1 – வலுசாறு இடையினில்
‘விடியாத இரவுகள் என்று எதுவும் இல்லை… அஸ்தமித்த சூரியன் மீண்டும் கிழக்கில் உதித்தே ஆக வேண்டும்…’
‘உறங்கிய நாமும் காலையில் விழித்தே ஆக வேண்டும். பூமியில் விழி திறக்காத பொழுது, நமக்கு மற்றொரு வகையான விடியல் வேறு ஒரு உலகத்தில் ஏற்பட்டிருக்கும்..’
‘கடந்த நொடிகளை நினையாதே…. இனி கடக்க வேண்டிய நொடிகளை மட்டும் மனதில் கொள்…. ‘
இப்படி பல பல வாசகப்படங்கள் அறையின் சுவர் முழுக்க ஒட்டி வைக்கப்பட்டிருந்தது.
“எருமை மாடே… எந்திரி…. மணி ஏழு ஆச்சி… உன் அப்பா வரதுக்குள்ள எந்திரிச்சி குளிச்சிடு… “, என அர்ச்சித்து விட்டு சென்றார் அவளின் அம்மா.
“ம்மா …. ஒரு டீ…”, போர்வையை விலக்காமலே முனகும் சத்தத்துடன் கேட்டாள்.
“நீ குளிக்காம உனக்கு பச்சை தண்ணி கூட கிடையாது… எந்திரிச்சி குளிச்சிட்டு வா”, என பதிலளித்துவிட்டு, தன் தினசரி முக்கியமான வேலையைக் கவனிக்க ஆரம்பித்துவிட்டார்.
“ம்மா….. இது நியாயமே இல்ல “, எனச் சிணுங்கியபடி எழுந்து, கண்ணை தேய்த்துக்கொண்டு சமையலறை சென்றாள்.
அங்கு காலை உணவை மணக்க மணக்க தயாரித்தபடி இருந்தார் அவளின் அம்மா காமாட்சி.
“வாவ்…. சூப்பர் டீ…. “, என வாசனையை முகர்ந்தபடி அங்கிருந்த டீ கப்பை எடுத்து உறிஞ்சத்தொடங்கினாள்.
“ஏய்…. ஏய்…. வை டி… அது தம்பிக்கு போட்டு வச்சிருக்கேன்”, என அவள் டீ குடிப்பதைப் பார்த்து திட்டினார் காமாட்சி.
“அவன் அதுக்குள்ள குளிச்சிட்டானா என்ன?”, என கேட்டபடி டீயை முழுதாக குடித்துவிட்டு கப்பை சிங்கிள் போட்டாள்.
“இல்ல… அவன இனிமே தான் எழுப்பணும்.. டீ இல்லாம அவன எழுப்பினா அவ்வளவு தான்”, என பேசியபடி மீண்டும் அவனுக்கு டீ போட்டார்.
“இது எந்த ஊரு நியாயம் மா… என்னையும் ஒரு டீயோட எழுப்பினா என்ன?”, என கோபத்துடன் கேட்டாள்.
“அவன் ஆம்பள புள்ள டி…. அவன அப்படி தான் எழுப்பணும்”
“அப்படி எந்த சட்டத்துல எழுதி இருக்கு? “, முகம் இறுகியபடி கேட்டாள்.
“வீட்டு சட்டத்துல எழுதி இருக்கு. வீட்ல எப்பவும் ஆம்பளைக்கு அப்பறம் தான் பொம்பளை…. அத புரிஞ்சிக்க முதல்ல.. நாலு எழுத்து படிச்சிட்டா நம்ம குடும்ப வழக்கத்த மறப்பியா?”, என அவளிடம் சிடுசிடுத்துவிட்டு, அவள் தம்பியின் அறைக்கு சென்று, அவனை மடியில் படுக்க வைக்காத குறையாக கொஞ்சி எழுப்பினார்.
“ஐயா… ராசா… எழுந்திரி டா…. இந்தா டீ கொண்டாந்திருக்கேன்… குடிச்சிட்டு தூங்கு.. நான் டிபன் ரெடி பண்ணிட்டு எழுப்பறேன். சூடா சாப்டுவியாம்”, என அவனிடம் கொஞ்சிக்கொண்டிருந்தார்.
இதை வெளியில் இருந்து பார்த்தவள் எப்போதும் போல மனதில் வெறுமையும் , கோபமும் எழ அங்கிருந்து நகர்ந்தாள்.
