21 – வலுசாறு இடையினில்
மருத்துவமனையில் இருந்து அவர்கள் வீட்டிற்கு வந்த பின்னே தான் ஏகாம்பரம் வந்தார். வந்தவர் நேராக மகன் இருக்கும் அறைக்குள் நுழைந்து அவன் சிகை கோதி மனைவியைப் பார்த்தார்.
“யாரோ நம்ம பையன்கிட்ட இருக்க நகைய திருட தான் என்னமோ குடுத்து இருக்காங்க .. டாக்டர் ரெண்டு நாள் நல்லா தூங்க சொல்லி இருக்காரு.. நல்ல வேல வேற எதுவும் தப்பா நடக்கல.. நம்ம பையன அந்த கோலத்துல பாத்ததும் எனக்கு கை கால் ஓடலங்க .. நம்ம பச்ச இல்ல.. அவன் தான் புள்ளைய கள்ளிக்காட்டுல இருந்து தூக்கிட்டு வந்தேன்னு சொன்னான்.. அவனுக்கு பாத்து ஏதாவது செய்ங்க..”, என அழுத்தபடியே அனைத்தும் கூறி முடித்தார்.
“இவன் எதுக்கு கள்ளிக்காட்டுக்கு போனான்ன்னு யோசி டி ? படிக்கற பையனுக்கு அங்க என்ன வேல? வடக்கூர்ல எந்த திருடன் உள்ளாற வர முடியும்? கண்டிக்க வேண்டிய வயசுல சரியா கண்டிக்கணும் டி”, என வேம்பு பாட்டி வெளியே இருந்துப் பேசினார்.
“என் பையன பத்தி எனக்கு தெரியும்.. யாரும் அவனபத்தி எதுவும் பேசவேணாம்.. “, என ஏகாம்பரம் மகனுக்காகப் பேசினார்.
“நான் ஏன் பேசறேன்.. அதான் ஊரே நாலு நாளைக்கு முன்ன படம் பாத்துச்சாம்ல .. “, என ஏகம்பரத்தை மடக்கினார் வேம்பு பாட்டி.
“காமாட்சி.. உங்க பெரியம்மா இப்ப எதுக்கு இங்க வந்து தேவை இல்லாதது எல்லாம் பேசிக்கிட்டு இருக்காங்க?”, என மனைவிடம் எகிறினார்.
“என் பேத்தி கல்யாணம் நான் இல்லாம எப்டி நடக்கும்? நாலு நாள்ல கல்யாணம் வைக்கற அளவுக்கு என்ன அவசரம் மாப்ள? பையன பாக்கல, அவங்க வீடு பழக்க வழக்கம் எதுவும் விசாரிக்கல.. எதுக்கு இப்டி அவசரமா கல்யாணம் பண்றீங்க?”, என நேரடியாக விஷயத்திற்கு வந்தார்.
“யாரு சொன்னாங்க எதுவும் விசாரிக்கலன்னு ? எல்லாம் விசாரிச்சி தான் பண்றேன்.. என் பொண்ணுக்கு எப்டி கல்யாணம் பண்ணனும்-ன்னு யாரும் எனக்கு சொல்ல தேவையில்ல.. எனக்கே தெரியும்.. கல்யாணத்துக்கு வந்தோமா போனோமா-ன்னு இருந்தா எல்லாருக்கும் நல்லது.. காமாட்சி நாளைக்கு சீக்கிரம் தயாராகு குலதெய்வம் கோவிலுக்கு போய் பத்திரிக்க வச்சிட்டு எல்லாரையும் அழைச்சிட்டு வந்துடலாம்”, என ஏகாம்பரம் மாமியாருக்கு பதில் கூறி மனைவிடம் முடித்தார்.
