வணக்கம் நட்பூஸ் அண்ட் சகோஸ் ..
இன்னிக்கி நம்ம பாக்க போறவங்கள பத்தி சொல்லணும்னா, நம்ம எல்லாம் கதா பாத்திர பேருக்காக நெறைய மண்டைய குழப்பிகிட்டு இருப்போம் , ஆனா இவங்க ஹீரோ அண்ட் ஹீரோயின்க்கு எப்பவும் ஒரே பேரு தான் வைப்பாங்க .. ஒரே பேர்ல இத்தன விதமா வைக்க முடியும்னு இவங்க கிட்ட பாக்கலாம் ..
இவங்க ரொம்பவே தைரியமான எழுத்தாளர்னு அன்னிக்கி சொல்லி இருந்தேன். அது ஏன்னு அவங்க கதைகள் படிச்சா உங்களுக்கே புரியும் . இவங்களோட இன்னொரு ஸ்பெஷல் விஷயம் , இவங்க எழுத்து நடை தான் . இவங்களுக்கு செந்தமிழும் நல்லா வரும் , வட்டார மொழி நடையும் நல்லா வரும் . இப்போ இவங்க நம்ம சுதந்திரகாலகட்ட நிலைமையையும் , அந்த கால ஜமீன் ஓட அடக்கு முறை , அவங்களுக்கு கீழ இருந்த மக்கள் நிலைமையையும் கண்ணு முன்னாடி கொண்டு வந்து காடிட்டு இருக்காங்க .. மொத்ததுல இவங்க வழக்கமான எழுத்தாளர் இல்லை .
வாங்க இவங்க கிட்ட கொஞ்சம் பேசலாம் ..
எழுத்துப் பயணத்தில் நம்முடன் இன்று ..
1 & 2) புனைபெயர், அசல் பெயர் எல்லாம் ஒன்றே! சித்ரவதனா
3) படிப்பு ; B. Tech (IT), B.sc (vis com)
4) தொழில் –
பண்பலை அறிவிப்பாளினியாக இருந்தேன். தற்போது உடல்நலம் காரணமாக ஓய்வில் இருக்கிறேன்.
5) பிடித்த வழக்கங்கள் –
வேகமாக கார், ஸ்கூட்டர் ஓட்டப் பிடிக்கும். மலை வாழிடங்களில் தங்கப் பிடிக்கும். எழுதும் கதைகளில் நாயகியைத் துன்புறுத்தப் பிடிக்கும். சமைக்க அலுப்புப்பட்டு, பட்டினி கிடக்கப் பிடிக்கும்.
6) கனவு –
கண்டது ; கொடுங்கனவு. கண்டுகொண்டிருப்பது; கேரள மலைக்கிராமம் ஒன்றில் எளிமையாக பிற்காலத்தைக் கழிக்க வேண்டும். அதற்குமுன் என் கதைகளில் ஒன்று காட்சி ஊடகத்தில் படைப்பாக வருமேயானால் மகிழ்ச்சி!
7) உங்களுக்கு ஏற்பட்ட எழுத்தின் மீதான் தாக்கம் என்ன?
உண்மையில் எனக்கு கொஞ்சம் எழுத்துத்திறன் இருப்பதையே அறிந்திருக்கவில்லை. என் முகநூல் நண்பரும், சக அடுக்கக வாசியுமான திரு. அரசர் அய்யா அவர்கள் பிரதிலிபியை அறிமுகப்படுத்தினார்; எழுதவும் ஊக்கினார்.
8) உங்களின் வாசிப்பு அனுபவம் பற்றி –
வாசிப்பு அனுபவம் மிகக் குறைவு. அது என் படைப்புத் திறனை மேலாதிக்கம் செய்யும் என்பதால் இப்போது பிற எழுத்துகளை வாசிப்பதில்லை.
9) உங்களை எழுத தூண்டியது எது?
என் வாழ்க்கை நிகழ்வுகளே என்னை எழுத வைத்தன. பிறரிடம் பகிர்கையில் துயரம் குறையும் இல்லையா? இதையெல்லாம் பொதுவில் எழுதுவதா என்றொரு தயக்கமும் இருந்தது. நீச்சல் கற்க ஆசையும், தண்ணீரைக் கண்டால் அச்சமும் இணைந்திருப்பதைப் போல. அந்தத் தயக்கத்தை உதற வைத்தவர், திரு. அரசர் அய்யா!
10) எப்போது எழுத ஆரம்பித்தீர்கள்?
2019ம் ஆண்டு பிற்பகுதியில் பிரதிலிபியில் எழுதத் துவங்கினேன். வாசக உறவுகள் கொடுத்த உற்சாகத்தால் தொடர்கிறேன்.
11) உங்களது எழுத்தை படித்தவரிடம் அதன் தாக்கத்தை உணர்ந்தது உண்டா?
தனிப்பட்ட முறையில் என்னை வெளிப்படுத்திக்கொண்டதில்லை. அவ்வாறு செய்வதில் சில வாழ்வியல் சிக்கல்கள் உள்ளன. ஆனால், தனிமடல்களில் சிலர் தங்களுக்கு தன்னம்பிக்கையையும், போராடும் துணிவையும் என் எழுத்துகள் தருவதாகச் சொல்கின்றனர். அது எந்த அளவுக்கு உண்மை என்பதில் எனக்கு ஐயம் உள்ளது!
