வணக்கம் நட்பூஸ் அண்ட் சகோஸ் ..
இன்னிக்கி நம்ம பாக்க போறது அதட்டி உருட்டும் என் சண்டக்கோழி..
இவள பத்தி நிறைய சொல்லலாம். நான் எழுத ஆரம்பிக்கறத்துக்கு முன்ன இருந்தே எனக்கு இவள நல்லா தெரியும் . செல்ல செல்ல சண்டைகள் நிறைய போடுவோம். ரொம்பவே தைரியமான தோழி, பல நல்ல விஷயங்கள இவ சொல்ற விதம் எனக்கு ரொம்ப பிடிக்கும் . நம்மல்ல நிறைய பேருக்கு இவள நல்லா தெரியும். எழுத்து கண்ணியம் இவகிட்ட தான் நான் அதிகம் பாத்து இருக்கேன் .
வேர்ல்ட் ஃபேமஸ் “ஒலக நியதி” ங்கற வார்த்தை, இவளோட மிக சிறந்த படைப்புகள்ல இடம் பெற்றது .
அந்த படைப்புகளுக்கு எத்தன பொங்கல் வச்சாலும், அதுலாம் அசால்ட்டா தூக்கி போட்டுட்டு அதுல இரண்டாம் பாகம் கொடுத்து அத்தன பேருக்கும் இன்னொரு சிறந்த பகடி கதை கொடுத்த என்னோட அண்ட் நம்மளோட, one and only..
வாங்க கொஞ்சம் பக்கத்துல போய் பேசலாம் ..
எழுத்துப் பயணத்தில் நம்முடன் இன்று ..
1. புனைபெயர் – அப்பாவின் பேர் சொல்லும் பிள்ளையாக இருக்க நினைத்ததால் புனைப்பெயரில் எல்லாம் ஆர்வமில்லாது இருந்தது. இப்போது புனைப்பெயரில் சில கதைகள் எழுதினால் என்னவென்று தோன்றுகிறது. நீங்களே ஒரு நல்ல பெயராக சொல்லுங்களேன்…
2. இயற்பெயர் – இராஜலட்சுமி நாராயணசாமி
3. படிப்பு – இளநிலை கணிப்பொறியியல் ஹிஹி அதாங்க B.E computer science
4. தொழில் – தற்போதைக்கு எழுத்தும் குடும்பமும் மட்டுமே
5. பிடித்த வழக்கங்கள் – வாசித்தல், கதை சொல்லல் (ஓவர் வாயி), கதை கேட்டல், தூக்கம் (கிட்டத்தட்ட நான்காண்டுகளாக எட்டாக்கனியாக இருப்பது)
6. கனவு – அது நெறய வருமே.. வர்ற கனவெல்லாம் கதையாகிடும் ..
தூங்காம எப்டி கனவு?
அது பகல் கனவுங்க…
ஓ நீங்க லட்சியத்த கேக்கீங்களா.. அது வந்துங்க அது அது… அது.. செரி விடுங்க . அதெதுக்கு இப்ப, பயந்துற போறீங்க..
7. உங்களுக்கு ஏற்பட்ட எழுத்தின் மீதான தாக்கம் என்ன?
நான் எழுத்த தாக்குனதெல்லாம் இல்லைங்க. ஒன்னு வாசிப்பேன் இல்ல எழுதுவேன் அம்புட்டு தாங்க.
ஒவ்வொரு எழுத்தும் ஒவ்வொரு விதமான தாக்கத்தை ஏற்படுத்தும். சும்மா ஜாலிக்காக வாசிக்கிறேன், பொழுதுபோக்கா வாசிக்கிறேன் என்றெல்லாம் சொல்பவர்கள் கூட, மனதை உருகவைக்கும் ஒரு கதாப்பாத்திரத்திற்காக கண்ணீர் சிந்தாமல் இருக்க மாட்டார்கள். எல்லா எழுத்துமே தாக்கத்தை ஏற்படுத்துவது தான். அது நல்லவிதமானதா அல்லது வேறு மாதிரியானதா என்பதை எழுதுபவரின் எண்ணங்களும், வாசிப்பாளரின் கண்ணோட்டமும் முடிவு செய்கின்றன.
