28 – மீள்நுழை நெஞ்சே
அடுத்து வந்த இரண்டு தினங்களில் பேன்டேஜ் எடுத்துவிட்டு, களிம்பு மட்டும் வடு மறையவும், மீதமுள்ள காயம் ஆறவும் கொடுத்தனர். இரண்டு வாரங்களுக்கு கையை அதிகம் அசைக்காமல், பாரம் தூக்காமல் இருக்கும்படிக் கூறி அனுப்பினர்.
“என் வீட்டு சாவிய குடுங்க. இப்ப நான் நல்லா இருக்கேன்”, என வில்சன் வீட்டிற்குள் நுழைந்ததும் கேட்டாள்.
“ராக்ஸ்…. இங்கேயே இரு…. ரெண்டு பேரும் வாடகைய ஷேர் பண்ணிக்கலாம்….”, என வில்சன் கூறவும் முறைத்தாள்.
“அப்ப அந்த வீட்டுக்கு பதினெட்டு மாசம் அக்ரிமெண்ட் போட்டு பணம் குடுத்து இருக்கேனே அத என்ன பண்றது?”
“அது பாத்துக்கலாம். நான் அந்த ஓனர்கிட்ட பேசறேன்….”
“இல்லைன்னா நாங்க இந்த வீட்ட காலி பண்ணிட்டு, உன் வீட்ல வந்து தங்கிக்கறோம்… சரியா?”, என லில்லி பேச்சில் கலந்துக் கொண்டாள்.
“அங்க ஒரு ரூம் தான் இருக்கு லில்லி…. ரெண்டு பேரும் விளையாடறீங்களா?”, இடுப்பில் கை வைத்துக் கொண்டு முறைத்தாள்.
“நீ தான் விளையாடற ராக்ஸ்…. ஏன் எங்க கூட இருக்க உனக்கு பிடிக்கலியா?”, தயங்கியபடி கேட்டான் வில்சன்.
“லூசு மாதிரி பேசாத வில்ஸ்…. என் வீட்டு ஆளுங்கள பத்தி உனக்கு தெரியாது… இப்ப அடிபட்டதால எதுவும் பேசாம இருக்காங்க இல்லைன்னா பயங்கரமா பேசுவாங்க… “
“அவங்களுக்கு உன் மேல நம்பிக்கை இல்லையா?”, லில்லி புரியாமல் கேட்டாள்.
“இந்தியால நம்பிக்கைங்கற விஷயத்துக்கு அர்த்தம் மூனாவது மனுஷன் எதுவும் சொல்லாம இருக்கறது தான்…. அவன் அப்படி சொல்லிடுவான். இவன் இப்படி நினைச்சிடுவான்னு தான் 99% பேர் வாழறாங்க லில்லி…. இங்க என்மேல நம்பிக்கை இருக்கா இல்லையாங்கறது விஷயமே இல்ல… அடுத்தவன் எதாவது பேசிடுவானோங்கறது தான் அவங்க பயமே…. “, என விரக்திச் சிரிப்புச் சிரித்தாள்.
“எனக்கு புரியல ராக்ஸ்…. வதந்திக்காக பசங்கள நம்பாம இருப்பாங்களா?”
“எனக்கு தெரிஞ்சு இப்படி தான் என் ஊரும் இருக்கு வீடும் இருக்கு…. அதனால தான் என் வீட்ல இருக்கிறவங்களுக்கு கூட நான் பேச இடம் குடுக்காம இருக்கணும்னு நினைக்கறேன்…. “
வில்சன் பெருமூச்சு விட்டபடி அவள் அருகில் வந்து, “உன் இஷ்டப்படி உன் வீட்லயே இரு.. ஆனா எந்த வேலையும் நீ செய்யக்கூடாது. நானும் லில்லியும் செஞ்சிடுவோம். உன் வீட்டோட இன்னொரு சாவி எனக்கு குடு.. நானோ லில்லியோ காலைல உன்ன வந்து எழுப்பி விடுவோம். இதுக்கு ஓக்கேவா?”
“டபுள் ஓக்கே வில்ஸ்…. “, எனச் சிரித்தபடிக் கூறியவளைக் கண்டு இருவரும் முறைத்தனர்.
“முறைக்காம வந்து வீட்ட சுத்தம் பண்ணுங்க வாங்க இரண்டு பேரும்….”, எனக் கூறி முன்னால் வேகமாக நடந்தாள்.
வீட்டு கதவைத் திறந்ததும் நேராக சாமி படத்திற்கு அருகில் சென்று தீபமேற்றி சாம்பிராணி பற்ற வைத்தாள்.