12) எழுத்தால் எதையும் மாற்ற முடியும் என்று நம்புகிறீர்களா ?
இல்லை! எழுத்தால் எல்லாவற்றையும் மாற்ற இயலாது!
13) மின்னூல் , பதிப்பு புத்தகம் . இவற்றினைப் பற்றி உங்கள் கருத்து என்ன ?
அவை குறித்து தற்போதுதான் என் அறிவை வளர்த்துக்கொண்டு இருக்கிறேன். கருத்து சொல்லும் அளவுக்கு எனக்கு புரிதல் இல்லை.
14) நீங்கள் பதிபித்த பதிப்பு புத்தகங்கள் எத்தனை ? (அவற்றை பெற தொடர்பு கொள்ள ) –
நோஷன் ப்ரஸ் மூலம் என் கொடுங்கனவு தொடரைப் பதிப்பித்திருக்கிறேன். அமேசான், ஃப்ளிப்கார்ட் தளங்களில் அது விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.
15) ஆடியோ புத்தகங்கள் மீதான உங்கள் பார்வை என்ன ?
ஆடியோ சிறுகதைகள் என்றால் ஓரளவுக்குப் பரவாயில்லை. தொடர்களை குரல் வடிவில் தருவது நல்ல முயற்சி என்று எனக்குத் தோன்றவில்லை. ஒருவேளை என் புரிதல் தவறாகவும் இருக்கலாம்.
16) எழுத்தாளரின் வெற்றி என்பது எதன் அடிப்படையில் இருக்கிறது ?
வாசகனை கதைக்குள் இழுப்பதிலும், படைப்பில் சொல்லப்படுவதை அதிகபட்சம் உணர வைப்பதிலும் படைப்பாளியின் வெற்றி அடங்கியிருப்பதாக உணர்கிறேன்.
17) உங்கள் படைப்பில் எதையாவது எழுதி இருக்க வேண்டாம் என்று எண்ணியதுண்டா ?
உண்டு! குறிப்பாக நாயகியின் உடலமைப்பு குறித்த விவரிப்புகளில் (ஆர்வக்கோளாறு காரணமாக) எல்லை மீறிவிட்டதாக தற்போது புரிந்துகொண்டேன்.
18) உங்களின் படைப்புகளில் எது உங்களுக்கான அங்கீகாரத்தை பெற்று கொடுத்ததாக நினைக்கிறீர்கள் ?
ஐயமே இல்லை. முதல் படைப்பான ‘கொடுங்கனவு’தான் எனக்கான அங்கீகாரத்தை ஈட்டித்தந்தது!
19) கதை கரு மற்றும் கதா பத்திரங்களை எப்படி தேர்வு செய்கிறீர்கள் ? அதற்கான மெனக்கெடல் எந்த அளவிற்கு கொடுப்பீர்கள் ?
நான் அடிக்கடி பயணங்களை மேற்கொள்பவள். பல்வேறுபட்ட குணநலன் கொண்டோரை பார்க்கிறேன். என்னுள் பதிவு செய்துகொள்கிறேன். பயண நேரங்களில் அவற்றைக்கொண்டு பல்வேறு காம்பினேஷன்களை போட்டுப் பார்க்கிறேன். வேறுபாடான கதைக் கருக்கள் உருவாகின்றன.
20) நீங்கள் பெற்ற போட்டி பரிசுகள் –
கல்லூரி நாட்களில் இண்ட்டர் யுனிவர்சிட்டி ஈட்டி எறிதல் சாம்ப்பியன். சிங்கை வானொலியில் பணியாற்றியபோது அறிவிப்பாளினிகளுக்கான சிறப்புப் பரிசு வென்றதுண்டு. பிரதிலிபியில் இரண்டு சிறுகதைகள் பரிசு வென்றிருக்கின்றன.
21) எதிர்வினை கருத்துக்களை எப்படி கையாள்கிறீர்கள்?
துவக்க நாட்களில் மனம் பாதித்து அழுததுண்டு. தற்போது கடந்து செல்லப் பழகிவிட்டேன்.
22) நீங்கள் அதிகம் எழுத விரும்புவது எது ? (கதை , கவிதை, தொடர்கதை, நாவல் , சிறுகதை) ஏன் ?
தொடர்கள் எழுதவே விருப்பம்.
23) ஏன் மாறுபட்ட கதைக்கரு கொண்ட கதைகள் வாசகர்களை அதிகமாக சென்றடைவதில்லை?
காதலை மையமாகக் கொண்ட கதைகளையே பெருவாரியான வாசகர்கள் விரும்புகின்றனர் என்று நினைக்கிறேன். கிடைக்கும் சிறு ஓய்வுப்பொழுதில் மாறுபட்ட சிந்தனைகளின்பால் கவனத்தைச் சிதறவிட அவர்கள் விரும்பவில்லையோ என நான் யோசிப்பதுண்டு. காதல் உணர்வுகள் உள்வாங்க எளிதானவை. கனமான / வித்தியாசமான கதைகளைப் புரிந்துகொள்ள நேரம் தேவை. அதற்குத் தேவையான போதிய நேரமும், பொறுமையும் எல்லோரிடமும் இருப்பதில்லை!
