120 – ருத்ராதித்யன்
சித்ராங்கி ஆருத்ரா அப்படி கூறியதும் அவளின் அருகே வந்து அவளது கண்களை ஆழமாகப் பார்த்தாள்.
“நீ என்ன செய்வதாக இருக்கிறாய் ஆருத்ரா?” எனக் கண்டிப்புடன் கேட்டாள்.
“நான் செய்ய வேண்டியதை செய்ய போகிறேன். எனது தோழியாக நீ எனக்கு சில உதவிகள் செய்ய வேண்டும்… செய்வாய் தானே?”
“நீ செய்யப் போகும் செயலை வைத்து தான் அதை நான் கூற முடியும்…” என சித்ராங்கி உரைத்தாள்.
“சற்று நேரத்திற்கு முன்னே நீ கேட்டது கொடுக்கப்படும் என்று நாங்கள் கொடுத்த வாக்கை நினைத்துக் கொள் இளவரசி… அதே போன்ற ஒரு வாக்கு தான் இதுவும்..” என ஆருத்ரா கூறிய தோரணையில் சித்ராங்கி சில நொடிகள் ஸ்தம்பித்து நின்றுவிட்டாள்.
அந்த குரலில், ‘இதை நீ செய்வதை தவிர வேறு மார்க்கம் இல்லை’ என்ற மறுக்க முடியாத கட்டளை இருந்தது.
“ஆனால் ஒரு நிபந்தனை இளவரசி ஆருத்ரா சிங்கமாதேவி அவர்களே…” என சித்ராங்கி நிதானமாக கூறி அவளின் கண்களைப் பார்த்தாள்.
‘சொல்’ என்பதை போல ஆருத்ரா அவளைப் பார்த்தாள்.
“நீ செய்யும் அனைத்து காரியங்களும் எனக்கு தெரிவிக்க வேண்டும் எந்த சிறு விஷயமும் விடுபடக்கூடாது..” என திடமாக சித்ராங்கி கூறினாள்.
“இந்த இயற்கை பிரச்சனை சார்ந்த அத்தனை விஷயங்களும் உனக்கு வந்து சேரும்… எந்த சிறு தகவலும் விடுபடாது…” என ஆருத்ரா கூறிவிட்டு வனதேவி கோவிலின் உள்ளே அவளை அழைத்து சென்று இதுவரை அவள் அறிந்த அனைத்தையும் சித்ராங்கி காதுகளில் கூறி முடித்தாள்.
“இனி என்ன செய்வதாக இருக்கிறாய் ருத்ரா?” என சித்ராங்கி கேட்டாள்.
“எனது சேனையை தயார் செய்ய போகிறேன்… அதன் மொத்த திட்டமும், அவை எப்போது எப்படி செயல் படவேண்டும் என்ற வியூகம் அத்தனையும் உனக்கு கொடுக்கப்படும். இது எனக்கும் உனக்கும் இடையே மட்டும் தான் இருக்க வேண்டும். புரிகிறதா?”
“புரிகிறது… நீ செய்ய வேண்டியதை செய். நான் பார்த்துக் கொள்கிறேன்..” என கலங்கிய குரலில் கூறிவிட்டு வனதேவி மடியில் தலைவைத்துப் படுத்துக் கொண்டாள்.
“என்னவாயிற்று சித்ரா?”
“ஞானம் என்பது வரமா ? சாபமா? என்று யோசிக்கிறேன்…”
“காலத்தின் கோலத்தை கண்டு மனம் கலங்காத அளவிற்கு உனை நீ திடப்படுத்திக் கொண்டால் சாபமாக கருதமாட்டாய்…”
“எனது கேள்விக்கான பதில் இது தானா?”
“ஆம்… வலிமை அதிகம் பெரும்போது சந்தோஷிப்பது ஒரு பக்கமென்றால், அந்த வலிமை கொடுக்கப்பட்டதன் பொருள் புரிய கடினமான பாதைகளில் நமது பயணம் சென்றே தீரும்… வெறுமனே வலிமை பெற்று இன்பமாய் வாழ்வதில் எந்த பிரயோஜனமும் இல்லை அல்லவா..?”
