மூங்கில் தோட்டம் ….
மூலிகை வாசம்….
நிறைஞ்ச மௌனம்….
நீ பாடும் கீதம்…..
எனப் பாடியபடியே அவள் நடந்துக் கொண்டிருந்தாள்.
“கொஞ்சம் பாடறத நிறுத்துடி… எதாவது பேய் வந்துட போகுது”, என அவளை அதட்டியப் படி பின்னே வண்டியைத் தள்ளிக்கொண்டு வந்தாள் அவளின் தோழி மயிலினி.
“நான் பாடினா உனக்கு பொறாமையா இருக்கா மயிலு ….”, என வம்பிலுக்கும் எண்ணத்தில் பேச்சை ஆரம்பித்தாள் ருத்ரஶ்ரீ.
“வேணா ஶ்ரீ. வாய மூடிட்டு நட… அந்த மரத்துகிட்ட போனதும் நீ தான் வண்டிய தள்ளணும்”, என மூச்சு வாங்கத் தள்ளிக்கொண்டு வந்தாள் மயிலினி.
“இந்த பரந்த நிலபரப்புல பேசக் கூட எனக்கு உரிமை இல்லையா? அய்யகோ…. இந்த கொடுமைய கேட்க யாருமே இல்லையா”, எனத் தன் வழக்கமான டிராமாவை ஆரம்பித்தாள் ருத்ரஶ்ரீ.
“இதுக்கு மேல எதாவது பேசின…. மரியாதை கெட்றும் பாத்துக்க… மூடிட்டு தள்ளிட்டு வா … இந்தா பிடி …. வச்சிருக்கா பாரு வண்டிய…. இதுல லாங் டைரவ் ஒன்னு தான் கேடுன்னு தூக்கிட்டு வந்துட்டு உயிரை வாங்கறா… எல்லாம் என் நேரம்… வந்து சேர்ந்தேன் பாரு இவ இருக்கற வீணா போன ஆபீஸ்ல…. “, எனப் புலம்பியபடி வண்டியை நிறுத்திவிட்டு முன்னே நடக்க ஆரம்பித்தாள் மயிலினி.
“பேபி…. அடுத்த வீக் எண்டும் நாம இதே மாதிரி லாங்ட்ரைவ் போலாமா…………..”, என ருத்ரா கண்ணடித்துக் கேட்க மயிலினி
காலில் இருக்கும் செருப்பைக் கழற்றி அவள் மீதெறிந்தாள்.
“மயிலு பேபி …. இப்படில்லாம் செய்யக்கூடாது டா…. இட்ஸ் வெரி பேட் ஹேபிட் யூ நோ”, என ருத்ரா மீண்டும் கலாய்த்தாள்.
“மயி****…… தள்ளிட்டு வந்து சேரு எரும… இன்னும் நாலு கி.மீ நடந்தா தான் மெயின் ரோடே வரும்….. பேசாம வந்து தொலை”, மயிலினி.
“ஏய்…என்ன நீ ? என்ன பாடவும் விடமாட்டேங்கற…. பேசவும் விடமாட்டேங்கற….. எதாவது வாயிக்கு வேலை குடுத்தா தான் அலுப்பு தெரியாம இருக்கும்”, என ருத்ரஶ்ரீ கோபமாக முகத்தை வைத்துக்கொண்டுக் கூறினாள்.
“உன் வாயால தான் இப்ப இப்படி நடுராத்திரில நடு காட்ல மாட்டிகிட்டு முழிக்கறோம். அது கொஞ்சமாது உனக்கு தெரியுதா இல்லையா…. ஓயாம வாய் ஆடியே இருக்கு… என்ன டிசைன்னு தான் உன்ன பெத்தாங்களோ தெரியல….”, மயிலினி கால் வலி மிகுதியால் ருத்ரஶ்ரீயை வறுத்தெடுத்தாள்.
“அது நீயே எங்கப்பாம்மா கிட்ட கேட்டுக்க… இப்ப நான் பேசவா ? பாடவா?”, ருத்ரஶ்ரீ தன் கேள்வியில் குறியாக நின்றாள்.
“வேணாம் டி .. நான் பத்ரகாளி ஆகிடுவேன் அப்பறம்….. முன்ன நட…. சத்தம் போடாம நடந்தா நான் வருவேன் இல்லையா இங்கையே உட்கார்ந்துப்பேன்…”, மயிலினி மிரட்டினாள்.
“நீ உட்காந்தா நானும் படுத்துப்பேன். இட்ஸ் ஆல்ரெடி 12.30 AM…. எனக்கு தூக்கமா வருது மயிலு பேபி”, எனச் சிறுகுழந்தைப் போல சிணுங்கினாள் ருத்ரஶ்ரீ.
“என்னை கொல்லாத டி…. உன் கால்ல கூட விழறேன் தயவு செஞ்சு கொஞ்ச நேரம் பேசாம வா….”, மயிலினி கெஞ்சினாள்.
பாவம் மாலையில் இருந்து வண்டியைக் கொஞ்ச நேரத்திற்கு ஒருவர் என ஆள்மாறி ஆள் தள்ளிக்கொண்டு வந்துக் கொண்டிருக்கிறன்றனர் இருவரும்.
பசி ஒரு பக்கம், உடல் வலி ஒரு பக்கமென வாட்டி எடுத்தது.
இருவரும் அலுவலக நண்பர்களுடன் வார இறுதி நாட்களை சந்தோஷமாக அனுபவிக்க ஊரைத் தாண்டி அறுபது கி.மீ தொலைவில் உள்ள நீர்வீழ்ச்சிக்கு வந்திருந்தனர்.