“ம்ம்.. இப்ப வேலைய ஆரம்பிங்க”, எனத் தோரணையாகக் கட்டளையிட்டு விட்டு அவர்களுடன் நடந்தபடி வீட்டை சுத்தம் செய்ய ஏவினாள்.
“அங்க பாரு.. அங்க ஒட்டடை பிடிச்சி இருக்கு… இங்க பாரு ஜன்னல் தொடைக்கணும்…
அங்க பாரு டேபிள் சரியாவே சுத்தம் பண்ணல… “, என இருவரையும் வீட்டின் ஒரு இஞ்ச் விடாமல் சுத்தம் செய்ய வைத்தபின் இருவருக்கும் ஜூஸ் போட்டுக் கொடுத்தாள்.
“உன்ன நான் எதுவும் செய்யாதன்னு சொல்றேன்ல ராக்ஸ்….”, என வில்சன் முறைத்தான்.
“பாவமே-ன்னு ஜூஸ் போட்டா முறைக்கற… சீக்கிரம் குடிச்சிட்டு போய் பாத்ரூம் கழுவு போடா….”, என அவனை மட்டும் விரட்டினாள்.
லில்லிக்கு தான் வாங்கி வைத்திருந்த உருளைக்கிழங்கு வைத்து சிப்ஸ் போட்டு கொடுத்து, கொத்தமல்லி வறுத்து கருப்பட்டி காப்பி போட்டுக் கொடுத்தாள்.
“செம டேஸ்ட் ராக்ஸ்…. இது என்ன காப்பி?”
“எங்கூரு காப்பி… நல்லா இருக்கா?”
“எச்சில் ஊறுது வாசனையே செம்ம…. எனக்கு தினம் போட்டு தருவியா?”
“கண்டிப்பா டியர்”, என அவளை அணைத்தபடி அமர்ந்து இருவரும் டீவி பார்த்துக் கொண்டுத் திண்பண்டத்தைக் கொறித்துக் கொண்டிருந்தனர்.
ஒரு மணி நேரம் கழித்து வந்த வில்சனை, குளித்துவிட்டு சமைத்து வைக்கும்படிக் கூறி அனுப்பி வைத்தனர்.
“ரெண்டு பேருக்கும் கொலுப்பு அதிகமா இருக்கு… லில்லி அவகூட அதிகம் சேராத…. “,. எனத் தங்கையிடம் கூறிவிட்டுத் துவாரகாவை முறைத்தபடிச் சென்றான்.
“இவன் தானே உன்கூட சேர சொன்னான்.. இப்ப இப்படி சொல்லிட்டு போறான்….!?”, என லில்லி முழிக்கவும், “அவனுக்கு குடுக்காம நாம மட்டும் சாப்பிடறோம்ல… அந்த கடுப்பு… விடு அவன் என்னைய பத்தி சொல்றதெல்லாம் கண்டுக்காத…. “, எனக் கூறிவிட்டு ஆங்காங்கே வாசனை மெழுகுவர்த்திகள் ஏற்றி வைத்துவிட்டு கீழே வந்தனர்.
அதற்கு பின் நாட்கள் ரெக்கைக் கட்டிப் பறக்க துவாரகாவின் வெளிநாட்டு வாழ்க்கையும் அப்போது முடிவுக்கு வந்தது.
இந்த இரண்டு ஆண்டுகளில் அவளின் துறுதுறுப்பும், குறும்பும், பொறுப்புணர்வும் அனைவரையும் அவள் பக்கம் ஈர்த்திருந்தது.
பல காதல் அழைப்புகளும் வந்தது தான் ஆனால் அவள் யாரையும் ஏற்கவில்லை. அவளுக்கு அந்த அளவிற்கு யாரையும் நினைத்துப் பார்க்க கூட விருப்பம் இல்லை.
ஊருக்கு அவள் சென்று இறங்கியதும் ஒரு மாதத்தில் திருமணம் என்று முடிவு செய்திருந்தனர்.
வில்சனும், இனியாவும் அவளைப் பிரிவது நினைத்து மிகவும் கலங்கி இருந்தனர். துவாரகாவிற்கும் அந்த வலி இருக்கத்தான் செய்தது. லில்லி அவள் ஊருக்கு செல்ல ஒரு வாரம் இருக்கும்போது வந்து அவளுடன் நேரத்தைச் செலவிட்டாள்.
ஒருவழியாக பிரியாவிடை கொடுத்து அனுப்பிவைத்தனர், அவளின் மேல் அன்பு கொண்ட நெஞ்சங்கள்.
