• About us
  • Contact us
Monday, June 23, 2025
Facebook social icon Twitter X social icon Instagram social icon Pinterest social icon
Aalonmagari
  • Login
  • Register
  • Home
  • கதை
    • நாவல்
    • தொடர்கதை
    • சிறுகதை
  • கிறுக்கல்கள்
  • புத்தகம் வாங்க
  • நேர்காணல்
    • எழுத்தாளர் நேர்காணல்
    • வாசகர் நேர்காணல்
  • மகரியின் பார்வையில்
  • நாமளும் சமைக்கலாம் தப்பில்ல
  • English
    • Short story
No Result
View All Result
  • Home
  • கதை
    • நாவல்
    • தொடர்கதை
    • சிறுகதை
  • கிறுக்கல்கள்
  • புத்தகம் வாங்க
  • நேர்காணல்
    • எழுத்தாளர் நேர்காணல்
    • வாசகர் நேர்காணல்
  • மகரியின் பார்வையில்
  • நாமளும் சமைக்கலாம் தப்பில்ல
  • English
    • Short story
No Result
View All Result
Aalonmagari
No Result
View All Result

26 – வலுசாறு இடையினில்

March 16, 2024
Reading Time: 2 mins read
0
1 – வலுசாறு இடையினில் 

26 – வலுசாறு இடையினில்

 

பாண்டியை பின் தொடர்ந்து சென்ற உருவம், அவன் கவனம் சிதராத வண்ணம் அவன் பின்னால் இடைவெளி விட்டு நடந்துச் சென்றது.

பாண்டி நேராக சென்றது நங்கையின் இல்லத்திற்கு தான். மாலை வேளையில் அங்கும் உறவினர்கள் சூழ இருந்த வீட்டினை அடைந்து, உள்ளே யாரிடம் சென்று பேசுவது என்று தயங்கி நின்றுக் கொண்டு இருந்தான்.

அப்போது அவன் பின்னால் வந்து  நின்ற இளவேணி, ‘இங்க அனுப்ப தான் ரகசியமா எல்லாம் பண்ணியா? உன்ன என்னவோ நெனைச்சேன் ராயன்.. ஆனா பொம்பளைங்க விஷயத்துல நீ இவ்ளோ வீக்-ன்னு எனக்கு முன்னயே தெரியாம போச்சி.. ‘, என மனதிற்குள் பேசியபடி பாண்டியின் தோளைத் தொட்டு அழைத்தாள்.

பாண்டியை பின் தொடர்ந்து வந்தவனை அங்கிருந்துச் செல்ல சைகை செய்து விட்டு, உள்ளே சென்றாள்.

அவளின் பின்னால் இரத்தினமும் உள்ளே வந்தார்.

“என்ன ரத்தின மாமா.. வேலை எல்லாம் எப்டி போகுது? கோவில்ல ஏற்பாடு எல்லாம் பண்ணியாச்சா ?”, எனப் பாண்டியை கைப்பிடியில் வைத்தபடிப் பேசிக்கொண்டு வந்தாள்.

அவளை கண்டதும் வினிதா முகத்தைச் சுழித்துக் கொண்டு நங்கை இருக்கும் இடம் நோக்கிச் சென்றாள்.

“எல்லாம் நல்லா தான் போயிக்கிட்டு இருக்கு வேணி.. அப்பா எப்ப இங்க வராரு?”, எனப் பவ்யமாக பேசினார் இரத்தினம்.

“இன்னிக்கி ராத்திரி வந்துடுவாரு மாமா.. நீங்க போய் அடுத்த வேலைய கவனிங்க.. நான் தம்பி கூட கல்யாண பொண்ண பாத்துட்டு வரேன்”, எனக் கூறிவிட்டு நங்கை இருக்கும் இடம் பார்த்து நடக்கத் தொடங்கினாள்.

“இதுக்கு மேல நான் அத்தாச்சிகிட்ட போயிக்கறேன் தங்கச்சி”, என பாண்டி கூறியதும் இளவேணி முறைத்தாள்.

“உங்க அண்ணே என்ன குடுத்தாருன்னு தெரியணும் பாண்டி.. அதுக்கு தான் கூடவே வரேன்.. நான் உன்ன தொந்தரவு பண்ணமாட்டேன் .. நீ குடு “, என அவனை முன்னால் விட்டு பின்னால் வந்தாள்.

“ஏன் டி மொகம் இப்டி கடுகடுன்னு இருக்கு?”, என வேம்பு பாட்டி வினிதாவைப் பார்த்துக் கேட்டார்.

