22 – ருத்ராதித்யன்
நுவலி மெல்ல மெல்ல வனயட்சியின் சிலையருகே சென்று மீண்டும் சுற்றும் முற்றும் பார்த்தாள்.
யாரும் இல்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு அந்த சிலையின் பாதங்களைத் தொட்டு கண்ணில் ஒற்றிக்கொண்டாள். அதன் பின் அந்த சிலையின் பின்பக்கமாக சென்று ,சிலையை சுற்றி இருந்த துணியை விளக்கிவிட்டு, சிலையின் முதுகுதண்டினை விரல்களால் தொட்டபடி கீழும் மேலும் வித்தியாசமாக ஏதேனும் இருக்கிறதா என பார்த்தாள்.
எதுவும் அவளின் விரல்களுக்கு தட்டுப்படவில்லை.
துணியை சரி செய்துவிட்டு முன்பக்கமாக வந்து நின்று இடுப்பில் இருந்து கால் வரை தடவி பார்த்தாள்.
அப்போதும் எதுவும் அவளின் கைகளுக்கு தட்டுப்படவில்லை.
“ஆச்சி இதுல தானே என்னமோ இருக்குன்னு சொன்னா…. எதுவும் நம்ம கைக்கு தட்டுலையே…… இங்க இருக்கறது இந்த ஒரு வனயட்சி சிலை தானே…. வேற எந்த சிலைய பத்தி அது சொல்லி இருக்கும்?”, என தனக்கு தானே பேசியபடி மீண்டும் சிலையின் முன் விழுந்து கும்பிட்டுவிட்டு அங்கிருந்து கிளம்பினாள்.
அவளை பின்தொடர்ந்து வந்த பாம்பு அவளின் செய்கைகளை கண்காணித்தபடி மரத்தில் உடலைச் சுற்றியபடி அமர்ந்திருந்தது.
அவள் அங்கிருந்து நகர்ந்ததும் அதுவும் நகர ஆரம்பித்தது.
“அஜகரா….. “, என யாரோ அழைத்தனர்..
அந்த பாம்பு திரும்பி நின்று யாரென பார்த்தது.
ஆச்சி அங்கே நின்றிருந்தாள்.
“என்ன அஜகரா…. எப்படி இருக்க? “, என அதன் அருகில் வந்து ஆச்சி கேட்டாள்.
அது அவள் பாதம் பணிந்து எழுந்தது.
“நல்லா இரு…. எடுத்த வேலைய சிறப்பா நீ செஞ்சி முடிப்ப…. அவசரப்படாத…. இன்னும் அவள நீ நெருங்க நாள் இருக்கு…. கண்காணிப்பு மட்டும் நடக்கட்டும்… புரியுதா?”
அது சரியென குனிந்து நிமிர்ந்தது.
“ஜாக்கிரதை… ஏரன் கண்ணுல படாம இரு… அவனுக்கு சந்தேகம் வந்துடிச்சி… ஜனங்க கண்ல படாம சுத்து”, எனக் கூறிவிட்டு காட்டிற்குள் புகுந்து கொண்டாள் வனயட்சி ஆச்சி.
“அத்தான்…. நான் நாளைக்கு காலைல டெல்லி போறேன்… எனக்கு இந்த வீடு இரண்டு நாள்ல நீங்க ரெடி பண்ணி குடுங்க… “, எனக் கூறியபடி ஆதியின் அருகில் வந்தாள் யாத்ரா.
“முடிச்சிடலாம் யாதுமா…. நீ கண்டிப்பா இப்ப போயே ஆகணுமா? உனக்கு ட்ரெஸ்ஸிங் பண்ணணும்… வலியோட சுத்தப்போறியா?”, என அக்கறையுடன் கேட்டான்.
“நம்ம வேலைல இதுலாம் சகஜம் அத்தான். இதுலாம் பாத்தா த்ரில் அட்வென்சர் கிடைக்குமா? “, என ஆதி செய்துக்கொண்டிருந்த மீன் பொறியலை வாசம் பிடித்தாள்.
“இது ஒன்னு சொல்லிடு எதுக்கெடுத்தாலும்…. பிஸ்னஸ்ல எவ்ளோ த்ரில் இருக்கு தெரியுமா? அதுலாம் முழுக்க முழுக்க ப்ரைன் கேம்…. அது ஒருதடவை ட்ரை பண்ணு.. அப்பறம் தெரியும்”, என ஆதியும் அவளுக்கு தோசை கல்லில் இருந்து பொறித்த மீனை எடுத்து தட்டில் வைத்து கொடுத்தபடிக் கூறினான்.
