28 – வலுசாறு இடையினில்
“நீங்க?” , என வேல்முருகன் யோசனையுடன் பார்த்தான்.
“பானு பேச சொன்னப்ப உங்ககிட்ட பேசினது நான் தான். உங்க எல்லாருக்கும் ரொம்ப நன்றி.. ரொம்ப நாளா தேடிக்கிட்டு இருந்த ஆள நீங்க இங்க லாக் பண்ணது ரொம்ப சந்தோஷம்.. “, எனக் கூறி அனைவரிடமும் கைக்குலுக்கிக் கொண்டான் தன்ய கிருஷ்ணன்.
“வாணி அத்தையோட புருஷனா நீங்க?” , என வர்மன் கேட்டான்.
“ஹாஹாஹா.. என்னை பாத்தா அப்படியா வயசான மாதிரி தெரியுது? நான் அவரோட டீம்ல இருக்கேன். நார்காட்டிக்ஸ் டிபார்ட்மெண்ட்..”, எனக் கூறித் தனது ஐடி கார்ட் காட்டினான்.
“வணக்கம் ஆபீசர் சார்..”, என வட்டி வணக்கம் வைத்தான்.
“நேத்து நான் இங்க வந்ததும் உங்கள தூக்கிட்டு வர சொல்லி பாட்டி ஹெல்ப் கேட்டாங்க.. அதான் உங்கள தூக்கிட்டு வந்தேன்.. பை த வே .. நைஸ் மீட்டிங் யூ ஆல்..”, என புன்னகையுடன் பேசினான்.
“நல்ல போலீஸ்.. நீங்களே கடத்திட்டு வந்தா நாங்க யார்கிட்ட போய் கம்ப்ளைண்ட் பண்றது?”, என வட்டி கேட்டான்.
“நீங்க பொண்ண தூக்க ப்ளான் பண்ணீங்க .. நான் மாப்ள ஃப்ரெண்ட தூக்கிட்டு வந்தேன்.. முறையா கல்யாணம் பண்ணி தான் பொண்ண கூட்டிட்டு போகணும் பாஸ் ..”, எனக் கூறினான்.
“ஹாஹாஹா.. ரொம்ப நன்றி.. நீங்க இவன தூக்கிட்டு வந்ததால தான் எங்களுக்கும் வேலை ஈஸியா முடிஞ்சது..” , என வர்மன் அவனுக்கு நன்றி கூறினான்.
“ரொம்ப சந்தோஷம் மச்சான்.. ஏன் தூக்கிட்டு வந்தீங்கன்னு ஒருத்தர் கூட எனக்காக பேசல”, என வட்டிப் போலியாக கண்ணீர் வடித்தான்.
“உங்களுக்காக நான் இருக்கேன் மிஸ்டர். வட்டி.. பட் எனக்கு ஒரு உதவி நீங்க செய்யணும்..”, எனக் கூறி அவன் முகத்தைப் பார்த்தான்.
“தூக்கிட்டு வந்தவருக்கு இருக்க பாசம் கூட உங்களுக்கு இல்லாம போச்சே டா.. “, என வட்டி மற்ற இருவரையும் திட்டிவிட்டு, “சொல்லுங்க ஆபிசர் .. என்ன உதவி செய்யணும்?”, என கிருஷ்ணனிடம் கேட்டான்.
“அந்த செங்கல் வீடு தோப்பு எல்லாம் கரெக்ட்-ஆ எங்க ஆளுங்க போயிட்டாங்க.. ஆனா அவங்க மரகுடோன் எதுன்னு மட்டும் இன்னும் சரியா தெரியல.. அது மட்டும் எங்க இருக்குன்னு கொஞ்சம் எடத்த காட்டிட்டு வரீங்களா ?”, எனக் கேட்டான்.
“கண்டிப்பா.. அதுக்கு முன்ன ஒரு வாய் தண்ணி குடிச்சிக்கறேன் ஆபிசர்”, என கோதையிடம் தண்ணீர் வாங்கிப் பருகிவிட்டு தன்யனின் ஆளுடன் அங்கிருந்துக் கிளம்பினான்.
“சார்..”, என வேல்முருகன் அழைத்தான்.
“சார் எல்லாம் வேண்டாம்.. பேர் சொல்லியே கூப்பிடுங்க வேல்முருகன்..”, எனச் சிரித்தபடிக் கூறினான்.
“அந்த ஆள எப்ப அரெஸ்ட் பண்ணுவீங்க கிருஷ்ணன் ?”, எனக் கேட்டான்.
“அவன் பொண்ணு இங்க வந்துட்டா.. அவனும் வந்ததும் கோவில்ல வச்சி அரெஸ்ட் பண்ணிடுவோம்.. அவங்க எஸ்கேப் ஆகாம இருக்க உங்க ஹெல்ப் எல்லாம் கண்டிப்பா வேணும்.. சோ .. ”, எனக் கூறிவிட்டுச் சிரித்தான்.
