வணக்கம் நட்பூஸ் அண்ட் சகோஸ் ..
இன்னிக்கி நம்ம பாக்க போற எழுத்தாளர் யாருன்னா ???
இவங்க ஒரு பேபி ஹார்ட் .. ரொம்ப ஸ்வீட் .. பெரிய விஷயங்களை அசால்டா கையாளுவாங்க…. இவங்க இன்னொரு பெரிய சாதனையும் செஞ்சி இருக்காங்க ..
அது என்ன தெரியுமா ? 28+ மணி நேரம் படிக்கும் கதை ..
யாருன்னு தெரிஞ்சதா இப்போ ?
வாங்க உள்ள போய் பேசலாம் அவங்க கிட்ட ..
எழுத்துப்பயணத்தில் நம்முடன் இன்று….
1. புனைபெயர் – பிரியங்கா ஸ்ரீ ராம் ( புனைபெயர்னு தனியா கிடையாது )
2. இயற்பெயர் – திருமதி . பிரியங்காஸ்ரீராம்
படிப்பு – BE – ECE , BA – POLICE ADMINISTRATION , MA – POLICE ADMINISTRATION , PG . DIP IN CRIMINOLOGY & FORENSIC SCIENCE
3. தொழில் – இல்லத்தரசி
4. பிடித்த வழக்கங்கள் –
படிக்க ரொம்ப பிடிக்கும் , பாடல்கள் கேட்பதும் கூட சேர்ந்து பாடியபடியே வேலை செய்யவும் பிடிக்கும் , கடவுள் பக்தி அதிகம், அதனால் கோவில் போக ரொம்ப பிடிக்கும் , இயலாதவர்களுக்கு என்னால் முடிஞ்ச அளவு ஏதாவது ஒவ்வொரு வருஷமும் உதவுவேன்.
5. கனவு –
IPS ஆக நினைத்தேன் காவல்துறை மேல் ஏனோ தீராத ஒரு காதல் உண்டு எனக்கு, ஆனால் திருமணம் ஆன பிறகு அந்த கனவை ஒதுக்கி வைத்து உள்ளேன், முடிந்தால் காவல் சீருடை போட்டு பணியாற்றுவேன், இல்லை நான் படித்த படிப்பை வீனாக்காமல் என் துறை சார்ந்து , மக்களுக்கு என்னால் ஆன உதவிகளை செய்வேன். இப்போதும் தெரிந்தவர்கள் லீகல் அட்வைஸ் கேட்டு வருவார்கள் அவர்கள் கேட்பவற்றை கூறுகிறேன் அதில் எனக்கு ஒரு மன நிறைவு.
6. உங்களுக்கு ஏற்பட்ட எழுத்தின் மீதான தாக்கம் என்ன?
படிக்க ரொம்ப பிடிக்கும் ஆனால் எழுத வருவேன்னு நான் கனவிலும் நினைக்க வில்லை புத்தக வாசிப்பு பழக்கம் எனக்கு எங்க அம்மா , தாத்தா , பாட்டி மூலம் சிறு வயதில் இருந்தே உண்டு அதன் தொடர்ச்சியாக எழுத வந்துவிட்டேன்.
7. உங்களின் வாசிப்பு அனுபவம் பற்றி –
ஆரம்ப நாட்களில் எல்லோரையும் போல் கோகுலம் கதிர் ஆரம்பித்து தினமணி பத்திரிக்கை அதன் துணை இதழ் சிறுவர்மணி இன்ன பிற சிறுவர் புத்தகங்கள் அதன் தொடர்ச்சியாக பொன்னியின் செல்வன் இன்ன பிற நாவல்கள் படிக்க ஆரம்பித்தேன் இப்போது வேள்பாரி படித்தேன் எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர்கள் எழுத்தரசி ரமணிசந்திரன் , கிரைம் மன்னன் ராஜேஷ்குமார் இன்னும் இப்போது பல எழுத்தாளர்கள் கதைகளையும் படிக்கின்றேன் படிக்க ஆரம்பித்தால் என்னை சுற்றி உள்ள உலகம் மறந்து நான் புத்தகத்துக்குள் முழ்கி விடுவேன்.