“இவை அனைத்தும் எனது புத்திக்கு புரிகிறது ஆனால் மனம்.. அது படும் ரணம் தான் யாரும் கவனிப்பதே இல்லை.. அதை தேற்றுவார் தேற்றவில்லை என்றால் அதன் நிலை தான் மோசமாக மாறுகிறது.” என சித்ராங்கி கூறிவிட்டு அமைதியாகிவிட்டாள்.
ஆருத்ரா அவளின் தலையை வருடிக் கொடுத்து, “தாயின் மடியில் அனைத்தையும் இறக்கிவிடு. மற்றதை அவளே பார்த்துக் கொள்வாள்.. நான் மகாராணியார் இருக்குமிடம் செல்கிறேன். நீ அங்கே வருவதானால் வா இல்லையென்றால் அறையில் ஓய்வெடு வந்துவிடுகிறேன்..”
“தனியாக உரையாட வேண்டிய காரியங்கள் இருக்கிறதா?” என சித்ராங்கி கேட்டாள்.
“உனக்கு தெரியாமல் இனிமேல் என்ன இருக்கிறது? நீயும் விரும்பினால் என்னுடன் வா..”
“இல்லை.. சிறிது நேரம் கழித்து வருகிறேன்.. நீ முன்னே செல்..” என சித்ராங்கி கூறிவிட்டு கண்மூடிக் கொண்டாள்.
“சரி.. வருகிறேன்..” என ஆருத்ரா அங்கிருந்து சென்றதும், சித்ராங்கி மகதனை அருகே அழைத்து அவன் கழுத்து மற்றும் வயிற்றில் கை வைத்து அவனது உடல் நிலையை சோதித்தாள்.
“ம்ம்.. உன் குடும்பத்தை பெருக்க தயாராக இருக்கிறாய். உனக்கான இணை தான் இன்னும் எங்கே இருக்கிறாள் என்று தெரியவில்லை.. விரைவில் உனக்கானவளோடு உன்னை சேர்த்து வைக்கிறேன். உலோகத்தை கண்டுபிடித்து விட்டாயா?” எனக் கேட்டாள்.
மகதனின் பச்சைக் கண்கள் சில நொடிகள் மிளிர்ந்தது. அதை சித்ராங்கி கண்டதும், அப்படியானால் அதன் பிரதியும் எங்கு இருக்கிறது என்று தேடி வைத்து விடு.. இவர்கள் அனைவரும் ஒரு பாதையில் நடக்க நாம் அவர்களுக்கு பாதையை ஏற்படுத்தும் வேலையை செய்ய ஆரம்பிக்கலாம்..” என மகதனின் நெற்றியில் முத்தம் வைத்து ஆழமான பெருமூச்சு ஒன்றை வெளியிட்டு அங்கிருந்து புறப்பட்டு மகாராணியார் இருக்குமிடம் சென்று சேர்ந்தாள்.
“வந்தனம் மகாராணியார் அவர்களே.. தாங்களும் தங்களது மருமகளும் உரையாடும் பொழுது இடையிட்டுவிட்டேன்..” எனக கூறியபடி சித்ராங்கி மகாராணியாரின் காலில் பணிந்துவிட்டு அருகே அமர்ந்தாள்.
“இதேது பகடை எல்லாம் பலமாக இருக்கிறது? என்ன வேண்டுமாம் எனது செல்ல இளவரசிக்கு?” என மகாராணியார் அவளை பெருமை பொங்கும் விழிகளுடன் பார்த்தபடி கேட்டார்.
“தங்களது மகன் காதர்வ மனம் புரிந்ததை யாருமே என்னிடம் கூறவில்லை பிறகு நான் எப்படி பேசுவதாம்?” எனக் கூறி ஒருபக்கமாக திரும்பி அமர்ந்துக் கொண்டாள்.
“யாரங்கே.. இந்த அறைபக்கம் ஒரு மணிநேரம் யாரும் வர அனுமதியில்லை. அனைவரும் தளத்தின் ஆரம்பத்தில் சென்று நில்லுங்கள்..” என மகாராணியார் ஆணையிட அனைத்து பணி செய்பவர்களும், காவலர்களும் அங்கிருந்து சென்றனர்.
“வனதேவி அவர்களை பார்த்தாயா?” என நேரடியாக விஷயத்திற்கு வந்தார்.
