24 – வலுசாறு இடையினில்
“மச்சான்.. மச்சான்..” , என அழைத்தபடி வேல்முருகன் வர்மன் இல்லம் வந்தான்.
அவனுக்கு முன் இளவேணி அங்கே நாற்காலியில் அமர்ந்து இருந்தாள். அவள் அமர்ந்திருக்கும் தோரணைக் கண்டு, வேல்முருகன் ஒரு நொடி நிதானித்து மீண்டும் வர்மனை அழைத்தான்.
“என்ன வேல்முருகன் அண்ணே.. அடிக்கடி இந்த பக்கம் வரீங்க.. என்ன விசேஷம்?” ,என இளவேணி கேட்டாள்.
“நான் இங்க வந்து போறது சகஜமான விஷயம் தான் இளவேணி.. உனக்கு இங்க என்ன வேல ? “, என வேல்முருகன் அவளைக் கேட்டான்.
“நான் வாழ போற வீட்டுல நான் வந்து போகாம யாரு வருவா ? இன்னிக்கி வேணா என் சிங்க மாமா என்னைய திட்டலாம் .. ஆனா நாளைக்கு நான் தானே இங்க வெளக்கு ஏத்தனும் .. “, என தாவணியைச் சுழற்றிக் கொண்டுப் பேசினாள்.
“அமாவாசைல நிலா தெரியும்னு கனா கண்டுகிட்டு இருக்க இளவேணி.. உங்கப்பா பேச்ச கேட்டு உன் வாழ்க்கைய நீயே கெடுத்துக்காத..”
“சிங்க மாமாவ கட்டுனா என் வாழ்க்க வீணா போகுமா ண்ணே?” ,என இடக்காகப் பேசினாள்.
“அப்படி தான் வச்சிக்க.. என் மச்சான் எல்லாம் உனக்கு சரி பட்டு வரமாட்டான் .. போய் உருப்படியா மொத படி.. படிக்கற வயசுல உனக்கு எதுக்கு இந்த வேண்டாத வேல?”, என வேல்முருகன் பொறுமையாகவே எடுத்துக் கூறினான்.
“என் வேல என்னனு எனக்கு நல்லாவே தெரியும் ண்ணே..நீங்களும் அத்தாச்சியும் தான் தேவ இல்லாத வேல பாக்கறீங்க .. சரி ஒரு தடவ தான் சொல்ல முடியும்.. நாளைக்கு தேவராயன் வண்டி உங்களயோ அத்தாச்சியவோ அடிச்சி போட்டா நாங்க தானே வந்து எல்லாம் பாக்கணும் .. பாத்து சூதானமா இருந்துக்கோங்க .. “, எனச் சிரித்தபடியே மிரட்டினாள்.
“ஹாஹாஹா .. நல்லா சிரிப்பு காட்டற இளவேணி.. அப்பறம் நம்ம லோட் வண்டி உன்னயோ உங்கப்பனயோ அடிச்சி போட்டா யாரு வருவாங்க?”, என வேல்முருகனும் சிரித்தபடிக் கூறினான்.
இளவேணி அவனை முறைத்து விட்டு மீண்டும் சென்று நாற்காலியில் அமர்ந்துக் கொண்டாள்.
“வாங்க மாப்ள.. எப்ப வந்தீங்க?” ,என வேல்முருகனை வரவேற்று சோபாவில் அமரவைத்துப் பேசினான் வர்மன்.
வர்மன் வந்ததில் இருந்து அவன் சட்டை பொத்தானைப் போடுவதும், காப்பை மேல் ஏற்றி விட்டு மீசையை முறுக்கி பேசும் விதமும், தடித்த உதடுகளின் இடையில் தெரியும் மெல்லிய பல் வரிசை சிரிப்பும் என அவனை அணு அணுவாக இரசித்துக் கொண்டு இருந்தாள் இளவேணி.
