31 – மீள்நுழை நெஞ்சே
“நீ ஏன் நான் சொல்றத கேக்க மாட்டேங்கற? நான் சொல்றத மட்டும் தான் கேக்கணும் துவாரகா….”, என அன்று காலையே கோபமாகப் பேசினான்.
“நான் இப்ப என்ன பண்ணேன்…. எனக்கு காலைல அந்த டிபனே போதும். அலைச்சல்ல சாப்பிட முடியாது. நீங்களும் சாப்பிட்டு சாப்பிட்டு வாந்தி எடுக்கறீங்க… அதான் வேணாம்னு சொன்னேன்…”
“உனக்கு வேணாம்ங்கற வரைக்கும் நின்னிருக்கணும். நீ ஏன் என் விஷயத்துல மூக்கு நுழைக்கற….”, எனக் கேட்டான்.
“உங்களுக்கு உடம்பு கெட்டாலும் நான் தான் பாக்கணும்…. இதுல என்ன தப்பு இப்போ?”, எனக் கட்டுப்படுத்தப்பட்ட கோபத்துடன் பேசினாள்.
அவன் அப்படியே அமைதியாகி விட சிறிது நேரம் எந்த பிரச்சனையும் இன்றி கடந்தது.
அவனுக்கு தாயிடம் இருந்து அழைப்பு வந்த பின் பொறுமையாக வந்து பேசினான்.
“இனிமே இப்படி எதிர்த்து கோபமா பேசாத துவாரகா… நான் எதாவது கோவமா சொன்னா கூட சரின்னு கேட்டுட்டு இனிமே அப்படி பண்ணமாட்டேன்னு சொல்லு… அப்பதான் நல்ல பொண்டாட்டிக்கு அழகு….”, என உபதேசிக்க ஆரம்பித்தான்.
“என்னால அப்படியெல்லாம் சொல்லமுடியாதுங்க… என் மனசுல படறத தான் பேசமுடியும்… “
“அப்போ நான் உன்ன இங்கேயே விட்டுட்டு போயிடுவேன் பாத்துக்க”, என மிரட்டினான்.
“நீங்க போனாலும் எனக்கு ஊருக்கு போயிக்க தெரியும்…. “, என அவள் கூறிய அரைமணி நேரத்தில் அவளது கைப்பையில் இருந்த பாஸ்போர்ட் அவனிடம் இருந்தது.
நாடு விட்டு நாடு வந்திறங்கியதும் அவரவர் பாஸ்போர்ட் அவரவரிடம் இருக்கட்டும் என அவன் தான் எடுத்துக் கொடுத்தான். இப்போது அவளிடம் எதுவும் கூறாமல், அவளுக்கு தெரியாமல், அவளது பாஸ்போர்ட் அவனே எடுத்துக்கொண்டான்.
அன்றிரவு தன் கைப்பையை சரிபார்க்கும் போது தான் அவளுக்கும் அது தெரிந்தது. அவனை வைத்துக்கொண்டு என்ன செய்வதென அவளுக்கு புரியவில்லை. அவன் உண்மையான இயல்பை அறிய வேண்டும் என்று பொறுமையாக இருந்தாள். அதற்கு தகுந்தாற்போல் அன்று நீர் விளையாட்டு அரங்கம் சென்றனர்.
அங்கே அவன் யாரென அவளுக்கு தெள்ளத்தெளிவாகப் புரிந்து போனது. அவன் மனதளவில் இன்னும் வளரவில்லை. உடலளவிலும் சரியான வளர்ச்சியில்லை என்பதை முன்பே அவர்களது கூடலில் அறிந்திருந்தாள்.
மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவனை தனக்கு திருமணம் செய்து வைத்திருக்கின்றனர். ஊரார், சுற்றத்தார் அனைவரிடமும் விசாரித்தும் கூட இப்படி ஒரு தவறு எங்கே நடந்திருக்கும் என்று அவளுக்கு புரியவில்லை. அதைப் பற்றி யோசிக்க இப்போது அவளுக்கு சரியான அவகாசமும் இல்லை.
அவனும், நானும் முதலில் நல்லபடியாக நாடு சென்று சேரவேண்டும். பின் எதுவானாலும் பார்த்துக்கொள்ளலாம் என அமைதியாக இருந்தாள்.
“துவாரகா…. எனக்கு பசிக்குது.. நான் சாப்பிட போறேன்.. நீ வரியா?”, என குதித்தபடி வந்து கேட்டான் அவள் கணவன்.
“எனக்கு ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ் போதும்…. “, என கூறிவிட்டு அமைதியாக சுற்றிலும் வேடிக்கை பார்த்தாள்.
