வாசகருடன் சில நிமிடங்கள் ..
1. பெயர்- செல்வராணி
2. படிப்பு- ஏ எல் எனப்படும் மேல் நிலைப்பள்ளி (இலங்கை).
3. தொழில் / வேலை – இல்லத்தரசி
4. உங்களின் வாசிப்பு எப்போது தொடங்கியது?
நினைவு தெரிந்த நாட்களில் இருந்து வாசிக்கறேன் . படக்கதையில் இருந்து அம்புலிமாமாவில் ஆரம்பித்தது.
5. எந்த மாதிரியான சூழ்நிலையில் நீங்கள் வாசிப்பை நாடுவீர்கள்?
நேரம் காலமே இல்லை. இப்போது சற்று குறைத்திருக்கிறேன். கண்ணுக்கு ஓய்வு தேவை என்பதால்.
6. உங்களின் வாசிப்பு என்பது பெரும்பாலும் புத்தகங்கள் வழியிலா? கணினி வழியிலா?
தற்சமயம் கணினி தான். புத்தகங்களும் படிப்பதுண்டு.
7. ஒரு வருடத்தில் எத்தனை புத்தகங்கள் வாங்குவீர்கள்? எத்தனை புத்தகங்களை படிப்பீர்கள் ?
வீட்டில் யாரும் அதிகம் படிப்பதில்லை. இடவசதியில்லை என்பதால் அதிகம் வாங்குவதில்லை. நூலகத்தில் சென்று எடுப்பதும் உண்டு.
8.Ebook/Paperback புத்தகம் எதில் உங்களின் வாசிப்பு முழுமை பெறுவதாக உணர்கிறீர்கள்?
கால மாறுதலுக்கு ஏற்ப கணிணிக்கு மாறிவிட்டேன். புத்தகத்துக்கு ஈடு எதுவும் இல்லை என்பதே உண்மை.
9. வாசிப்பினால் உங்களுக்கு ஏற்பட்ட முதல் தாக்கம் என்ன?
சிறு வயதில் கற்பனை உலகில் மாய உலகில் சஞ்சரித்தது உண்டு. அம்புலி மாமா வகை கதைகள் மூலம்! வளர வளர எண்ணங்களும் அறிவும் மாறியது. பதின்பருவத்தில் சரித்திரக் கதைகளில் மயங்கியதும், கல்கி, சாண்டில்யன் எழுத்துகளில் மூழ்கியதும், கல்லூரி காலத்தில் காதல் கதைகள், குமுதம் விகடன் அறிமுகம். பின்னர் சுஜாதாவின் எழுத்துகள். சற்று காதல் கதைகள் சலிக்கும்போது பெண்ணியம் பேசும் எழுத்துகள், வாஸந்தி, வசங்கரி ஜோதிர்லதா இப்படி பெண் எழுத்தாளர்களின் எழுத்துகள். இப்படி பரந்து பட்ட அனுபவங்கள். இப்போது ஆன்லைனில் எழுதும் இளம் எழுத்தாளர்கள் வியக்க வைக்கிறார்கள்.
10. வாசிப்பினால் கிடைத்த அனுபவத்தினால் உங்களது செயல்பாடு / குணாதிசயங்கள் மாற்றிக் கொண்டது உண்டா? அது என்ன?
நிச்சயமாக. இரண்டாம் திருமணம் குறித்த கருத்துகள், பெண்களின் முன்னேற்றம் குறித்த கருத்துகள், சிங்கிள் மதர் பற்றிய பார்வை. குடும்ப உறவுகள் பற்றிய பார்வை. ஆண்களின் மன நல பிரச்சினை பற்றிய கோணம். இப்படி பல விஷயங்களில் என் பார்வை மாறியிருக்கிறது.