“இல்லை. ஆனால் அவரின் ஆன்மா இருக்கும் நிலை அறிவேன். அது காலத்தின் கோலம். அதை அவர் அனுபவித்து தான் ஆகவேண்டும். இதை மாற்றினால் காலத்தின் மிகச்சிறந்த பணிகள் யாவும் தடைபடும் அன்னையே..” என அவரது கைப்பிடித்து ஆதூரமாக முகம் வருடியபடி கூறினாள்.
“இதற்கு மாற்று வழியே இல்லையா?” என கலங்கிய கண்களுடன் கேட்டார்.
“இல்லை என்பதை கூறும்படி தான் நிலை இருக்கிறது. அதை மாற்றும் வல்லமை இங்கு யாருக்குமில்லை. மாற்றக்கூடிய இறையும் மாற்றும் எண்ணத்தில் இல்லை. இது வனதேவி அவர்களின் கர்மா. அதை அனுபவித்தே தீர்க்க முடியும். இதுவே கர்மாவின் விதிமுறை.”
“சரி இதில் உனது பங்கு என்ன?”
“இவர்கள் அனைவரும் செய்யும் வேலைகளை எல்லாம் தொகுத்து சேமித்து வைப்பது தான் எனது வேலை..”
“அவ்வளவு தானா?” அவளை நம்பாத பார்வையுடன் கேட்டார்.
“அதற்குமேல் இங்கே நான் செய்ய எதுவுமில்லை அன்னையே..”
“சரி.. நான் கூறுவதை செய்வாயா?” என சிறுபிள்ளை கேட்கும் பாவனையில் கேட்டார்.
“இன்று ஏற்கனவே நிறைய வாக்குகள் கொடுத்தாகிவிட்டது பெற்றாகிவிட்டது. இனி அடுத்த ஆண்டு தான் நான் வாக்களிக்க இயலும்..” என அவள் கூறியதும் ஆருத்ரா கலகலவென சிரித்தாள்.
“அப்பாடா எனது அண்ணியார் சிரித்துவிட்டார். அன்னையே என்ன விஷயம் கூறுங்கள்..”
“இவர்கள் மேற்கொண்டிருக்கும் வேலை தான் எனக்கு சிறிது கவலையளிக்கிறது. இவள் ஒரு பிள்ளையை பெற்றுக் கொடுத்துவிட்டு போருக்கு சென்றால் கூட பரவாயில்லை இப்போதே அனைவரும் போர் கோலத்தில் இருப்பது தான் எனக்கு கவலையாக இருக்கிறது..”
“ஏதேது.. ருத்ரக்கோட்டை இளவரசியார் பிள்ளை பெற்று கொடுக்க தான் உங்கள் மகனை திருமணம் செய்து கொண்டாரா? அதுவும் உங்களுக்கு அடுத்த வாரிசு கிடைத்துவிட்டால் போதுமா? இது அநியாயத்திலும் பெரும் அநியாயமாக இருக்கிறதே.. இதற்கு நான் உடன்படவே மாட்டேன். இதை பிரபஞ்ச குற்றமாகவே நான் கூறுவேன் அன்னையே..”
“அடியே ஞானக்கிழவியே.. சற்று நேரம் உன் வாயை மூடி காதை மட்டும் திறந்து வை. உன் கையில் குழந்தையை கொடுத்தால் நீ எப்படி வளர்த்து எடுப்பாய் என்கிற கவலை தான் பிறக்கிறது உனது பைத்தியக்கார தனமான வார்த்தைகளை கேட்டு. ஆம் அவள் பிள்ளை பெற்று கொடுத்தால் தான் இந்த வம்சம் வளரும். இந்நாட்டின் மகாராணியாக அடுத்த தலைவனையோ தலைவியையோ தயார் செய்வது எனது கடமை. அதை நான் செய்தே ஆகவேண்டும்..”
“அப்படி அவள் பிள்ளையை கொடுக்கவில்லை என்றாலும் நீங்களும் மகாராஜாவும் கொடுத்த கரு தான் வளர்ந்து வந்துவிடுமே.. பிறகென்ன கவலை உங்களுக்கு? நான் கேட்டபோதெல்லாம் முடியாது என்று கூறிவிட்டு உங்களின் செல்ல இளைய இளவரசி வந்து கேட்டதும் அனைத்தையும் கொடுத்து அவளுக்கு அத்தனை பெரிய ஆராய்ச்சி கூடமும் அமைத்து கொடுத்திருக்கிறீர்கள். இதெல்லாம் எந்த பிரபஞ்சத்திலும் நியாயமில்லை தெரியுமா?” என மீண்டும் சித்ராங்கி வம்பிழுத்தாள்.
