21 – ருத்ராதித்யன்
டென்டர் கோஸ் டூ அதிரன் குரூப் ஆப் கம்பெனி….
விதுரனும் அதிபனும் சந்தோஷத்தில் கட்டிக்கொண்டனர்..
ஆருத்ரா முகத்தில் எந்த மாற்றமும் காட்டாமல் மென்னகையுடனேயே அமர்ந்திருந்தாள்.
விதுரன் இப்போது அவள் அருகில் சென்று, “என்ன மேடம்…. சின்ன சின்ன ப்ராஜெக்ட் எல்லாம் செஞ்சீங்க….பெருச விட்டுட்டீங்களே….. சோ சேட்….. “, என அவள் எதிரே நேருக்கு நேர் அமர்ந்து கால் மேல் கால் போட்டுக் கொண்டுப் பார்த்து பரிகசித்தான்.
“சின்ன சின்ன சறுக்கல் வரும் விது…. மேடம் என்னதான் வெர்டிகல், ஹரிஜான்டல் இன்டகரேஷன் ஆப் பிஸ்னஸ் பண்ணாலும் இதுலாம் தனியா, கவனமா எடுத்து பண்ணவேண்டிய வேலை …. ஒன்னு போனா இன்னொன்னு இருக்கு அவங்களுக்கு…. என்ன மேடம் சரி தானே? “, என அதிபன் குதர்க்கமாக பேசியபடி மறுபக்கம் வந்து அமர்ந்தான்.
“என்னதான் மேடம் இந்த தடவை விட்டாலும் நமக்கு இனிமே தொந்தரவா இருக்கமாட்டாங்கல்ல அதி?”
“அதெப்படி வருவாங்க விது…. யாரோ இவங்கள இரண்டாவது தடவை கொல்ல முயற்சி செஞ்சிருக்கறதா கேள்விப்பட்டேன்.. சோ இனிமே அடக்கி தான் வாசிப்பாங்க… இப்ப உக்காந்து இருக்கறமாதிரி”, என சிரித்தபடி அதிபன் கூறியபடி அவளை பார்த்தான்..
“அதனால தான் இன்னிக்கு உக்காந்த இடத்த விட்டு எந்திரிக்காம இருக்காங்களா அதி? அவ்வளவு பயம் வந்துரிச்சா என்ன?”
“பயமோ தயக்கமோ…. இனி நம்ம பக்கம் திரும்பமாட்டாங்க… வா நாம டென்டர் சைன் பண்ணிட்டு வேலைய ஆரம்பிக்கலாம்”, என இருவரும் எழுந்தனர்.
ஆருத்ரா இன்னும் கால் மேல் கால் போட்டு அமர்ந்தபடியே அவர்கள் இருவரையும் பார்த்து மென்னகைப் புரிந்துவிட்டு அங்கிருந்து சென்றாள்.
சக்தி தூரத்தில் யாரிடமோ பேசியபடி இங்கு நடப்பதை கண்காணித்துக்கொண்டிருந்தான்.
ஆழிமதி ஆருத்ராவின் பின்னோடே நடந்தபடி, “மேம் அவங்க அப்படி பேசறாங்க ஏன் மேம் நீங்க பேசல? “, எனக் கேட்டாள்.
“ரோட்ல கண்டவன் பேசறதுக்கு நாம வண்டிய நிறுத்தி பதில் சொல்வோமா?”
“மாட்டோம் மேம்….”
“இதுவும் அப்படிதான்…. வா நம்ம வேலை முடிஞ்சது”, என முன்னே நடந்தாள்.
“மேம்.. பட் இது நாம ரொம்ப எதிர்பார்த்த டென்டர்… எப்படி அவங்களுக்கு போச்சி?”, என டென்டர் தங்களுக்கு கிடைக்காமல் போனதில் வருத்தப்பட்டுக் கேட்டாள்.
“கிடைக்கலன்னு யார் சொன்னா? நமக்கு கிடைக்கவேண்டியது கிடைச்சே தீரும்…. நீ ‘அ – பார்ம்’ போய் பேப்பர் கலெக்ட் பண்ணிட்டு வீட்டுக்கு வா”, எனக் கூறிவிட்டு வண்டியில் ஏறிச் சென்றாள்.