“கண்டிப்பா கிருஷ்ணன்.. இத்தன நாளா எங்கள எல்லாம் டார்ச்சர் பண்ணதுக்கு நாங்களும் கொஞ்சம் கவனிக்கணும்ணு ஆசை படறோம்..”, என வர்மன் காப்பை மேலே ஏற்றியபடிக் கூறினான்.
“ஹாஹாஹா .. உயிரோட குடுத்துடுங்க.. அப்ப தான் எங்களுக்கும் பரவால ..” , எனக் கூறிவிட்டு அங்கிருந்துச் சென்றான்.
நங்கை வீட்டில் புது மனிதர்கள் நிறைய பேர் இருந்தனர். இளவேணி அனைவரையும் சந்தேக பார்வைக் கொண்டுப் பார்த்தபடி உள்ளே வந்தாள்.
“வா வேணி.. அப்பா எங்க அவங்க கூட வராறா ?”, என இரத்தினம் கேட்டார்.
“ஆமா மாமா.. என்ன புதுசா நெறைய பேர் இருக்காங்க..”, எனக் கேட்டாள்.
“எல்லாம் என் பொண்டாட்டி சொந்தம் .. வா பொண்ணு.. இரத்தினம்.. நேரமாச்சி நம்ம கோவிலுக்கு போலாமா?”, என ஏகாம்பரம் கேட்டார் .
“போலாம் .. வீட்ல பெரியவங்க எல்லாம் சரின்னு சொன்னா ஒவ்வொருத்தரா கெளம்பலாம் .. “, எனக் கூறிவிட்டு வேம்பு பாட்டியை பார்த்தார் இரத்தினம்.
வேம்பு பாட்டி இரண்டு மகன்களையும் உள்ளே அழைத்துச் சென்றுக் குசுகுசுவென பேசிவிட்டு முன்னே செல்லும் படி அனுப்பி வைத்தார்.
ராஜனின் அறையில் தான் வாணியின் கணவர் வித்யாதரன் படுத்து இருந்தார்.
வாணி அவரை எழுப்பிக் கொண்டு இருந்தார்.
“ஏங்க.. எந்திரிங்க .. நேரம் ஆச்சி.. என் பெரியம்மா வந்தா அவ்வளவு தான்..” , எனக் கணவனை எழுப்பிக் கொண்டு இருந்தார்.
“இன்னும் கொஞ்ச நேரம் வாணி .. நைட் லேட்-ஆ தானே வந்தேன்.. தூங்க விடுடி..” , எனத் தூக்கத்தில் உளறினார் வித்யாதரன்.
“இன்னும் கொஞ்ச நேரமா? இது நம்ம வீடு இல்ல.. மொதல் எந்திரீங்க.. போய் குளிச்சிட்டு சீக்கிரம் வாங்க.. எல்லாரும் கோவிலுக்கு கெளம்பிட்டு இருக்காங்க..” , எனக் கணவனை எழுப்பி அமரவைத்து உலுக்கினார் வாணி.
கஷ்டப்பட்டுக் கண் திறந்து, அருகில் ராஜன் உறங்குவதைப் பார்த்துவிட்டு, “கல்யாண வீட்டுக்காரனே இன்னும் தூங்கறான்.. என்னை ஏன்டி எழுப்பற?”, என எரிச்சலுடன் கேட்டார்.
“அவனுக்கா கல்யாணம்? அவன அவங்க அம்மா அப்பா வந்து பள்ளி எழுச்சி பாடி எழுப்புவாங்க.. நீங்க எந்திறீங்க.. எவ்ளோ வேலை இருக்கு”, எனத் திட்டிவிட்டு வெளியே சென்றார்.
“மனுஷன கொஞ்ச நேரம் தூங்க விடமாட்டீங்களே ..”, என முனகியபடி அவர் குளிக்கச் சென்றார்.
இளவேணி ஒவ்வொரு இடமாக நடந்துக் கொண்டு அங்கிருந்தவர்களின் நடவடிக்கைகளைப் பார்த்துக்கொண்டு இருந்தாள்.
அவளை அறியாமல் நிறைய கண்கள் அவளைக் கண்காணித்துக் கொண்டு இருந்தது. எல்லாம் சரியாக நடப்பது போல இருந்தாலும், ஏதோ தவறு நடக்கிறது என்று அவளது உள்மனம் எச்சரித்துக் கொண்டே இருந்தது.
