3 – ருத்ராதித்யன்
ஊர் எல்லையில் இருந்து ஒருவித கனமான நினைவுடனேயே பயணப்பட்டாள் ஆருத்ரா.
பச்சைக் கம்பளமாக விரிந்து இருபக்கமும் பசுமையும், இனிமையும், மண்வாசமும் பரப்பியபடி வந்த சில்லென்ற காற்றும், ரணதேவ்வை வேறு நினைவுகளில் மூழ்கடிக்க, ஆருத்ராவோ எதுவும் நினைவுக் கூற விரும்பாத பாவனையில் லிங்கம் வைத்திருந்த பெட்டியை இறுக்கிப்பிடித்தபடி எல்லையெற்ற பார்வையை வீசிக்கொண்டிருந்தாள்.
ரணதேவ் கண்களில் பல நினைவுகள் நிழலாடியது. மனைவியுடன் இனிமையாய் கழிந்த நாட்கள் முதல் மகனுடன் நடந்த உரையாடல்கள் வரை…..
தன் மகன் குடும்பத்துடன் இன்பமாகச் சுற்றிய தோப்பு, வயல் வரப்பு, என நினைவுகளோடு பின்னோக்கிச் சென்றுக்கொண்டிருந்தார்.
இந்நேரம் தன் மனைவி, மகன், மருமகள் எல்லாம் இருந்திருந்தால் தன் சிங்கம்மாவிற்கு திருமணம் செய்து வைத்திருப்பர். 21 வயதில் படிப்பை முடித்த கையோடு நிர்வாகப் பொறுப்பை எடுத்துக்கொண்டவள் இன்று மிகத் திறமையாக அனைத்தையும் கையாண்டு வருகிறாள்.
அவளின் மிடுக்கும், கம்பீரமும் தன் முன்னோர்களை நினைவுப்படுத்தினாலும், அதே சமயம் அவளின் சிணுங்களும், கொஞ்சும் பேச்சும் அவளை குழந்தையாக பாவிக்க வைக்கும்.
வம்சத்தை செழிக்கவைக்க மட்டுமின்றி தங்களை நம்பியுள்ள அத்தனை பேரையும் காக்க இவள் ஒருத்தி தான் உள்ளாள்.
இவ்வருடம் எப்படியும் இவளுக்கு ஏற்ற துணையைத் தேடிப்பிடித்து சேர்த்துவிட வேண்டும் என்று மனதில் தன் சிவனை நினைத்துப் பிரார்த்தித்துக் கொண்டார்.
இப்படியாக ஆளுக்கொரு சிந்தனையுடனேயே கோவிலை அடைந்தனர்.
இவர்களுக்காக காத்திருந்து பூரணகும்ப வரவேற்பளித்து உள்ளே அழைத்துச் சென்றனர் கோவில் நிர்வாகிகள்.
ஆருத்ரா கைகளில் மீண்டும் ஈசன் அமர்ந்துக் கொள்ள யாதென்று புரியாத புது உணர்வுடன், லிங்கத்தை இறுக பிடித்தபடி மூலவரை வணங்கிவிட்டு லிங்கத்தை ஹோம குண்டத்தின் முன் வைத்தாள்.
ஏறக்குறைய பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு பவள லிங்கத்தை கோவில் ஹோமத்தில் வைத்துப் பூஜிக்கின்றனர்.
குண்டத்தில் எரியும் அக்னியை விட பல மடங்கு ஜ்வாலை நிறைந்ததாகக் காட்சியளித்தது பவளலிங்கம்.
அதன் பிரகாசத்தைக் கண்ட அனைவரும் பயபக்தியுடன் கையெடுத்துக் கும்பிட்டனர்.
ஆருத்ராவிற்கு யாதென்று அறியாத புது உணர்வு முழுதாக ஆட்கொண்டு, அவளை வேறெதுவும் சிந்திக்க விடாமல் லிங்கத்தையே முழுதாக தியானிக்க வைத்தது.
இரண்டாம் ஜாமத்தில் ஆரம்பித்த ஹோமம் மூன்றாம் ஜாமம் முழுதாய் கரையும் நேரத்தில் முடிவுற்றது.