இவர்கள் அலுவலக நண்பர்கள் தவிர இன்னும் வேறு சிலரும் அங்கே வந்திருந்தனர்.
அதில் குடித்துவிட்டு கலாட்டா செய்து கொண்டிருந்த ஒருவன் இவர்களிடம் வம்பிலுக்க ஆரம்பித்தான்.
ருத்ரஶ்ரீ முதலில் கண்டும் காணாமல் இருந்தவள் அவனின் அடாவடி அதிகமாகவும் , அதுவும் மயிலினியின் கைப்பிடித்து இழுத்ததும் அவனை அடிக்க ஆரம்பித்துவிட்டாள்.
இரு குழுக்களுக்குமிடையே கலவரம் வர மற்றவர்கள் வந்து ஒருவாராக சமாதானம் செய்துக் குடித்தவர்களை அனுப்பிவைத்தனர்.
“ஹேய்….. அறிவில்ல…. அவன் தான் குடிச்சி இருக்கான்ல… இப்படிதான் அவன அடிப்பியா…. நீ என்ன அவ்ளோ பெரிய ஆளா….. நாலற அடி இருந்துட்டு இந்த குதி குதிக்கற…. அவனுங்க கத்தி எடுத்திருந்தா என்ன ஆகறது? “,என அலுவலக தோழி ஒருத்தி தாறுமாறாகத் திட்டினாள்.
“இவ்ளோ நேரம் வாய மூடிட்டு இருந்துட்டு இப்ப ஏன் தொறக்கற ப்ரியா? அவன் அரைமணி நேரமா சலம்பிட்டு இருந்தான்ல அப்ப பேச வேண்டியது தானே?”, என ருத்ரஶ்ரீயும் எகிறினாள்.
“பேசாத நீ… இதுக்கு தான் நீ இருந்தா நான் வரமாட்டேன்னு சொன்னேன். இவளுங்க தான் கம்பெல் பண்ணி வரவச்சிட்டாங்க….
சே…. நிம்மதியா கொஞ்ச நேரம் இருக்க விடறியா நீ? ஆபீஸ்லயும் இம்சை இங்கையும் இம்சை….”, எனக் கரித்துக் கொட்டினாள் ப்ரியா.
“நானா உன்ன இருக்க சொல்றேன்… போ….”, என ருத்ரஶ்ரீ திமிராகச் சிரித்தபடிக் கூறினாள்.
“ஹே… வாங்கடி போலாம்… இவ இருக்கற இடத்துல இனிமே நான் இருக்க மாட்டேன்”, எனப் ப்ரியா கோபத்தில் கத்திவிட்டுக் கிளம்பத் தயாரானாள்.
“ஹேய் .. ப்ரியா… இருடி…. எல்லாரும் ஜாலியா இருக்க தானே வந்தோம்…. அவன் குடிச்சிட்டு பிரச்சினை பண்ணதுக்கு தானே அவ அவன அடிச்சா…. இதுக்கு ஏன் இவ்ளோ கோவப்படற… வா பசங்க கொஞ்ச நேரத்துல வந்துடுவாங்க.. அதுவரைக்கும் பொறுத்துக்க.. அப்பறம் நாம வேற பக்கம் போகலாம்”, என உடனிருந்தவள் அவளைச் சமாதானம் செய்தாள்.
“முடியாது. நான் போறேன். வர்ற இஷ்டமிருக்கறவங்க வாங்க….”, எனக் கார் இருக்குமிடம் சென்றாள்.
“என்னடி இது ? இவளுங்க இரண்டு பேரையும் வச்சிட்டு நாம நிம்மதியாக இருக்க முடியாது…. அவ பாட்டுக்கு கார் எடுத்துட்டு போயிட்டா நாம எப்படி போறது? இந்த இடத்துக்கு எந்த பஸ்ஸும் வராது”, மற்றவள்.
“பேசாம நாமலும் கிளம்பலாம். அதான் பசங்க வராங்கள்ல மயிலினி ருத்ராக்கு துணையா யாரையாவது வர சொல்லிடலாம்”, முந்தினவள்.
“சரி.. கிளம்பலாம்…. வாங்க”, என மயிலினி அருகில் சென்றவர்கள் ப்ரியாவுடன் தாங்கள் கிளம்புவதாகவும் , நீங்கள் இருவரும் வந்த ஸ்கூட்டியில் பத்திரமாகச் சிறிது நேரத்தில் திரும்பிவிடுங்கள் எனக் கூறிக் கிளம்பிவிட்டனர்.
மயிலினி ருத்ரஶ்ரீயை முறைத்துவிட்டு வேறு பக்கம் சிறிது தூரம் நடந்துவிட்டு வந்தாள். ருத்ரஶ்ரீ தனது மொபைலில் வித விதமாக மயிலினி பின்னாலேயே நடந்து, அவளையும் இயற்கையையும் போட்டோ எடுத்துக்கொண்டு இருந்தாள்.
“மயிலு பேபி…. வா இந்தா இத சாப்பிடு…”, ருத்ரா அழைக்கவும் முறைத்தபடியே அவள் கொடுத்ததைச் சாப்பிட்டுவிட்டு இருவரும் கிளம்பினர்.
“ஹே ப்ரியா … பசங்களுக்கு கால் போகமாட்டேங்குது…. நீ செஞ்சியா?”, என அலுவலகத் தோழி கேட்டாள்.