“எப்டி விசாரிச்சீங்க ? பையன் கால் உடஞ்சி ரெண்டு மூணு மாசமா நடக்க முடியாம இருக்கான் அது தெரியுமா? இல்ல ஏற்கனவே 2 கொல பண்ணவன்-ன்னு தெரியுமா? அந்த பையனுக்கும் அவன் பெரியத்த பொண்ணு பானுவுக்கும் நெருக்கம் அதிகம் அது தெரியுமா? திடீருன்னு இங்க வந்து நாலு நாள்ல கல்யாணம்-ன்னு அவங்க ஏன் முடிவு பண்ணனும்? பையன பாக்காம, வீட்ட பத்தி எதுவும் தெரியாம என் பேத்திய நான் மணவரைல உக்கார விடமாட்டேன் .. நாளைக்கு மாப்ள வீடு பாக்க போகணும்.. காமாட்சி உன் புருஷன்கிட்ட சொல்லு .. இது ஒன்னும் மளிகை கடைல பொட்டணம் போட்டு விக்கற வேல இல்ல.. பொட்ட புள்ள கண் கலங்காம இருந்தா தான் குடும்பம் நல்லா இருக்கும். வம்சம் தழைக்கும் ..”, என வேம்பு பாட்டியும் தான் எதற்கும் சளைத்தவள் இல்லை என்பது போல பேசிவிட்டு உள்ளே சென்றார்.
“இப்போவே உங்கம்மா எதுக்கு இங்க வந்து இருக்கு? என் உயிர இன்னும் எத்தன பேரு தான் எடுப்பீங்க? ஒழுங்கா போய் உன் அம்மாவ ஊருக்கு அனுப்பி வை.. அது இல்லன்னா கல்யாணம் நடக்காதா? வீணா எதுக்கு பிரச்சனைய கெளப்பிக்கிட்டு இருக்கு இப்போ?”, என மனைவியிடம் காய்ந்தார் ஏகாம்பரம்.
“கல்யாணத்துக்கு வந்தவங்கள எப்டிங்க ஊருக்கு போன்னு சொல்ல முடியும்? அவங்க நம்ம பொண்ணு மேல இருக்க பாசத்துல இப்டி பேசிட்டாங்க.. நான் பேசிக்கறேன்.. நீங்க இங்கயே தூங்குங்க.. நாம நாளைக்கு நீங்க சொன்னபடி செஞ்சிக்கலாம்.. “, என காமாட்சி அவரை சமாதானம் செய்து விட்டு அம்மாவிடம் சென்றார்.
“அம்மா..”, என வேகமாக ஆரம்பித்தவர் தாயின் பார்வையில் குரல் மெலிந்து பேச ஆரம்பித்தார்.
“என்ன டி ?”
“ஏன் ம்மா எப்போ பாரு அவருகிட்ட சண்டை போடற?”
“உன் புருஷனுக்கு வக்காளத்து வாங்க தான் நீ இப்பவும் வந்து இருக்க.. உன் பொண்ண கட்டி குடுக்க போற எடம் பத்தி உனக்கு கவலை எல்லாம் இல்லல்ல ? “, என ஊசியாகக் குத்தினார் வேம்பு பாட்டி.
“ஆமா மா.. எனக்கு என் புருஷன் தான் முக்கியம்.. அவரு எது செஞ்சாலும் எங்க நல்லத்துக்கு மட்டும் தான் இருக்கும்.. இனிமே அவர்கிட்ட இப்படி பேசாத ம்மா…”, என அழுகையுடன் கூறிவிட்டுச் சென்று விட்டார்.
“கொஞ்சம் கூட புத்தியும் இல்ல, தைரியமும் இல்ல.. இவள வளத்த அந்த கெழவிய சொல்லணும்.. நீ கவல படாத கண்ணு.. நான் இருக்கறவரை உன் வாழ்க்கைய கெட விடமாட்டேன் ..” என நங்கையிடம் தைரியம் கூறினார்.
“நீங்க ஏன் அம்மம்மா வீணா எனக்காக அப்பாகிட்ட சண்டை போடணும்? என்ன நடக்கணும்ன்னு இருக்கோ அது தானே நடக்கும்.. விடுங்க.. இந்த மூணு நாள் உங்க மடில நான் இருந்தாலே போதும்.. அப்பத்தாவும் என்கூட இருக்க மாதிரி இருக்கும்”, என அமைதியாக கூறிவிட்டு அவரின் மடியில் படுத்துவிட்டாள்.
‘இப்படி பட்ட புள்ளைக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையணும் டா அப்பா முருகா.. நீ தான் துணை ‘, என மனதிற்குள் இஷ்ட தெய்வத்தை வேண்டிக்கொண்டு அவள் தலைக் கோதி விட்டார்.