சில வரிகள், சில கதைகள், சில கதாப்பாத்திரங்கள் நமக்குள் ஏற்படுத்தும் தாக்கம் வாசித்து பல வருடங்கள் கடந்தாலும் நம்மை விட்டு நீங்காதிருக்கும்.
எனக்கும் அப்படி பல கதைகள், பல மாந்தர்கள் இருக்கிறார்கள். என் சிந்தனையை மட்டுமின்றி உறக்கத்தையும், கனவையும் கூட களவாடிய நூல்கள் இருக்கின்றன.
8. உங்களின் வாசிப்பு அனுபவம் பற்றி –
மளிகைக்கடை பொட்டலம் கட்டும் காகிதத்தைக் கூட வாசிக்காமல் தூக்கிப் போட மாட்டேன். அது கதையாகத் தான் இருக்க வேண்டுமென்பதில்லை. முழுமையோடு இருக்க வேண்டுமென்பதில்லை. கையில் கிடைத்தாலே வாசி வாசி என மனம் வசியம் ஆகிவிடும்.
சிறு வயதிலேயே எங்கள் ஊரில் நூலகம் கட்டியபோதே அதில் அப்பாவின் உறுப்பினர் அட்டையில் தெனாலிராமன் கதைகள் விக்கிரமாதித்தன் கதைகள் என ஆரம்பித்து, அம்மா பெயரிலும் உறுப்பினர் அட்டை வாங்கி, அணணன் பெயரிலும் வாங்கி, பின் இப்போது என் கணவர் பெயர் வரை நூலகத்தில் சேர்த்து அட்டை வாங்கி சந்தா கட்டி எல்லோர் பெயரிலும் ஒற்றை ஆளாக புத்தகங்களை அள்ளிக் கொண்டிருக்கிறேன்..
சிறார் நூல்களில் இருந்து கவனம் மாறி நாவல்கள் பக்கம் வந்தது எட்டாம் வகுப்பில் ராஜேஷ்குமார் நாவல்கள் அறிமுகமானபோது.
புரிந்தது புரியாததென கைக்கு கிடைத்ததெல்லாம் வாசித்து வாழ்க்கையின் ஒவ்வொரு படியிலும் ஒவ்வொரு அனுபவத்திலும் எப்போதோ வாசித்த ஒரு புத்தகம் நினைவில் இடறி, அப்போது புரியாததெல்லாம் இப்போது திடீரென புரிந்து ஒரு வெளிச்சம் பாயும் போது …. அந்த அனுபவத்தை உணர்ந்திருக்கிறீர்களா?
அந்த சுகம் வாசிப்பால் மட்டுமே சாத்தியப்படும்.
9. உங்களை எழுத தூண்டியது எது?
பள்ளிக்காலத்தில் இருந்தே கவிதைகள் எழுதுவேன். கல்லூரி படிக்கும் போது ஒரு நாவல் எழுதினேன் ரெக்கார்ட் நோட்டில். கையெழுத்துப் பிரதி. நண்பர்களிடம் சுற்றி காணாது போனது. பின், பிரதிலிபியில் கவிதைகள் எழுதினேன்.
ஒரு பெரும்புயலின் போது மூடநம்பிக்கையால் இறந்து போன சின்னஞ்சிறு பெண்ணின் கதையே என்னை நாவல்கள் பக்கம் மடைமாற்றியது.
10. எப்போது எழுத ஆரம்பித்தீர்கள்?
என் தனிப்பட்ட நோட்டுகளில் கிறுக்குவது பள்ளிக்காலத்தில் இருந்தே. அதை அறியாத தெரியாத பிறரின் பார்வைக்கு வைத்தது பிரதிலிபியில் 2018ம் ஆண்டு அக்டோபரில் இருந்து.
11. உங்களது எழுத்தை படித்தவரிடம் அதன் தாக்கத்தை உணர்ந்தது உண்டா?
அதை வாசித்த நன்மக்கள் அல்லவா சொல்ல வேண்டும்? வாசக நண்பர்கள் கமெண்டில் வந்து கழுவி ஊற்றாமல் நல்லதாய் நான்கு வார்த்தைகள் சொல்லும்படி அன்போடு வம்பில்லாமல் கேட்டுக் கொள்கிறேன்.
12 . எழுத்தால் எதையும் மாற்ற முடியும் என்று நம்புகிறீர்களா ?
