4 – ருத்ராதித்யன்
“உன்ன எப்ப வரசொன்னேன் நீ எப்ப வர ?”, என ஆருத்ரா அவனைப் பார்த்துக் கேட்டாள்.
“நீங்க பாட்டுக்கு வாய்ல ஈஸியா சொல்லிட்டு வந்துட்டீங்க… நான் எல்லாத்தையும் இடம் மாத்திட்டு தானே வரமுடியும்…. காலைல சொல்லிட்டு ஒரு மணிநேரத்துல நான் இங்க இருக்கணும்னா மேஜிக்கால தான் நடக்கும்….. “, சக்தி உரிமையாக சலித்தபடி டைனிங் டேபிளிலில் வந்தமர்ந்தான்.
“டேய்…. நில்றா…. “, ரணதேவ்.
“என்ன தாத்தா? எனக்கு கால் எல்லாம் வலிக்குது…. காலைல இருந்து ஒரு நிமிஷம் கூட உட்காராம வேலை பாத்துட்டு இருக்கேன் தெரியுமா? “, சக்தி வாய் ஓயாமல் பேசியபடி டேபிளை ஆராய்ந்தான்.
ஆருத்ரா மெலிதாகப் புன்னகைத்து விட்டு, ” நாளைக்கு தாத்தா கூட ஊருக்கு கிளம்பு…. இரண்டு நாள்ல வேலைய முடிச்சிட்டு இங்க வந்துடணும்…”, எனக் கூறியவள் அவனைக் கடந்து தன்னறைக்கு செல்ல திரும்பியவள்,” பத்து நிமிஷம் தான் மேல வந்துடு”, எனக் கூறி மேலே சென்றாள்.
“ஒரு சின்ன பையன இப்படியெல்லாம் நீங்க கொடுமை பண்ணக்கூடாது….. அரைநாள் வேலை செஞ்சதுக்கு இரண்டு நாள் ரெஸ்ட் குடுக்கணும்னு கூட உங்களுக்கு தெரியாதா?”, எனச் சலித்தபடிக் காலை மாற்றி மாற்றி நின்றான் சக்தி.
ரணதேவ் அவனின் செய்கைகளைக் கண்டு உள்ளூர சிரித்தபடி வெளியே முறைப்புடன் அவனைப் பார்த்தார்.
“தாத்தா… ப்ளீஸ் தாத்தா…. எனக்கு பசிக்குது…. பத்து நிமிஷத்துல இரண்டு நிமிஷம் போயிரிச்சி…. லேட்டா போனா நான் தான் திட்டு வாங்கணும்”, சக்தி பரிதாபமாக முகத்தை வைத்துக்கொண்டு பேசினான்.
ரணதேவ் கண் காட்ட, வேலனய்யா உள்ளே குரல் கொடுக்க, சூடான மசாலா டீயுடன் உளுந்துவடை வந்தது.
சக்தி அவசரமாக சாப்பிட்டு விட்டு மேலே ஓடினான்.
“ஐஞ்சு நிமிஷம் லேட்”, ஆருத்ரா ஆபீஸ் டேபிளில் அமர்ந்தபடிக் கூறினாள்.
“மேடம்…. சாப்பிட்டுட்டு வந்தேன்”, சக்தி மெல்லமாகக் கூறினான்.
“தண்ணி குடிச்சிட்டு உட்கார். வேலை இருக்கு “, என ஆருத்ரா கண்டிப்புடன் கூறியதில் சக்தி அன்று செய்த வேலைகளைப் பட்டியலிட ஆரம்பித்தான்.
அவள் காலை கூறியதில் முக்கால் பாகம் முடித்துவிட்டு வந்திருந்தான் சக்தி, ஆனாலும் பலமான பாராட்டுவிழா நடந்தேறியது.
“உன்கிட்ட என்ன சொன்னேன் நீ என்ன செஞ்சிருக்க? இத செய்ய உனக்கு இவ்வளவு நேரமா? இன்டெர்வ்யூ நாளைக்குன்னு சொல்லிட்டாங்கள்ல… நீ ஏன் மத்த வேலைய முடிக்கல?”, ஆருத்ரா.
சக்தி திருதிருவென விழித்தபடி நின்றான்.
“சிபிஐல ஜாயின் பண்ணா ஆயிரம் கேள்வி கேப்பானுங்கன்னு இங்க வந்தா, இங்க அதுக்கு மேல இருக்கு. சக்தி உனக்கு ஏன்டா இன்னும் நல்ல நேரம் வரமாட்டேங்குது? வழக்கம்போல வாங்கற திட்ட வாங்கிட்டு போய் தூங்கணும்”, என மனதில் நினைத்தபடி ஆருத்ராவைப் பார்த்துக்கொண்டு இருந்தான்.