“அவனுங்கள இங்க வரவேணாம்னு சொல்லிட்டேன். மகாபலிபுரம் போயிட்டாங்க… நமக்கு அங்க ரூம் ரெடி செஞ்சிருப்பாங்க
இந்நேரம்”, எனக் குரூரமாகச் சிரித்தபடிக் கூறினாள் ப்ரியா.
“ஹேய்… அவளுங்க இரண்டு பேர் மட்டும் தான்டி அங்க இருக்காங்க.. துணைக்கு யாராவது வேணும்ல… ஏன் இப்படி பண்ண?”, என மற்றவள் கோபமாகக் கேட்டாள்.
“என்னை என்ன பேச்சு பேசுறா அவ… அதான் தனியா இருக்கட்டும்னு விட்டேன்… எப்படி அவளுங்க ஊர் போய் சேருவாளுங்கன்னு பாக்கறேன்”, என ஒருவிதக் குரூரத் தொனியில் கூறினாள் ப்ரியா.
“என்னடி பண்ண அப்படி ?”, மற்றவள் கவலையுடன் கேட்டாள்.
“பெட்ரோல் பைப் புடுங்கிட்டேன்… அவளுக வண்டில இருந்ததையும் எடுத்துட்டு வந்துட்டேன்”, எனச் சிரிப்புடன் கூறினாள் ப்ரியா.
“ஏய்… ஏண்டி இப்படி பண்ண ? பாவம் டி… வண்டிய திருப்பு….”, என முன்னவள் கோபமாகக் கூறினாள்.
“வாய மூடுங்க எல்லாரும்…. ஆபீஸ்ல, இங்கன்னு எங்க போனாலும் அந்த மயிலினி, ருத்ரஶ்ரீ இம்சை தாங்கல…. உங்க எல்லாரோட மொபைல் பர்ஸ் எல்லாமே இப்ப என்கிட்ட தான் இருக்கு. கம்முன்னு வந்தா ஊருக்குள்ள விடுவேன் இல்லைன்னா நடுகாட்ல இறக்கிவிட்டுட்டு போயிட்டே இருப்பேன் … “, ப்ரியா மிரட்டவும் அனைவரும் கப்சிப்பென வாயை மூடிக்கொண்டனர்.
“மயிலு பேபி முதல்ல நான் கொஞ்ச தூரம் ஓட்றேன், அப்பறம் நீ ஓட்டு… ஓக்கே வா”, என ருத்ரா கூறிவிட்டு வண்டியை ஸ்டார்ட் செய்தாள்.
வண்டிக் கிளம்பிப் பத்து நிமிடத்தில் நின்று விட்டது.
“பேபி இறங்கு பெட்ரோல் காலி போல… உள்ள பாட்டில் எடு”, எனக் கூறிவிட்டு பெட்ரோல் டேங்க் ஓபன் செய்தாள்.
“எங்க இருக்கு?”, மயிலினி.
“ஹெல்மெட் அடில தான் வச்சேன் மயிலு”, ருத்ராக் கூறியபடியே துலாவினாள்.
காலில் ஈரம் படக் குனிந்துப் பார்த்தவள், பெட்ரோல் பைப் ஓட்டை செய்யப்பட்டு இருப்பதைக் கண்டு ப்ரியாவின் வேலை என்பதை உணர்ந்தாள்.
“இப்ப என்ன பண்றது ? கொஞ்ச முன்ன கிளம்பி இருந்தா அந்த செங்கல்பட்டு கூட்டத்தோட கிளம்பி இருக்கலாம். இப்ப இங்க யாருமே இல்லையே “, என யோசித்தபடி நின்றாள் ருத்ரஶ்ரீ.
“என்னாச்சி?”, மயிலினி.
“பெட்ரோல் ட்யூப் ஓட்டை ஆகி இருக்கு. எக்ஸ்ட்ரா பெட்ரோலும் காணோம்”, என முகத்தைப் பாவமாக வைத்தபடிக் கூறினாள் ருத்ரஶ்ரீ.
மயிலினி அதிர்ச்சியில் மீண்டும் என்னவென்றுக் கேட்டாள்.
“பெட்ரோல் டேங்க்ல இருந்து இன்ஜின் போற பைப்ல யாரோ ஓட்டை போட்டுட்டாங்க பேபி. அப்பறம் நான் வாங்கி வச்ச எக்ஸ்டரா பெட்ரோலும் காணோம்”, எனப் பள்ளிக் குழந்தைகள் கூறுவதைப் போலக் கூறினாள் ருத்ரஶ்ரீ.
“என்னடி சொல்ற ? நாம எப்படி இப்ப போறது?”, என மயிலினி பதற்றமாகக் கேட்டாள்.
“அது தான் நானும் யோசிச்சிட்டு இருக்கேன் மயிலு பேபி….. கொஞ்ச நேரம் முன்ன கிளம்பி இருந்தா கடைசியா போனவங்க கிட்ட லிப்ட் கேட்டு போயிருக்கலாம்.. இப்ப இங்க யாரையும் காணோம்… யாராவது இருக்காங்களான்னு தேடிபாக்கலாம் வா”, என ருத்ரஶ்ரீ மயிலினியை அழைத்தாள்.
மயிலினி பயத்தில் அழ ஆரம்பித்துவிட்டாள். கண்களில் நீர் வழிய அதிர்ச்சியில் அப்படியே நின்றிருந்தாள்.
“மயிலு… மயிலு…. பேபி… பேபி…. என்னாடா ஆச்சி உனக்கு?”, என ருத்ரா பக்கம் வந்து அவள் கன்னம் தட்டிக் கேட்டாள்.
