வாசகருடன் சில நிமிடங்கள் ..
1. பெயர் – நர்மதா சுப்ரமணியம்
2. படிப்பு -B.E.
3. தொழில்/வேலை – IT (Technical Lead)
4. உங்களின் வாசிப்பு எப்போது தொடங்கியது?
சிறு வயதிலிருந்தே வாசிக்கும் ஆர்வம் உண்டு. ஆனால் தீவிர வாசிப்பாளராய் மாறியது 2016ல் தான்.
5. எந்த மாதிரியான சூழ்நிலையில் நீங்கள் வாசிப்பை நாடுவீர்கள்?
வாசிக்காத நாளில்லை என்றே கூறலாம். கிடைக்கும் நேரமெல்லாம் வாசிப்பேன். வாசிப்பு இப்பொழுது அன்றாட நாளின் ஒரு பகுதியாய் மாறிவிட்டது.
6. உங்களின் வாசிப்பு என்பது பெரும்பாலும் புத்தகங்கள் வழியிலா? கணினி வழியிலா?
கணினி வழியில் தான்.
7. ஒரு வருடத்தில் எத்தனை புத்தகங்கள் வாங்குவீர்கள்? எத்தனை புத்தகங்களை படிப்பீர்கள் ?
குறைந்தது ஐந்து புத்தகங்கள் ஒரு வருடத்திற்கு வாங்கி விடுவேன். வாங்கிய அனைத்தும் உடனே படித்து விட மாட்டேன். வருடத்திற்கு ஓரிரு புத்தகங்கள் மட்டுமே வாசித்து முடித்திருக்கிறேன் இதுவரை.
8. Ebook / Paperback புத்தகம் எதில் உங்களின் வாசிப்பு முழுமை பெறுவதாக உணர்கிறீர்கள்?
எனக்கு இரண்டுமே முழுமையான அனுபவத்தை அளிக்கிறது.
9. வாசிப்பினால் உங்களுக்கு ஏற்பட்ட முதல் தாக்கம் என்ன?
பெங்களூரில் இருந்து சென்னைக்கு மாறுதலாகி புதிய அலுவலகத்தில் வேலைக்கு சேர்ந்த நேரத்தில் நிறையவே பணிச்சுமையும், மன அழுத்தமும் இருந்தது. அப்பொழுது தான் குடும்ப நாவல்கள் எனக்கு அறிமுகமானது. மன அழுத்தத்திலிருந்து வெளி வரஉதவியது என்று சொல்லலாம்.
வாசிப்பின் தாக்கம் தான் என்னை எழுத தூண்டியது. கவிதை எழுத ஆரம்பித்து இப்பொழுது கதை எழுதி கொண்டிருக்கிறேன்.
10. வாசிப்பினால் கிடைத்த அனுபவத்தினால் உங்களது செயல்பாடு / குணாதிசயங்கள் மாற்றிக் கொண்டது உண்டா? அது என்ன?
அப்படி எதுவும் இல்லை.
11. புதிய புத்தகங்களை எப்படி தேர்வு செய்கிறீர்கள்? (அட்டை படம், தலைப்பு, ஆசிரியர், பதிப்பகம், முன்னுரை.. )
கதையின் முன்னுரையும், ஆசிரியரின் எழுத்து நடையும் வைத்து தான் புத்தகத்தை தேர்வு செய்வேன்.
12. உங்களுக்கு எந்த வகையான புத்தகங்கள் / கதைகள் மிகவும் பிடிக்கும்? (சுயசரிதம், மர்மம், திகில், சாகசம், காதல், குடும்பம், ஆன்மீகம், ரொமான்டிக், வரலாறு, புராண கதைகள், இலக்கியம் ,சரித்திரம் , etc….)
அருமையான எழுத்து நடை கொண்ட எந்த வகையான புத்தகங்களும் வாசிக்க பிடிக்கும். அந்த எழுத்து உணர்வாய் தாக்கி, நம்மை அதனுள் இழுத்துச் செல்ல வேண்டும்.
காதல், குடும்பம், மர்மம், சஸ்பென்ஸ் த்ரில்லர் வகைகள் தான் பெரும்பாலும் வாசிப்பவை.
13. “எழுத்தாளர்” என்பவர் உங்களுக்கு எப்படிபட்ட உறவாக தெரிகிறார்கள்?
