2 – வேரோடும் நிழல்கள்
“அழாத டா….. அம்மா எப்பவும் உங்கூடவே தான் இருப்பாங்க…. சாமி பக்கத்துல இருந்து உன்னை இன்னும் நல்லா பாத்துக்கணும்ன்னு சாமிக்கு பக்கத்துல நின்னு சொல்லிட்டு இருப்பாங்க… இனிமே இப்படி அழ கூடாது.. நீ அழுதா அம்மாவுக்கும் அழுகை வருமாம்… அம்மாவ அழவைக்கலாமா நீ?”, விஷாலி கேட்டாள்.
“ஹூஹூம்… அம்மா அழக்கூடாது.. நானும் அழமாட்டேன்…. அம்மாவ நான் பாக்கவே முடியாதா மிஸ்?”, அழுகையைக் கட்டுப்படுத்தியபடிக் கேட்டாள்.
“கனிஷ்கா….. என்னாச்சி?”, எனக் கேட்டபடி உள்ளே வந்தார் அவளின் வகுப்பு ஆசிரியர்.
“வாங்க மேடம்.. மயங்கிட்டா.. சாப்பிடலன்னு நினைக்கறேன்…. கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு சாப்பிடட்டும்….. நீங்க இங்க இருக்கீங்களா?”, என விஷாலி கேட்டபடி வெளியே வந்தாள்.
“நான் பாத்துக்கறேன் மேடம்… ரொம்ப நன்றி… அந்த பொண்ணோட அப்பா நேத்து தான் வந்து அட்மிஷன் போட்டுட்டு போனாரு…. அம்மா சமீபத்தில நடந்த ஒரு ஆக்ஸிடென்ட்ல இறந்துட்டாங்க…. “, என வெளியே வந்து விவரங்கள் கூறிவிட்டு மீண்டும் அவளைக் காண உள்ளே சென்றார்.
“பாவம்பா அந்த பொண்ணு…. சரியா சொல்லிக்குடுத்து வளக்க வேண்டிய வயசுல அம்மா இல்லாம போய்ட்டாங்க…. கொஞ்சம் அந்த பொண்ண அதிகமாக கவனிக்கணும் விஷா….”, சக்திசிவன் கூறினான்.
“சரி சசி….. என்ன காலையிலேயே என்னைய தேடி வந்திருக்கீங்க? என்ன விசயம்?”, எனக் கேட்டாள்.
“மேடம் தான் சொல்லணும்….”, சக்திசிவன் நிழலினியைக் கைக்காட்டி கூறினான்.
“ப்ரேயர் டைம் வந்துருச்சு… அப்பறம் பிரேக்ல வந்து சொல்றேன்….. பை…”, என இருவரிடமும் பொதுவாகக் கூறிவிட்டுச் சென்றாள்.
“சசி… என்னவாம் மேடம்க்கு? எதாவது பிரச்சனையா காலைல?”, எனக் கேட்டாள்.
“எனக்கு தெரியாது விஷா…. கிளாஸ் முடிஞ்சி வரப்ப வழக்கம் போல கெமிஸ்ட்ரி அஹ் திட்டிட்டு வந்தா…. வா விஷாவ வச்சே சொல்றேன்னு உன்ன பாக்க கூட்டிட்டு வந்தா…. மேடம் முகத்த பாத்த வீட்ல தான் ஏதோ பெருசா வெடிச்சி இருக்கணும்…. பாப்போம் டீ குடிக்க வரப்போ தெரியும்….”, என சக்திசிவன் சிரிப்புடன் கூறவும், விஷாவும் சிரித்தபடி அவனை அனுப்பிவிட்டு, தனது வேலையைக் கவனிக்கச் சென்றாள்.
அதற்கு பின் வழக்கமான காலைக் கூட்டம் முடிந்தபின், பிள்ளைகள் எல்லாம் அவரவர் வகுப்புகளுக்கு அணிவகுத்துச் சென்றனர். ஒழுங்கில்லாமல் நடந்து செல்பவர்களை எல்லாம் விஷாலி அதட்டி வரிசையில் செல்லக் கூறினாள்.