“என்ன உக்காந்துட்ட.. போய் வாங்கிட்டு வா…. “, என அவன் அங்கிருந்த டேபிள்லில் அமர்ந்துவிட்டான்.
அவள் ஆயாசமாக அவனை பார்த்துவிட்டு அவன் கேட்டதை வாங்கி கொடுத்துவிட்டு, தனக்கும் வாங்கிக்கொண்டு அமர்ந்தாள்.
“நாம அந்த விளையாட்டுக்கு போவோமா?”, என அவர்கள் அருகில் இருந்த ஒரு நீர் விளையாட்டை பார்த்துவிட்டு கேட்டான்.
“என் ட்ரஸ் நனைஞ்சிடும். நான் வேற ட்ரஸ் கொண்டு வரல.. நீங்க விளையாடுங்க.. நான் இங்கயே இருக்கேன்….”, எனக் கூறினாள்.
“இது கருப்பு கலர் தானே.. நனைஞ்சாலும் ஒன்னும் தெரியாது… வா…. நான் மட்டும் விளையாட போனா அம்மா திட்டுவாங்க…”, என அவள் கைப்பிடித்திழுத்துக் கொண்டு சென்றான்.
அங்கே அவளது மெட்டி ஒன்று கழன்று நீரில் சென்றுவிட்டது. அவள் அதை நீரில் தேடிக்கொண்டிருந்தாள்.
“என்ன தேட்ற?”, எனக் கேட்டான்.
“என் மெட்டி ஒன்ன காணோம்”, என அவன் முகம் பார்க்காமல் கூறிவிட்டு தேடிக்கொண்டிருந்தாள்.
“நிஜமா போட்டிருந்தியா இல்ல விளையாட வராம இருக்க சொல்றியா?”, எனக் குதர்க்கமாகக் கேட்டான்.
“இங்க பாருங்க.. இந்த கால்ல ரெண்டு மெட்டி இருக்கு… இந்த கால்ல ஒன்னு தான் இருக்கு என்று காலை காட்டினாள்.
அவன் அப்போதும் நம்பாமல் அடுத்த விளையாட்டிற்கு சென்றான், அவளையும் உடன் இழுத்துக்கொண்டு.
அது நான்கு பேர் அமர்ந்து செல்லும் விளையாட்டு. இன்னும் இரண்டு பேர் வந்தால் தான் ரைட் (ride) செல்ல முடியும்.
அதற்காக காத்திருந்த நேரத்தில், “ஆமா போன விளையாட்டுல பாத்தேன்… இப்ப இல்ல.. நிஜமா தண்ணில தான் போயிரிச்சி போல…”, என அவளிடம் கூறினான்.
அதில் கோபம் வர, “நான் கீழ இருக்கேன்… இதுல நான் வரல”, என்று கீழே சென்று அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து விட்டாள்.
அவனும் பின்னாலேயே வந்து கத்த ஆரம்பித்தான்.
“உன்னால எனக்கு சந்தோஷமே இல்ல… விளையாட கூட வரமாட்டேங்கற… இதுக்கு தான் கல்யாணமே வேணாம்னு சொன்னேன். எல்லாம் இந்த அம்மாவால…. இப்ப நீ விளையாட வரப்போறியா இல்லையா?”, என கையை அழுத்தமாகப் பிடித்துக் கேட்டான்.
அந்த நேரத்தில் வேறொரு ஜோடி வந்து அதே விளையாட்டிற்காக அழைத்ததும் சரியென்று அவளும் அவனுடன் சென்றாள்.
“நான் கூப்பிட்டப்ப வரல… அந்த பொண்ணு வந்து கேட்டதும் வர… ஏன் இப்படி பண்ற?”, என மீண்டும் ஆரம்பித்தான்.
“மூனாவது மனுஷன் முன்னாடி நீங்க, நான் வர மாட்டேங்கறேன்னு சண்டை போட்டா எனக்கு தான் அசிங்கம் “
“நான் உனக்கு அசிங்கமா… நீ தான் ரொம்ப அழகோ…. “, என அவன் இன்னும் அநாவசியமான வார்த்தைகளை உதிர்த்தான்.
“அதான் விளையாடியாச்சில்ல….. முன்ன நீங்க கேட்ட விளையாட்டு அங்க இருக்கு போங்க… நான் இங்க உக்காந்திருக்கேன். எனக்கு தலைவலிக்குது”, என அவனை திசைத்திருப்பி அனுப்பிவிட்டு தன்னிலையை நினைத்துப் பார்த்தாள்.
