30 – மீள்நுழை நெஞ்சே
இரவு சடங்கிற்கான ஏற்பாடு ஒரு பக்கம் நடந்துக் கொண்டிருந்தது.
நலுங்கு வைத்து பெண்ணையும், மாப்பிள்ளையையும் அறைக்குள் அனுப்பிவிட்டு வெளியே பூட்டினர்.
அதைக் கண்ட ஸ்ரீ, “கதவ எதுக்கு பூட்டறாங்க? அறிவில்லாம… சே…. “, என முனகிவிட்டு அவளைப் பார்த்துச் சிரித்தான்.
“இந்த புடவையை நான் மாத்திக்கவா… ரொம்ப கசகசன்னு இருக்கு”, என துவாரகா பார்வையைத் தழைத்தபடிக் கேட்டாள்.
“ம்ம்….”, எனக் கூறிவிட்டு அவனும் உடைமாற்ற ஆரம்பித்தான்.
அவள் அவளது இரவு உடைகளுடன் பாத்ரூம் சென்று மாற்றிக்கொண்டு வந்தாள்.
“துவாரகா…. உன்கிட்ட கொஞ்சம் பேசணும்”, என மெல்ல பேச ஆரம்பித்தான்.
“சொல்லுங்க….”
“காலைல 5.30 மணிக்கு எல்லாம் எந்திரிச்சிடணும். அம்மா சொல்றபடி கேட்டு நடந்துக்கணும். வீடு சுத்தமா வச்சிக்கணும்… அப்பறம் என் அக்காகிட்ட அளவா பேசு போதும்”
“சரிங்க….”, என உள்ளே ஓடும் யோசனையுடன் அவனைப் பார்த்தாள்.
“உன் வீட்டு பக்கம் நிறைய கல்யாண வயசு பசங்க பொண்ணுங்க இருக்காங்க.. அவங்க எல்லார் கல்யாணத்துக்கும் போகணுமா என்ன?”, என அவன் கேட்டதும் அவள் விழித்தாள்.
“இது என்ன கேள்வி? அவங்க எல்லாரும் என் ப்ளட் ரிலேட்டிவ்ஸ்… போய் தான் ஆகணும்”
“போனா தங்கணுமா என்ன?”
“அது கல்யாணம் வைக்கற இடத்த பொறுத்து தான்…”
“என்னையெல்லாம் எல்லா கல்யாணத்துக்கும் கூப்பிடாத… உன் ப்ரதர் கல்யாணத்துக்கு வேணா வருவேன். தங்கறது எல்லாம் முடியாது”
“வீட்டு மாப்பிள்ளை நீங்க… மச்சான் கல்யாணத்துல அங்க இருந்து வேலை பாக்கணும்ல”, எனக் குழப்பமான மனநிலையுடன் கேட்டாள்.
“அதுலாம் கஷ்டம் துவாரகா… என்னை மறுத்து பேசாத… புரிஞ்சி நடந்துக்க….”, எனப் பட்டென கூறினான்.
“சரி அது அப்ப பாத்துக்கலாம். எனக்கு தூக்கம் வருது நான் தூங்கறேன்”
“துவாரகா… இன்னொரு விஷயம்…”, எனத் தயங்கினான்.
“நமக்குள்ள ஒரு வருஷத்துக்கு எதுவும் வேணாம்…. வீட்ல சொல்லிக்கவும் வேணாம்… நான் கொஞ்சம் ஸ்டெடி ஆகணும்… அதான்… “, என இழுத்தான்.
“இல்ல புரியுது.. எனக்கும் டைம் தேவை தான்… குட் நைட்”, என அப்பாடா என்ற ஒரு பெருமூச்சு விட்டபடிச் சுவர் பக்கமாகத் திரும்பிப் படுத்துக் கொண்டாள்.
அடுத்த நாள் நாத்தனார் வந்துக் கதவை திறக்கும் போது இருவரும் குளித்து முடித்துத் தயாராக இருந்தனர்.
