19 – காற்றின் நுண்ணுறவு
தமிழோவியன் அவசரமாக வாசலுக்குச் சென்று ஒருவரை அழைத்து வந்தார்.
தன் தந்தை கூறிய சாத்தியக்கூறுகளை மனதில் அசைபோட்டபடி அமர்ந்திருந்த வல்லகி, புதிதாய் வந்தவரைக் கவனியாமல் கண்மூடி அர்த்த – சயனநிலையில் அமர்ந்திருந்தாள்.
அவள் அமர்ந்திருந்த நிலையைக் கண்ட புதியவர், “ஓவியா…. நீ ஓவியத்த தான்டா பெத்து இருக்க”, எனக் கூறியபடி அவள் எதிரில் அமர்ந்தார்.
தமிழோவியன் மென்னகைப் புரிந்துவிட்டு, “பாலா…. செல்லம்மா …”, என இருவரையும் அழைத்துவிட்டு தண்ணீர் கொண்டு வந்துக் கொடுத்தார்.
தந்தை அழைத்ததும் கண்விழித்தவள் எதிரில் இருப்பவரைக் கண்டு எழுந்து நின்றாள்.
பாலாவும் வல்லகியும் அவரை மரியாதை நிமித்தமாக வரவேற்றனர். பின் பாலா சமயலறை நோக்கிச் சென்றாள்.
“இவர் என் ப்ரண்ட்… இவர் தான் உன்னை ட்ரைன் பண்ணப்போறாரு செல்லம்மா”
“நீ ஏன்டா இப்ப பாரதி பொண்டாட்டிய கூப்பிடற?”, புதிதாய் வந்தவர் கண்சிமிட்டியபடிக் கேட்டார்.
“பிறை ஐயா…. இந்த நிலைமைல நான் உங்களோட சண்டை போட தயாரில்ல… என் பொண்ணுங்கள காப்பாத்திட்டு உங்க கிட்ட சண்டை போடறேன்….”, தமிழோவியன் வருத்தம் தோய்ந்த குரலில் பதிலளித்தார்.
“கடல்ல அலை ஓய்ஞ்சப்பறம் குளிக்க நினைச்சா எப்படி ஓவியா? எனக்கு பூஸ்ட் – அப் உன் கூட போடற சண்டை தான்”, உரிமையுடன் அங்கலாய்த்தார்.
“இல்லய்யா…. மன்னிச்சிடுங்க… “, என சில நொடிகளில் தன்னை மீட்டவர், “நான் என் செல்லம்மாவ கூப்டேன். இவ என் சின்ன பொண்ணு வல்லகி… என்னோட செல்லம்மா”, என முகத்தில் வரவழைத்தச் சிரிப்புடன் கூறினார்.
அவர் தமிழோவியன் முகத்தை சில நொடிகள் கூர்ந்துப் பார்த்துவிட்டு, “அரசியார் எங்க?”, எனக் கேட்டார்.
“உள்ளே தான் இருக்கேன் ஐயா”, என நிலவரசி உள்ளிருந்து குரல் கொடுத்தார்.
“இந்தாங்கப்பா டீ”, என பாலா தமிழோவியன் கையில் கொடுத்துவிட்டு, புதியவருக்கும் கொடுத்தாள்.
“நீங்க குடிங்க.. அம்மாவ கூட்டிட்டு வரேன்”, என உள்ளே சென்று நிலவரசியை கைகளில் தாங்கி வந்தார்.
அவர்கள் சிரிப்புடன் வருவதைக் கண்ட பிறைசூடன், “அப்படியே இருபத்திஐஞ்சு வருஷத்துக்கு முன்ன கல்யாணம் பண்ணிட்டு கைல தூக்கினியே அதே மாதிரி இருக்கு டா ஓவியா”, என மனம் மகிழ்ந்துக் கூறினார்.
இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் பிறந்த வீட்டை எதிர்த்து வந்த இருவருக்கும் சட்டப்படியும், முறைப்படியும் திருமணம் செய்து வைத்தவர் பிறைசூடன் தான்.