எத்தனை சிரமங்களுக்கு பிறகு நடந்த திருமணம். தந்தையும் தாயும் இதை எப்படி தாங்குவார்கள்? எப்படி இவனை சரிசெய்வது? என்ற யோசனைகள் அவள் சிந்தனையில் சுழல ஆரம்பித்தது.
“துவாரகா…. துவாரகா….. “, என கத்தியபடி அவன் தூரத்தில் இருந்து அழைத்தான்.
அவள் வேறு யோசனைகளில் இருந்ததில் அந்த அழைப்பை கவனிக்கவில்லை. அவன் அருகில் வந்து கையைப் பிடித்ததும் பயந்து கையை இழுத்துக் கொண்டாள்.
“எதுக்கு இப்படி கைய இழுத்துக்கற?”
“யாரோன்னு பயந்துட்டேன்…”, எனத் தன்னை சரிசெய்தபடி கூறினாள்.
“என்னை விட்டா வேற யாரு வந்து உன்ன பிடிப்பா? வா வா…. அந்த சர்ப்ஃபிங் கேம் போலாம்”, என அழைத்தான்.
“எனக்கு அது பேலன்ஸ் பண்ண தெரியாது. நீங்களே போங்க”
“எது கேட்டாலும் முடியாதுன்னு சொல்லு…. ஊருக்கு போய் பேசிக்கறேன்…. “, எனக் கோபமாக சென்றவன், அங்கே நீரின் வேகத்திற்கு ஈடுகொடுத்து நிற்க முடியாமல் அணிந்திருந்த ஆடை களையவும் அவசரமாக சரியாக அணிந்தபடி வெளியே வந்தான்.
தூரத்தில் இருந்து அவனைப் பார்த்துக்கொண்டிருந்த துவாரகாவிற்கு அவன் நிலையும், அங்கே எழுந்த சிரிப்பொலியும் மனதை வேதனைக்குள்ளாக்கியது.
“தண்ணில வெளையாடினது போதும்…. நாம அந்த பாலம் தாண்டி அந்த பக்கம் போலாமா?”, எனக் கேட்டான்.
“ம்ம்….”, என அமைதியாக உடன் நடக்கத் தொடங்கினாள்.
“அந்த சர்ப்ஃபிங்ல என்னால நிக்க முடியல அதான் விழுந்துட்டேன்….”
“பழக்கமிருந்தா தான் நிக்க முடியும்… நீங்க ட்ரஸ் மாத்திக்கலாமே”, என மெல்ல கூறினாள்.
“எதுக்கு மாத்தணும். இப்படியே இருக்கேன்… முழுசா ட்ரஸ் போட்டுட்டு இருக்கறது தான் எனக்கு ரொம்ப கஷ்டம்”, எனக் கூறியபடி முன்னால் வேகமாக நடந்தான்.
அவன் கூறிய வார்த்தையில் அவளுக்கு திக்கென்றானது சில நொடிகள். அவள் சற்று நின்று பின் மீண்டும் நடக்க ஆரம்பித்தாள்.
அவனது வேகத்திற்கு இவளால் ஈடுகொடுத்து நடக்க முடியவில்லை. மெல்லவே நடந்து சென்று கொண்டிருந்தாள்.
“சீக்கிரம் நடந்து வா. என்ன நீ இவ்ளோ மெதுவா நடக்கற? உன் உடம்புல தெம்பு இருக்கா இல்லையா? அறுபது வயசு கெழவி மாதிரி இவ்ளோ மெதுவா நடக்கற….”
“இவ்ளோ வேகமா நடந்து என்ன பண்ண போறோம்? கொஞ்சம் மெதுவா எல்லாத்தையும் சுத்தி பாத்துட்டே போகலாம்…. ட்ரஸ் ஈரம் காயணும் இன்னும். வேகமா நடக்க முடியாது… “
“சீக்கிரம் போனா தான் சீக்கிரம் ரூம் போக முடியும்… போய் மருந்து சாப்பிடணும்”
“என்ன மருந்து?”, கூர்மையாகப் பார்த்தபடிக் கேட்டாள்.
“எப்பவும் சாப்பிடறது தான்….”, எனக் கூறிவிட்டு (rope slide) சென்றான்.
“வா இங்கிருந்து அந்த பக்கம் போலாம்”, என அவளையும் இழுத்து வரிசையில் நிற்க வைத்தான்.
“அந்த பொண்ணுங்கள எல்லாம் பாரு எப்படி ட்ரஸ் செஞ்சிருக்கு… இதுங்க எல்லாம் வேற மாதிரி பொண்ணுங்க….”, என அவர்கள் உடையை மேய்ந்தபடியே கூறினான்.