“எரும… பன்னி … நாயே… பேயே…. பிசாசே…. ஏன்டி இப்படி இருக்க நீ? உன்னால இப்ப நடுகாட்ல திக்கு தெரியாம நிக்கறோம் பாரு….. “, என மயிலினி அவளை அடித்தபடியே அழுது அரற்றினாள்.
“இதான் திக்கு பேபி…. இந்த பக்கமா போனா மெயின் ரோட்டுக்கு போயிடலாம்…. அப்பறம் வண்டிய சரி பண்ண விட்டுக்கலாம், டாக்ஸி புக் பண்ணிக்கலாம்… நோ வொர்ரி பேபி … “,என ருத்ரா அடிவாங்கியபடியே மயிலினி கண்களைத் துடைத்துக்கொண்டே ஒரு பாதையையும் காட்டினாள்.
“ஏன்டி … ஏன் இப்படி? வாய மூடிட்டு கம்முன்னு இருந்திருந்தா இப்படி ஒரு நிலைமை வந்திருக்குமா ? ஏன் இப்படி இருக்க? எல்லாம் அவளால தான்…. அவ வேணும்னே தான் செஞ்சிட்டு போயிருக்கா…. “, என மயிலினி அழுதபடியே தேம்பித் தேம்பிக் கூறினாள்.
“நான் என்ன பண்ணட்டும். அவன் குடிச்சுட்டு வந்து கலாட்டா பண்ணத தான் தட்டி கேட்டேன். அதுக்கு அந்த மினுக்கி ஓவரா பிலுக்கிட்டு போறா… நானா வம்புக்கு போனேன்?”, என ருத்ரஶ்ரீ மயிலினி அடித்த இடத்தைக் கைகளால் தேய்த்தபடிக் கூறினாள்.
“இப்ப எப்படி நாம வீட்டுக்கு போறது?”, அழுதபடியே கேட்டாள் மயிலினி.
ருத்ரஶ்ரீ மயிலினியை அன்பு பொங்கும் பார்வைப் பார்த்துவிட்டு அருகில் அழைத்துக் கட்டிக்கொண்டு முதுகைத் தடவி விட்டாள்.
“ரிலாக்ஸ் பேபி….. டென்சன் ஆகாத…. நாம சமாளிக்கலாம்…. “, என ருத்ரஶ்ரீ ஆறுதல் கூறினாள்.
“எப்படி சமாளிப்ப? பாரு இருட்டற நேரம் வந்துரிச்சி…. இங்க யாரையுமே காணோம்… வண்டியும் ஓடாது…. நாம எப்படி வீட்டுக்கு போறது? “, மயிலினி வரிசையாக இருக்கும் பாதகங்களைக் கூறினாள்.
“நீ சொன்ன எல்லாமே சரிதான் பேபி. நீ விட்ட விஷயத்த நான் சொல்லவா? அதோ அங்க ஒரு செக்போஸ்ட் தெரியுதே அங்க ஒரு ஆளு இருப்பாரு. நாம இப்படியே ஆளு மாத்தி ஆளு வண்டிய தள்ளிட்டு மெயின் ரோட் வரை போயிட்டா அதுக்கப்பறம் ஈஸியா மத்தத பண்ணிக்கலாம். வண்டில தண்ணி ஸ்நாக்ஸ் எல்லாமே இருக்கு… இதுக்கு மேல என்ன பேபி பிரச்சினை… நான் இருக்கேன்ல பயப்படாத மயிலு ……சரியா……”, எனச் சிறுக்குழந்தைக்கு கூறுவதைப் போல கூறிவிட்டுச் செக்போஸ்ட் நோக்கி நடக்க ஆரம்பித்தனர் இருவரும்.
அதன் அருகே சென்றதும், “சார்….. உள்ள யாராவது இருக்கீங்களா?”, என ருத்ரஶ்ரீ குரல் கொடுத்தாள்.
தட்டுத்தடுமாறி ஒரு தாத்தா எழுந்துப் பார்த்தார்….
“யாரும்மா நீங்க? என்ன வேணும்?”, தாத்தா.
“தாத்தா…. இங்க நீர்வீழ்ச்சி வந்தோம்… வண்டி ரிப்பேர் ஆகிரிச்சி…. பக்கத்துல எதாவது மெக்கானிக் ஷெட் இருக்கா? வேற எதாவது வண்டி வருமா இந்த பக்கம்?”, ருத்ரஶ்ரீ.
“இந்நேரத்துக்கு எதுவும் வராது… இந்த பக்கமா நடந்து போனா பத்து கி.மீ ல மெயின் ரோடு வரும். அங்க இருந்து கொஞ்ச தூரத்துல பெட்ரோல் பங்க் இருக்கும்… அங்க போய் விசாரிங்க…..”, எனக் கூறிவிட்டு மீண்டும் படுத்துக்கொண்டார்.
“சரி தாத்தா…. தேங்க்ஸ்… நல்லா தூங்குங்க….”, எனக் கூறிவிட்டு மென்னகையுடன் திரும்பினாள் ருத்ரஶ்ரீ.
மயிலினி முறைத்தபடி நின்றிருந்தாள்.
“அச்சச்சோ….. இவ பக்கத்துல இருக்கறத மறந்துட்டேனே… என்ன சொல்லலாம்? நாம சிரிச்சதுக்கும் தனியா அடிப்பாளோ ?”, எனத் தனக்குள் பேசிக்கொண்டே மயிலினியைப் பார்த்தாள்.
ஆனால் மயிலினி எதுவும் பேசாமல் வண்டியைத் தள்ளிக்கொண்டு முன்னே சென்றாள்.