தன்ய கிருஷ்ணன் நேராக செங்கல்வராயன் மரகுடோனிற்குச் சென்று அங்கே கட்டி வைக்கப்பட்டு இருந்த பள்ளி தலைமை ஆசிரியரை விடுவித்து பாதுகாப்பில் வைத்தான்.
வட்டி காட்டிய அனைத்து இடங்களிலும் தனது ஆட்களை சோதனைச் செய்யக் கூறி அங்கிருந்தப் போதைப் பொருட்களைக் கைப்பற்றினர்.
“ரொம்ப நன்றி வட்டி.. இவ்ளோ ஸ்டாக் இங்க இருக்கும்ன்னு நாங்க நெனைக்கல.. கீப் அப் யுவர் வொர்க் ஆல்வேஸ் ..”, என அவனிடம் கூறிவிட்டு எல்லா இடத்தையும் அவனது கட்டுப்பாட்டுக்கு கீழ் கொண்டு வந்தான்.
“இவங்கள எவ்ளோ வருஷமா நீங்க தேடிக்கிட்டு இருக்கீங்க ஆபிசர்?”, என வட்டி கேட்டான்.
“இவங்க எல்லாம் எங்க கண்ணு முன்னாடி தான் இருப்பாங்க வட்டி. ஆனா ஆதாரம் இருந்தா மட்டும் தான் அரெஸ்ட் பண்ண எங்களுக்கு அதிகாரம் இருக்கு. சந்தேகத்தின் பேர்ல அரெஸ்ட் பண்ணாலும் இவங்க உடனே வெளிய வந்துடுவாங்க.. வெளிய வராத அளவுக்கு பெரிய விஷயம் கெடைச்சா தான் சட்டத்துக்கு முன்ன இவங்கள குற்றவாளின்னு நிரூபிக்க முடியும்..”, எனப் பேசிக்கொண்டு இருவரும் நடந்தனர்.
“இதுக்கு தான் நாங்க எல்லாம் அவங்க தான் செஞ்சாங்கன்னு தெரிஞ்ச உடனே வச்சி தொவைக்கறது … “, என வட்டி கூறினான்.
“பஞ்சாயத்து வேற, கோர்ட் வேற வட்டி.. இங்க இன்னும் மனுஷங்க சத்தியம் நியாயம் எல்லாம் இருக்குன்னு நம்பி கட்டு படறாங்க.. சிட்டில இப்ப எல்லாமே காணாம போயிக்கிட்டு இருக்கு..”, என மனதில் எழுந்த வருத்தத்துடன் கூறினான்.
“உங்களுக்கும் நம்ம ஊர்லயே பொண்ணு பாத்து கட்டி வச்சிடறோம் .. நீங்களும் எங்க ஊருகாரர் ஆகிடுங்க.. இங்க எல்லாம் இன்னும் 1960ல தான் நெறைய பேரு இருக்காங்க.. வந்து நீங்களும் கொஞ்சம் இந்த ஊர மாத்துங்க.. “, என வட்டி அவனை கேலி செய்தான்.
“ஹாஹாஹா.. நல்ல அடக்க ஒடுக்கமான பொண்ணு இருந்தா சொல்லுங்க”
“வேம்பு பாட்டி இருக்க ஊர்ல அடக்க ஒடுக்கமான பொண்ணுக்கு நீங்க சுடுகாட்டுக்கு தான் போகணும் ஆபிசர்..”, என வட்டி கூறியதும் கிருஷ்ணன் அவனைச் சிரித்தபடி அடிக்கத் துரத்தினான்.
“இன்ஃபாக்ட் .. எனக்கு அந்த பாட்டி மாதிரி ஒரு பொண்ணு தான் வேணும்.. இந்த ஊர்ல இருந்தே இவ்ளோ தெளிவா இருக்காங்க.. ஐ லவ் தட்”, எனக் கூறினான்.
“உங்களுக்கு ஓகேன்னா சொல்லுங்க அந்த பாட்டிக்கு உங்கள ரெண்டாம் தாரமா கட்டி வச்சிடறேன்.. ஆனா ஒலக்கை எடுத்தா தான் நம்ம உசுருக்கு உத்ரவாதம் இல்ல”, என மாறி மாறி பேசியபடி நங்கை இல்லம் வந்துச் சேர்ந்தனர்.
“நான் உள்ள வரமுடியாது..”, என வட்டி கூறினான்.
“நானும் உள்ள போக கூடாது..”, என கிருஷ்ணன் கூறினான்.
“அப்ப வாங்க அங்க ஒரு குட்டி சுவரு இருக்கு அங்க நிக்கலாம் “, என வட்டி அவனை அழைத்துச் சென்றான்.
“இங்க நின்னு என்ன பண்ண போறோம் வட்டி?”, எனச் சுற்றும் முற்றும் பார்த்தபடிக் கேட்டான்.