“ஒருத்தர் ட்ரஸ் பாத்து யாரையும் ஜட்ஜ் பண்ண கூடாது…. இந்த இடத்துக்கு அந்த ட்ரஸ் தான் சரி….”
“அப்போ நீயும் அப்படி ட்ரஸ் பண்ணுவியா?”
“இடத்துக்கு தகுந்த மாதிரி ட்ரஸ் பண்ணிக்கணும். அது டீசண்ட்டா இருக்கணும். அவ்வளவு தான்”
“இதுக்கு பேரு டீசண்ட்டா?”, என அவளிடம் பாய்ந்தான்.
“ஒரு பொண்ணோட ட்ரஸ் வச்சி பேசறது தப்பு…. நீங்க கூட தான் பாக்ஸரோட இருக்கீங்க…. அது வச்சி உங்கள வேற மாதிரி பேசினா நல்லா இருக்குமா?”
“நான் ஆம்பள…. என்னை யாரு எது பேசினாலும் எனக்கு ஒன்னும் இல்ல.. பொண்ணு தான் அடங்கி இருக்கணும்…. நீயும்….”, என அவன் ஏதோ ஆரம்பிக்கும் போது அவர்களது சுற்று வந்தது.
இருவரும் அந்த ரோப் ஸ்லைடரில் சென்றனர்.
அந்த சில நொடிகள் துவாரகாவிற்கு அங்கிருந்து வேறு எங்காவது பறந்து சென்றிட முடிந்திருந்தால் எங்கேனும் தூரமாக பறந்து தன்னை சீர் செய்ய தொடங்கியிருப்பாள்.
“பட்டர்ப்ளை…. நீங்க வந்தது பட்டர்ப்ளை வந்தது போலவே இருந்தது மேடம்… ரைட் என்ஜாய் செஞ்சீங்களா?”, என அங்கு ரைட் வரும் ஆட்களுக்கு ரோப் எடுப்பவன் கேட்டான்.
“என்ஜாய் பண்ணேன். தேங்க்யூ”, எனக் கூறிவிட்டு கீழே வந்தாள்.
“போயும் போயும் உன்ன பட்டர்ப்ளைன்னு சொல்றான்…. அதுக்கு வேற நீ தேங்க்ஸ் சொல்ற….”, என மீண்டும் ஆரம்பித்தான்.
“நான் ரைட் நல்லா இருக்குன்னு சொல்லி தான் தேங்க்ஸ் சொன்னேன். அவங்க வேலை வர எல்லார்கிட்டையும் எதாவது சொல்லி சந்தோஷப்படுத்த ட்ரை பண்ணுவாங்க …. “
“அப்ப நான் உன்ன சந்தோஷமா வச்சிக்கலையா?”
“அதான் உங்களால முடியலன்னு நேத்தே சொன்னீங்களே…. “
அவளை வெறித்து பார்த்தவன், “என் செருப்பு அந்த பக்கம் இருக்கு… போய் எடுத்துட்டு வந்துடு.. நான் பாத்ரூம் போறேன்”, எனக் கூறிவிட்டு நெடுநெடுவென அங்கிருந்துச் சென்றான்.
பாலம் கடந்து அந்த பக்கம் சென்று தான் ரோப் ரைடரில் இந்த பக்கம் வந்தனர். இப்போது மீண்டும் பாலம் கடந்து அந்த பக்கம் நடந்தே சென்று வரவேண்டும்.
துவாரகாவிற்கு அவன் மீதான கோபத்தை விட இயலாமையும், தன்மீதான கோபமும் அதிகமாக எழுந்தது.
இவனுடன் இருப்பதற்கு நடந்து விட்டு வரலாம் என்று அவளும் சென்று எடுத்து வந்தாள்.
அவள் வரும் போது அவன் பர்கர் உண்டுக்கொண்டிருந்தான். அவன் உண்பதை பார்க்கவே சகிக்க முடியாமல் வெறும் தண்ணீர் மட்டும் குடித்துவிட்டு ட்ரைவருக்கு போன் செய்தாள்.
“அண்ணா…. நாங்க இங்க முடிச்சிட்டோம். வந்து பிக்கப் பண்ணிக்கோங்க”
“எதுக்கு அதுக்குள்ள போன் பண்ண.. இன்னும் அந்த பக்கமெல்லாம் இருக்கு...”, என சாப்பிட்டபடி கத்தினான்.
“எல்லாத்தையும் பாத்தாச்சு…. போதும்.. ரூம் போகலாம் …. எனக்கு தலவலிக்குது”, எனக் காட்டமாக கூறிவிட்டு தலைக்கவிழ்ந்து படுத்துக்கொண்டாள்.