29 – மீள்நுழை நெஞ்சே
“என்னடி சோளத்த இவ்ளோ இரசிச்சி சாப்டுட்டு இருக்க?”, கனி அவள் கண்மூடி சுவையை உணர்ந்துக் கொண்டிருப்பதுக் கண்டுக் கேட்டாள்.
“ஒரு தடவ வெளிநாடு போய் பத்து நாள் அங்க இருக்க சாப்பாட்ட சாப்பிட்டு பாரு டி. அப்ப தெரியும் அந்த அருமையும் என் உணர்வும்…”, எனக் கூறிவிட்டு வீட்டில் செய்த திண்பன்டங்களாகக் கேட்டு வாங்கிச் சாப்பிட்டாள்.
“சோத்துக்கு இப்டியாடி செத்துக்கிடந்த?”, எனக் கனி சிரிப்புடன் கேட்டாள்.
“சோத்துக்குன்னு இல்ல… நல்ல சோறு.. ஆரோக்கியமான சோறு.. அதுக்கு தான் தவம் கெடந்தேன்…. அங்க பாலே நான் குடிக்கல தெரியுமா? காய்ச்சவும் முடியாது. கொஞ்சம் அதிகமா சூடு பண்ணிட்டாலும் கசக்கும்… கெமிஸ்ட்ரி லேப்ல வாய்ல வச்சி உறிஞ்சி எடுக்கறப்ப வாய்ல அந்த சொல்யூஷன் போயிட்டா அடுத்த நாள் வரைக்கும் வாய் இருக்குமே. அப்படி இருக்கும் அந்த பாலு… இரண்டு வருஷம் கழிச்சு வீட்டுக்கு வந்து தண்ணி விடாம சூடா பசும்பால்ல நாட்டு சக்கர போட்டு குடிச்சேன். அது சொர்க்கம் கனி…”
“சரி சரி.. இனிமே போகமாட்டியே .. போனாலும் நல்ல சோறு கிடைக்காதுன்னு உன் மண்டைல ஏறிடிச்சா?”, கனி ஒருமாதிரியான ஏக்கக் குரலில் கேட்டாள்.
அவள் குரலில் இருந்த ஏக்கத்தையும், கோபத்தையும் புரிந்துக் கொண்ட துவாரகா, அவள் அருகில் வந்து அவள் தோள்களில் சாய்ந்துக் கொண்டு, “கண்டிப்பாக போகமாட்டேன். அத்தை செய்யற வடை, அம்மா செய்யற சிக்கன் பெப்பர் ஃப்ரை, சித்தி செய்யற காடை எல்லாம் அங்க கிடைக்காது… அதனால போறதா இல்ல”, எனக் கூறி கனியின் கன்னத்தில் முத்தம் வைத்தாள்.
“திண்ணிப்பண்டாரம் … சோத்து மூட்டை…. சோத்து மூட்டை …. கொஞ்சமாவது என் நினைப்பு இருக்காடி உனக்கு? எங்கம்மா சுடற வடைய மிஸ் பண்ணுவாளாம். நான் என்ன தொக்கா டி?”, கனி அவளைத் துரத்தித் துரத்தி அடித்தாள்.
“ஆமா கனி.. நீ செய்யற இறால் தொக்கு கூட ரொம்ப மிஸ் பண்ணுவேன்”, எனக் கூறியபடியே ஓடினாள்.
“நில்லு டி…. ஒழுங்கா வந்து அடி வாங்கிக்க…”
“நான் என்ன உன் ஸ்டூடண்ட்டா நானே வந்து கைய நீட்ட? நான் துவாரகா டி… சிக்கமாட்டேன்…”, என அங்கும் இங்கும் தாவிக் குதித்து ஓடினாள்.
இருவரும் இரண்டு வருட ஏக்கத்தை ஓடிப்பிடித்து, அடித்து, கடித்து, என தீர்த்துக் கொண்டிருந்தனர்.
மரகதம் வீட்டிற்குள் வந்த போது அனைத்தும் அலங்கோலமாகக் கிடந்தது. அவர் அவர்களின் சேட்டைக் கண்டு சிரித்தாலும் அதட்ட ஆரம்பித்தார்.