இருபது ஆண்டுகளாக அவள் பார்த்து, பழகி, சகித்து வரும் நிகழ்வுகள் தான் தினமும் இவள் இல்லத்தில் நடந்தேறி வருகிறது.
அவள் இருக்கும் ஊர் இன்னும் முழுதாக கிராமமாக இல்லாமலும் , டவுனாக மாறாமலும் இடையில் நின்று குழம்பி, அங்கிருப்பவர்களையும் குழப்பிக்கொண்டு இருக்கிறது.
அங்குள்ளவர்கள் எந்த கால கட்டத்தில் எந்த வகையான வழக்கத்தில் விழுந்தார்களோ தெரியாது. பெண்ணை பெண்ணாக மதிக்க கூட இன்றும் யோசிக்கிறார்கள்.
ஆண் என்பவன் ஆள்பவன். பெண் என்பவள் அவர்களுக்கு சேவகம் செய்ய பிறந்தவர்கள் என்ற எண்ணம் இரத்தத்தில் ஊறி, இன்னும் தலைமுறைகள் கடந்தும் பயணிக்கிறது.
அப்படியான வழமை போக்குவாதிகள் மத்தியில் அவ்வப்போது தோன்றும் செந்தாமரையாக ஒரு சிலர் தோன்றி, என்ன பேசினாலும் மீண்டும் அதே பாலாய் போன வழக்கத்தில் அவர்களை திணிக்க முயற்சிப்பார்கள். இல்லையேல் பல நாடகங்கள் அரங்கேற்றி அவளை ஒரு சிறையில் இருந்து மற்றொரு சிறைக்கு அனுப்பிவிடுவார்கள்.
பதினெட்டு இருபது வருடமாக பழக்கபட்ட சிறையிலேயே ஒன்றும் புரிந்தும் புரியாத நிலையில், ஒரு புதிய சிறையில் அவள் மீண்டும் அடைக்கப்படும் போது அவள் சிந்தனைத்திறன் வெகுவாக பாதிக்கப்படுகிறது. அந்த பாதிப்பை பயன்படுத்தி முற்றிலும் சுயசிந்தனை அற்றவளாக மாற்ற சுற்றி இருக்கும் உற்றங்களே போதும்.
வழக்கமான வழக்கத்தில் அப்பெண்ணும் புதைந்து மறைந்து விடுவாள். இப்படியாக தான் இன்றும் பல இடங்களில் பெண்களின் நிலை இருக்கிறது.
படிப்பு என்பதும் கூட இன்று வரும் மாப்பிள்ளைகள் படித்த பெண் வேண்டும் என்று கேட்பதால் தான் பெற்றவர்களும் படிக்க வைக்கிறார்கள்.
ஆக பெண் என்பவள் ஆணுக்கு ஏற்ற சேவகியாக, அடிமையாக மட்டுமே வாழ வேண்டும் என்று அவள் பிறந்ததில் இருந்தே சொல்லிச் சொல்லி வளர்க்கப் படுகிறாள்.
இந்த அமைப்பில் பெண்களை இந்த நிலைக்கு தயார் படுத்துவதும் பெண்கள் என்பது தான் முக்கியமான ஒன்று.
உலகில் வாழும் எந்த உயிரினம் தன் சக பாலினத்தவரிடம் அடிமையாக மட்டுமே வாழ பயிற்சி கொடுக்கிறது ???
இந்த கேள்விகள் நம்மில் பெரும்பான்மையானவர்கள் கேட்டுக் கொண்டு இருப்பீர்கள் .. உங்களை அடிமையாக, தரக்குறைவாக நடத்தும் சமயம் இது போன்ற எண்ணங்கள் உங்களுக்கு வரவில்லையெனில், நீங்கள் அவர்களின் மிக சிறந்த பயிற்சியில் தேர்ச்சி பெற்று இருக்கிறீர்கள் என்றே அர்த்தம்.
தனக்கு தானே பேசி மனதை சமன்படுத்திக் கொண்டு, குளித்து விட்டு கல்லூரி செல்லத் தயாராக ஆரம்பித்தாள் நம் முத்தமிழ்நங்கை.
“அம்மா .. எனக்கு இன்னிக்கி ஸ்பெஷல் கிளாஸ் இருக்கு .. நான் கெளம்பறேன்.. “, எனக் கூறிவிட்டு வெளியே வந்தாள்.
