வாசகருடன் சில நிமிடங்கள் ..
1. பெயர் – ஸ்ரீராஜ்
2. படிப்பு –
இளங்கலை வணிகவியலில் கணிகவியல் மற்றும் நிதி. தற்பொழுது முதுநிலை வணிக நிர்வாகத்தில் நிதி படிப்பும் படிக்கின்றேன்.
3. தொழில்/வேலை –
மாணவி/கணக்காளர்.
4. உங்களின் வாசிப்பு எப்போது தொடங்கியது?
பள்ளிக்காலத்தில் இருந்தே நான் வாசிப்பை தொடங்கியாகிற்று. கதைகள், கவிதைகள், கட்டுரைகள் என யாவும். தமிழ் குடும்ப நாவல்கள் 2018 ஆம் ஆண்டில் இருந்து வாசிக்க ஆரம்பித்தேன்.
5. எந்த மாதிரியான சூழ்நிலையில் நீங்கள் வாசிப்பை நாடுவீர்கள்?
என் பொழுது போக்கே வாசிப்பு தான். சூழ்நிலை என்றால் மனம் அதிகம் வெறுமையாய் இருக்கும் நேரம் வாசிப்பை இன்னும் நாடுவேன்.
6. உங்களின் வாசிப்பு என்பது பெரும்பாலும் புத்தகங்கள் வழியிலா? கணினி வழியிலா?
இரு வழியிலும். ஆனால் நான் வெகுவாய் ரசிப்பது புத்தகத்தை தான். தற்பொழுது அநேக நேரம் கணினி வழியில் தான் என் வாசிப்பு இருக்கிறது.
7. ஒரு வருடத்தில் எத்தனை புத்தகங்கள் வாங்குவீர்கள்? எத்தனை புத்தகங்களை படிப்பீர்கள் ?
வருடத்திற்கு என்று இத்தனை புத்தகம் என நான் வாங்குவது கிடையாது. அதற்கு பதிலாக தான் என் குடும்பத்தில் உள்ளவர்கள் என்னை நூலகத்தில் உறுப்பினராக சேர்த்து விட்டார்கள். எப்பவாவது வாங்கினால் தான் உண்டு.. அதுவும் மிக சிரமப்பட்டே வாங்க வேண்டியது வரும். சாதாரணமாகவே கதையினுள் முழ்குபவள் இதில் புத்தகமுமா என கேட்டு வீட்டில் ஹாஸ்யம் தான் நடக்கும்.
வருடத்திற்கு குறைந்தது 200 முடிந்தால் அதற்கும் மேல்.🙂
8. Ebook / Paperback புத்தகம் எதில் உங்களின் வாசிப்பு முழுமை பெறுவதாக உணர்கிறீர்கள்?
இரண்டிலும். ஆனால் புத்தகத்தை எடுத்து வாசிப்பதில் அதிக முழுமையான உணர்வு கிட்டுவதாக எண்ணுவேன்.
9. வாசிப்பினால் உங்களுக்கு ஏற்பட்ட முதல் தாக்கம் என்ன?
சந்தோஷம், ஆச்சரியம், கற்பனை உலகில் அதிகமாய் சஞ்சரிப்பது. அதுவும் சிறு வயதில் சொல்லவே வேண்டாம். அம்புலி மாமா, விக்கிரமாதித்யன் கதைகள் எல்லாம் வாசித்தும் அவைகளை கற்பனை செய்து ஆனந்தம் கொள்வேன். இன்றும் அது சில நேரங்களில் என்னுள் வெளிப்படும்.
10. வாசிப்பினால் கிடைத்த அனுபவத்தினால் உங்களது செயல்பாடு / குணாதிசயங்கள் மாற்றிக் கொண்டது உண்டா? அது என்ன?
நிறைய செயல்பாடுகளை மாற்றி கொண்டேனா என்பது எனக்கு தெரியவில்லை. ஆனால் தமிழ் சரளமாக கற்று தேர்ந்தேன். தேடுதல் அதிகமானது. தமிழில் இன்னும் ஆர்வம் கூடியது. பேச்சில் அதிகம் கவனம் எடுத்து பேசுவது. தமிழ் எழுதும் விதத்தில் மாற்றம். இரு பக்கமும் யோசிப்பது என இப்படியானவைகளே நான் அறிந்த மாற்றம்.
11. புதிய புத்தகங்களை எப்படி தேர்வு செய்கிறீர்கள்? (அட்டை படம், தலைப்பு, ஆசிரியர், பதிப்பகம், முன்னுரை.. )
இவை எதுவும் கிடையாது. கதை மற்றும் அதனின் கரு மட்டுமே என்னை கவரும் ஒன்று. எப்பவாவது தான் நீங்கள் கேட்டதில் வித்தியாசமான அட்டை படம் மற்றும் தலைப்போ அல்ல முன்னுரை வைத்து வாசிக்கும் எண்ணம் தோன்றும்.