ஆழிமதிக்கு மற்றொரு கார் வந்து நின்றது அதில் அவளும் ஏறி ஆருத்ரா கூறிய இடத்திற்கு சென்று ஒருமுறை சுற்றி வந்துவிட்டு தனக்கு வேண்டிய டாக்குமென்ட்ஸை எடுத்துக்கொண்டு ஆருத்ராவின் வீட்டிற்கு சென்றாள்.
“தனுப்பா….. ஒரு வழியா வீட்டுக்கு வந்துட்டீங்க போலவே?”, எனக் கேட்டபடி ஆருத்ரா ரணதேவ்வை கட்டிக்கொண்டாள்.
“என்னடா நடக்குது? என்ன நாடகம் போட்ற நீ?”, என ரணதேவ் அவள் தலையை தடவி கொடுத்தபடி கேட்டார்.
“புதுசா பண்ணலாம்னு தோணிச்சி தனுப்பா…. அதான்….. நீங்க எப்ப வந்தீங்க? சாப்டீங்களா ?”, என அவரின் தோள் சாய்ந்தபடி கேட்டாள்.
“இல்லடா உனக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன்… வா சாப்டலாம்”, என எழ முயன்றார்.
“இருங்க… நான் கொம்பனை பார்த்துட்டு வந்துடறேன்…. அவனுக்கு தான் அடிபட்டுரிச்சி”, என முகத்தில் சோகத்தை அப்பியபடி கூறினாள்.
“இப்ப பரவால்லயா தான் இருக்கான்… அந்த குட்டி டார்க் சாக்லேட்…. அவன விட்டு பிரியாம அங்க தான் இருக்கு.. சீக்கிரம் வாடா”, எனக் கூறிவிட்டு சமையலறை பக்கம் சென்று உணவு எடுத்து வைக்க கூறிவிட்டு சக்திக்கு அழைத்தார்.
“தாத்தா… உங்க கேர்ள்பிரண்ட்ஸ் பாத்துட்டு வந்துட்டீங்களா?”, என கிண்டலாக கேட்டான்..
“அடி பிச்சிடுவேன் படவா…. என்னடா நடக்குது அங்க? அந்த டென்டர் எப்படி அவன் கைக்கு போச்சி?”, என அவனை திட்டியபடி விவரம் கேட்டார்..
சக்தி ஆருத்ராவின் திட்டத்தை அவருக்கு விளக்கினான்..
“இது சரி வருமா டா?”, ரணதேவ் யோசனையுடன் கேட்டார்.
“வரும் தாத்தா… மேடம் பல தடவை யோசனை செஞ்சிட்டு தானே நம்மகிட்டயே சொல்லுவாங்க… நானும் அவங்க சொன்னத எல்லாம் பண்ணிட்டேன் …. சோ கவலை வேணாம்…. “
“எப்படி டா கவலைபடாம இருக்கறது? அவன் என் பேத்திய கொல்ல முயற்சி செஞ்சி இருக்கான்…. அத நீயும் என்கிட்ட சொல்லலல்ல….”, என ரணதேவ் கோபமாக கேட்டார்..
“முதல் தடவை நடந்தது சொல்லவேணாம்னு மேடம் சொல்லிட்டாங்க தாத்தா…. இந்த தடவை உங்க ஆள் உங்களுக்கு போன் பண்ணிட்டாங்க…. நானும் பாதுகாப்புக்கு எல்லாம் பண்ணிட்டு தான் இருக்கேன்…. நீங்க டென்சன் ஆகாதீங்க…. அதிகம் கோவப்பட்டா சீக்கிரமே வயசாகிடும்னு ஒரு படத்துல சொன்னாங்க தாத்தா…. உங்களுக்கு வயசாகிட்டா உங்க கேர்ள்பிரண்ட்ஸ் நிலைமை தான் பாவம்….”,என அவரை சாந்தப்படுத்த முயன்றான்.
“அடி படுவா ராஸ்கல்”, என சில பல அர்ச்சனைகளை அவனுக்கு நடத்திவிட்டு, சில உத்தரவுகளையும் வழங்கிவிட்டு சாப்பாட்டு மேஜைக்கு வந்தார்.