தன் மொபைல் பார்த்தவள் சுத்தமாக டவர் இல்லாத்து கண்டு பயம் கொண்டாள். ருத்ரஶ்ரீ சற்று நேரம் அமைதியாக இருந்து தன்னைத் திடப்படுத்திக் கொண்டாள். எப்படியாவது பத்திரமாக இருவரும் ஊர் திரும்ப வேண்டும் என கடவுளை நினைத்துவிட்டு, “பேபி…. மயிலு பேபி…..”, ருத்ரஶ்ரீ கொஞ்சலாக அழைத்தபடிப் பின்னே நடந்தாள்.
“நான் கொஞ்ச நேரம் தள்ளிட்டு வரேன். நீ கொஞ்ச நேரம் தள்ளு…. “, என மயிலினி அவள் முகம் பார்க்காமலே கூறினாள்.
அவள் திரும்பாமல் பேசுவதிலேயே அவளின் கோபத்தை உணர்ந்த ஶ்ரீ , ” மயிலு பேபி….. நீ சொல்றது எப்படி இருக்கு தெரியுமா? ஒரு பையன நாம இரண்டு பேரும் மாத்தி மாத்தி தள்ளிட்டு போற மாதிரி இருக்கு”, எனக் கூறித் தயாராக அடியில் இருந்து தப்பிக்கக் கைகளைக் குறுக்க வைத்துக்கொண்டு நின்றாள்.
“கருமம்… கருமம்….. பேச்ச பாரு எரும எரும…. கொஞ்சமாது உனக்கு கூச்சம் வெட்கம் இருக்கா? இப்படியா பேசுவ? நாராசமா இருக்கு….. வாய மூடு”, என மயிலினி அவளை அடித்துவிட்டு அவளது முகத்தைப் பார்த்தாள்.
ருத்ரஶ்ரீ வாயிற்குள்ளே சிரிப்பை அடக்கியபடி நின்றிருந்தாள்.
மயிலினி ஶ்ரீயின் முயற்சிப் புரிந்து சிரிக்கவும், ஶ்ரீயும் அவளைக் கட்டிக்கொண்டாள்.
இருவரும் எத்தனைச் சண்டை போட்டாலும் ஒருவரை ஒருவர் பாதுகாப்பதிலும் , உதவி செய்வதிலும் விட்டுக்கொடுக்காமல் இருப்பர்.
“சரி இந்தா… இந்த பேக்ல கிட்கேட் இருக்கு எடு…. சாப்பிட்டுட்டே நடக்கலாம்”, என மயிலினி தன் ஹேண்ட்பேக்கைக் கொடுத்தாள்.
“ஹே…. வாவ்…. கிட்கேட்….. “, எனத் துள்ளியபடி எடுத்துச் சாப்பிட்டுக் கொண்டே இருவரும் கதைபேசியபடி நடந்தனர்.
மொபைல் பாட்டுப் பாடிக்கொண்டே வந்ததில் முழுதாய் தன் ஜீவனை இழந்து அணைந்திருந்தது.
“மயிலு பவர்பேங்க் கொண்டு வந்தியா ? “, எனக் கேட்டாள் ஶ்ரீ.
“இல்ல ஸ்ரீ நான் மொபைலே எடுத்துட்டு வரல”, என மயிலினி கூறவும் தலையில் கைவைத்து அமர்ந்துவிட்டாள் ஶ்ரீ.
“அந்த டார்ச்சும் செல்லும் எடுத்து மேல வச்சிக்க பேபி”,எனக் கூறிவிட்டு வண்டியை தள்ளியபடி நடந்தாள் ஶ்ரீ..
இரண்டு மணி நேர நடைக்குப் பின் ஒரு இடத்தில் பாதை மூன்றாகப் பிரிந்தது.
எந்த பக்கம் செல்வதெனப் புரியாமல் இருவரும் யோசித்தப்படிச் சிறிது நேரம் அமர்ந்தனர்.
“ஶ்ரீ….. எந்த வழியா இருக்கும்? ஏழு மணி ஆகப்போகுது “, மயிலினி கால்களை அழுத்திவிட்டபடிக் கேட்டாள்.
“தெரியல… எதாவது போர்ட் இருக்கான்னு பாக்கலாம் பேபி…. “, என ருத்ரஶ்ரீ சுற்றும்முற்றும் நடந்து ஆராய்ந்தாள்.
ஒரு இடத்தில் அந்த வனத்தின் வரைபடம் இருந்தது. ஆனால் முழுதாய் எழுத்துக்கள் புரியாதபடி ஆங்காங்கே அழிந்திருந்தது.
“பேபி நாம நேரா போனா சரியா இருக்கும்னு நினைக்கறேன்”, என தன் யூகத்தைக் கூறினாள் ருத்ரஶ்ரீ.
“இல்ல .. வலது பக்கம் தான் போகணும்…. நாம வரப்ப இப்படி தான் வந்தோம்…. எனக்கு நியாபகம் இருக்கு”, மயிலினி.
“இல்ல பேபி… நேரா வந்த நியாபகம் தான் எனக்கு இருக்கு”, ருத்ரஶ்ரீ சந்தேகமாகக் கூறினாள்.
“இல்ல… ரைட் சைட் ரூட் தான்… வா போலாம் “, என முன்னே நடந்தாள் மயிலினி.
“இல்ல பேபி …..”, என ருத்ரஶ்ரீ மறுக்க மறுக்க மயிலினி அந்த பக்கமே நடந்துச் சென்றாள்.
