வணக்கம் நட்பூஸ் அண்ட் சகோஸ் ..
இன்னிக்கி நம்மலோட பயணத்துல முதல்ல நம்ம கூட பேசிட்டே வரப்போறது யாருனு கெஸ் பண்ணுங்க ..
என்னோட வாழ்க்கைல ரொம்ப பெரிய மாற்றம் மட்டுமில்ல, நான் எழுத ஆரம்பிக்க பெரிய தாக்கத்தை கொடுத்தவங்க ..
நம்ம எல்லாருக்கும் நல்லா தெரிஞ்சவங்க தான் ..
நான் முதல் முதல் பேசணும்னு ஆசை பட்ட எழுத்தாளர். இவங்களோட ஒரு கதை எனக்கு ரொம்ப பெரிய திருப்புமுனை..
அவங்க வரிகள் என்னை சரியான நேரத்துல சரியான வழில போக வச்சது ..
அவங்க எழுத்துல சூறாவழியா சுழட்டினாலும் தென்றலா கடைசில மாறுவாங்க ..
இதோ நம்மலோட தென்றலக்கா..
எழுத்துப் பயணத்தில் நம்முடன் இன்று..
1. புனைபெயர் – ராணிதென்றல்
2. இயற்பெயர் – செல்வராணி..
பட் எனக்கு இந்தப்பேர் சுத்தமா பிடிக்காது..செல்வம்லாம் எதுக்குப்பான்னு பெரியமனசு பண்ணி அத தாரவார்த்துட்டு ராணியா மட்டும் இருப்போம்னு இருக்கும்போதுதான் எழுத்தாளர் அவதாரம் எடுத்தாச்சு..வாழ்க்கை முழுக்க புயலா வீசுதேனு பேர்லயாச்சும் இருக்கட்டுமேன்னு ராணியோடதென்றல்னு சேத்து நானே நாமகரணம் சூட்டிக்கிட்டேன்
பதில் கொஞ்சம் லென்த்தாதான் போயிருச்சோ…..
3. படிப்பு –
பி.எஸ்.சி, எம்.எஸ்.சி, பி.எட், எம்பிபிஸ், ஐஏஎஸ்.. இப்டிலாம் பெரிய பெரிய படிப்பு படிக்கணும்னு ஆசைதான்..
பட் என்ன செய்ய பத்தாவது படிச்சதுக்கே இவ ரொம்ப வாயாடுறா.. புரட்சி வேற பேசுறாளேன்னு அத்தோட அடிச்சு புடிச்சு அத்த மகன் தலைல கட்டிவெச்சுட்டாங்க.. ஸோ சேட்…
4. தொழில் – பி.எம்..
என்னோட குடும்பத்துக்கு..
5. பிடித்த வழக்கங்கள் –
விதவிதமா சாப்பிடுறது.. வேலையே செய்யாம தூங்குறது.. பிகாஸ் பேசிக்கலி.. கதகளி.. ஐ யாம் எ சோம்பேறி..
6. கனவு –
அது டெய்லி விதவிதமா வித்தியாசமா வரும்.. சில சமயம் ஊருக்குள்ள கொள்ளப்பேத்த போட்டுத்தள்ளுற மாதிரில்லாம் கூட கனவு வரும்..
எந்த கனவ கேக்குறீங்க?
யூ மீன் எதிர்கால கனவு என்னனு கேக்குறீங்களோ?
அது வந்து.. அதுவந்து..
நம்ம காண்ற கனவெல்லாம் எங்கயா நடக்குது? நடக்குறத மட்டும் அனுபவிப்போம்னு எல்லா கனவுகளையும் எப்பவோ மூட்ட கட்டி புதைச்சாச்சு …
7. உங்களுக்கு ஏற்பட்ட எழுத்தின் மீதான தாக்கம் என்ன?
பொதுவா வாய்மொழியா பேசமுடியாத எண்ணங்கள கூட ரொம்ப அழகா எழுத்துல கொண்டுவந்துட முடியும்.. அதுவும் நம்ம அழகு தமிழ் மொழியில எழுதுறதுன்னா அந்த இன்பமே தனிதான்..
என் மொழியின் மீதான தாக்கம்தான் எழுத்துக்கள் மீதும் கதைகள் மீதும் உண்டாகிப்போனது!
8. உங்களின் வாசிப்பு அனுபவம் பற்றி –
வாசிப்பு அனுபவம்ங்குறது கதைக்கு கதை மாறுபடும்..
ஒவ்வொரு கதைலயும் ஒரு மாதிரி அனுபவமும், உணர்ச்சிகளும் உண்டாகும்..