விடியற்காலையில் ஏகாம்பரமும், காமாட்சியும் வாணியிடம் அன்று செய்ய வேண்டிய வேலைகளின் பட்டியலைக் கொடுத்துவிட்டு, குலதெய்வம் கோவிலுக்குச் சென்றனர்.
அங்கு அவர்களுக்கு முன் இரத்தினமும், செங்கல்வராயனும், தங்கதுரை மற்றும் அவரது மனைவி வந்து இருந்தனர்.
“வணக்கம் சம்பந்தி.. எப்ப வந்தீங்க ?”, எனக் கேட்டபடி ஏகாம்பரம் முதலில் தங்கத்துரையை வரவேற்று விசாரித்தார்.
“இப்ப தான் சம்பந்தி .. வாங்க பூஜைய ஆரம்பிக்கலாம்..”, என இருவரும் உள்ளே செல்ல மற்றவர்களிடமும் ஓரிரு வார்த்தை பேசியபடி முன்னே சென்றனர்.
“இரத்தினம்.. நீ இங்க வா. உன்னால தான் இது நடக்குது..” , என ஏகாம்பரம் அவரை முன்னாள் அழைத்தார்.
“இதுக்கு முக்கிய காரணம் செங்கல்வராயன் ஐயா தான். அவரு முன்ன நிக்கறது தான் முறை..”, எனக் கூறி அவனை முன்னே விட்டு பின்னால் நின்றுக் கொண்டார் இரத்தினம்.
“நீங்க ரெண்டு பேருமே தான் முக்கியம்.. ரெண்டு பேருமே முன்ன நில்லுங்க.. பூசாரி .. ஆரம்பிங்க ..”, எனத் தங்கதுரைக் கூறிவிட்டுப் பத்தரிக்கை எடுத்துக் கொடுத்தார்.
முறையான பூஜைகள் முடிந்த பின் ஏகாம்பரத்திற்கு அவர் கேட்ட அளவு பத்திரிக்கைக் கொடுக்கப்பட்டது.
“இந்தாங்க.. இதுல ஆயிரம் பத்திரிக்கை இருக்கு.. நாங்க தாலி எடுக்க போறோம்.. பொண்ணுக்கு தேவையான நகை எடுக்கறதா இருந்தா நீங்களும் கூட வரலாம்..”, என தங்கதுரை கூறினார்.
“இல்ல சம்பந்தி.. இன்னிக்கி அழைப்பு வச்சிட்டா அடுத்த வேலை பாக்கலாம்ன்னு இருக்கோம் .. நீங்க உங்க மனசுக்கு திருப்தியா பாருங்க.. நாங்க இப்போ கெளம்பினா தான் இன்னிக்கி ஐநூறு வீட்டுக்கு வைக்க முடியும்..”
“ஆமா தங்கதுரை .. அவங்க ஒரு பக்கம் வேலை பாக்கட்டும் நம்ம ஒரு பக்கம் பாக்கலாம்.. வேலை சீக்கிரம் முடிக்கணும். 2 நாள் தான் இருக்கு.. நகை எல்லாம் எப்ப வேணா அவங்க எடுக்கலாம்.. நீங்க மொத தாலி வாங்குங்க.. என்ன இரத்தினம் நான் சொல்றது சரி தானே?”, என செங்கல்வராயன் மீசையை முறுக்கியபடிக் கேட்டான்.
“நீங்க சொல்றது ரொம்ப சரி.. அப்போ நாங்க கெளம்பறோம் .. “”, என இரத்தினம் ஏகாம்பரத்துடன் கிளம்ப நினைத்தான்.
“நீ இரு இரத்தினம்.. நம்ம அப்பறம் போலாம். நீங்க கெளம்புங்க.. நாங்க மாப்ள வீட்டுக்கு போய்ட்டு அப்பறம் வரோம் “, என செங்கல்வராயன் இரத்தினத்தைத் தன்னுடன் நிறுத்திக் கொண்டான்.
“சரிங்க.. நாங்க வரோம்”, என அனைவரும் கூறிக்கொண்டுக் கிளம்பினர்.
