118 – ருத்ராதித்யன்
இங்கே அரசகேசரி அபராஜிதனை நெருங்க முடியாமல் எந்த தகவலையும் பெற முடியாமல் தனது அறையில் உலாவிக் கொண்டிருந்தான். எந்த ஏவலும், அடிமை பிசாசுகளும் ஆதித்ய கோட்டையை நெருங்க முடியவில்லை என்பதே இதன் முக்கிய காரணம்.
“கோட்டையின் எட்டு மூலைகளிலும் காளி சிலையும், நான்கு வாயிலிலும் சிம்மயாளியுடன் கூடிய விநாயகர் சிலையை நிறுவி வைத்திருந்தனர். அத்துடன் இப்போது புதிதாக கட்டிய ஐந்து முக ஆஞ்சநேயர் சிலை ஒரு பக்கமும், ஐந்து முக விநாயகர் சிலை ஒரு பக்கமும் உயர்ந்து நின்று அந்த கோட்டையை எந்த தீய சக்திகளும் ஆண்டாத வண்ணம் காத்து வந்தது.
இப்போது நடக்கும் திருவிழாவினால் அனைத்து கோவில்களில் இருக்கும் சிலைகளெல்லாம் அதீதமாக பிரபஞ்ச சக்தியை உள்வாங்கி தேக்கி வைத்துக் கொண்டிருந்தது.
அந்த கோட்டையை தாண்டி மூன்று காத தூரம் வரையிலும் அந்த நல்ல சக்தியின் அதிர்வுகள் அடர்த்தியாக சுற்றிக் கொண்டிருந்தது. இடுகாட்டிலும் கூட எந்த துர் மரணம் கொண்ட ஆத்மாக்களும் சுற்றவில்லை. இந்த நல் சக்திகளின் அதிர்வுகள் எல்லா வகையிலும் நல்லவையாக மாற விரும்புவற்றை எல்லாம் நல்லவையாகவே மாற்றிக் கொண்டிருந்தன.
பொதுவாகவே சக்தி மோதல்களில் எல்லாம் பலம் அதிகமான தரப்பே வெற்றி பெற்று தன்னுள் இழுத்துக் கொள்ளும். அப்படி பார்த்தால் அங்கிருந்த அனைத்து தீய சக்திகளையும் நல்ல சக்தி வென்று நல்லவையாக மாற்றி தன் வலிமையாக மாற்றிக் கொண்டிருந்தது.
இந்த சக்தி கையாளுதல் என்பது கையாள்பவரின் எண்ணம், செயல் மற்றும் அவர்களின் ஆத்ம தீரத்தினை பொறுத்தே இருக்கும். அடர்த்தியான சக்தி அலைகள் ஒன்றாக இருந்தால் அங்கே எதிர் சக்தியலைகள் அதை கலைப்பதோ, தாக்குவதோ மிகவும் சிரமமான காரியம் தான்.
இந்த சக்தி அலைகள் நல்லவையோ, தீயவையோ அதுவும் கையாள்பவரை பொறுத்தே தான் மாறுபடும்.
இங்கே அபராஜிதன் மற்றும் அரசகேசரி தான் என்கிற ஆணவத்தின் பலனாக உலகையே அவர்கள் நினைப்பது போல மாற்றுவது மட்டுமின்றி உயிர்களையும் அவர்கள் வடிவமைத்ததாகவே மாற்ற வேண்டும் என்று நினைத்து செயல்படுகிறார்கள்.
வரத யோகேந்திரர் முதல் சிங்கத்துரியன், யாத்திரை, நானிலன் போன்றோர் இயற்கையை காத்து அதனை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு நல்ல முறையில் நல்ல எண்ணங்கள் மற்றும் செயல்களுடன் கடத்த காக்க போராடுகின்றனர்.
இரண்டுமே பெரும் பலம் கொண்ட கூட்டணி தான், ஆனால் எப்போதும் நல்ல எண்ணங்கள் கொண்டவர்களுக்கு செயலில் தீவிரம் பிரச்சினை வந்தால் தான் கூடும். கெட்ட எண்ணம் கொண்டவர்களுக்கு தீவிரம் என்பது ஆரம்பம் முதலே முழு வேகத்தில் இருந்து பல கெட்ட விஷயங்களை செய்ய வைத்து அதனை உணவாக கொண்டு பெரிய தீய செயல்களை நோக்கி நகர்த்தி செல்லும்.