11. புதிய புத்தகங்களை எப்படி தேர்வு செய்கிறீர்கள்? (அட்டை படம், தலைப்பு, ஆசிரியர், பதிப்பகம், முன்னுரை.. )
ஆசிரியர் தான் முதல் தேர்வு.சில தலைப்பு பிடிக்காவிட்டால் கதையை மேலோட்டமாக மேய்ந்து பின் முடிவெடுப்பேன்.
12. உங்களுக்கு எந்த வகையான புத்தகங்கள் / கதைகள் மிகவும் பிடிக்கும்? (சுயசரிதம், மர்மம், திகில், சாகசம், காதல், குடும்பம், ஆன்மீகம், ரொமான்டிக், வரலாறு, புராண கதைகள், இலக்கியம் , சரித்திரம் , etc….)
அவை மாறிக்கொண்டே இருக்கும். என் மூடுக்கேற்ற மாதிரி. காதல் கதைகள் இரண்டு படித்தால் சீரியஸ் கதை இரண்டு படிப்பேன். மர்மம், திகில் ரொம்ப பிடிக்கும். ரொமாண்டிக் கதைகள் ஒரு கால கட்டத்தில் பிடித்தது. இப்போது அவை எல்லை மீறிவிட்டதாக எனக்கு தோன்றும் சில எழுத்தாளர்கள் கதைகளை தொடுவதே இல்லை. ரசிப்புக்கும் குமட்டலுக்கும் வேறுபாடு உண்டல்லவா? அதே சமயம் கவிதைபோல் எழுதும் ரொமான்ஸ் எழுத்தாளர்கள் கதைகள் ரொம்ப பிடிக்கும்.
13. “எழுத்தாளர்” என்பவர் உங்களுக்கு எப்படிபட்ட உறவாக தெரிகிறார்கள்?
நிறைய எழுத்தாளர்களுடன் கருத்துகளை பகிர்ந்து கொள்வதுண்டு. வெகு சிலரிடம் மட்டுமே குறைகளை குறிப்பிடுவேன். வீண் விவாதங்களுக்கு இடம் கொடுக்க வேண்டாமே என்பதால் இப்போது அதிக விமர்சனங்களும் எழுதுவதில்லை. என்னைப் பொறுத்தவரை எழுத்துகளை மட்டுமே ரசிக்கவேண்டும். எழுத்தாளர்களை நெருங்காது இருப்பது உத்தமம்.
14. உங்கள் வாழ்வில் முக்கிய திருப்பம் ஏற்படுத்திய புத்தகம் / கதை என்ன?
குறிப்பிட்டு சொல்ல முடியவில்லை. ஒவ்வொரு புத்தகமும் ஒவ்வொன்றை சொல்லிக் கொடுத்துக் கொண்டே இருக்கிறது. கால மாற்றத்தில் தினம் தினம் ஏதோ ஒன்றை நாம் கற்றுக்கொண்டே தான் இருக்கிறோம். அன்றைய எழுத்துகளில் இருந்து இன்று எழுதுபவர்கள் வரைக்கும் ஒவ்வொருவரும் நமக்கு கற்றுக்கொடுத்துக் கொண்டே தான் இருக்கிறார்கள். சமீபத்தில் உளவியல் சார்ந்த கதைகள் நிறைய எழுதுகிறார்கள். அவைகளில் இருந்து நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்கிறேன். அவற்றில் இருந்து நானும் நிறைய விஷயங்களில் மாறியிருக்கிறேன்.
15. அன்றைய எழுத்தாளர்களுக்கும், இன்றைய எழுத்தாளர்களுக்கும் உங்களுக்கு தோன்றும் வித்தியாசங்கள் என்னென்ன?