இவரிடம் தான் தமிழோவியன் உதவியாளராகப் பணிபுரிந்து வந்தார்.
நிலவரசியை ஒரு கல்லூரி கலந்துரையாடலில் கண்டு மனதைப் பறிகொடுத்து, பின் பெரும் போராட்டங்களுக்குப் பிறகு இதயத்தோடு தன்னவளையும் மீட்டுக்கொண்டார்.
அன்று முதல் தமிழோவியனுக்கு மட்டுமின்றி நிலவரசிக்கும் மிகவும் மதிப்புக்குரியவராய் ஆகிப் போனார்.
ஆனால் அவர் எப்போதும் படிப்பு ஆராய்ச்சி என்று இருந்துவிட்ட படியால், இத்தனை காலம் வெளிநாட்டில் இருந்துவிட்டு சென்ற மாதம் தான் இந்தியா வந்தார்.
தமிழோவியனும் ஆராய்ச்சியாளர் தான். ஆனால் பேராசிரியராக பணிபுரிந்த படி குடும்பத்தைவிட்டு பிரியாமல், அறிவுத் தேடலையும் மற்றொரு பக்கம் கடைபிடித்து வருகிறார்.
பிறைசூடன் மனித உடலுக்குள் பல அறிய விஷயங்கள் மறைந்துள்ளது. சரியான கையாளுதளுடன் ஒரு மனித உடலை சீராக பராமரித்து, மனதையும் உடலையும் இணைக்கும் வித்தைப் புரிந்து நடந்துகொண்டால், மனித உடல் அடுத்த கட்டத்திற்கு முன்னேரும். அதாவது மனித உடலை அடுத்த புதிப்பிப்பாக மாற்ற இயலும்.
உடல் இயக்கங்கள் முதல் செயல்பாடுகள், அறிவுத் திறன், கண்பார்வை, யோசிக்கும் திறன், என அனைத்தும் மேம்படுத்தப்பட்ட நிலைக்குச் செல்லும் என ஆணித்தரமாக நம்பி இத்தனைக் காலமாக அதற்கான ஆராய்ச்சியில் மூழ்கி இருந்தார்.
உடலுக்குள் இருக்கும் பல்லாயிரம் அதிசயங்களில் ஒரு சிலதை இந்திய நாட்டில் இருக்கும் சீதோஷ்ண நிலை, இயற்கையாக விளையும் செடி ,கொடி, காய் கனிகள் என அனைத்தும் சரியாக உட்கொண்டு வந்தால் பயனை சீக்கிரம் அடையலாம் என்ற முடிவிற்கு வந்து இப்போது வந்திருக்கிறார்.
தமிழோவியனுக்கும் அவருக்கும் இரண்டு ஆண்டுகள் தான் வித்தியாசம். ஆனால் பார்க்க நாற்பதை தாண்டிடாத தோற்றமே பெற்றிருந்தார்.
லேசாக நரைத்திருந்த முடியும் கூட அவருக்கு கூடுதல் தேஜஸைத் தான் கொடுத்தது.
வல்லகி சொன்னதை வைத்து ஏதோ உணர்ந்த தமிழோவியன் இவருக்கு தான் அலைபேசியில் பேசி இப்போது வரவழைத்திருக்கிறார்.
அவர்கள் நல்ல நேரம் தமிழ்நாட்டிற்கு புறப்பட்டுக்கொண்டிருந்தவர், நேராக இவர்கள் இல்லத்திற்கும் வந்துவிட்டார்.
“நல்ல டீ…. ஓவியா டீத்தூள்ல ஆன்டிஆக்ஸிடென்ட் கலந்திருக்க போலவே டா…. அதான் இவ்வளவு இளமையா இருக்கீங்க போலவே நீங்க இரண்டு பேரும்”, என மீண்டும் வம்பிலுத்தார்.