அங்கிருந்த அத்தனை நேரமும் தங்கத்துரையின் மனைவி ஒரு வார்த்தைக் கூட காமாட்சியிடம் பேசவில்லை. முகமனாக தலை அசைத்ததோடு சரி, அதற்கு பின் எதுவும் கண்டுக் கொள்ளவில்லை.
காமாட்சி அதைக் கவனித்தபடியே கணவருடன் கிளம்பினார்.
“சரி நாமளும் கெளம்பலாம் “, என தங்கதுரை கூற அவர்களை முன்னே செல்ல கூறிவிட்டு செங்கல்வராயனும், இரத்தினமும் அங்கேயே நின்றனர்.
“இப்ப எதுக்குங்க ஐயா என்னைய இருக்க சொன்னீங்க?”, என இரத்தினம் பவ்யமாகக் கேட்டார்.
“பாட்டியும் பேரனும் ஒண்ணு சேந்துட்டாங்கலாம் .. அங்க என்ன நடக்குதுன்னு எனக்கு தெரியணும்.. நீ அவங்க வீட்டுக்கு போய் என்ன நெலவரம்-ன்னு பாத்துட்டு வா இரத்தினம்”, என வர்மனின் இல்லம் செல்ல கூறினான். .
“ஐயா.. நான் எப்டிங்க போக முடியும்? நான் உங்க ஆளுன்னு அவங்களுக்கு நல்லாவே தெரியும்.. நம்ம வேற யாரையாவது அனுப்பலாமே “
“என்ன இரத்தினம் வர்மன் மேல அவளோ பயமா?”
“அவன் மேல இருக்கறது விட ஆச்சி மேல அதிகம் இருக்குங்க.. வர்மன் மொரடன்.. ஆனா ஆச்சி அப்டி இல்லங்களே .. சிரிச்சிக்கிட்டே காரியம் சாதிப்பாங்க..”
“அத இன்னும் முடிச்சி கட்ட முடியல.. அது இல்லாம இருந்திருந்தா என் ராஜாங்கம் எப்பவோ அங்க ஆரம்பிச்சி இருக்கும்.. சரி யார அனுப்பலாம் நீயே சொல்லு”, என இறங்கி வந்தான்.
“உங்க பொண்ணவே அனுப்பலாம்ங்க ஐயா”
“அவளயா ?”
“ஆமாங்க.. அது சின்ன புள்ள ஒண்ணும் பண்ணாதுன்னு தான் வர்மன் இன்னும் அந்த புள்ளைய தடுக்காம தோப்புல சுத்த விட்டு இருக்கான். நான் போனாலும் சரி,. புதுசா வேற யாராவது போனாலும் சரி சந்தேகம் வரும்.. உங்க பொண்ணே போனா வராதுங்க .. வழக்கம் போல நெனைச்சிப்பாங்க ..”
“சரி அவள இன்னிக்கி வேற வேலைக்கு அனுப்பி இருக்கேன். அது முடிஞ்சி வந்ததும் அனுப்பறேன்.. ஆனாலும் நம்ம ஆளுங்க அங்க இருந்து நமக்கு எப்பவும் தகவல் குடுத்துட்டே இருக்கணும். அத பாத்துக்க.. நீ இப்ப எங்க போற?”, எனக் கேட்டான்.
“தகவல் எல்லாம் ஒடனே வரும்ங்க.. மாப்ள தம்பிய பாக்க போகணும். காலு எந்த அளவுக்கு இருக்குனு பாத்துட்டு தான் மணவரை எந்த மாதிரி பண்றதுன்னு பாக்கணும்ங்க ஐயா”
“இவன் வேற கால ஒடச்சிக்கிட்டு வந்து படுத்து இருக்கான். ஏகாம்பரம் பையன பாத்தானா ?”
“நேத்து கூட்டிட்டு போய் வீடு, தோட்டம், மில்லு எல்லாம் சுத்தி கட்டிட்டு தான் கடைசியா பையன காட்டினேன். அவங்களும் நீங்க சொன்னமாதிரி கட்டு வெளிய தெரியாத அளவுக்கு தான் துணி போட்டு ஒக்காற வச்சி இருந்தாங்க.. அதனால பெருசா மறுப்பு எதுவும் ஏகாம்பரம் சொல்லலைங்க ஐயா”
“சரியான ஆளு தான் யா நீ.. சொத்த எல்லாம் காட்டிட்டு கடைசில பையன காட்டி இருக்க.. தங்கதுரை நேத்து என்ன சொன்னான்?”, என முகத்தை தீவிரமாக வைத்தபடிக் கேட்டான்.