அன்று அவன் அணிந்து இருந்த வெள்ளை சட்டையும், வேஷ்டியும் அவனை அதிக கவர்ச்சியாகக் காட்டியது. நெற்றியில் இருந்த கீற்று செந்தூரம் அவனது தோற்றத்தை இன்னும் கம்பீரம் கொண்டதாகக் காட்டியது. இருபத்தி ஏழு வயதில் நன்றாக முறுக்கேரிய உடலும், மடித்துவிட்ட சட்டையில் தெரியும் வலிமையான புஜங்களும், அகன்ற தோளில் தலைச் சாயவே தோன்றும்.
அவளோ அவனை இப்படி இரசித்துக் கொண்டு இருக்க, அவன் அவள் அங்கு இருப்பதைப் போலவே காட்டிக்கொள்ளாமல், அவனது வேலையை மட்டும் பார்த்துக் கொண்டு இருந்தான்.
சற்று நேரத்தில் நீலா ஆச்சியும் வெளியே வந்தவர், முதலில் வேல்முருகனை வரவேற்றுவிட்டு இவளிடம் திரும்பினார்.
“என்ன டி காத்து இந்த பக்கம் காலங்காத்தால வீசுது?” , என அவளை அளந்தபடிப் பார்த்தார்.
“பேரனுக்கு கல்யாணம் வச்சி இருக்கீங்கலாம் .. தாலி எல்லாம் செய்ய சொல்லி இருக்கீங்க.. அதான் பொண்ணு யாரு எப்ப கல்யாணம்-ன்னு கேட்டுட்டு போலாம்னு வந்தேன்.. “, என நீட்டி முழக்கிப் பேசினாள் இளவேணி.
“என் பேரன் யார கட்டுனா உனக்கு என்ன டி? என் வீட்டு மருமக இங்க வரவேண்டிய நேரத்துல வருவா.. விருந்துக்கு சொல்லி அனுப்பறேன். அப்ப வந்து அப்பனும் மகளும் நல்லா சாப்டு போங்க.. “, என ஆச்சி நறுக்கெனப் பேசினார்.
“இங்க பாரு ஆச்சி.. நீ பண்றது கொஞ்சம் கூட நல்லா இல்ல.. என் மாமா தான் எனக்கு எல்லாம்ன்னு நான் முடிவு பண்ணிட்டேன்.. அவரு என்னய தவிர யாரு கழுத்துல தாலி காட்டினாலும் நான் சும்மா விடமாட்டேன்.. அவங்கள வாழவும் விடமாட்டேன்”, எனக் கோபம் கொண்டுக் கத்தினாள்.
“வாய மூடு..”, என வர்மன் சத்தம் போட்டதும் விழுக்கி அவனை நிமிர்ந்துப் பார்த்தாள்.
“என்ன விட்டா பேசிக்கிட்டே போற? என்ன தெரியணும் உனக்கு ? நான் யார கட்ட போறேன்னு தானே.. “, எனக் கூறி ஒரு நொடி இடைவெளி விட்டு, “முத்தமிழ் நங்கை என் பொண்டாட்டி பேரு. நீயும் உங்கப்பனும் எவ்ளோ திருட்டு வேல பாத்து தேவரயான இதுல கோர்த்து விட்டு இருக்கீங்கன்னு எனக்கு எல்லாம் தெரியும்.. உங்கப்பன் ஆட்டம் அடங்கபோகுது.. சின்ன புள்ளை ஆச்சே-ன்னு பாத்தா ரொம்ப தான் துள்ளுர.. சங்கறுக்க உங்க அப்பனுக்கு மட்டும் தான் தெரியுமா ? எனக்கும் தெரியும்.. இனிமே இங்க வந்த அவ்வளவு தான்.. போ இங்க இருந்து”, என மிரட்டி அனுப்பி விட்டான்.
இளவேணி அனைவரையும் முறைத்தபடிக் கண்களில் நீர் வழிய அங்கிருந்துச் சென்றாள்.