“குரங்குங்களா…. நில்லுங்க டி…. வீட்ட இரண்டாக்கி வச்சிருக்கீங்க…. ஒழுங்கா எல்லாம் அதது இருந்த இடத்துல இருக்கணும்…”
“அதுவா எப்படி அத்த அந்த இடத்துக்கு போகும்?”
“நீ தானே அத்தனையும் தள்ளி அதகளம் செஞ்சி வச்சிருக்க… வா.. வந்து எல்லாத்தையும் எடுத்து வை. அப்ப தான் வடை சுட்டு கொடுப்பேன்”, என அவளது காதைப் பிடித்துத் திருகினார்.
“வடைன்னு சொல்லுங்க இரண்டே நிமிஷம் எல்லாத்தையும் எடுத்து வச்சிடறேன் அத்த…”, எனக் கூறிக்கொண்டே வேகவேகமாக அனைத்தையும் இடம் சேர்க்க ஆரம்பித்தாள்.
“சரியான சோத்து மூட்டை… நீயெல்லாம் எனக்கு எப்படி டி பிரெண்ட் ஆன?”, எனக் கனி தலையில் அடித்துக்கொண்டுக் கேட்டாள்.
“அதனால தான் பிரெண்ட் ஆனேன்”, எனச் சிரித்தபடி அவளை மீண்டும் கடுப்பேற்றினாள் துவாரகா.
“போதும் டி உங்க சில்றசண்ட… வந்து நீ வெங்காயம் அரிஞ்சி குடு.. நான் உளுந்த கிரைண்டர்ல போடறேன்”, என கனிமொழிக்கும் வேலைக் கொடுத்து இருவரையும் ஆளுக்கு ஒரு பக்கமாக நகர்த்தினார்.
அரை மணி நேரத்தில் வீட்டில் அனைத்தும் சுத்தம் செய்து, கூட்டி அள்ளி குப்பையை கொட்டிவிட்டு கிணற்றடிக்கு சென்று முகம் கைகால் கழுவிக்கொண்டு சமையலறைப் பக்கம் சென்றாள்.
“அத்த… எல்லாம் சுத்தம் பண்ணிட்டேன்…. சாயந்தரமா வீடு துடைச்சி விட்றுங்க…. “, என அவரை பின்னிருந்துக் கட்டிக் கொண்டுக் கூறினாள்.
“அந்த அளவுக்கா சுத்தம் பண்ணிட்ட?”, கனி அதிர்ச்சியுடன் கேட்டாள்.
“ஆமா டி என் வாத்தியாரம்மா…. போய் பாரு போ”
கனிமொழி வெளியே சென்று பார்க்க இருந்த பொருட்கள் அனைத்தும் அழகாய் அலங்காரம் செய்துச் சுத்தமாக இருந்தது.
“நீ எப்படி இவ்ளோ சுத்தமா செய்ய கத்துகிட்ட? வெளக்கமாறுல கூட்டினாலே முன்னாடி பாதி பின்னாடி பாதி பறக்கும்…. நிஜமா நீயா செஞ்ச?”, எனக் கனி ஆச்சரியமாகக் கேட்டாள்.
“எல்லாம் வில்சன் வேலை… சுத்தமா இல்லைன்னா என்னை சோறு திங்க கூட விடமாட்டான் படுபாவி. அவன்கூட சேர்ந்ததால அந்த வியாதி எனக்கும் வந்துரிச்சி… ஓசிடி இருக்கு அவனுக்கு சோ சுத்தம் ரொம்ப பாப்பான்….”
“ஒரு ஆம்பள பையன் சுத்தமா வைக்க சொல்லி குடுத்திருக்கு.. உனக்கு என்னடி கஷ்டம்?”, மரகதம் உளுந்தின் பதம் பார்த்தபடிக் கேட்டார்.
