116 – ருத்ராதித்யன்
தேனிசை கூறியவற்றை எல்லாம் மனதில் அசைபோட்டபடி ஆருத்ரா மகதன் இருக்குமிடம் சென்றாள். ருத்ர விக்னன் அபராஜிதனை கவனிக்கும் வேலையில் இருப்பதால் இப்போது மகதன் மட்டுமே வனதேவி ஆலயத்தில் காவல் இருக்கிறான். அவனை யாரும் தொந்தரவு செய்யக்கூடாது என்ற கடுமையான கட்டளை அங்கிருந்த அனைவருக்கும் இருந்தது. அதனால் அந்த வேலியை தாண்டி யாரும் அவனிடம் நெருங்கவில்லை.
திருவிழா என்பதால் பல குழந்தைகளும் ஆங்காங்கே ஆடி ஓடி விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்களுமே மகதனை தூரத்தில் இருந்து கண்டுவிட்டு தங்களின் விளையாட்டில் மும்முரமாக இருந்தனர்.
இந்த திருவிழாவினால் அனைத்து சமஸ்தான கோட்டைகளில் இருந்தும் பல பரிசுகளும் பூஜை பொருட்களும் வந்த வண்ணம் இருந்தன.
ருத்ரக் கோட்டை அரசர் இந்த திருவிழா முடிவில் திருமணத்தை குறிக்கும் யோசனையில் வந்திருந்தார்.
அதே போல ஒவ்வொரு கோட்டையின் சார்பாக ஒவ்வொரு அரசரோ, அரசியோ, இளவரசுகளோ வந்திருந்தனர். பல கோட்டை வீரர்களும், பல வீர விளையாட்டுகளும், கலாட்டக்களும் நித்தம் நடந்த வண்ணமிருந்தது.
நாடு முழுதும் இருந்து பல லட்சக் கணக்கான மக்களும் ஆதித்ய கோட்டைக்குள் வந்து சென்றபடி இருந்தனர்.
இந்த திருவிழா ஆரம்பித்த நாள் முதலாக காடுகளில் நடந்து கொண்டிருந்த அத்தனை சட்ட விரோதமான செயல்களும் இப்போது முடங்கி போயிருந்தன. மக்களே தாங்கள் செல்லும் இடங்களையும் உடன் வருபவர்களையும் தற்காத்து பயணங்களை மேற்கொண்டனர். தனியாக காவல் வீரனோ, போர் வீரனோ அம்மக்களுக்கு பாதுகாப்பிற்கென தேவைப்படவில்லை.
ஒவ்வொருவரும் அந்த மண்ணில் பிறந்தவர்கள். இயற்கையாகவே வீரமும், விவேகமும், பொறுப்புணர்வும் கொண்டே வளர்க்கப்படுகிறார்கள். அன்றைய சமுதாயம் உடன் உள்ளவர்களையும், உடன் வசிக்கும் அத்தனை உயிர்களின் மேலும் அன்பு செலுத்த சொல்லிக் கொடுத்தது. வேட்டையாடுதல் நமது மரபாக இருந்த போதிலும், வீரத்துடன் அதனை செயல்படுத்தினரே தவிர கயமை தனத்துடனோ, குரூர எண்ணத்துடனோ ஓர் உயிரை கொல்லக்கூடாது என்ற ஸ்திரமான மனத்திடமும், தெளிவும் கொண்டு வாழ்ந்தனர்.
அதனால் காட்டில் அலைந்து மிருகங்களை அநியாயமாக கொன்று குவித்தவர்கள் இப்போது இருந்த இடம் தெரியாத அளவிற்கு மறைந்து போயிருந்தனர்.
மருத்துவர்களை கடத்துபவர்களை தேடி சென்றிருந்தபோது நரசிம்மன் எல்லா சமஸ்தான கோட்டையின் வாரிசுகளையும் ஒன்று திரட்டி தனிப்படை அமைத்து கடத்தக்காரர்களை சுற்றி வளைத்து பிடிப்பதும், இந்த காலகட்டத்தில் மக்கள் உதவியினால் அதிக சிரமமின்றி நடந்தது.
சேயோனும், அவனது தந்தையும் ஆதித்ய கோட்டையில் நிறுத்தி வைக்கபட்டதால் வேறு எந்த தவறுகளும் காடுகளில் அவர்கள் வகையில் நடந்தேறவில்லை.
இந்த பத்து தினங்களாக நடந்தவற்றை எல்லாம் நினைத்து பார்த்தபடி ஆருத்ரா மகதன் மேலே தலைசாய்த்து படுத்துக் கொண்டிருந்தாள். அவளின் மனவுளைச்சலை உணர்ந்த மகதனும் தனது மிருதுவான வயிற்று பகுதியை அவளின் தலைக்கு வாகாக கொடுத்து அமர்ந்து வனதேவி ஆலயத்தை பார்த்துக் கொண்டிருந்தான்.