காலையில் மாமனார் மாமியார் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டு கோவிலுக்குச் சென்றனர்.
“தீபம் வாங்கணும். இந்த கூடைய பிடிச்சிகோங்க”, என அவள் இயல்பாக நீட்டினாள்.
“அதுலாம் பொம்பளைங்க தான் தூக்கிக்கணும். என்கிட்ட ஏன் குடுக்குற…. இந்தா பணம். நான் உள்ள போறேன் “, என அவன் விடுவிடுவென உள்ளே சென்றுவிட்டான்.
அவனது செயலில் துவாரகா குழப்பமான மனநிலையுடன் தீபம் வாங்கிக் கொண்டு கோவில் உள்ளே சென்றாள்.
முதலில் விநாயகருக்கு தீபம் ஏற்றி அரசமரத்துடன் இருக்கும் விநாயகரை மூன்று முறைச் சுற்றி வந்துக் கும்பிட்டாள்.
பின் முருகனை தரிசிக்கும்முன் அங்கும் அகல் விளக்கு ஏற்றிவைத்துவிட்டு, அர்ச்சனைக்கு தேங்காய் பழம் கொடுத்து, அனைவர் பெயரும் கூறி அர்ச்சனைச் செய்துக் கொண்டுக் கோவிலைச் சுற்றிவிட்டு வந்தமர்ந்தனர்.
“எப்பவும் கோவில் போனா தீபம் போடுவியா துவாரகா?”
“ஆமா… அப்பா சொல்வாரு எந்த கோவில் போனாலும் தீபம் ஏத்தனும்னு… அது நமக்கு நல்லவழிய காட்டும்னு….”
“அதான் எங்க வீட்டுக்கு வழி காட்டிருச்சா….”, எனக் கேட்டு அவனே சிரித்துக் கொண்டான்.
துவாரகா சிரிக்காமல் இருக்கவும், “சரி வா போலாம்”, என இல்லம் வந்து அவளை விட்டுவிட்டு தன் தந்தையின் அலுவலகம் சென்று விட்டான்.
“துவாரகா… உன் ட்ரஸ் எல்லாம் எடுத்து வச்சிடலாமா?”, அவளின் நாத்தனார் ராணி கேட்டாள்.
“வச்சிடலாம் அண்ணி…. இருங்க வந்துடறேன்”, என சாமி ரூம் உள்ளே சென்று அர்ச்சனை செய்து வந்த பொருட்களை வைத்துவிட்டு வந்தாள்.
இருவரும் பேசியபடியே துணிகளை எல்லாம் எடுத்து அடுக்கி வைத்தனர்.
அவரின் ஆறு வயது மகள் அக்க்ஷரா துவாரகாவுடன் நன்றாக ஒட்டிக்கொண்டாள்.
“சரி துவாரகா நான் கிளம்பறேன்….”, என ராணி கூறினார்.
“இருங்க அண்ணி.. சாப்பிட்டுட்டு போலாம்….”
“நீ சமைக்கறப்ப சொல்லு வந்து சாப்பிடறேன்…. இப்ப உங்கண்ணன் வந்துடுவாரு. நான் வீட்ல இருக்கணும்”, எனக் கூறி குழந்தையை அழைத்துக் கொண்டுச் சென்றுவிட்டார்.
“ஏன் அத்த சாப்டாம கிளம்பிட்டாங்க அண்ணி?”
“அவளுக்கு எங்க மேல கொஞ்சம் கோபம் இருந்தது ம்மா…. இன்னும் முழுசா போகல போல அதான். விடு அத பெருசா நினைக்காத… நைட் இரண்டு பேரும் எத்தனை மணிக்கு தூங்கினிங்க? தூக்கம் வந்துச்சா?”, என மாமியார் கேட்டதும் துவாரகாவிற்கு தூக்கிவாரிப் போட்டது.
“ஹாங்… புது இடம் தூக்கம் வரல அத்த… விடியறப்ப தான் தூங்கினேன்”, எனத் திக்தித் திணறிக் கூறிவிட்டு அங்கிருந்துச் சென்றாள்.
