28 – ருத்ராதித்யன்
காரில் ரணதேவ்வும் ஆருத்ராவும் பேசியபடியே தேனி அருகில் வந்திருந்தனர்.
அப்போது ஆருத்ராவிற்கு வீட்டு வேலையாளிடம் இருந்து போன் வந்தது.
“சொல்லு கருப்பண்ணா….”
“பாப்பா… நம்ம குட்டி பைரவன காணோம்மா”, என தயங்கியபடியே கூறினார்.
“என்ன சொல்றீங்க? அங்க தான் இருப்பான். எதாவது சந்துல போய் புகுந்துட்டு இருப்பான் நல்லா பாருங்க…”, என தன் பதற்றம் மறைத்தபடி கூறினாள்.
“இல்ல பாப்பா… நீங்க கிளம்புனதுல இருந்து எல்லா இடத்துலையும் தேடிட்டோம். எங்கேயும் அவன காணோம். கொம்பன் வேற ஆக்ரோஷமா இருக்கான். என்ன பண்றதுன்னு தெர்ல… வீட்ட விட்டு வெளியே போயிருக்க வாய்ப்பு இல்ல”
“கொம்பன் கிட்ட போன் கொண்டு போங்க… பக்கத்துல எதாவது வேலி சந்துல புகுந்து தோப்பு பக்கம் போயிருக்கலாம்… நல்லா பாருங்க”, எனக் கூறி கொம்பனிடம் அருகில் உள்ள இடங்களில் அவனை தேடி போக சொல்லிவிட்டு போனை வைத்தாள்.
“என்னாச்சி சிங்கம்மா?”, ரணதேவ் கேட்டார்.
“பைரவ காணோம்னு சொல்றாங்க தனுப்பா…. அதான் கொம்பன்கிட்ட பக்கத்துல தோப்புல பாக்க சொல்லி இருக்கேன். எங்க போயிருப்பான்?”, ஆருத்ரா யோசனையுடன் பைரவ் எங்கடா போன என வாய்விட்டு கோட்டாள்.
“வவ்… வவ்….”, என்ற சத்தம் மெல்லமாக வந்தது.
“அண்ணா கார் நிறுத்துங்க”, என கூறிவிட்டு டிக்கியை திறக்க கூறினாள்.
அங்கிருந்த பைகளை எடுத்துவிட்டு பார்த்தால், சுகமாக படுத்துறங்கி கொண்டிருந்தான் நம் பைரவ்.
“டேய் கேடி பையா… நீ எப்படா கார்ல ஏறின?”, என அவனை செல்லமாக திட்டியபடியே தூக்கினாள்.
“வூஊஊஊ….”, என தூக்கத்தில் ஊளையிட்டு விட்டு அவளது தோளில் தலைசாய்த்து மீண்டும் உறங்கினான்.
“பாத்தீங்களா தனுப்பா இவன”, என ரணதேவ்விடம் காட்டினாள்.
“கொம்பன்கிட்ட இருந்து தப்பிச்சி வந்து கார்ல ஒளிஞ்சிருப்பான் திருட்டுபடவா… கருப்பனுக்கு போன் பண்ணி சொல்லிடலாம்”, என போன் செய்தார்.
“கருப்பா… பைரவ் கார்ல இருக்கான். அவன் உள்ள இருக்கறது கூட பாக்காம யாரு பைய அடுக்குனது? மத்த எல்லாரையும் ஜாக்கிரதையா பாத்துகோங்க… வந்து பேசறேன்…”, என ஒரு அதட்டல் போட்டுவிட்டு போனை அணைத்தார்.
“இவன நம்மகூடவே கூட்டிட்டு போலாம்னு நான் நினைச்சேன் ஆனா புதுசா பழக்கினா மத்த எல்லாத்துக்கும் வருத்தம் வரும்னு விட்டுட்டேன். இப்ப இவனே ஏறி வந்துட்டான்… நம்ம நுவலிகிட்ட காட்டி காட்ட பழக்க சொல்லணும் இங்க இருக்கற வரைக்கும்….”,என பைரவின் தலையைத் தடவி கொடுத்தபடி பேசினாள்.
“எத்தன நாள் அங்க தங்கபோற சிங்கம்மா…?”