12. உங்களுக்கு எந்த வகையான புத்தகங்கள் / கதைகள் மிகவும் பிடிக்கும்? (சுயசரிதம், மர்மம், திகில், சாகசம், காதல், குடும்பம், ஆன்மீகம், ரொமான்டிக், வரலாறு, புராண கதைகள், இலக்கியம் , சரித்திரம் , etc….)
அனைத்துமே பாராபட்சம் இன்றி பிடிக்கும். ஆனால் அதில் மிகவும் பிடித்தம் என்றால் காதல், குடும்பம், ரொமான்டிக், மர்மம், திகில், காமெடி.
13. “எழுத்தாளர்” என்பவர் உங்களுக்கு எப்படிப் பட்ட உறவாக தெரிகிறார்கள்?
இதுவரை நான் பேசிய எழுத்தாளர்கள் அனைவரும் தோழமையாக இருப்பவர்களே.. தோழமையுடன் பழகுபவர்களே. நாம் பழகும், பார்க்கும், பேசும் விதத்தில் உள்ளது அவர்கள் எப்படிபட்ட உறவாக இருக்கிறார்கள் அல்ல தெரிகிறார்கள் என்பது.
14. உங்கள் வாழ்வில் முக்கிய திருப்பம் ஏற்படுத்திய புத்தகம்/கதை என்ன?
அப்படி எந்த கதையும் என் வாழ்க்கையில் முக்கிய திருப்பம் ஏற்படுத்தவில்லை. அனைத்தும் ஆச்சரியமும், பிரம்மிப்பும் மட்டுமே தந்து இருக்கிறது. இருந்தும் கல்லூரியில் நான் வாசித்த The Refugee by K.A. Abbas அவரின் கதை என் எண்ணத்தை மாற்றியது அதில் பாகிஸ்தான் மற்றும் இந்தியாவுக்கு நடக்கும் பிரிவினையில் அவதி படும் மக்களின் நிலை என்னை மிகவும் பாதித்தது. அகதியாய் வருவோரின் மனநிலை எவ்வாறு இருக்கும் என்பதை நான் உணர்ந்த தருணம். அகதிகளாய் வருபவர்களின் வாழ்வு எவ்வளவு வேதனைக்குரியது. அதுவரை இவர்கள் ஏன் இங்கு வருகிறார்கள் வந்து எதை களவாட போகிறார்கள்? என்பது மட்டுமே என்னுடைய எண்ணமாக இருந்தது. இந்த எண்ணம் நம் இந்திய வரலாற்றை படித்து உருவானது. பின் இக்கதை படித்து அது இன்று மாறிவிட்டது. அடுத்தது என்றால் ஜேபியின் மலரினும் மெல்லியவள் மற்றும் குருக்ஷேத்திரம் கதையில் அவர்கள் Emotional Intelligence பற்றி மெல்லிய கோடாய் கூறி இருப்பார்கள். அவை ஒரு மனிதனை எப்படி மாற்ற வைக்கும் ? அது சரியாக பயன்படுத்தினால் அல்ல, கற்றால் நாம் எப்படி இருக்கலாம் வாழ்க்கையில், என என்னை வெகுவாய் சிந்தித்து செயலாற்ற வைத்த ஒன்று. இன்றளவும் அதை கற்று கொண்டே இருக்கிறேன். அதனால் என் வாழ்க்கையில் சில சமயங்களில் மாற்றத்தையும் பார்க்கிறேன்.
15. அன்றைய எழுத்தாளர்களுக்கும், இன்றைய எழுத்தாளர்களுக்கும் உங்களுக்கு தோன்றும் வித்தியாசங்கள் என்னென்ன?
அன்றைய எழுத்தாளர்கள் வெகு சிலரே இன்றோ அநேகம் பேர் உள்ளனர். அன்றைய எழுத்தாளர்கள் ஒவ்வொரு விடயத்தைப் பற்றி யதார்த்தமாய் கொண்டு செல்வர். இன்று கற்பனைகள் ஏராளம். அன்று வகைப்படுத்துவது எளிதாய் இருந்தது இன்று வகைப்படுத்துவது சிரமமாக உள்ளது. அதாவது மர்மம், கொலை விசாரனை கதைகள் என்றால் ராஜேஷ்குமார், சுபா நியாபகம் வருவர். காதல் குடும்ப கதைகள் என்றால் உமா பாலகுமாரன், ரமணிசந்திரன், விமலாராணி அவர்கள். வராலாற்று புனைவுகள் என்றால் கல்கி, சாண்டில்யன் வருவர். இன்று அனைவரும் கலந்து எழுதுவதில் திறமைசாலிகள். அன்றுக்கும் இன்றுக்கும் இதுவே நான் கண்ட வித்தியாசம்.
16. இன்றைய எழுத்தினால் மொழி வளர்ந்து வருவதாக நினைக்கிறீர்களா?
மொழி வளர்ந்து வருவதைப் பற்றி அவ்வளவாக மிக சரியாக கூற முடியாத ஒன்று. நடுத்தரமாக உள்ளது காரணம் தமிழ் மொழி அனைவருக்கும் முதன்மை மொழி அதை தங்களின் கற்பனைகளால் மற்றும் தங்களின், ரசனைகளுக்கு, புரிதலுக்கு ஏற்ப எழுதுகிறார்கள் எழுத்தாளர்கள்.