“அதோ அங்க ஒருத்தி இடுப்ப ஆட்டிக்கிட்டு வரா பாருங்க.. அவ தான் இப்ப நடக்கற கூத்து எல்லாத்துக்கும் முக்கிய காரணம்.. “

“அவ யாரு டி அவ அவளோ பெரிய கொடும்பி .. “

“செங்கல்வராயன் பொண்ணு.. பேரு இளவேணி”, என வெறுப்புடன் வினிதா கூறிவிட்டு, நங்கையின் தலை அலங்காரத்தை சரி செய்வது போல திரும்பிக் கொண்டாள்.

“க்ம்ஹம் .. “, எனத் தொண்டையைச் செருமி நங்கையை அழைத்தாள் வேணி.

நங்கை அவள் அங்கு நிற்கவே இல்லை என்பது போல அருகில் இருந்தவர்களிடம் சுவாரசியமாகப் பேசிக்கொண்டு இருந்தாள்.

“கல்யாண பொண்ணுகக்கு மாப்ள கிட்ட இருந்து ஒரு பரிசு வந்து இருக்கு.. பெரியவங்க எல்லாரும் கொஞ்சம் நகந்தா சின்ன புள்ளைங்க கொஞ்சம் பேசுவோம்” ,என அனைவருக்கும் கேட்கும்படிக் கூறிவிட்டு நங்கை அருகில் வந்து நின்றுக் கொண்டாள்.

“மாப்ள கிட்ட இருந்து பரிசு வந்தா நாங்க ஏன் டி நகரணும்.. டேய் பையா .. வந்து குடுத்துட்டு போடா”, என வேம்பு பாட்டி பாண்டியிடம் கூறினார்.

“பாட்டி.. அத்தாச்சி கிட்ட அண்ணே பேசணும்-ன்னு சொன்னாங்க.. ஒரு ஃபோன் செஞ்சி குடுத்துக்கறேன் ..”, எனத்  தயங்கித் தயங்கிக் கூறினான் பாண்டி.

“அப்புடியா.. சரி .. வினிதா நங்கைய கூட்டிட்டு மேல போ.. தம்பி நீ என்கூட வாடா..” , என வேம்பு பாட்டி அவனை மட்டும் அழைத்துக் கொண்டுச் சென்றார்.

இளவேணியும் அவர்கள் பின்னோடு மாடி ஏறினாள். அறைக்குள் அவர்கள்  பின்னே இவளும் உள்ளே செல்லும் போது வேம்பு பாட்டி அவளை நிறுத்தி, “ இந்தா குட்டி நீ எங்க உள்ள வர? நீ கீழ இரு.. நாங்க மாப்ள கிட்ட பேச வச்சி கூட்டி வருவோம்.. போ “ ,எனக் கூறிவிட்டு அவள் பதில் சொல்லும் முன் கதவை அடைத்துவிட்டார்.

“ச்சே .. பயங்கரமான கெழவியா இருக்கும் போல.. நேக்கா என்னை வெளிய நிக்க வச்சிரிச்சி .. எப்டி என்ன குடுத்தான் என்ன பேசரான்னு தெரிஞ்சிக்கறது?”, என தனக்குள் முணுமுணுத்தபடி அங்கேயே நடந்துக் கொண்டு இருந்தாள் இளவேணி.

“நீ ஏன் கண்ணு இங்கயே குட்டி போட்டா பூனையாட்டம் சுத்திக்கிட்டு இருக்க? வா வந்து கீழ ஒக்காரு .. பொண்ணு வரும்” ,என வாணி அவளைக் கைப்பிடித்து கீழே அழைத்துச் சென்று வினிதாவின் அம்மா அருகில் அமரவைத்து விட்டு எல்லாருக்கும் பலகாரம் கொடுக்கச் சென்றார்.

“உங்க பொண்ணு தானே வினிதா?”, என அருகில் இருப்பவரிடம் பேச்சுக் கொடுத்தாள்.

“ஆமா கண்ணு.. நங்கையும் வினிதாவும் சின்னதுல இருந்து ஒண்ணா தான் இருக்காங்க.. “, என வெள்ளந்தியாகச் சிரித்தபடி கூறினார் அவர்.

“இதோ நங்கை அக்காவுக்கு கல்யாணம் நடக்குது.. உங்க பொண்ணுகக்கு எப்ப?”, என அக்கறையுடன் கேட்டாள்.

“என் தம்பி மகன் வேல்முருகன தான் அவளுக்கு பேசி இருக்கு.. வினிதா படிப்ப முடிச்சதும் தான் கல்யாணம் பண்ணனும்-ன்னு என் மாப்ள சொல்லிட்டாரு.. அடுத்த மாசம் படிப்பு முடியுதுல்ல.. அதுக்கு அப்பறம் வச்சிக்க வேண்டியது தான்.. “

“உங்களுக்கு ஒரு தம்பி மகன் மட்டும் தானா? அண்ணன் பசங்க  எல்லாம் இல்லயா ?”