“அந்த டேம் ப்ராஜெக்ட் மேகமலைக்கு பக்கத்துல தான் கொஞ்ச நாள் நடக்கும் தனுப்பா. நான் இங்க இருந்தா வேலைய கொஞ்சம் வேகபடுத்தலாம்னு தான் வந்தேன். தவிர நம்ம கட்டின சின்ன டேம்க்கு பாம் வைக்க வந்திருக்காங்க… அது விஷயமாவும் பாக்கணும்”
“பாம் ஆ? யாரு சிங்கம்மா?”
“வேற யாரு….இப்ப நம்ம பண்ற ப்ராஜெக்ட் பண்ணக்கூடாதுன்னு நினைச்சவங்க தான்… “
“ஏன்டா சிங்கம்மா அவனுங்கள எதுவும் பண்ணாம அமைதியா விட்டுட்டு இருக்க?”
“அந்த அதிபன் நல்ல திறமசாலி தனுப்பா…. ஆனா நல்ல பழக்க வழக்கம் தான் ரொம்பவே கம்மி… அதை ஒழுங்கு பண்ணா இன்னும் நல்லா வருவான். நல்ல விஷயங்களும் பண்ணுவான். ஆனா அவன் தம்பி விதுரன் எதுக்கும் சரிபட்டு வரமாட்டான். அவனுக்கு இல்லாத கெட்ட பழக்கமே இல்ல… சரியான வழிகாட்டுதல் இல்லாத பசங்க… எனக்கு நீங்க கிடைச்சீங்க.. அவங்களுக்கு யாரும் கிடைக்கல ..”
“இப்ப நீ தான் பண்றன்னு அவங்க இன்னும் கண்டுபிடிக்கலையா?”
“இல்ல தனுப்பா… சின்ன சின்ன கம்பெனியா நிறைய இதுல வேலை பண்ணுது. அப்படி தான் ஒரு இருபது கம்பெனிய நம்ம எடுத்து கைட் பண்ணி பண்ணிட்டு இருக்கோம்”
“இது வேலைய கத்துகுடுக்கறது தானே சிங்கம்மா..?”
“நல்ல விஷயத்த கத்துக்குடுக்கலாம் தனுப்பா… இது போல மக்களுக்காக வர்ற ஒன்னு ரெண்டு ப்ராஜெக்ட்ல நாம லாபம் பாக்க கூடாது…. இதனால ஏற்பட்ற நன்மைல கிடைக்கற புண்ணியம் இதுல வேலை செய்யற அத்தனை பேருக்கும் போய் சேரும்… அதுவே போதும்”
“ம்ம்… எப்ப இருந்து டா நீ பாவம் புண்ணியம் பத்தியெல்லாம் யோசிக்க ஆரம்பிச்ச?”, என சிரித்தபடியே கேட்டார்.
“சரியா சொல்லணும்னா…. நம்ம அம்புவிக்கு வந்த அப்பறம் தான் தனுப்பா…. தவிப்போட இருந்த மனசு, நம்ம பவள லிங்கத்த யாகத்துல வச்ச அன்னிக்கு மனசுக்கு கொஞ்சம் அமைதியாச்சி.. அதுக்கப்பறம் நிறைய யோசனைகள் வந்தது. அதுல ஒன்னா இதுவும் வச்சிக்கலாம்”
“தாத்தா உன்னை கட்டாயப்படுத்தி அம்புவி கூட்டிட்டு வந்தது இன்னும் வருத்தமாடா?”
“இல்ல தனுப்பா… இவன் பொறந்தது அம்புவில தானே … இவன் பொறந்த அப்பறம் நல்லாவே போகுது.. நிறைய யோசனை இவன் குடுக்கறான்… நிறைய யோசிக்க வைக்கறான்… இந்த குட்டி சாக்லேட்குள்ள நிறைய விஷயம் இருக்கு தனுப்பா… கொம்பன விட எனக்கு இவன ரொம்ப அதிகம் பிடிச்சி போச்சி….”, என பைரவிடம் வந்து நின்றது அவர்களின் உரையாடல்.
அவர்களும் மேகமலையினை ஏற ஆரம்பித்திருந்தனர்.