ருத்ரஶ்ரீ க்கும் சரியாக பாதை நினைவில்லாததால் அவள் பின்னாலேயே நடக்க ஆரம்பித்தாள்.
இரண்டு மணி நேரம் இன்னும் நடந்தும் காட்டிலேயே சுற்றிக்கொண்டு இருந்தனர்.
9 மணி ஆகியும் மெயின் ரோட்டை அடைய முடியவில்லை.
“சே….. எவ்வளவு நேரம் இன்னும் ஆகுமோ தெரியலியே…. “, எனப் புலம்பியபடி மயிலினி ஒரு இடத்தில் அமர்ந்துக் கொண்டாள்.
ருத்ரஶ்ரீ டக்கென எழுந்து எதிர்பக்கமாக ஓட ஆரம்பித்தாள். அவள் ஓடுவதைக் கண்டு மயிலினியும் வண்டி கீழே புதரில் விழுவது பார்க்காமல் அவள் பின்னாலேயே ஓடினாள்.
தூரத்தில் ஆட்கள் பேசும் சத்தம் கேட்டதும், அமைதியாக ஒரு இடத்தில் நின்று அவர்கள் என்ன செய்கிறார்கள் எனப் பார்க்க ஆரம்பித்தாள்.
மயிலினி சத்தமாக அவளை அழைக்கவும் அவளின் வாய்மூடி சைகை மூலம் ஆட்களைக் காட்டினாள்.
ஏதோ தவறான செயல் செய்பவர்கள் போலத்தான் அவர்களது நடவடிக்கை இருந்தது.
மயிலினி மெதுவாக,” நாம அவங்க கிட்ட லிப்ட் கேட்க ஏன் இப்படி மறைஞ்சு நிக்கணும் ஶ்ரீ? “, எனத் தன் சந்தேகத்தைக் கேட்டாள்.
ஶ்ரீ அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு, “நாம லிப்ட் கேக்க வரலை பேபி… அவங்க நல்லவங்களா இல்லையான்னு பாக்க தான் வந்தோம்…. உனக்கு அவங்கள பாத்தா என்ன தோணுது? “, எனச் சத்தம் அதிகம் வராதக் குரலில் கேட்டாள்.
“எதையோ தெரியாம தூக்கிட்டு போறமாதிரி தோணுது ஶ்ரீ”, மயிலினி தன் ஊகத்தைச் சொன்னாள்.
“உன்ன பாத்தாலும் உன்னையும் தூக்கிட்டு போயிடுவாங்க… போறியா மயிலு பேபி”, எனக் கண்ணடித்துக் கேட்டாள் ஶ்ரீ.
மயிலினி அவளை முறைக்கவும் அங்கிருந்து சத்தம் வராமல் திரும்ப நினைத்தவர்கள் பின்னே சற்று தூரத்தில் இருவர் வருவதுக் கண்டு புதர் நோக்கி ஓடி மறைந்துக் கொண்டனர்.
“மாப்ள…. இந்த தடவ சரக்கு எல்லாம் இந்த பக்கம் அனுப்பவேணாம்…. பின்னாடி ஒரு வழி இருக்கு. அங்க இருந்து எட்டு கி.மீல மெயின் ரோட் இருக்கு. அதுல ஏறி இடது பக்கம் ஐஞ்சாவது கி.மீல சர்வீஸ் ரோட்ல திரும்ப சொல்லிடு…. ஐயா இடம் மாத்தி அனுப்ப சொல்லி இருக்காரு.. புரியுதா…. “, என ஒருவன் பேசியபடியே வந்தான்.
அவர்கள் இருவரும் மறைந்திருக்கும் புதருக்கருகில் வந்து நின்று, “எது… இப்ப ஒரு ரோட்ட காட்டினியே இந்த மரத்துக்கு அந்தாண்ட.. அதுவா?”, மற்றவன்.
“ஆமா மாப்ள…. அந்த ரோடு கொஞ்ச தூரத்துல வலது பக்கம் திரும்பும். அதுல அப்படியே நேரா போனா மெயின் ரோடு தான்..”, முன்னவன்.
ருத்ரஶ்ரீ நன்றாகப் பாதையைக் கவனித்துக் கொண்டாள். இந்த மரத்தைத் தாண்டி வரும் பாதையில் தான் அவர்கள் வந்தது.
“வலக்கமா நீர்வீழ்ச்சில இருந்து நேர் ரோடு தானு சொல்லுவ…. ஏன் இந்த பக்கம் போக சொல்ற மச்சி…”, மற்றவன்.
“நீர்வீழ்ச்சி நேர் ரோடு இன்னிக்கு ஏதோ பிரச்சினைல அடைச்சிட்டாங்களாம் டா. அதான் இந்த சுத்து பாதை. நேரா போனா பத்து கி.மீ வலது பக்கம் போற பாதை தான் நாம நிக்கறது. அதான் சரக்கு இங்கயே ஏத்த வரசொல்லிட்டேன். இது கூட பத்து ஆகும்…. சரி வா… சரக்க ஏத்தி இருப்பானுங்க…. வண்டிய இந்த மரத்து நடுவுல விட்டு அந்த பாதைக்கு ஏத்திடலாம்….”, எனப் பேசியபடியே அவர்கள் முன்னே நடந்துச் சென்றனர்.
மயிலினி எழ எத்தனிக்கும் போது ஶ்ரீ இழுத்து அமர வைத்தாள்.
“இரு அவங்க போனதுக்கு அப்பறம் நாம போலாம்”, எனக் கூறி அவர்கள் செல்லும் வரைக் காத்திருந்தாள்.
