எல்லாம் வீடியோ எடுக்கலாம்னு ஒரு சார்ட் போடறேன். நீங்க என் டிரஸ்ஸும் எடுத்து வைங்கம்மா. என் புது காமிரா லென்ஸ் இன்னிக்கி கடைக்கு வந்திருக்கும் நான் அதை வாங்கிட்டு வரேன்..” என பெற்றவர்களிடம் கூறிவிட்டு சென்றான்.
“ரெண்டு பேரையும் ஒண்ணா அனுப்பி சண்டை போடறதுக்கா?” என பொன்னிதழ் கேட்டார்.
“இவனும் அவனும் மூஞ்சி பாத்துக்காம இருந்தா நாளைக்கு எப்படி ஒண்ணா இருப்பாங்க ? அதான் இதுல சின்னவன கோர்த்துவிட்டேன். நீ கம்முன்னு இரு, ரெண்டு பேரும் ஒரு புரிதலுக்கு வருவாங்க.. அவன் அளவுக்கு அதிகமா பொறுப்பா இருக்கான். இவன் பொறுப்பே இல்லாம இருக்கான். ரெண்டையும் பேலன்ஸ் பண்ணா தான் நம்ம லைப் ஸ்மூத் அஹ் போகும்..” என மனைவியின் கன்னத்தை கிள்ளினார்.
“பசங்க வீட்ல இருக்காங்க அமைதியா இருங்க..” என அவர் சுற்றிலும் பார்த்துவிட்டு கணவனைக் கண்டித்தார்.
அதன்பின் மூன்றாம் நாள் அண்ணன் தம்பி இருவரும் ஒரே வாகனத்தில் தங்களது பயணத்தை குன்றுக் கோட்டையை நோக்கித் தொடங்கினர்.
ஆரம்பம் முதலே கவிநேசன் முறைப்பதும், குலசேகரன் முணுமுணுப்பதுமாக தான் அவர்களின் பயணம் இருந்தது. இதற்கு மேலும் கவிநேசனின் கண்டிப்பான பார்வையில் இருக்கமுடியாது என்று தான் ரிசார்ட் வந்ததும் தனியறை வேண்டுமென தானே பணம் கட்டி வாங்கிக் கொண்டான்.
கவிநேசனும் அதை கண்டும்காணாமல் தனதறைக்கு சென்றுவிட, இவனும் முகத்தை திருப்பிக் கொண்டு இவனது அறைக்கு சென்றான்.
இரண்டும் எதிரெதிர் பக்கமாக மலைமுகடுகளின் அழகை ரசிக்கும் வண்ணம் உப்பரிகை வைத்துக் கட்டியிருந்தது.
அங்கிருந்து பார்த்தால் கீழே இரண்டு குன்றுகள் பகலில் நன்றாக தெரியும். இப்போது பனியின் காரணமாக புகை மூட்டம் மட்டுமே தெரிந்தது.
இவர்கள் இருவரும் இங்கே இருக்க, அங்கே கோட்டையின் பொக்கிஷ அறையில் இருந்த பொருட்கள் எல்லாம் அலங்கோலமாக விசிறி எறியப்பட்டன. உள்ளிருந்த ஜன்னல் யாவும் மூடியிருக்க சூறாவளி காற்று அவ்வறையில் மையம் கொண்டு சுழற்றியடித்தது.
மலைய சேன பாண்டியன் படத்தில் இருந்த உருவத்தில் பெரும் இரத்த கோடு விழுந்தது. சட்டென தீயும் பற்றிக்கொள்ள, சில நொடிகளில் அந்த அறையே நெருப்பினால் பஸ்பமாகும் போது பூஜை அறையில் இருந்து ஓர் வாள் அந்த நெருப்பினை பிளக்கவும் நெருப்பு புகையாகி அப்படியே மறைந்தும் போனது.
ஆனால் அந்த ஓவியம் மட்டும் முழுதாக தீப்பிடித்த தடம் கொண்டு நின்றது.