“நானும் என் தம்பியும் மட்டும் தான் கண்ணு.. உறவு வீட்டு போயிட கூடாது.. அதுவும் இல்லாம என் பொண்ணு மேல என் மாப்ள உசுரல்ல வச்சி இருக்கு.. இவளுக்கும் மாமன்னா உசுறு.. ஆனா இவ வெளிய காமிச்சிக்க மாட்டா  சிறுக்கி..”

“சரி சீக்கிரம் கல்யாணம் வைங்க.. “

“உனக்கு எப்ப கண்ணு கல்யாணம் ?”

“எனக்கு இப்பதா பதினெட்டு வயசு ஆகுது.. இப்போவே யாரு கல்யாணம் பண்ணுவாங்க?”

“என்ன கண்ணு வெளாடுற .. உனக்கு இருவத்தி நாலு வயசு மேல இருக்குமே.. பாரு மொகம் எல்லாம் நல்லா விகசிச்சி இருக்கு.. தோல பாத்தாலே தெரியுதே .. பதினெட்டு வயசு பொண்ணு தோலு பட்டாட்டம் மின்னும், அவளோ மெல்லிசா இருக்கும்.. உனக்கு கைல எல்லாம் தோல் கெட்டி பட்டு எப்டி இருக்கு பாரு..” ,என இளவேணியை அக்கு வேறாக ஆனி வேறாக கண்களால் அளந்துக் கொண்டே பேசினார் வினிதாவின் அம்மா.

“சரிங்க.. நான் கெளம்பறேன்.. நேரமாச்சி.. அப்பா வந்தா தேடுவாரு.. ரத்தின மாமா.. நாம போலாமா?” ,என அவரை அழைத்தபடி அங்கிருந்து எழுந்துச் சென்றாள்.

“ஏன் பெரியம்மா யாரு பொண்ணு இது?”, என அருகில் ஒரு பெண் கேட்டாள்.

“அந்த செங்கல்வராயன் பொண்ணாம் டி”, என வினிதாவின் தாயார் கூறிவிட்டு வினிதாவைத் தேடி மேலே வந்தார்.

“வினிதா .. வினிதா.. “, எனக் கூப்பிட்டபடிக் கதவைத் தட்டினார்.

“என்ன கோத ?”, என வேம்பு பாட்டி கதவைப் பாதித் திறந்துக் கேட்டார்.

“அத்த .. என் பொண்ண பாக்கணும்..”, எனக் கூறிவிட்டு உள்ளே வந்தார்.

“வினிதா.. நீ சொன்னபடி அவளகிட்ட உக்காரவச்சி தொட்டு பாத்தேன் டி.. வயசு கூட தான் இருக்கும் அவளுக்கு.. கண்டிப்பா இருவத்தி நாலு வயசுக்கு மேல தான் இருக்கும்.. ஆளு ஒடிசலா தெரியறதால வயசு கம்மியா எல்லாருக்கும் தெரியுது.. இந்தா இது அவ முடி..”, என கையில சுருட்டி வைத்து இருந்த இளவேணியின் முடியை அவளிடம் கொடுத்தார்.

“சூப்பர் ம்மா.” ,என வினிதா அவரைக் கட்டிகொண்டு முத்தம் கொடுத்தாள்.

“என்ன டி நடக்குது இங்க?”, என நங்கை ஒன்றும் புரியாமல் கேட்டாள்.

“எல்லாம் தானா நடக்கறப்போ தெரியும். நீ அமைதியா இரு.. இந்தா பாண்டி.. இத பானு அக்காகிட்ட குடுத்துரு.. சீக்கிரம் எல்லாத்தயும் பண்ண சொல்லு.. அப்பனையும் பொண்ணையும் கையும் களவுமா பிடிச்சிடலாம் .. போயிட்டு வா..”, என வினிதா கூறினாள்.

“அந்த பொண்ணு கேட்டா நான் என்ன சொல்றதுக்கா?”, எனப் பாண்டிக் கேட்டான்.

“அவ இந்நேரம் வீட்டுக்கு போய் இருப்பா தம்பி.. நீ குறுக்கு சந்துல புகுந்து வெரசா ஓடு” , எனக் கோதைக் கூறியதும் பாண்டி அனைவரிடமும் விடைப்பெற்றுக் கொண்டு அங்கிருந்துச் சென்றான்.

“அத்த.. நான் கீழ போறேன்.. உங்க பேரன் வெளிய போனவன் இன்னும் காணோம்ன்னு உங்க பொண்ணு சொல்லிக்கிட்டு இருந்தா.. நான் போய் பந்தி வேலைய பாக்கறேன்.. பொண்ணுக்கு இங்க கொண்டு வரவா?”