8. உங்களை எழுத தூண்டியது எது?
எனக்கு காவல்துறை மீதான ஈடுபாட்டின் காரணமாக அது சார்ந்து தொடர்ந்து படித்து கொண்டே இருப்பேன். செய்திகள் அதிகம் பார்ப்பேன், என் அப்பா ஓய்வு பெற்ற காவல்துறை உயரதிகாரி, நான் வளர்ந்தது எல்லாம் காவல்துறை சார்ந்த பகுதிகள், அப்பாவின் வேலை காரணமாக நாங்கள் பல ஊர்களில் வசித்தோம். அதன் அனுபவம் கற்று தந்தது நிறைய பலவித மனிதர்கள் அவர்களின் அன்றாட வாழ்வு பிரச்சனைகளை நிறைய நேரடியாக பார்த்துள்ளேன். அதனால் காவல்துறை சார்ந்த வழக்குகள் பல என் சுய விருப்பத்திலும் , படிப்பிற்காகவும் படித்தேன். அதன் தாக்கமாக கிரைம் கலந்த சமூக நலன் பேசும் கதை கரு ஒன்று மனதில் தோன்றியது ஆனால் அதை கதையா எழுத தோன்றியது இல்லை.
ஒரு முறை எங்கள் கல்லூரியில் எங்களோட படித்த அண்ணா ஒருவர் “இரு ஆண்களின் நட்புக்கு இடையே ஒரு பெண் வந்தால் அந்த ஆண்களின் நட்பு எத்தனை வலிமையானதாக இருந்தாலும் அவ்வளவு தான் ” என வேடிக்கையாக கூறினார் அது ஏனோ என் மனதில் இருந்து கொண்டே இருந்தது. அதன் தாக்கமாக நான் எழுதிய முதல் நாவலான ” ஸ்ரீ – நேசம் கொண்ட நெஞ்சங்களின் உணர்வு போராட்டம் ” கதையில் இரு ஆண்களின் நட்பு இடையில் வரும் பெண்ணால் ( நாயகி ) எவ்வாறு மேலும் பலப்படுகிறது என்பதை கூறினேன் அதன் பின் வந்த என் மற்ற கதைகளிலும் நட்பை , அன்பை மையப்படுத்தியே எழுத ஆரம்பித்து விட்டேன்.
9. எப்போது எழுத ஆரம்பித்தீர்கள்?
மிக சரியா சொல்றதுனா 05.11.2017 ஞாயிறு இரவு 8.35 மணிக்கு என் முதல் நாவலை விளையாட்டாக ஒரு நோட்டில் எழுத ஆரம்பித்தேன் மனதில் கதை தோன்றும் நேரம் எல்லாம் எழுதி பத்திரப்படுத்தி கொண்டேன் ஒரு நாள் என் தோழி ஸ்ரீவித்யா உடன் பேசி கொண்டிருந்த போது என் கதையை பற்றி கூற, அதை கேட்டு என் தோழிக்கு என் கதை மிகவும் பிடித்து போக கதையை எழுத சொன்னாள். நான் தயங்க என்னை தொடர்ந்து பேசி சம்மதிக்க வைத்தாள் எனவே அவள் பிறந்தநாளான 12.06.2018 அன்று ஃபேஸ்புக்கில் ஒரு பேஜ் ஓபன் செய்து என் முதல் நாவல் ” ஸ்ரீ – நேசம் கொண்ட நெஞ்சங்களின் உணர்வு போராட்டம் “ கதையை ஒவ்வொரு அத்தியாயமாக வெளியிட்டேன் பாதி நாவல் வெளி வந்த போதே என் தோழி ஸ்ரீவித்யா எதிர்பாராத விதமா இயற்கை எய்தினார். அதன் பின் எழுத மனம் வரவில்லை, ஆரம்பித்த கதையை முடித்து விட்டு எழுத்துலகை விட்டு விலக முடிவெடுத்திருந்தேன்.