இந்த கால வித்தியாசம் தான் நல்ல எண்ணங்கள் கொண்டவர்கள் அதிக சிரமத்தை எதிர் கொள்ளநேர்கிறது.
இங்குமே அபராஜிதன் மாய வித்தைகள் மற்றும் ஆத்மாக்களை கையாளும் சக்தியை அடையும் அளவிற்கு பலம் கொண்டு நிற்கிறான். ஆனால் நம்மவர்கள் இன்னமும் அந்த அளவிற்கு மந்திரங்களை கற்று தேர்ச்சி பெறவில்லை என்பது தான் நிதர்சனம்.
“என்ன செய்தாலும் அந்த பாதுகாப்பு வளையத்தை உடைத்து உள்ளே நுழைய முடியவில்லையே குருவே.. என்ன செய்வது? அங்கே அபராஜிதன் நிலை என்னவென்று எப்படி அறிவது?” என அரசகேசரி அவனது குருவிடம் வினவினான்.
“அங்கே காப்பு கட்டி எல்லா காவல் தெய்வங்களுக்கும் பலிபூஜை செய்து கொண்டிருக்கிறார்கள். அவற்றை மீறி நாம் ஒன்றும் செய்ய முடியாது. நாம் அபராஜிதனிடமிருந்து ஏதேனும் தகவல் வரும் வரை காத்திருக்க தான் வேண்டும்..” என குரு அவனிடம் கூறினார்.
“உள்ளே சென்றிருப்பது அவன் என்று அறிந்தால் அவனது உயிருக்கு பெரும் ஆபத்து இருக்கிறது. அந்த வரத யோகேந்திரர் அமைதியாக இருந்தே காரியத்தை சாதிக்கும் திறனுடையவன். அவனது சொல்லும் செயலும் எப்போதும் முழுதாக வெளியே வருவதில்லை. காரியங்களை முடித்துவிட்டு தான் மொத்த திட்டமும் வெளியே கூறுவான். அவனும் கோட்டைக்குள் தான் இருக்கிறான். முன்பை விட இப்போது இன்னும் திடமாய் சிரித்த முகத்துடன் வலம் வருவதாக எனது அரசாங்க அதிகாரி கூறினான். அந்த திருவிழாவிற்கு எல்லாருக்கும் அழைப்பு வந்திருக்கிறது..”
“அப்படியென்றால் நீயும் உள்ளே சென்று வா அரசகேசரி..”
“குருவே .. நானா? உள்ளே தான் அந்த கஜ யாளியும் இருக்கிறது. அது என்னை கண்டால் ஒரே நொடியில் நான் பூமிக்குள் சென்றிடுவேன்..”
“உன் நண்பனை விடவும் உனது பயம் பெரிதாக இருக்கிறது. சரி அப்போது அபராஜிதன் வரும் வரை இங்கேயே அமர்ந்திரு. உனக்கு இனி நான் மந்திரங்களை கற்பிப்பதாக இல்லை. இங்கேயும் இருக்கப் போவதில்லை…” எனக் கூறிவிட்டு நெடுநெடுவென அந்த மந்திரவாதி வெளியே நடந்தான்.
“குருவே.. குருவே.. நில்லுங்கள்.. ஏன் இப்படி கோபம் கொண்டு செல்கிறீர்கள்? நான் தவறாக ஏதேனும் கூறி இருந்தால் என்னை மன்னித்து விடுங்கள்..”