“இந்த செவுத்து மேல ஏறுங்க .. “, என பாதி இடிந்து இருக்கும் கட்டிடத்தின் மேல் ஏறச் சொன்னான்.
“பெர்பெக்ட் பிளேஸ் “, என கிருஷ்ணன் மேலே ஏறி நின்றுக் கூறினான்.
“மொத்த ஊரும் கண்ணுக்கு தெரியும்.. வந்து போற வழியும் இது ஒண்ணு தான். யாரு ஒடுனாளும் இங்க இருந்தே பாத்து ஆள அனுப்பி கோழி அமுக்கற மாதிரி அமுக்கலாம் ..” ,என வட்டி கூறினான்.
“இந்த ஊருக்கு நீங்க தான் காவல் காரன் போலவே?”
“ஊருக்குள்ள இருக்க அத்தன களவாணி பசங்களையும் இப்டி தான் பிடிப்போம்.. பஞ்சாயத்து வந்துட்டா என் மச்சான் ரொம்ப நேர்மை.. அதுவே அவனுங்க கோக்குமாக்கு செஞ்சா வச்சி அடிக்கவும் எங்களுக்கும் அங்க அங்க எடம் வேணும் ல.. அதான் சுத்துபட்டு ஊர்ல எல்லாம் இந்த மாதிரி எல்லா எடமும் எங்களுக்கு அத்துபடி “
“இண்டரெஸ்ட்டிங் வட்டி.. நான் சிட்டில வளந்த பையன் சோ நீங்க சொல்றது கேக்க செம்மயா இருக்கு..”, எனக் கூறிவிட்டு தூரத்தில் கார் வருவதைப் பார்த்தான்.
“மாப்ள வீட்டுக்காரங்க வந்துட்டாங்க .. “
கோவிலில் நீலா ஆச்சி உடன் பானு மற்றும் அவளது அம்மா மற்றும் சித்திமார்களிடம் பேசியபடி அமர்ந்து இருந்தார்.
“ஏன் அத்த.. இத்தன வருஷம் போக்குவரத்து இல்லாம இப்ப மட்டும் தம்பி எப்டி வந்து கூப்பிட்டான்?”, என மரகதம் கேட்டார்.
“ம்மா.. ஏன் கூபட்டாங்கன்னு கேட்டா என்ன அர்த்தம்.. போய் அங்க இருக்க வேலைய பாரும்மா .. கார் வர சத்தம் கேக்குது.. ஆரத்தி எடு போ “, எனத் தனது தாயைத் துரத்தினாள்.
“ஏன்டி.. உங்கம்மா இன்னும் இப்படியே தான் இருக்கா.. உங்கப்பா எப்டி டி சமாளிக்கராரு?”, என நீலா ஆச்சி கேட்டார்.
“அதான் அவரு ஊர்லயே இருக்கறது இல்ல.. மாசத்துல ரெண்டு நாள் வீட்ல இருந்தா பெரிய விஷயம்..”, என பானு கூறினாள்.
“உங்கம்மா காலைல உன்ன காணோம்ன்னு தேடலியா?”, எனக் கேட்டார்.
“அவங்கள மாமா வீட்ல இறக்கி விட்டுட்டு தான் நான் ரெடி ஆகவே போனேன் ..”, என பானு சிரித்தபடிக் கூறினாள்.
“புதுசா கழுத்துல இருக்க நகை பத்தி கேக்கலியா ?”
“இல்ல.. மாமா எல்லார்க்கும் புது நகை வாங்கி குடுத்தாரு.. அதுன்னு நெனைச்சி இருப்பாங்க..”, எனக் கூறினாள்.
“எனக்கு என்னமோ அப்டி தோணல.. உங்கம்மா பார்வை என்னையும் உன்னையும் சுத்திக்கிட்டே தான் இருக்கு ..” , என நீலா ஆச்சி கூறிவிட்டு அவள் தாய் இருக்கும் திசையைக் கண்களால் காட்டினார்.
மரகதம் தன் மகளையும், ஆச்சியையும் பார்த்தபடி ஆரத்தி கரைத்து வாசலில் மாப்பிள்ளைக்காக நின்றார்.
“கொஞ்ச நேரத்துல எல்லாருக்கும் தெரிய தானே போகுது.. பாத்துக்கலாம்..” , என பானு கூறிவிட்டு தனது கைப்பேசியை எடுத்துக் கொண்டு அமர்ந்து விட்டாள்.
கிருஷ்ணன் அனுப்பி இருந்த தகவல்கள் கண்டு மனம் அமைதி பெற்று இனிமேல் நடக்க இருக்கும் நிகழ்வுகளை எதிர்கொள்ள, தன்னை தயார்படுத்திக் கொண்டாள்.