“ஏற்பாடு ஆரம்பிச்சாச்சி-ன்னு சொன்னாருங்க.. அப்பறம் அந்த ஸ்கூல் விஷயம்..”, என மெதுவாகத் தலையைச் சொறிந்தார் இரத்தினம்.
“அது சரியா நடக்கும்ன்னு போய் சொல்லு.. அதுக்கு தான் என் பொண்ண அனுப்பி வச்சேன்.. அவ அத சரியா முடிச்சிடுவா.. சரி நீ கெளம்பு.. நானும் கெளம்பறேன்..”, என கூறிவிட்டு செங்கல்வராயன் அங்கிருந்து கிளம்பினான்.
“ஆண்டவா.. இந்த ஆளுகிட்ட இருந்து நான் தப்பிக்க வழி காட்டுப்பா”, என வேண்டியபடி கோவில் விட்டு வெளியே வந்தான்.
அங்கே தேவராயன் இல்லத்தில், மருதனும் பாண்டியனும் அவனுக்கு உடை மாற்ற உதவிக்கொண்டு இருந்தனர்.
“என்னடா இது.. பேண்ட் பத்தவே இல்ல.. வேற எடு டா”, என தேவராயன் மருதனை அதட்டினான்.
“அண்ணே.. இது தான் கடைசி பேண்ட்.. நீ குண்டாகிட்ட அண்ணே .. வேஷ்டி கட்டிக்க அதான் எல்லாத்துக்கும் பரவால ..”, என மருதன் அவனுக்கு சமாதானம் கூறிக்கொண்டு இருந்தான்.
“வேஷ்டி கஷ்டம் டா.. டேய் பாண்டி.. நீ அந்த பீரோ தொறந்து வேற பேண்ட் இருக்கா பாரு”
“எல்லாமே பாத்தாச்சி ண்ணே.. இந்த ஒட்டிகோ கட்டிகோ வேஷ்டி இருக்கு. இதுல பாக்கெட்டும் இருக்கு. உனக்கு வசதியா தான் இருக்கும் “, என பாண்டி ஒரு வேஷ்டியைப் பிரித்துக் கட்டினான்.
“சரி வாங்க போலாம்.. இன்னிக்கி கட்டு பிரிச்சா மறுபடியும் கல்யாணம் முடிஞ்சி கட்டு கட்டிக்கலாம்..”, என மருதன்.
“இப்ப இந்த கல்யாணம் அவசியம் தானா டா? எதுக்கு சித்தப்பா இவ்வளவு அவசரப் படராரு?”, என தேவராயன் ஆயிரத்துப் பதினெட்டாவது முறையாக மீண்டும் கேட்டான்.
“உனக்கு இப்ப நேரம் சரி இல்லையாம் ண்ணே .. அந்த பொண்ண கட்டினா உங்களுக்கு வர கஷ்டத்துல இருந்து தப்பிச்சிடலாம்-ன்னு ஜோசியக்காரன் சொன்னான்.. அதுக்கு தான்..”, மருதன்.
“அதுக்கு ஏண்டா வேற யாரோட பொண்ணையோ கட்டணும் ? நம்ம அத்தைங்க வீட்ல பொண்ணா இல்ல?”
“உங்க அத்த பொண்ணுங்க எல்லாம் உங்கள காப்பாத்தாதுன்னு தான் எங்க இருந்தோ ஒரு பொண்ண கட்டி வைக்கறாங்க..”, பாண்டி.
“உனக்கு குசும்பு அதிகமாகிடிச்சி டா.. வச்சிக்கறேன் இரு”, என தேவராயன் பாண்டியை மிரட்டிவிட்டு உடன் நடந்தான்.
இரண்டு மாதங்கள் கழித்து வண்டியில் அமர்ந்து செல்வதே தேவராயன் மனதிற்கு மகிழ்ச்சியாக இருந்தது. சிறிது நேரத்தில் எதிரில் பெரிய அத்தை மகள் பானு ஸ்கூட்டியில் வந்தாள்.