எழுத்தால் நம் கற்பனையில் எதையும் மாற்றலாம். நிதர்சனத்தை மாற்ற இயலாது. ஆனால் இப்போது தான் செய்ய ஆரம்பித்திருக்கும் மணல் சிற்பம் போன்ற குழந்தைகளை நல்ல வாசிப்பு நல்வழியில் கொண்டு செல்லும். சிறார்களின் வாசித்தல் ஒரு சமூக மாற்றத்திற்கு வித்திடும் வலிமை கொண்டது.
சிறார்களுக்கான வாசிப்பை எங்கிருந்து தொடங்குவது என யோசிப்பவர்கள் பூஞ்சிட்டு மின்னிதழில் இருந்து துவங்கலாம்.
13 . மின்னூல் , பதிப்பு புத்தகம் . இவற்றினைப் பற்றி உங்கள் கருத்து என்ன ?
மின்னூல்கள் காலத்தின் கட்டாயம். அவை பல திறமையான, வாய்ப்பு கிடைக்காத எழுத்தாளர்களுக்கு வாயில்களைத் திறந்துவிட்டுள்ளன.
அச்சுப் புத்தகங்கள் காலப்போக்கில் மறைந்து போய், மின்னூல்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தும் காலம் நம் கண்ணெதிரே நிழலாடுகிறது.
நல்லதொரு அறிமுகத்திற்கும் தொடர் முன்னேற்றத்திற்கும் மின்னூல் துறையில் பெரும் வாய்ப்புகள் உள்ளன. வருவாய் ஈட்ட வழி உள்ளது.
என்னென்னவோ நன்மைகள் இருந்தாலும், சுலபமாக திறந்து கிடக்கும் வழி என்பதால் மலிந்த சரக்குகளும் ஏராளமாய் கிடைக்கத்தான் செய்யும். நல்ல நூல்களைத் தேர்வு செய்வதும் நல்ல பலன்களை அடைவதும் வாசிப்பாளர்களின் சாமர்த்தியம்.
14. நீங்கள் பதிபித்த பதிப்பு புத்தகங்கள் எத்தனை ? (அவற்றை பெற தொடர்பு கொள்ள ) –
ஸ்ரீ பதிப்பகத்தின் மூலமாக,
வாகை மாளிகை (magical realism)
கரிசக்காட்டு காரிகையே (village based love story)
முள்ளும் மலராய் தோன்றும் (love thriller – anti heroin story)
ஆகிய மூன்று புத்தகங்கள் வெளிவந்துள்ளன. புத்தகம் வாங்க விரும்புவோர் ஸ்ரீபதிப்பகத்தை அனுகலாம்.
தொடர்பு கொள்ள : +91 7038304765
15. ஆடியோ புத்தகங்கள் மீதான உங்கள் பார்வை என்ன ?
வாசிக்க நேரம் இல்லாதவர்களுக்கும், டிஜிட்டல் உலகில் கண்களுக்கு அழுத்தம் தராமல் செவிக்கு விருந்தளிக்க விரும்புவோருக்கும் ஒலிபுத்தகங்கள் வரப்பிரசாதம்.
பல நல்ல செயலிகளில் தரமான ஒலிப்புத்தகங்கள் கிடைக்கின்றன. கேட்பதற்கு நன்றாக இருக்கிறது. தொழில்நுட்ப வளர்ச்சியால் கிடைக்கும் இவ்விதமான நல்மாற்றங்கள் வரவேற்கப்பட வேண்டியவை.
அதே நேரம் ஆசிரியரின் அனுமதி இல்லாமல் அவர்களின் புத்தக ஒலிநாடாக்களை வெளியிட்டு அதன் மூலம் லாபமடைய முயல்வது மிகவும் கண்டிக்கத் தக்கது.
16 . எழுத்தாளரின் வெற்றி என்பது எதன் அடிப்படையில் இருக்கிறது ?
வாசிப்பவரிடம் ஒரு சின்ன சிரிப்பு மலர்ந்தால், ஒரு துளி கண்ணீர் வெளிவந்தால் அதுவே எழுத்தின் வெற்றி.