அது எந்த மாதிரியான கதைகள வாசிக்குறோம்ங்குறத பொறுத்து இருக்கு.. வாசிச்சு முடிச்ச பிறகும் அந்த வாசிப்பின் தாக்கம் நாலு நாளானாலும் நெஞ்சுக்குள்ள போகாம இருந்தா அதுதான் சிறந்த அனுபவம்.. ரீசண்ட்டா வேள்பாரி படிச்சு அதுமாதிரியான தாக்கம் உண்டானது!
9. உங்களை எழுத தூண்டியது எது?
இதுக்கு 7ம் கேள்விக்கான பதிலும் பொருத்தமாக இருக்கும்னு நினைக்கிறேன்…
10. எப்போது எழுத ஆரம்பித்தீர்கள்?
2017 டிசம்பர்ல பிரதிலிபியில் தொடங்கிய பயணம்…
இந்த வருஷம் டிசம்பர் வந்தா நான்கு வருடங்கள் பூர்த்தியாகும்!
11. உங்களது எழுத்தை படித்தவரிடம் அதன் தாக்கத்தை உணர்ந்தது உண்டா?
நிறைய்ய்ய……
என்னோட கதைகள படிச்ச பலபேர் ரசிச்சு ருசிச்சு பக்கம் பக்கமா விமர்சனம் குடுக்குறப்பவும், உங்க கதை படிச்சு நல்லா சிரிச்சேன் ரிலாக்ஸா இருக்கேன்னு ரெண்டு வரியில சொல்றப்பவும், சொல்ல வார்த்தை இல்லன்னு ஒரே வரியில சொல்லும்போதும் கூட, எனது எழுத்தின் தாக்கம் வாசகர்களுக்குள்ள எந்தளவுக்கு இறங்கியிருக்குன்னு நல்லாவே உணரமுடியுது அது பலமடங்கு எனக்குள்ளயும் ஒரு பயத்த உண்டாக்குதுன்னுதான் சொல்லணும்!
12 . எழுத்தால் எதையும் மாற்ற முடியும் என்று நம்புகிறீர்களா ?
நிச்சயமாக.. உணர்வுகளின் வெளிப்பாடுகள் முழுவதையும் அச்சுப்பிசகாமல் அப்டியே சொல்ல முடியும்னா அது எழுத்துக்களால் மட்டும்தான் முடியும்.. அத படிக்கிறவங்க நூத்துல முக்கால்வாசி பேரால நம்ம உணர்ச்சிகளை நிச்சயமா புரிஞ்சுக்க முடியும்னு நம்புறேன்!
அதுல ஒரு பகுதி பேராச்சும் நம்ம கருத்துக்கள அப்சர்வ் பண்ணிக்க மாட்டங்களா என்ன?
13 . மின்னூல், பதிப்பு புத்தகம். இவற்றினைப் பற்றி உங்கள் கருத்து என்ன ?
இதுல கருத்து சொல்ல என்ன இருக்கு?
இதன் வழியாக நம்ம கதைகள அடுத்த கட்டத்துக்கு எடுத்துட்டுப்போலாம்..
இன்னும் விரிவா பரவலா எல்லார்கிட்டயும் கதைகள கொண்டுபோய் சேக்கலாம்..
புத்தகப்பதிப்பு நம்ம எழுத்துக்கான ஒரு அங்கீகாரமாவும் இருக்கும்..!
பட் அச்சுப்பதிப்பாகட்டும், மின்நூல் பதிப்பாகட்டும் ரெண்டுமே இப்போ ஒரு வியாபாரமாதான் போய்ட்டுருக்கு..
இதுல விவசாயிகள் நிலைமைபோலதான் எழுத்தாளர்களுக்கும்! இதுக்கு மேல நா வாய திறக்க விரும்பல..
14. நீங்கள் பதிப்பித்த பதிப்பு புத்தகங்கள் எத்தனை ? (அவற்றை பெற தொடர்பு கொள்ள ) –
மதிவதனி நான் மதிவதனி,
வஞ்சனை ஏனோ வஞ்சிக்கொடியே,
தென்றலேதீண்டாதே முதல் பாகம்..
இதெல்லாம் அஜுத்யாகாந்தனுடைய பதிப்பகத்துல வெளிவந்தது..
(தொடர்பு கொள்ள : 9080515206)
இருகோடுகள்,
அந்தித்தப்ரதம்
ரெண்டும் ATM பதிப்பகம் மூலமா வெளிவந்தது..
(ஸாரி இனிமே எப்பவுமே ATM பதிப்பகத்துல என்னுடைய புத்தகங்கள் வெளியாகாது)
15. ஆடியோ புத்தகங்கள் மீதான உங்கள் பார்வை என்ன ?