“எங்க அதுக்குள்ள கெளம்பிட்ட ?”, தந்தை ஏகாம்பரம் செய்தித்தாள் படித்தபடிக் கேட்டார்.
“இன்னிக்கி ஸ்பெஷல் கிளாஸ் இருக்குங்க பா.. சீக்கிரம் போகணும் .. சாயந்தரமும் லேட் ஆகும் .. நான் வினிதா கூட வந்துடறேன் “, என அவள் கூறிமுடிக்கும் முன் வினிதா அவளை அழைத்தபடி வாசல் அருகில் வந்தாள்.
“ம்ம் .. ரெண்டு பேரும் ஒழுங்கா போயிட்டு வாங்க .. பொட்ட புள்ளைங்கற நெனப்பு மனசுல இருக்கட்டும் .. இதானே கடைசி வருஷம் ?”, முகத்தை சிடுசிடுவென வைத்தபடிக் கேட்டார்.
“ஆமாங்க அப்பா .. போயிட்டு வரேன் பா “, என அவளும் அமைதியாக பதில் கூறிவிட்டு வினிதாவுடன் பேருந்து நிறுத்தம் நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.
“ஏன் டி நம்ம அப்பாங்க இப்படி இருக்காங்க ? எரிச்சலா வருது .. உங்கப்பா மருந்துக்கு கூட சிரிக்க மாட்டாரு போல .. எங்கப்பா என் மூஞ்ச கூட பாக்கறது இல்ல .. ஏன் தான் இந்த ஊருல பொறந்தோம்-ன்னு இருக்கு .. “, வினிதா வழக்கம் போல தன் மனக்குமுறலை கொட்டியபடி வந்தாள்.
“இங்க பொறந்துட்டோம் வினி .. இனிமே இங்க நம்ம என்ன செஞ்சா நமக்கு அடுத்து வர தலைமுறை நல்லா இருப்பாங்க-ன்னு தான் யோசிக்கணும் .. நிஜத்த ஏத்துக்கணும். அப்ப தான் இந்த சூழ்நிலைய சமாளிக்க முடியும். வா .. எப்படியாவது இந்த இன்டர்வியூல செலக்ட் ஆகிடணும்”, எனக் கூறியபடி வினிதாவையும் நேர்காணலில் கலந்துக் கொள்ளக் கூறினாள் .
“நான் எதுக்கு நங்கை ? என்னை இந்த டிகிரி படிக்க வைக்கறதே அந்த கூமுட்ட மாமனுக்கு கட்டி குடுக்க தான் .. அந்த வெளக்குமாத்துக்கு படிப்பும் ஏறல, கணக்கு வழக்கும் ஏறலன்னு தான் என்னை காமர்ஸ் படிக்கவைக்கறாங்க .. நீ போய் அட்டென்ட் பண்ணு .. உன்கூடவே நானும் இருக்கேன். ஒண்ணா வீட்டுக்கு போய்க்கலாம்”
“சரி வினி .. நான் போய்ட்டு வரேன் .. நீ எங்க உக்காந்துட்டு இருப்ப ?”
“நான் ஆடிட்டோரியம்ல இருக்கேன் நங்கை .. ஆல் தி பெஸ்ட் “, நேர்காணல் நடக்கும் கட்டிடத்தின் வாயில் வரை வந்து அனுப்பிவிட்டு வினிதா ஆடிட்டோரியம் நோக்கிச் சென்றாள்.
இங்கே நங்கையின் வீட்டில் , “ உன் பொண்ணு போக்கு சரி இல்ல .. இவ படிக்கற படிப்புக்கு என்ன ஸ்பெஷல் கிளாஸ் வைக்க போறாங்க ?”, என மனைவியிடம் வந்து சிடுசிடுத்தார்.
“நம்ம பொண்ணு தாங்க காலேஜ்ல சேர்ந்ததுல இருந்து மொத மார்க் வாங்கறா .. அவ நேத்து நடு ராத்திரி வரைக்கும் படிச்சிட்டு தான் இருந்தா .. “, என மகளுக்காக பேசினார் காமாட்சி.