முதல் வண்டியில் இருந்து தங்கதுரை அவரது மனைவி இறங்கி வந்தனர்.
இரத்தினம், ஏகாம்பரம் மற்றும் இன்ன பிற முக்கியமான பெண் வீட்டு சொந்தங்கள் அனைவரும் அவர்களை வரவேற்று உபசரித்தனர்.
பெண்ணிற்கு தனியாகவும், மாப்பிள்ளைக்கு தனியாகவும் ஆலம் சுற்றி உள்ளே அழைத்துச் சென்றனர்.
மரகதம் மாப்பிள்ளை கழுத்தில் இருந்த சங்கிலி கண்டுவிட்டு தன் மகள் அருகில் செல்ல திரும்பும் போது, தங்கதுரை வேறு வேலைக் கொடுத்து அவரின் அருகில் நிற்க வைத்துக்கொண்டார்.
நீலா ஆச்சி உள்ளே தனியாக அமரவைத்து, அவர் மேல் யாரின் பார்வையும் படாதபடிப் பார்த்துக் கொண்டனர் வேம்பு பாட்டியின் இரண்டு மருமகள்களும் .
“மாப்ளய வந்து மணமேடைல உக்கார வைங்க..” ,என ஐயர் கூறியதும் தங்கதுரை தேவராயனை அழைத்து வந்தார்.
தேவராயன் அமரும்போது வர்மன் வேல்முருகனுடன் உள்ளே வந்தான்.
அவனை கண்டதும் ஏகாம்பரம் கோபம் கொண்டு அவன் அருகில் சென்றார்.
“உன்ன யாரு இங்க வர சொன்னது? ஒழுங்கா வெளிய போயிடு..”, என உருமினார்.
“இருங்க மாமனாரே .. நான் ஒருத்தர் வழி கேட்டாருன்னு அவர கொண்டு விட வந்தேன்..”, எனக் கூறிவிட்டு தன்ய கிருஷ்ணனை உள்ளே வரச்சொல்லி நகர்ந்து நின்றான்.
அவனைக் கண்டதும் இளவேணி திடுக்கிட்டு அங்கிருந்து தப்பிக்க மெல்ல எழுந்து பின் பக்கம் ஓடினாள். செங்கல்வராயனும் அங்கிருந்து நகர எத்தனிக்க துப்பாக்கிமுனையில் நிறுத்தப்பட்டார். அதுவும் அத்தனை நேரம் சகஜமாக பேசிக்கொண்டு இருந்தவர்கள் கைகளில் துப்பாக்கிக் கண்டதும் ஸ்தம்பித்து நின்றார்.
பெண்கள் கூட்டத்திலும் இது போல பலர் துப்பாக்கியுடன் இளவேணியை பிடித்துக்கொண்டு வந்து சபை நடுவில் நிறுத்தினர்.
திடீரென போலீஸ் அங்கே வந்ததும் மொத்த கூட்டமும் அதிர்ந்து ஒன்றும் புரியாமல் சலசலக்க ஆரம்பித்தனர்.
இவர்களைப் பிடித்த பின் வித்யாதரன் அங்கே வந்து நின்று அனைவரையும் ஒரு பார்வைப் பார்த்தார்.
“வித்யாதரா .. என்னப்பா இது?”, எனக் கூட்டத்தில் இருந்த ஒரு பெரியவர் கேட்டார்.
“இவங்க ரெண்டு பேரும் போதை பொருள் வியாபாரம் பண்ற ஆளுங்க.. கையும் களவுமா இப்ப பிடிச்சிட்டோம் ..”, எனக் கூறிவிட்டு ஏகாம்பரத்தைப் பார்த்தார்.
“கல்யாணம் பண்ற நேரத்துல தான் இவங்கள பிடிக்கணுமா? தாலி கட்டுன அப்பறம் புடிக்க கூடாதா?’ , என ஏகாம்பரம் கேட்டார்.
“கைல கெடைக்கறப்ப தான் புடிக்க முடியும்.. தவிர இந்த கல்யாணம் நடந்தாலும் செல்லாது..” , என மெதுவாக ஒவ்வொரு வார்த்தையும் அழுத்திக் கூறினார்.
“ஏன் ? ஏன் செல்லாது?”, எனப் பதற்றமாக வர்மனைப் பார்த்தபடிக் கேட்டார்.
“அந்த பையனுக்கு முதல் மனைவி உயிரோட இருக்காங்க .. அவங்க இருக்கறப்ப இன்னொரு கல்யாணம் செல்லாது.. “ , என ஏகாம்பரம் தலையில் மட்டுமின்றி அத்தனை பேர் தலையிலும் இடியை இறக்கினார்.