“அதுக்குன்னு ஓயாம அதே வேலையா இருக்க முடியுமா? நானே சமைச்சி நானே சாப்பிடறதே எவ்ளோ கொடுமையான வேலை…. அதுக்கு மேல ஸ்டார் ஹோட்டல் ரேஞ்ச்ல சுத்தமா இருக்கணும்னா அதுலாம் நடக்குமா?”, எனச் சிணுங்கினாள்.
“பரவால்ல… அங்க இருந்த இரண்டு வருஷத்துல உருப்படியா ஏதோ கத்துகிட்டு வந்திருக்க…. உனக்கு பேச செலவு பண்ணது வீண் போகல”, கனி கிண்டல் செய்யவும் மீண்டும் அங்கே யுத்தம் ஆரம்பித்தது.
“கம்முன்னு இருங்க டி…. வீடே அதிருது உங்க கத்தலுல…. “, மரகதம் சத்தம் போடவும் இருவரும் கப்சிப்பென அமைதியாக ஆளுக்கொரு தட்டோடு அமர்ந்தனர்.
“நாளைக்கு மாப்ள வீட்ல இருந்து எத்தனை மணிக்கு வராங்க டி?”
“தெர்ல அத்த… அம்மாகிட்ட கேட்டுக்கோங்க…”, இனிப்பு வடையை ஊதி ஊதி வாழப்பழம் போட்டு பிசைந்துக் கொண்டிருந்தாள்.
“மாப்ளய உனக்கு பிடிச்சிருக்கா டி?”
“நான் போட்டோல பாத்தேன்.. அவ்ளோ மோசம் எல்லாம் இல்ல…. அப்பா சித்தப்பா எல்லாம் விசாரிச்சி தானே செய்றாங்க.. நான் தனியா யோசிக்க என்ன இருக்கு? எல்லாம் அவங்க பாத்துப்பாங்க….”, என அவள் கூறியதும் கனிக்கு ஏதோ உள்ளுக்குள் உறுத்தியது.
பின் மூவரும் ஏதேதோ பேசியபடி இருக்க நேரம் ஆனதும் பவானி துவாரகாவிற்கு அழைத்தார்.
“சீக்கிரம் வீட்டுக்கு வா துவாரகா… நேரம் ஆகுது”
“வரேன்ம்மா… இருங்க அத்த பேசணுமாம்”, என போனை அவரிடம் கொடுத்துவிட்டுக் கிணற்றடிக்குச் சென்றாள்.
“ஏய் துவா… மாப்ளய உனக்கு பிடிச்சிருக்கு தானே?”, எனக் கனி கேட்டாள்.
“பிடிச்சிருக்கா-ன்னு கேட்டா என்னடி சொல்றது? வேணாம்னு சொல்ற அளவுக்கு எதுவும் குறை தெர்ல…”
“என்னடி இப்படி சொல்ற? சரி மாப்ளகிட்ட பேசினியா?”
“அதான் அவங்க பேசற பழக்கம் இல்லன்னு சொல்லிட்டாங்களே… எனக்கு ப்ராஜெக்ட் ரிப்போர்ட் கடைசில நிக்குது சோ பெருசா பேச டைம் இல்ல. கல்யாணம் முடிஞ்சி பேசிக்கலாம்னு விட்டுட்டேன்…”
“ஏதோ தப்பா இருக்கு டி… மாப்ளைக்கு உன்கூட பேசணும்னு தோணாதா?”
“அது என்னைய கேட்டா? இங்க பாரு நான் இரண்டு வருஷம் கழிச்சி உங்கள எல்லாம் பாக்குறேன். உங்க கூட இந்த ஒரு மாசம் ஜாலியா இருக்கணும் எனக்கு.. அங்க போய் அவங்கள பத்தி தெரிஞ்சிக்கலாம் விடு”, எனக் கூறிவிட்டு வீட்டிற்குக் கிளம்பினாள்.
கனிமொழி குழப்பமான மனநிலையுடன் செல்லும் துவாரகாவைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.
“என்னடி பிரியமுடியாம வச்ச கண்ணு வாங்காம அவள பார்க்கற? இரண்டு நாள் கழிச்சி தங்க வராளாம். அப்ப விடிய விடிய அடிச்சிக்கோங்க… “, என மரகதம் மகளின் முகம் பார்த்துக் கூறினார்.