“ஏதோ ஒரு டிகிரி இருந்தா தான் மாப்பிளை பாக்க முடியும்ன்னு தான் படிக்க வைக்கறேன் .. மெத்த படிச்சி என்ன கிழிக்க போறா ? இந்த வாரம் இருந்து மாப்ள பாக்க போறேன் .. அவகிட்ட சொல்லி ஒடம்ப ஒழுங்கா பாத்துக்க சொல்லு .. நான் தரகர் வீட்டுக்கு போய்ட்டு வரேன் .. “, எனக் கூறிவிட்டு தயாராகச் சென்றார்.
அவள் தம்பி ராஜன் , “அம்மா .. டிபன் ரெடியா இல்லயா ?”, எனக் கேட்டபடி வெளியே வந்தான்.
“வந்துட்டேன் கண்ணு .. ரெண்டு நிமிஷம் .. சூடா இட்லி எடுக்கறேன்… “, என கூறியபடி சமையல் அறைக்கு ஓடினார்.
“இந்த ரெகார்ட் நோட்ல அவள நேத்து எழுத சொன்னேன்ல இத பண்ணாம அவ நேத்து என்னத்த கிழிச்சிட்டு இருந்தா ?”, ஆணவமாகக் கேட்டான்.
“அக்காவுக்கு ஏதோ பரிட்சை போல கண்ணு .. அவ படிச்சிட்டு இருந்தா .. “, என காமாட்சி அவனுக்கு இட்லியைப் பரிமாறியபடிக் கூறினார்.
“அவ என்ன படிச்சி என்ன கழட்ட போறா ? பாத்தரம் தானே வெளக்க போறா அதுக்கு எதுக்கு அவ இவ்ளோ கஷ்டப்பட்டு படிக்கணும் ? இன்னிக்கி இந்த நோட் நான் கிளாஸ்ல வச்சே ஆகணும் .. இப்போ நான் என்ன பண்ணறது ?”, என புலம்பியபடி இருந்தான்.
“இன்னிக்கி லீவு போட்டுக்க ராஜா .. அவ சாயந்தரம் வந்ததும் உனக்கு எழுதி குடுக்க சொல்றேன் “, எனக் கூறியபடி ஏகாம்பரம் வந்து சாப்பிட அமர்ந்தார்.
“சரிப்பா .. எனக்கு பணம் குடுங்க நான் படத்துக்கு போய்ட்டு வரேன் .. “, என அவன் கேட்டு முடிக்கும் முன் அவனுக்கு இரண்டு ஆயிரம் ரூபாய் எடுத்துக் கொடுத்தார்.
“கண்ணு சாப்பிட வீட்டுக்கு வந்துருப்பா .. “
“இல்லம்மா .. நான் வெளிய சாப்டுக்கறேன்.. “, என கூறி விட்டு பைக் எடுத்துக் கொண்டு பறந்தான் பதினோராம் வகுப்பு படிக்கும் ராஜன்.
“என்னங்க ரெண்டாயிரம் தான் குடுத்தீங்க .. அது போதுமா அவன் செலவுக்கு ?”, காமாட்சி யோசனையுடன் கேட்டார்.
“அவன் பத்தலண்ணா கடைக்கு வந்து எடுத்துட்டு போவான் டி .. நீ உன் பொண்ணு போட்டோ நல்லதா ஏதாவது இருந்தா எடுத்து குடு “
“போட்டோ எதுவும் இல்லைங்க .. எடுத்தா தான் .. நகை எல்லாம் எடுக்கணும்ல ..”
“ஆமா எடுக்கணும் .. இந்த வாரம் போய் எடுத்துட்டு வரலாம் “
“எவ்ளோ போடறீங்க ?”
“அம்பது சவரன் போடறேன் .. அப்போ தான் எனக்கு கௌரவம் .. சரி நகை எடுத்த அப்பறம் போட்டோ எடுத்துக்கலாம் .. “
“ஜாதகம் ?”
“அந்த கழுதை என்னத்துக்கு ?”, கோபமாகக் கேட்டார்.
“இல்லைங்க மாப்ள வீட்ல கேப்பாங்க .. நாமளும் ஒரு தடவை பாத்துட்டா அதுக்கு தகுந்தமாறி தேடலாம் “, தயங்கித் தயங்கிக் கூறினார்.
“சரி.. குளிச்சி ரெடி ஆகு .. ஜோசியரையும் பாத்துட்டு வந்துடலாம் .. “, எனக் கூறிவிட்டு தன் சூப்பர் மார்க்கெட் சென்றார்.