மறுவீடு செல்ல துவாரகாவின் தாயும், தந்தையும் வந்து அழைத்துச் சென்றனர்.
அங்கே அவர்களுக்காக ஒரு கூட்டமே காத்திருந்தது.
அன்று தான் ஸ்ரீ அவள் வீட்டைப் பார்க்கிறான்.
“உன் வீடு நல்லா இருக்கு துவாரகா… எங்கம்மா சொன்ன மாதிரி பெருசா தான் இருக்கு…..”, என வீட்டை சுற்றிப் பார்த்தபடிக் கூறினான்.
“உன் ரூம் கூட நல்லா இருக்கு…. “, என யாரோ சொல்லிக்கொடுத்து பேசுவது போல கூறிவிட்டுச் சென்றான்.
துவாரகா மனதில் ஒவ்வொரு விஷயமாக சந்தேகம் தோன்ற ஆரம்பித்திருந்தது.
அன்றே அவர்கள் இல்லம் திரும்ப வேண்டும் என்பதால் மதியம் உண்டுவிட்டு நல்ல நேரத்தில் வழியனுப்பி வைத்தனர்.
“துவாரகா… எங்க சொந்தகாரங்க வீட்டுக்கு எல்லாம் போயிட்டு வந்துடுங்க. இல்லைன்னா எல்லாரும் கொற சொல்ல ஆரம்பிச்சிடுவாங்க….”, எனக் கூறி அடுத்த நாளே அவர்கள் வீட்டிற்குச் சென்று வரும்படி அனுப்பி வைத்தார்.
இருவரும் தயாராகி சொந்தகாரர்களின் இல்லத்திற்கு சென்றுவிட்டு, அருகிருந்த சிவன் கோவிலுக்கு சென்றனர்.
“இந்த கோவில் எல்லாம் பெருசா கட்டி என்ன பண்ணாங்க… லைன் தான் நீளமா நிக்கறதா இருக்கு….”, எனச் சலித்தபடி அவன் நடந்தான்.
“எப்பவும் மதிப்புள்ள விஷயத்துக்கு கொஞ்சம் கஷ்டப்பட்டு தான் ஆகணும். உழைப்பில்லாம எதுவும் கிடைக்காது….”
“ஹாஹாஹா….. உழைக்க வேண்டிய அவசியம் எல்லாம் இல்ல…. என் அப்பா எனக்கு நிறைய சேர்த்து வச்சிருக்காரு… நான் எல்லாம் கஷ்டப்பட தேவை இல்லை…. நமக்கு தேவை படறப்ப தயவு தாட்சண்யம் காட்டாம நடந்து சாதிக்கணும்… அவ்வளவுதான்…”
“தயவு தாட்சண்யம் எல்லாம் மனுஷனோட அடிப்படை குணங்கள். அத விட்டுட்டு நீங்க என்ன சாதிச்சாலும் அர்த்தம் இருக்காது… “
“துவாரகா…. நான் மறுபடியும் மறுபடியும் சொல்றேன் நல்லா கேட்டுக்க…. என்னை எதிர்த்து பேசாத”, எனக் கோபமாக கூறிவிட்டு மடமடவென சாமி தரிசனம் முடித்து அங்கே உட்கார கூட விடாமல் இல்லம் வந்து சேர்ந்தான்.
இரண்டு நாட்கள் கழித்து அவனே ஆரம்பித்தான்.
“துவாரகா…. அப்பா அம்மாவுக்கு வயசாகிடிச்சி… உடனே நம்ம குழந்தைய பாக்கணும்னு நினைக்கறாங்க.. நாம லைப் ஸ்டார்ட் பண்ணலாமா?”, எனக் கேட்டான்.
“இல்ல… திடீனுன்னு…. கொஞ்ச நாள் போகட்டுமே….”, எனத் தயங்கித் தயங்கிக் கூறினாள்.
“சரி…. ஆனா நல்ல நாள் நீயே பாரு… நாம அந்த நாள விட்டுட்டோம்….”, எனக் கூறிவிட்டுப் படுத்துவிட்டான்.