“கல்யாணம் ஆகிரிச்சா?” , எனக் கேட்டபடி இரத்தினத்தைப் பார்த்தார் ஏகாம்பரம்.
“இல்ல ஏகாம்பரம்.. வித்யாதரா .. பையனுக்கு கல்யாணம் எல்லாம் ஆகல.. அப்டின்னா யாரு அந்த பொண்ணு?”, எனக் கேட்டார்.
“நான் தான் அவரோட பொண்டாட்டி .. இதோ அதுக்கான ஆதாரம்“, என அன்று காலையில் தேவராயன் கையினால் வாங்கிய தாலியை எல்லாரும் பார்க்க வெளியே எடுத்துக் காட்டினாள் பானு.
அதைக் கண்ட தங்கதுரை, “இது எங்க பரம்பரை தாலி.. இது எப்ப நடந்தது? ராயா என்ன டா இது?”, எனக் குழப்பத்துடன் கேட்டார்.
“இன்னிக்கி காலைல தான் சித்தப்பா கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.. என்னால பானுவ தவிர யாரையும் என் பொண்டாட்டிய ஏத்துக்க முடியாது..” ,எனக் கூறி பானு அருகில் வந்து நின்றான்.
இளவேணி அவர்களை முறைத்தபடி நின்று இருந்தாள். செங்கல்வராயனும் தப்பிக்க சந்தர்ப்பம் பார்த்துக்கொண்டு நின்று இருந்தான்.
“சார்.. இந்த குடும்ப பிரச்சனை எல்லாம் இவங்கள இப்படி வச்சிக்கிட்டே பேசினா சரி வராது.. இவங்கள கமிஷனர் ஆபீஸ்ல அடைச்சிட்டு வந்து பேசிக்கலாம்”, என கிருஷ்ணன் வித்யாதாரனிடம் கூறினான்.
“சரி.. யாரும் இங்க இருந்து வெளிய போக கூடாது.. நான் திரும்ப வர வரைக்கும் எல்லாரும் இங்கயே தான் இருக்கணும்.. உங்க எல்லார்கிட்டயும் விசாரணை பண்ணனும்..”, எனக் கூறி காவல் அதிகாரிகளை அங்கே நிற்க வைத்துவிட்டு செங்கல்வராயனையும், இளவேணியையும் அழைத்துக் கொண்டு சென்றனர்.
“என்ன இரத்தினம் இது? இப்டி என் மானத்த வாங்கிட்ட? , என ஏகாம்பரம் இரத்தினத்திடம் எகிறினார்.
“நான் என்ன பண்னேன் ஏகாம்பரம்?”, என இரத்தினம் உள்ளுக்குள் நடுங்கியபடிப் பேசினார்.
“உன்னால தான் அந்த ஆளு சொல்றபடி எல்லாம் நடந்துக்க வேண்டியதா இருந்தது. இந்த பெரிய வீட்டு சம்பந்தம் நீ தான் கொண்டு வந்த.. இப்ப பாரு.. மணவரை வரைக்கும் வந்து இந்த கல்யாணம் நின்னா அசிங்கம் யாருக்கு? எனக்கு தான் யா?”, எனக் கத்தினார்.
“கொஞ்சம் பொறுமையா இரு ஏகாம்பரம்.. அந்த பையன் இன்னிக்கி தான் அந்த பொண்ண கல்யாணம் செஞ்சி இருக்கான்.. அந்த வீட்டு ஆளுங்க கிட்ட தான் நீ நியாயம் கேக்கணும்” , எனத் தன்னை அந்த பிரச்சனையில் இருந்து விடுவித்துக் கொள்ள முயன்றார்.
“இங்க பாருங்க ஐயா.. இப்ப இவங்களுக்கு என்ன பதில் பையன் வீட்டு ஆளுங்க சொல்ல போறீங்க?”, என ஊர் பெரிய மனிதர் கேட்டார்.
பானுவிற்கும், தேவராயனுக்கும் திருமணம் நடந்ததில் அவர்கள் அனைவருக்கும் மனதில் சந்தோஷம் தான் ஏற்பட்டது.
“இப்டி நடக்கும்ன்னு நான் எதிர் பாக்கலங்க .. இதுக்கு என்ன செய்யணும்-ன்னு சொல்லுங்க நான் அதுக்கு உடன்படறேன் ”, என தங்கதுரைக் கூறினார்.
“கொஞ்சம் எல்லாரும் அமைதியா இருங்க..” , எனக் கூறியபடி வேம்பு பாட்டி அங்கே வந்தார்.
நீலா ஆச்சியும் அங்கே அவருடன் வந்து அருகில் நின்றார். அவரைக் கண்டதும் இரத்தினம் பின்னால் பதுங்கி நின்றார்.