“பொண்ணு அங்கயே வரும்.. பலகாரம் எல்லாம் எடுத்து வை.. நேரமாச்சி.. வந்த சனத்துக்கு சீக்கிரம் சாப்பாடு போடணும்.. சின்னவனும் பெரியவனும் என்ன பண்றாங்க?”, எனக் கேட்டபடி அவரும் உடன் நடந்தார்.

“ஏய் வினி? என்னடி நடக்குது?”, என நங்கை மீண்டும் கேட்டாள்.

“உனக்கு இந்த தேவராயன் கூட கல்யாணம் நடக்காது.. இந்த இளவேணி அப்பன் தான் என்னவோ செஞ்சி மெரட்டி இந்த கல்யாணத்த முடிவு பண்ணி இருக்கான். பானு அக்காவும், தேவா அண்ணனும் ரொம்ப நெருக்கம், அதனால இப்ப ரெண்டு மாசம்” , என நங்கை காதில் கூறினாள்.

“என்ன டி சொல்ற?” ,என நங்கை அதிர்ந்துக் கேட்டாள்.

“ஆமா.. அதான் இந்த கல்யாணத்த நிறுத்த உன்னவிட அவங்க தீவிரமா இருக்காங்க.. “

“இது அவங்க வீட்டு ஆளுங்களுக்கு தெரியாதா?”

“தெரியாது.. பொதுவா அந்த அண்ணே சொல்றத தட்டாத சித்தப்பா இந்த விஷயத்த மட்டும் காதுலையே போட்டுக்காம இருக்காறாம்.. அதான் இவங்க என்ன காரணம்-ன்னு தேடி அரைகொறையா கண்டு பிடிச்சிட்டாங்க.. “

“என்ன வினி .. என்ன என்னமோ சொல்ற.. எனக்கு ஒண்ணுமே புரியல.. அப்போ இப்ப பண்ற செலவு எல்லாம் வீண் தானா?”, என மனம் வருந்தியபடிக் கேட்டாள்.

“உன் தொம்பிக்கு சிகரெட்டு, பாட்டிளு ,போத மருந்து வாங்க காச தூக்கி குடுக்கராங்க இப்படி செலவு பண்றது ஒண்ணும் தப்பு இல்ல”, என வினிதா கூறியபடி அவள் கன்னத்தை இடித்தாள்.

“ம்ச் .. நான் மாமா பாட்டிக்கு சொன்னேன் டி “, எனக் கூறினாள்.

“அதுலாம் ஒண்ணும் வீணா போகாது.. நீ வா மொத நீ தான் சாப்டணும்.. சாப்டு வந்து நல்லா தூங்கு.. நாளைக்கு நடக்கற கூத்த எல்லாம் தெம்பா வேடிக்கை பாக்கலாம் நாம..”, எனச் சிரித்தபடி அவளை அழைத்துக்கொண்டுப் பந்திக்கு வந்தாள்.

இளவேணி நகங்களைக் கடித்தபடி தனது வீட்டில் குறுக்கும் நெடுக்கும் நடந்தபடி இருந்தாள். இரவு உணவு கூட வேண்டாம் என்று கூறிவிட்டு அவள் ஆவேசமாக நடப்பதுக் கண்டு வேலையாட்கள் யாரும் அவள் அருகில் வரவில்லை.

இரவு பத்து மணி போல வீட்டிற்கு வந்த செங்கல்வராயன்.. அந்த நேரத்தில் நடந்துக் கொண்டு இருக்கும் மகளைப் பார்த்துவிட்டு அருகில் சென்றார்.

“என்ன டா இன்னும் முழிச்சிட்டு இருக்க? தூங்கலியா?” , எனப் பரிவுடன் கேட்டார்.

“எங்க இருந்து தூக்கம் வரும் ? நாளைக்கு நம்ம நெனைச்ச படி ஒரு விஷயம் நடக்கலன்னா கூட இங்க வந்து நாம தங்கி இருக்கறது வேஸ்ட்.. தேவராயன் நடவடிக்க சரி இல்ல, அந்த பானு ஒரு பக்கம் வேலை பண்ணிக்கிட்டு இருக்கா.. இதுல தங்கதுரைய நம்பவே முடியல.. அவன் வெறும் பொம்மை தான்.. அந்த சிம்ம வர்மனும் நேரடியா என்கிட்ட சவால் விட்டு சொல்றான் அந்த கல்யாணம் நடக்காதுன்னு.. இப்டி எல்லாமே பிரச்சனையா மட்டும் தான் இருக்கு.. “, எனப் படபடப்புடன் கூறினாள்.