“மரம் மாறி நிக்காம இராத்திரிக்குள்ள ஆபீஸ் அ பக்கத்துல ஷிப்ட் பண்ணிட்டு வந்துடு”, என அசால்ட்டாக கூறிவிட்டு, ஆருத்ரா அடுத்த வேலையை ஆரம்பித்தாள்.
சக்தி மேலும் கீழும் தலையாட்டியபடி வெளியே ஓடினான்.
ஆருத்ரா அவன் சென்ற பிறகு மீதமிருந்த கோப்புகளை எல்லாம் சரி பார்த்துவிட்டு, பின் பக்கத் தோட்டத்திற்குச் சென்றாள்.
கொம்பன் எனும் நாய் முதலில் ஓடிவந்து அவளின் வலதுபுறம் நின்றுக் கொண்டது.
பஞ்சவர்ணக்கிளி ஒன்று பறந்து வந்து அவளின் தோளில் அமர்ந்துக் கொண்டது.
அந்த வீட்டையும் அருகில் இருந்த தோட்டங்களையும், நாய் மற்றும் கிளியுடன் நடந்து அவைகளுக்கு பாதை காட்டியபின் வீடு திரும்பினாள்.
கொம்பன் வேறொரு நாயுடன் தனியாக இரண்டு முறை அவள் சென்ற இடங்களுக்கு சென்று விட்டு இல்லம் திரும்பியது.
இரவில் மட்டுமல்ல பகலிலும் எந்த பிராணியும் கூண்டில் அடைக்கப்படக்கூடாது என்பது அவளின் கட்டளை.
குட்டி முதலே அவைகளை அவ்வாறு பழக்கி, தேர்ந்த காவல் மற்றும் வேட்டை நாய்களாக மாற்றி இருந்தாள் ஆருத்ரா. கிளிகள் முதல் அனைத்து பிராணிகளும் அவளின் அரவனைப்பில் நாளுக்கு சில நொடிகளேனும் இல்லாமல் இருக்காது.
அந்த பெரிய கேட் மூடியபடி இருக்க அனைத்து பிராணிகளும் வீட்டைச் சுற்றி வந்தபடியே இருக்கும்.
அவைகளுக்கு தங்கவென தனித்தனியே சிறு சிறு கூரைவீடுகள் தயார் செய்திருந்தனர்.
பறவைகள் எல்லாம் மரத்தில் கூடு கட்ட ஆரம்பித்திருந்தது. முயல்கள் எல்லாம் புல் தரையிலும் சிறிய மரவீட்டில் புல் பரப்பப்பட்ட இடத்தில் படுத்துறங்கும்.
பூனைகளுக்கு சிறிய வீடுகளும் இருந்தது.
அன்று இரவு அங்கிருந்த ஒரு பெண் நாய் ஒரே ஒரு குட்டியை பிரசவிக்கும் நேரம் வந்தது.
ஆருத்ரா அதன் பிரசவ வலியுடன் தொடர்ந்த குரலைக் கேட்டு, அறையில் இருந்து கீழே வந்து அந்த தாயை தடவிக் கொடுத்து தேவைப்பட்ட உதவிகள் செய்தாள்.
சிறிது நேர போராட்டத்திற்கு பிறகு அழகான சாக்லேட் நிற குட்டி ஒன்று வெளியே வந்தது.
தாய் தன் குட்டியை நாவால் நக்கியே சுத்தம் செய்தது. ஆருத்ரா வெதுவெதுப்பான நீரில் தாயையும், சேயையும் சுத்தம் செய்து வேறு இடத்தில் படுக்க வைத்தாள்.
கையில் இருந்த குட்டியை கீழே விடவே மனதில்லாமல் பார்த்துக் கொண்டே இருந்தாள்.
ஒரு நொடி அது கண் திறந்து அவள் முகத்தைப் பார்த்துவிட்டு மீண்டும் துயில் கொண்டது.
ரணதேவ் காலையில் அந்த குட்டியைப் பார்த்து தடவி கொடுத்தார். அவரையும் ஒரு முறை பார்த்துவிட்டு கண் மூடி படுத்துவிட்டது.
பூஜை அறையில் இருந்த லிங்கம் அதிகாலை சூரிய ஒளியில் தீஜ்ஜூவாலையென மின்னி மறைந்தது ஒரு முறை.
அஜ்ஜுவாலை புதிதாய் பிறந்த நாய்
குட்டியின் மீது படர்ந்து அதனுள் புதைந்தது.
அச்சமயம் ஆருத்ரா அங்கே வர அவளை விழி இமைக்காமல் பார்த்த குட்டி தட்டுத் தடுமாறி அவளின் காலில் மோதி அவள் பாதங்களில் தலை வைத்துப் படுத்தது.