“என்ன மச்சான் .. இப்புடி பேசிட்டீங்க? பாவம் பாருங்க அழுதுகிட்டே போகுது..”, என வேல்முருகன் பரிதாபப்பட்டுப் பேசினான்.
“நான் வரமுன்ன அது உங்ககிட்ட என்ன பேசிச்சின்னு கேட்டுட்டு தான் இருந்தேன் மாப்ள.. எவ்ளோ திமிரு இருந்தா வண்டில அடிச்சி தூக்குவேன்-ன்னு சொல்லும்.. எல்லாம் அவ அப்பன் சொல்லி குடுக்கறது அப்படி.. நாலு இப்டி விட்டா தான் கொஞ்சம் பயம் வரும்”, என வர்மன் கூறிவிட்டு ஆச்சியிடம் வந்தான்.
“சொல்லு அப்பத்தா.. எங்க மணமேடை போடறது?”, எனக் கேட்டான்.
“அண்ணே ..”, என அழைத்தபடி வினிதா அங்கே வந்தாள்.
“வா வினிதா.. என்ன காலைல தம்பதி சமேதரா தரிசனம் குடுக்கறீங்க ?”, என வர்மன் சிரித்தபடி அவளை வரவேற்றான்.
“உங்கள தம்பதி ஆக்கறதுக்குள்ள எங்களுக்கு வயசாகிடும் போல ண்ணே .. “, என வினிதாவும் சிரித்தபடி ஆச்சி அருகில் சென்று அமர்ந்தாள்.
“சொல்லு கண்ணு ஏன் மொகம் வாடி இருக்கு?”, என ஆச்சி அவளின் முகம் கண்டுக் கேட்டார்.
வினிதா பெருமூச்சு விட்டுவிட்டு நேற்று நங்கை வீட்டில் நடந்ததைக் கூறினாள். அவற்றைக் கேட்டு வர்மன் மனதில் புழுங்க ஆரம்பித்தான். தன்னால் தானோ அவளுக்கு இந்த அவசர திருமணம் என்று இப்போது பலமாகத் தோன்றியது.
இப்போது நடந்துக் கொண்டு இருக்கும் விஷயங்களால், அவள் திருமணத்தையே வெறுத்து வருகிறாள் என்றும் அனைவரும் உணர்ந்தனர்.
“வயசுக்கு வந்த புள்ளைய இப்புடியா அடிப்பாங்க? வீட்ல வேற யாரும் இல்லையா அந்த ஆள தடுக்க?”, என வேல்முருகன் கோபத்துடன் கேட்டான்.
“அப்போ யாரும் இல்ல மாமா.. அவங்க அம்மம்மா மகன் வீட்டுக்கு போயிட்டாங்க போல.. அவ சித்தியும் இல்ல. இவங்க நாலு பேரு தான் இருந்தாங்க.. அவங்க யாராவது இருந்து இருந்தா இப்டி அவள அடிவாங்க விட்டு இருக்க மாட்டாங்க.. கதவு பூட்டி இருந்தது நானும் உள்ள போக முடியல மாமா “, என வினிதா வருத்தமாகக் கூறினாள்.
“கதவ தட்ட வேண்டியது தானே?”
“அந்த நேரத்துல நான் போனாலும் நங்கைக்கு தான் பிரச்சனை வரும் மாமா.. ஒரு வேல முன்னயே நான் போய் இருந்தா இப்டி ஒரு சூழ்நிலை வந்து இருக்காதோ என்னவோ .. “
“நடந்தத மாத்த முடியாது.. வினிதா அந்த நேரம் உள்ள போய் இருந்தாலும் சரியா இருக்காது.. இப்ப நங்க எப்டி இருக்கா ?”, என ஆச்சிக் கேட்டார்.
“காலைல அவங்க சித்தி போனுக்கு தான் கூப்டேன் .. ஜுரமா இருக்குனு சொன்னாங்க,.. என்னை இன்னிக்கி ராத்திரி அங்கயே வந்து தங்கிக்க சொல்லி இருக்காங்க.. நான் அங்க போன அப்பறம் இங்க வர முடியாதுன்னு தான் இப்ப வந்தேன்.. “, வினிதா தான் இப்போது வந்தக் காரணத்தைக் கூறி முடித்தாள்.