“சாப்பாடு அரிசில இருந்து எல்லா சாப்பிடற பொருள்லையும் கலந்து தான் வச்சிருக்காரு ஐயா … எனக்கு தெரியாதுன்னு நினைச்சிட்டு இருக்காரு…. அது எங்க உடம்ப கெடுக்கலங்கறதால நானும் கம்முனு விட்டுட்டேன் … “, நிலவரசியும் உரையாடலில் கலந்துக்கொண்டார்.
“எதுல எவ்வளவு கலக்கணும்னு ஓவியனுக்கு சரியா தெரியும் அரசி…. அதான் இரண்டும் பொண்ணா பெத்து வச்சிருக்கான்ல… அதுலையும் இவன் தில்லாலங்கடி இருக்கு”, என பிறைசூடன் கூறிவிட்டு ஓவியனைப் பார்த்து கமுக்கமாகச் சிரித்தார்.
நிலவரசி தமிழோவியனை முறைக்கவும்,” ஐயா …. என் பொண்ணோட ரிப்போர்ட்ஸ் எடுத்துட்டு வரேன் “, என உள்ளே சென்றுவிட்டார்.
“தாத்தா….”, பாலா யோசனையுடன் அழைத்தாள்.
பிறைசூடன் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு,” என்னையா கூப்ட?”, என அவளைக் கேட்டார்.
“ஆமா தாத்தா….”, என அவள் சொல்லிமுடிக்கும் முன் அவள் காதுகளை பிடித்துத் திருகினார்.
“உனக்கு என்னை பார்த்தா தாத்தா மாதிரியா இருக்கு? அவன விட இரண்டு வயசு தான் எனக்கு அதிகம். அவனை அப்பாங்கற என்னை தாத்தாங்கற…. ம்ம்…. என்ன இதெல்லாம்?”, என சற்றே முகத்தைக் கடுமையாக வைத்துக்கொண்டுக் கேட்டார்.
“சாரி சாரி…. எனக்கு எப்படி கூப்பிடறதுன்னு தெரியல அதான் அப்படி கூப்பிட்டேன்… ஏய் வகி… என்னை காப்பாத்துடி…. சிரிச்சிட்டு உட்கார்ந்திருக்க… என் காதே அவர் கையோட வந்துடும் போல டி…. காப்பாத்து …”, என தோழியை உதவிக்கு அழைத்தாள்.
“பெரியப்பா… அவள விடுங்க…. தெரியாம சொல்லிட்டா”, என வல்லகி அவரை முறை வைத்து அழைக்கவும் உள்ளம் குளிர்ந்து பாலாவின் காதுகளை விட்டார்.
“இன்னொரு தடவ கூப்பிடு மா?”, அவர் குரலில் இருந்த ஏதோ ஒன்று வல்லகியையும் தாக்கியது.
“பெரியப்பா…. பெரியப்பா…. “, என அவர் அருகில் அமர்ந்துக் கொண்டாள்.
“உங்கள பத்தி அப்பா அம்மா நிறைய சொல்லி இருக்காங்க… நீங்க பாரின்ல இருக்கறதாவும் சொல்லி இருக்காங்க…. இத்தனை நாள் எங்களை பாக்க தோணலையா உங்களுக்கு? ஒரு போன் கூட பண்ணல… அப்பாகிட்ட மட்டும் மெயில்ல எப்பவாது பேசுவீங்கன்னு அப்பா சொல்வாரு… உங்கள சித்தப்பான்னு கூப்பிட்டாலும் தப்பில்ல…. பார்க்கவும் அவ்வளவு ஸ்மார்ட்ஆ யங்கா இருக்கீங்க…”, எனப் பேசிக்கொண்டு இருந்தாள்.
“அண்ணான்னு கூப்பிடு… யார் வேணாம்னு சொல்லப்போறா… அவரு அதுக்கும் சரின்னு தான் சொல்லுவாரு….. யப்பா…. காதே அவர் கையோட போயிருக்கும் போல…. பாரு எப்படி சிவந்திருக்கு”, எனக் கண்ணாடி முன்னால் நின்றுக் காதை ஆராய்ந்தபடிப் பேசினாள்.