அதன் மிருதுவான தோள் அவளை சந்தோஷிக்க, அது அவளின் பாதத்தில் படுத்ததும் மெய்சிலிர்க்க அதைத் தூக்கி கையில் வைத்து தலையில் முத்தம் வைத்தாள்.
“சிங்கம்மா….. நான் கிளம்ப நேரம் ஆச்சி. சக்தி எப்ப வருவான்?”, எனக் கேட்டபடி ரணதேவ் அங்கே வந்தார்.
“இன்னும் வரலியா அவன்? “, என புருவம் முடிச்சிட போனை கையில் எடுத்தாள்.
“நான் வந்துட்டேன் தாத்தா….. லக்கேஜ் கூட எடுத்து வச்சிட்டேன். வாங்க போலாம்”, என சக்தி பேசியபடியே அங்கே வந்தான்.
“இராத்திரி எங்க போன?”, ஆருத்ரா சக்தியைக் கூர்ந்துப் பார்த்தபடிக் கேட்டாள்.
“நீங்க சொன்ன வேலைய தான் செஞ்சிட்டு வந்தேன் மேடம்…. “, சக்தி குரல் தழைத்துக் கூறினான்.
“அங்க போனதும் கால் பண்ணு. இனிமே லீஸ் விடவேணாம். அந்த பேப்பர் வர்க் முடிச்சிட்டு எனக்கு அனுப்பிடு. இரண்டு நாள்ல இங்க இருக்கணும்”, கட்டளையாக வந்தது ஆருத்ராவிடம் இருந்து.
“சிங்கம்மா…. இரண்டுங்கிறது அதிகம் ஆகலாம். வேலை முடிஞ்சதும் இவனை அனுப்பிடறேன். நானும் வேலனும் இருந்துட்டு வரோம்”, ரணதேவ்.
“தனுப்பா…..”, ஆருத்ரா கண்களில் ஏன் எதற்கு என்ற கேள்விகள் தொக்கி நின்றது.
“நான் முதல் முதல் என் சம்பாத்தியத்தில் வாங்கின இடம் அது. கொஞ்ச நாள் இருக்க ஆசைபடறேன். நீயும் வாரக் கடைசில அங்க வாம்மா… “, ரணதேவ் கண்களில் சிறுகுழந்தையின் அடம் தெரிந்தது.
“எங்கெல்லாம் இன்னும் இழுப்பீங்கன்னு நானும் பாக்கறேன். எனக்கு டைம் ஆச்சி இன்டெர்வ்யூ இருக்கு. பத்திரமா தனுப்பாவ அழைச்சிட்டு போ சக்தி. வேலனய்யா அவர பாத்துக்கோங்க…..”, எனக் கூறி நிமிர் நடையில் தன் கார் நோக்கிச் சென்றாள்.
மதுரையில் இருந்து யாத்ராவின் தாய் தந்தையை ஏற்றியபடி மேகமலைக்கு வந்து சேர்ந்தது ஆதித்யன் அனுப்பிய வாகனம்.
யாத்ராவின் தந்தை பூமிநாதன், தாய் மாதங்கி.
அந்த கார் வீட்டை நெருங்கிய சமயம் இதழியும், சிரஞ்சீவும் நடைப்பயிற்சியை முடித்துவிட்டு அப்பொழுது தான் உள்ளே வந்தனர்.
அளவான அழகான வீடு அவர்கள் கண்முன்னே தெரிந்தது.
வாசலில் நின்றிருந்த ஜோடியைக் கண்டு இருவரும் சிரித்தபடி இறங்கி அவர்களை அணைத்துக் கொண்டனர்.
“எப்படிம்மா இருக்க? உடம்பு பரவால்லயா “, என மாதங்கி அன்புடன் நலம் விசாரித்தார் இதழியிடம்.
“வீட்டுக்கு வாடான்னு சொன்னா அங்க வராம பொண்டாட்டியே கதின்னு இங்க இருக்க நீ?”, பூமிநாதன் கிண்டல் செய்தார்.
“உங்க கிட்ட தானே ப்பா நான் கோச்சிங் வந்தேன்…நீங்க சொன்னமாதிரி சரியா நடந்துக்கறேனா?”, என சிரஞ்சீவ் அவரை வாரினான்.
“உங்களுக்கு இது தேவையாங்க?”, மாதங்கி கேட்டார்.
“சரி சரி…. எல்லாம் நமக்குள்ள இருக்கட்டும். எங்க நெடுமாறன்? அவன் வந்திருக்கானா?”, பூமிநாதன்.
“அவன் சென்னை போய் இருக்கான்ப்பா…. வாங்க உள்ள போகலாம்”, என உள்ளே அழைத்தான்.
“வாங்க அங்கிள்… வாங்க ஆண்டி…. ஜர்னி எப்படி இருந்தது?”, எனக் கேட்டபடி அர்ஜுன் அவர்களை வரவேற்றான்.