“சிம்மா.. சிம்மா ..”, என வெகுநேரமாக யோசனையில் இருக்கும் பேரனை அழைத்தார்.
“என்ன அப்பத்தா ?”, என நினைவு வந்துக் கேட்டான்.
“இவ கிட்ட பொடவை நகை எல்லாம் குடுத்து விடு.. நாளைக்கு அந்த புள்ள நம்ம வீட்ல இருக்கணும். வர்றத நாம பாத்துக்கலாம்.. இப்போ என்ன பண்ண போற ?” எனக் கேட்டார்.
“சரி அப்பத்தா.. நீயே உன் கையாள எல்லாம் எடுத்து குடு.. இந்த தடவ அந்த செங்கல்வராயன் என்ன பண்றான்னு நானும் பாத்துடறேன்.. மாப்ள.. நீங்க ஒரு எட்டு மேலூர் போகணும் ..” , எனக் கூறினான்.
“போயிட்டு வரேன் மச்சான்.. என்ன விஷயம் சொல்லுங்க”, என வேல்முருகன் கூறியதும், வர்மன் அவன் செய்ய வேண்டிய வேலையைக் கூறி அனுப்பி வைத்தான்.
“மாமா.. பாத்து போயிட்டு வா”, என வினிதா கூறி அனுப்பினாள்.
“சரி.. நீயும் ஜாக்கிரத புள்ள.. தங்கச்சிய தைரியமா இருக்க சொல்லு… வரேன் ஆச்சி.. வரேன் மச்சான்.. “, என அனைவரிடமும் விடைப்பெற்றுக் கொண்டுக் கிளம்பினான்.
வினிதாவும் சிறிது நேரத்தில் ஆச்சி கொடுத்தப் பையை எடுத்துக் கொண்டு, அங்கிருந்துப் புறப்பட்டு நங்கை இல்லம் வந்து சேர்ந்தாள்.
நங்கை அவளைக் கண்டதும் கட்டிக்கொண்டு கண்ணீர் வடித்தாள்.
“நங்க.. என்ன இது சின்ன புள்ள தனமா ? கண்ண தொட ..”, என வினிதா அதட்டினாள்.
“விடு டி .. மனசுல இருக்க பாரம் அப்பிடியாவது வெளிய வரட்டும்.. இந்தா.. இந்த மருந்த போட்டு விடு.. தழும்பு பெருசாகாம இருக்கும்..”, என வேம்பு பாட்டி கண்கலங்கியபடிக் கூறினார்.
“என்ன பாட்டி நீங்களும் கண்ணு கலங்கிட்டு இருந்தா எப்படி?“, வினிதா கேட்டாள்.
“இவளுக்கு என்னால ஒண்ணுமே செய்ய முடியல கண்ணு.. என் குடும்பத்துக்கு மூத்த வாரிசு இவ.. ஆனா இவளுக்கு எந்த நல்லதும் என்னால செய்ய முடியாம போச்சே .. இதோ நாளைக்கு கல்யாணம். நேத்து வர இவ அடி வாங்கி சித்ரவத படுறா.. நான் உயிரோட இருந்து என்ன பிரயோஜனம்?”, என மனதில் இருக்கும் வலியை வார்த்தைகளாகக் கோர்த்துக் கூறினார்.
“சீக்கிரமே இவளுக்கு ஒரு நல்ல விடிவு காலம் வரும் பாட்டி.. கவல படாதீங்க.. “, எனக் கூறிவிட்டு நங்கையிடம் உடைக் கழற்றச் சொல்லிக் காயம் பட்ட இடங்களில் எல்லாம் மருந்து வைத்தாள் வினிதா.
“உன் வாக்கு பலிச்சா சந்தோஷம் கண்ணு.. நீ நம்ம தோப்புக்கார வேல்முருகன் மொற பொண்ணு தானே?”, எனக் கேட்டார்.