17. “வழக்குமொழி, பேச்சுமொழி, வட்டார மொழி, செந்தமிழ் மொழி” இதில் எது வாசிக்கும் போது உங்களுக்கு நெருக்கமாக இருக்கிறது? எந்த வகையை அதிகமாக வாசிப்பீர்கள்?
எனக்கு அனைத்துமே நெருக்கமான ஒன்று தான். ஏனெனில் ஒவ்வொரு மொழி வாசிக்கும் போது, புதிது புதிதாக இன்னை வரைக்கும் கற்று கொண்டு தான் இருக்கிறேன். சில சமயம் புரியாது தடுமாறும் போது எழுத்தாளர்கள் உள் குறியிட்டால் தெளிவாய் கூறுவது இன்னும் புரிந்து கொள்ள எளிமையாய் இருக்கும். அதில் முதன்மையாக நெருக்கமாய் அமைவது வட்டார மொழி, வழக்கு மொழி, பேச்சு மொழி, செந்தமிழ் மொழி என பிரிக்கலாம்.🙂
18. வரலாற்று நாவல்கள் வாசிப்பீர்களா? எந்த நாவல் மிகவும் பிடிக்கும்?
வாசிப்பேன். கல்கியின் பார்த்திபன் கனவு மிகவும் பிடித்த ஒன்று.
19. இன்றைய காதல்/குடும்ப நாவல்கள் பற்றிய தங்களின் கருத்து என்ன?
காதல்/ குடும்ப நாவல்கள் பலதில் யதார்த்தம் நிறைந்திருக்கும். சிலதில் கற்பனை நிறைந்திருக்கும். இவையெல்லாம் சாத்தியமா என்று பல நேரம் நினைக்க தோன்றும். இவையும் சாத்தியமே என்று சில நேரம் அழுத்தமாய் உரைக்க செய்யும்.
20. வித்தியாசமான கரு கொண்ட கதைகளை பிடிக்குமா? அறிவியல் சார்ந்த புத்தகங்கள்/ கதைகள் வாசிப்பீர்களா?
வித்தியாசமான கரு கொண்ட அனைத்து நாவல்களும் பிடிக்கும். அது என்றும் மறவாது இருக்கும். அறிவியல் கதைகள் நிச்சயமாக வாசிப்பேன் சில சமயம் தேடி அலைந்து வாசித்துள்ளேன்.
21. வாசிப்பதற்கு தினமும் நேரம் ஒதுக்குவீர்களா? எத்தனை நேரம்?
வாசிப்பதற்காகவே நேரம் ஒதுக்குவது கிடையாது. கிடைக்கும் நேரத்தில் வாசிப்பது. மன்னிக்கவும் எத்தனை நேரம் என்பது பார்ப்பதில்லை. கதையின் போக்கே முடிவு செய்யும்.🙂
22. வாசித்த புத்தகம் / கதை பற்றி விமர்சனம் கொடுப்பீர்களா ? எழுத்தாளரின் தவறுகளை எந்த விதத்தில் சுட்டிக்காட்டுவீர்கள்?
கண்டிப்பாக நேரம் இருக்கும் போது எல்லாம் கொடுப்பேன். அதை எப்போதும் நான் செய்வது உண்டு. நான் முதலில் அவர்களிடம் இது தவறு என்று கூற மாட்டேன். முதலில் என் புரிதலில் என்ன தவறு இருக்கிறது என்று பார்ப்பேன் அவர்களிடம் மனதிற்கு முரணாய் இருந்தால் என் முரனை கூறுவேன், அல்ல கேட்பேன் அதற்கான காரணத்தையோ அல்ல விளக்கத்தையோ கண்டறிவேன். திருப்தியாக இருந்தால் நல்லது என்று சந்தோஷித்து கொள்வேன்.. இல்லையென்றால் இதில் இப்படி இருந்து இருந்தால் இன்னும் நன்றாக இருக்குமே கொஞ்சம் உங்களின் கற்பனைக்கு பாதிக்காது சிந்திக்க முடியுமா என்ற விண்ணப்பத்தை மட்டுமே வைப்பேன். முடிவு அவர்களின் கையில். அவர்களின் தவறுகளையோ அல்ல முரணான விடயத்தை எதையும் நான் பொது வழியில் கூற மாட்டேன் தனிப்பட்ட முறையிலையே இதை கூறி விட்டு செல்வேன். என்னை அறிந்தவர்களுக்கு அது நன்றாக தெரியும். அதாவது நான் கூறுவது constructive criticism.
23. உங்களுக்கு மிகவும் பிடித்த புத்தகங்கள் / கதைகள் (5)
ஆஹா.. நிறைய உள்ளன.. ஐந்து தான் கூற வேண்டுமா.. இதில் எதை கூறுவது இருந்தும் கூற முயற்சிக்கிறேன்.
1.ராஜேஷ் குமார் ஐயாவின் விவேக் ரூபலா வரும் அனைத்து கதைகளும் பிடிக்கும்.
