29 – வலுசாறு இடையினில்
“என்ன மச்சான் இது புதுசா இருக்கு?”, என வட்டி கேட்டான்.
“இந்த ஊர்ல இது ஒரு பழக்கம் பங்காளி.. மொத பொண்ணு பொறந்தா அத தத்து குடுத்தா தான் ஆம்பள புள்ள பொறக்கும்ன்னு பொறந்த உடனே குடுப்பாங்க.. ஆனா வளக்க கூட காசு வாங்கறது இப்ப தான் நானும் கேள்வி படறேன் பங்காளி”, என தனக்குத் தெரிந்ததை வேல்முருகன் கூறினான்.
“என்ன மூட நம்பிக்கை இது?”, என வர்மன் கேட்டான்.
“சொன்னா நம்மல தான் திட்டுவானுங்க மச்சான்.. நம்ம இனிமே நம்ம வீட்டு பொம்பளைங்கல நடத்துறதுலையும், பொண்ண வளக்கறதுலையும் தான் இருக்கு”, எனக் கூறினான்.
ஏகாம்பரம் இப்போது ஏதும் பேச முடியாத நிலையில் நின்று இருந்தார். ஊர் பெரியமனிதர் அதை வாங்கிப் பார்த்து விட்டு, “வேம்பு அம்மாவுக்கு தான் மொதல் உரிமை இருக்கு.. நீங்க என்ன செய்யணும்ன்னு சொல்றீங்களோ அதுவே செஞ்சிடலாம்”, என அவர் கூறி முடித்துவிட்டார்.
“என் பேத்திய நான் நீலா பேரனுக்கு கட்டி குடுக்க போறேன்.. விருப்பம் இருக்கறவங்க இருந்து ஆசீர்வாதம் பண்ணுங்க. மத்தவங்க கெளம்பலாம்”, எனக் கூறிவிட்டு தனது மகன்களை அருகில் அழைத்தார்.
“இந்தா டா .. இதுல இருக்க பணத்த வச்சி இங்க செஞ்சி இருக்க ஏற்பாடு எல்லாம் கணக்கு முடிங்க.. பத்து மணிக்கு முகூர்த்தம்.. நீலா உனக்கு சந்தோஷம் தானே?”, எனக் கேட்டார்.
“ரொம்ப சந்தோஷம் வேம்பு.. எதையும் தைரியமா முறையா செய்யற உன்ன போல யாரும் இதுவரை நான் பாத்தது இல்ல டி“, என தன் மனதிற்குள் அழுத்திக்கொண்டு இருந்த விஷயத்தைக் கூறி அவரைக் கட்டிக்கொண்டார்.
“அம்மா.. மாப்ள..”, என சின்னவன் இழுத்தான்.
“அவங்கள விடு சின்னவனே.. புள்ளைக்கு நல்ல வாழ்க்கை இப்ப நாம அமைச்சி குடுக்கறது தான் முக்கியம்.. அப்பறம் அவங்கள பாத்துக்கலாம்..”, எனக் கூறி மகனை அமைதிப்படுத்தினார்.
“தங்கச்சி?”, என வரதன் இழுத்தார்.
“உன் மச்சான் பேச்ச மீறி உன் தங்கச்சி இங்க வந்துடுவாளா? விட்றா.. எங்க போயிட போறா? பத்து மணிக்கு முகூர்த்தம்னா அதுக்கு முன்ன வந்த உறவு சனத்துக்கு கால பலகாரம் போட்டு இருக்கணும். வந்தவங்க வயிறு நெறைஞ்சி பொண்ணு மாப்ளய வாழ்த்தணும்.. போய் அந்த வேலைய பாருங்க..”, என அவர்களை அனுப்பிவிட்டு தங்கதுரை அருகில் சென்றார்.
“நீலா..”, என அவரை முன்னாள் விட்டு அமைதியாக நின்றார்.
“உன் பையனுக்கு காலைல கல்யாணம் செஞ்சி வச்சது நான் தான் தங்கம்.. உன் குடும்ப வாரிசு பானு புள்ள வயித்துல வளருதுய்யா.. எல்லாமே சிக்கல்ல கொண்டு வந்து நிறுத்தன அப்பறம் எனக்கு இத தவிர வேற வழி தெரியல.. உன் அக்கா பொண்ண பத்தி உனக்கு நல்லா தெரியும்.. மனசுல எதுவும் வச்சிக்காம புள்ளைங்கள ஏத்துக்க ய்யா”, எனக் கூறினார்.