அதுவரையிலும் ஆருத்ரா இருக்கும் இடம் விட்டு அசையவில்லை. ரணதேவ் விக்கரமர் பலமுறை அழைத்தும் அவள் திரும்பாமல் கண்மூடிய படியே அமர்ந்திருந்ததால் தொந்தரவு செய்யாமல் இருந்தார்.
“அம்மா….. ஹோமம் முடிஞ்சுடுத்து பெரியவாளோட சேர்ந்து குண்டத்துக்கு பூர்ணாகுதி பண்ணிடுங்கோ ….”, என ஐயர் கூற அதன்படி ரணதேவ்வும் ஆருத்ராவும் செய்து முடித்தனர்.
பின்னர் லிங்கத்தை எடுத்துக்கொண்டு தங்கள் இல்லம் நோக்கிச் சென்று பூஜை அறையில் வைத்தனர்.
தனஞ்ஜெய ரணதேவ் விக்கிரமர் மனதில் பெரும் நிம்மதி குடிகொண்டது. ஆருத்ராவும் இத்தனை ஆண்டுகள் மனதில் பதிந்திருந்தக் கசப்பான நினைவுகளைப் புறம் தள்ளியது போன்றதொரு உணர்வு ஏற்பட்டு மன அமைதி பெற்றாள்.
“தனுப்பா…. நீங்க சொன்னாமாதிரி இங்க வந்தாச்சி. இனி நான் தினம் ஆபீஸ் போயிட்டு வந்துடறேன். நீங்க தோட்டம் வயல் எல்லாம் கவனிச்சிக்கோங்க. அதிகம் எதையும் நினைச்சிட்டு இருக்காம ரிலாக்ஸா இருங்க. வேலனய்யா….. எல்லாருக்கும் கீழ அறை குடுத்துடுங்க.. வேண்டிய சவுகரியம் செஞ்சிக்க சொல்லுங்க. எதாவது தேவைபட்டாலும் சொல்லுங்க செஞ்சிக்கலாம். முதல்ல தனுப்பாக்கு சாப்பிட ஏற்பாடு பண்ணுங்க”, என தன் தாத்தாவிடம் ஆரம்பித்து வேலனிடம் முடித்தாள்.
“சிங்கம்மா…. மேகமலைல நம்ம தோட்டம் போய் பாக்கணும். லீஸ் முடியற சமயம் வந்துரிச்சி”, ரணதேவ்.
“அதை நாமலே இனி பாத்துக்கலாம் தனுப்பா. இந்த வாரம் போயிட்டு வரேன்”, ஆருத்ரா.
“நான் போய் பாத்துட்டு இரண்டு நாள் இருந்துட்டு வரேன் டா”, ரணதேவ்.
“சரி தனுப்பா. வேலனய்யாவ கூட்டிட்டு போங்க. நானும் ஆபீஸ்ல இருந்து ஆள் அனுப்பறேன் மத்த பத்திர வேலையெல்லாம் சரிபாத்துக்கலாம்…. “, ஆருத்ரா கூறிவிட்டு தனக்கு ஒதுக்கப்பட்ட அறைக்குச் சென்றாள்.
“சரிம்மா….. வேலா…. கோவில்ல இருந்து பிரசாதம் வரும். நீ சமைக்க வேணாம். பிரசாதம் வந்ததும் கூப்பிடு…..”, என அவரும் தன் அறைக்குச் சென்றார்.
அவ்வறையைக் கண்டதும் பழைய நினைவுகள் மனதில் அலைமோத பெருமூச்சொன்றை விட்டுத் தன்னை சமன்படுத்திக்கொண்டு உள்ளே சென்று தன் மனைவியின் புகைப்படம் முன் நின்றார்.
ஆருத்ரா இங்கிருந்தவரையும் தந்தையின் அறைக்குப் பக்கத்து அறையில் தான் தங்கியிருந்தாள். இப்பொழுது இவளுக்கென பிரத்யேகமாக ரணதேவ் மேல்தளத்தில் ஓர் அறையை உருவாக்கியிருந்தார்.
இதற்கு முன் நாம் பார்த்த வீட்டை விட ஒரு மடங்கு அதிகமான இடவசதியும், கட்டிடமும் இருந்தது. வீட்டிற்கு முன்னே பூந்தோட்டமும், பின்னே வயல்வெளிகளும், சுற்றியும் இயற்கைக் காட்சிகள் விரிந்திருக்க, ஓரளவு சுத்தமான காற்றும், கண்ணுக்கு குளிர்ச்சியாகவும் இருந்தது.