என் கைப்பிடித்து அவரின் உலகுக்குள் என்னை இழுத்து செல்பவராக இருக்க வேண்டும்.
14. உங்கள் வாழ்வில் முக்கிய திருப்பம் ஏற்படுத்திய புத்தகம்/கதை என்ன?
இருள் மறைத்த நிழல் – எழுத்தாளர் தேனு
இந்த புத்தகம் தான் குடும்ப நாவலை எனக்கு அறிமுகப்படுத்திய நாவல்.
உயிரே உனதெனில் – பவித்ரா நாராயணன்.
முகநூல் குடும்ப நாவல் உலகிற்குள் என்னை இழுத்து வந்த நாவல்.
15. அன்றைய எழுத்தாளர்களுக்கும், இன்றைய எழுத்தாளர்களுக்கும் உங்களுக்கு தோன்றும் வித்தியாசங்கள் என்னென்ன?
அன்றைய எழுத்தாளர்களுக்கு இடைவிடாத தொடர் முயற்சிக்குப்பின் கிடைத்த எழுத்தாளர் என்ற அங்கீகாரம் இன்று பரந்து விரிந்த இந்த இணைய உலகில் சுலபமாகவே கிடைத்து விடுகிறது. எழுதுபவர்கள் எல்லாம் எழுத்தாளர்கள் என்னும் நிலையில், நல்ல எழுத்துக்களை தேடி கண்டுபிடித்து வாசிக்க வேண்டியதாக இருக்கின்றது. சமூகப் பொறுப்புணர்வுடன் செயல்படும் எழுத்தாளர்களின் எண்ணிக்கை வெகு குறைவாகவே இருக்கிறது. அன்று வாய்ப்பு கிடைக்க போராட வேண்டியதாகஇருந்தது. இன்று எழுத்தாளர்களே வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்டாலும் அவர்களின் எழுத்து வாசகர்களை சென்றடைய செய்ய போராட வேண்டியதாக இருக்கிறது.
16. இன்றைய எழுத்தினால் மொழி வளர்ந்து வருவதாக நினைக்கிறீர்களா?
கண்டிப்பாக வளர்ந்து வருகிறது!
17. “வழக்குமொழி, பேச்சுமொழி, வட்டார மொழி, செந்தமிழ் மொழி” இதில் எது வாசிக்கும் போது உங்களுக்கு நெருக்கமாக இருக்கிறது? எந்த வகையை அதிகமாக வாசிப்பீர்கள்?
வசனங்களில் பேச்சு மொழியும், மற்ற இடங்களில் செந்தமிழ் மொழியும் உள்ள படைப்புகளையே எனக்கு வாசிக்க நெருக்கமாக உணர்கிறேன்.
18. வரலாற்று நாவல்கள் வாசிப்பீர்களா? எந்த நாவல் மிகவும் பிடிக்கும்?
வேள்பாரி! வாசிக்க வாசிக்க செந்தமிழ் தேன் வந்து பாயுது காதினிலே என்று ரசித்து வாசித்த நாவல்.
19. இன்றைய காதல்/குடும்ப நாவல்கள் பற்றிய தங்களின் கருத்து என்ன?
லாஜிக் இல்லாத நாவல்கள், வெகுளித்தனம் என்ற பெயரில் அரைலூசுத்தனமான கதாநாயகிகளை கொண்ட காமெடி நாவல்கள், ஆன்டி ஹீரோ நாவல்கள், காதல் என்ற பெயரில் பெண்களை கொடுமைப்படுத்தும் நாவல்கள், 18 ப்ளஸ் நாவல்கள் இவற்றையெல்லாம் தவிர்த்து பார்த்தால் இன்றைய குடும்ப நாவல்களின் நிலை நன்றாக தான் இருக்கிறது. தரமான காதல்/குடும்ப நாவல்களை வழங்கும் எழுத்தாளர்கள் இருக்க தான் செய்கிறார்கள். ஆனால் அவர்கள் பிரபலமாக இல்லை. நமது ரசனைக்கேற்ற எழுத்தாளர்களை நாம் தான் தேடி தேர்ந்தெடுத்து வாசிக்க வேண்டியதாக இருக்கிறது. நல்லதரமான குடும்ப/காதல் நாவல்களுக்கு போதிய அங்கீகாரம் கிடைக்கவில்லை.