“பாத்தியா பங்காளி அந்த ஓணான் எப்டி பதுங்குது ..” , என வட்டி இரத்தினத்தை வேல்முருகனிடம் சுட்டிக் காட்டினான்.
“அந்த ஆளும் ஒரு கைக்கூலி தானே பங்காளி”
“ஆனா துரோகி பங்காளி.. அவன தனியா ஒரு நாள் கவனிக்கணும்.. இன்னொரு விஷயத்த இப்ப தான் கிருஷ்ணன் சொன்னாரு.. அதுக்காகவே அவன உயிரோட பொதைக்கணும்-ன்னு நான் மனசுல நெனைச்சிட்டு இருக்கேன்”, என வட்டி கூறினான்.
“என்ன வேம்பு அம்மா.. அவங்ககிட்ட நியாயம் கேக்கறத ஏன் தடுக்கறீங்க?”, என ஊர் பெரிய மனிதர் கேட்டார்.
“நீங்க எல்லாம் என்ன நியாயம் பேசுவீங்கன்னு எனக்கு நல்லா தெரியும்யா.. நியாயம் மொத பொண்ண பெத்த அப்பன்கிட்ட தான் நான் கேக்கணும்.. அவசர அவசரமா எதுக்கு நாலு நாள்ல கல்யாணம் வைக்கணும்? பொண்ணு பையன் பாக்காம இப்டி பண்றது சரி தானான்னு கேக்கணும்?”, எனக் கேட்டுவிட்டு ஏகாம்பரத்தைப் பார்த்தார்.
ஏகாம்பரம் காமாட்சியைப் பார்க்கவும், “அம்மா.. எதுவா இருந்தாலும் வீட்டுக்கு போய் பேசிக்கலாம்.. இங்க எதுவும் பேசாத ம்மா “ , என அவரிடம் வந்துக் கெஞ்சினார்.
“என்ன டி வீட்ல பேச போறீங்க? இத்தன வருஷம் உனக்காக எல்லாத்தயும் பாத்துட்டு கம்முன்னு இருந்தேன் ஆனா இனிமே என்னால அப்டி இருக்க முடியாது டி”, எனக் கூறினார்.
“என்ன கேக்கணும் உங்களுக்கு? எங்க ஊர்ல பொம்பளைங்க எல்லாம் பஞ்சாயத்துக்கு வரவே கூடாது.. நீங்க இங்க என்ன பேசினாலும் அது சபை ஏறாது” , என ஏகாம்பரம் கூறினார்.
“மாப்ள.. எனக்கு வயசு எழுவது .. எந்த பேச்சு எங்க சபை ஏறுமின்னு எனக்கு உங்கள விட நல்லா தெரியும்.. என்ன சொன்னீங்க பொம்பள பேசக்கூடாதா? பொம்பள பேசினா உங்க வண்டவாளம் எல்லாம் தண்டவாளம் ஏறிடும்ன்னு பயத்துல தானே பேச விடாம வச்சி இருக்கீங்க.. அந்த காலத்துளையே அத எல்லாம் நான் ஓரம் தூக்கி போட வச்சவ.. ஆம்பள பொம்பள எல்லாரும் சமம் தான் இந்த சமுதாயத்துல.. நீங்க பண்ற அட்டகாசத்துக்கு பொம்பளய ஏன் வீட்டுகுள்ள பூட்டறீங்க? எல்லாரும் ஆம்பளன்னு மீசைய முறுக்கிக்கிட்டு சுத்தறீங்கல்ல .. தைரியம் இருந்தா அவங்க அவங்க வீட்டு பொம்பளைங்கள நான் சகமனுஷியா தான் நடத்தறேன்னு சொல்லுங்க பாப்போம்.. “, எனக் கேட்டார்.
“வீட்டுக்குள்ள இருக்க பொம்பளைக்கு பஞ்சாயத்து பத்தி என்ன தெரியும்? அந்த தகுதி பொம்பளைக்கு இல்ல .. உங்களுக்கு எல்லாம் நாங்க பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்ல..”, எனக் கூட்டத்தில் ஒரு பெரியவர் கூறினார்.
“யாரு.. மாரியப்பன் அண்ணே தானே.. உங்க பொண்டாட்டி செத்த ஒரு வாரத்துல சின்ன வயசு பொண்ண கல்யாணம் கட்டிக்கிட்டு வந்த உங்களுக்கு என்ன தகுதி இருக்கு பஞ்சாயத்து பேச?”, என வேம்பு பாட்டி கேட்டதும் அவர் வாய் மூடி ஓரமாக ஒதுங்கி நின்றார்.
வட்டியும், வர்மனும், வேல்முருகனும் ஒருவரை ஒருவர் பார்த்துவிட்டு அமைதியாக நின்றனர்.