2.ஜேபி – மலரினும் மெல்லியவள், குருக்ஷேத்திரம்.
3.ருதி வெங்கட் – நயனமே நாணமேனடி
4.ஜனனி நவீன் – மந்திரம் சொன்னேன் வந்துவிடு.
5.ப்ரஷா – நீயே என் ஜனனம், தீர்த்தக் கரையினிலே
6.ஸ்ரீகலா – நிழல் நிஜம் உயிர் கொள்(ல்).
24. நீங்கள் வாசித்ததில் மறக்கமுடியாத / மனதை மிகவும் தொட்ட விஷயங்கள் / தகவல்கள் என்ன?
அநேகம் உள்ளன.. மனதை மிகவும் தொட்ட விஷயம் என்றால் சில எழுத்தளர்களின் கதைகளில் வரும் நாயக நாயகிகளின் குணங்கள். அவை எவை என்றால்:
– ஜனனி நவீனின் மந்திரம் சொன்னேன் வந்துவிடு கதையில் வரும் நாயகன் ஜோனத்தன் தாமஸ் குரியன்.
– ருதி வெங்கட்டின் நயனமே நணமேனடி கதையில் வரும் நாயகன் அருள் மொழி செல்வன். இன்றளவும் நிஜத்தில் என்னை ஏங்க வைக்கும் கதாநாயகன்.
– ஜேபியின் மலரினும் மெல்லியவள் கதையின் நாயகன் அர்ஜூன் கிருஷ்ணா. இன்றும் இந்த பெயரை பார்த்தாலோ அல்ல கேட்டாலோ சட்டென்று நியாபகம் வரும்.
– ஸ்ரீகலாவின் மெழுகு பாவை இவளோ கதையில் வரும் நாயகி ருத்ரஸ்ரீயின் குணம்.
– நிரஞ்சனா ஸ்ரீயின் உன்னில் அலையாகிறேன் கண்ணா கதையில் வரும் நாயகி நிலஞ்சனா மஹாலட்சுமியின் குணம்.
– ஜியா ஜானவியின் எங்கு காணினும் நின் காதலே நாயகன் வெற்றி வேந்தன்.
– தர்ஷி ஸ்ரீயின் உயிர் உறவே உருக்குலைக்காதே என்னை கதையின் நாயகன் சித்தேஷ் ஹரிஹரன்.
– சுஜா சந்திரனின் நேசம் நெய்கிறாய் நெஞ்சினிலே கதையின் நாயகன் வேந்தன்.
– மல்லிகா மணிவண்ணனின் சங்கீத ஜாதி முல்லை கதையின் நாயகி சங்கீதவர்ஷினி மற்றும் சத்தமின்றி முத்தமிடு கதையின் நாயகி துளசி.
– இன்ஃபா அலோசியஸின் காதல் பிரம்மா கதையின் நாயகன் பிரம்மா.
மறக்க முடியாத தகவல்கள்: அதுவும் ஏராளம் :-
– வநிஷாவின் கதைகளில் அவர் காட்சிப்படுத்தும் நோய்களும் அதை சார்ந்த தகவல்களும் இன்றும் நன்றாக நினைவிருக்கிறது. அதுவும் அவரின் “உயிர் விடும்வரை உன்னோடுதான் ” கதையில் அவர் பெண்களின் கர்ப்ப பை பற்றியும் அதை சார்ந்த பல்வேறு பிரச்சினைகளை பற்றியும் அழகாய் கூறியிருப்பார்.
– மல்லிகா மணிவண்ணனின் நீயென்பது யாதென்னில் கதையில் அவர் சுந்தரியின் தந்தை தன் மகளுக்காக தங்கம் சேர்த்து வைத்த முறை எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. அது தகவலாக அல்லாது செயலாக காட்டியிருப்பார் எழுத்தாளர்.
– ஜேபி அவர்கள் எழுதிய அனைத்து நாவல்களில் வரும் தகவல்கள் ஒவ்வொன்றும் பொது அறிவை நன்றாக தெரிந்து கொள்ள பெரும் உதவியாக இருக்கும். அனைத்தும் நிஜ தகவல்களின் வங்கியாக விளங்கும் அவரின் நாவல்கள். அதில் நான் மறக்க முடியாதது என்றால் மலரினும் மெல்லியவளின் Strappado medieval punishment; குருஷேத்திரத்தில் வரும் தொழில் தகவல்கள், விஷம் வாய்ந்த தவளையான dart frog; லூனாவில் வரும் scilion bull, desert eagle gun, சிரஞ்சீவிதத்தில் வரும் தடவியல் படிப்பும் மற்றும் அதன் சார்ந்த விடயங்கள் என யாவும் மறக்க முடியாத ஒன்று.
– சஷி முரளியின் காலங்களின் அவள் வசந்தம் கதையில் வரும் அனைத்து தகவலும் அதாவது பங்கு சந்தை, racket, match fixing என்னை வியக்கத்தக்கவை மறக்க முடியாதவை. மற்றும் வீனையடி நீயெனக்கு கதையில் மருத்துவ நிர்வாக படிப்பினைப் பற்றி சில வரியில் அவர் கூறியிருப்பார். மருத்துவர் ஆகாது மருத்துவமனையை பார்த்துக் கொள்ளலாம் என்கிற படிப்பை பற்றி இக்கதையில் தான் தெரிந்து கொண்டேன்.