அரை மணி நேரத்தில் அந்த வண்டி கிளம்பி ஆட்கள் சென்றதும் மெல்ல எழுந்து சுற்றும் முற்றும் பார்த்து விட்டு தங்கள் வண்டி நோக்கி நடந்தனர்.
அந்த வேன் தடம் பிடித்தபடியே மெயின் ரோடு சென்று விடலாம் என வீழ்ந்துக் கிடந்த வண்டியை எடுத்து நிறுத்தி டார்ச் லைட்டில் செல் மாற்றி வண்டியின் முன்னே சொருகியபடி நடக்க ஆரம்பித்தனர்.
வெகுநேரமாக மயிலினி அமைதியாக வரவும் ஶ்ரீ அவளை அழைத்தாள்.
“மயிலு…. மயிலு பேபி… ஏன் சைலண்ட்ஆ வர?”, ஶ்ரீ.
“அவங்க அந்த வண்டில என்ன கொண்டு போயிருப்பாங்க ஶ்ரீ? “, கண்களில் கலக்கத்துடன் கேட்டாள் மயிலினி.
“தெரியல பேபி…. ஏதோ தப்பான பொருள் தான் போயிருக்கும்னு நினைக்கிறேன்…. இந்த நேரத்துல யாரு இங்க இருந்து போகப்போறா…. எப்படியோ நமக்கு மெயின் ரோட்டுக்கு ரூட் சொல்லிட்டு போனதும் இல்லாம வண்டி டயர் அச்சும் விட்டுட்டு போயிட்டான். நாம சீக்கிரம் மெயின் ரோடு போயிடலாம் வா”, என ஶ்ரீ மயிலினியை சமாதானம் செய்தபடி ஏதேதோ பேசி
அவளின் எண்ணவோட்டத்தைத் திசைத்திருப்பினாள்.
“நீ சொன்ன மாதிரி நேரா போயிருந்தா இந்நேரம் வீட்டுக்கு போயிருக்கலாம்ல….”, மயிலினி தன் தவறால் தான் இத்தனை நேரமாகக் காட்டிலே அலைகிறோம் என்று உணர்ந்து வருத்தமாகக் கூறினாள்.
“அதுல்லாம் ஒன்னுமில்ல பேபி. இந்த காட்ட இன்னிக்கு சுத்திபார்க்கணும்னு விதி இருக்கு அதான்…. வா ஜாலியா பாட்டு பாடிட்டே போலாம்”, என அவளை சமாதானம் செய்தாள் ஶ்ரீ.
“பசிக்குது ஶ்ரீ”, என மயிலினி குழந்தைக் குரலில் கூறவும், தன்னிடம் மீதமிருந்த பிஸ்கட்டை அவளுக்கு கொடுத்துவிட்டு, தான் தண்ணீர் மட்டும் கொஞ்சமாக அருந்திவிட்டு வண்டியைத் தள்ள ஆரம்பித்தாள்.
மயிலினி அத்தனை பசியிலும் இரண்டு பிஸ்கட் அவளுக்குக் கொடுத்துவிட்டே சாப்பிட்டாள்.
பின்னர் டிக்டேக் எடுத்து வாயில் போட்டுக்கொண்டே இருவரும் இத்தனை நேரம் வண்டியை மெல்ல மெல்லத் தள்ளிக்கொண்டு வந்தனர்.
அவர்களது நல்ல நேரம் எந்த மனித மிருகத்தின் கண்களிலும் சிக்காமல் இருவரும் இத்தனை நேரம் கடந்து வந்திருந்தனர்.
இன்னும் சிறிது தூரத்தில் ஊர் கண்ணில் படும் என்கிற நம்பிக்கையில் பயணத்தைத் தொடர்ந்தனர்.
சுமாராக மணி 2 தொடும் வேலையில் மெயின் ரோட்டை அடைந்து விட்டனர் இருவரும்.
“அப்பாடா…. மெயின் ரோட் வந்தாச்சி”, என மயிலினி ஆயாசமாகக் கூறினாள்.
“ஆமா பேபி… அதோ அங்க ஒரு டீக்கடை இருக்கு வா எதாவது இருந்தா சாப்பிடலாம்”, என அழைத்துச் சென்றாள் ஶ்ரீ.
“இந்த நேரத்துல ஏன் டீக்கடை தொறந்து வச்சிருக்காங்க ஶ்ரீ… “, மயிலினி.
“மெயின் ரோட்ல நைட் ட்ராவல் பண்றவங்க குடிப்பாங்கன்னு தான் பேபி… உனக்கு டீ தானே”, ஶ்ரீ அவளுக்கு வேண்டிய விளக்கம் கொடுத்துவிட்டுக் கேட்டாள்.
“ஆமா…. அப்படியே சாப்பிட எதாவது இருந்தா சாப்பிடலாம் ஶ்ரீ…. “, எனக் கூறிவிட்டு மயிலினி சோர்வாக அந்த டீக்கடை சேரில் அமர்ந்தாள்.
ஶ்ரீ வண்டியை நிறுத்திவிட்டு சுற்றும் ஒரு பார்வைப் பார்த்தபின் அந்த கடையை நெருங்கினாள்.
“அண்ணா…. இரண்டு டீ…. பிஸ்கட் இரண்டு பேக்கட்… “, எனக் கூறிவிட்டு , “பக்கத்துல மெக்கானிக் ஷாப் எதாவது இருக்காண்ணா?”, எனக் கேட்டாள்.
“இங்க எதுவும் இல்லம்மா…. இன்னும் ஆறு கி.மீ போனா ஒன்னு இருக்கு”, டீக்கடைக்காரர்.