அன்றைய காலத்தை அவை பிரதிபலித்தன, இன்றைய காலத்தை ஒட்டி இன்றைய எழுத்தாளர்கள் பிரதிபலிக்கிறார்கள். காலத்துக்கு ஏற்ப கருத்துகளும் மாறுகிறது. ஆனால் கண்ணியத்துடன் கூடிய எழுத்துகள் இன்று குறைந்து விட்டதாக நான் கருதுகிறேன். எப்படியாவது தன் கதை பேசப்பட வேண்டும் என நினைத்து சிலர் தரம் தாழ்ந்து எழுதுவதாக நான் நினைக்கிறேன். அவற்றை நாம் கண்டுக்காமல் விட்டாலே அவை காலப்போக்கில் தொலைந்துவிடும். நல்ல எழுத்துகளை தேடிப்படிப்பது வாசகனின் வேலை. நல்ல கதைகளை படித்துவிட்டு அதைப்பற்றி பொது வெளியில் பாராட்டாமல் கடந்து செல்வது என்னைப் பொறுத்தவரை பெரிய குற்றமாக நினைக்கிறேன்.
16. இன்றைய எழுத்தினால் மொழி வளர்ந்து வருவதாக நினைக்கிறீர்களா?
நிச்சயமாக. அழகு தமிழில் எழுதுபவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். சமீபத்தில் பர்வீனின் மொழியின் வசீகரத்தில் நான் வியந்திருக்கிறேன். சட்டென வேறு பெயர்கள் நினைவுக்கு வரவில்லை. மற்றவர்கள் தவறாக நினைத்துவிடாதீர்கள். சிலர் தேவையில்லாமல் ஆங்கிலம் கலப்பது சற்று நெருடலாகத்தான் இருக்கிறது. முடிந்தவரை நிறைய தமிழ் வார்த்தைகள் அறிமுகம் செய்யுங்கள் நண்பர்களே. நான் நிறைய பேரின் வசனங்களை குறிப்பிட்டு பாராட்டியது உண்டு.
17. “வழக்குமொழி, பேச்சுமொழி, வட்டாரமொழி, செந்தமிழ்மொழி” இதில் எது வாசிக்கும் போது உங்களுக்கு நெருக்கமாக இருக்கிறது? எந்த வகையை அதிகமாக வாசிப்பீர்கள்?
வட்டார மொழி ரொம்ப பிடிக்கும். செந்தமிழை விட பேச்சுமொழி, வழக்குமொழி, வட்டாரமொழி மனதுக்கு நெருக்கமாக இருக்கும்.
18. வரலாற்று நாவல்கள் வாசிப்பீர்களா? எந்த நாவல் மிகவும் பிடிக்கும்?
சமீபத்தில் எதுவும் படிக்கவில்லை. எப்போதும் கல்கி தான். சாண்டில்யன், கண்ணதாசன் போன்றோரின் எழுத்துகளும் பிடிக்கும்.
சுஜாதாவின் ரத்தம் ஒரே நிறம் ரொம்ப பிடிக்கும்.
19. இன்றைய காதல் / குடும்ப நாவல்கள் பற்றிய தங்களின் கருத்து என்ன?
கிட்டத்தட்ட அனைத்து கதைகளும் ஒரே டெம்ப்லேட்டில் இருப்பது அலுப்பான விஷயம். அதிலும் வித்தியாசமான எழுத்து நடையில் சிலர் ஸ்கோர் செய்கிறார்கள். அனேகமாக நாம் யூகிக்கும் வகையில் கதைகள் இருக்கும்போது சலிப்பு ஏற்படுவதை தவிர்க்க முடிவதில்லை. ஆனாலும் அவற்றை மிக சுவாரஸ்யமாக எழுதுபவர்கள் ஜெயிக்கிறார்கள். ஏழு ஸ்வரங்கள் தான் இருக்கின்றன. ஆனாலும் பாடல்கள் பிரபலமாகிக்கொண்டே தானே இருக்கின்றன? அந்த சூட்சுமம் தெரிந்தவர்கள் ஜெயித்துக்கொண்டே இருக்கிறார்கள்!
20. வித்தியாசமான கரு கொண்ட கதைகளை பிடிக்குமா? அறிவியல் சார்ந்த புத்தகங்கள் / கதைகள் வாசிப்பீர்களா?
