16 – மீள்நுழை நெஞ்சே
பின்பக்க சுவற்றில் ஏறி உள்ளே குதித்தவன், சத்தம் செய்யாமல் கனிமொழியின் அறையைக் கணித்தபடி அந்தப் பக்கம் நடந்தான்.
ஜன்னலைத் திறந்துவைத்தபடி உள்ளே கனி, துவாரகா, மைனா மூவரும் ஒரே கட்டிலில் படுத்திருந்தனர். மைனாவை நடுவில் விட்டு இருபக்கமும் தோழிகள் அணைக்கட்டி இருந்தனர்.
“இந்த கனிமொழிய ஒரு நாள் நல்லா கவனிக்கணும்… நம்ம பண்றதெல்லா துவாரகா காதுல போட்டதே இவதான்… “, எனப் பொறுமியபடி அந்த அறையின் பின்பக்கக் கதவைத் திறக்க முயன்றான்.
கனிமொழியும், துவாரகாவும் கதவு திறக்கும் சத்தத்தில் உறக்கம் கலைந்து எழுந்துப் பார்த்தனர். மனோஜ் அங்கே நின்றிருப்பதைக் கண்டு மீண்டும் உறங்குவதைப் போல பாசாங்குச் செய்தபடி அவனின் நடவடிக்கைகளைக் கவனித்துக்கொண்டிருந்தனர்.
இவனுக்காகவே தாழ் போடாமல் வெறுமனே சாற்றிவைத்திருந்ததைப் போல கதவு உடனே திறந்துக் கொண்டது.
துவாரகா மெல்ல அருகில் இருந்த பெப்பர் ஸ்ப்ரே எடுத்து போர்வையில் வைத்துக்கொண்டாள்.
கனி தனது தலையணை அடியில் வைத்திருந்த பெரிய டார்ச்சை கையில் பிடித்துக்கொண்டாள்.
உள்ள வந்த மனோஜ் மூன்று பருவ மங்கையர்களைக் கண்டு மனம் தடுமாற ஆரம்பித்தான்.
மூவரையும் பெண்டாள நினைத்தது அந்த கயவனின் மனதும், மூளையும்.
“அய்யோ… மூனு பேரும் இப்படி படுத்திருக்காளுங்களே…. இதுவே என் ரூம்ல மூனு பேரும் இருந்தா… நினைச்சாலே ஜிவ்வுன்னு இருக்கு.. கனிமொழி இவ்ளோ அழகா டி நீ? எனக்கு யார பாக்கறது யார தூக்கறதுன்னே தெரியலியே…. இந்த மைனா பிரச்சன முடியட்டும் இவளுங்க இரண்டு பேரையும் கடத்திட்டு போயாவது இவளுங்க அழக அனுபவிச்சிடணும்…”, எனத் தனக்குத் தானே பேசியபடி மெல்ல மைனா தலையருகில் வந்து நின்றான்.
கையில் இருந்த மயக்க மருந்தை அவன் எடுக்கும் முன் துவாரகா பெப்பர் ஸ்ப்ரேயை அவன் முகத்தில் அடித்திருந்தாள்.
கனி டார்ச்சை வைத்து அவனது பின்மண்டையில் அடித்து, அவனது கையில் இருந்த மயக்கமருந்தை அவன் முகத்திலேயே வைத்து அழுத்தி மயக்கமடையச் செய்தாள்.
“எப்படி துவா இவன் இங்க வருவான்னு தெரியும்? “, மைனா திடீரென்று கேட்ட அலறலில் எழுந்து, கனி மனோஜ்ஜின் முகத்தில் மயக்கமருந்தை அழுத்தும்போது திடுக்கிட்டு பின்சென்று அமர்ந்தபடிக் கேட்டாள்.
“எங்கத்த எங்க வீட்ல ஒரு நாடகம் நடத்தி எதுவும் தேறாம போறப்பவே தெரியும் இவன் இப்படி எதாவது செய்வான்னு… அவ்ளோ நல்ல எண்ணம்…”, என வெறுப்புடன் கூறினாள்.
“சரிதான்.. அதே ரத்தம்ல அதான் உனக்கு தெரிஞ்சிருக்கு”, கனி அந்நேரத்தில் துவாரகாவை வம்பிலுத்தாள்.
“ஆமாமா…. நீ தான் கைத்தேர்ந்த அடியாள் மாதிரி அடிச்ச வேகத்துல அவன்கிட்ட இருந்த ஸ்ப்ரேவ புடுங்கி அடிச்ச.. உன்னது என்ன ரத்தமாம்?”, எனக் கேட்டபடி அவன் கைகால்களைக் கட்டிவிட்டு அறையின் முன் கதவைத் திறந்தாள்.