அவளும் சொந்த மண்ணிற்கு வந்து அவளின் தந்தையின் மடியில் படுத்துறங்கிக் கொண்டு இருந்தாள்.
“இப்படியே அப்பாவும் மகளும் இன்னும் எவ்வளவு நேரம் கொஞ்சிகிட்டு இருக்காங்கலாம்னு இருக்கீங்க?”, என பவானி நூறாவது முறையாகவும் கேட்டுவிட்டார்.
“சும்மா கத்திகிட்டே இருக்காத டி.. புள்ள தூங்கறா….”, என அருணாச்சலம் மெல்ல சோஃபாவில் இருந்து எழுந்து உள்ளே வந்துக் கூறினார்.
“அங்கயேவா படுத்துட்டா… உள்ள போய் தூங்க சொல்லுங்க….”
“கொஞ்ச நேரம் தூங்கட்டும். நீ சாப்பாடு செஞ்சிட்டு எழுப்பு… சாப்டு அவ ரூம்ல போய் தூங்கட்டும்…. “, எனக் கூறிவிட்டு மகளுக்காக கோழிப் பிடிக்கச் சென்றார்.
மாதவியும் அவளுக்காக காடையைச் சுத்தம் செய்து, சமைக்கத் தயார் செய்துக் கொண்டிருந்தார்.
சுமார் இரண்டு மணி நேரம் கழித்து மெல்ல கண் விழித்த துவாரகா, யாரோ தன்னை உற்று கவனிப்பதைப் போல உணரவும் சட்டென எழுந்து அமர்ந்துப் பார்த்தாள்.
அவளின் அப்பத்தா தான் அவளை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தது.
“என்ன அப்பத்தா சௌக்கியமா?”, என உடலை நெட்டி முறித்தபடிக் கேட்டாள்.
“எனக்கென்ன கொற… நான் நல்லா தான் இருக்கேன்… நீ போன மாதிரியே திரும்பி வந்திருக்கியா?”, என இடக்காகக் கேட்டார்.
“அம்மா…..”, என அருணாச்சலம் சத்தம் போட்டார்.
“இருங்கப்பா… நீ நல்லா முன்னேறிட்ட அப்பத்தா….உன் பொண்ணு சகவாசம் அதிகமா இருக்கு போலவே….. எப்ப வந்த? ஒரு வாரமா அங்க இருக்கியாம்….”, என அவளும் நக்கலாகக் கேட்டாள்.
“என் பேரன் வந்துட்டான் டி… அவன பாக்க தான் போனேன்….”
“அதுக்குள்ள ஜெயில்ல இருந்து வெளிய வந்துட்டானா? எப்படிப்பா?”, என அதிர்ந்துக் கேட்டாள்.
“என் பேரன் நல்லவன் டி… அதான் அந்த கடவுள் ரொம்ப காலம் சோதிக்காம வீட்டுக்கு கொண்டு வந்து சேத்திட்டாரு…. “
“சரிதான்.. அடுத்து பெரிய கேஸ்ல ஆயுள் தண்டனை வாங்குவான்… அதுக்கு தான் வெளியே கொண்டு வந்துட்டாரு அந்த கடவுள்… நீயும் திருந்தமாட்ட… அவங்கள திருந்தவும் விடமாட்ட…. எப்படியோ போங்க…”, எனக் கூறிவிட்டு தன் அறைக்குச் சென்றாள்.
கிழவி இவளைப் பார்த்து கொணட்டிவிட்டு திண்ணைக்குச் சென்றது.
குளித்து முடித்து சாப்பிட்டவுடன் கனிமொழியைப் பார்க்க அவள் வீட்டிற்குப் புறப்பட்டாள்.
“இந்தாடி அத்த கிட்ட இந்த பலகாரத்த குடுத்துட்டு நாளைக்கு வீட்டுக்கு வரசொல்லிட்டு வா….இராத்திரி தூங்க இங்க வந்துடு”, என ஒரு தூக்கு போனியைக் கொடுத்தனுப்பினார்.
“ஏன் அங்கேயே தூங்கிட்டு காலைல வந்தா என்னவாம்? எனக்கும் கனிக்கும் பேச நிறைய இருக்கு.. நாளைக்கு ஆள் அனுப்பறேன் துணி குடுத்துவிடு…”
“நாளைக்கு மாப்ள வீட்ல இருந்து உன்ன பாக்க வராங்கடி… சீக்கிரம் வந்து இன்னிக்கு தூங்கு… இரண்டு நாள் கழிச்சு அங்க போய் இரு…. “, என அவளுக்கு சமாதானம் கூறி அனுப்பி வைத்தார்.