மூன்றாம் தளத்தில் ஆருத்ராவிற்கு அறையைத் தயார் செய்திருந்த ரணதேவ் அவளின் விருப்பம் ஒவ்வொன்றையும் அறிந்து வைத்து அதை உருவாக்கி இருந்தார்.
முதலில் சிறிய வரவேற்பரை, அடுத்து ஓர் பெரிய கூடம். அதில் ஒரு பக்கம் புத்தகங்களும், அமர்ந்து படிக்க பல வகையான அறைகலன்களும் இருந்தன.
அடுத்து படுக்கை அறை. இங்கும் தொட்டில் போலவே செய்திருந்தனர். பெரிய ஜன்னல்கள் மூலம் உள்ளே சில்லென்ற காற்று எப்பொழுதும் வந்தது. ஆனாலும் ஏசியும் பொருத்தியிருந்தனர். பாத்-டப்புடன் கூடிய குளியலறையும் இருந்தது.
அறைக்கு மூன்று புறமும் சிட்அவுட் வைத்து அழகான பல வண்ண மலர்செடிகள் முதல் மூலிகைகள் வரை தொட்டியில் வைத்திருந்தனர்.
அவளின் பஞ்சவர்ணக்கிளிகளும், மற்ற பறவைகள் முதல் நாய் பூனை முயல் என அனைத்தும் பின்பக்க தோட்டத்தில் இருந்தது.
மனிதர்களை விடவும் பறவைகள், மிருகங்களின் மேல் நம்பிக்கையும், அன்பும் அதிகம் போல அவளுக்கு.
தன் புது அறையை ஒருவித இரசனையுடன் கண்டவள், “தனுப்பா எப்பவும் எக்ஸலண்ட் தான்”, எனக் கூறியபடி அங்கிருந்த மலர் தொட்டிகளுக்கு நீருற்றி விட்டு அங்கிருந்த ஊஞ்சலில் அமர்ந்து சுற்றியும் பார்வையைப் பதியவிட்டாள்.
மனதில் ஒரு பக்கம் இயற்கை காக்கபட்டிருப்பதால் மகிழ்ச்சியும், மறுபுறம் பழைய நினைவுகளினால் வெறுப்புணர்ச்சியும் ஏற்பட்டது.
உணர்வுகளை முகத்தில் காட்டாது எழுந்து சிறிது நேரம் நடைந்தவள், கீழிருந்து அவளின் செல்ல பிராணிகள் சத்தம் கொடுக்கவும் அவ்விடம் சென்றாள்.
வேகமாகவும் ஆர்வமாகவும் அவள் பின்பக்கம் செல்வதைக் கண்ட அத்தனை பேர் முகத்திலும் சிறுநகைப் பூத்திருந்தது.
அவளுக்கு எத்தனை வேலை இருந்தாலும் குறைந்தது ஒரு மணிநேரமாவது அவளின் செல்லப்பிராணிகளுடன் நேரம் செலவு செய்துவிட்டு தான் படுக்கச் செல்வாள்.
வெளியூர் செல்லும் சமயத்தில் வீடியோ கால் மூலமாக அனைத்து பிராணிகளிடமும் உரையாடி கொஞ்சியும், மிரட்டியும், அடம் பிடிப்பவற்றை சமாதானம் செய்து சாப்பிட வைப்பாள்.
“பாப்பா…. பிரசாதம் சாப்பிட்டு போங்க. உங்களுக்காக ஐயா காத்திருக்காங்க”, வேலன் அழைத்தார்.
“வரேன் வேலனய்யா…. கொஞ்சம் பிரசாதம் தட்டுல குடுங்க பசங்களுக்கு குடுத்துட்டு வரேன்”, எனக் கூறி வாங்கிக் கொண்டு பின்னே சென்றாள்.
பின்னால் மிகப்பெரிய தோட்டம் பராமரிக்கப்பட்டு இருந்தது. நிறைய மரங்கள் வளர்ந்து குளுமையாகவும், வாசனையாகவும் இருக்க ஆருத்ராவைக் கண்டதும் அனைத்து பிராணிகளும் ஓடி வந்தன.