24) குடும்பம் காதல் சாராத கதைகளை நீங்கள் எழுதியது உண்டா? (படைப்பின் தலைப்பு)
இல்லை! குடும்பமும் காதலும் இடம்பெறாமல் ஒரு கதையை எழுதியதில்லை.
25) அனைவரும் படிக்க வேண்டிய புத்தகங்களாக நீங்கள் கருதுவது என்ன என்ன?
திருக்குறள் – எக்காலத்துக்கும் ஏற்ற உலகப் பொதுமறை அது. அடுத்து மஹாபாரதம். எண்ணற்ற கதாபாத்திரங்களையும், ஏராளமான துணைக்கதைகளையும் ஒருங்கிணைக்கும், உலகப் பேரதிசயம் அது!
26) ஓர் படைப்பின் வார்த்தை அளவுகள் பற்றி உங்களது கருத்து என்ன?
சிறுகதையோ, தொடர்கதையின் அத்தியாயமோ, சுமார் 1000 முதல் 1200 சொற்களுக்குள் அடக்கிவிடவேண்டும் என்பது என் எண்ணம். அதற்குக் குறைந்தால் போதிய அளவில் விவரிக்க இயலாது. மிகுந்தால் சலிப்பு தட்டிவிடும்!
27) எழுதுபவர்கள் பெறும்பாலும் பயன் அடைவதில்லை. அவர்கள் பயன்பெற நீங்கள் கூறும் சில யோசனைகள் என்ன?
அதைச் சொல்லும் அளவுக்கு என்னிடம் சரக்கு இல்லை!
28) உங்கள் தனி தன்மை என்று தாங்கள் கருதுவது என்ன ?
சிறிய கதாபாத்திரமாக இருந்தாலும் அதற்கென்று ஒரு மேனரிசம்/ பாணி/ ஸ்டைலை உருவாக்கி உலவ விடுவது. அடுத்து எதிர் நாயகன்/ நாயகி கதாபாத்திரங்களின் அடாத செயல்களுக்கு (அவர்கள் அளவில்) ஒரு நியாயம் இருப்பதாகக் காட்டுவது. இவை இரண்டும் என் தனித்தன்மை என்று சிலர் கூறக் கேட்டதுண்டு.
29) உங்களது கவிதை , பிடித்த வாக்கியம் , பழமொழி (பைனல் பஞ்ச்).
இழந்தவற்றை எண்ணி வருந்தினால் இருப்பவற்றின் மதிப்பை அறியத் தவறிவிடுவோம்!
30) உங்கள் படைப்புகள் (லிங்க்குகளுடன்) (Youtube also ):
யு ட்யூப் சானல் இல்லை. பிரதிலிபியில் மட்டும் தற்போது எழுதுகிறேன். அமேசான் கிண்ட்ல்க்கு முயற்சி செய்து வருகிறேன்.
Notion Press:
https://notionpress.com/read/kodungkanavu-paagam-1
https://notionpress.com/read/kodungkanavu-paagam-2
இவங்களோட எழுத்துக்கள் கண்டிப்பா எல்லாரும் ஒரு முறை படிக்கணும் . வாழ்க்கையோட மறுபக்கம் என்னனு இவங்க எழுத்து நமக்கு காட்டும். நிதர்சனத்த எந்த மிக்ஸிங்கும் இல்லாம இவங்க காட்டறது, இவங்களோட முக்கியமான சிறப்பு. கஷ்டம் எத்தன வகைல வரும், அதை நம்ம எப்படி போராடி மீண்டு வரணும்னு இவங்க எழுத்துல உணர்வு பூர்வமா நாம கண்டிப்பா உணர முடியும். கொடுங்கனவு , சித்ராங்கி , விசித்ரா , இப்டி நெறைய நெஞ்சை கனக்க வைக்கும் படைப்புகள் இவங்க குடுத்து இருக்காங்க. இவங்க கதை போக்கு தான் இவங்களோட இன்னொரு முக்கியமான சிறப்பு. அடுத்து என்னனு நம்மலாள யூகிக்க முடியாது.
பல நல்ல படைப்புகள் தொடர்ந்து நீங்க தரணும், அதை நாங்க படிக்க தயாரா இருக்கோம். நேர்மறை அதிர்வலைகள் எப்போதும் உங்களோட இருக்கட்டும். சீக்கிரமே உடலும், மனமும் தேறி வாங்க. எழுத்துலகத்துல உங்களுக்கு நிச்சயம் தனி இடம் உண்டு.
நட்பூஸ் அண்ட் சகோஸ் , இவங்களோட நம்ம பயணம் உங்களுக்கு பிடிச்சி இருக்கும்னு நம்பறேன். சீக்கிரமே அடுத்து ஒரு உருட்டி மெரட்டும் எழுத்தாளரோட வரேன் ..