வளைவு பாதைகளில் பைரவ் ஆருத்ராவிடமும் ரணதேவ்விடமும் உருண்டபடி இருந்தான். தூக்கம் கலைந்து எழுந்து பார்த்தான்.
பனி போர்த்திய சாலையை பார்த்து வூஊஊ… கீ… ஹீ…. என மாற்றி மாற்றி சத்தம் குடுத்தபடி ஆருத்ராவின் மேல் ஏறி ஜன்னல் அருகில் வந்து கண்ணாடியில் மூக்கை இடித்துக்கொண்டு வேடிக்கை பார்த்தது.
“டேய்… என்னடா நான் என்ன உனக்கு கார்பெட்டா? இப்படி ஏறி இறங்கிட்டு இருக்க?”, ஆருத்ரா அவனை செல்லமாக கடிந்துக்கொண்டாள்.
“விடு சிங்கம்மா… முதல் தடவ வெளி உலகத்த பாக்கறான்…. அனுபவிக்கட்டும்…. அனுபவம் தான் தேவை”, என ரணதேவ்வும் அவனை தன் கைகளில் எடுத்து தன் பக்க ஜன்னலில் சிறிது வேடிக்கை காட்டினார்..
அனைத்தையும் பைரவனும் ஆச்சரியமாக கண்களை அகல விரித்து பார்த்தது. சந்தோஷத்தில் இருவரின் முகத்திலும் மாறி மாறி நக்கி தன் சந்தோஷத்தை வெளிபடுத்தியது.
“டேய் டேய்… நக்காத டா”, என ரணதேவ் அவனை தடுத்தும் கேளாமல் அவரின் வயிற்றில் ஏறி அவர் கழுத்தை முன் கைகளால் பிடித்து கழுத்தை நக்கினான் நம் பைரவ்.
“சொல்லுங்க கருப்பண்ணா…”, போன் எடுத்து பெயர் பார்த்துவிட்டு பேசினாள்.
“……..”
“சரி…வீடியோ கால் வரேன்… கொம்பனுக்கு காட்டுங்க”, எனக் கூறி வைத்துவிட்டு வீடியோ கால் செய்தாள்.
“கொம்பா….இங்க பாரு… பைரவ் என்கூட தான் இருக்கான்… நீ கவலபடாத… நான் பத்திரமா கூட்டிட்டு வரேன்… நாங்க வர்ற வரைக்கும் அங்க எல்லாரையும் நீ பத்தரமா பாத்துக்க… நான் தினம் உங்க எல்லார்கிட்டயும் பேசறேன்”
கொம்பன் அவள் பேசுவதையும், பைரவனையும் மாறி மாறி பார்த்துவிட்டு தலையாட்டியது. உடன் பஞ்ச வர்ண கிளிகள் “சரி சரி” என கூறி மற்ற மிருகங்களிடம் விஷயத்தைப் பகிர்ந்தது.
“இவங்க ஒத்துமை தான் தனுப்பா எனக்கு இப்ப வரை ஆச்சரியமும் ஆசையாவும் இருக்கு”, என மற்ற விலங்குகள் தங்களுக்குள் உரையாடிக்கொண்டு தங்கள் வேலையை கவனிப்பது கண்டு கூறினாள்.
“நம்ம வளக்கறது அப்படி தானே சிங்கம்மா….. அவங்க மேல நீ காட்ற அன்பு தான் இத்தனைக்கும் ஆணிவேர்…. இந்த விஷயத்துல நான் சொல்லி குடுக்காம நீயே கத்துகிட்டது…. இவங்க மேல நீ காட்ற அன்பும், அக்கரையும் எனக்கு நிறைவா இருக்கு…. ஒவ்வொரு உயிரும் மதிக்கப்படணும்….. அன்பு காட்டப்படணும்…. “, எனக் கூறிவிட்டு கொம்பனை கூப்பிட்டார்.
“கொம்பா…. வீட்டையும் தோட்டத்தையும் மத்த எல்லாரையும் நீ தான் பாதுகாக்கணும்…. ஒரு நாள் உங்க எல்லாரையும் இங்க கூட்டிட்டு வரேன்… ஜாக்கிரதையா இருங்க”, எனக் கூறிவிட்டு அழைப்பை வைத்தார்.