அங்கே அருணாச்சலம், மனோகர், மரகதம் மற்றும் இன்னும் இரண்டு பேர் இவர்களின் அறைவாயிலில் காத்திருந்தனர்.
“இந்தாங்க சண்முகம் அண்ணா…. இவன தூக்கிட்டு போங்க… அப்பா.. பஞ்சாயத்து இரண்டு நாள் தள்ளி நடக்கட்டும்…. “, எனக் கூறி அவனை முழுதாகப் போர்த்தி முன்பக்கம் அனுப்பினாள்.
பின்பக்கம் அவனது நண்பர்கள் இருக்கும் வாய்ப்பு உண்டு, முன்பக்கமிருந்த பக்கவாட்டு கதவைத் திறந்து அவனைத் தூக்கிக்கொண்டு சென்றனர்.
“ராகா… பத்தரம் டா… “, என அருணாச்சலம் மகளைப் பார்த்துக் கூறினார்.
“நீங்க தான் பத்தரமா இருக்கணும் ப்பா… உங்கக்காவும் உங்கம்மாவும் உங்கள தான் ஒரு வழியாக்க போறாங்க.. நான் இங்க வீட்ல பிரியாணி சாப்டு ஜாலியா இருப்பேன்…”, எனச் சிரித்தபடி கூறியவள், சண்முகத்தை பார்த்து ஏதோ செய்கை செய்ய அவரும் அதைப் புரிந்துக் கொண்டுத் தலையசைத்து விட்டு ட்ராக்டரில், அவனை மூட்டையுடன் படுக்கவைத்த வண்ணம் அங்கிருந்துக் கிளம்பினார்.
“மரகதக்கா…. நாலு பேரும் பத்தரமா இருங்க.. அந்த காவாளி பசங்க எதாவது பிரச்சன பண்ணா சொல்லுங்க பஞ்சாயத்து ஆளுங்க கிட்ட பேசி இங்க காவலுக்கு ஆள் போட சொல்றேன்”, என மனோகர் கூறினார்.
“அதுதான் இவளுங்க ரெண்டு பேரும் இருக்காங்களே… இத விட என்ன வேணும். நான் புள்ளைங்கள பாத்துக்கிறேன். நீங்க பத்திரமா போங்க…. யாராவது பாத்துட போறாங்க பாத்து”, என மரகதம் சற்றுச் சங்கடத்துடன் கூறினார்.
“நீ கவலபடாத அம்மாடி… நாங்க யார் கண்ணுலையும் படாம போயிக்கறோம்… வீட்ட பூட்டிக்கோங்க”, எனக் கூறிவிட்டு இருவரும் அதே வாசல் வழியாக அங்கிருந்தச் சோளக்காட்டிற்குள் புகுந்து, இரண்டு தெரு தள்ளி சென்றுச் சுற்றிக்கொண்டு தங்கள் வீடுகளுக்குச் சென்றனர்.
“அப்பாடா… ஒரு வேல முடிஞ்சது… கனி காலைல இவள கூட்டிட்டு வெளிய போணும் சீக்கிரம் எழுப்பிவிடு…. ஊரு முழிக்க முன்ன கிளம்பணும்”
“பிராது குடுத்துட்டு இவளும் போனா பஞ்சாயத்துல பேசுவாங்க டி”, மரகதம் கூறினார்.
“அப்ப அவன காணோம்னு ஒப்பாரி ஆரம்பிச்ச அப்பறம் போலாமா?”, துவாரகா இடுப்பில் கை வைத்துக்கொண்டுக் கேட்டாள்.
“பஞ்சாயத்து ஆளுங்க வீட்ல சொல்லிட்டு போங்க டி”
“அந்த மொதலியார் கிட்ட சொன்னா போதும் தானே அத்த?”
“ம்ம்…”
“கனி நாளைக்கு விடிகாலைல அந்த ஆளுக்கு போன் போட்டு சொல்லிக்கலாம்…. மைனா இதுக்கு முன்ன நீ ஆஸ்பத்திரி எதுவும் போனியா இந்த விஷயமா?”
“இல்ல துவாரகா…. மெடிக்கல்ல அந்த அட்ட வாங்கிதான் சோதன பண்ணேன்”
“சரி…. தைரியமா இரு… இவன கட்டிக்க உனக்கு இன்னும் விருப்பம் இருக்கா?”, என மீண்டும் ஒரு முறைக் கேட்டாள்.