“இது நீ வம்பிழுக்கும் சமயமா?”
“நிச்சயமாக..”
“சரி.. நீ கிளம்பு.. நான் இவளிடமே பேசிக்கொள்கிறேன்..” என மகாராணியார் கோபமுடன் கூறவும் ஆருத்ரா அவரின் இடதுபக்கம் ஜாடை செய்ய அவரும் எழுந்து அங்கிருந்த ஊஞ்சலில் அமர சென்றார்.
அப்போது அவரை அந்த ஊஞ்சலில் அமரவிடாமல் ஏதோ ஒன்று தடுக்க, மகாராணியார் அவரது குறுவாள் கொண்டு அதில் கட்டியிருந்த கயிற்றினை அறுத்ததும் அந்த மந்திரக்கயிறு மிகுந்த வேகத்துடன் அரண்மனையின் கோட்டைக்கு வெளியே பல மைல் தூரம் சென்று அங்கே அமர்ந்திருந்த விஸ்வக்கோட்டை அரசனை அடித்துச் சுற்றிக்கொண்டது.
அந்த மந்திரக்கயிறானது அது பற்றியிருக்கும் இடத்தின் அதிர்வலைகளை சேகரித்து அதை எதிர்பதமாக மாற்றி, கயிற்றினை கட்டுப்படுத்துபவர்களின் சொல்களுக்கேற்ப ஏவல் பணிகள் புரியும். அவ்வகை கயிறுகள் பொதுவாக புறக்கண்களுக்கு புலப்படாது. ஆனால் அது அவ்விடத்தில் இருந்தால் அந்த இடத்தின் உரிமையாளரை மனம்கலங்க வைத்து தான் பணியவைக்க ஆரம்பிக்கும்.
சித்தராங்கி உள்நுழைந்தபோது தான் அந்த மந்திரக்கயிரும் உப்பரிகை வழியாக அங்கிருந்த ஊஞ்சலில் வந்து பற்றிக்கொண்டது. அது வந்த நொடியிலேயே மகாராணியாரின் மனம் கலங்குவதை கண்கள் காட்டிவிட, சித்தராங்கி வேண்டிய விஷயங்களைக் கூறி மற்றவைகளைப் பேசாமல் திசைத் திருப்பினாள்.
சித்தராங்கியின் பேச்சு ஏறுக்குமாறாக இருப்பதை வைத்தே ஆருத்ரா ஏதோ இங்கிருக்கிறது என்பதை உணர்ந்துக் கொண்டாள். அவளது கண்களுக்கு சிகப்பும் கறுப்பும் கலந்த ஒளி ஊஞ்சலில் மின்னி மறைவதைக் கண்டுவிட்டு தான் மகாராணியாரிடம் சைகை செய்தாள்.
மகாராணியாரும் நொடியில் விஷயத்தை உணர்ந்து அதற்கேற்ப அதை மந்திரபூஜை செய்த வாள் கொண்டு அறுத்துவிட்டார்.
“வாருங்கள் வைத்தியசாலை செல்லலாம்..” என இருவரையும் அழைத்துக் கொண்டு வேகமாக பின்பக்க வழியாக வைத்தியசாலை நோக்கி சென்றார்.
அங்கே சென்றும் உள்ளே நுழையாமல் அதனை சுற்றிக் கொண்டு வனத்தின் ஆரம்ப வாயிலில் நின்று அங்கிருந்த ரகசிய கதவு வழியாக மிருகங்கள் இருக்கும் இடத்திற்கு சென்றார்.
அங்கிருந்த சிறு அருவியின் பின்னே போகும் குகையின் உள்ளே நுழைந்து கோட்டையின் மறுபக்கம் அமைந்திருக்கும் பஞ்சமுக ஆஞ்சநேயர் சிலைக்கு அருகே இருந்த குடிலில் மூவரும் நுழைந்தனர்.