துவாரகா மனதில் குழப்பங்கள் அதிகமாக இருந்தன. அவள் பிறந்து வளர்ந்த குடும்பத்திற்கும், இந்த குடும்பத்திற்கும் இருக்கும் வித்தியாசங்களை அவளால் தெளிவாகப் புரிந்துக் கொள்ள முடியவில்லை. சில சமயங்களில் தெளிவான பேச்சைப் போல தெரியும், சிறிது நேரத்தில் பைத்தியக்காரத் தனமாகத் தோன்றும். அவர்கள் மூவரையும் பற்றி அவளால் முழுதாக ஒரு முடிவிற்கு வர முடியவில்லை.
அவள் யோசிக்கும் சமயங்களெல்லாம் அவளின் மாமியார் அவள் யோசனையைத் தடைச் செய்வதுப் போல ஏதேதோ பேசிக்கொண்டு யோசிக்க விடாமல் செய்தார்.
தினம் அவள் கணவன் நாள் பார்த்தாயா என கேட்பதும், அவள் காரணம் கூறுவதுமாக சென்றது.
அதே வாரத்தில் அவர்கள் வீட்டில் குலதெய்வ வழிபாடு நடந்தது. அன்றிரவு அவனும் அவளை எடுத்துக்கொண்டான்.
அடுத்தடுத்து வந்த நாட்களில் எல்லாம் துவாரகாவின் அனுமதியும், விருப்பமும் இன்றி உறவு நடந்தேறியது.
அது அவளின் மனதை வெகுவாக பாதிக்கவும் செய்தது.
அவர்கள் இருவரையும் தேனிலவுக்காக வெளிநாட்டுக்கு அனுப்ப அவளின் மாமனார் ஏற்பாடு செய்திருந்தார்.
“அத்த நாங்க ஊருக்கு போகும் முன்ன எங்க அப்பா வீட்டுக்கு போயிட்டு எங்க பக்கம் சொந்தக்காரங்க வீட்டுக்கு போயிட்டு வந்துடறோம்.. ரெண்டு நாள் அங்க இருந்தா தான் எல்லார் வீட்டுக்கும் போயிட்டு வர முடியும் .. பெரிய மாமாகிட்ட பேசிட்டு சொல்லுங்க..”, என துவாரகா கூறியதும் அவள் மாமியார் முகம் சுருக்கினார்.
“இல்ல அவனுக்கு உங்க ஊரே பிடிக்கலியாம் துவாரகா .. போன தடவ போயிட்டு வந்துட்டு சொன்னான். இப்போ அங்க போகணும்னா என்ன சொல்வானோ தெரியல ..”, என மழுப்பினார்.
“இந்த பக்கம் எல்லாம் போயிட்டு வந்த மாறி தான் அங்கயும் போகணும் அத்த.. உங்களுக்கு தெரியாதது இல்ல.. அம்மா கேட்டுகிட்டே இருக்காங்க .. “, எனக் கூறினாள்.
“சரி நான் உங்க மாமனார் கிட்ட கேட்டுட்டு சொல்றேன் துவாரகா “, எனக் கூறிவிட்டு அவரும் வெளியே கிளம்பிவிட்டார்.
அன்றிரவு வீட்டிற்கு வந்ததும், “துவாரகா.. மாமாவும் உன் புருஷனும் அவசரமா சென்னை போற வேலை வந்துரிச்சி .. நாளைக்கு காலைல அவங்க கெளம்பணும். நீ வேணா உன் அப்பா வீட்டுக்கு போயிட்டு வாயேன் ரெண்டு நாள். அவன் ஊருல இருந்து வந்ததும் நீங்க வெளிநாடு போக சரியா இருக்கும் .. அங்க போயிட்டு வந்து வேணா உங்க ஊருக்கு போங்க .. நான் உங்கப்பா கிட்ட பேசிக்கறேன்..”, என முடிவாக கூறினார்.