“ஆமா பாட்டி..” , என அவளும் சிறு வெட்கத்துடன் கூறினாள்.
“நீ எப்ப கல்யாணம் பண்ண போற ?”
“படிப்பு முடிஞ்சி தான் பாட்டி”, எனக் கூறிவிட்டு வேறு ஊர் கதைகள் பேச ஆரம்பித்தனர்.
மருந்து போட்ட சிறிது நேரத்தில் நங்கை நன்றாக உறங்கிவிட்டாள். மாலை அவளுக்கு தாய்மாமன் நழுங்கு நடத்த வேண்டிய ஏற்பாடுகள் செய்துக் கொண்டு இருந்தனர்.
தேவராயன் நேற்றுக் கட்டுப் பிரித்துவிட்டு வந்ததில் இருந்து சிற்றப்பாவின் நடவடிக்கைகளைக் கண்காணித்துக் கொண்டிருந்தான்.
“என்ன சித்தப்பா.. ரொம்ப டென்ஷன்-அ இருக்க மாதிரி இருக்கு.. “, என அழைத்துக் கேட்டான்.
“ஒண்ணும் இல்லப்பா.. எல்லாம் கல்யாண வேலை தான்..”, என மென்றபடிப் பேசினார்.
“நமக்கும் அந்த செங்கல்வராயனுக்கும் என்ன சித்தப்பா சம்பந்தம்? அவர் சொல்றத நீங்க இவ்ளோ மதிக்கறீங்க.. இத்தன வருஷமா இவரு எங்க இருந்தாரு? ஏன் நம்ம வீட்டுக்கு வரவே இல்ல?” , எனக் கேள்வி மேல் கேள்வி கேட்டான்.
“உங்கப்பவோட நெருங்கின நண்பன் ராயா.. அதான் அவரு பேச்சுக்கு அவளோ மரியாதை தரேன் .. நீ போய் ரெஸ்ட் எடு ராயா.. ஆஸ்பத்திரி போயிட்டு வந்தது களைப்பா இருக்கும்..” , என அவனை அங்கிருந்துச் செல்லக் கூறினார்.
“ரெண்டு மாசமா உள்ளயே இருந்து வெளி உலகமே தெரியல சித்தப்பா.. நான் கொஞ்ச நேரம் தோட்டம் பக்கம் போயிட்டு வரேன்.. “, எனக் கூறிவிட்டு வெளியே செல்லத் திரும்பினான்.
“தனியாவா போற?” ,எனக் கேட்டார்.
“ஆமா சித்தப்பா ..”
“கல்யாணம் முடிவான அப்பறம் தனியா போக கூடாது. கூட யாரையாவது கூட்டிட்டு போ ராயா.. “
“சரிங்க சித்தப்பா.. இதோ பாண்டி வரான்.. நான் அவன கூட்டிட்டு போயிட்டு வரேன்”, என அவன் தோளில் கைப் போட்டபடி நடக்க ஆரம்பித்தான் தேவராயன்.
“அண்ணே.. இப்ப கால் வலி பரவாலயா ண்ணே ..”, எனக் கேட்டபடி தேவராயனுக்கு தகுந்தாற்போல உடன் நடந்தான் பாண்டி.
“அதுலாம் பரவால டா .. மனசுல இருக்க வலிய என்ன பண்றது?”, என தேவராயன் கூறினான்.
“என்னாச்சி ண்ணே ?”
“பானு தான் எனக்கு-ன்னு எப்பவோ மனசுல முடிவு பண்ணிட்டேன் டா.. ஆனா இப்ப வந்து வேற பொண்ண தான் கட்டணும்னு சொன்னா மனசு வலிக்காதா டா” , என பேச்சை மெல்ல ஆரம்பித்தான்.
“அண்ணே எனக்கு ஒரு சந்தேகம்.. கேட்டா தப்பா நினைக்க மாட்டீங்களே ?” ,எனத் தயங்கியபடிக் கேட்டான் பாண்டி.