ஆருத்ரா பின்பக்கம் சென்றதும் கிளிகள் வந்து அவள் தோள்களில் அமர்ந்துக்கொண்டன.
“என்னடா எல்லாமே அமைதியா இருக்கீங்க… எல்லாருக்கும் தூக்கமா?”, என அங்கே படுத்திருந்த நாய்கள், பூனைகள், பறவைகள் என அனைத்து ஜீவனிடமும் பேசியபடி கொம்பன் இருந்த இடத்திற்கு வந்தாள்.
அங்கே குட்டி பைரவ் இரண்டு கால்களை மேலே எக்கி கொம்பனை எழுப்பிக்கொண்டிருந்தது.
கொம்பன் அதை தள்ளிவிட்டு விட்டு நகர்ந்து படுத்தால், இதுவும் அருகில் சென்று மீண்டும் அதே போல செய்துக் கொண்டிருந்தது.
ஏதோ சண்டைப் போல இருவருக்கும்…. கொம்பன் திரும்பிக்கொள்ள பைரவ் சமாதானம் செய்துக்கொண்டிருந்தது.
ஐந்து ஆறு முறை அதுவும் எக்கி எக்கி கொம்பனின் முகத்தை பிடித்து பிடித்து கீழே விழுந்தது. பின் பைரவ் கொம்பனின் தோள் மேல் ஏறி அதன் தலையில் ,இதனின் வால் படும்படி படுத்து கடித்து விளையாடியது.
கொம்பம் தோளை அசைத்து இவனை கீழே தள்ளிவிட்டு எழுந்து வேறுபக்கம் சென்று படுத்துக்கொண்டது.
இதை ஐந்து நிமிடங்கள் நின்று வேடிக்கை பார்த்தவள் முகம் விகசித்து குட்டியை தூக்கச் சென்றாள்.
கொம்பன் அவளை பார்த்ததும் அவசரமாக எழுந்து வர முயன்றது.
“படு கொம்பா “, என்ற அவளின் சொல்லில் அப்படியே படுத்தது.
“வலி குறைஞ்சிடிச்சா…. இங்க இப்படி வந்து படுத்திருக்க”, என அதனிடம் உரையாடியபடி அதன் காயத்தை சோதித்து கருப்பைய்யாவை அழைத்தாள்.
“சொல்லுங்கம்மா”, என பவ்யமாக நின்றார் அவர்.
“மருந்து எல்லாம் குடுத்தீங்களா?”
“குடுத்துட்டேங்கம்மா…. இப்ப சுறுசுறுப்பு வந்துடிச்சி…. நாலு நாள்ல காயமும் நல்லா ஆறிடும்மா…..”.
“ம்ம்… இவன் தான் கொம்பனோட ராவடி பண்ணிட்டு இருக்கான் பாருங்க…. காயத்துல பட்டுற போகுது பாத்து”, என பைரவ்வை கையில் தூக்கி கொஞ்சியபடி பேசினாள்.
அது அவள் தோளில் வாகாக படுத்துக்கொண்டு கொட்டாவி விட்டு தாடையை அவள் தோளிலே தேய்த்துக்கொண்டது.
சேற்றில் ஆடிக்கொண்டிருந்தது போல, சகதி மண்ணெல்லாம் ஆருத்ராவின் புடவையில் ஒட்டிக்கொண்டது.
“டேய் டார்க் சாக்லேட்…. என்னடா என் புடவைய வேஸ்ட் க்ளாத் மாதிரி யூஸ் பண்ற… உனக்கு சேட்டை அதிகமா இருக்கு…..கடைக்குட்டின்னு செல்லம் அதிகமா தரோம் போல… இரு அடுத்த வாரத்துல இருந்து உன்ன ட்ரில் எடுக்கறேன்”, என அந்த சாக்லேட் பஞ்சு பொதியை முகத்திற்கு நேராக கொண்டு வந்து செல்லமாக மிரட்டினாள்.
அது சிரித்தபடி அவள் தாடையை நக்கி விட்டு வாலை ஆட்டியது.