தேடிப் படிப்பேன். நண்பர்களுடன் சேர்ந்து தேடிக்கொண்டே தான் இருக்கிறோம். புதுபுது கருக்கள் ரொம்ப பிடிக்கும். பூர்ணிமா கார்த்திக், ரியா மூர்த்தி போன்றோரின் பேண்டஸி கதைகள் எனக்கு பிடித்தது. சட்டென இவர்கள் பெயர் தான் நினைவுக்கு வந்தது!
21. வாசிப்பதற்கு தினமும் நேரம் ஒதுக்குவீர்களா? எத்தனை நேரம்?
ஆன்லைனில் வரும் தொடர்களை எல்லாம் படிக்க முடியாவிட்டாலும் சிலவற்றை உடனே படித்துவிடுவேன். சேர்த்து வைத்து படிக்க முடிவதில்லை. நேரம் காலம் இல்லை. அனேகமாக இரவில் தான் படிப்பேன்.
22. வாசித்தபுத்தகம் / கதை பற்றி விமர்சனம் கொடுப்பீர்களா ? எழுத்தாளரின் தவறுகளை எந்த விதத்தில் சுட்டிக்காட்டுவீர்கள்?
கண்டிப்பாக இரண்டு வரியாவது பாராட்டிவிடுவேன். விமர்சனம் இப்போது நிறைய எழுதுவதில்லை. தவறுகளை சுட்டிக்காட்டினால் நல்லவிதமாக எடுத்துக் கொள்பவர்களிடம் குறிப்பிடுவேன். எல்லாருக்கும் சொல்வதில்லை. கதை சற்று தொய்வடைந்தாலோ, வழக்கத்துக்கு மாறாக எழுத்து சற்று பின்னடைந்தாலோ, இன்பாக்ஸில் குறிப்பிடுவேன். பொதுவாக சில இடங்கள் எனக்கு உடன்பாடில்லாவிட்டால் விமர்சனத்திலேயே குறிப்பிடுவதும் உண்டு.
23. உங்களுக்குமிகவும் பிடித்த புத்தகங்கள் / கதைகள் (5)
ஹமீதாவின் கதைகள், ஹேமா ஜெய்யின் கதைகள், பர்வீனின் கதைகள், நித்யாமாரியப்பன் கதைகள், ப்ரியா ஜெகநாதன் கதை ஒன்று தான் படித்தேன். நல்லாருக்கு. இன்னும் நிறைய பேரின் கதைகளும் இருக்கு. சமூக சிந்தனையுடன் கூடிய சிறுகதைகள் ரொம்ப பிடிக்கும். உடனே நினைவுக்கு வரவில்லை. நான் விமர்சனம் எழுதியிருக்கும் கதைகளின் எழுத்தாளர்களுக்கு புரியும்.
24. நீங்கள் வாசித்ததில் மறக்கமுடியாத / மனதை மிகவும் தொட்ட விஷயங்கள் / தகவல்கள் என்ன?
இரண்டாம் திருமணம் பற்றிய கதைகள் ரொம்ப பிடிக்கும். ரம்யாவின் அனிதாவின் அப்பா கதை மனதை தொட்டது. சிங்கிள் மதர் என நாம் குறிப்பிடும் பெண்கள் பற்றிய விஷயங்கள் அருணா கதிரின் ஒரு கதையும் மறக்க முடியாத கதை. ஜான்ஸியின் ஒருகதை பாலியல் வன்முறையில் இருந்து மீண்ட ஒரு பெண்ணின் கதை. தலைப்பு நினைவில்லை.
25. இன்றைய எழுத்து உலகம் பற்றிய உங்களின் கருத்து என்ன?