“என்ன டா கேளு “
“நீங்க ஏன் சின்னய்யாகிட்ட திடமா பேசக்கூடாது? பானு அம்மாவ பாத்தாலும் பாவமா இருக்கு.. நீங்க ஒரு பக்கம் அவங்க ஒரு பக்கம் மருகிக்கிட்டு இருக்கறதுக்கு, வீட்ல சண்டை போட்டு பானு அம்மாவ நீங்க கட்டிக்கலாம்..”
“நீ சொல்றது எல்லாம் சரி தான் டா பாண்டி.. நானும் எல்லா விதத்துலையும் பேசி பாத்துட்டேன்.. எப்பவும் என் பேச்ச மறுக்காத சித்தப்பா இந்த விஷயத்துல மட்டும் கேக்க மாடடேங்கராரு “, எனக் கூறியபடித் தோப்பிற்கு வந்துச் சேர்ந்து இருந்தனர்.
அப்போது செங்கல்வராயன் அங்கே வந்தான். உடன் அவனது மகள் இளவேணியும் நடந்து வந்தாள்.
“என்ன மாப்ள சௌக்கியமா ?”, என சத்தமாகச் சிரித்துக்கொண்டு வந்தான் செங்கல்.
“நான் சௌக்கியம் தான் மாமா.. நீங்க எப்புடி இருக்கீங்க ?”, எனக் கேட்டுவிட்டு அருகில் அமர நாற்காலி போட சொல்லிக் கட்டளையிட்டான்.
“நாங்க சௌக்கியம் தான் மாப்ள.. இன்னிக்கி தான் கட்ட பிரிச்சதா தங்கம் சொன்னான். அதான் உங்கள ஒரு எட்டு பாத்துட்டு போலாம்னு வந்தேன்..”, எனக் கூறிவிட்டு தேவராயனைத் தலை முதல் கால் வரை அளந்தான்.
‘இந்த ஆளு இப்ப எதுக்கு என்னைய இப்புடி பாக்கறான்’, என மனதிற்குள் நினைத்தபடி வெளியே சிரித்துக் கொண்டு இருந்தான்.
“ஏலேய் .. இளனி வெட்டி கொண்டு வாடா “, என மரம் ஏறிக் கொண்டு இருந்த ஒருவனிடம் ஆணையிட்டான்.
“உங்க அப்பாவ பாத்தா மாதிரி இருக்கு மாப்ள.. அவனுக்கு உங்கள இந்த மாறி அதிகாரம் பண்றப்போ பாக்க குடுத்து வைக்கல.. நானும் அவனும் அந்த காலத்துல அப்புடி ஒண்ணுக்குள்ள ஒண்ணா இருந்தோம்.. அதுலாம் ஒரு பசுமையான நினைவுகளா போச்சி..”
“எங்கப்பா தான் மண்ணுக்குள்ள போய் ரொம்ப வருஷம் ஆச்சே மாமா.. நீங்க எங்க இருந்தீங்க? இத்தன வருஷம் உங்கள இங்க சுத்து பத்து ஊர்ல நான் பாத்ததே இல்லயே..” , என மனதில் அரித்துக்கொண்டு இருந்த கேள்வியைக் கேட்டான்.
“நான் வெளி ஊருக்கு பொழப்பு தேடி போயிட்டேன் மாப்ள.. நடுவுல ஆளுங்கள விட்டு நெலம் எல்லாம் குத்தகைக்கு விட்டுட்டு போனேன்.. அதுக்கு மட்டும் மூணு நாலு வருஷத்துக்கு ஒரு தடவ வருவேன்.. நான் ஒத்தை ஆளு அதனால வந்ததும் கெளம்பிடுவேன்.. யாரயும் வந்து பாக்க முடியல.. முடிஞ்சவரை ஆளுங்களே நான் இருந்த இடத்துக்கு பணம் கொண்டு வந்து குடுத்துட்டு போயிடுவாங்க.. “
“சரி சரி.. அப்பறம் மாமா தொழில் என்ன பண்றீங்க?”, என ‘மாமா’வில் அழுத்திக் கேட்டான். அதை இளவேணிக் கண்டு அவனை முறைத்தாள்.