“என்னைய அவன் ஏமாத்துனத தாண்டி இந்தளவுக்கு வந்த அப்பறம் அவன கட்டி நான் என்ன செய்யறது…. எதாவது வெளியூர் போய் பொழச்சிக்கறேன். இவன இனிமே என் வாழ்க்கைல பாக்கவே கூடாது…. “, அழுதபடிக் கூறியவளைக் கனி தன் தோள் சேர்த்து ஆறுதல் கூறினாள்.
“சரி போய் தூங்குங்க…. நாளைக்கு நெறைய வேல கெடக்கு”, என மரகதம் அனைத்துக் கதவுகளையும் பூட்டுப் போட்டுப் பூட்டிக்கொண்டு உள்ளே சென்றார்.
மூவரும் அறை கதவை நன்றாகப் பூட்டிவிட்டு மீண்டும் உறங்கினர்.
அதிகாலையில் விழித்த கனி. துவாரகாவை எழுப்பிக் குளிக்க அனுப்பிவிட்டு, மைனாவையும் எழுப்பினாள்.
“கனி அந்த ஆளுக்கு போன் போடு”, என துவா தன் போனை எடுத்துக் கொடுத்தாள்.
“போறப்ப சொன்னா பத்தாதா அந்தாளு கிட்ட?”
“சரி சொல்லிக்கலாம். நீ போய் சீக்கிரம் குளிச்சி கிளம்பு.. ஊரு முழிக்கமுன்ன எல்லைய தாண்டிடணும்”, என அவசரமாக அனைவரையும் கிளப்பினாள்.
“அத்த…. பாத்து சூதானமா இருங்க. எவனாவது வந்து எதாவது கேட்டா எதுவும் சொல்லாதீங்க…. சித்தப்பா இன்னிக்கு உங்களோட தான் இருப்பாரு… வயல்ல அவரோடவே நீங்களும் பேசிட்டு இருங்க. இன்னிக்கு அறுப்பு இருக்கு அதனால யாருக்கும் வித்தியாசமா தெரியாது…. அந்த களவாணி பசங்க உங்கள கண்டிப்பா கேட்டு வருவானுங்க… ஜாக்கிரத”, எனத் துவாரகா மரகதத்திடம் இன்னும் சில விஷயங்களைக் கூறிவிட்டு கனி மற்றும் மைனாவுடன் நேற்றிரவு தந்தை நிறுத்திவிட்டு சென்றிருந்த காரில் ஏறிக்கொண்டுக் கிளம்பினாள்.
சூரியன் ஊரை எழுப்பும் முன் துவாரகாவின் அத்தை தனது ஒப்பாரியின் மூலம் ஊரை எழுப்பிவிட்டார்.
அதிகாலையில் கேட்ட நாத்தனாரின் சத்தத்தில் பவானியும், மாதவியும் வேலையை அப்படியே போட்டுவிட்டுக் கூடத்திற்கு வந்தனர்.
வாசலில் அமர்ந்தபடி வைரம் தனது ஒப்பாரியைப் பாடிக்கொண்டிருக்க, அருணாச்சலமும், மனோகரும் மெல்ல எழுந்து வந்து பார்த்துவிட்டு அக்காவிடம் சென்றனர்.
“என்னக்கா.. என்னாச்சி? ஏன் காலங்காத்தால இப்படி ஒப்பாரி வச்சிட்டு இருக்க?”, மனோகர் சத்தம் போட்டார்.
“என் மவன காணோம் யா…. நேத்து இராத்திரி கடைக்கு போயிட்டு வரேன்னு போனான். இன்னும் காணோம்….”, என ஒப்பாரி வைக்க, அப்பத்தா கிழவி அதற்கு மேல் வைத்தது.
“என் பேரன் எங்க போனானோ? யாரு கடத்திட்டு போனாங்களோ?”, என அது பாடவும் பஞ்சாயத்து ஆட்கள் அங்கே கூடினர்.
“பிராது குடுத்திருக்க நேரத்துல இவன் எங்க போனான்? இவன் தான் தப்பிச்சி போயிருக்கணும்…. “, என ஒருவர் பேச அப்பத்தா கிழவி, “என் பேரன் எந்த தப்பும் பண்ணிருக்க மாட்டான்… அவன பத்தி தப்பா யாரும் பேசாதீங்க”, எனச் சண்டைக்கு நின்றது.
“தப்பு பண்ணாதவன் எதுக்கு ஊர விட்டு போகணும்?”, மற்றவர் கேட்டார்.