நிறைய எழுத்தாளர்கள் எழுதுவது ஆரோக்கியமான விஷயம். ஒரு சிலரின் எழுத்துகளின் வீச்சு ஆச்சரியமாக இருக்கிறது. வாசகர்களை கவரும் எழுத்துகள் எல்லாமே சிறந்தவைதான். அவற்றை உணர்ந்து எழுத்தாளர்களும் பொறுப்புடன் எழுதவேண்டும். பேனாவின் வலிமை பற்றி நமக்கு தெரியாததில்லை. தமிழ் படிப்பவர்கள் அருகி வரும் காலத்தில் படிக்கும் இளம் வயதினரை மனதில் வைத்து கண்ணியமாக எழுதவேண்டும் என்பதே என்னைப் போன்றோரின் வேண்டுதல்.
26. அன்று முதல் இன்று வரை வெகு சில ஆசிரியர்களின் புத்தகங்கள் / கதைகள்மட்டுமே அதிகமாக வாசகர்களை அடைகிறது. பல நல்ல விஷயங்களை கூறும் புத்தகங்கள் அதிக வரவேற்பு பெறுவதில்லை. நீங்கள் அந்த எழுத்தாளர்களை கொண்டாட மறுக்கும் காரணம் என்ன ?
கொண்டாடப்படும் எல்லா கதைகளும் நன்றாக இருப்பதில்லை! பல பேர் பாராட்டிய கதை எனக்கு மொக்கையாக தோணும்! நான் ரசித்த கதை மற்றவருக்கு போரிங்காக இருக்கும்! இன்னும் நாம் படிக்காத எழுத்துகள் நிறைய இருக்கே, நட்புகள் பரிந்துரைக்கும் கதைகளை நான் மிஸ் பண்ணுவதில்லை. ஒத்த ரசனையுடையவர்கள் சிலர் இருக்கிறோம். நல்ல கதைகளை தேடிக்கொண்டே தான் இருக்கிறோம். நல்ல புத்தகங்களை படிப்பவர்கள் வெளியில் சொல்வதில்லை. நாங்கள் சொல்லிக் கொண்டே இருக்கிறோம். நான் எப்போதுமே எழுத்தாளர்களை கொண்டாடுவதில்லை. எழுத்துகளுடன் நிறுத்திக்கொள்வேன்.
27. உங்களுக்குமிகவும் பிடித்த எழுத்தாளர்கள் (அன்றைய 5வர் & இன்றைய 5வர்)
ஏன் அவர்கள் எழுத்து பிடிக்கும்? அவர்களின் சிறப்பாக நீங்கள் கருதுவது என்ன?
அன்றைய எழுத்தாளர்கள் :
சுஜாதா, ஜோதிர்லதா கிரிஜா, கல்கி, சிவசங்கரி, வாஸந்தி.
இன்றைய எழுத்தாளர்கள் :
நான் தொடர்பவர்கள், வேதாவிஷால், ரேணுகா முத்துக்குமார், இன்பா, ரேவ்ஸ், நித்யா. ஐந்து பேர் என்பதால் மற்றவர்களை குறிப்பிடவில்லை.
அன்றைய எழுத்தாளர்கள் பற்றி சொல்ல தேவையில்லை. வாஸந்தியின் கதைகள் எனக்கு ரொம்ப பிடிக்கும். சுஜாதாவின் பல தரப்பட்ட கதைகள் ரொம்ப பிடிக்கும். ஜோதிர்லதா வின் துருவங்கள் சந்தித்தபோது என் பேவரிட். கல்கியின் பொன்னியின் செல்வன், ஆனந்தி என ஒரு சமூக நாவல். சிவசங்கரியின் சுயமுன்னேற்றக் கட்டுரைகள். ஒரு மனிதனின் கதை, பாலங்கள். இவர்களின் மொழியாற்றலும் தைரியமான கருத்துகளும் அவர்களின் சிறப்பு.