– ராஜேஷ் குமார் ஐயாவின் அறிவியல், விசாரனைக்கு உட்புகுத்தப்பட்ட அரிய தகவல்கள் அனைத்தும் மறக்க முடியாதவை. இன்றும் எனக்கு அந்த arsenic chemical-ஐ பற்றி அவர் எழுதியது என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியவை.
– சுஜாதாவின் கதைகளில் வரும் அவரின் sci-fi தகவல்கள் என்னை இன்றளவும் எப்போதும் ஒரு வியப்புக்குள்ளாக்கும் ஒன்றாகும்.
25. இன்றைய எழுத்து உலகம் பற்றிய உங்களின் கருத்து என்ன?
நிறைய எழுத்தாளர்கள் இருக்கிறார்கள் இன்று. அது போல வாசிப்பவர்களும். இன்றைய எழுத்து உலகத்தில் யதார்த்தம் குறைகிறதோ என்று தோன்றுகிறது. அனைவரின் ரசனைகளின் மாறுப்பாட்டால் கற்பனைகள் அபரிதமாக உள்ளதோ.. அதே போல அன்று எழுத்தாளர்கள் தங்களுக்காய் எழுதினார்கள், அதை பலர் ரசித்தார்கள். இன்று பலருக்காய் (வாசகர்கள் விருப்பம்) பார்த்தும் எழுதுவதில், தங்கள் கருத்தையோ கற்பனையோ தாரளமாக முன் வைக்க முடிகிறதா என்ற சந்தேகம் என்னுள் தோன்றி தோன்றி மறைகிறது. இன்றைய எழுத்து உலகத்தைப் பற்றிய எனது பொதுவான கருத்து, நவீனமாய் வேகமாக செல்லும் நம் உலகத்தில் கற்பனைக்கும், யதார்த்தத்துக்கும் போட்டி நடைபெறுகிறதா என்று சிந்திக்க வேண்டியதாகிறது.
26. அன்று முதல் இன்று வரை வெகு சில ஆசிரியர்களின் புத்தகங்கள் / கதைகள் மட்டுமே அதிகமாக வாசகர்களை அடைகிறது. பல நல்ல விஷயங்களை கூறும் புத்தகங்கள் அதிக வரவேற்பு பெறுவதில்லை. நீங்கள் அந்த எழுத்தாளர்களைகொண்டாட மறுக்கும் காரணம் என்ன ?
இதற்கான எனது கருத்து சற்று வேறுபடும். எனவே தவறாக நினைக்க வேண்டாம். இப்போது நாம் வாழும் காலம் விரைவுகளும், நவீனமும் கலந்த காலம். இங்கு ஒரு புத்தகத்தை ஆற அமர உட்கார்ந்து படிப்பதற்கு முதலில் நேரம் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். அதிலும் நேரம் கிடைத்தால் நம் மூளையை சூடாக்கிய விடயங்களில் இருந்து தப்பிப்பதற்கு என்ன செய்ய முடியுமோ அதையே நம் மனமும் மூளையும் செய்ய விழைகிறது. அதில் ஆழ்ந்த கருத்துக்கள் நிறைந்த புத்தகங்களையோ, அல்ல நல்ல விஷயங்கள் கொண்ட புத்தகங்களையோ வாசிக்க முதலில் பொறுமை அவசியம். அது முதலில் நம்மிடம் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். அப்படி இருந்தால் நாம் படிப்பதில் சிறிதும் கஷ்டப்பட மாட்டோம். ஆனால் இங்கு அந்த பொறுமையே இல்லை என்பது தான் வருத்ததிற்குரிய விஷயம். உதாரணம் திருக்குறளை விட நல்ல புத்தகம் உள்ளதா என்ன? அதில் இல்லாத கருத்துக்களையா நாம் பிற நூல்களில் கண்டறிய போகிறோம்? நல்ல வாழ்வியலுக்கு தேவையான அனைத்து கருத்துக்களும் ஒன்றையரை அடியில் உள்ளது. ஆனால் அதை நாம் வாசிக்கிறோமா ? அதில் உள்ள கருத்துக்களை தான் கருத்தில் கொள்கிறோமா? இல்லவே இல்லை 1330 குறள்களில் பத்து குறள்கள் தெரிந்து இருந்தாலே பெரிய விடயம். நாம் வாசித்திருப்போம் எப்போது தெரியுமா? நம் பள்ளிக்காலத்தில் மனப்பாட செய்யுளாக இருந்த போது, நாம் கட்டாயத்திற்காக பரிட்சைக்காக படித்திருப்போம். அது உலகபொதுமறையாக்கப்பட்டதால் நமக்கு இந்நூல் பற்றி தெரிகிறது. அப்படி இல்லையென்றால் இது பற்றி தெரிவது மிகவும் கடினம். ஏனெனில் நமது சங்க இலக்கியங்களில் வரும் எட்டுத்தொகையும், பத்துப்பாட்டும் நமக்கு தெரியுமா இல்லை நாலடியார், ஆத்திச்சூடி தான் முழுதாக தெரியுமா இல்லவே இல்லை.. அது போல தான் நல்ல கதைகளும். அநேக நல்ல கதைகளை பலர் தந்து கொண்டு தான் இருக்கிறார்கள், இல்லை என்று சொல்வதற்கில்லை. அவை வெளியில் வராததற்கு அவைகளை படிப்பவர்கள் சரியாக பிற வாசகர்களிடம் கொண்டு சென்று கூறுவதில்லை. இதை படித்து பாருங்கள் உங்களுக்கு பிடிக்கும் என்று படித்தவர்கள் கூற வேண்டும்.’விளம்பரத்தை நம்பி ஏமாறாதீர்கள்’ என்ற ஒரு வாக்கியம் உண்டு. ஆனால் அதையும் மீறி நல்கதைகளை படித்தால் நாம் விளம்பரப்படுத்துகிறோமா என்று யோசிக்க வேண்டும். அதுப்போல அவர்களை கொண்டாட மறுப்பதற்கு ஒரு காரணமும் இல்லை. அதன் ரசனையாளர்கள் குறைவே, அதனால் தான் என்னவோ அவர்கள் வெளியில் தெரிவதில்லையோ என்பது எனது எண்ணம்.