“அத்த.. நீங்க தான் என்னய மன்னிக்கனும்.. இத்தன வருஷமா உங்கள எதுத்து எதுத்து நான் இழந்தது தான் அதிகம்.. இனிமே நாம ஒண்ணா இருக்கலாம்த்த .. அவங்க கல்யாணம் உங்களால நடந்தது எங்களுக்கு ரொம்ப சந்தோசம் தான். ஒரு இக்கட்டுல நிறுத்தி தான் அந்த செங்கல்வராயன் என்னை இந்த கல்யாணத்த நடத்த சொன்னான். நானும் வேற வழி இல்லாம மனசு அறிஞ்சி தான் இந்த புள்ளைங்கள பிரிக்க பாத்தேன்.. நீங்க தான் இப்பவும் நம்ம குடும்பத்த காப்பாத்தி இருக்கீங்க.. நம்ம வர்மனுக்கு நான் தாய் மாமன்-அ இருந்து எல்லாமே செய்யறேன்..”, என அவரது காலில் விழுந்தார் தங்கதுரை.
மரகதமும் வந்து அவரது காலில் விழுந்து நன்றிக் கூறினார். “என் குடும்ப மானம் மரியாதை எல்லாத்தயும் காப்பாத்திட்டீங்க அத்த.. உங்களுக்கு நான் எப்பவும் கடமப்பட்டு இருக்கேன்”, எனக் கூறினார்.
“போதும் போதும்.. என் பேத்திய நான் போய் பாத்து ரெடி பண்ணனும்.. குடும்பம் எல்லாம் ஒண்ணு சேர்ந்தாச்சில்ல.. வாங்க போய் மொத சாமிய பாக்கலாம்.. மரகதம் புள்ளையும் பையனையும் ஒண்ணா நிக்க வச்சி எல்லாரும் ஆசீர்வாதம் பண்ணுங்க.. அர்ச்சனை பண்ணிட்டு எல்லாரும் சாப்ட வாங்க”, என அவர்களை அனுப்பிவிட்டு நீலா பாட்டியுடன் நங்கையைத் தேடி வந்தார்.
நங்கை முகத்தைத் திருப்பிக் கொண்டு நின்று இருந்தாள். அதைப் பார்த்ததும் வேம்பு பாட்டி ஒரு நொடித் தயங்கி அவளை அழைத்தார்.
“ராசாத்தி .. முத்து..”
“நீங்களும் அவங்கள மாதிரி தானே பாட்டி?”, எனத் தேம்பலுடன் கூறினாள்.
“அப்படி இல்லடா ராசாத்தி.. இவ்ளோ நடந்த அப்பறம் உன்ன அந்த வீட்ல என்னால விட்டுட்டு நிம்மதியா இருக்க முடியாது டா.. என் கூடவும் உன்னை கூட்டிக்கிட்டு போகமுடியாது. அதனால தான் ஒரு பாதுகாப்பான எடத்துல உன்ன சேக்க நெனைக்கறேன் ..”, என அவளை அணைத்துக் கொண்டு சமாதானம் கூறினார்.
“ஏன் பாட்டி.. நீ தனியா வாழலியா? நானும் அப்டி வாழ மாட்டேனா என்ன?”, எனக் கேட்டாள்.
“தனியா இருக்கறது பெரிய விஷயம் இல்ல டி.. என்ன தான் வேற உறவு கூட இருந்தாலும் எப்பவும் நமக்குன்னு வாழ்க்க துணையா வரவங்க நம்ம கூட இருக்கணும்-ன்னு தான் மனசு கேக்கும். நான் தனியா இருந்தது சாதனை தான்.. அந்த ஒரம் உனக்கும் இருக்கு.. ஆனா அதுக்கு பேரு வாழ்க்க இல்ல டி கண்ணு.. நீ இன்னும் எதுவுமே பாக்காத மொட்டு.. நீ பூத்து, காய்ச்சி பழம் ஆகணும் டி.. அது தான் நிறைவ குடுக்கும்.. “, என விளக்கம் கொடுத்தார்.
“ஏன் அம்மம்மா .. நீ தனியா ரொம்ப கஷ்ட பட்டியா?”, என அவரின் முகம் பார்த்துக் கேட்டாள்.
“ஹாஹா.. நான் எல்லாத்தயும் பாத்துட்டேன் டி கண்ணு.. நீ இனிமே வாழ்க்கை பாடம் ஒண்ணு ஒண்ணா படி.. போ மொகம் கழுவி ரெடி ஆகு.. இன்னிக்கி உனக்கு இந்த முடிவு கஷ்டமா இருக்கலாம்.. ஆனா உனக்கு நல்லது மட்டும் தான் நான் செய்வேன்… அவன் ஏதாவது பிரச்சனை பண்ணான்னா உடனே எனக்கு ஒரு ஃபோன் போடு.. நான் வந்து அவன பேசிக்கறேன்..”, என அவளை சிரிக்க வைத்தார்.