“உனது பேச்சு எனக்கு பிடிக்கவில்லை அரசகேசரி.. எனது பேச்சுக்கு நீ எதிர் பதமாக பேசுகிறாய்.. தவிர என்னால் இங்கு இருக்கவே முடியவில்லை.. அந்த அகோரிகளை வேறு வசியம் செய்து கொண்டு வந்து இங்கேயே அமர வைத்திருக்கிறாய். அவர்களிடம் இருந்து வரும் ஆத்ம அதிர்வுகள் எனது பலத்தை அதிகம் தாக்குகிறது.. நான் தனியாக இருந்து எனது ஆத்ம பலத்தை பெருக்க உக்கிர காளி இருக்குமிடம் செல்ல வேண்டும். அங்கே பலியிட உயிரினங்களை கொண்டு வா. இந்த அம்சம் கொண்ட கன்னி பெண்ணையும் கொண்டு வா.. இந்த பூஜைக்கு பின்னர் நமது பலம் அதீதமாக பெருகும். நாம் அபராஜிதனை நெருங்கவும் முடியும்..” என அவனிடம் கூறிவிட்டு அந்த மந்திரவாதி மீண்டும் நவ- வர்ம நாட்டினை நோக்கி நடந்தான்.
அரசகேசரி அவன் கூறிய உயிரினங்களை திரட்ட ஆட்களை ஏவி விட்டு, அவர் கூறிய மச்ச அம்சங்கள் கொண்ட கன்னிப்பெண்ணை தேடவும் சேயோன் உதவியாளனை பணித்தான்.
“சேயோனும் அவன் தந்தையும் எப்போது வருவார்கள்?” எனக் கேட்டான்.
“இங்கிருந்து சாவிலார் சென்ற நாள் இளவரசி ஆருத்ராவும் வந்த பின்னர் தான் இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்று மகாராணியார் கூறிவிட்டாராம். இப்போது திருவிழா நடப்பதால் அது முடிந்த பின்னர் தான் நீதி மன்றத்தில் சேயோன் வழக்கு நடக்கும் என்று கூறியுள்ளதாக சாவிலார் தகவல் அனுப்பியிருக்கிறார் அரசே..”
“இந்த ஆருத்ராவும், மகாராணியும் நம்மை சீண்டுவதையே பணியாக கொண்டிருக்கிறார்கள். பெண்களை நிர்வாகத்தில் அமர்த்தினால் இப்படி தான் தேவையில்லாத பிரச்சனைகள் வரும். அவன் தான் வேட்டையாட போதுமான அனுமதி ஓலையுடன் சென்றானே அதற்கு மேலும் வேறு என்ன வேண்டுமாம்? இதில் அந்த ருத்ரக் கோட்டை இளவரசி வேறு.. அவளின் தந்தை நமக்கு ஒரு பக்கம் குடைச்சல் கொடுத்தால் இவள் இன்னொரு பக்கம் எனது பணியையே மொத்தமாக நிறுத்தி வைத்துவிட்டாள். சேயோன் இல்லையென்றால் நீங்கள் யாரும் நான் கொடுத்த பணியை பார்க்கமாட்டீர்களா? இத்தனை நாட்களாக ஒரு உயிரினம் கூட நமது ஆராய்ச்சி கூடங்களுக்கு செல்லவில்லை. என்ன செய்கிறீர்கள் அனைவரும்?” என கோபமாக கேட்டான்.
“அரசே.. ஆதித்ய கோட்டை அரசர் அனைவரும் திருவிழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்துள்ளதால் இந்த சாம்ராஜ்யத்தின் அத்தனை பகுதிகளில் இருந்தும் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து கொண்டிருக்கின்றனர். நமது வேட்டையாட்கள் பல இடங்களில் மக்களிடமே சிக்கி சிறையில் தள்ளப்பட்டு இருக்கின்றனர். அனைத்து காட்டு பகுதியிலும் இப்போது மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கிறது. 16 நாள் நடக்கும் இந்த திருவிழா முடியும் வரையிலும் நாம் அமைதியாக இருந்தால் தான் மீதமுள்ள வேட்டையாட்களை கொண்டு நாம் நமது பணியை முடிக்க முடியும்..”
“ஆஆஆஆஆ….” என கோபத்தில் கத்திவிட்டு அங்கிருந்த பொருட்களையும் ஆட்களையும் தள்ளிவிட்டு கோபமாக வெளியே சென்றான்.