“உன் வாய் தைக்கறேன் வா இங்க … டார்லிங் னு கூட கூப்பிடலாம்…. அதென்ன தாத்தா… என் இத்தனை வருஷ ஆராய்ச்சிய நீ கேள்வி கேட்டுட்ட… “, அவரும் அவளுக்கு சரிசமமாக வாய்கொடுத்தார்.
“ஆமா.. செஞ்சீங்க ஆராய்ச்சி…. என் வகிய சரி பண்ணுங்க… அப்ப ஒத்துக்கறேன்… ஏன் உங்கள என் தம்பின்னு கூட சொல்லி எல்லாருக்கும் இன்ட்ரோ தரேன்”, பாலாவும் விடாமல் வம்பு வளர்த்தாள்.
“அடடா…. பாலா… என்ன இது? பெரியவங்க கூட வார்த்தைக்கு வார்த்தை பேசிட்டு இருக்க…. “, நிலவரசி அதட்டினார்.
“அரசி… நீயுமா இப்படி?”, போலியாக முகத்தை சோகமாக வைத்துக்கொண்டு வல்லகியை பாவமாகப் பார்த்தார் பிறைசூடன்.
“ஐயா…. நான் அப்படி சொல்லல…. ஏங்க….. சீக்கிரம் வாங்க”, என பதறிப்போய் கணவனை அழைத்தார்.
“ஓவியா … எல்லாரும் என்னை தாத்தான்னு சொல்லிட்டாங்க.. நான் போறேன் போடா”, என எழுந்து நின்றார்.
“என்னாச்சுங்க ஐயா …. யார் அப்படி சொல்றது?”
“இதோ… இந்த அரையடி தஞ்சாவூர் பொம்மையும், அரசியும்”, என குழந்தைப் போல கைக்காட்டினார்.
“டார்லிங்”, வல்லகி அழைக்கவும் திரும்பி அவளைப் பார்த்து புன்னகைத்துவிட்டு, “இதோ பார் ஓவியா…. இவ தான் என் டார்லிங் பேபி. என்னை எவ்வளவு அழகா டார்லிங்னு கூப்பிடறா பாரு… இவள நான் என் வீட்டுக்கு கூட்டிட்டு போறேன்….. உங்க கூட எல்லாம் டூ விட்டுட்டேன்”, சிரிக்காமல் அவர் அப்படி முகத்தை வைத்துக்கொண்டு பேசியது நிலவரசிக்கும் பாலாவுக்கு சிரிப்பு அடக்கமாட்டாமல் வந்தது.
“ஹாஹாஹாஹாஹா”
“ஹாஹாஹாஹாஹாஹா”
அனைவரும் ஒரு சுற்று சிரித்து முடித்தனர்.
“இப்ப பாருங்க எல்லார் முகமும் எப்படி இருக்கு? கப்பல் கவுந்த சோகத்துலயே இருந்தா கப்பல் மிதக்க ஆரம்பிச்சிடுமா? நாம தான் அதுக்கு முயுற்சி பண்ணணும்…. இப்படியே சிரிச்சபடியே இருங்க… “, எனக் கூறியவர் தமிழோவியன் கையில் இருந்த ரிப்போர்ட்களை வாங்கிப் பார்த்தார்.
“இன்னும் இரண்டு ரிப்போர்ட் எங்க?”, என பிறை கேட்டதும் , “ஊருக்கு போய் தான் வாங்கணும்…. குடுத்துட்டு வந்திருக்கு பெரியப்பா”, என பாலா முந்திக்கொண்டு பதில் கொடுத்தாள்.
பிறைசூடன் அவளை ஒருமுறைப் பார்த்துப் புன்னகைத்துவிட்டு அருகில் அழைத்தார்.