“அவன் சரியான மொரடன் அம்மம்மா.. சின்ன வயசுல இருந்து என்னைய ஆழ வச்சிட்டே தான் இருப்பான்.. அவன எப்டி நான் நம்பறது?”, எனக் கேள்வி கேட்டாள்.
“அப்பா.. சிம்மவர்மா .. கேட்டுச்சா?”, என வேம்பு பாட்டி கேட்டார்.
“கேட்டுச்சி பாட்டி.. நான் வர வைக்கறேன் சீக்கிரம்”, என அவளை முறைத்துப் பார்த்துக் கொண்டே கூறினான்.
“நீலா”, என தான் விலகி அவருக்கு இடம் கொடுத்தார்.
“உங்கள எனக்கு ரொம்ப புடிச்சி இருக்கு பாட்டி.. பானு அக்காவுக்கு நீங்க சரியான நியாயம் தான் செஞ்சி இருக்கீங்க..”, என நங்கை மனதார கூறினாள்.
நீலா ஆச்சி அவளைத் தன்னோடு கட்டிக்கொண்டுக் கண்ணீர் விட்டார்.
“உன்ன என் வீட்டுக்கு அவன் பொண்டாட்டியா மட்டும் நெனைச்சி கூட்டிட்டு போல கண்ணு.. என் வீட்டு ஜீவனே நீ தான் ..” ,என அவளிடம் கூறி நெற்றியில் முத்தமிட்டார்.
“பாட்டி.. “, என ஆரம்பித்து தயங்கினாள்.
“ஆச்சிண்ணே கூப்டு கண்ணு”, எனக் கூறினார்.
“அடுத்த மாசம் செமெஸ்டெர் வருது.. இந்த படிப்ப மட்டும் நான் முழுசா முடிச்சிக்கறேன்”, எனத் தயங்கித் தயங்கிக் கூறினாள்.
“அது முடியாது”, என ஆச்சி கூறியதும் முகம் வாடி வேம்பு பாட்டியைப் பார்த்தாள்.
“ஹாஹாஹா.. நீ எவ்ளோ படிக்க ஆசைப்படறியோ அவளோ படி கண்ணு.. நான் உன்ன படிக்க வைக்கறேன் ..”, எனக் கூறிச் சந்தோஷப்படுத்தினார்.
“சரி இப்ப சொல்லு இந்த கல்யாணத்துக்கு சம்மதமா?”, என இருவரும் கேட்டனர்.
நங்கை வர்மனைப் பார்த்து முறைத்துவிட்டு சம்மதம் கூறினாள். வர்மனும் அவளை முறைத்தபடி வேம்பு பாட்டியின் அருகில் வந்து, அவரது காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினான்.
“இது புள்ள..” ,என அவளின் அத்தை கூறியதும் நங்கையும் அவனுடன் சேர்ந்து இரண்டு பாட்டிகளின் காலிலும் ஒன்றாக விழுந்து வணங்கினர்.
“அப்பாடா.. ஒரு வழியா எல்லா பிரச்சனையும் முடிஞ்சது..” , என கூறி வினிதா தூண் அருகில் அமர்ந்தாள்.
“நமக்கும் இன்னிக்கே கல்யாணம் வச்சிடலாமா டி செல்லம்?”, எனக் கேட்டபடி வேல்முருகன் அவள் அருகில் அமர்ந்தான்.
“படிப்பு முடியட்டும்.. அப்பறம் யோசிக்கலாம்..” , எனச் சிரிப்பை அடக்கியபடி கூறினாள்.
“கொழுப்பு டி.. அடுத்த மாசம் செம் முடிஞ்ச அடுத்த நாள் நம்ம கல்யாணம்.. இதுக்கு மேல உன்ன விட்டு வச்சா சரி பட்டு வராது..”, எனக் கூறிவிட்டு எழுந்துச் சென்றான்.
“பாப்போம் பாப்போம்..”, என இவள் ராகம் பாடினாள்.
“நாங்களும் பாத்துட்டு தான் இருக்கோம் .. சின்ன பசங்க இருக்க எடத்துல சூதானமா இருக்க சொல்லுங்க ப்பா.. “, எனக் கூறியபடி வட்டி அங்கிருந்து சென்றான்.