ஆனால் விதி விநோதமானது என் முதல் நாவல் முடியும் முன்பே எனக்கு திருமணம் நிச்சயமானது. அதோடு எழுத்தை விட்டு விலகினேன் ஆனால் ஒரு ஆச்சர்யம் என் வாழ்வில் என் கதையால் ஏற்பட்டது நான் முதல் நாவல் எழுதிய போது என் பெயரோடு என் தந்தையின் பெயரை இணைத்து பிரியங்காவெங்கடேசன் என்ற பெயரில் எழுதி வந்தேன் எனக்கு கணவராக வர போகிறவரின் பெயர் ஸ்ரீராம் ஆக இருக்கும் என நான் நினைத்தது கூட இல்லை என் முதல் நாவலின் கதாபாத்திரங்களுக்கு பெயர் வைத்த போது என் பெயரையும் என் தோழி ஸ்ரீவித்யாவின் பெயரையும் இணைத்து நாயகிக்கு ஸ்ரீபிரியா என்றும், எனக்கு இஷ்ட தெய்வம் ஹனுமான் என்பதால் நாயகனுக்கு பெயர் ஸ்ரீராம் என்றும் பெயர் வைத்திருந்தேன். ஆனால் பின்னாளில் என்னவர் பெயரும் ஸ்ரீராம் ஆகவே அமைந்து போனது இன்று வரை என் கதை பற்றி அறிந்த எங்கள் உறவுகளும் , நட்பும் எங்களது திருமணம் காதல் திருமணம் என நினைத்து கொண்டிருக்கின்றனர் நாங்க எவ்வளவோ கூறியும் இன்னும் இந்த வதந்தி எங்களை சுற்றி வருகிறது
திருமணத்திற்கு பின் சற்று ஓய்வெடுத்து கொண்டேன் அதன் பிறகு பிரதிலிபியில் மறுபடியும் எழுதி வருகிறேன் இதுவரை மூன்று நாவல்கள் , மூன்று குறு நாவல்கள் , ஒரு சிறுகதை எழுதியுள்ளேன்.
10. உங்களது எழுத்தை படித்தவரிடம் அதன் தாக்கத்தை உணர்ந்தது உண்டா?
நிறைய வாசகர்கள் நீங்கள் எழுதியது கற்பனை கதை போலவே இல்லை ஏதோ நேரில் நடப்பது போல் உணர்கிறேன். உங்கள் கதாபாத்திரங்களோடு நாங்களும் அழுது , சிரித்து வாழ்கிறோம் என்கின்றனர் முகம் சுழிக்காமல் படிக்க முடிகின்றது எத்தனை சென்சிட்டீவ்வான கதையையும் நேர்த்தியாக கூறுகிறீர்கள் என்றார்கள். ஒரு சகோதரி பொன்னியின் செல்வன் நாவலுக்கு பிறகு நான் மனம் நிறைந்து அதிக முறை படித்தது என் முதல் நாவல் ஸ்ரீ கதையை என கூற கேட்டு நான் மெய் சிலிர்த்து போனேன். என்னை தொடர்ந்து எழுத வைப்பதே என் வாசகர்களின் கருத்துகள் தான் அவர்களின் ஊக்கம் என்னை தொடர்ந்து உற்சாகமாக வைக்கின்றது.
11. எழுத்தால் எதையும் மாற்ற முடியும் என்று நம்புகிறீர்களா ?
நிச்சயமாக முடியும் கத்தியின் முனையை விட பேனா முனை வலிமையானது என்பதை நான் நம்புபவள். என் கதைகளில் கலாச்சாரம் , பண்பாடு , சமூகம் சார்ந்த கருத்துகள் , குழந்தை வளர்ப்பு , தேசப்பற்று , பெண்களின் மேன்மை , மூட நம்பிக்கை ஓழிப்பு மற்றும் நாம் மறந்து போன பழமையான நம் பழக்க வழக்கங்கள் பற்றி அறிந்து எழுதுகிறேன். அதை பலரும் வரவேற்கின்றனர் ” நாங்க இதை இப்போது தான் தெரிந்து கொண்டோம் , என் மகளுக்கு கூறுவேன் , என் மகனுக்கு சொல்லி வளர்க்கிறேன் , நீங்கள் கூறியவற்றை என் பாட்டி கூறி கேட்டுள்ளேன் நன்றி நினைவுபடுத்தியதற்கு … ” இப்படியாக நிறைய பேர் கூறும் போது மன நிறைவு வருகின்றது
12. மின்னூல், பதிப்பு புத்தகம். இவற்றினைப் பற்றி உங்கள் கருத்து என்ன ?