“அதில்லமா… கல்யாணத்த பத்தி ஒன்னுமே யோசிக்காம இருக்கா… பிடிச்சிருக்கான்னு கேட்டாலும் பதில் இல்லை… என்னமோ மனச உறுத்துது… “
“அவ நம்மல பாத்த சந்தோஷத்துல இருக்கா. கல்யாணத்த பத்தி கனவில்லாம எப்படி போகும். அதுலாம் இருக்கும்… நீ வா சாப்டு படு.. “, என அவளை உள்ளே வரச்சொல்லிவிட்டுச் சென்றார்.
அடுத்த நாள் காலை பதினோரு மணி போல் மாப்பிள்ளை வீட்டில் இருந்து வந்தனர். மாப்பிள்ளை வரவில்லை. அவரின் அம்மா, அப்பா, அக்கா, அக்கா கணவர், குழந்தை என ஐவர் மட்டும் வந்திருந்தனர்.
“பிரயாணம் எல்லாம் சவுரியா இருந்ததா ம்மா?”, என அவளின் வருங்கால மாமியார் வாஞ்சையுடன் கேட்டார்.
“நல்லா இருந்தது ம்மா”, என அவள் கூறியதும் அவர் முகம் சற்று சுருங்கி இயல்பானது.
அன்று மதியம் உணவுண்டு அவர்கள் சென்றனர்.
மாப்பிள்ளை ஸ்ரீ போன் செய்து இரண்டொரு வார்த்தைகளுடன் முடித்துக் கொண்டான்.
“எங்கம்மாவ அம்மான்னு ஏன் கூப்பிடற துவாரகா?”, ஸ்ரீ.
“அம்மான்னு கூப்பிடறது தப்பில்லையே”
“அத்தைன்னு கூப்பிடு போதும். அம்மா எல்லாம் வேண்டாம்”, என அவன் கூறியதும் அவளுக்கு ஒரு மாதிரி ஆனது.
“சரி.. என்ன பண்றீங்க? எங்கயாவது மீட் பண்ணலாமா?”, என அடுத்த பேச்சிற்கு சென்றாள்.
“அப்பா ஊர்ல இல்ல. நான் தான் பாத்துட்டு இருக்கேன்… இப்ப பாக்கறது கஷ்டம் தான்… “, என மறுத்துவிட்டான்.
துவாரகாவும் அப்போதைக்கு அதைப் பெரிது படுத்தாமல் விட்டுவிட்டாள்.
ஒரு வாரம் கழித்து கனியும், துவாரகாவும் அருகில் இருக்கும் நகரத்திற்கு சென்றனர்.
அப்போதும் கனி கூற துவாரகா ஸ்ரீக்கு அழைத்து சந்திக்க அழைத்தாள்.
“இப்பவா? வேலை நிறைய இருக்கு துவாரகா…. “, என இழுத்தான்.
“நானே இங்க வந்திருக்கேன். ஒரு பத்து நிமிஷம் வந்துட்டு போங்க…”
“ஒரு நிமிஷம்…..”, என அருகில் யாரிடமோ பேசிவிட்டு, “சரி வரேன். பத்து நிமிஷம் தான். அதுக்கு மேல நான் அங்கிருக்க முடியாது”, எனக் கூறி வைத்துவிட்டான்.
கனியிடம் அதைக் காட்டிக் கொள்ளாமல் வருகிறான் என்பது மட்டும் கூறி ஒரு ஐஸ்க்ரீம் பார்லர் சென்றனர்.
ஐந்து நிமிடத்தில் வந்தவன், “ஹாய்… எப்படி இருக்க துவாரகா?”, என புன்னகை முகமுடன் கேட்டான்.
“நல்லா இருக்கேன். நீங்க?”
“நல்லா இருக்கேன். ஹாய் கனி…. “, என அவளுக்கும் ஒரு முகமன் கூறிவிட்டு துவாரகாவைப் பார்த்தான்.
“என்ன சாப்பிடறீங்க?”