“யார் என்ன வேணா பண்ணட்டும் வேணி.. நம்ம நெனைக்கறது கண்டிப்பா நடக்கும்.. அப்பா நான் எதுக்கு இருக்கேன்.. நீ கவல படாம போய் தூங்கு”, எனக் கூறிவிட்டு அவரும் உறங்கச் சென்றார்.

வட்டியும், வர்மனும் இரவோடு இரவாக தங்களது குல தெய்வ கோவிலில் பந்தல் போட்டு திருமணத்திற்கு மனையை ஏற்படுத்தினர். வேல்முருகன் அங்கேயே காவலுக்கு நின்று சத்தம் வராமல் அனைத்து வேலைகளையும் முடித்துக் கொண்டு இருந்தான்.

“மாப்ள.. யோ மாப்ள..”, என மெல்ல அழைத்த படி வர்மன் அங்கே வந்தான்.

“என்ன மச்சான் .. நீ இன்னும் தூங்க போலியா?”

“வீடியோ படம் எடுக்கறவன எத்தன மணிக்கு வர சொல்லி இருக்கீங்க?”, எனக் கேட்டான்.

“இந்த கலாட்டா கல்யாணத்துல இது ரொம்ப அவசியம் தானா மச்சான்?” ,எனக் கேட்டபடி வட்டி அங்கே வந்தான்.

“எல்லாமே அவசியம் தான் மாப்ள.. இந்த பொன்னான தருணங்கள படம் புடிச்சி வச்சா தானே காலம் முழுக்க பாத்து சந்தோஷப்பட முடியும்”

“ஆனாலும் உனக்கு தைரியம் அதிகம் தான் மச்சான். என் தங்கச்சி உன்ன கிட்ட சேக்குமா இல்லயானே தெரியாது.. ஆனாலும் நீ இவ்ளோ பேசற..”, என வேல்முருகன் வர்மனை வாரினான்.

“அவ எங்க போயிட போறா மச்சான்.. இதுலாம் தான் நாளைக்கு நம்ம பேர பசங்ககிட்ட கதையா சொன்னா நல்லா இருக்கும்”, என வர்மன் பேசியபடி பின்னால் பார்த்தான்.

அங்கே மருதனுடன் பானு நடந்து வந்துக் கொண்டு இருந்தாள்.

“என்ன பானு இந்த நேரத்துல இங்க வந்து இருக்க? “, எனக் கேட்டான்.

“முக்கியமான விஷயம் பேசணும் அண்ணே “, எனக் கூறிவிட்டு மற்ற இருவரையும் பார்த்தாள்.

“எல்லாம் நம்ம ஆளுங்க தான்.. எல்லாமே தெரியும் இவங்களுக்கு..  உன்கூட வந்தவன மட்டும் தான் நம்ப முடியாது”, எனச் சிரித்தபடி வர்மன் கூறவும், மருதன் அவன் காலில் விழுந்தான்.

“அண்ணே.. என்னை மன்னிச்சிடு.. நான் புரியாம அப்புடி பண்ணிட்டேன்”, என மனமார மன்னிப்புக் கேட்டான்.

“சரி விடு.. உங்க அண்ணே ஒத்தையா இல்ல-ன்னு நீ அன்னிக்கி செஞ்சது எனக்கு சொல்லுச்சி.. ஆத்தா அப்பன் இல்லாதவன்னு அவன வேலகாரனா மட்டும் பாக்காம உன் ரத்தமா நெனைச்சி என்ன கொல்ல வந்த பாத்தியா.. உன் அண்ணே பாசம் எனக்கு பிடிச்சி இருந்தது.. அதான் உன்ன அன்னிக்கி லேசா தட்டிட்டு அனுப்புனேன் “, என மருதனை தோளோடு அணைத்துக்கொண்டு விடுவித்தான்.

“உங்க பாசமழை முடிஞ்சா இத பாருங்க அண்ணே..” , என பானு சில போட்டோக்களைக் காட்டினாள்.

“இது எங்க எடுத்தது பானு?” , என அதிர்வுடன் கேட்டான் வர்மன்.

“என் ஃப்ரெண்ட் சொன்னேன்ல .. அவங்கள தான் விசாரிக்க சொன்னேன்.. நம்ம நெனைச்சத விட பெரிய தப்பு பண்ணிக்கிட்டு இருக்காங்க ண்ணே”, எனச் சொன்னபடி பானு வேறு ஒரு பேப்பர் எடுத்துக் காட்டினாள்.

“நம்ம ஸ்கூல் பிரின்சிபால் தானே இது?”, எனக் கேட்டான்.