“என்ன இளவரசியார் இங்கே படுத்து இருக்கிறீர்கள்? உணவுண்ண வரவில்லையாமே.. பசிக்க வில்லையா?” எனக் கேட்டபடி சிங்கத்துரியன் அவ்விடம் வந்தான்.
“வாருங்கள் சிங்கத்துரியரே.. பசிக்கவில்லை.. அதனால் உணவுக்கூடம் வரவில்லை. தாங்கள் எப்போது இங்கே வந்தீர்கள்? தாம் வருவதாக எந்த செய்தியும் வரவில்லையே..” எனக் கேட்டபடி பின்னால் வேறு யார் வருகிறார்கள் என்றும் பார்த்தாள்.
“யாரை தேடுகின்றன தங்கள் விழிகள்?” என அவளின் பார்வையை கவனித்துக் கேட்டான்.
“உங்கள் புது சகோதரரை தான். அவரும் நீங்களும் தான் இணை பிரியாமல் இப்போது இருக்கிறீர்களே.. நான் கேட்ட கேள்விக்கு பதில் இன்னும் வரவில்லையே..”
“நானும் அமரரும் தான் வந்தோம். சற்று நேரம் முன்பு வனத்தில் எனை இறக்கிவிட்டு அமரர் தனது கோட்டை சென்று வருவதாக கூறிச் சென்றார்.. இரவு வந்துவிடுவதாக உங்களிடம் சொல்ல சொன்னார்..” என சிங்கத்துரியன் மெல்லிய முறுவலுடன் கூறினான்.
“ அடேயப்பா.. எனது நினைவு இருக்கிறதா அவருக்கு? நான் கூட அனைவரும் எனை மறந்தே விட்டீர்கள் என்றல்லவா நினைத்தேன்..”
“ருத்ரக் கோட்டையின் இரும்பு கரங்களை கொண்ட எங்கள் மூத்த இளவரசியை எங்ஙனம் மறப்போம் கூறுங்கள்? உங்களுக்காக தான் இந்த உணவினை எடுத்து வந்தேன். இன்று பெரிய எல்லைக்காவல் தெய்வத்திற்கு பலிபூஜை நடந்தது. அவருக்கு படைத்த உணவுகள் சிலவற்றை எடுத்து வந்தேன். வந்து உண்ணுங்கள்..” எனக் கூறியபடி முதல் அம்புவிக்கோட்டை இளவரசி சித்ராங்கி அங்கே வந்தாள்.
“சித்ராங்கி.. நீ எப்போது இங்கே வந்தாய்? நீ வடக்கு பக்கம் சென்றிருப்பதாக அல்லவா கூறினார் உனது தந்தை..” என ஆருத்ரா அவளைக் கண்டதும் எழுந்து ஓடிக் கட்டிக் கொண்டாள்.
“நேற்று அமரக்கோட்டை எல்லையில் பயணத்தை தொடங்கியதும் தான் இங்கு நடக்கும் திருவிழா பற்றி அறிந்தேன். உடனடியாக இங்கே வந்துவிட்டேன். உனது அறைக்கு பக்கத்து அறையில் தான் தங்கியிருக்கிறேன். நீ மதியம் வந்ததும் மீண்டும் மகாராஜாவை காண சென்று விட்டதாக கூறினார்கள். அதான் நான் பலிபூஜை பார்த்துவிட்டு உனக்கும் சேர்த்து படையல் உணவை எடுத்துக் கொண்டு வந்தேன். சிங்கத்துரியரே வேலிக்கு வெளியில் உணவு கூடையுடன் சிலர் நிற்கிறார்கள் அவர்களிடம் இருந்து உணவை மட்டும் வாங்கி வாருங்கள். உள்ளே வர அவர்களுக்கு அனுமதியில்லை..” என அவள் கூறியதும் அவளுடன் சென்று பெரிய உணவுக்கூடைகள் நான்கை தூக்கி வந்து வைத்தான்.
“அங்கே படையலிட்ட அனைத்து உணவும் இங்கு தான் இருக்கிறதா இளவரசி சித்ராங்கி?” என கூடைகளை விரித்ததும் கேட்டான்.
“இது எங்கள் இருவருக்கு மட்டும் காவல் தெய்வத்தின் அருள் நிறைத்து எடுத்து வந்தது. உங்களுக்கு வேண்டுமானால் தனியாக அருள் பெற்று எடுத்து வந்து உண்ணுங்கள்..” என கேலி குரலில் கூறிவிட்டு மகதனை கோவில் அருகே செல்லும்படி கூறியனுப்பினாள்.