“நான் எனக்கு பிடிச்சது சொல்றேன். நீ உனக்கு பிடிச்சது சாப்பிடு… “, எனக் கூறிவிட்டு மடமடவென அவன் இஷ்டப்பட்டதைக் கூறினான். அதன்பின் இவர்கள் இருவரும் ஆர்டர் செய்தனர்.
“கல்யாண வேலையெல்லாம் எப்படி போகுது? பர்சேஸ் எல்லாம் எந்த அளவுக்கு போய் இருக்கு?”, என அவனே பேச்சை ஆரம்பித்தான்.
அவனுக்கு வந்த ஐஸ்கிரீமை வேகமாக சாப்பிட்டுக் கொண்டே நேரத்தைப் பார்த்தான்.
துவாரகா ஏதோ கேட்க ஆரம்பிக்கும் போது, “ஹலோ…. ஆஹ் சொல்லுங்க…. அப்படியா… இதோ வரேன்”, அழைப்பு வரவும் அவர்களிடம் விடைப் பெற்றுக் கொண்டு அங்கிருந்துச் சென்றான்.
“படபடன்னு அவர் பாட்டுக்கு பேசிட்டு போயிட்டாரு….”, கனி கூறவும்.
“எதாவது அவசர வேலை வந்திருக்கும்…”
“அதுக்குள்ள சப்போர்ட் எல்லாம் பலமா இருக்கு மேடம்….”, என கனி கலாய்க்க இருவரும் கொல்லென சிரித்தனர்.
நாட்கள் வேகமாக பறக்க திருமணத்திற்கு பத்து நாட்கள் முன்பு, துவாரகாவின் தாயும், தந்தையும் அவளை அழைத்துக் கொண்டு நகை கடைக்கு சென்றனர்.
“அதான் எல்லாம் எடுத்தாச்சே ம்மா.. மறுபடியும் எதுக்கு நகை எடுக்கணும்?”, என துவாரகா கேட்டாள்.
“அப்பா உனக்கு கொஞ்சம் சேத்தி செய்யணும்னு நினைக்கறேன் டா… வா பிடிச்சது எடு”, என அவளை வேறெதுவும் கேட்கவிடாமல் நகைகளைப் பார்க்க வைத்தார்.
இடையில் மற்றொரு பிரச்சினையும் மாப்பிள்ளை வீட்டில் இருந்து கிளம்ப, அதையும் இவர்கள் சமாதானம் செய்திருந்தனர்.
துவாரகாவிற்கு நடப்பவை அனைத்தும் தெளிவில்லாமலே சென்றுக் கொண்டிருந்தது. அவளின் அலுவலக பணியும் அவளை நெருக்கியதில், முழுதாக யோசிக்காமல் அந்த வேலையை முடிக்க தீவிரமாக வேலைச் செய்துக் கொண்டிருந்தாள்.
அப்படி இப்படியென திருமணமும் சிறப்பாக முடிந்தது.
விழாவிற்கு வந்த அனைவரிடமும் துவாரகா சிரித்த முகத்துடன் பேசிக் கலகலத்துக் கொண்டிருந்தாள் எதிர்வரும் பிரச்சனைகளின் தீவிரம் உணராமல்.
அவள் வீட்டினரும் அவளுக்குப் பிரியாவிடைக் கொடுத்து அவள் வாழ்வின் பெரும் சோதனைக் காலத்தைத் தொடங்கி அனுப்பி வைத்தனர். கனிமொழியும் துவாரகாவை கண்களில் நீருடன் கட்டி அணைத்து விடுவித்தாள்.
வீட்டிற்கு சென்றதும் அவளது மாமியார் அவளை தனியாக அழைத்து, “உன் மாமனார் வரப்ப எந்திரிச்சிக்கணும் துவாரகா.. அவரு ரொம்ப பெரியவருல்ல…. அப்பறம் நம்ம வீட்டு ஆளுங்களுக்கும், சொந்தக்காரங்களுக்கும் வித்தியாசம் பாத்து பேசணும்…. எல்லார்கிட்டயும் சகஜமா பேசணும்னு இல்ல… “, எனக் கூறி இன்னும் சில விஷயங்களைக் கூறினார்.