பாரம் இல்லா சிரிப்பு சத்தம் அந்த இடத்தை நிரப்பியது.
ஏகாம்பரம் வீட்டில் குறுக்கும், நெடுக்குமாக நடந்தபடி வேம்பு பாட்டியை திட்டிக்கொண்டு இருந்தார்.
“இனிமே உன் பொறந்த வீட்டு ஆளுங்க யாருமே இங்க வர கூடாது.. உனக்கு அவங்க தான் ரொம்ப முக்கியம்னா இப்பவே நீயும் வெளிய போயிடு .. என்ன பேச்சு பேசரா உங்கம்மா.. ஒரு வார்த்த நீ தடுத்தியா டி?”, என மிளகாய் பொரிவது போல பொறிந்துக் கொண்டு இருந்தார்.
வித்யாதரனும், தன்ய கிருஷ்ணணும் அவர்களை தனியாக அடைத்து வைத்துவிட்டுக் கோவிலுக்குத் திரும்பினர்.
“சார்.. இந்த செங்கல்வராயன் தான் அப்போ வர்மா அப்பாவையும், தேவராயன் அப்பாவையும் கொன்னதா ?”, என மீண்டும் கேட்டுத் தெளிவுப் படுத்திக்கொண்டான்.
“ஆமா டா.. கொலைய இவன் நேரடியா பண்ணல.. ஆனா அந்த லாரில இருந்தது இவனோட ஆள் அந்த இரத்தினம். ரெண்டு வண்டியும் ஒரே நேரத்துல அடிச்சி தூக்கி இருக்கான்.. அந்த கேஸ் ஒரு ரெஃபரென்ஸ்காக எடுத்தப்ப தான் இது தெரிஞ்சது. அந்த நாளுக்கு மொதல் நாள் செங்கல்வராயன் ஊர விட்டு போயிட்டான்-ன்னு ரெக்கார்ட் இருக்கு. ஆனா செய்ய சொன்னது அவன் தான்னு இரத்தினம் சொன்னது நமக்கு வீடியோவா இப்ப இருக்கு. அந்த இரத்தினம் கோவில்ல தான் இருப்பான். போனதும் அவன அரெஸ்ட் பண்ணனும்..” , எனச் சொல்லிக்கொண்டு வந்தார்.
“ஓகே சார்..”
“அப்பறம் இந்த விஷயம் உனக்குள்ள இருக்கட்டும்.. அவங்களுக்கு தெரிஞ்சா ரெண்டு பேரையும் உயிரோட விடமாட்டாங்க ..”, எனக் கூறினான்.
அதைக் கேட்டு கிருஷ்ணன் முழிப்பது பார்த்து என்னவென விசாரிக்க, தான் வட்டியிடம் கூறியதைக் கூறினான்.
“உனக்கு எல்லாம் அறிவே வராது டா.. உன்னை என் அசிஸ்டண்டா வச்சி நான் படர அவஸ்த்தை இருக்கு பாரு..”, என அவனைத் திட்டியபடி வேகமாக செல்ல சொன்னான்.
அங்கே பஞ்சாயத்து முடிந்ததும் வட்டியும், வேல்முருகனும் இரத்தினத்தை மருதுவிடம் ஒப்படைத்து தோப்பில் மறைத்து வைக்கக் கூறி அனுப்பி வைத்து இருந்தனர்.
வித்யாதரன் சொன்னது போலவே இரத்தினத்தைக் காணவில்லை என்றதும் கிருஷ்ணன் வட்டியைத் தேடினான்.
“வட்டி.. வட்டி..”
“சொல்லுங்க ஆபிசர்.. வாங்க சாப்டுங்க.. பந்தி ஆரம்பிச்சி மூணாவது ரவுண்ட் போயிக்கிட்டு இருக்கு”, என அழைத்தான்.
“அந்த இரத்தினம் எங்க வட்டி?”
“என்னய கேட்டா? நீங்க தான் யாரும் வெளிய போக கூடாதுன்னு சொன்னீங்க.. அந்த ஏகாம்பரம் அவரு பாட்டுக்கு வீட்டுக்கு போயிட்டாரு.. அந்த ஆளு கூட தான் இந்த ஆளும் சுத்திக்கிட்டு இருப்பான்.. அவன போய் கேளுங்க”, எனக் கூறினான்.
“வட்டி..” , என கிருஷ்ணன் பல்லைக் கடித்தான்.
“காலைல இருந்து ரொம்ப அலைச்சல் பட்டு இருக்கீங்க.. மொத சாப்டுங்க கிருஷ்ணன் ..”, என தேவராயன் அவனை அமர வைத்துப் பந்தி பரிமாறினான்.