27. உங்களுக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர்கள் (அன்றைய 5வர் & இன்றைய 5வர்) ஏன் அவர்கள் எழுத்து பிடிக்கும்? அவர்களின் சிறப்பாக நீங்கள் கருதுவது என்ன?
ஆஹா இது மிகவும் கடினமான கேள்வியாகிற்றே.. நிறைய உள்ளது. அநேகம் பேரை நான் குறிப்பிட்டு உள்ளேன் அவர்களுக்கு அடுத்து என்றால்..
அன்றைய ஐவர்:
1.ராஜஷ்குமார் – crime நாவல்களின் மன்னன் என்று அழைக்கப்படுபவர் அவர் கதையை நகர்த்தும் விதம் என்னை மிகவும் கதையில் ஒன்ற வைக்கும்.
2.சுஜாதா – sci-fi நாவல்களுக்கு பெயர் போனவர். அவரின் கற்பனைகள் அபாரம்.
3.ரமணிசந்திரன் – மெல்லிய காதல் கதைகளை எழுதுவதில் சிறந்தவர்.
அவரின் மென்மைக் காதல் என்னை ரசிக்க செய்யும்.
4.உமாபாலகுமாரன் – குடும்ப காதல் கதைகள் எழுத்தில் என்னை ரசிக்க செய்யும்.
5.லட்சுமி – குடும்ப பெண்களின் தனித்துவத்தை அழகாய் விவரிப்பார். அதில் நான் வியந்து உள்ளேன்.
இன்றைய ஐவர்:
1. மல்லிகா மணிவண்ணன் – யதார்த்தமான காதல் கலந்த குடும்ப கதைகளை எழுதுவதில் சிறப்பானவர். இவர் கூறும் யதார்த்தம் என்னை ரசிக்க செய்யும்.
2. ஸ்ரீகலா – காதல், சமூகம், குடும்பம் என அனைத்தும் இருக்கும் இவர் கதைகளில் அதை அழகாய் கொண்டு செல்லும் விதம் அருமையானவை.
3. காஞ்சனா ஜெயதிலகர் – அவர்களின் கதை மென்மை கலந்த காதல் கதைகள். அவர்கள் ஊரை வர்ணிக்கும் விதம் என்னை ரசிக்க செய்யும்.
4.என்.சீதாலட்சுமி – கிராமத்து காதல் கதைகளை யதார்த்தமாக கூறுவதில் இவர் சிறப்பு மிக்கவர். கதையின் கரு சிறிதாக இருக்கும் ஆனால் படிக்க சுவாரஸ்யமாக அமையும்.
5.கார்த்தி சௌந்தர் – அவரின் யதார்த்தமான கதைக் கரு. மன அழுத்தத்தை கையாள்வதை திறம்பட கூறியிருப்பார்.
28. ஒரு புத்தகத்தில் / கதையில் நீங்கள் எதிர்பார்க்கும் முக்கியமான விஷயங்கள் என்னென்ன?
எதிர்ப்பார்ப்பு என்று பெரிதும் இல்லை இருந்தும் கதையின் தேவைக்கு ஏற்ப காட்சிகளும், அமைப்பும் இருத்தல் வேண்டும். Logic மிக மிக அவசியம். கதையின் கற்பனைக்கு ஏற்றது போல் கதை இருக்க வேண்டும் என்பதை நான் மிகவும் எதிர்ப்பார்க்கும் முக்கிய விஷயம்.