இன்றைய எழுத்தாளர்களில் வேதாவிஷாலின் கதைகள் ரசிக்கும்படி இருக்கு. சமீபத்தில் முடிந்த தளை அட்டகாசம். ரேணுகா ஜனரஞ்சகமான எழுத்துக்கு சொந்தக்காரர். இன்பாவின் உளவியல் சார்ந்த கதைகள் அபாரம். சற்று சறுக்கினாலும் ஆபாசமாக மாறும் எழுத்து! தேர்ந்த எழுத்தினால் அனாயாசமாக எழுதுகிறார். வயது வந்த இளம் மனைவிமார்கள் தவறாது படிக்கலாம். ரேவ்ஸின் கதைகள் தனிரகம். நிறைய புது கருக்களை அறிமுகம் செய்வார். நித்யாவின் எழுத்துகள் நல்லமுதிர்ச்சி, யுத்தகாண்டம் ஒன்று போதுமே.
28. ஒருபுத்தகத்தில் / கதையில் நீங்கள் எதிர்பார்க்கும் முக்கியமான விஷயங்கள் என்னென்ன?
வித்தியாசமான கதைக்கரு, களம். சுவாரஸ்யமான எழுத்து நடை, சற்று நகைச்சுவை, அழகான காதல், ரசிக்கும்படியான ரொமான்ஸ் !
29. எழுத்தில்ஆண் / பெண் பேதம் இல்லை. ஆனால் மொழி ஆளுமை உள்ள எழுத்து ஆண் எழுத்தாளர்களின் எழுத்தில் உள்ளதா அல்லது பெண் எழுத்தாளர்களின் எழுத்தில் உள்ளதா? உங்களின் தனிப்பட்ட கருத்து என்ன?
பெண்களின் எழுத்து சற்றும் குறைந்ததில்லை. இலக்கியவாதிகள் என கொண்டாடப்படும் சில ஆண்களின் எழுத்துகளையும், அவரவர்கள் கருத்துகளையும் பார்க்கும்போது, நம் நட்புகளின் எழுத்துகள் எவ்வளவோ உயர்ந்தவை என எனக்கு தோன்றுவதுண்டு.
30. யாருடைய ஆட்டோகிராப் இருக்கிறது அல்லது வாங்க வேண்டும் என்று ஆசை?
இதுவரை யாரிடமும் வாங்கவில்லை. நட்புகள் புத்தகம் அனுப்பும்போது அவர்களின் கையெழுத்து பார்க்கும்போது மனதுக்கு நிறைவாக இருக்கிறது. சுஜாதாவிடம் வாங்கவேண்டும் என ஒரு காலத்தில் ஆசைப்பட்டேன்.
31. கதைகளில் எதிர்மறை முடிவுகளை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்? அதன் தாக்கம் உங்களுக்கு எப்படிபட்ட மனநிலையை கொடுக்கிறது?
எழுத்தாளரின் முடிவை வாசகன் மதிக்கவேண்டும். ஒரு கதையை எப்படி முடிக்கவேண்டும் என்பது ஆசிரியரின் உரிமை. அன்புடன் அண்ணா கதையை மறக்கமாட்டோம். அது அப்படித்தான் முடிய வேண்டும்? ஷோபா குமரனின் கதைகளும் பக்க்குன்னு தான் படிப்போம்! ஆனாலும் பாதியில் விட மாட்டோம் இல்லியா? அதுதான்ஆசிரியரின் வெற்றி. கண்டிப்பாக தாக்கம் இருக்கத்தான் செய்யும். ஆனால் அந்த வகைக் கதைகளை நாம் என்றுமே மறக்க மாட்டோம் இல்லியா?!
32. ஆடியோ கதைகள் எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள் ? நீங்கள் விரும்பிய ஏதேனும் ஒரு ஆடியோ கதையை கூறுங்கள்.
இப்போது கண்ணுக்கு ஓய்வு தேவைப்படுவதால் ஆடியோ நாவல் கேட்கிறேன். கேட்டவரையில் இன்பா குரலில் அவரின் கதை ஒன்றுகேட்டேன். தலைப்பு மறந்துட்டேன், ரொம்ப நன்றாக இருந்தது. ஆணின் பாலியல் கொடுமை பற்றிய கதை. அவரின் கதைகளில் இருக்கும் உளவியல் சார்ந்த கருத்துகள் நன்றாக இருக்கும்.