அதன்பின் விளையாட்டு அறைக்குச் சென்று அன்று எந்தெந்த வகுப்பிற்கு விளையாட்டு நேரம் உள்ளது என்பதைப் பார்த்துவிட்டு, அடுத்த மாதம் நடக்கவிருக்கும் விளையாட்டுப் போட்டிக்கு தேவையான அட்டவணையைத் தயாரிக்கத் தொடங்கினாள்.
இரண்டு மணி நேரம் கழித்து நட்புகள் மூவரும் கேன்டீன் சென்று ஒரே மேஜையில் அமர்ந்தனர்.
“எனக்கு இன்னொரு சமோசா வேணும் வாங்கிட்டு வா சசி….”, விஷா கூறவும் அனைவருக்கும் பிடித்த வெங்காய சமோசா வாங்கி வந்தான்.
“என்ன சொல்லு சசி…. இந்த வெங்காய சமோசாவுக்கு ஈடு எதுவுமே இல்ல…. அந்த சமோசா போடற கைக்கு வெள்ளில ஒரு காப்பு வாங்கி போடணும்….”, என விஷா சமோசாவின் சுவையை அணுவணுவாக அனுபவித்தபடி கண்மூடி இலயித்துக் கூறினாள்.
“இத தான் நீயும் ரெண்டு வருஷமா சொல்ற… நம்ம பீமன் தாத்தா கைக்கு இன்னும் காப்பு போய் சேரக்காணோம்… “, சசி கிண்டல் செய்தான்.
“சரி சரி என்னை வாரினது போதும்…. கம்ப்யூட்டர் சைன்ஸ் மேடம் கம்முன்னு இருக்காங்களே என்ன விசயமாம்?”, விஷா ஆரம்பித்தாள்.
நிழலினி இருவரையும் முறைத்துவிட்டு டீ குடிக்கத் தொடங்கினாள்.
மற்றவர்களும் டீ முடித்தபின் பேச்சைத் தொடங்கினாள்.
“வீட்ல மாப்ள பாக்கறாங்க….”
“யாரு யாருக்கு பாக்கறாங்க?”, விஷா கேட்டாள்.
“எனக்கு தான்… எங்கப்பா தனியா பாக்கறாரு.. எங்கம்மா தனியா பாக்கறாங்க….”, எனக் கூறிவிட்டு உம்மென அமர்ந்துக் கொண்டாள்.
“ஹம்ம்…. உங்கப்பா அம்மா பிரச்சனை இன்னுமாடி முடியல? எத்தன வருஷம் இப்படியே ஆளுக்கு ஒரு பக்கம் வீஞ்சிட்டு இருப்பாங்களாம்? நாளைக்கு நீ இல்லன்னா என்ன பண்ணுவாங்க ? “, விஷா கோபமாகக் கேட்டாள்.
“ஹே விஷா… அவளே மூஞ்ச தொங்கவிட்டு உக்காந்து இருக்கா… நீ வேற திட்டாத…. அவங்கப்பா அம்மா அப்படி இருந்தா இவ என்ன பண்ணுவா?”, சக்தி நிழலினிக்கு ஆதரவாகப் பேசினான்.
“இத்தன வருஷம் எப்படி ரெண்டு பேரையும் கொஞ்சி நடுவுல அல்லல் படறாலோ அப்படியே இனியும் அல்லல் படச்சொல்லு…. கொஞ்சமாவது அவங்கள எதிர்த்து கேள்வி கேக்கணும்… அவங்களுக்காகன்னு இவ பணிஞ்சி போய் தான் இப்படி இருக்காங்க ரெண்டு பேரும்….. பொண்ணுக்காகன்னு அவங்க கொஞ்சமாவது யோசிச்சி இறங்கி வராங்களா? நானும் வெவரம் தெரிஞ்ச நாள்ல இருந்து பாக்கறேன்.. .அவங்க சண்டை போட்டா இவ தான் அழுதுகிட்டு நிப்பா…. ரெண்டு பேரையும் சமாதானம் பண்ணுவா… ஆனா அவங்களுக்கு அவங்க ஈகோ தான் பெருசு.. 15 வருஷமா பாக்கறேன் சசி… இவகிட்ட சொல்லி சொல்லி சலிச்சி போச்சி…. இதோ இப்போ அடுத்த இம்சை ஆரம்பிச்சிட்டாங்க….”, விஷாலி மனதில் உள்ளதை எல்லாம் குமுறியபடிக் கொட்டினாள்.