“காது வலிக்கிதாடா?”
“ஆமா”
“பேச்சுக்கு கூட இல்லைன்னு சொல்லமாட்டியா?”
“வலிக்குதான்னு கேட்டா வலிக்கறப்ப ஆமான்னு தானே சொல்ல முடியும்”
“ஹாஹாஹாஹா… ஓவியா.. யாருடா இந்த பொண்ணு…? எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு… நான் கூட்டிட்டு போறேன்….”, பிறைசூடன் பாலாவின் தலையை வருடிவிட்டபடிக் கூறினார்.
“என் பிரண்ட் பெரியப்பா… ஒன்னா தான் வர்க் பண்றோம்… ஸ்கூல் பிரண்ட்ஸ்…. “, வல்லகி.
“உன் பேர் என்ன?”
“பாலவதனி”
“நல்ல பேர்…. சரி… ஓவியா எல்லாரும் உடனே சென்னை கெளம்புங்க…. அங்க வச்சி தான் எல்லாமே பண்ணமுடியும்.. அங்க எனக்கு புது வர்கிங் லேப் ரெடி பண்ணி இருக்கேன். அங்க போலாம்… “, என அனைவரையும் கிளம்பச் சொன்னார்.
“எல்லாருமா?”, தமிழோவியன் யோசனையாகக் கேட்டார்.
“ஆமா எல்லாரும் தான்…. உன் பெரிய பொண்ண பத்தியும் விசாரிச்சேன்… நிலைமை சரியில்லன்னு தெரிஞ்சப்பறம் இங்கயே ஏன் இருக்கணும்?”, பிறைசூடன்.
“அவங்க இங்க இருந்தா நாச்சியார பத்தி எதாவது தகவல் தெரிய வாய்ப்பிருக்கு இல்லையா சார்”, எனக் கூறியபடி தர்மதீரன் உள்ளே வந்தான்.
வல்லகியும் பாலாவும் அவன் மாற்றத்தைக் கண்டு ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
“நாச்சியா?”, யோசனையாக சூடன் ஓவியனைப் பார்க்க, “சுடரெழில் நாச்சியார் என் முதல் பொண்ணுங்க ஐயா”, என விளக்கம் கொடுத்தார்.
“அவள கடத்திட்டு போய் ஒரு மாசம் மேல ஆச்சு… இப்பவரை எந்த தகவலும் வரல… அவள வேலை வாங்க இவங்கள எதாவது செய்யவும் வாய்ப்பிருக்கு தானே மிஸ்டர்?”, என நிறுத்தினார்.
“நான் தர்மதீரன்… ப்ரைவேட் டிடெக்டீவ்…. “, என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான்.
“பிறைசூடன்”
“டாக்டர் பிறைசூடன்….”, என அவர் வாங்கிய பட்டங்கள் கூறிவிட்டு , “உங்கள சந்திச்சதுல சந்தோஷம்… வல்லகிய குணப்படுத்திட முடியும் தானே சார்?”, எனக் கேட்டான்.
“அவள எதுக்கு குணப்படுத்தணும்?”
“அவ நார்மலா இல்லையே”
“அவ நம்மல விட அப்டேட்டா இருக்கா மிஸ்டர் தர்மதீரன். அதை கன்பார்ம் பண்ண இன்னும் சில டெஸ்ட் பண்ணிட்டு இனி அவள அவளே ஹேன்டில் பண்ண ட்ரைன் பண்ணணும்…. ஷி இஸ் ப்ரீசியஸ் வெர்சன் இன் ஹீயூமன் ப்ரீட்”, எனக் கூறினார்.
“புரியல….”, தர்மதீரன்.
“உடனே யாருக்கும் புரியாது…. கொஞ்சம் பொறுத்திருங்க”, எனக் கூறி பிறைசூடன் தமிழோவியன் அலுவலக அறைக்குச் சென்றார்.
[…] அடுத்த அத்தியாயம் படிக்க.. […]