இங்கே ஆருத்ரா சித்ராங்கிக்கு நரசிம்மனின் கைக்கோர்த்து வாக்கு கொடுத்ததும் அவளின் கண்களும் பச்சையாக மாறியது அல்லவா? அந்த சில நொடிகளை சிங்கத்துரியன் நன்றாக கவனித்தான். நரசிம்மனிடம் அதை காட்டும் முன்பாக அவளின் கண்கள் பழைய நிலையினை அடைந்திருந்தன. ஆனாலும் அவள் கண்களின் தேஜஸ் கூடியிருந்தது.
“என்ன சிங்கமாதேவி இப்படி செய்துவிட்டாய்? அவள் நேரடியாக கேட்கும் விஷயங்களிலேயே பல நுணுக்கங்களை கோர்த்து கேட்பாள். நீ அவளின் கோரிக்கை யாதென கேட்காமலே இப்படி வாக்கு கொடுத்தால் நாளை அவள் என்னவெல்லாம் கேட்பாளோ?” என தவிப்புடன் கூறினான்.
“அவள் இந்த நாட்டையே கேட்டாலும் கொடுப்பது நமது கடமை ஆதித்யரே.. அவள் எனது ஆருயிர் தோழி மட்டுமின்றி தங்களின் தங்கை அல்லவா? அவளின் குணம் நமக்கு தெரியும். அவள் இதழில் இருந்து வரும் ஒவ்வொரு வார்த்தையும் பல அர்த்தங்கள் கொண்டு தான் வெளிவருகின்றன என்பது நாம் அறிந்திருக்கும் போது அவள் இப்படி ஒரு வாக்கினை கேட்கிறாள் என்றால் அதன் உள்பொதிந்துள்ள விஷயங்களும் அத்தனை அர்த்தமானதாக தானே இருக்கும்..?”
“நீ என்ன கூறுகிறாய்?” நரசிம்மன் இப்போது கூர்மையாக அவளைப் பார்த்துக் கேட்டான்.
“நாம் கொண்டிருக்கும் பணியை சிறப்பாக்கும் பல விஷயங்களை அவள் அறிந்து வந்திருக்கிறாள். அவளின் ஞானம் இன்னமுமே விரிந்திருக்கிறது. என் மனம் அவள் நமக்கு பெரும் உதவியை செய்வாள் என்று கூறுகிறது.. சிங்கத்துரியரே தங்கள் தாயை கண்டீரா?” என அடுத்த விஷயத்தைப் பற்றி பேச ஆரம்பித்தாள்.
“இல்லை இளவரசி.. இனிமேல் தான் செல்ல வேண்டும்.. அவரின் நிலை இப்போது என்ன?” எனக் கேட்டான்.
ஆருத்ரா சற்று முன்னர் நடந்தவற்றை எல்லாம் கூறினாள். அவனின் முகம் பெரும் வேதனையை சுமந்து கொண்டிருந்தது.
“இவர் இப்படி அவனிடம் வசப்படுவார் என்று நான் கனவிலும் எண்ணவில்லை துரியரே.. எப்படி அவனிடம் இருந்து அவரை மீட்க போகிறோம்?”
“இனி அவரை மீட்பதென்பது அந்த ஆண்டவன் கையில் தான் இருக்கிறது இளவரசி. நாம் நமது பணியை முழுதாக முடிக்க வேண்டும், அதை மட்டும் மனதில் வைத்து முன்னேறுங்கள். யாத்திரை தங்களுக்கு செய்தி அனுப்பினாளா?”
“அவளின் ஆராய்ச்சி நன்றாக சென்று கொண்டிருப்பதாக மகாராணிக்கு செய்து அனுப்பியிருக்கிறாள். ஆழ்-துளி கூட்டத்தின் தலைவர் மகனை இவளுக்கு வாழ்நாள் முழுதும் காவல் காக்க அனுப்பி வைத்திருக்கின்றனர். அவனது பெயர் நானிலன். இது தான் இங்கு வந்து அறிந்தேன். அவள் அழைக்கும் போது நாம் அனைவரும் வரவேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறாள். அவளை காணும் வரை இங்கு இருப்பதாக முடிவெடுத்து இருக்கிறேன்.. அடுத்து தாம் என்ன செய்யப் போகிறீர்கள்?”
“வனயட்சி அவர்களிடம் பகையை சம்பாதிக்க போகிறேன்..”