“ஓஓ… சார் ரெடியா தான் இருக்கீங்களா….? சரி ஒரு வாரம் ரெஸ்ட் எடுத்துக்க… அடுத்த வாரம் இருந்து உனக்கு ட்ரெய்னிங் ஆரம்பிக்கறேன்….”, என அதன் நெற்றியில் முத்தமிட்டு, கொம்பனையும் முத்தமிட்டு தடவிகொடுத்துவிட்டு உள்ளே சென்றாள்.
“என்னம்மா சாப்டலாமா?”
“ஐஞ்சு நிமிஷம் தனுப்பா…. இந்த டார்க் சாக்லேட் என் ட்ரெஸ் எல்லாம் சேறு தடவிட்டான்… மாத்திட்டு வரேன்”, என மாடிக்குச் சென்று உடை மாற்றி வந்தாள்.
“ஹாஹா… அவன நீ அதிகம் கொஞ்சறல்ல…. அதான் “, என அவரும் சிரித்தபடி பேத்திக்காக காத்திருந்தார்.
ஆழிமதி முதல் முறையாக வீட்டிற்கு வருவதால் காரை விட்டு அவள் இறங்கியதும் பத்து நாய்கள் அவளைச் சுற்றி நின்றது கண்டு பயந்து மீண்டும் காரில் அமர்ந்து கதவை பூட்டிக்கொண்டாள்.
“பயப்படாதீங்கம்மா….முதல் தடவை உங்கள மோப்பம் பிடிச்சி வச்சிக்கும். அப்பறம் கண்டுக்காது”, என ட்ரைவர் அவளுக்கு தைரியம் கூறினார்..
“அண்ணா…. இத்தனை நாய் இருக்கா இங்க?”, என மிரண்டபடி கேட்டாள்.
“மீதி எல்லாம் தூங்குது போல… ஒரு பாதி தான் இங்க வந்திருக்கு”, என அவர் அசால்டாக சொல்லிவிட்டு கதவை திறந்தார்.
அத்தனை நாய்களும் அவள் வெளியே வருவதற்கு காத்திருந்தன. எதுவும் காருக்குள் ஏற முயற்சிக்கவில்லை.
காவல் வீரனாக அனைத்தும் விரைப்பாக நின்றன.
கதவிற்கு இரண்டு பக்கமும் அணிவகுத்து நின்றவைகளைக் கண்டு ஆழிமதி வெடவெடத்து போய் அமர்ந்திருந்தாள்.
“அண்ணா…. இதையெல்லாம் அந்த பக்கம் தொரத்தி விடுங்கண்ணா…. ப்ளீஸ்… எனக்கு நாய்ன்னா ரொம்ப பயம்ண்ணா”, என அவரிடம் கெஞ்சினாள்.
“தொரத்தறத அம்மா பாத்தா நம்மல வேலைய விட்டு தொரத்திடுவாங்க ம்மா… நீங்க மெல்ல இறங்குங்க நான் இங்கயே நிக்கறேன்”, என அவர் கதவருகில் வந்து நின்றார்.
மெல்ல அவரை ஒண்டியபடி இறங்கி நின்றவளை அனைத்தும் மோப்பம் பிடித்து தங்களது பாஷையில் ஏதோ பேசிக்கொண்டன. இரண்டு மட்டும் அவள் வீட்டிற்குள் செல்லும் வரை உடன் நடந்தது மற்றது எல்லாம் கலைந்து சென்றுவிட்டது.
அவள் பைல்களை இறுக்க பிடித்தபடி அவசரமாக உள்ளே ஓடி வந்து நின்றாள்.
“வா ஆழி…. சாப்டு”, என ஆருத்ரா குரல் கொடுத்தாள்.
“பரவால்ல மேம்… நான்… நான்….நான் அப்றம் சாப்டுக்கறேன்…”, என பயத்தில் திக்கி திக்கி பதிலளித்தாள்.
“வேலனய்யா…. புது தட்டு எடுத்து வைங்க…. இவங்க வர்றப்ப அதுலையே பரிமாறுங்க”, என அவளுக்கும் சேர்த்து, இங்கே வரும்போதெல்லாம் உண்ணவேண்டும் என்று கட்டளையாக கூறினாள்.