“எல்லாரையும் இங்க கூட்டிட்டு வந்தா செமயா இருக்கும் தனுப்பா…. அந்த யாத்ரா பொண்ணு கூட பாக்கணும்னு சொன்னா… அவளுக்கும் மிருகம் பறவைகள் எல்லாம் ரொம்ப பிடிக்குமாம்”, என பேச்சில் மீண்டும் யாத்ரா வந்தாள்.
“ஒரு நாள் கூட்டிட்டு வரலாம் சிங்கம்மா… அந்த பொண்ணையும் நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு போலாம்… “, என மனதிற்குள் சந்தோஷப்பட்டபடி கூறினார்.
அங்கே அர்ஜுனும், யாத்ராவும் கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் மகதன் இருந்த அதே பண்ணை வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர்..
மயக்கத்தில் இருந்து முதலில் கண்விழித்த அர்ஜுன் யாத்ராவை கண்களால் தேடினான்.
இருட்டில் எதுவும் தெரியவில்லை… சிறிது இருட்டு கண்களுக்கு பழக்கமானதும் அருகில் யாத்ரா படுத்திருப்பது தெரிந்து ஊர்ந்தபடி அருகில் சென்று அவளை எழுப்பினான்.
“ரது… ரதுமா….”, என தோள்களால் இடித்தான்..
“ம்ம்….”, என மெல்லிய முனகலுடன் கண்திறந்தாள் யாத்ரா.
“செழியன்… ஒரு டீ போட்டுட்டு வந்து எழுப்புங்க…. “, எனக் கூறிவிட்டு மீண்டும் கண்மூடினாள்.
“ரது டார்லிங்.. நம்ம ஹனிமூன் வந்திருக்கோம்னு நினைச்சியா? எழுந்திரி…. கண்மயா எங்கன்னு பாக்கணும்”, என மெல்ல அவள் காதருகில் குனிந்து பேசினான்.
“ஆஆ….. இதுக்கு தான் மெடிக்கல் பீல்ட் ஆளுங்க வில்லனா வரக்கூடாதுன்னு சொல்றது… நம்மல ஈஸியா கடத்திடறாங்க… “, என யாத்ரா முணுமுணுத்தபடி அர்ஜுன் அருகில் தன் காதை கொண்டு சென்று அவள் தோடை கடிக்க கூறினாள்.
“ஏன் டார்லிங் கட்டி போட்டிருக்க நிலைமைல உன் காத கடிக்க சொல்றியே …. கொஞ்சம் பொறு.. கட்ட அவுத்துட்டு வந்து….”
“செழியன்.. நம்ம ஹனிமூன் வரல…. இங்கிருந்து போகணும்.. அதுக்கு முன்ன அந்த பால்டப்பாவ கொல்லணும்…. அந்த ப்ளாக் தோடு மட்டும் கடிங்க…. “, என அவனிடம் நெருங்கி வந்தாள்.
“ரது பேபி…. ரொம்ப என்னை நீ கஷ்டப்படுத்தற… இதுக்கெல்லாம் உனக்கு பனிஷ்மெண்ட் கண்டிப்பா குடுக்காம விடமாட்டேன்”, என அவளை வறுத்தபடியே அவளின் முன்யோசனையை மெச்சி கொண்டு அவள் சொன்னது போல செய்தான்..
“எவ்ளோ நேரம் இப்டியே படுத்திருக்கறது… இது என்ன இடம்? “, யாத்ரா சுற்றிலும் உருண்டு பார்த்தும் ஒன்றும் புரியவில்லை என அவனிடம் கேட்டாள்.
“இது எதாவது அனிமல் போட்டு வைக்கற ரூம் போல… அந்த பக்கம் கூண்டு இருக்கு…. அமைதியா இருக்கறத பாத்தா நாம ஊர விட்டு ரொம்ப தள்ளி இருக்கணும்… பக்கத்துல எந்த சத்தமும் காணோம்…. எவனாவது வருவான் பாத்துக்கலாம்….”, என அர்ஜுன் அவள் தோளில் தலைச் சாய்த்துக் கொண்டு பேசினான்.
“அதுக்குன்னு இப்படி வந்து படுத்துட்டு பேசணுமா?”, யாத்ரா முறைத்தபடி கேட்டாள்.