கால மாற்றத்துக்கு ஏற்ப நாமும் மாற வேண்டியுள்ளது மின்னூல் இப்போது தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது படிக்கும் பழக்கம் இனி வரும் சந்ததியரை விட்டு நீங்காமல் இருப்பதில் மகிழ்ச்சியே ஆனால் பதிப்பித்த புத்தகத்தை கையில் தாங்கி படிக்கும் சுகம் அலாதியானது அது தாயின் மடி போன்ற சுக அனுபவம்.
13. நீங்கள் பதிபித்த பதிப்புபுத்தகங்கள் எத்தனை ? (அவற்றை பெற தொடர்பு கொள்ள )
கானல் தேசம்
மாறனின் ரதியவள்
மேகம் மறைத்த நிலவு
மனதின் வலி(மை)
அருணோதயம் பதிப்பகம்.
தொடர்பு கொள்ள : 044 – 28132791, 28133121
14. ஆடியோ புத்தகங்கள் மீதான உங்கள் பார்வை என்ன ?
கதை கேட்கும் பழக்கம் நம் தொட்டில் பழக்கம் ஆயிற்றே அன்று தாத்தா , பாட்டி , பெற்றோர் இன்று அலைபேசி கதை கூறுகிறது அவ்வளவே வாசிப்பு அனுபவம் என்பது தனி அதன் சுவை உணர்ந்தவர்களால் அதை விட்டு விலக முடியாது.
15. எழுத்தாளரின் வெற்றி என்பது எதன் அடிப்படையில் இருக்கிறது ?
நம் கதையை படித்த வாசகரின் மனதில் அந்த கதையின் தாக்கம் எத்தனை ஆழமாக ஏற்படுகின்றது என்பதையும், கதையின் கதாபாத்திரங்களை வாசகரின் மனதில் உண்டாக்கும் உணர்வுகளும் கூறும் எழுத்தாளரின் வெற்றியை. நம் கதையை படித்து அதில் கூறிய நல்ல கருத்துகளை யாரேனும் ஒருவர் பின்பற்றினாலும் அது எழுத்தாளருக்கு மகிழ்ச்சியே.
16. உங்கள் படைப்பில் எதையாவது எழுதி இருக்க வேண்டாம் என்று எண்ணியதுண்டா ?
இல்லை எப்போதும் எனக்கு மன நிறைவை தருவதை மட்டுமே நான் எழுதுகிறேன்.
17 . உங்களின் படைப்புகளில் எது உங்களுக்கான அங்கீகாரத்தை பெற்று கொடுத்ததாக நினைக்கிறீர்கள் ?
என் முதல் நாவலான ” ஸ்ரீ – நேசம் கொண்ட நெஞ்சங்களின் உணர்வு போராட்டம் “ கதை தான் என்னை எழுத்தாளர் என அங்கீகரிக்க செய்தது. ஸ்ரீ கதை எனக்கு கொடுத்த அங்கீகாரமும், மன நிறைவையும் வார்த்தைகளால் விவரிக்க முடியாது. தாய்க்கு முதல் பிள்ளை எத்தனை சிறப்போ அத்தனை சிறப்பு என் முதல் நாவல் எனக்கு ஸ்ரீ கதை காவல்துறை சார்ந்த கதை என்பதால் அதில் பல வழக்குகள் கூறியிருப்பேன் அதற்காக நிறைய தேடி தேடி படித்து எழுதினேன்.