எழுத்தின் மூலம் பெயரோ, புகழோ, பணமோ கிடைத்தால் தான் அது எழுத்தாளரின் வெற்றி. நூற்றில் ஓரிரு எழுத்தாளர்களுக்கு தான் வெற்றி கிடைக்கிறது. பிற எழுத்தாளர்கள் ..???? நாம செத்து பல வருசம் கழிச்சாவது நம்ம எழுத்து கொண்டாடப்படும், காலம் கடந்தும் நிலைச்சு நிக்கும் என தம்மைத் தாமே தேற்றிக் கொண்டு எழுத வேண்டியது தான்.
17 . உங்கள் படைப்பில் எதையாவது எழுதி இருக்க வேண்டாம் என்று எண்ணியதுண்டா ?
அப்படி எதுவும் இல்லை. இனிமேலும் அப்படி எண்ண நேராது என்றே நினைக்கிறேன். தமிழ்க்கதை எழுதியதால் இழந்தது அதிகம். தமிழ்க்கதை 2 எழுதியதால் விலகிய வாய்ப்புகளும் அதிகம்.
ஆனால் எந்த வாய்ப்பையும் வளர்ச்சியையும் விட என் எழுத்தின் சுதந்திரம் பெரிதென நினைக்கிறேன். எழுத நினைப்பதை எழுதியே தீருவேன்.. தீர்ப்பேன் 😜
18 . உங்களின் படைப்புகளில் எது உங்களுக்கான அங்கீகாரத்தை பெற்றுக் கொடுத்ததாக நினைக்கிறீர்கள் ?
முதல் நாவலான வாகைமாளிகை.
19 . கதைக் கரு மற்றும் கதாப் பத்திரங்களை எப்படி தேர்வு செய்கிறீர்கள் ? அதற்கான மெனக்கெடல் எந்த அளவிற்கு கொடுப்பீர்கள் ?
என்னைச் சுற்றி நிகழும் செயல்களில், நான் கேள்விப்படும் செய்திகளில் என் மனதை அதிகம் பாதிக்கும் விசயங்களே என் கதைக்கருக்கள்.
என்னைச் சுற்றி உலாவும் மனிதர்களும் அவர்களின் மனங்களுமே என் கதாப்பாத்திரங்கள்.
இருப்பதை நமக்கேற்றார்போல நம் எழுத்தின் வீச்சால் வசீகரிக்கலாமே தவிர, இல்லாத ஒன்றை எழுதுவதென்பது யாராலும் இயலாது.
இருப்பதை என் பாணியில் எழுதுகிறேன் அவ்வளவே.
20 . நீங்கள் பெற்ற போட்டி பரிசுகள் –
பிரதிலிபியில் சீதையின் ராமன் சிறுகதை ஆடியோ நாவலாக தேர்வானது.
கறையடிப் பெருந்துயர் சிறுகதை பிரதிலிபியிலும், சங்கமம் தளத்திலும் பரிசு பெற்ற்து.
21. எதிர்வினை கருத்துக்களை எப்படி கையாள்கிறீர்கள்?
நேர்மறை கருத்துகளை எதிர்கொள்வது போலத்தான்.
22. நீங்கள் அதிகம் எழுத விரும்புவது எது ?
(கதை , கவிதை, தொடர்கதை, நாவல் , சிறுகதை) ஏன் ?
எனக்கு இன்று என்ன எழுதத் தோன்றுகிறதோ அதையே எழுதுவேன். இன்றும் நாளையும் ஒன்றல்ல.
ஒரு திடீர் மழை கவிதையை விதைக்கும். ஒரு சிறு நிகழ்வு நாவலாய் மலரும். அழகிய கனவொன்று சிறார் கதையாக பரிணமிக்கும். ஒரு ஆசை முத்தம் சிறுகதையாய் பிரசவிக்கும்.
ஒரு நெகிழ்ந்த பார்வை கட்டுரையாய் மடைமாறும்.
23 .ஏன் மாறுபட்ட கதைக்கரு கொண்ட கதைகள் வாசகர்களை அதிகமாக சென்றடைவதில்லை?
குடும்ப நாவல் வாசகர்களைப் பெருவாரியாக கொண்ட ஓரிடத்தில் போய், த்ரில்லர் கதையைக் கொடுத்தால் யார் வாசிப்பார்கள்? எல்லா கதைகளையும் வாசிக்கும் வாசகர்களும் இருக்கிறார்கள். சில கதை வகைக்களுக்கான ப்ரத்யேக வாசகர்களும் இருக்கிறார்கள்.