“என் நிலைமை தெரிஞ்சும் நீ என்னை திட்டாத விஷா… எனக்கு அவங்க ரெண்டு பேர் மட்டும் தான் இருக்காங்க… அவங்க மேல அவ்ளோ அன்பு வச்சிருக்கேன். அவங்களும் என்மேல அன்பு வச்சிருக்காங்க… ஆனா அவங்களோட சண்டைக்கு முடிவு தான் இன்னும் வந்தபாடு இல்ல….. நான் என்ன பண்ணட்டும்?”, நிழலினி உள்ளே போன குரலில் கேட்டாள்.
“பேசாம நீ ஓடிபோய் கல்யாணம் பண்ணிக்க…. அந்த ஷாக் ஒன்னு தான் அவங்கள நிலைப்புரிய வைக்கும்…”, விஷா கூறவும் சக்திசிவன் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு, “விஷா இது ஸ்கூல்…. பாத்து பேசு…”, எனக் கண்டித்தான்.
“இவன் ஒருத்தன்…. எப்போ பாரு ஸ்கூல் ஸ்கூல்ன்னு….. பசங்க யாரும் இல்ல இப்ப…. “, என அவனை அடக்கிவிட்டு நிழலினி முகம் பார்த்தாள் .
அவள் கண்களில் கண்ணீர் இப்போது விழவா? என்பது போல தேங்கி நின்றுக்கொண்டிருந்தது.
“சரி இப்ப என்ன சொல்லணும் சொல்லு….”, என விஷா அவள் நிலைக்கண்டு அமைதியாகக் கேட்டாள்.
“எனக்கு கல்யாணம் வேணாம்…. நீ தான் சொல்லணும்… நான் சொன்னா என்னை எமோஷனல் பிளாக்மெயில் பண்ணுவாங்க…. “, நிழலினி சன்னமானக் குரலில் கூறினாள்.
“நான் சொன்னா மட்டும் உங்கப்பா சரின்னு சொல்லிடுவாரா? இல்ல உங்கம்மா எனக்கு கறி விருந்து செஞ்சி போடுவாங்களா? ரெண்டு பேரும் ஆளுக்கு ஒரு பக்கம் செருப்பும், வெளக்கமாரும் வச்சி என்னை செஞ்சி விற்றுவாங்க பேபி….. உனக்கு அந்த சீன் நடக்கணுமா?”, என அவள் கேட்ட விதத்தில் சக்திசிவன் வாய்விட்டுச் சிரித்தான்.
நிழலினியும் அவள் கூறிய தோரணையில் அழுகையில் இருந்து முறுவல் செய்ய ஆரம்பித்தாள்.
“வாய மூடு மேன்.. இல்ல ஷாட்புட் வச்சி மண்டைய பொலந்துடுவேன்….”, பல்லைக் கடித்தபடி விஷா எச்சரித்தாள்.
“நீ சொன்ன டோன்ல நான் அந்த சீன நினைச்சி பாத்தேனா விஷா… செமயா இருந்தது….. அதான் என்னால சிரிப்ப கன்ட்ரோல் பண்ண முடியல….”, எனக் கூறிவிட்டு மீண்டும் சிரித்தான்.
நிழலினி இம்முறை நன்றாகவே சிரித்தாள். அதைக் கண்ட விஷாலி, “இப்படி சிரிச்ச முகமா இரு நினி…. கல்யாணம் பண்ணாம காலத்துக்கும் இவங்க மத்தில இருந்து உன் வாழ்க்கைய தொலைக்க போறியா? உனக்கான வாழ்க்கைன்னு ஒன்னு இருக்கு… அத மறக்காத…”, இம்முறை அக்கறைக் கலந்தக் கண்டிப்போடுக் கூறினாள்.
“நான் இல்லாம ரெண்டு பேருமே கஷ்டபடுவாங்க விஷா….”