20. வித்தியாசமான கரு கொண்ட கதைகளை பிடிக்குமா? அறிவியல் சார்ந்த புத்தகங்கள்/ கதைகள் வாசிப்பீர்களா?
வாசிப்பேன்.
21. வாசிப்பதற்கு தினமும் நேரம் ஒதுக்குவீர்களா? எத்தனை நேரம்?
தனியாக நேரம் ஒதுக்குவதில்லை. அன்றாட பணிகளுக்கிடையில் இளைப்பாற கிடைக்கும் நேரத்தில் வாசிப்பேன்.
22. வாசித்த புத்தகம் / கதை பற்றி விமர்சனம் கொடுப்பீர்களா ? எழுத்தாளரின் தவறுகளை எந்த விதத்தில் சுட்டிக்காட்டுவீர்கள்?
கண்டிப்பாக விமர்சனம் அளிப்பேன். தவறென்று கிடையாது, கதையில் எனக்கு நெருடலாக தோன்றிய விஷயங்களை எழுத்தாளர்களின் மனம் நோகாது விமர்சனத்திலேயே குறிப்பிட்டு விடுவேன்.
23. உங்களுக்கு மிகவும் பிடித்த புத்தகங்கள் / கதைகள் (5)
வேள்பாரி – சு.வெ
அதில் நாயகன் பேர் எழுது – அன்னா ஸ்வீட்டி
அவனுக்கு நான் அழகு – BK
வயல்விழி – NS
அணிலாடும் முன்றில் Na Muthukumar
விடுகதையானதொடர்கதை – மது ஹனி
இவை அனைத்துமே வாசிக்கும் போதே மிகவும் பிடித்து excite ஆகி குஷியான மனநிலையில் வாசித்த நாவல்.
24. நீங்கள் வாசித்ததில் மறக்கமுடியாத / மனதை மிகவும் தொட்ட விஷயங்கள் / தகவல்கள் என்ன?
ஒரு சுவாரஸ்யமான தகவலை கூறுகிறேன்.
என்னுடைய வாசிப்பு 2016ல் தொடங்கிய காரணம் நீண்ட நேர அலுவலகப் பயணம் தான்.
தினமும் நான்கு மணி நேரம் பயணத்திலேயே செல்லும். நிறைய வாசித்தது அந்த காலகட்டத்தில் தான். அப்போது ஒரு நாள் இரவு பதினோரு மணியளவில் office cab வண்டியில் சுபஸ்ரீகிருஷ்ணவேணி அவர்களின் பேசும் பொற்சித்திரமே நாவலை வாசித்தவாறு பயணித்துக் கொண்டிருந்தேன். அந்த கதையின் இறுதியில் கதாநாயகி நாயகனிடம் தனது மனதை, அவன் மீதான தனது காதலை தெரிவிக்க இயலாத நெருக்கடியில் அதை கவிதையாய் எழுதியிருப்பாள். Just மனக்குமுறலை கொட்டும் விதமான கிறுக்கல் அது அவளுக்கு. ஆனால் அதை வாசித்து தான் கதாநாயகன் அவளின் மன உணர்வுகளை அறிந்துக் கொள்வான்.
இதை வாசித்தப்பின் நாம் ஏன் ஒரு கவிதை எழுத கூடாது என எனது அன்றைய மனநிலையை அப்படியே கவிதையாக எழுதினேன். தங்கிலிஷ்தான். அப்போது தமிழ் தட்டச்சு செய்யும் பழக்கம் கூட இல்லை. பனிரெண்டாம் வகுப்பில் தமிழ் பாடம் படித்தது. அப்பொழுது பரிட்சையில் தமிழில் எழுதியது. அதன் பிறகு கல்லூரி, வேலை என்ற அதன் ஓட்டத்தில் கிட்டதட்ட ஒன்பது வருடங்கள் கழித்து தமிழில் எழுதினேன் என்பதற்கு முக்கிய காரணம் இரண்டு வருடங்களாய் பயணத்தில் தொடர்ந்த எனது வாசிப்புமட்டுமே. அது தான் என் எழுத்தின் ஆரம்பப் புள்ளி!
25. இன்றைய எழுத்து உலகம் பற்றிய உங்களின் கருத்து என்ன?