“ஆமா ண்ணே.. அவங்கள வச்சி தான் ஸ்கூல்குள்ள போதை மருந்து கொண்டு வந்த மாதிரி செட்-அப் பண்ணி இருக்காங்க .. இதுல தான் தங்கதுரை மாமாவ மடக்கி வச்சி இந்த கல்யாணம் நடத்தறான்..”, என தான் அறிந்த விஷயங்களைக் கூறினாள்.

“என்ன சொல்லு மச்சான்.. படிச்ச புள்ள வேகம் நமக்கு இல்ல.. அவன் யாரு என்ன வேல பாக்கறான்ணு நமக்கு தெரியவே இவ்ளோ நாள் போயிரிச்சி.. படிச்சபுள்ள உக்காந்த  எடத்துல இருந்து எல்லாத்தயும் கண்டு பிடிச்சிரிச்சி ..”, என வட்டிப்  பாராட்டினான்.

“நீங்க எல்லாம் இல்லைன்னா இது சாத்தியம் இல்ல.. வர்மாண்ணே மட்டும் இல்ல நீங்க ரெண்டு பேரு அப்பறம் வினிதா எல்லாம் உதவி செஞ்சதால தான் இவ்ளோ சீக்கிரம் வேலை நடந்தது.. நாளைக்கு காலைல ஆறு மணிக்கு முகூர்த்தம் வச்சி இருக்காங்க..”, எனக் கூறிவிட்டு பானு அமைதி ஆனாள்.

“அவங்க அப்படி தான் நேரத்த மாத்துவாங்க பானு.. உனக்கும் தேவராயனுக்கும் பிரம்ம முகூர்த்தத்துல கல்யாணம்.. நீ போய் தூங்கி எந்திரி.. எல்லாத்தயும் நாங்க பாத்துக்கறோம்.. மருதா .. உங்கண்ணன இங்க மூணு மணிக்கு எல்லாம் கூட்டிட்டு வந்துடு.. உங்க பரம்பரை தாலியும் எங்க ஆசாரிகிட்ட தான் செய்ய சொல்லி இருக்காங்க .. நான் அத கொஞ்ச நேரத்துல போய் வாங்கிட்டு வந்துடறேன்.. கவலையே படாதீங்க.. எல்லாம் நல்ல படியா நடக்கும்.. சாமிய கும்பிட்டுட்டு கெளம்புங்க.. ஜாக்கிரத “, என இருவரையும் அனுப்பி வைத்தான்.

பானு அவளிடம் இருந்த எல்லாவற்றிலும் ஒரு நகலை வர்மனிடம் கொடுத்துவிட்டு மருதனுடன் நடந்தாள்.

“நல்ல புத்திசாலி புள்ள “, என வேல்முருகன் கூறினான்.

“பாவம் வயித்துல புள்ளையோட அலையுது..”, என வர்மன் கூறியதும் வட்டியும், வேல்முருகனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

“அதான் நம்ம கல்யாணம் நடத்தி வைக்கறோம்ல.. புள்ள பொறந்து வந்து அப்பன ஒதைக்கும்”, எனப் பேசியபடி மீதி இருக்கும் வேலைகளைப் பார்த்துவிட்டு ஒரு மணி அளவில் அங்கிருந்துக் கிளம்பினர்.

வட்டி மட்டும் தான் அங்கேயே இருப்பதாகக் கூறி நின்று விட்டான். காவலுக்கு நம்பிக்கையான இருபது பேரை அங்கே வைத்துவிட்டு வர்மன் ஆசாரி வீட்டிற்கு சென்றான்.

“வாங்க தம்பி.. இந்தாங்க ராயன் வீட்டு தாலி”, எனத் தயாராக வைத்து இருந்தப்  பெட்டியை எடுத்துக் கொடுத்தார்.

“நன்றி ஆசாரி.. ரொம்ப கேள்வி கேக்காம உடனே செஞ்சி குடுத்துட்டீங்க .. “, என நன்றி கூறிவிட்டு அங்கிருந்துக் கிளம்பி வீட்டிற்கு வந்தான்.

“சீக்கிரம் குளிச்சி தயாராகு சிம்மா.. நம்ம மொத கோவிலுக்கு போய் எல்லா ஏற்பாடும் கவனிக்கணும்..”, என ஆச்சி அவசரப்படுத்தினார்.

“என்னய ஒரு மணிநேரம் தூங்க விடு ஆச்சி.. “, என வர்மன் சிறுபிள்ளைப் போல கெஞ்சினான்.

“நாளைக்கு தூங்குவியாம்.. இப்ப கெளம்பு.. மணி ரெண்டு”, என அவனைத் துரிதப்படுத்தினார்.