“அது தான் தேவை நினி… அவங்க வாழ்க்கை அவங்க வாழட்டும்… உன் வாழ்க்கைய நீ வாழு…. நீயே எப்பவும் அவங்களுக்கு அடிபந்தா இருந்தா, அவங்க எப்ப அவங்களோட தப்ப உணருவாங்க?”
“அவங்க என்னை பெத்து எவ்ளோ நாளா வளத்து இருக்காங்க டி.. அந்த நன்றி இருக்க கூடாதா?”
“நீ டீச்சர் தானே? கொஞ்சம் அந்த பாசத்த விட்டு வெளிய வந்து யோசி… காலைல மயங்கி விழுந்த பொண்ணுக்கு அம்மா இல்லங்கிற நிதர்சனம் புரிஞ்சா தானே அவ வாழ பழகுவா? அதே மாறி தான் நீ அவங்க கூட இல்லைன்னா தான் ஒருத்தரோட ஒருத்தர் எப்படியாவது சண்டை போட்டாவது பேசி மிச்சம் இருக்க வாழ்க்கைக்கு அர்த்தம் தேடிப்பாங்க…. நம்ம அம்மா அப்பாவா இருந்தாலும் அவங்க ஒரு கணவன் மனைவி… அந்த உறவுக்கு கொஞ்சமாவது அர்த்தம் சேர்க்கணும் தானே? இந்த 25 வருஷமா நீ பாலமா இருந்த, இனிமேலும் அதே நடந்தா அவங்க மனசால உணரவே மாட்டாங்க நினி…. கொஞ்சம் வெளி ஆளா நின்னு யோசி….”
சிறிது நேரம் மௌனமாக இருந்தவள், “நாளைக்கு நான் கல்யாணம் பண்றவனும் இந்தமாறி இருந்தா அந்த வாழ்க்கை நரகம் தானே விஷா? அப்பறம் அந்த கல்யாணத்துக்கு அர்த்தம் இல்லை தானே?”
“அடியே….”, என விஷா ஆரம்பிக்கும் முன் சசி அவளைத் தடுத்தான்.
“நினி… உனக்கு கல்யாண வாழ்க்கை மேல நம்பிக்கை இல்லையா?”, எனத் தீவிர முகபாவத்துடன் கேட்டான்.
அவள் அமைதியாக தலைத் திருப்பி அமர்ந்திருந்தாள்.
“சொல்லு நினி…”, விஷா அவளைக் கூர்மையாகப் பார்த்தபடிக் கேட்டாள்.
“ஆமா எனக்கு கல்யாணம், அது சார்ந்த குடும்ப வாழ்க்கை மேல நம்பிக்கை இல்ல சசி… சின்ன வயசுல இருந்து நான் பாத்த என் குடும்பம் எனக்கு அந்த நம்பிக்கைய தரல… வெறுத்து போயிருச்சு…. எனக்கு கல்யாணம் ஆகி இதே மாறி சண்டை, மனஅழுத்தம், ஈகோ இருந்து….. என் குழந்தைக்கு இதே கஷ்டத்தை குடுக்க நான் தயாரா இல்ல..”, அவள் கண்களில் தெரிந்த உறுதி அவளின் மனதை தெளிவாக மற்ற இருவருக்கும் காட்டியது.
இதைக் கூறிவிட்டு அவள் எழுந்துச் சென்றுவிட்டாள். மற்ற இருவரும் செல்பவளை ஒருவித வலி கலந்தப் பார்வையில் பார்த்துக் கொண்டிருந்தனர்.
“நினி ரொம்ப மனசால பாதிக்கப்பட்டு இருக்கா விஷா…. இவ நம்பிக்கையை சம்பாதிக்கற மனுஷன் கெடைக்கணும்……”
“இதுக்கு ஒரு வழி கண்டுப்பிடிக்கணும் சசி….. இவ அப்பா அம்மாகிட்ட பேசணும்… அவங்க ஈகோவும் அதனால வந்த சண்டைகளும் இவள தான் அதிகமா பாதிச்சிரிச்சி…..”, விஷா கூறியபடி எழுந்தாள்.
இருவரும் அவரவர் பணி நோக்கி சென்றனர்.