29. எழுத்தில் ஆண் / பெண் பேதம் இல்லை. ஆனால் மொழி ஆளுமை உள்ள எழுத்து ஆண் எழுத்தாளர்களின் எழுத்தில் உள்ளதா அல்லது பெண் எழுத்தாளர்களின் எழுத்தில் உள்ளதா? உங்களின் தனிப்பட்ட கருத்து என்ன?
இரண்டிலும் உள்ளது. அவரவர் எண்ணங்களுக்கு ஏற்ப மொழி ஆளுமை வேறுபடும். எழுத்தாளரின் கற்பனைக்கும், பகுத்தறிவுக்கும் ஏற்ப அவரின் மொழி ஆளுமை அமையும். ஒருவருக்கு வட்டார வழக்கில் கதை எழுதுவது சரளமாக இருக்கலாம், அதை அவர் அநேக கதைகளில் வெளிப்படுத்தலாம். ஒருவர் செந்தமிழ் சரளமாக எழுதுலாம், அதை அவர் எழுத்தில் காணலாம். எழுத்தாளரின் விருப்பத்திற்கும் கற்பனைக்கும் ஏற்ப மொழி ஆளுமை உள்ளது.
30. யாருடைய ஆட்டோகிராப் இருக்கிறது அல்லது வாங்க வேண்டும் என்று ஆசை?
தர்ஷி ஸ்ரீ, இன்ஃபா அலோசியல், ராஜி அன்பு, ருதி வெங்கட், ஷன்மதி சந்தோஷ், சிவரஞ்சனி இவர்களுடைய ஆட்டோகிராப் என்னிடம் பொக்கிஷமாக உள்ளது.🥰🥰
நான் ஆட்டோகிராப் வாங்க வேண்டும் என நினைக்கும் எழுத்தாளர்கள் ரமணிசந்திரன், ராஜேஷ்குமார், இந்திரா சௌந்திராஜன், மல்லிகா மணிவண்ணன், காஞ்சனா ஜெயதிலகர், ஸ்ரீகலா, ஜேபி, ஜனனி நவீன், ப்ரஷா… இன்னும் பலர் உள்ளனர் சொன்னால் அதிகமாய் தோன்றும். 😊😊
31. கதைகளில் எதிர்மறை முடிவுகளை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்? அதன் தாக்கம் உங்களுக்குஎப்படிபட்ட மனநிலையை கொடுக்கிறது?
கதைக்கு அது தான் சிறந்தது என்றால் நல்லது தானே. எல்லார் வாழ்க்கையும் முட்கள் இல்லா ரோஜாவாக அமையாது அல்லவா அது போல தான் கதையும். அதனால் யதார்த்தமான முடிவே நல்லது என நினைப்பேன். அது எதிர்மறையாக இருந்தாலும் சரி தான். அதனின் தாக்கம் இது வரை நல்விதமே. இதுவும் சரி தான் என்ற தாக்கம் மட்டுமே.
32. ஆடியோ கதைகள் எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள் ? நீங்கள் விரும்பிய ஏதேனும் ஒரு ஆடியோ கதையை கூறுங்கள்.
ஆடியோ கதைகள் நம்மை வசீகரிக்க வேண்டும். நம்மை ஒரு தனி உலகிற்கு கூட்டி செல்வது போல் அல்ல அதிகமான இதத்தை தருவது போல் இருக்க வேண்டும். வாசிக்கும் போது எப்படி கூடவே பயணிப்பது போல் உணர்கிறோமோ, அது போல ஆடியோ கதைகளிலும் தன் அருகே நடப்பது போல் இருக்க வேண்டும் என்று நினைப்பேன். இது வரை அப்படி எந்த ஒரு ஆடியோ நாவலையும் நான் தொடர்ந்து கேட்டதில்லையே. காரணம் என் செவிதிறன் அதிகமான பிரச்சினைக்குள்ளாவதால் நான் ஆடியோ நாவல்களை விட்டு தூரமாகவே இருப்பேன்.
33. ஒரு கதையில் இருந்து மற்றொரு கதையின் தொடக்கம் இருப்பது பற்றி உங்கள் கருத்து என்ன ?
முதல் கதையில் இருந்து மற்றொரு இனை கதையின் தொடக்கம் அதிக சுவராஸ்யத்தையே கொடுக்கும். இருந்தும் முதல் கதையின் முக்கியத்துவம் இனை கதையில் அதிகமாக இல்லாது இருத்தல் என்றால் இன்னும் அநேக சுவாரஸ்யம் தரும்.
34. மேற்கண்ட விஷயங்கள் தவிர நீங்கள் எழுத்தாளர்களிடம் வேறு என்ன கூற ஆசைபடுகிறீர்கள் ?