நாம உருவாக்கிய கதாபாத்திரங்கள் நேரடியா பேசுறது போல கேக்குறதும் ஒருவகைல நல்லாத்தான் இருக்கும்..பட் நாம கற்பனைல நினைச்ச அதே மாடுலேஷன்ல வாய்ஸ் குடுக்குறவங்களால கொண்டு வரமுடியாது.. அதுல கொஞ்சம் ஒத்துப்போனாலே கேக்க சந்தோஷமாத்தான் இருக்கும்..
16 . எழுத்தாளரின் வெற்றி என்பது எதன் அடிப்படையில் இருக்கிறது ?
நமது கற்பனைகளையும், எண்ணங்களையும் எழுத்து வடிவில் உருவாக்கி, அந்த எழுத்துக்களை உயிருள்ள காட்சிகளாக, வாசிப்பவரின் விழித்திரைகளில் திரைப்படமாக மாற்றமுடியுமாயின், அதுவே அந்த எழுத்தாளரின் வெற்றியின் மையப்புள்ளியாக அமையும்!
17 . உங்கள் படைப்பில் எதையாவது எழுதி இருக்க வேண்டாம் என்று எண்ணியதுண்டா ?
அப்டி ஒரு சங்கடமான சூழல் எனக்கு இன்னும் அமையல..
இனிமேலும் அமையக்கூடாதுன்னு நினைக்கிறேன்!
18 . உங்களின் படைப்புகளில் எது உங்களுக்கான அங்கீகாரத்தை பெற்று கொடுத்ததாக நினைக்கிறீர்கள் ?
‘மதிவதனி நான் மதனின்வதனி’
இந்த கதைதான் என்னோட எழுத்துப்பயணத்துல ஒரு திருப்புமுனையா அமைஞ்சுதுன்னு சொல்லலாம்!
19 . கதை கரு மற்றும் கதா பத்திரங்களை எப்படி தேர்வு செய்கிறீர்கள் ? அதற்கான மெனக்கெடல் எந்த அளவிற்கு கொடுப்பீர்கள் ?
சினிமாவுலதான் கதாபாத்திரத்துக்கு ஏத்தமாதிரி நடிகர்கள தேர்ந்தெடுக்கிறதுல ஒரு மெனக்கெடல் தேவைப்படும்..
என்னோட கதைகள பொறுத்தவரைக்கும் ஒரு கதைக்கான கதாபாத்திரங்கள் எத்தனை வேணும் அது எப்டி இருக்கணும்ங்குற மாதிரியான திட்டங்கள்லாம் எப்பவுமே நா வெச்சுக்கிறதில்ல..
கதை போற போக்குல கதாபாத்திரங்கள் அமையுறதுதான்! ஒரு சின்ன மையப்புள்ளி மட்டும்தான் கதை ஆரம்பிக்கும்போது இருக்கும்..
அத்தியாயம் நகர நகர அந்தப்புள்ளிய சுத்தி கோலங்கள் உருவாக ஆரம்பிச்சுடும்..
என்னுடைய பாணி இதுதான்..
20 . நீங்கள் பெற்ற போட்டி பரிசுகள் –
வெளியில பெருசா எந்த போட்டிலயும் கலந்துகிட்டத்தில்ல..
பிரதிலிபி போட்டிகள் சிலதுல மட்டும் கலந்துருக்கேன்..
அதுல சில வின் பண்ணியிருக்கு அவ்ளோதான்
21. எதிர்வினை கருத்துக்களை எப்படி கையாள்கிறீர்கள்?
சிரிச்சி தான்…
வேற என்ன பண்ணமுடியும்? எதிர்மறை கருத்துக்களையும் உங்களுக்கான பயணத்தின் ஏணிப்படியாவே நினைச்சு கடந்துவரப்பழகுங்க அதுதான் ஆரோக்கியமாவும் இருக்கும்.. இது என்னுடைய மிகச்சிறிய அறிவுரை….
22. நீங்கள் அதிகம் எழுத விரும்புவது எது ? (கதை , கவிதை, தொடர்கதை, நாவல் , சிறுகதை) ஏன் ?
தொடர்கதைதான்..
ஏன்? ஆமா ஏன்?
கவிதை எழுதுற நேரத்துக்கு ரெண்டு அத்தியாயம் எழுதி முடிச்சுடுவேன்….
சிறுகதை எழுத ஆரம்பிச்சா அது பெருங்கதையாதான் முடியும்….
ஒரே நாவலா எழுதி முடிச்சு பதிப்பிக்கிறத விட ஒவ்வொரு அத்தியாயமா ஒரு தொடரா கொண்டுபோனாத்தான் ஸ்வாரஷ்யமா இருக்கும்ங்குறது என்னோட அபிப்ராயம்!
23. ஏன் மாறுபட்ட கதைக்கரு கொண்ட கதைகள் வாசகர்களை அதிகமாக சென்றடைவதில்லை?