தேவராயனும் அவளும் சிறுவயதில் இருந்தே ஒருவருக்கு ஒருவர் என்று வாழ ஆரம்பித்தார்கள். இப்போது திடீரென வேறொரு பெண்ணை மணக்க இவனுக்கு விருப்பம் இல்லை.. இவனது இந்த விருப்பம் மட்டும் வீட்டில் ஏற்று கொள்ளப்படவில்லை என்று தான் கூற வேண்டும்.
“டேய் வண்டிய நிறுத்து டா “, என தேவராயன் அவளைக் கண்டதும் வண்டியை நிறுத்தச்சொல்லி இறங்கினான்.
“மாமா மெல்ல .. “, என பானு அவனுக்கு முன் அவனுக்காகப் பார்த்தாள்.
தேவராயன் அவள் முகத்தைப் பார்த்துவிட்டு, “டேய்.. ரெண்டு பேரும் கொஞ்ச நேரம் அந்த பக்கம் இருங்க”, என அவர்களை அனுப்பினான்.
“ஏண்டா அண்ணே இன்னும் இவங்கள தான் நெனைச்சிட்டு இருக்காறா?”, என பாண்டி அவர்கள் இருவரையும் பார்த்தபடிக் கேட்டான்.
“ஆமா டா.. சின்ன வயசுல இருந்து அண்ணே பொறுமையா இருக்கறது இவங்ககிட்ட மட்டும் தான். பெரியம்மா படுக்கைல விழுந்த அப்பறம் யாருக்கும் அடங்காம இருந்தாரு.. பானு அத்தாச்சி சொன்னா மட்டும் அப்புடியே கேப்பாரு “, மருதனும் பழைய ஞாபகங்களை நினைவுக் கூர்ந்தபடிப் பேசினான்.
“அப்பறம் ஏண்டா வேற பொண்ண இப்போ பாக்கணும்? இவங்களுக்கே கல்யாணம் செஞ்சி வச்சிட்டா பிரச்சனையே இல்லயே .. இப்போ உங்க அத்தைங்க அத்தன பேரும் பிரச்சனை பண்ணிக்கிட்டு இருக்கற வேலையும் இல்ல, உங்களுக்கும் வேற எந்த பிரச்சனையும் இல்ல..”, பாண்டி எதார்த்தமான யோசனையுடன் கேள்விகளைக் கேட்டான்.
“எல்லாம் பேசியாச்சி.. அப்பா யார் சொல்றதும் காதுல வாங்க மாட்டேங்கறாரு .. அந்த செங்கல்வராயன் சொல்றது தான்-ன்னு இருக்காரு.. அம்மாவுக்கும் இதுல ரொம்ப வருத்தம் தான்”
“அந்த ஆளு அப்டி என்னடா சொன்னான் அப்பாகிட்ட?”
“தெர்ல பாண்டி .. அவன் சொன்னா அப்பா அப்புடியே கேக்கறாரு..”
“அண்ணனுக்கு கல்யாணம் ஆகிட்டா உங்க அத்தாச்சி என்னடா பண்ணுவாங்க?”
“தெர்ல பாண்டி.. என்னமோ எல்லாம் மர்மமா இருக்கு”, மருதனுக்கும் பானுவைத் தவிர தன் அத்தாச்சியாக யாரும் வருவதுப் பிடிக்கவில்லை.
“சரி கடவுள் விட்ட வழி.. அண்ணே கூப்பிடறாரு டா .. வா போலாம்”, எனப் பாண்டி அவனை அழைத்துக் கொண்டு தேவராயனிடம் வந்தான்.
“நீ மனசுல எதுவும் வச்சிக்காம போ.. நான் பாத்துக்கறேன் “, என பானுவிற்கு தைரியம் சொல்லி அனுப்பி வைத்துக் கொண்டு இருந்தான்.
காரில் ஏறியதும் தேவராயன் கிழக்குபுரி செல்லும் பாதையில் வண்டியை விட சொன்னான்.
“எதுக்கு ண்ணே இப்போ இந்த ஊருக்கு போகணும்?”, மருதன் கேட்டான்.
“முடிக்க வேண்டிய கணக்கு ஒண்ணு பாக்கி இருக்கு .. நான் சொல்றத மட்டும் செய்”, என உருமினான் தேவராயன்.