“கொஞ்ச நேரம் பேபி…. உன்கிட்ட இருந்து கொஞ்சம் எனர்ஜி வந்ததும் அந்த பக்கம் நகர்ந்துக்கறேன்”, என நன்றாக அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்துக் கொண்டான்..
“செழியன்….”, பல்லை கடித்தபடி அவள் அழைக்கவும் யாரோ உள்ளே வரவும் சரியாக இருந்தது.
இரண்டு பேர் உள்ள வந்து விளக்கை போட்டனர்.
அர்ஜுனும் யாத்ராவும் அரைகண்ணில் அனைத்தையும் கவனித்தபடி மயக்கமாக இருப்பது போல கிடந்தனர்.
“இதுங்கள இப்ப என்ன பண்றது?”
“பாஸ் சொல்லுவாரு…. எழுப்பி சோறு குடுத்துட்டு வா…. நான் அந்த பக்கம் இருக்க பொண்ண பாத்துட்டு வரேன்….”, என்றபடி ஒருவன் தடுப்புக்கு அந்த பக்கம் சென்றான்.
“டேய் அதுல ஒன்னு தான் பொண்ணு….”
“தெரியும் டா…. “
“தெரிஞ்சா சரி….”, என வக்கிரமாக இருவரும் நகைப்பது எரிச்சலை கொடுத்தது.
“இது என்னா இரண்டும் ஒன்னா படுத்து இருக்குது… தனி தனியா தானே போட்டாங்க”, என அர்ஜுன் யாத்ராவை பிரித்து படுக்க வைத்தான்.
“மாப்பு.. எதுக்கும் இன்னும் மயக்கம் தெளியல….”
“இங்கயும் தான் மச்சா”
“சரி அப்பறம் வந்து பாப்போம்”, என இருவரும் விளக்கை அணைக்காமல் சென்றனர்.
“அவன நான் உயிரோட விடப்போறது இல்ல ரது பேபி.. நம்மல இப்படி பிரிச்சிட்டு போயிட்டான்”, என அர்ஜுன் கூறவும் அருகில் கண்மயா வந்து சிரிப்பது கேட்டது.
“மாயா….. ஆர் யூ ஆல்ரைட்?”, யாத்ரா அவசரமாக எழுந்து கேட்டாள்.
“கட்ட நீங்களே பிடிச்சிட்டீங்களா யாத்ரா?”, கண்மயா ஆச்சரியமாக கேட்டாள்.
“அதுல்லாம் எப்பவோ பிரிச்சிட்டோம்”, என அர்ஜுனும் எழுந்து அமர்ந்தான்.
“இது என்ன இடம் கண்மயா?”
“தெர்ல யாத்ரா…. ஆனா நாங்க முதல் லேப்ல இருந்து கிளம்பினப்ப கர்நாடகா தான் போக சொன்னான்…. அந்த இடமா இருக்க வாய்ப்பு இருக்கு….. குளிர் அதிகமா இருக்கு……நல்ல காத்தும் இருக்கு…..”,என தன் அனுமானத்தை கூறினாள்.
“அப்ப இந்த ரூம்?”, அர்ஜுன்.
“மிருகங்கள் அடைச்சி வைக்கற இடம்…. அவன் டெல்லி பக்கம் இப்படியொரு ரூம் செட் பண்ணி வச்சிட்டு இருந்தது பார்த்தேன்”
“சரி….. அப்ப நம்ம பசங்க சீக்கிரமே வந்துடுவாங்க….”, என யாத்ரா கை கால்களை நன்றாக நீட்டி படுத்தாள்.
“சரி கண்மயா நீ போய் அங்கயே படுத்திரு…. சகஸ்ரா ஜாக்கிரதை… நாங்க இங்கயே படுத்திருக்கோம்… மறுபடி வந்து எழுப்பறப்ப பாத்துக்கலாம்….”, என அர்ஜுனும் கட்டுக்களை கட்டி இருப்பது போல கயிற்றை சுற்றி கொண்டு யாத்ரா அருகில் படுத்தான்..
இங்கே நந்துவும் கதிரும் சர்வேஸ்வரனுடன் பதற்றமாக இருந்தனர்…..