அதன் பிறகு நான் எழுதிய மற்ற படைப்புகளும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான வித்தியாசமான கதை கருவை கொண்டது அந்த வகையில் அனைத்துமே என்னை நல்ல எழுத்தாளர் என அங்கீகரிக்க செய்து வருகின்றது இப்போது நான் முடித்த ” வரமாய் வந்த வரலெட்சுமி ” நாவலும் முற்றிலும் மாறுபட்ட கதை களம் அதற்கும் நிறைய பாராட்டுகள் வந்ததில் மகிழ்ச்சி.
18. கதை கரு மற்றும் கதா பத்திரங்களை எப்படி தேர்வு செய்கிறீர்கள் ? அதற்கான மெனக்கெடல் எந்த அளவிற்கு கொடுப்பீர்கள் ?
கதை கரு மற்றும் கதாபாத்திரங்களுக்கு என தனியான மெனக்கெடல் எதுவும் கிடையாது மனதில் ஒரு முறைக்கு பல முறை கதையை , கதாபாத்திரங்களின் வசனங்களை கூறி பார்ப்பேன். ஒவ்வொரு கதாபாத்திரத்தின் பகுதியையும் அந்த கதாபாத்திரத்தின் மனநிலையில் இருந்து யோசித்தே எழுதுவேன். என் கதைகளில் லாஜிக் மிஸ்டேக் ஏற்பட கூடாது அதே போல் என் படைப்பு தவறான முன் உதாரணமாக படிப்பவர்களுக்கு இருந்து விட கூடாது என்பதில் உறுதியாக இருப்பனே
பெண்களை இழிவுபடுத்துவதோ , பதின் பருவ / பள்ளி பருவ காதல் கதைகளோ , பிள்ளைகள் பெற்றோரை எதிர்ப்பது போன்ற காட்சிகளை எழுத மாட்டேன் என எனக்கு நானே தீர்மானித்து கொண்டுள்ளேன். அதே போல் குற்றம் சார்ந்த கதைகள் எழுதும் போது அதை விரிவாக எழுதுவதில்லை அது படிப்பவர்களுக்கு தவறான உதாரணமாக ஆக கூடாது என்பதற்காக குற்றம் செய்தவர் யாராயினும் தண்டனை பெறுவது போலவே கதையை எழுதுகிறேன்.
கதை கருவை பொறுத்த வரை மனதில் தோன்றும் ஒரு வரியை டெவலப் செய்து கொள்வேன் எந்த கதையின் கரு என் மனதை தொடர்ந்து சஞ்சலப்படுத்துகிறதோ உடனே அதை டைப் செய்ய ஆரம்பித்து விடுவேன் மனதில் தோன்ற தோன்ற டைப் செய்து வைத்து கொள்வேன் பிறகு பொறுமையாக எடிட் பார்த்து கொள்வேன்
என் கதைகளில் முடிந்த வரை நேர்மறை கதாபாத்திரங்கள் தான் அதிகமாக இருக்கும் எதிர்மறை கதாபாத்திரங்களே இல்லாமல் இரு குறுநாவல்களை முடித்துள்ளேன் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் போதிய அழுத்தம் உண்டு
நாயகி கதாபாத்திரத்திற்கு எப்போதும் என் கதைகளில் தனி மதிப்பு இருக்கும் எனது நாயகிகள் தன்னம்பிக்கை , தைரியம் உடைய பக்குவமானவர்களாகவும் , எத்தனை இக்கட்டான சூழ்நிலையிலும் நம்பிக்கை விட்டு போகாமல் எதையும் தாங்கும் திடமான மனது உள்ளவர்களாகவும் சித்தரிப்பேன்.
19. நீங்கள் பெற்ற போட்டி பரிசுகள் –
எழுத்துலகில் இன்னும் பெரிதாக சொல்லி கொள்ளும்படி பரிசு எதுவும் பெறவில்லை பல வாசகர்களின் அன்பையும் , நட்பையும் பெற்றதே பெரும் பரிசாக கருதுகிறேன்
எனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு மிகவும் மோசமாக இருந்த போது சக எழுத்தாள தோழமைகளும், என் முகம் கூட காணாமல் என்னை மகளாய் , சகோதரியாய் ஏற்று கொண்ட பல வாசகர்களும், என் உடல் நலம் பெற பிராத்தித்து கொண்டனர். இதை விட வேறு என்ன பெரிய பரிசு இருக்கின்றது இந்த அன்பும் , அக்கறையும் எனக்கு போதும்.