ரணதேவ் அவளை அப்போது தான் பார்க்கிறார். அவர் உண்டு முடித்ததால் அவளை அமர்ந்து உண்ணும்படி கூறிவிட்டு எழுந்துக்கொண்டார்.
ஆருத்ராவிற்கு அருகில் ஆழிமதி அமர அவளுக்கு உணவு பரிமாறப்பட்டது.
உணவு உண்டபின் ரணதேவ் அவளை சிலபல கேள்விகள் கேட்டுவிட்டு ஆருத்ராவின் அறைக்கு அனுப்பினார்.
இருவரும் அலுவலக வேலைகளைப் பார்க்க ஆரம்பித்தனர்.
“நன்னிலன்….. கம் இன்”, என இன்டெர்வ்யூ செய்யும் இடத்தில் அமர்ந்திருந்தவனை உள்ளே அழைத்தனர்.
“குட் ஈவினிங் “, என பொதுவாக அங்கே அமர்ந்திருந்த நால்வருக்கும் வணக்கம் சொல்லி அமர்ந்தான்..
“சார்னு எல்லாம் சொல்லமாட்டீங்களா?”, என அங்கிருந்த ஒருவர் ஆரம்பித்தார்..
“சார்ங்கிற வார்த்தை யூஸ் பண்றதுல எனக்கு விருப்பம் இல்லை… அதுக்கு அர்த்தம் தெரிஞ்சப்பறம் யாரும் யூஸ் பண்ண விரும்ப மாட்டாங்க….. பேர் சொல்லி கூப்பிடறது தானே கார்ப்பரேட் கல்சர்”, என பதிலளித்தான்.
“எதிர்வாதம் பண்றீங்களா?”, மற்றொருவர்..
“இல்லை…..நான் யூஸ் பண்ணாததுக்கான காரணம்தான் சொல்றேன் மிஸ்டர்…..…”, என இழுத்தான்..
“எங்க பேர் கேக்கற அளவுக்கு தைரியம் இருக்கா?”
“எங்க பேர் நீங்க கேக்கறீங்களே.. எங்களுக்கும் உங்க பேர் தெரிஞ்சிக்க விருப்பமிருக்கு….”, என மென்னகை மாறாமல் பதில் கொடுத்தான்.
“குட் பாயிட்…..”, எனக் கூறிவிட்டு அவனிடம் உத்தியோகம் சம்பந்தமாக பல கேள்விகள் கேட்டுவிட்டு காத்திருக்க கூறினர்.
“எக்ஸ்யூஸ்மீ…. உங்களோட பேர் மட்டும் இப்ப தெரிஞ்சிக்கலாமா?”, என எழுந்து நின்றுக் கேட்டான்.
“கண்டிப்பா… என் பேர் பார்த்திபன்… இவர் சேன்டி….. இவர் அஜய்…. இவங்க நிரல்யா”, என நால்வரின் பெயரும் கூறினான்..
“தேங்க்யூ மிஸ்டர் பார்த்திபன்….ஹேட் நைஸ் டைம் வித் யூ ஆல்”,எனக் கூறிவிட்டு அனைவரிடமும் ஹேண்ட் ஷேக் செய்துவிட்டு வெளியே வந்தான்..
நுவலி பள்ளி முடிந்து குடிசைக்கு திரும்பிக் கொண்டிருந்தாள். உடன் வந்தவர்களை ஏதோவொரு காரணம் சொல்லி அனுப்பிவிட்டு வனயட்சியின் கோவில் நோக்கி சென்றாள். அவளை பின்தொடர்ந்து அதுவும் வந்துக் கொண்டிருந்தது.
மிதிலன் ஒரு வேலை விஷயமாக டவுனுக்கு சென்றிருந்தான்.. அவன் வருவதற்குள் குடிசை செல்லவேண்டுமென வேகமாக நடந்தாள்.
வனயட்சி சிலை வந்ததும் நின்று விழுந்து கும்பிட்டு எழுந்து சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு சிலையை நோக்கி நடந்தாள்…..