முதலில் பறந்து வந்த இரண்டு பஞ்சவர்ணக்கிளிகளும் அவளின் இரு தோளில் அமர்ந்துக் கொள்ள, புறாக்கள் முதல் லவ் பேர்ட்ஸ் வரை அவளின் தலை கை என அமர்ந்து எழுந்து அவளை கீழே அமரச்சொல்லிச் சுற்றிச் சுற்றி வந்தன.
அத்தனை இந்திய நாட்டு நாய்களும் ஒவ்வொரு ஜோடி இருந்தது. நம் தமிழக நாய்கள் என்றால் கொம்பை, கண்ணி, சிப்பிப்பாறை, இராஜபாளையம் வகைக்கு இரண்டு ஆண் பெண் என இருந்தது. இது தவிர சில வெளிநாட்டு நாய்களும் இருந்தன.
முயல்கள் அவளின் காலடியை சுற்றி சுற்றி வர நாய்க்குட்டிகள் இரண்டு அதனோடு விளையாடியபடி உருண்ணு பெரண்டது.
பூனைகள் மரத்தின் மேல் இருந்து ஒவ்வொன்றாய் குதிக்கப் பார்த்து நாய்கள் இருப்பதால் மேலே நின்றே அவளைப் பார்த்து அழைத்தன.
“எல்லாரும் வந்துட்டீங்களா? நம்ம புது வீடு பிடிச்சி இருக்கா எல்லாருக்கும்?”, ஆருத்ரா கேட்கவும் அனைத்தும் சத்தம் எழுப்பியது.
அதில் இதழ் முழுதாய் விரித்து புன்னகைத்தவள், “சரி எல்லாரும் சண்டை போடாம நம்ம இடத்தை பத்திரமா பாத்துக்கணும். குட்டிங்கள நல்லபடியா வளத்துங்க. இந்த இடம் தாண்டி எங்க போனாலும் இராத்திரி இங்க வந்திடணும். புரிஞ்சிதா?”, என அவள் கேட்க அனைத்து சரி என்பது போல மெல்லிய சத்தம் எழுப்பியது.
நாய்கள் அனைத்தும் வாலாட்டியபடி அமர்ந்தது. பூனைகள் மேல் இருந்தபடியே மியாவ் மியாவ் என சத்தம் எழுப்ப கிளிகள் கீச்சிட்டது.
இரண்டு கிளிகளுக்கு பேச்சு பயிற்சி கொடுத்து இருப்பதால் “சரி சரி”, என அழகாய் கூறியது.
அவள் அனைத்திற்கும் பிரசாத உணவினை சிறிது சிறிதாக ஊட்டிவிட்ட பின் சாப்பிடச் சென்றாள்.
“என்னம்மா உன் தோழமைகளுக்கு எல்லாம் குடுத்துட்டியா?”, ரணதேவ் சிரிப்புடன் கேட்டார்.
“குடுத்துட்டேன் தனுப்பா….. எப்ப இவங்கள இங்க அனுப்பி வச்சீங்க. இராத்திரி கூட அங்க தானே இருந்தாங்க”, ஆருத்ரா மெல்லிய முறுவலுடன் பதில் கேள்வி கேட்டாள்.
“காலைல சீக்கிரமே வண்டிய வரசொல்லி ஏத்தி அனுப்பிட்டேன். கொம்பனை ஏத்த தான் படாதபாடு பட்டாங்க. அப்பறம் நான் சத்தம் போட்டதும் அமைதியா வண்டில ஏறிட்டாங்க”, ரணதேவ்.
வேலன் ஒரு பக்கம் பரிமாற இருவரும் பேசியபடியே உண்டு முடித்தனர்.
“சரிம்மா… நான் கொஞ்ச நேரம் தூங்கறேன். இன்னிக்கு இங்கிருந்தே வேலை பாருங்க. உன் பிஏ இன்டெர்வ்யூ நாளைக்கு வச்சிக்க சொல்லி இருக்கேன்”, ரணதேவ்.
“அப்ப நான் யாரு ?”, எனக் கேட்டபடி சக்தி நின்றிருந்தான்…..