நான் இல்லத்தரசியா இருந்து கொண்டு கதைகள் எழுதுவதால் என்னால் அதிகமாக போட்டிகளில் கலந்து கொள்ள முடியவில்லை
பிரதிலிபி கதைப்போமா கதை போட்டி தான் நான் முதன் முறையாக கலந்து கொண்ட கதை போட்டி அதில் பரிசு பெறா விட்டாலும் சிறந்த படைப்பு என எனது ” வளைகரத்தின் வல்லமை “ சிறுகதை தேர்வாகி இருந்தது.
எதிர்வினை கருத்துக்களை எப்படி கையாள்கிறீர்கள்?
பெரும்பாலும் அவ்வாறான கருத்துகள் எனக்கு வருவது இல்லை அப்படியே ஒன்றிரண்டு வந்தாலும் அவர்கள் கூறிய கருத்து சரி என்றால் ஏற்று கொள்வேன் தவறென்றால் அவர்கள் சொன்னவற்றுக்கு விளக்கம் சொல்லி நன்றியும் கூறி விடுவேன்.
21. நீங்கள் அதிகம் எழுத விரும்புவது எது ? (கதை , கவிதை, தொடர்கதை, நாவல் , சிறுகதை) ஏன் ?
தொடர்கதை , நாவல் ஆகியவை தான் நான் அதிகம் எழுத விரும்புவது என் கணவருக்காக மட்டுமே இதுவரை கவிதை எழுதி வருகிறேன் இனிவரும் காலங்களில் மற்றவற்றையும் எழுத முயற்சிக்கிறேன்.
22. ஏன் மாறுபட்ட கதைக்கரு கொண்ட கதைகள் வாசகர்களை அதிகமாக சென்றடைவதில்லை?
அப்படி கூற முடியாது ஒவ்வொரு வாசகருக்கும் ஒவ்வொரு ரசனை உண்டு சிலருக்கு காதல் பிடிக்கும் , சிலருக்கு சமூகம் சார்ந்த கதை , சிலருக்கு திகில் கதை இப்படி ரசனைகள் பலவிதம் அதற்கு ஏற்றது போல் வாசகர்கள் தங்களுக்கு பிடித்த படைப்புகளை தேடி படிக்கின்றனர்
நான் எழுதிய அனைத்து படைப்புகளுமே மாறுபட்ட கதை கருவை உடையது தான் என்னை பொறுத்த வரை நல்ல நிறைவான முறையிலேயே வாசகர்களை சென்றடைவதாக கருதுகிறேன்.
23. குடும்பம் காதல் சாராத கதைகளை நீங்கள் எழுதியது உண்டா? (படைப்பின் தலைப்பு)
பிரதிலிபி கதைப்போமா கதை போட்டிகாக நான் எழுதிய ” வளைகரத்தின் வல்லமை ” சிறுகதை பெண்களை மையப்படுத்திய சமூகம் சாந்த கதை இதில் குடும்பம் , காதல் போன்றவை கிடையாது பெண்களுக்கு எதிராக நடக்கும் அநீதியை பேசும் கதை தங்களுக்கு நடக்கும் கொடுமையை எவ்வாறு இரு பெண்கள் சாதூர்யமாக எதிர்த்து அந்த கயவனுக்கு தண்டனை பெற்று தருகின்றனர் என்பதே கதை.
24. அனைவரும் படிக்க வேண்டிய புத்தகங்களாக நீங்கள் கருதுவது என்ன என்ன?
திருக்குறள் , பொன்னியின் செல்வன் , வேள்பாரி , எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் அவர்களின் ” என் பெயர் ரங்கநாயகி ” , கார்டூனிஸ்ட் மதன் அவர்களின் ” வந்தார்கள் வென்றார்கள் , ஐயா அப்துல்கலாம் அவர்களின் அக்னி சிறகுகள் மற்றும் நம் தேச தலைவர்களின் சுய சரிதை புத்தகங்கள் அவசியம் இந்த தலைமுறையினர் படிக்க வேண்டும்.