கிருஷ்ணன் பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு வித்யாதரனைப் பார்த்தான்.
“உன்னால என்ன பண்ண முடியுமோ அத பண்ணிட்ட .. சாப்பிடு .. ஊருக்கு போலாம்.. அங்க வச்சிக்கறேன் “, எனக் கூறிவிட்டு அவரும் அங்கே அமர்ந்துச் சாப்பிட ஆரம்பித்தார்.
திருமணம் முடிந்து விசாரணை வைத்துக் கொள்ளும்படி அனைவரும் கேட்டுக் கொண்டதால், அது சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டது.
தடபுடலாக திருமணத்திற்கு அனைத்து ஏற்பாடுகளும் நடந்துக் கொண்டிருந்தன.
நங்கை வர்மன் எடுத்த புடவையில் முழுதாக பூத்த மலர் போல காட்சியளித்தாள்.
மனதில் அவன்மீது கோபமும், வருத்தமும், சிறு பகையும் இருந்தாலும் தனது அம்மம்மாவிற்காக இந்த திருமணத்தை மனதார ஏற்றுக் கொண்டாள்.
வர்மனுடன் வாழப்போகும் வாழ்வைப் பற்றி அவளுக்கு சிறிதும் எண்ணம் இல்லை. ஆனால் அவளின் மனதிற்கும், ஆசைக்கும் மதிப்பு கொடுக்கும் நீலா ஆச்சிக்காக அவள் இதை ஒத்துக்கொண்டாள். இவை அனைத்தும் வர்மனும் நன்கு அறிந்தே இருந்தான்.
யாருக்கும் இதுவரை மனதில் இடம் தராத மொட்டு அவளின் இதயத்தில் இடம் பிடித்து, அவளது நம்பிக்கைப் பெற்று, அவளை எப்போதும் பூத்த புது மலராக வைத்துப் பாதுகாக்க முடிவெடுத்து மணவறையில் வந்து அமர்ந்தான்.
அவன் அமர்ந்த சில நிமிடங்களில் நங்கையும் அழைத்து வரப்பட்டு அவன் அருகில் அமர வைக்கப்பட்டாள்.
“ஓய்.. ஓய் .. இங்க பாரு டி “, என வர்மன் அவளை அழைத்தான்.
“என்ன டா?”, என அவளும் மற்றவர் கவனம் கவராத வண்ணம் பதில் கொடுத்தாள்.
“பாத்தியா டி.. சவால்ல நான் தான் ஜெயிக்க போறேன்..” ,எனத் திமிராகக் கூறினான்.
“தாலி கட்டிட்டா மட்டும் நீ புருஷன் ஆகிடுவியா?”, என அவளும் கூறினாள்.
“நீ இப்ப என்கிட்ட தோத்துட்டன்னு ஒத்துக்க டி என் பொண்டாட்டி..”, என வம்பிழுத்தான்.
“உன்ன இனிமே தினம் தினம் தோக்க வைப்பேன் டா .. வர்மா இனிமே நீ தோல்வி மட்டும் தான் பார்ப்ப ..”, என அவள் மீண்டும் சவால் விட்டாள்.
“அதயும் பாக்கலாம் டி என் ஸ்வீட் பீடா “, என அவளை வெறுப்பேற்றி அவள் கழுத்தில் தாலி கட்டினான் வர்மன்.
இருவரும் முறைத்தபடி இருப்பதை அழகாக புகைப்படம் எடுத்துக் கொண்டார் போட்டோகிராபர்.
ஏகாம்பரம் கெட்டிமேளம் சத்தம் கேட்டு அறைக்குள் சென்று முடங்கி விட்டார்.
காமாட்சி இருதலைக்கொள்ளி எறும்பாக வீட்டிற்குள் கணவனை விட்டுவிட்டு செல்ல முடியாமல் அவஸ்த்தைப் பட்டார். ராஜனும் அவருடன் அறைக்குள் அடங்கி இருந்தான்.
திருமணம் முடிந்ததும் அடுத்து நடக்க வேண்டிய எல்லா சடங்குகளும் நடந்துக் கொண்டு இருந்தது. நமது காவல் துறை ஒரு பக்கம் தங்களது விசாரணையைத் தொடங்கி நடத்திக்கொண்டு இருந்தனர்.
பொதுவாக அனைவரிடமும் செங்கல்வராயன் பற்றிய ஒரே தகவல் தான் கிடைத்தது. இரத்தினம் மட்டுமே சற்று நெருங்கி பழகிய ஆள், அவனைக் காணவில்லை.