“மொத அந்த பயல தேட ஆள அனுப்பலாம்யா… அப்பறம் பேசிக்கலாம்”, என்று ஒருவர் கூற, மனோஜைத் தேடி சிலர் புறப்பட்டனர்.
அவனது நண்பர்களை வைத்து அவன் செல்லும் இடமெல்லாம் தேடித் திரிந்தனர்.
எங்கும் அவன் இருக்கும், இருந்த அடையாளம் எதுவும் இல்லை என்பது தான் அனைவருக்கும் அவன் மீதான சந்தேகம் வலுவடையச் செய்தது.
அப்பத்தா கிழவியும், வைரத்தையும் தவிர மற்ற யாரும் அவன் குற்றமற்றவன் என்பதை ஒப்புக்கொள்ளவில்லை, இப்போது அது ஊர்ஜிதமாகும்படியான சூழ்நிலை கூடவும் அவனது நண்பர்கள் கூட அவன் எங்கே சென்றிருப்பான் என யோசிக்க ஆரம்பித்தனர்.
கடைசியாக மைனாவைத் தூக்கி வருவதாகச் சொல்லிச் சென்றான் என்று ஒரு நண்பன் கூறவும் பஞ்சாயத்தில் இருந்து மரகதம் வீட்டிற்கு ஆட்கள் சென்றனர்.
“அந்த பொண்ண ஆஸ்பத்திரி கூட்டிட்டு போயிருக்காங்கப்பா… காலைல துவாரகா போன் போட்டு என்கிட்ட சொல்லிட்டு தான் போச்சி …”, என முதலியார் அப்போது தான் அங்கு வந்து கூறினார்.
துவாரகாவின் பெயரைக் கேட்டதும் அப்பத்தா கிழவி இன்னும் தனது ஒப்பாரியுடன் கலந்த வன்மம் நிறைந்தச் சொற்களை இரைக்க, அருணாச்சலம் அவரை மனோகரின் வீட்டில் விட்டுவிட்டு வரும்படிக் கூறினார்.
“அந்த எடுபட்ட சிறுக்கி தான் என்னமோ செஞ்சிருக்கா. நேத்து அவன் அடிபட்டதும் அவளால தான்.. இன்னிக்கு அவன் காணாம போனதுக்கும் அவ தான் காரணம். அய்யா பஞ்சாயத்து ஆளுங்களா என் பேரன எப்படியாவது கண்டுப்பிடிச்சி கூட்டிட்டு வந்து என்கிட்ட விட்றுங்கய்யா. உங்களுக்கு புண்ணியமா போகும்….”, என அரற்றியபடியே அங்கிருந்து சென்றது கிழவி.
வைரத்தின் கணவன் மகனைக் காணவில்லை என்ற எந்த வருத்தமும் இல்லாமல் அரசாங்கத்திற்கு வருமானம் கொடுக்கும் குடிமகனாக, இப்போதும் மதுவில் மிதந்துக் கொண்டே இருந்தார். இச்சூழ்நிலையைக் கண்டு இன்னும் அதிகமாகக் குடித்து சோகம் போக்க கூச்சல் போட்டு விழுந்தவரை, ஒரு பக்கம் சாய்த்து வைத்துவிட்டு பஞ்சாயத்து ஆட்கள் மனோவின் நண்பர்களைத் துளைத்துக் கொண்டிருந்தனர்.
ஏற்கனவே செய்த ஏற்பாட்டின் படி மைனாவிற்கு முழு உடலும் பரிசோதனைச் செய்யப்பட்டு, அவளின் கருவிற்கு மனோஜ் தான் அப்பன் என்கிற ஆதாரமும் ஊர்ஜிதம் செய்துக்கொண்டு ஊர் வந்துச் சேர்ந்தனர்.
“அட அட அட.. ஊரே ஒரே அமர்க்களமா இருக்கே கனி… காலையில இருந்து நடந்த ட்ராமா எல்லாம் மிஸ் பண்ணிட்டோமே…. ரீவைண்ட் பண்ண முடியாதுல்ல…..”, என அத்தையின் சத்தத்தைக் கேட்டபடியே கனியைப் பார்த்துக் கேட்டாள்.
“இருக்கு நாளைக்கு லைவா நெறைய… வா போய் மொத சாப்டலாம். மைனா டயர்ட் ஆகிட்டா”, எனக் கனி அவர்களை இழுத்துக்கொண்டு வீட்டினுள் சென்றுக் கதவடைத்துக்கொண்டாள்.
இவர்கள் ஊருக்குள் வந்த செய்தி வைரம் காதில் விழுந்ததும் எழுந்து மரகதத்தின் வீட்டிற்கு கிளம்பினார் வைரம்…