“இதேது இத்தனை இங்கே இருக்க நான் ஏன் தனியாக அருள் பெற்று வாங்க வேண்டும்? தாங்கள் பெற்ற அருளில் கொஞ்சம் எனக்கும் கொடுக்கலாமே இளவரசி..” என சிங்கத்துரியன் அவளைக் காதல் பார்வைப் பார்த்தபடிக் கேட்டான்.
“சிங்கத்துரியருக்கு நான் பெற்ற அருளை ஏன் தரவேண்டும்?”
“எனையும் தாங்களே உடமையாக்கி கொள்வதால் தரவேண்டும்..” என சிங்கத்துரியன் பட்டென தனது காதலை உரைக்கவும் ஆருத்ரா முகம் மலர சித்ராங்கியைப் பார்த்தாள்.
“அதெல்லாம் முடியாது. நான் கூறிய காலக்கெடுவை தாண்டி பல மணித்துளிகள் கடந்துவிட்டது. இத்தனை ஆலோசனை செய்பவர்களை எல்லாம் நான் உடமையாக்கி கொண்டு வாழ்நாள் முழுதும் இழுத்துக் கொண்டு சுற்ற முடியாது. நீங்கள் தனியாகவே சுற்றுங்கள் தனியாகவே அருள் பெற்று உணவை வாங்கி உண்ணுங்கள். இது எனக்கும், எனது தோழிக்கும், அவளது உடையவருக்கும் தான்.. நீங்கள் செல்லலாம்..” என கம்பீரமாக மொழிந்துவிட்டு அவன் அவ்விடம் இருப்பதைச் சட்டை செய்யாமல் தோழிக்கு உணவு பரிமாறி தானும் உண்ண ஆரம்பித்தாள்.
அவர்கள் பாதி சாப்பிட்டு முடித்தபின் நரசிம்மன் அவ்விடம் வந்து சேர்ந்தான். சிங்கத்துரியன் சித்ராங்கியை ஏக்கமாக பார்த்தபடி அவள் உண்ணும் உணவையும் பாவமாக பார்த்துக் கொண்டு அமர்ந்திருப்பது கண்டு ஆருத்ரா அருகே வந்து அமர்ந்தான்.
“என்னவாயிற்று உனது சகோதரனுக்கு? இளவரசி சித்ராங்கியை விழுங்குவதைப் போல பார்த்துக் கொண்டு இருக்கிறான்..” எனக் கேட்டான்.
“அவர்களின் காதல் நாடகம் அரங்கேறிக்கொண்டிருக்கிறது. அமைதியாக வேடிக்கை பாருங்கள்..”
“இங்கும் நாடகமா.. சரி சரி.. இளவரசி சித்ராங்கி அவர்களே எனக்கும் உணவு உண்டா?” என சிரித்தபடி கேட்டான்.
“யுவராஜர் கேட்டால் இல்லையென்று கூற முடியுமா என்ன? இந்தாருங்கள் இந்த கூடையில் இருப்பது அனைத்தும் தங்களுக்கு தான்..” என ஒரு பெரிய கூடையை அவனிடம் நகர்த்திவிட்டு அவனுக்கும் பரிமாற தொடங்கினாள்.
மூவரும் வயிறு முட்ட உண்டுவிட்டு சிங்கத்துரியனை பார்க்க, அவன் அப்போதும் அதே பார்வையில் சித்ராங்கியை பார்த்துக் கொண்டிருந்தான்.
“சித்ராங்கி போதும் உனது நாடகம். எனது மைத்துனன் எத்தனை நேரம் தான் உன்னை விழுங்குவதைப் போல பார்த்துக் கொண்டிருப்பது? நீ கொண்டு வந்த உணவும் ஆறிவிடும். அந்த கூடை அவனுக்கு தானே.. நீங்கள் இருவரும் சமரசம் செய்து கொள்ளுங்கள். நாங்கள் சிறிது தூரம் நடை பயின்றுவிட்டு வருகிறோம்..” எனக் கூறியபடி ஆருத்ராவை கைப்பிடித்து இழுத்துக் கொண்டு அங்கிருந்து சென்றான்.
“இதேது.. நான் எனது தோழியுடன் சிறிது நேரம் உலாவலாம் என்று வந்தால் நீங்கள் அவளை இழுத்துக் கொண்டு செல்வது சரியா? நாங்கள் இருவரும் நடந்துவிட்டு வருகிறோம் நீங்களே உங்கள் மைத்துனுக்கு உணவு கொடுத்து அறைக்கு அழைத்து செல்லுங்கள்..” என சித்ராங்கி ஆருத்ராவின் கைகளை நரசிம்மனிடம் இருந்து விடுவித்து தரதரவென இழுத்துக் கொண்டு சென்றாள்.