தங்கத்துரையிடமும் விசாரணை நடந்தது. தனது தோட்டத்தில் கஞ்சா விளைய வைக்க அவன் கேட்டதாகவும் அதற்கு அவர் ஒத்து கொள்ளாததால், தாங்கள் நடத்தும் பள்ளியில் போதைப் பொருள் இருப்பதாகக் கூறி, பள்ளியை மூட செய்வேன் என்று மிரட்டி , ஒரு சில காரியங்களுக்கு அடித்தளம் மட்டும் போட முயற்சித்தான் எனக் கூறினார்.
“நீங்க ஏன் சித்தப்பா இத என்கிட்ட சொல்லவே இல்ல?”, என தேவராயன் கேட்டான்.
“நம்ம பிரின்சிபால்-அ கடத்தி வச்சிக்கிட்டு மெரட்டறப்ப எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல ராயா.. தவிர உன் தங்கச்சியும் அவன் கிட்ட தான் இருந்தா..”, எனக் கூறினார்.
“காலேஜ்ல இருந்த பொண்ண இவன் எப்டி தூக்குவான் சித்தப்பா?”
“உனக்கு கல்யாணம்ன்னு சொல்லி தான் வரசொல்லி இருக்கான். நம்ம யாரும் அவகிட்ட சொல்லலைங்கற கோவத்துல அவளும் நம்மகிட்ட சொல்லாம கெளம்பி வந்து இருக்கா.. நல்ல வேல வர்மன் நம்ம பொண்ண காப்பாத்திட்டான்..”, எனக் கூறினார்.
“இப்ப தங்கச்சி எங்க?”, எனப் பதற்றமாகக் கேட்டான்.
“ஆஸ்பத்திரில இருக்கா ப்பா.. பானு ஃப்ரெண்ட் தான் பாத்துகிட்டு இருக்கா.. அவளுக்கு போதை மருந்து குடுத்து மயக்கமாக செஞ்சி இருக்காங்க”, எனக் கூறினார்.
“அவன எப்டி உயிரோட விட்டீங்க சித்தப்பா?”, என முகம் முழுக்க கோபத்தால் சிவக்க கேட்டான் தேவராயன்.
“வர்மன் மேல இருந்த நம்பிக்கை தான் தேவராயா.. அந்த இளவேணி நம்ம பொண்ண தூக்க போறப்ப, சரியா வர்மன் அங்க போய் தடுத்துட்டான். அதான் நம்ம பொண்ணுக்கு ஒண்ணும் ஆகல. அதுக்கு அப்பறம் தான் பானு கிட்ட பேசி வரசொல்லி அது எல்லாம் பண்ணுச்சி..”
“என்கிட்ட ஏன் சொல்லல பானு?”
“சொல்லி ஆக போறது ஒண்ணும் இல்ல மாமா.. எல்லாமே நல்ல படியா முடிஞ்சது நெனைச்சி சந்தோஷபடு ..” , என அவனுக்கு சமாதானம் கூறினாள்.
வித்யாதரனும், கிருஷ்ணணும் ஏகாம்பரத்திடம் விசாரிக்கச் சென்றனர்.
“உங்க ஹஸ்பண்ட் கூப்பிடுங்க மேடம்”, என கிருஷ்ணன் கூறினான்.
“அவர ஏன் கூப்பிடறீங்க?”, என கண்களில் மிரட்சியுடன் கேட்டார் காமாட்சி.
“ஒண்ணும் பயபடாதீங்க அண்ணி.. அந்த செங்கல்வராயன் பத்தி கொஞ்சம் விசாரிக்கணும்.. அவர கூப்பிடுங்க”, என வித்யாதரன் கூறினான்.
ஏகாம்பரம் வந்ததும் கிருஷ்ணன் கேள்விகளை ஆரம்பித்தான்.
“உங்களுக்கும் செங்கல்வராயனுக்கும் எத்தன வருஷ பழக்கம்?”
“எனக்கு அவன போன மாசம் இருந்து தான் தெரியும்”
“அவன்கிட்ட எதுக்கு நீங்க முப்பது லட்சம் பணம் வாங்கினீங்க?”
“நான் நெறைய எடத்துல பணம் வாங்கி இருந்தேன். எல்லாரும் ஒரே நேரத்துல திருப்பி கேட்டாங்க.. என்னால அப்ப பணம் சேத்த முடியல.. அப்போ இரத்தினம் தான் அவன்கிட்ட கூட்டிட்டு போனான். அவன் தான் பணமும் வாங்கி குடுத்தான்”
“பணம் வாங்கறப்ப எதுலயாவது கையெழுத்து போட்டீங்களா? அடமானம் ஏதாவது வச்சீங்களா?