25. ஓர் படைப்பின் வார்த்தை அளவுகள் பற்றி உங்களது கருத்து என்ன?
வார்த்தை அளவுகள் என்பது ஒவ்வொரு எழுத்தாளருக்கும் மாறுபடும் உதாரணமாக ஒரு அத்தியாயத்தை எத்தனை எழுத்தில் முடிக்கலாம் என கணக்கு போட்டு கொண்டே எழுத முடியாது எழுத்தாளருக்கு மன நிறைவை தரும்படி எழுதுவதே சிறந்த படைப்பாக வரும் என்பது என் கருத்து.
26. எழுதுபவர்கள் பெறும்பாலும் பயன் அடைவதில்லை. அவர்கள் பயன்பெற நீங்கள் கூறும் சில யோசனைகள் என்ன?
ஆம் உண்மை தான் பண மதிப்பு என்பது எழுத்தாளர்களுக்கு என்றும் குறைவு தான் ஆனால் இப்போது கிண்டில் , யூ டியூப் போன்ற பல தொழில்நுட்ப வசதிகள் மூலம் எழுத்தாளர்கள் பலர் நல்ல முறையில் பயன் அடைகின்றனர்
என்னை பொறுத்த வரை எழுத்தில் ஒரு மன நிறைவு உண்டு நான் மன நிம்மதிக்காக எழுத வந்தேன் என் படைப்புகளை மன நிறைவோடு எழுதுவதால் நான் மகிழ்வாகவே உள்ளேன்.
27. உங்கள் தனி தன்மை என்று தாங்கள் கருதுவது என்ன ?
தமிழின் மீதும் திருக்குறளின் மீதும் எனக்கு என்றும் அதீத பற்று உண்டு தமிழுக்கும் திருக்குறளுக்கும் என்னால் செய்ய முடிந்த மிகச்சிறு தொண்டாக
என் கதைகளின் ஒவ்வொரு அத்தியாயத்தின் ஆரம்பத்திலும் அந்த அத்தியாயத்திற்கு பொருத்தமாக ஒரு திருக்குறளும் அதன் விளக்கமும் சேர்த்திருப்பேன்.
திருக்குறளில் இல்லாத விஷயங்களே இல்லை எக்காலத்துக்கும் எல்லாவற்றிற்க்கும் பொருந்த கூடிய நூல் ஒன்று உண்டென்றால் அது திருக்குறளே, தினம் ஒரு குறள் படித்தால் நம் நடைமுறை வாழ்வுக்கு நல்லது என மூத்தோர் சொல்ல கேட்டிருக்கிறேன்
என் கதைகளின் மூலம் மக்கள் தினம் ஒரு குறள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்த முயற்சியை செய்து வருகிறேன்.
கதையின் கரு எத்தனை கனமானதாக ( சென்சிட்டீவ் கண்டென்ட்டாக ) இருந்தாலும் அதை கவனமாக விரசம் இல்லாமல் கையாளுவதுடன், மனோதத்துவம் சார்ந்த கருத்துகள் , ஆண் பெண் உறவுகளில் ஏற்படும் சிக்கல்களை பற்றியும் கதாபாத்திரங்களின் உணர்வுகளையும் மிகவும் நேர்த்தியாக கூறுவதாக எனது வாசகர்கள் கூற கேட்டுள்ளேன்.
28. உங்களது கவிதை , பிடித்த வாக்கியம் , பழமொழி (பைனல் பஞ்ச்).
மனசுக்கு பிடிச்சு நிறைவை தரும் எந்த செயலானாலும் தயங்காமல் செய்யனும் அதை முழு மன ஈடுபாட்டோடு செய்தால் வெற்றி தாமதமானாலும் நிச்சயம் நமக்கான வெற்றியும் , அங்கீகாரமும் நம்மை வந்து சேரும்.