சரக்கு வாடிக்கையாளர்களைச் சென்றடையவில்லை என்றால் ஒன்று தவறான இடத்தில் வியாபாரம் செய்கிறீர்கள் அல்லது பிற வியாபாரிகள் பொய்க் கணக்கு காட்டுகிறார்கள் என்பதை உணருங்கள்.
24 . குடும்பம் காதல் சாராத கதைகளை நீங்கள் எழுதியது உண்டா? (படைப்பின் தலைப்பு)
எல்லாமே வெவ்வேறு தளங்களில் வெவ்வேறு உணர்ச்சிகளில் முயன்றவை தான். ஒன்றைப் போல மற்றொன்று நிச்சயமாக இருக்காது. 😊
25 . அனைவரும் படிக்க வேண்டிய புத்தகங்களாக நீங்கள் கருதுவது என்ன என்ன?
வாய்ப்பாடு ( அதான் ரொம்ப ரொம்ம்ம்ம்ம்ப முக்கியம்)
26 . ஓர் படைப்பின் வார்த்தை அளவுகள் பற்றி உங்களது கருத்து என்ன?
ஒரு கதை தன்னையே எழுதிக் கொள்ளும் என்பார்கள். வார்த்தை அளவுகளில் எல்லாம் பெரிதாக எனக்கு நம்பிக்கையில்லை.
எனினும் ஒரு சிறுகதையில் தெளிவாக எழுத வேண்டியதை எழுத முடியாதவன் எவ்வளவு பெரிய நாவலாக நீட்டினாலும் சொல்ல வருவதை தெளிவாக சொல்ல இயலாது என பல பெரிய தமிழ் எழுத்தாளர்கள் சொல்லியிருப்பதாக வாசித்திருக்கிறேன்.
சிறுகதைகள் எழுதுவது எழுத்தின் திறனை மேம்படுத்த உதவும் என நம்புகிறேன்.
27 . எழுதுபவர்கள் பெறும்பாலும் பயன் அடைவதில்லை.
அவர்கள் பயன்பெற நீங்கள் கூறும் சில யோசனைகள் என்ன?
நம் பொருளின் மதிப்பு நமக்கே நன்றாகத் தெரிந்தால் தான் பேரம் படியும்.
எல்லாமே வியாபாரம் தான்.. வியாபாரமாக செய்ய விரும்புபவர்கள் தன்னம்பிக்கையோடு விலை பேச வேண்டும்.
அங்கீகாரம் மட்டும் வேண்டுவோர், பொழுது போக எழுதுவோர், எந்த பிரதிபலனும் காணாமல் இலக்கியம் வளர்க்க
எழுதுவோர், வளர்ந்த இலக்கியத்தை அழிக்க எழுதுவோர், மில்ஸ் & பூன்ஸை அட்டக்காப்பி அடிப்போர் என பலவகை
இருப்பதால் அவரவர்க்கு என்ன பலன் வேண்டுமோ அதற்கேற்ப அவர்களே செயல்படுவார்கள் என்பதால்…
அட ஏம்மா நானே வியாபாரம் செய்யத் தெரியாம தான சுத்திட்டு இருக்கேன்.. என்ன போயி என்ன கேள்வி கேக்குற நீயி!
28 . உங்கள் தனித் தன்மை என்று தாங்கள் கருதுவது என்ன ?
நாந்தான்
ஹிஹி
29 . உங்களது கவிதை , பிடித்த வாக்கியம் , பழமொழி (பைனல் பஞ்ச்).
சின்ன சிரிப்பினிலே
என் சித்தம் கலங்கடித்தாய்!!
ஒற்றை அணைப்பினிலே
என் உயிரை உருக வைத்தாய்!!
குட்டி எட்டெடுத்து
என் பயணம் மாற்றி வைத்தாய்!!
பட்டு கரங்களினால்
என் வாழ்வில் வண்ணம் சேர்த்தாய்!!
அழகு வாயசைத்து
என் நெஞ்சம் இனிக்க வைத்தாய்!!
சொல்லாத வார்த்தைகளால்
ஒரு அகராதி படைக்க வைத்தாய்!!