“இல்ல.. அது எதுவும் வேணாம்-ன்னு சொல்லிட்டான்.. நான் ஒரு நெலம் வெலைக்கு விட்டு இருக்கேன். அது முடிஞ்சதும் பணம் தறேன்னு சொல்லி இருந்தேன்..”
“வேற எப்டி இந்த கல்யாணத்துக்கு நீங்க ஏற்பாடு செஞ்சீங்க?”
“நான் என் பொண்ணுக்கு மாப்ள பாக்கறேன் நல்ல எடம் இருந்தா சொல்லுன்னு சொல்லி இருந்தேன்.. இரத்தினம் தான் எனக்கு அந்த மேலூர் சம்பந்தம் பேசி முடிச்சான்”
“எல்லாரும் செங்கல்வராயன் தான் பேசினதா சொல்றாங்க..”
“என்கிட்ட பேசி எல்லாம் செஞ்சது இரத்தினம் தான்”, எனக் கூறிவிட்டு அமைதி ஆகிவிட்டார்.
“வாணி.. பை எடுத்துக்க.. நாங்க கெளம்பறோம் அண்ணி”, என சொல்லிக்கொண்டு வித்யாதரன் அங்கிருந்துக் கிளம்பினான்.
ஏகாம்பரத்திடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. பேசவும் விரும்பவில்லை. வாணி வந்து தனது பொருட்களை எடுத்துக்கொண்டு, அக்காவிடம் மட்டும் கூறிக்கொண்டுக் கிளம்பினாள்.
கோவிலில் இருந்து அனைவரும் வர்மன் இல்லம் கிளம்பினர். வினிதா அவர்களுக்கு ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்துச் சென்றாள்.
வேல்முருகனும் வினிதாவும் அனைத்து வேலைகளையும் இழுத்து போட்டு கொண்டு சிரிப்புடனும், மகிழ்ச்சியுடனும் செய்து கொண்டு இருந்தனர்.
“கண்ணு.. வெளக்கு ஏத்து டா”, என நீலா ஆச்சி கூறினார்.
சாமியறையில் விளக்கு ஏற்றி கற்பூரம் காமித்து அனைவருக்கும் காட்டினாள்.
வர்மன் அவளுக்கு சூடம் தொட்டு வைத்து, அவளுக்கு முதலில் விபூதி குங்குமம் வைத்து விட்டு தான் இட்டுக் கொண்டான்.
நங்கை அவனை முறைத்தபடி அடுத்தவர்களுக்கு விபூதி கொடுக்கச் சென்றாள்.
பின் மணமக்களுக்கு பால் பழம் கொடுத்துவிட்டு ஓய்வு எடுக்க அனுப்பி வைத்தனர்.
முதல் நாள் முழுக்க தூங்காமல் சுற்றியதால் வர்மன் அறைக்கு சென்றதும் உறங்கிவிட்டான். அவனது முகத்தில் அயர்ச்சியை மீறிய சிரிப்பு அமர்ந்து இருந்தது.
நங்கையும் காலையில் இருந்து நடந்த விஷயங்களில் உடல் உளைச்சல், மன உளைச்சல் ஏற்பட்டு சோர்வாக உணர்ந்தாள்.
“நல்லா தூங்கு நங்க.. நான் அப்பறமா வந்து எழுப்பறேன்”, எனக் கூறிவிட்டு வினிதா அவளை ஒரு அறையில் விட்டுச் சென்றாள்.
அவள் அப்பத்தா அருகில் இருந்தபோது உறங்கிய உறக்கம் இப்போது அவளை மீண்டும் வந்துத் தழுவியது.
மாலையில் இருவரையும் எழுப்பிக் குளிக்க வைத்து, குலதெய்வ கோவில் அனுப்பி வைத்தனர்.
“நீலா.. ஏற்பாடு ஆச்சா?”
“இன்னிக்கி அவசியம் தேவையா வேம்பு?”
“நம்ம இன்னிக்கி நழுங்கு வச்சிட்டு விற்றலாம் நீலா.. அதுங்க எப்ப வேணா அவங்க வாழ்க்கைய ஆரம்பிச்சிக்கட்டும்..”, எனக் கூறி இரவு சடங்கிற்கான ஏற்பாடுகளைச் செய்யச் சொன்னார்.