அவளும் மனதில் எழுந்த வருத்தம் மற்றும் சந்தேகத்துடன் ஊருக்கு சென்று தனது உடைகள் சிலத்தை எடுத்து வரலாம் என்று புறப்பட்டாள்.
கனிமொழி அரசாங்க வேலை வாங்குவதற்காக தீவிரமாக படித்துக்கொண்டிருந்தாள் அந்த சமயத்தில். வேறு ஊரில் தங்கிப் படித்துக் கொண்டிருந்ததால் திருமணத்திற்கு பின் இருவரும் சந்தித்துக் கொள்ளவில்லை.
“ஜாக்கிரதையா போயிட்டு வாங்க…. வீட்ல அனுசரிச்சி இருந்துக்கணும் துவாரகா…. பெரியவங்க சொல்றத கேட்டு நடந்துக்க… வேலைய விட்டது நெனைச்சி வருத்தப்படாத…. அதான் அவங்க கம்பெனிய நீயும் பாக்கணும்னு சொல்லி இருக்காங்கல்ல….”, என பவானி தாயிற்குறிய விஷயங்களை சொல்லிக்கொண்டிருந்தார்.
“சரிம்மா…. நான் போயிட்டு வரேன்…”, என எதுவும் வீட்டில் காட்டிக்கொள்ளாமல் புறப்பட்டுச் சென்றாள்.
இருவரும் வெளிநாடு செல்ல வேண்டிய நாளும் வந்தது. அங்கே அவள் வேறொரு ஸ்ரீயை கண்டாள். எப்போதும் படபடப்பும், கோபமும், மனநிலைப் பாதிக்கப்பட்டவர்கள் நடந்துக் கொள்வது போன்ற செயல்பாட்டைக் கண்டதும் துவாரகா முழுதாக உள்ளுக்குள் அதிர்ந்துப் போனாள்.
அவன் அங்கே கேட்ட கேள்விகளும், அவன் நடந்துகொள்ளும் விதமும் துவாரகாவிற்கு ஜீரணம் செய்ய முடியாததாக இருந்தது.
“நீ என் வீட்ட பாத்து தானே என்னை கல்யாணம் செஞ்சிகிட்ட துவாரகா?”
“நான் பாத்து இருக்கேன்னு தான் சொன்னேன். அதுக்காகன்னு சொல்லவே இல்லைங்க…”
“என்னையும் என் சொத்தையும் பாத்து தானே உன்ன கல்யாணம் செஞ்சி குடுத்தாங்க…. அதுலாம் உனக்கு அவ்வளவு ஈசியா கிடைக்காது துவாரகா…..”, என மூர்க்கத்தனமாகப் பேசினான்.
“நான் பணத்த பாக்கற ஆள் இல்லைங்க… உங்க சொத்தையும் நான் பாக்கல…. வீட்ல செஞ்சி வச்ச கல்யாணம் இது. நானா உங்கள வந்து கல்யாணம் செஞ்சிக்க சொல்லி கேக்கல….”, என துவாரகா கோபமாக பதில் கொடுத்தாள்.
“அப்ப என்னை மயக்க தான் தாயத்து கட்டிட்டு வந்திருக்கியா? முன்ன உன் உடம்புல இல்லாத தாயத்து நீ உன் அப்பா வீட்டுக்கு போயிட்டு வந்தப்பறம் இருக்கு…. அதுக்கு என்ன அர்த்தம்?”, சம்பந்தா சம்பந்தமில்லாத கேள்விகளால் அவளை மனவுளைச்சலுக்கு ஆளாக்கினான்.
“சரி வா… சுத்தி பார்க்க போலாம்… வண்டி வந்திருக்கும் ….”, என எதுவுமே நடவாதது போல எழுந்துச் சென்றுவிட்டான்.
துவாரகாவிற்கு குழப்பம் தின்றுக் கொன்றது. லிஃப்ட் அருகில் வந்ததும் அவனுக்கு போன் வந்தது. அதைப் பேச சற்றுத் தள்ளிச் சென்றான்.