“அத்தான்…. நீங்க எதுக்கு இவ்ளோ பேசறீங்கன்னு தெரியும்…. நீங்களும் பயப்படறீங்களா?”, என அவள் மீனை சாப்பிட்டுக்கொண்டே கேட்டாள்.
“இல்ல யாதுமா… அம்மாவோட பயம் வேற நான் சொல்றது வேற…. நீயே வேலைய விட்றேன்னு சொன்னாலும் நான் அதுக்கு விடமாட்டேன்.. காலம் முழுக்க நீங்க இரண்டு பேரும் அதுலையே இருக்க போறது இல்லையே… அதனால அதையும் கத்துக்கோன்னு சொல்றேன்…. “, ஆதி அவளிடம் தோசை வார்த்தபடி பேசிக்கொண்டிருந்தான்.
“பூவழகி… இந்தா காடை ப்ரை… நீ கேட்டியே…. அதுமாதிரி செஞ்சி இருக்கேன்”, என ஜான் வெளியில் இருந்து வந்தான்.
“வாவ்….. வாசனை செம்மையா இருக்கு ஜான்…. அதே மாதிரி செஞ்சியா? மவனே டேஸ்ட் மட்டும் மாறுச்சி நீ காலி “, என அவனை மிரட்டியபடி அந்த முழு காடை ப்ரையை எடுத்து சாப்பிட ஆரம்பித்தாள்.
அவள் இரசித்து சாப்பிடுவதை இரு ஆடவர்களும் தாய்மையின் பார்வையில் பார்த்துக்கொண்டிருந்தனர்..
“ஜான்….. இங்க வாயேன்”, என அழைத்தாள்.
“என்ன பூவழகி நல்லா இல்லையா?” என ஜான் அவசரமாக கன்னத்தை மூடியபடி அருகில் வந்தான்..
“உன் கை குடேன்….”
ஜான் கையை நீட்டவும் பிடித்து அதில் முத்தம் வைத்து, “வர வர உன் கைல ருசி ஏறிட்டே போகுது ஜான்… ப்ளீஸ் என்னை விட்டு எங்கயும் போயிடாத… எனக்கு நல்லா சமைச்சி குடுக்க நீ எப்பவும் வேணும் ஜான்”, என உணர்ச்சிபூர்வமாக அவள் நடித்து பேசவும், ஆதி அதை படம்பிடித்து அர்ஜுனுக்கு அனுப்பி வைத்தான்.
“நான் எங்க போக போறேன் பூவழகி…. நீ என்ன தொரத்தி விடாம இருந்தா போதும்”, என இன்னொரு காடையை எடுத்து வர வெளியே ஓடினான்..
“யாதுமா….. இந்தா இன்னொரு தோசை போட்டுக்க”, என ஆதி அவளின் தட்டில் வைத்தான்.
“நீங்க சாப்டிங்களா அத்தான்?”
“இனிமே தான்…. நீ சாப்டு… நானும் சாப்டு கிளம்பறேன்….”
“நேத்து வீட்ல எதுவும் கேக்கல தானே அத்தான்…. தீரன் எப்படி இருக்கான்?”
“இல்ல யாதுமா… வழக்கம் போல தான் போச்சி… தாஸ்கிட்ட அங்க அங்க ஆளுங்கள நிறுத்தி வைக்க சொல்லி இருக்கேன். நான் அம்புவி போகணும்… அந்த லேண்ட் லீஸ் வாங்கறதுக்கு முன்ன பெரியவரு ஊருக்கு அவசரமா கிளம்பிட்டாரு…. போய் அங்க பாத்து வேலைய முடிச்சிட்டு தான் வரணும்”.
“அம்புவி…. பேர் நல்லா இருக்கு… ஆருத்ரா சிங்கமாதேவி தானே அத்தான் அவங்க பேரு?”