காழ்ப்புணர்ச்சி பொறாமையற்ற, ஆண் பெண் பேதமற்ற, சண்டை சச்சரவு பொங்கல் அற்ற நேர்மறையான எழுத்து உலகமாய் இன்றைய எழுத்து உலகம் மாறினால் நன்றாக இருக்கும்.
26. அன்று முதல் இன்று வரை வெகு சில ஆசிரியர்களின் புத்தகங்கள் / கதைகள் மட்டுமே அதிகமாக வாசகர்களை அடைகிறது. பல நல்ல விஷயங்களை கூறும் புத்தகங்கள் அதிக வரவேற்பு பெறுவதில்லை. நீங்கள் அந்த எழுத்தாளர்களை கொண்டாட மறுக்கும் காரணம் என்ன ?
நான் அவ்வாறு அடையாளப்படுத்தாத நல்ல எழுத்துக்களையே தேடி வாசித்து விமர்சனம் வழங்குகிறேன். கடல் போன்று இருக்கும் கதைகளுக்கிடையில் வாசகரின் கண்களுக்கு புலப்படுவதை தான் வாசிக்க முடியும். ஆக நல்ல விஷயத்தை/ கருத்தை எழுதும் எழுத்தாளர்கள் தங்களின் கதைகளை விளம்பரப்படுத்த தயங்க கூடாது. விளம்பரப்படுத்தினால் மட்டுமே வாசர்கள் அவ்வாறான கதைகளை அறிந்து கொண்டு வாசிக்க இயலும்.
27. உங்களுக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர்கள் (அன்றைய 5வர் & இன்றைய 5வர்) ஏன் அவர்கள் எழுத்து பிடிக்கும்? அவர்களின் சிறப்பாக நீங்கள் கருதுவது என்ன?
அவ்வாறு குறிப்பிட்டு கூற இயலாது. எப்படி ஒவ்வொரு வாசகரின் ரசனையும், ஒவ்வொரு விதமோ அதே போல் தான் ஒவ்வொரு எழுத்தும் ஒவ்வொரு விதம்.
கால மாற்றத்திற்கேற்ப எழுத்தில் மாறுபாடு வந்திருந்தாலும் வாசிப்பதற்கு சுவையான எழுத்து நடை கொண்ட எவருடைய எழுத்தாக இருந்தாலும் வாசிக்க பிடிக்கும்.
28. ஒரு புத்தகத்தில் / கதையில் நீங்கள் எதிர்பார்க்கும் முக்கியமான விஷயங்கள் என்னென்ன?
தெளிவான பிழையற்ற உணர்வுப்பூர்வமான எழுத்துநடை! விறுவிறுப்பான நேர்மறையான கதையோட்டம்! அற ஒழுக்கத்தை மீறாத கதாபாத்திரங்கள், அப்படியே மீறியது போன்ற கதாபாத்திரங்களை வைத்தாலும் அதற்கு தர்க்கவியலான நியாயங்கள்! மொத்தத்தில் கண்ணியமான எழுத்து.
29. எழுத்தில் ஆண் / பெண் பேதம் இல்லை. ஆனால் மொழி ஆளுமை உள்ள எழுத்து ஆண் எழுத்தாளர்களின் எழுத்தில் உள்ளதா அல்லது பெண் எழுத்தாளர்களின் எழுத்தில் உள்ளதா? உங்களின் தனிப்பட்ட கருத்து என்ன?
கற்றலும் முயற்சியும் உள்ள எவரிடத்திலும் மொழி வசப்பட்டு விடும். இதில் ஆண் பெண் பேதமேது.
30. யாருடைய ஆட்டோகிராப் இருக்கிறது அல்லது வாங்க வேண்டும் என்று ஆசை?
அன்னா ஸ்வீட்டி, மோனிஷா, கவிஞர் மகுடேஸ்வரன் கையெழுத்தை கேட்டு வாங்கிய புத்தகங்கள் இருக்கிறது.
31. கதைகளில் எதிர்மறை முடிவுகளை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்? அதன் தாக்கம் உங்களுக்கு எப்படிபட்ட மனநிலையை கொடுக்கிறது?