அது வாசகர்களை பொறுத்த விஷயம்..
24 . குடும்பம் காதல் சாராத கதைகளை நீங்கள் எழுதியது உண்டா? (படைப்பின் தலைப்பு)
என்னுடைய எல்லா கதைகளுமே குடும்பம் காதல் சார்ந்ததுதான்!
25 . அனைவரும் படிக்க வேண்டிய புத்தகங்களாக நீங்கள் கருதுவது என்ன என்ன?
எல்லா விதமான புத்தகங்களையும் எல்லாருமே படிக்கலாம்.. வாசிப்பு தீனிக்கு இதுதான் ஏற்றதுன்னு எந்த கோட்பாடும் கிடையாது..
எல்லாத்தையும் படிச்சு தெரிஞ்சுக்குறது ஒன்னும் தப்பில்லையே…
26 . ஓர் படைப்பின் வார்த்தை அளவுகள் பற்றி உங்களது கருத்து என்ன?
வார்த்தை அளவுகள்ங்குறது முன்கூட்டியே தீர்மானிச்சும் கொண்டுவரலாம், இல்ல கதை போற போக்குக்கு ஏத்த மாதிரி கூட்டி குறைச்சும் பண்ணிக்கலாம்!
எழுத்தாளரோட எழுத்துநடைக்கு ஏற்ப வார்த்தை அளவுகளும் இருக்கும்..!
சிலரால ஒரு விஷயத்த சுருங்க சொல்லி விளங்க வைக்க முடியும்.. சிலருக்கு அதையே கொஞ்சம் விரிவா கொண்டுபோனாத்தான் திருப்தியா இருக்குற மாதிரி தோணும் ஸோ வார்த்தை அளவுகள் அந்தந்த எழுத்தாளர்கள் கைலதான் இருக்கு….
27 . எழுதுபவர்கள் பெறும்பாலும் பயன் அடைவதில்லை. அவர்கள் பயன்பெற நீங்கள் கூறும் சில யோசனைகள் என்ன?
பயன் அப்டிங்குறது புகழா இல்ல பணமா?
புகழ் வேணும்னா அது நம்ம திறமைக்கு ஏத்த மாதிரி தானா கிடைக்கிற விஷயம்..
அதெல்லாம் பணம் குடுத்தோ விளம்பரம் செய்தோ இல்ல பலரால ஏத்துக்க முடியாத நெகட்டிவ் விஷயங்கள எழுதி பரப்பிவிடுறதாலயோ சத்தியமா பெற முடியாது..
உண்மையான புகழ் அப்டிங்குறது பலதரப்பட்ட வாசகர்கள் மனசுலயும் உறவா உயிரா என்னிக்கும் நீங்காத இடம் பிடிக்கிறதுதான்..
அதுக்கு நேர்வழில திறமைய அதிகப்படுத்தினாலே போதுமானது…..
பணம் அப்டின்னா..
அத சம்பாதிக்கிற வழி எனக்கு தெரியாது தெய்வமே..!
28 . உங்கள் தனி தன்மை என்று தாங்கள் கருதுவது என்ன ?
தெரியலையே.. இது எனது வாசகர்கள் முன் வைக்க வேண்டிய கேள்வி…
29 .உங்களது கவிதை , பிடித்த வாக்கியம் , பழமொழி (பைனல் பஞ்ச்)
எனது கதைகளில் உங்களுக்கு பிடித்த கவிதை , பிடித்த வாக்கியம் , பழமொழி (பைனல் பஞ்ச்). இந்த இடங்களை வாசகர்கள் நிரப்பிக்கொள்ளவும்
30 . உங்கள் படைப்புகள் (லிங்க்குகளுடன்) :
அத்தனை லிங்கும் எடுத்து காப்பி டீ போட நேரமில்லாத காரணத்தால்..
Pratilipi:
https://tamil.pratilipi.com/user/nsgodqq3ws?utm_source=android&utm_campaign=myprofile_share
Amazon kindle:
நீங்க விழுந்து விழுந்து , உருண்டு பெரண்டு சிரிப்பீங்க அதுக்கு நாங்க காரன்டி .. ரிலாக்ஸ் பண்றதுக்கு சிறந்த சாய்ஸ் நம்ம ராணி க்கா கதைகள் .. பல பேர சிரிக்க வைக்கறாங்க, இனிமேலும் நம்மள நிறைய சிரிக்கவும், சிந்திக்கவும் வைப்பாங்க ..
இந்த லிங்க்ல நம்ம தென்றலாடும் சோலைக்கு போகலாம் ..
மறுபடியும் இன்னொரு எழுத்தாளர நம்ம பயணத்துல சந்திக்கலாம் ..