“ஓஓ…. டேக்ஸி கிடைக்குமா?”, ஶ்ரீ.
“ஏன்மா எங்க இருந்து வரீங்க? “, டீக்கடைக்காரர் விசாரித்தார்.
“இங்க பால்ஸ் வந்தோம். வண்டி ரிப்பேர்… தள்ளிட்டு வந்ததுல நேரம் ஆகிரிச்சி…..”, என டீயை மயிலினிக்குக் கொடுத்துவிட்டுக் கூறினாள்.
“ஏன்ம்மா இத்தனை கி.மீ தள்ளிட்டேவா வந்தீங்க? என்ன பொண்ணுங்கம்மா…. எதாவது ஆகியிருந்தா என்ன பண்றது? கூட யாரும் வரலியா?”, டீக்கரைக்காரரின் மனைவி பேச்சில் கலந்துக் கொண்டார்.
“இல்லக்கா…. நாங்க தனியா தான் வந்தோம்….. இங்க போன் ஜார்ஜ் போட முடியுமாக்கா?”, எனக் கேட்டு தன் போனை ஜார்ஜ் போட்டுக் கொண்டாள் ஶ்ரீ.
அரை மணி நேரத்திற்கு பின் ஶ்ரீ யாரையோ அழைத்து பேசியதும், ஒரு கார் அடுத்து முக்கால் மணி நேரத்தில் வந்து நின்றது.
மயிலினி தூக்கக் கலக்கத்தில் ஶ்ரீ கூறுவது எல்லாம் செய்துவிட்டு காரில் ஏறி அமர்ந்ததும் உறங்கிவிட்டாள். வண்டியை மற்றொரு சின்னயானை டிரக்கில் ஏற்றிவிட்டு, ஶ்ரீயும் காரில் அமர்ந்துச் சற்றுக் கண்ணயர்ந்தாள்.
ஒரு மணிநேரத்தில் தாங்கள் தங்கி இருக்கும் பிளாட்டில் இறங்கிக் கொண்டு ஸ்கூட்டியை மெக்கானிக் ஷெட்டிற்கு அனுப்பிவிட்டு சூடான நீரில் குளித்தபின் உறங்க ஆரம்பித்தாள் ஶ்ரீ.
மதியம் போலே எழுந்தவள் மயிலினி உறங்குவதை உறுதிபடுத்திக்கொண்டு, வெளியே சென்று இரண்டு மணி நேரம் கழித்து பிளாட்டிற்கு வந்து மயிலினியை எழுப்பினாள்.
“மயிலு பேபி…. எழுந்திரி… சாப்பாடு வாங்கிட்டு வந்திருக்கேன் சாப்டு தூங்கு டா”, என எழுப்பினாள்.
“வேணாம் ஶ்ரீ… கால் கைலாம் வலிக்குது….”, மயிலினி தூக்கத்தில் உளறினாள்.
“வாய தொற நானே ஊட்டி விடறேன். செட்டிநாடு சிக்கன் பிரியாணி, பிஸ் ப்ரை, நெய்ல வறுத்த சிக்கன், இன்னும் உனக்கு பிடிச்ச எல்லாமே வாங்கிட்டு வந்திருக்கேன்… எழுந்திரு பேபி”, என உணவின் வாசத்தை அவள் மூக்கருகே காட்டி எழுப்பினாள்.
வாசனை பசியை எழுப்பவும் மயிலினி எழுந்து சாப்பிட அமர்ந்தாள்.
நன்றாக சாப்பிட்ட பின் மாலை செய்திகள் பார்க்க அமர்ந்தனர். நேற்று அவர்கள் பார்த்த வேன் பிடிபட்டு, அதில் இருந்த போதை மருந்துகள் கைப்பற்றப் பட்டதாகத் தலைப்புச் செய்தி இருந்தது.
மயிலினி ஶ்ரீயை பார்க்க, அவள் ஐஸ்கிரீம் சாப்பிடுவதில் முனைப்பாக இருப்பதைப் போலக் காட்டிக்கொண்டாள்.
“நீ தானே காரணம் ஶ்ரீ?”, மயிலினி அவளைப் பார்த்துக் கேட்டாள்.
“இந்த நாட்டோட குடிமகளா என் கடமைய நான் செஞ்சேன் பேபி. அதுக்கு தான் நமக்கு வண்டி அனுப்பி பத்திரமா இங்க விட்டுட்டு போனாங்க”,என நடந்ததைக் கூறினாள் ஶ்ரீ.
“யார்கிட்ட சொன்ன?”, மயிலினி ஆர்வமாகக் கேட்டாள்.
“யார் கிட்ட சொன்னா வேலை நடக்குமோ அவங்க கிட்ட சொன்னேன் மயிலு”, ஶ்ரீ.
“ஓஓஓ….. அவங்களா…..”, மயிலினி யோசித்தபடிக் கேட்டாள்.
“ஆமா… அவங்களே தான்”, எனக் கூறிக் கண்ணடித்து சிரித்தாள் ருத்ரஶ்ரீ.
தோழிகள் இருவரும் ஒருவரை ஒருவர் கட்டிக்கொண்டு தங்களின் சந்தோஷத்தைப் பகிந்துக்கொண்டனர்.
எந்த இக்கட்டான சூழ்நிலையிலும் அமைதியும், பதற்றமும் இல்லாமல் பிரச்சினைக் கையாளப்பட்டால் தீர்வு சாதகமாக இருக்கும் என்பதை தோழிகள் இருவரும் நமக்கு நிரூபித்துக் காட்டிவிட்டனர்….