லிஃப்ட் வந்ததும் அவனை அழைக்க அவள் சென்றபோது அவள் காதுகளில், “இல்லப்பா… இப்பதான் வந்தோம்… அவளுக்கு டயர்டா இருக்குன்னு சொன்னா அதான் எதுவும் பண்ணல… நைட் தான்……”, என்ற வார்த்தைகள் விழுந்ததும் தலையைச் சுற்றிக்கொண்டு வந்தது.
எது எதை தந்தை மகனிடம் பேச வேண்டும் என்கிற வரையறையற்ற குடும்பமா இது? அப்போது என்னிடம் ஒரு வருடம் வேண்டாம் எனக் கூறிவிட்டு ஒரு வாரத்தில் நாள் பார்க்க கூறியதும் அவன் பெற்றோர் கூறித் தானா? என்ற எண்ணமே அவளுக்கு அருவருப்பாக இருந்தது.
அவனைத் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டுமென்று முடிவெடுத்து அமைதியாக இந்த பயணத்தில் உண்மை அறிந்துவிட வேண்டுமென்று நினைத்தாள்.
“சாரி துவாரகா… நான் என்னென்னமோ பேசிட்டேன்… எனக்கு உன்னை சந்தோஷமா வச்சிக்க தெரியல….. நீ எப்படி இருக்கணும்னு சொல்லு அப்படி செய்றேன்”, எனக் கூறியதைக் கண்டு வார்த்தை வர மறுத்தது.
“இல்ல.. பரவால்ல… நான் என்னை பாத்துக்கறேன்….”, என ஒருவாறு தன்னைச் சமாளித்துக் கொண்டுப் பேசினாள்.
அதன்பின் அவள் ஒரு வார்த்தை தானாக பேசவில்லை. அவனைக் கவனிப்பதை மட்டுமே செய்தாள். அவனாக அவ்வப்போது பேசுவதும் பின் அவளையும் பேச வைப்பதுமாக நேரம் சென்றது.
சாப்பிடும் அளவு தெரியாமல் உண்டுவிட்டு வாந்தி எடுப்பது வந்த முதல் நாளிலேயே ஆரம்பித்திருந்தது.
சாப்பிடும் இடம் வந்துவிட்டால், “நீ அந்த பக்கம் போய் சாப்பிட்டுட்டு வா… நான் எல்லாத்தையும் டேஸ்ட் பண்ண போறேன்”, எனச் சென்றால் அவள் சாப்பிட்டுவிட்டு ஒரு மணிநேரம் காத்திருந்தாலும் வரமாட்டான்.
அனைத்தையும் அளவில்லாமல் சாப்பிட்டுவிட்டு, அதே தட்டில் வாந்தியும் எடுத்துவிட்டு வேறு தட்டெடுத்துக் கொண்டுச் சாப்பிடச் செல்பவனை, அருகிலிருப்பவர்கள் எல்லாம் பார்த்துவிட்டு அவளையும் பார்க்கும் பார்வை, அந்த உணர்வை அவளால் வார்த்தைக் கொண்டு கூறமுடியவில்லை.
அடுத்த நாள் முடிந்தவரை அவனுடன் வார்த்தையாடாமல் இருந்து ஊரைச் சுற்றிப் பார்த்துவிட்டு அறைக்கு வந்தனர்.
தேனிலவு பயணம் என்பதால் ஓட்டல் அறையில் அதற்கான பிரத்யேக அலங்காரம் செய்யப் பட்டிருந்தது. அதைக் கண்டவன் அவளைப் பார்க்க, துவாரகா இன்று முடியாது என்று கூறியதும், அந்த அலங்காரத்தை ஆத்திரமாகக் கலைத்து எறிந்து விட்டு அறையை விட்டுச் சென்றவனைக் கண்டு மனதில் உதறல் எடுத்தது. மூர்க்கமாக நடந்துக் கொண்டால் எப்படி சமாளிப்பது என்ற பயம் அவள் மனதில் வேகமாக பரவியது….