கருவண்டு கண்களினால்
என் உலகை கவர்ந்திழுத்தாய்!!
செய்யும் சேட்டைகளால்
என்னை வியக்க வைத்தாய்!!
அறியாத செய்கைகளால்
என் இருப்பை தெளியவைத்தாய்!!
உனை சேயாக ஈன்றெடுத்தேன்..
தாய்மையை பரிசளித்தாய்!!
கடுந்தவங்கள் புரியவில்லை..
கண்ணீரில் கரைந்ததில்லை..
எனினும் வரமாய் கைசேர்ந்த்தாய்!!
என் உலகை உயிரை
உன்னுள் ஒளித்து வைத்தாய்!!
– நா. ராஜலட்சுமி
(கவினுக்காக எழுதினது. தாய்மையை விட ஸ்பெசல் எதாவது இருக்கா என்ன?)
30 . உங்கள் படைப்புகள் (லிங்க்குகளுடன்) (Youtube also ):
லிங்க்ஸ்
தமிழ்க்கதை-2 :
கரிசக்காட்டு காரிகையே :
பாவையடி நீயெனக்கு :
வைரஸ் மனிதம் :
வாகைமாளிகை :
காதலென்பது :
மனதை மயக்கிய மாயக்கண்ணன் :
அவனவள் :
உதிரம் :
சிறார் கதைகள் :
மாயவனத்தின் மந்திரக்குகை :
யானையின் அறிவு :
சமத்துவச்சாரல் :
குட்டிப்புலி பிங்கு :
Amazon kindle author page :
எல்லாருக்கும் என் செல்ல சண்டக்கோழி கூட பேசினது பிடிச்சி இருக்கும்-னு நினைக்கறேன். என் தோழிங்கறத தாண்டி நான் நேசிக்கும் ஒரு எழுத்தாளரா தான் இவளை பாக்கறேன் .
ராஜி எழுத்துக்கள் எப்பவும் தப்பான விஷயங்களை மக்களுக்கு சொல்லாது. இவங்க காதல் கதைகள் கூட அத்தனை கண்ணியமான எழுத்துக்கள் கொண்டு எழுதப்பட்டு இருக்கும். இவங்க முதல் கதை நான் படிச்சப்ப ரொம்பவே வியந்து போனேன். இவங்க எழுத்து நடை, கதை நகர்வில் இருந்த தெளிவு, அட்டக்காளி பத்தின விஷயங்கள், வகை வகையான விளக்கு பூஜைகள், பல தலைமுறைகளை இவங்க கதைல இணைச்ச விதம் எல்லாம் பாத்து, நிஜமா முதல் முயற்சி இவ்ளோ அருமையா கொடுக்க முடியுமானு வியப்பும், சந்தோஷமும் பட்டேன்.
இவங்களோட இன்னொரு அற்புதமான படைப்பு பகடி கதைகள் தான்.. தமிழ் கதை பாகம் (1 & 2).. இந்த கதைல இவங்க சொன்ன விஷயங்கள் தான் இன்னிக்கி வரை நிறைய கதைகள்-லையும் , படங்கள்-லையும் நம்ம பாக்கறோம். அது என்னனு நான் இங்க சொல்ல மாட்டேன். நீங்க அந்த கதைகள் படிச்சி பாருங்க அப்போ புரியும்.
சிறார் கதைகள் இவங்க கொடுக்கற விதம் நாமளும் சின்ன குழந்தையாவே மாறி படிக்கலாம் அப்டி இருக்கும் .
கறையடி கதை படிச்சி மனசு கனத்து போச்சி. ராஜி எழுத்துக்கள் அவங்களுக்குனு ஒரு எடத்த உருவாக்கிட்டு வருது. இன்னும் நிறைய நிறைய விஷயங்களை இவங்க எழுத்துல படிக்க ஆசைப்படறேன்.
நீங்க போக வேண்டிய தூரம் நிறைய இருக்கு, உங்க எழுத்த படிச்சிக்கிட்டே நாங்களும் உங்களோட வருவோம் ராஜிமா ..
உங்க அத்தனை முயற்சிகளுக்கும் எங்களோட மனமார்ந்த வாழ்த்துகள்..
மீண்டும் ஒரு அருமையான எழுத்தாளரோட சீக்கிரம் வரேன் ..