மூன்று மணிக்கு பானு அவள் இல்லத்தில் இருந்துக் குளித்துவிட்டு, யாருக்கும் தெரியாமல் கிளம்பிக் கோவிலுக்கு வந்தாள்.

அவளுக்கு முன்னால் நீலா ஆச்சி அங்கு வந்து முன்னேற்பாடுகளைக் கவனித்துக்கொண்டு இருந்தார்.

“வா ராசாத்தி.. போய் அந்த தூண் பக்கம் உக்காரு..”, என அனுப்பி வைத்தார்.

“மாமா வந்துட்டாரா?”, எனப் பரிதவிப்புடன் பானு கேட்டாள்.

“வந்துடுவான் கண்ணு.. நீ போய் இந்த நகை எல்லாம் போட்டுக்க.. எல்லாம் உங்க பரம்பர நகை தான்.. போ.. . சீக்கிரம் “, என அவளை அந்த பக்கம் அனுப்பிவிட்டு வாசலுக்கு வந்தார்.

வேல்முருகன் மாலையுடன் வண்டியில் இருந்து இறங்கி வந்துக் கொண்டு இருந்தான்.

“டேய் பேராண்டி.. இந்த மாப்ள பையன எங்க டா இன்னும் காணோம்?”, எனக் கேட்டார்.

“இந்நேரம் வந்து இருக்கணுமே ஆச்சி..”, என யோசனைச் செய்தபடிக் கூறினான் முருகன்.

“பொண்ணு வந்துரிச்சி டா.. இவன இன்னும் காணோம்.. புள்ள பரிதவிக்குது.. சீக்கிரம் போய் ஒரு எட்டு பாத்துட்டு வாடா” , என அவனிடம் கூறினார் .

“இந்தாங்க மாலை.. நான் போய் பாத்துட்டு வரேன்.. பங்காளி எங்க?” , எனக் கேட்டான்.

“அவன் குளிக்க போனான் இன்னும் காணோம்.. காக்க குளியல் குளிக்கறவன் இன்னிக்கி இன்னும் காணோம் ..” , எனப் புலம்பியபடி உள்ளே சென்று ஐயரை பூஜையை ஆரம்பிக்கக் கூறினார்.

தன் வீட்டில் வேலைப் பார்க்கும் சுத்த மனதுடைய  பெண்ணை வந்து விளக்கு ஏற்ற சொல்லி, மற்ற வேலைகளை எல்லாம் இன்னும் இரண்டுப் பெண்களை வைத்து ஒழுங்குப் படுத்தினார்.

மருதன் வீட்டில் இருந்து வெளியே வர மிகவும் சிரமப்பட்டுக் கொண்டு இருந்தான்.

செங்கல்வராயன் தேவராயனின் வீடு, தோட்டம் என அனைத்து இடங்களிலும் காவலுக்கு ஆட்களை நிறுத்தி இருந்தான். அவர்களை மீறி தேவராயனை வெளியே கொண்டுச் செல்வது அவ்வளவு சுலபமாக அவனுக்குத் தோன்றவில்லை.

“எப்டி வெளிய போறது? நாம போனாலே நம்ம பின்னாடி நாலு பேரு வாராணுங்க.. இதுல அண்ணன இவங்களுக்கு தெரியாம எப்படி வெளிய கூட்டிட்டு போறது?” ,என முணுமுணுத்தபடி எல்லா இடத்தையும் சுற்றி வந்தான்.

“என்ன தம்பி.. இன்னும் குளிக்கலியா? ஆறு மணிக்கு முகூர்த்தம்-ன்னு சொன்னாங்க.. “, என ஒருவன் மருதனை கேட்டான்.

“எனக்கா கல்யாணம்? எங்க அண்ணனுக்கு தானே? நான் பொறுமையா குளிச்சா போதும்.. இன்னிக்கி பாத்து குளிக்க சுடுதண்ணி வரல.. அதான் நாலு கட்டைய எடுத்துட்டு போய் சுடுதண்ணி போடலாம்னு வந்தேன்.. மாப்ள குளிக்கணும்..” ,என செல்லில் இருந்த டார்ச் அடித்துக் காய்ந்தச் சுள்ளிகளைப் பொறுக்கிக் கொண்டு இருந்தான்.

“இத நீங்க ஏன் தம்பி பொறுக்கிகிட்டு.. நாங்க கொண்டு வரோம்.. பனில நிக்காதீங்க நீங்க உள்ள போங்க..” ,என அவனை வீட்டிற்குள் அனுப்பவதிலேயே குறியாக இருந்தனர் அந்த காவலாளிகள்.

இரண்டு பேர் நிஜமாக மருதனிடம் கூறியது போல சுள்ளியைப் பொறுக்க ஆரம்பித்தனர்.