பெரும்பாலும் எதிர்மறை முடிவுகள் மட்டுமல்ல எதிர்மறையாக பயணிக்கும் கதைகளையுமே வாசிக்க மாட்டேன். கண்டிப்பாக அது மனநிலையை எதிர்மறையாக மாற்றி விடும். அதன் தாக்கம் பல நாட்களுக்கு நெஞ்சில் வலியை கொடுத்து கொண்டிருக்கும். முன்பே அது எதிர்மறை என அறிந்து மனதை அதற்கு ஏற்றவாறு பழக்கி வாசிக்கும் போது அதன் தாக்கம் பெரியதாக இருந்ததில்லை. ஆனால் எதிர்பாராது கதையில் வரும் எதிர்மறை காட்சிகள் நெஞ்சை படபடக்க செய்திருக்கிறது. உதாரணம் வயல்விழியில் வரும் கதாநாயகனின் தோழன் மரணம். எனக்கு நெஞ்சு வலியே வந்தது போல் அத்தனை பாரமாக உணர்ந்தேன்.
32. ஆடியோ கதைகள் எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள் ? நீங்கள் விரும்பிய ஏதேனும் ஒரு ஆடியோ கதையை கூறுங்கள்.
ஆடியோ கதைகள் கேட்பதில் விருப்பம் இல்லை. வாசிக்கும் அளவிற்கு அது என்னை ஈர்க்கவில்லை. என் மனதினுள் ஒரு குரல் கதையை வாசிப்பதற்கும், ஒரு குரலின் மூலம் கதையை கேட்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது.
33. ஒரு கதையில் இருந்து மற்றொரு கதையின் தொடக்கம் இருப்பது பற்றி உங்கள் கருத்து என்ன ?
அது எழுத்தாளரின் விருப்பம். எதையும் சுவாரஸ்யமாக எழுதினால் கண்டிப்பாக வாசிக்கலாம்.
34. மேற்கண்ட விஷயங்கள் தவிர நீங்கள் எழுத்தாளர்களிடம் வேறு என்ன கூற ஆசைபடுகிறீர்கள் ?
கதையை கதையாக பாருங்கள் என்று கூறுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. எந்த மனநிலையில் நாம் கதையை வாசிக்கிறோம் என்பது தான் முக்கியமாய் பார்க்கப்பட வேண்டி இருக்கிறது.
பொழுதுபோக்காக வாசிக்கும் நேரம் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாத ஒரு வரி அல்லது ஒரு வாக்கியம், மிகுந்த மன உளைச்சலிலோ, குழப்பத்திலோ அல்லது வாழ்வில் பெரிய முடிவு எடுக்க வேண்டிய ஒரு நேரத்திலோ வாசிக்கும் போது எவ்விதமான தாக்கத்தை வாசிப்பவர்களுக்கு அளிக்கும் என்பதை மனதில் வைத்துக்கொண்டு எழுதுங்கள்.
உங்கள் எழுத்து பிறருக்கு நல்ல வகையில் பயன்பெறாவிட்டாலும் எவரையும் தவறான முடிவுக்கு எடுத்து செல்லக்கூடாது, தவறான உதாரணத்திற்கு உங்களின் கதையை பயன்படுத்திவிட கூடாது என்பதை மனதில் வைத்து எழுதுங்கள் என்பது மட்டுமே எனது வேண்டுகோள்.
இந்த வாய்ப்பளித்த ஆலோன் மகரி சகோதரி அவர்களுக்கு பேரன்பும் நன்றிகளும்!
ரொம்ப அழகான நேர்காணல் சிஸ் உங்க சிரிப்பை போலவே.. ஒவ்வொரு பதிலும் நீங்க சொல்லி இருக்கும் விதமும், அதை நீங்க பார்த்த கண்ணோட்டமும் ரொம்ப அருமையா இருந்தது.
எந்த வெளி பூச்சும் இல்லாம சொன்ன விஷயங்கள் எல்லாம் ரொம்ப பிடிச்சது. உங்க எழுத்து பயணம் தொடங்கிய விதம் ரொம்ப அழகா சொல்லி இருந்தீங்க சிஸ்.
எழுத்தை தேடி வாசிக்கும் உங்க தேடல் எப்பவும் தொடர்ந்து கொண்டே இருக்கணும்.
உங்க குரலிலேயே எப்பவும் வாசிங்க .. தொடர்ந்து எழுதுங்க, தொடர்ந்து வாசிச்சிகிட்டே இருங்க ..
வாசிப்பை நேசிப்போம் ..