கனி இன்னும் வேலை முடிந்து வரவில்லை. மரகதமும் வீட்டில் இல்லை என்பதால் வீடு பூட்டி இருந்தது.
“அத்த… எங்க இருக்கீங்க?”
“………..”
“நான் வீட்டு வாசல்ல நிக்கறேன்….”
“……….”
“சரி இருங்க… நான் அங்கயே வரேன்”, எனக் கூறிவிட்டு மெதுவாக ஊரைப் பார்த்துக் கொண்டே நடந்தாள்.
எதிரில் வந்தவர்களிடம் எல்லாம் சிரிப்பும், நலவிசாரிப்புமாக வயல்வெளிக்கு வந்துச் சேர்ந்தாள்.
“வாடி என் ராசாத்தி… எம்புட்டு நாளாச்சு உன்ன பாத்து…. நல்லா இருக்கியா?”, என அவளை ஆரத்தழுவிக் கொண்டுக் கேட்டார் மரகதம்.
“நான் நல்லா இருக்கேன் அத்த… நீங்க எப்படி இருக்கீங்க?”, என அவளும் அவரைக் கட்டிக் கொண்டு குதித்தாள்.
“நல்லா இருக்கேன் டி.. வா.. வந்து இங்க உக்காரு… அந்த ஊரு சாப்பாடு எல்லாம் எப்படி சமாளிச்ச? உனக்கு காரம் அதிகமா வேணுமே… அங்க எல்லாம் நம்ம ஊரு சாப்பாடு மாதிரி கெடச்சதா?”, வாஞ்சையுடன் விசாரித்தார்.
“நானே சமைச்சிகிட்டதால பெருசா ஒன்னும் வித்தியாசம் இல்லை அத்த… அங்க பால் தான் பிரச்சினை… நல்ல பால் கிடைக்காது… எல்லாமே பதப்படுத்தி தான் விக்கறாங்க… உண்மையா சொன்னா சாப்பாடு பெரிய பிரச்சினை தான்…. ஆனா ஓரளவு சமாளிக்கலாம்…. “, என இருவரும் இரண்டு வருட கதையைக் கயிற்றுக் கட்டிலில் அமர்ந்தபடிப் பேசினர்.
வயலில் நாற்று நடும் வேலை ஒரு பக்கம் நடந்துக் கொண்டிருந்தது. மரகதம்மா கீரைக்கு என்றே ஒரு ஏக்கர் ஒதுக்கி வைத்து விளைவித்துக் கொண்டிருந்தார். அதனால் அந்த வேலையும் ஒரு பக்கம் நடந்துக் கொண்டிருந்தது.
“கனி வந்திருப்பாளா அத்த?”, எனக் கேட்டபடிப் போனை எடுத்து மணி பார்த்தாள்.
“வந்துட்டேன் மேடம்”, என கனி பின்னிருந்து அவளை அணைத்துக் கொண்டாள்.
இருவரும் கட்டிக்கொண்டு குதித்தனர். இரண்டு வருட பிரிவு, தோழிகள் இருவருக்கும் பெரும் ஏக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.
தினம் பேசினாலும் நேரில் காணமுடியாத ஏக்கமும், வருத்தமும் அவர்களின் கண்ணில் நீராகக் கரைந்துக் கொண்டிருந்தது.
“சரி வா..வீட்டுக்கு போலாம்”, என கனி அவள் கைகளைப் பிடித்தபடி அங்கிருந்து தாயிடம் வீட்டுச் சாவி வாங்கிக்கொண்டு கிளம்பினாள்.
இருவரும் ஊரைப் பற்றி பேசியபடியே மக்காசோளம் பறித்துக்கொண்டு வீடு வந்துச் சேர்ந்தனர்.
கனி அதை நெருப்பில் சுட்டுக் கொடுத்தாள்.
அந்த சோளத்தின் வாசனையும், நெருப்பில் சுட்டபின் வரும் வாசமும் அவள் நாசியை நிறைத்தது.
இரண்டு வருடமாக அவள் எதை இழந்தாள்? எதற்காக தவித்தாள் ? எல்லாம் சொந்த மண்ணின் மனமும், அதில் விளையும் உணவும் தான்….
ஒரு மனிதனுக்கு இந்த இரண்டும் எத்தனை அத்தியாவசியமானது என்றும், உணர்வில் ஒன்றி இருக்கிறது என்றும் ஒரு முறை அயல்நாடு சென்று திரும்பினால் நிச்சயமாக உணர முடியும்….