“தூண்டில்ல மீனு சிக்கிரிச்சி.. “ ,எனச் சிரித்தபடி கூறியவன் தேவராயனை எழுப்பி அமர வைத்தான்.

“அண்ணே .. அண்ணே.. இங்க பாரு.. ரெண்டு பேரு சுள்ளி பொறுக்கிட்டு இங்க வாராணுங்க.. பாண்டி உங்க டிரஸ்ல இங்க இருக்கட்டும்.. நீயும் நானும் அவங்க டிரஸ்ல வெளிய போயிடலாம்.. நேரம் ஆச்சி.. உன்னால வேகமா நடக்க முடியும்ல?”, எனக் கேட்டான்.

“வண்டி இல்லயா டா?”, என தேவராயன் கேட்டான்.

“தேர் கொண்டு வந்து உன்ன கூட்டி போகவா? சீக்கிரம் எந்திரி.. இத போடு.. டேய் பாண்டி இங்க வா”, என சத்தமில்லாமல் அழைத்து அங்கே வந்து தேவராயனை போல இருக்க கூறினான்.

“மருது .. நம்ம வீட்டுக்கு பின்னாடி கேட் கிட்ட பைக் நிறுத்தி இருக்கேன்.. வெரசா போங்க .. இங்க நான் ஆட்டைய கலச்சிடறேன் ..”, எனக் கூறினான்.

“சூப்பர் டா பாண்டி.. “, என தேவராயன் அவனைக் கட்டிக்கொண்டு விடைப்பெற்றான்.

இருவர் வந்து அடுப்பை மூட்ட, பாண்டி அவர்களிடம் யாரோ அந்த பக்கம் ஒடுவதாகக் கூறி அங்கிருந்த அனைவரையும் வேறு பக்கம் திசைத் திருப்பி விட்டான்.

அந்த இடைவெளியில் மருதனும், தேவனும் வீட்டை விட்டு வெளியே வந்து வண்டியில் கோவில் நோக்கிப்  புறப்பட்டனர்.

 

முந்தின அத்தியாயம் படிக்க… 

அடுத்த அத்தியாயம் படிக்க… 

 

முதல் அத்தியாயம் படிக்க..

Click to rate this post!
[Total: 0 Average: 0]
What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Facebook Twitter Email
Post Views: 1,599

aalonmagari

Subscribe
Login
Notify of

0 Comments
Newest
Oldest
Inline Feedbacks
View all comments

About Me

Aalonmagari

வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….

Categories

  • English (5)
  • Food Recipes (3)
  • Short story (2)
  • இன்னும் பல .. (5)
  • எழுத்தாளர் நேர்காணல் (31)
  • கதை (345)
  • கிறுக்கல்கள் (107)
  • சிறுகதை (9)
  • தொடர்கதை (127)
  • நாமளும் சமைக்கலாம் தப்பில்ல (7)
  • நாவல் (211)
  • நேர்காணல் (56)
  • புத்தகம் வாங்க (9)
  • மகரியின் பார்வையில் (5)
  • வாசகர் நேர்காணல் (25)

Popular

  • இயல்புகள்

    தேன் நிலா

    461 shares
    Share 184 Tweet 115
  • 1 – அகரநதி

    462 shares
    Share 184 Tweet 115
  • 1 – அர்ஜுன நந்தன்

    442 shares
    Share 176 Tweet 110
  • 1 – வலுசாறு இடையினில் 

    389 shares
    Share 155 Tweet 97
  • 1 – காற்றின் நுண்ணுறவு

    387 shares
    Share 154 Tweet 97
  • Terms & Conditions
  • Privacy Policy
Email us : aalonmagari@gmail.com

Copyright © 2024. Aalonmagari. All rights reserved.

No Result
View All Result
  • Home
  • கதை
    • நாவல்
    • தொடர்கதை
    • சிறுகதை
  • கிறுக்கல்கள்
  • புத்தகம் வாங்க
  • நேர்காணல்
    • எழுத்தாளர் நேர்காணல்
    • வாசகர் நேர்காணல்
  • மகரியின் பார்வையில்
  • நாமளும் சமைக்கலாம் தப்பில்ல
  • English
    • Short story
  • Login
  • Sign Up
Facebook social icon Twitter X social icon Instagram social icon Pinterest social icon

Copyright © 2024. Aalonmagari. All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Please wait...

Subscribe to our newsletter

Want to be notified when our article is published? Enter your email address and name below to be the first to know.
SIGN UP FOR NEWSLETTER NOW
error: Content is protected !!
wpDiscuz
0
0
Would love your thoughts, please comment.x
()
x
| Reply