“மீன் எக்ஸ்போர்ட் பண்றேன் மாப்ள.. எல்லாம் நம்ம கடல் மீனுங்க நல்ல வெலைக்கு போகுது.. அதுல நல்ல வருமானம்.. அந்த வேலைல நாம கூடவே இருக்கணும்.. இல்லைன்னா வேலைல தப்பு பண்ணிடுவாங்க வேலை பண்ற பசங்க.. அதான் எங்கயும் நகரமுடியல ..”, எனச் சிரித்தபடிச் சொந்தப் புராணம் பாடினான்.
“இப்ப அங்க யாரு பாத்துக்கறாங்க மாமா?”
“என் பையன் படிச்சிட்டு வந்துட்டான். அதான் அவன் கைல தொழில குடுத்துட்டு நான் ஊரு பக்கம் விவசாயம் பாக்கலாம்ன்னு வந்துட்டேன் மாப்ள”
“ஹோ .. உங்களுக்கு பையன் இருக்காரா ?” , என தேவராயன் இளவேணியை ஒரு பார்வைப் பார்த்துவிட்டுக் கேட்டான்.
“ஆமா மாப்ள.. இது பொண்ணு சின்னது. பையன் பெரியவன்.. பேரு குரு.. “
“பொண்ணு பேரு என்ன மாமா? வந்ததுல இருந்து வாயே தொறக்கல .. ஊமையா ? வாய் பேச வராதா?”, என நக்கலாகக் கேட்டான்.
“ஹாஹாஹா .. என்ன மாப்ள இப்புடி சொல்லிட்டீங்க .. அவ வாய தொறந்தா மூடவே மாட்டா.. அப்புடி பேசி எங்கள ஒரு வழி பண்ணிடுவா.. இன்னிக்கி நம்ம பேசறோம்-ன்னு அமைதியா இருக்கா .. கண்ணு மாப்ள கேக்கராருல்ல .. ரெண்டு வார்த்த பேசு..”, என இளவேணியிடம் கூறினான் செங்கல்.
“பரவால மாமா.. இந்த அளவுக்கு மரியாதை இருக்கே.. சிட்டில வளந்து இருந்தாலும் தாவணி போட்டு நம்ம ஊரு பொண்ணுங்கலாட்டம் அடக்க ஒடுக்கமா இருக்கு.. இப்டி இருக்கறது எனக்கு ரொம்ப புடிச்சி இருக்கு”, என வேண்டுமென்றே இளவேணியை வெறுப்பேற்றினான் தேவராயன்.
“பொறுக்கி..”, என அவனுக்கு தெரியும்படி முனகிவிட்டுத் தந்தையைப் பார்த்தாள்.
“அப்பா.. எனக்கு தலவலிக்குது .. போலாமா? நாளைக்கு வந்து நீங்க பொறுமையா பேசிக்கோங்க .. “ ,எனக் கூறினாள்.
“என்ன வேணி .. நான் உனக்கு மாமன் தான்.. ரொம்ப வருஷம் கழிச்சி பாக்கறோம் நல்லா பிரீயா பேசினா தானே உறவு வளரும்.. என்ன மாமா நான் சொல்றது சரி தானே?” , எனச் செங்கல்லைக் கேட்டான்.
“ரொம்ப சரி மாப்ள.. நான் போய் தங்கத்த பாத்துட்டு வந்துடறேன்.. நீங்க வேணிகிட்ட பேசிக்கிட்டு இருங்க.. இவளுக்கு தோப்பு நிர்வாகம், பராமரிப்பு எல்லாம் கத்துக்கணும்-ன்னு ஆர்வம் இருக்கு.. அடிப்படைய சொல்லி குடுங்க நான் அங்க ஒரு எட்டு பாத்து பேசிட்டு வந்துடறேன்.. “, என வேணியை அங்கேயே இருக்கும்படிக் கூறிவிட்டுச் சென்றார்.