“வந்து உன் பேத்தி என்ன ஆட்டம் ஆட போராளோ?”, எனப் புலம்பியபடி நீலா ஆச்சி அனைத்தும் ஏற்பாடு செய்தார்.
கோவிலில் இருந்து வந்ததும் இருவரும் முறைத்துக் கொண்டு நிற்பது பார்த்து வேம்பு பாட்டியும், நீலா ஆச்சியும் தலையில் அடித்துக் கொண்டு தங்கள் வேலையை செய்தனர்.
“இப்ப எதுக்கு இது எல்லாம்?”, என வர்மன் கேட்டான்.
“எங்க கடம நாங்க பண்றோம் .. நீங்க புருஷன் பொண்டாட்டி என்னவோ பண்ணுங்க.. “, எனக் கூறிவிட்டு நீலா ஆச்சி சென்றுவிட்டார்.
“அம்மம்மா..”, என நங்கை ஒரு பக்கம் சிணுங்கிக் கொண்டு இருந்தாள்.
“கல்யாணம் ஆகி ரெண்டு பேரும் ஒரே ரூம்ல தான் இருக்கணும்.. தனி தனியா இருந்தா எங்க இருந்து அன்னியோனியம் வரும்? இதுலாம் செஞ்சி தான் ஆகணும்.. நீங்க என்னவேணா பேசி முடிவு பண்ணுங்க.. எங்க வேலைய நாங்க சரியா பண்ண விடுங்க..”, என வேம்பு பாட்டியும் அவளை அதட்டிவிட்டு அங்கிருந்துச் சென்றார்.
நழுங்கு முடிந்து இருவரையும் ஒரே அறைக்குள் வைத்துப் பூட்டினர். நங்கை அவனை முறைத்தபடி சென்று ஒரு பக்கம் அமர்ந்துக் கொண்டாள். வர்மனும் அவளை முறைத்துவிட்டு மற்றொரு பக்கம் சென்று அமர்ந்துக் கொண்டான்.
“நான் படிச்சி முடிக்கணும்.. அதுவர இது எல்லாம் வேணாம்..” , என நங்கை பட்டெனக் கூறினாள்.
“நீ மொத என்னய நம்பு டி.. கார்ல நான் உன்ன என்ன சொன்னேன்? கைய வெளிய நீட்டாத, முள்ளு செடி வரும்னு தானே டி சொன்னேன்.. அதுக்கு எதுக்கு அந்த மொறை மொறைச்சிட்டு பின்னாடி போய் ஒக்காந்த ?”, எனக் கேட்டான்.
“அந்த ரோட்ல முள்ளு செடியே இல்ல.. நீ வேணும்ணு தான் என்னைய கை நீட்டி வெளயாட விடாம பண்ண.. இந்த சின்ன விஷயம் கூட நீ என்னைய செய்ய விடமாட்டேங்கற .. என் அம்மம்மா கிட்ட மட்டும் அவளோ பொய் சொல்லி இருக்க.. நான் ஏன் உன்ன நம்பணும்?”, எனக் கேட்டுவிட்டு சிறுபிள்ளைப் போல முறைத்துக் கொண்டு இருந்தவளை ஒன்றும் செய்ய முடியாமல் பார்த்துக் கொண்டு நின்றான்.
“ஒரு லூச கல்யாணம் பண்ணேன் பாரு என்னைய சொல்லணும்..” , எனச் சத்தமாக முணுமுணுத்தபடி தனது போர்வையை எடுத்தான்.
“நீ தான் டா கெஞ்சி என் அம்மம்மா கிட்ட வந்து கேட்ட.. நானா உன்ன கல்யாணம் பண்ணிக்கறேன்னு சொன்னேன்? “
“இன்னொரு வார்த்த பேசாத.. போய் படு போ “, என அவளிடம் முறைத்துவிட்டு மொட்டை மாடிக்குச் சென்றான்.
அவன் போர்வையுடன் செல்வதுக் கண்டு அனைவரும் தலையில் கை வைத்துக் கொண்டனர்.
“இதுங்க எல்லாம் எப்ப திருந்தும்?”, என நீலா ஆச்சி கேட்டார்.
“அடுத்த மாசம் பரீட்சை முடியட்டும் நீலா.. அதுவர விடு.. அப்பறம் ரெண்டையும் ஒரு வழி பண்ணிடலாம்..” , எனச் சிரித்தபடி முருகனை நினைத்து உறக்கத்திற்குச் சென்றார்.
நீலா ஆச்சியும் முருகனுக்கு மனதார நன்றி கூறி வீட்டைப் பூட்டி விட்டு உறங்கினார்.