இங்கு அனைவரும் அவர் அவர் ஆசைக்கு எழுத வந்தவர்களே. அதில் என்றும் குறை வைக்காதீர். உங்கள் ஆசை இன்பமாய் பெரிதுவக்கட்டும். நிறைய கதைகள் எழுதுங்கள், நிறைய இன்பத்தை அனுபவியுங்கள். கதைக்காக வரும் எதிர்மறை கருத்துக்களையும் எடுத்து கொள்ள வேண்டிய கருத்தை எடுத்துக் கொண்டு, கடந்து செல்ல வேண்டியதை அமைதியாய் கடந்து விடுங்கள். அமைதியாய் கடந்தாலே அவைகள் அம்பலத்தில் ஏறாது, அதற்கு தூபம் போட்டால் மட்டுமே அது அம்பலமாகும். எனவே உங்கள் கற்பனையை நல்விதமாய் எழுதுங்கள் வாசிப்போரையும் கொள்ளை கொள்ளுங்கள். மையின் தாக்கம் எழுதுபவர் அறிவரே அதனால் அதை செம்மையாய் நல்விதமாய் பயன்படுத்தி பல அழகிய படைப்புகளை படையுங்கள்.😊
இன்னொன்று இது என் விண்ணப்பம் மட்டுமே.. நீங்கள் எழுத நினைக்கும் கதை அடுத்து வரும் ஒரு இரண்டு மாதத்தில் இந்த கதையை எழுத ஆரம்பித்து முடித்தும் விடுவேன் என்று தீர்க்கமாய் நினைத்தால் மட்டுமே புதிய கதைகளின் முன்னோட்டத்தை பொது வழியில் பதியுங்கள், இல்லை என்றால் உங்களின் தனிப்பட்ட புத்தக குறிப்பில் எழுதி வைற்று கொள்ளுங்கள் பிற்காலத்தில் தேவைப்படும் பொழுது எடுங்கள். ஏனென்றால் முன்னோட்டத்தை பார்த்து வாசித்து வாசித்து அக்கதை வராதா என்று ஏங்கி ஏங்கி மனம் வருத்தம், ஆதங்கம், சலிப்பு என அனைத்தும் அடைகிறது. பின்னால் அக்கதை வந்தாலும் அதே ஆர்வத்துடன் படிப்பதற்கு சிறிது சிரமமாகவே உள்ளது. அதுப் போல் கதைகளை எடுத்தால் வெகுவாக முடிக்க முயற்சி செய்து விடுங்களேன்.. எழுத்தாளர்களாகிய உங்களுக்கு அநேக காரணங்கள் இருக்கலாம் கதையை எழுதாததற்கு ஆனால் முடிந்தளவு விரைவாக வாசிப்போரை காக்க வைக்காது முடிக்க பாருங்கள். எழுதுபவர்களுக்கு கிடைக்கும் மிக பெரிய பலம் வாசகர்கள் அதை என்றும் எதற்காகவும் இழக்காதீர்கள்.
இனிதே நினையுங்கள் இனிதே எழுதுங்கள் இனிதே படையுங்கள்.. தங்களின் கற்பனைகளை அழகிய எழுத்து ஓவியமாய் தீட்டும் அனைத்து எழுத்தாளர்களுக்கும் என் மனதின் ஆழத்தில் இருந்து என் அன்பு வாழ்த்துக்கள்.💐💐🥰🥰அன்பு உங்களுக்கு உரிதாகட்டும்.😊
அன்புடன்
ஸ்ரீராஜ்.
மிகவும் அழகான நேர்காணல் சிஸ்டர். உங்க வாசிப்பு பயணம் ரொம்ப அருமையா, சரியான பாதைல போயிட்டு இருக்கு. உங்க சிந்தனை வாசிப்பினால் எந்த அளவிற்கு விரிந்து இருக்குன்றது உங்க உரையாடல்ல எங்களாள பார்க்க முடியுது.
வருடத்திற்கு 200+ புத்தகம் இப்படி கேக்கவே எவ்ளோ சந்தோஷமா இருக்கு தெரியுங்கலா .. இன்னும் இந்த எண்ணிக்கை உயர்ந்து கொண்டே போகணும்.
வாசகர்களுக்காக இன்னிக்கி நெறைய எழுத்தாளர்கள் எழுதறாங்கன்னு சொன்னதுக்கு மிக்க நன்றி. ஒரு வாசகர் கிட்ட இருந்து இந்த வார்த்தை கேக்க சந்தோஷத்தோட கொஞ்சம் நிம்மதியும் வருது. புரிதல் உள்ள வாசகர்கள் இங்க இருக்காங்கன்னு சொல்லி இருக்கீங்க.
அதிகம் பிரபலம் ஆகாத புத்தகங்கள் பற்றி உங்களோட கண்ணோட்டம் மிகவும் ஆச்சரியமா இருந்தது சிஸ். ஒரு wise analysis அண்ட் ஆராய்ச்சி உங்க பேச்சுல தெரிஞ்சது.
எப்பவும் உங்க வாசிப்பு தொடரட்டும், உங்களோட சிந்தனையும், செயலும் உங்க இலக்கை மட்டும்இல்லாம உங்களோட எல்லா விஷயத்திலும் திடமான வித்தியாசமான மற்றும் நூதனமாக கையாளும் முறைகளை கொடுக்கட்டும்.
இந்த வாசகர் நேர்காணலில் நீங்களே ஆர்வம் கொண்டு வந்து கலந்து கொண்டதற்கு மிகவும் நன்றிகள் சிஸ்.
வாசிப்பை நேசிப்போம் …