“என்னம்மா என் திடீர் மாமன் மகளே.. எப்புடி இருக்க?”, எனக் கேட்டபடி தேவராயன் அவள் அருகில் வந்தான்.
இளவேணி அவனை முறைத்துவிட்டு வேறு பக்கம் சென்று வேடிக்கைப் பார்க்க ஆரம்பித்தாள்.
“என்ன மொற பொண்ணு மொறைச்சிக்கிட்டு நின்னா என்ன அர்த்தம்? இந்த மாமனுக்காக தானே இப்போ நான் கட்ட போற புள்ளைய தேடி கண்டு பிடிச்சி இருக்க?” , எனச் சிரித்தபடி அவளை உரசி நின்றான்.
“உனக்காக யாரு பாத்தா?” , என அவள் எரிந்து விழுந்தாள்.
“நான் தானே கட்ட போறேன்.. அப்போ எனக்கு தானே பாத்த?”
“அவள என் சிங்க மாமா கட்டக்கூடாது-ன்னு தான் உனக்கு கட்டி வைக்க சொன்னேன்.. தேவை இல்லாம எதுவும் பேசாத”, என முறைத்தபடிக் கூறினாள்.
“ ஆஹா.. அவன தான் உனக்கு ரொம்ப பிடிக்குமோ?”, என முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டுக் கேட்டான்.
“ஆமா.. நீ உனக்குன்னு ஏற்கனவே இருக்கற வரிசைல இப்போ அந்த நங்கைய சேத்திக்க தேவராயன்.. “, எனத் திமிராகக் கூறினாள்.
“ரொம்ப திமிரு தான் டி உனக்கு.. இந்த தேவராயன் கண்ணு வச்சிட்டா யாரும் தப்பிக்க முடியாது.. இப்ப உன்மேல என் கண்ணு விழுந்திரிச்சி டி என் திடீர் மாமன் மகளே.. உன்ன இனிமே விடறதா நான் இல்ல”, என அவளை நெருங்கி நின்றுக் கூறினான்.
“நீங்க எல்லாம் எவ்ளோ ட்ரை பண்ணாலும் படிக்காத பட்டிக்காட்டாணுங்க தான்.. என்கிட்ட உன் வேலை எல்லாம் நடக்காது.. இந்த நிமிஷம் நான் நினைச்சாலும் உங்கள தூக்கி உள்ள வைக்க முடியும்.. பாவமே-ன்னு விட்டு வச்சி இருக்கேன்.. ஒழுங்கா அந்த நங்கைய கட்டிக்கற வரைக்கும் உயிரோட இரு..”, என அவன் நெருங்கி நின்றும் விலகாமல் அப்படியே நின்றுச் சிரித்தபடி அவனுக்கு பதில் கொடுத்தாள் இளவேணி.
“ஹாஹாஹா.. அவளோ பெரிய ஆளா டி நீ?”, என தேவராயன் அவளைச் சீண்டினான்.
“நீங்க எல்லாம் நெனைக்க முடியாத அளவுக்கு தேவராயன்.. “, என அவன் கண் பார்த்துக் கூறினாள்.
“என்ன டி மாமன்-ன்னு கொஞ்சம் கூட மரியாதை இல்லாம பேர் சொல்லி கூப்பிடற?”, எனப் பல்லைக் கடித்தபடிக் கேட்டான்.
“மரியாதை எல்லாம் கேட்டு வாங்க கூடாதுன்னு உனக்கு யாரும் சொல்லி வளக்கல போல?” , என நக்கலாகக் கேட்டாள்.
“உனக்கும் அடுத்தவ புருஷன் மேல ஆச படக்கூடாதுன்னு யாரும் சொல்லி தரல போலவே இளவேணி ..”, எனக் கேட்டபடி பானு அங்கே வந்தாள்.