“அது தெர்ல.. ஆருத்ரா மட்டும் தான் எனக்கு தெரியும்…. “
“சக்தி பையன பிடிங்க வேலை சீக்கிரம் முடியும்”
“ம்ம்…. அவன் தான் வரசொன்னான்… முக்கியமா உன்கிட்ட சொல்லாம வரசொன்னான்… அவனுக்கும் உனக்கும் என்ன பிரச்சனை யாதுமா”, எனக் கேட்டபடி அவன் சாப்பிட அமர யாத்ரா தோசை சுட்டு பரிமாறினாள்.
“அதுல்லாம் ஒன்னுமில்ல அத்தான்…. வேலை கொஞ்சம் அதிகம் வாங்குவேன்…. ஆனா இப்ப எனக்கு இரண்டு மடங்கு இருக்கறவங்ககிட்ட சிக்கிட்டான்…..”, என சிரித்தபடி இரண்டு துண்டு மீனுடன் காடையும் வைத்து சாப்பிடக் கூறினாள்.
“பெரிய இன்டஸ்ரி அவங்களது… நிறைய பிஸ்னஸ் இருக்கு… வேலையும் நிறைய இருக்கும்… நமக்கு ஐஞ்சு பிஸ்னஸ் வச்சிகிட்டே நானும் இதழியும் ஓடறோம் .. அவங்களுக்கு பதினைஞ்சு இருக்கு…. அத்தனையும் அந்த பொண்ணே மேனேஜ் பண்ணுது… பெரியவர் ரெஸ்ட்ல தான் இருக்கார்னு கேள்விபட்டேன்…”
“ம்ம்ம்…. எனக்கு அவங்கள பாத்ததும் ரொம்ப பிடிச்சி போச்சி அத்தான்…. நம்ம குடும்பத்துல அவங்களும் ஒருத்தங்க மாதிரி தான் தோணுது”, எனக் கூறிவிட்டு ஆதியின் முகத்தை பார்த்தாள்.
ஆதி சாப்பிடுவதை நிறுத்திவிட்டு அவளைப் பார்த்தான்.
“எதாவது பேசுங்க அத்தான்”
“யாதுமா… நமக்கும் அவங்களுக்கும் சமூகத்துலையும் சரி, அந்தஸ்துலையும் சரி பெரிய வித்தியாசம் இருக்கு… நீ இந்த நினைப்ப இத்தோட விட்று… “, எனக் கண்டிப்புடன் கூறினான்.
“ஏன் நானும் செழியனும் அப்படி தானே… நம்ம குடும்பம் அளவுக்கு நாங்களும் அந்தஸ்துல சமம் இல்லையே…. நானும் சரி அப்பாவும் சரி வேலைக்கு தான் போறோம்… அதை காரணம் காட்டி நான் செழியன வேணாம்னு சொல்லலாமா?”, என முறைத்தபடிக் கேட்டாள்.
“யாதுமா நீயும் அவங்களும் ஒன்னா?”
“ஏன் இருக்ககூடாதுன்னு தான் கேக்கறேன் அத்தான்…. என்னை விட அவங்க எல்லா விதத்துலையும் ஒரு படி மேல இருக்காங்க…. இல்ல நீங்களும் வழக்கமான மனுஷங்க மாதிரி பொண்ணு உங்களுக்கு கீழ தான் இருக்கணும்னு நினைக்கறீங்களா?”, என அவனை ஆழம் பார்த்தாள்.
“யாத்ரா…. என்ன பேசற நீ?”, ஆதி கோபமாக கேட்டான்.
“உங்கள கேள்வி கேக்கறேன் அத்தான்…. எனக்கு அவங்கள பிடிச்சிருக்கு.. உங்களுக்கும் பிடிச்சிருக்கு… ஆனா காதல் இருக்கா இல்லையான்னு எனக்கு தெரியாது…. காதல் வந்தா நீங்க அவங்கள ஏத்துப்பீங்களா இல்லையா? இந்த வீணாபோன காரணத்தை காட்டி வேணாம்னு சொல்வீங்களா?”, யாத்ரா கிடுக்கியாக கேள்வி கேட்க, ஆதி முறைத்தபடி அங்கிருந்து கிளம்பினான்.
“டெல்லி போனதும் போன் பண்ணு…. “, என கூறிவிட்டு காரில் அங்கிருந்து வேகமாக கிளம்பி சென்று விட்டான்.
“போங்க போங்க… எத்தனை நாளுன்னு நானும் பாக்கறேன்”, என யாத்ராவும் முனகிவிட்டு டெல்லி கிளம்ப ஆயத்தமானாள்.