சொல் ஆழி வெண் சங்கே ரொம்ப நன்றாக இருந்தது. ஸ்ரீ லட்சுமியின் கதை. பூர்ணிமா குரல் என நினைக்கிறேன். நல்ல ஏற்ற இறக்கத்துடன் தெளிவான உச்சரிப்புடன் கதை வாசிப்பவர்கள் இருந்தால் கேட்க நன்றாக இருக்கும்.
33. ஒரு கதையில் இருந்து மற்றொரு கதையின் தொடக்கம் இருப்பது பற்றி உங்கள் கருத்து என்ன ?
அது கதையின் கரு நன்றாக இருந்தால் மட்டுமே ரசிக்கும்படி இருக்கும்.
34. மேற்கண்டவிஷயங்கள் தவிர நீங்கள் எழுத்தாளர்களிடம் வேறு என்ன கூறஆசைபடுகிறீர்கள் ?
குடும்ப நாவல்கள் பற்றி நிறைய பேசி விட்டோம். புதிதாக சொல்ல ஒன்றுமில்லை. கண்ணியமாக எழுதுங்கள். பதினெட்டு வயதுக்கு மேல் என குறிப்பிட்டு எழுதிவிட்டால் யாருக்கு எது விருப்பமோ அவற்றை தேர்ந்தெடுத்து படித்துக்கொள்ளலாம். அவரவர் ரசனை அவரவருக்கு. இப்படிப்பட்ட எழுத்தாளர் என்று முத்திரை வாங்கிவிடாதீர்கள். பாலியல் கதைகள் எழுதிய புஷ்பா தங்கதுரைதான் அரங்கனைப்பற்றியும் எழுதினார்! எல்லா வாசகர்களையும் மனதில் கொண்டு எழுதுங்கள். விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளுங்கள். தனிப்பட்ட தாக்குதல்கள் என உங்களுக்கு தோன்றினால், சம்பந்த்தப்பட்டவரிடம் நீங்களே பதில் சொல்லுங்கள். உங்கள் ஆதரவாளர்கள் என்று வருபவர்களிடம் சற்று ஒதுங்கியிருக்க சொல்லிவிட்டீர்கள் என்றால் உங்களின் நியாயத்தை அனைவரும் புரிந்து கொள்வார்கள். உங்கள் எழுத்துக்கு நீங்கள் தான் பொறுப்பு. அதை உணர்ந்து எழுதுங்கள். வாசகர்களுக்கு ஏற்ப உங்கள் கதையை மாற்றாதீர்கள். உங்கள் கதையை நீங்க நினைத்தபடி எழுதுங்கள். மாற்றுக்கருத்து வந்தால் என்ன பதில் சொல்லணும் என்று நீங்கதான் முடிவெடுக்கணும்.
இவங்க தான் நம்ம முதல் வாசகர். மூத்த வாசகரும் கூட. இவங்க தான் புத்தகம் முதல் கணினி வழி புத்தகம் வரை அந்த பரிணாம மாற்றம் பாத்தவங்க. அன்று முதல் இன்று வரை இவங்க வாசிச்ச எல்லா எழுத்துகளையும் நம்மகிட்ட அருமையா பகிர்ந்துகிட்டாங்க.
இப்படி ஒரு நேர்காணல் கொடுத்ததுக்கு நனிநன்றி செல்வாம்மா .. எதார்த்தமும், வாழ்வியலும் கொண்டு வரும் புத்தகங்களின் தேவை எந்த அளவிற்கு இருக்கிறது என்பது இவரிடம் நாம் உணர்கிறோம்.
மேலும் ஒரு அருமையான வாசகருடன் மீண்டும் உங்களை சந்திக்கிறேன்..
வாசிப்பை சுவாசிப்போம்…