“இவர்கள் ஊடலில் எனது கூடல் தான் நசுங்கி போனது.. ஏன் சிங்கத்துரியரே உங்களுக்கு காதல் செய்ய வேற பெண்ணே கிடைக்கவில்லையா? எனது தங்கை தான் கிடைத்தாளா?” என அவனைத் திட்டியபடி அவனுக்கு உணவு பரிமாற ஆரம்பித்தான்.
“நீங்கள் அமருங்கள் யுவராஜரே.. நானே பரிமாறி கொள்கிறேன்..” என அவசரமாக எழுந்து வந்தான்.
“மைத்துனரை உணவுண்ண வைத்து அறைக்கு கொண்டு விடுவது என் வேலை.. இல்லையென்றால் அந்த ராட்சசி எனது உடையாளை பார்க்கவே விடமாட்டாள். நீர் சீக்கிரமாக உண்டு முடியும். விரைவாக உங்களை அறைக்கு அழைத்து செல்கிறேன். இன்று எனது காதல் பொழுதுகள் கொஞ்சம் செழிக்கும் என்று நினைத்து வந்தால் எனக்கு முன்னே என் தங்கை இங்கே வந்து சேர்ந்து எனது கனவையே சிதைத்துவிட்டாள்..” என நரசிம்மன் வேண்டுமென்றே வாய்விட்டு புலம்பியபடி இருந்தான்.
சிங்கத்துரியன், “யுவராஜரே.. தமக்கும் சித்ராங்கி என்றால் பயமா?” எனக் கேட்டான்.
“அவளை கண்டு அஞ்சாதவர் இந்த ஆதித்ய நாட்டில் உண்டா சிங்கத்துரியரே?”
“நீங்கள் தானே அவளுக்கு அடிப்படை கல்வியை போதித்தது..”
“அது தான் நான் செய்த பெரும் தவறு.. அவள் குழந்தையாக இருந்தபோது
தன் நிழலை கண்டால் கூட பயந்து அழுது உடலை கெடுத்துக் கொள்வாள். இப்படி இருந்தவளை மகாராணியார் தான் தூக்கி வந்து பயம் தெளிய வைக்க என்னிடம் விட்டுப் போனார். நானுமே அப்போது பாலகன் தானே.. நானும், அமரரும் அப்போது தான் மரத்தினால் செய்த வாள் கொண்டு வாள் சுழற்ற கற்றுக் கொள்ள ஆரம்பித்தோம். விளையாட்டாக இவளிடம் இதை இப்படி சுழற்று உனக்கு அந்த பயம் போகும். இதை இப்படி சுழற்று இந்த பயம் போகும். இதை படி உனக்கு அந்த மூச்சு இழுப்பு நீங்கும் என ஒவ்வொன்றாக நாங்கள் படித்ததை இவளுக்கு சொல்லி கொடுத்தோம். இன்று இவள் செய்யும் விஷயங்கள் எல்லாம் நாங்கள் அப்போதும் இப்போதும் கூட கனவிலும் நினைக்கவில்லை..”
“அப்படி என்ன செய்கிறார் இப்போது?”
“ஹோஹோ மைத்துனருக்கு பெண்ணை பற்றி தெரிய வேண்டுமா? சரி அவளின் தமையனாக அவளின் வீர தீர செயல்களை எல்லாம் கூறுகிறேன். கேளுங்கள். உங்களால் அவளின் தீரத்தை கையாள முடியுமென்றால் மணக்க சம்மதம் கூறுங்கள். இல்லையென்றால் காலம் முழுதும் இப்படி சண்டை போட்டுக் கொண்டே காதலித்துக் கொண்டிருங்கள்..”
“யுவராஜர் இப்போது முழுதாக பாலகனாக மாறிவிட்டார் போலவே..” நரசிம்மனின் எந்த மிடுக்கும் கம்பீர தோரணையும் இன்றி அண்ணன் ஸ்தானத்தில் தங்கையை ஓர் தந்தையன்புடன் சிலாகித்து பேசுவது கண்டு சிங்கத்துரியன் கூறினான்.
“உண்மை சிங்கத்துரியரே.. அவள் என் உடன்பிறவா தங்கை மட்டுமல்ல எனது எந்த பிரச்சனைக்கும் தீர்வினை கொடுக்கும் எனது மற்றொரு தாய்..” எனக் கூறியவன் கண்களில் அவர்களின் பாலக பருவம் நிழலாக ஓடத் தொடங்கியது.