“என்னடா இந்த பாட்டி இந்த போடு போடுது?”, என மருது பாண்டியிடம் கூறினான்.
“இவங்க அந்த காலத்துலையே காலேஜ் போய் படிச்சவங்க டா.. அதான் இவ்ளோ தெளிவா பேசறாங்க…. பாரு ஒரு பெருசு கூட வாய் தொறக்கல .. “, என பாண்டி கூறினான்.
“இப்ப என்ன நடக்கும்?”, மருது அங்கு நடப்பவற்றை வேடிக்கைப் பார்த்தபடிக் கேட்டான்.
“வேம்பு அம்மா.. இப்ப விஷயத்துக்கு வரலாம்.. மாப்ள வேற கல்யாணம் பண்ணிக்கிட்டாரு.. அதுக்கு தான் இப்ப நியாயம் கேக்கணும்”, என வேறு ஒருவர் கூட்டத்தில் இருந்துப் பேசினார்.
“அதுல அவங்ககிட்ட நியாயம் கேக்க எதுவுமே இல்ல தங்கராசு.. பையனையும் கட்டாயப்படுத்தி இருக்காங்க. அதான் அவன் தனக்குன்னு இருக்க பொண்ண கட்டிக்கிட்டான்.. ரெண்டு வீட்டுளையும் சின்னதுங்கல கட்டாயப்படுத்தி இருக்காங்க. அதுக்கு காரணம் செங்கல்வராயன்.. ரெண்டு பக்கமும் ஏதோ வச்சி மெரட்டி தான் அவன் இந்த கல்யாணத்த நடத்த ஏற்பாடு பண்ணி இருக்கான்.. அதனால இதுல பேச ஒண்ணும் இல்ல”, எனக் கூறினார்.
“மணமேடை வரைக்கும் வந்த பொண்ண இனிமே யாரு கட்டிக்குவா ?”, என அடுத்த கேள்வி கூட்டத்தில் இருந்துக் கிளம்பியது.
“இந்த கேள்வி கேக்கவே ஒருத்தன் எப்பவும் இருப்பான் போலவே ?” ,என வட்டி கூறினான்.
“அந்த பையன் எப்டி தனக்குன்னு இருக்க பொண்ண கட்டிக்கிட்டானோ அப்டி தான் என் பேத்திக்குன்னு இருக்கறவன் அவள கட்டிக்குவான்..”, எனக் கூறியதும் நங்கை அதிர்ந்துப் பாட்டியைப் பார்த்தாள்.
“எது நடந்தாலும் வாய தொறக்காத “, என வினிதா அவளை வேறுபக்கம் அழைத்துச் சென்றாள்.
“அம்மம்மா என்ன சொல்றாங்க வினி?”
“உனக்கு நல்லது மட்டும் தான் அவங்க பண்ணுவாங்கன்னு நீ நம்பறல்ல?”
“ஆமா.. அதானே நான் வீட்லயும் சொல்லி சத்தியம் பண்ணேன்”, எனக் கூறினாள்.
“அப்போ அமைதியா இரு.. இது உன் வாழ்க்கைக்கான விடியல் வர நேரம்”, என வினிதா அவளை அமைதியாக இருக்கும்படிக் கூறினாள்.
“யாரு அவன்?”, என ஏகாம்பரம் கேட்டார்.
“இங்க நிக்கற நீலாயதாட்சி பேரன் சிம்ம வர்மன் தான் அவளுக்குன்னு இருக்கவன்” , என வேம்பு பாட்டி கூறியதும், தேவராயன் கைத்தட்ட போக பானு அவன் கையைப் பிடித்து நிறுத்தினாள்.
“நான் இதுக்கு ஒத்துக்க மாட்டேன்.. “, என ஏகாம்பரம் கூறினார்.
“பொண்ணுக்கு பெரிய பாட்டி நான்.. எனக்கு அவ கல்யாணம் நடத்தற உரிமை இருக்கு” , எனக் கம்பீரமாகக் கூறினார்.
“பெத்தவங்க இருக்கறப்ப எப்டி நீங்க முடிவு எடுக்க முடியும்?”, என ஒருவர் கேட்டார்.
“அவள பொறந்த உடனே எனக்கு இவங்க தத்து குடுத்துட்டாங்க. அந்த பத்தரம் என்கிட்ட இருக்கு. ஸம்ப்ரதாயப்படியும், சட்டப்படியும் அவளுக்கு அம்மா அப்பா எல்லாமே நான் தான். இத்தன நாள் அவளோட படிப்பு செலவுல இருந்து சாப்பாடு வரைக்கும் நான் பணம் குடுத்த ரசீது இருக்கு .. சின்னவனே.. அத ஊர் பெரிய மனுஷங்க கிட்ட காட்டு” , எனக் கூறினார்.