29. உங்கள் படைப்புகள் (லிங்க்குகளுடன்) (Youtube also ):
எனது பிரதிலிபி புரஃபைல் லிங் :
https://tamil.pratilipi.com/user/1101101sfz?utm_source=android&utm_campaign=myprofile_share
இவங்க கதை மட்டும் இல்ல, இவங்க கொள்கைகளும் அருமையா இருக்கு . இவங்க கிட்ட எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயம் திருக்குறள் சொல்றது தாங்க ..
நிஜமா அதுக்கே நிறைய தேடனும். அந்த அத்தியாயத்துக்கு தகுந்த குறள் தேடி, அதுக்கு தகுந்த விளக்கம் போடறது நிஜமா பாராட்ட வேண்டிய விஷயம். அதை எப்பவும் தொடர்ந்து பண்ணுங்க பிரியா பேபி ..
இவங்க முதல் கதை பத்தி சொல்லியே ஆகணும் . 28+ மணிநேரங்கள் ஆகும் அந்த கதைபடிக்காரத்துக்கு …. நானும் போலீஸ் கதைனு படிக்க ஆரம்பிச்சிட்டேன், போகுது போகுது போகுது, அது போய்கிட்டே இருக்குங்க .. என்னால கதைய நிறுத்தவும் முடியல அவ்ளோ விறுவிறுப்பா போகுது. ஏன்மா இவ்ளோ பெருசா போட்ட , கொஞ்சம் குறைச்சி இருக்கலாம் இல்லயா இரண்டாம் பாகமா போட்டா கூட எல்லாரும் படிப்பாங்கன்னு சொன்னதுக்கு இவங்க என்ன சொல்லணும் ???
ஆமா செஞ்சி இருக்கலாம்ல சொல்லணும் இல்லயா வேற ஏதாவது சொல்லி இருக்கலாம் .. இவங்க என்ன சொன்னாங்க தெரியுமா ? நான் ஒரு லாங் சைஸ் நோட்ல எழுதினத போடவே இல்லை .. கொஞ்சம் கம்மி பண்ணிட்டேன்னு சொன்னாங்க பாருங்க எனக்கு அவளோ ஷாக் ..
இவ்ளோ பெருசா எழுதியும் எங்கள கீழையும் வைக்க விடல அது ரொம்பவே சிறப்பான விஷயம் . உங்க எழுத்துல உயிரோட்டம் அற்புதமா இருக்கு பேபி .. கீப் இட் அப் ..
“வரமாய் வந்த வரலக்ஷ்மி “ காண்டிப்பா படிக்க வேண்டிய கதை . ரொம்பவே சிக்கலான கதை கரு . அதை இவங்க கையாண்ட விதம், ரொம்பவே முதிர்ச்சி கலந்த கதை போக்கும், பெரிய விஷயம் .
இது இவங்க இரண்டாவது கதை அது தான் அதிகமா ஆச்சரியம் படவைக்குது. வார்தை கண்ணியம் இவங்ககிட்ட நிறையவே பாத்து இருக்கேன் . தேவை இல்லாத காட்சிகள் இருக்காது, கதை சலிப்பும் குடுக்காது . நம்ம பாட்டி சொல்ற விஷயங்களை இவங்க நினைவு படுதுறதும் இன்னொரு சிறப்பு தான்.
நீங்க இப்போ தான் உங்க பயணத்த ஆரம்பிச்சி இருக்கீங்க பிரியா பேபி .. நீங்க ரொம்ப தூரம் போகணும், நாங்களும் உங்களோடவே வர போறோம் .. நீங்க எடுக்கற எல்லா நல்ல முயற்சிகளுக்கும் எங்களோட மனமார்ந்த வாழ்த்துகள் ..
மேலும் உங்க எழுத்தை மெருகேற்றுங்க, நிறைய நல்ல படைப்புகளை எங்களுக்கு குடுங்க .. நாங்க எப்பவும் உங்ககூடவே இருப்போம் அதுல மாற்றம் இல்லை ..
என்ன நட்பூஸ் பிரியா பேபி கூட நம்ம பயணம் உங்களுக்கு பிடிச்சி இருக்கா ?
அடுத்து சீக்கிரமே இன்னொரு க்ரிஸ்பி எழுத்தாளரோட வரேன் ..