“நல்லா இருந்தது மை பாய்…. லூக்கிங் சோ ஹேன்சம் தென் பிபோர்…. “, பூமிநாதன் தோள்களில் தட்டிக் கொடுத்தார்.
அர்ஜுன் சின்ன சிரிப்பொன்றை உதிரவிட்டு உள்ளே அழைத்துச் சென்றான்.
“வாங்க சம்பந்தி… வாம்மா …..”, என தமிழன்பன் அன்போடு வரவேற்றார்.
அவரைத் தொடர்ந்து கயலும், “வாங்கண்ணா…. வாங்கண்ணி…. “, என வரவேற்றார்.
“பிரயாணம் சவுகரியமா இருந்ததா சம்பந்தி? நேத்தே வந்திருக்கலாம் ப்ளைட் லேட்னு இளா சொன்னான். அதான் அந்நேரம் மலை ஏற வேணாம்னு சொன்னேன். உங்களுக்கு வேற எந்த குறையும் இல்லைல்ல? “, தமிழன்பன் அக்கறையுடன் விசாரித்தார்.
“எங்களுக்கு ஒரு குறையும் இல்ல அண்ணா. இன்னொரு பொண்ணு இருந்திருந்தா பெரிய மாப்பிள்ளைக்கு குடுத்து இருக்கலாம்னு தான் நாங்க பேசிப்போம்…. மத்தபடி எல்லாமே நல்லா இருக்கு”, எனக் கூறி மாதங்கி சிரித்தார்.
“ஹாஹா…. சரிதான்… என்னை பார்த்தா பாவமா இல்லையா அத்தை உங்களுக்கு?”, எனக் கேட்டபடி ஆதித்யன் அங்கே வந்து அவர்களை வரவேற்று நலம் விசாரித்தான்.
“ஏன் மாப்ள? அவ்வளவு கொடுமையா என்ன சொல்லிட்டோம் இப்ப?”, பூமிநாதன் சிரித்தபடி கேட்டார்.
“ஊருக்கு ஒரு யாத்ரா போதும் மாமா. ஒரே வீட்ல இரண்டு யாத்ரான்னா வீடும் தாங்காது, நாங்களும் தாங்கமாட்டோம்”, அழகாக பல் வரிசை தெரிய சிரிக்கும் ஆதித்யனை சிரஞ்சீவ் முறுவலுடன் பார்த்தான்.
ஆதித்யன் மாநிறம், கட்டுப்கோப்பான உடல், ஆறடிக்கும் மேல உயரம், தொழில் சாதுர்யம், ஆட்களை எடை போடுவதில் கில்லாடி, நிச்சயமாக வருங்காலத்தில் மிகவும் சிறப்பான எதிர்காலம் தொழிலில் உண்டு என்று அனைவரும் அடித்துக் கூறுவர், அவன் முகம் இறுகி கண்டதில்லை இதுவரை சிவி.
“என்னங்க என் அண்ணன அப்படி சைட் அடிக்கறீங்க?”, இதழி கிசுகிசுத்தாள்.
“உங்க அண்ணனுக்கு யாத்ராவ விட பெரிய ஆப்பு தான் பொண்டாடியா வரும் முகை”, சிவி.
“அதுல்லாம் என் அண்ணன் குணத்துக்கு ஏத்தாமாதிரி தான் வருவாங்க”, இதழி.
“ம்ம்க்க்கும்….உங்க அண்ணன் குணத்துக்கு ஏத்தாமாதிரி தானே…. என்னை தூக்கிட்டு வந்து கல்யாணம் செஞ்சு வச்ச உன் அண்ணனுக்கு எப்பேர்பட்ட பொண்ணு வரும்னு நீயே யோசிச்சிக்க…. அர்ஜுன் யாத்ராகிட்ட சிக்கிட்டான், நான் உன்கிட்ட, ஆதி யார் கிட்டயோ? ஆனாலும் உன் அண்ணன நல்லா படுத்தி எடுக்கற பொண்ணு நான் வரும்”, சிவி.
“உங்களுக்கு இப்ப நாங்க என்ன குறை வச்சிட்டோம்னு இப்படி சொல்றீங்க?”, இதழி கோபமாகக் கேட்டாள்.
“குறையே இல்ல தாயே…. எல்லாமே நல்லா வச்சி செஞ்சிட்டீங்க…. நீ மலை ஏறாதே… “, சிவி அவளை சமாதானம் செய்தான்.
“என்னாச்சி மச்சான் ?”, அர்ஜுன்.
“ஒன்னுமில்ல மாப்ள…. கல்யாணம் எப்ப வைப்பாங்கன்னு கேட்டேன்”, சிவி சமாளித்தான்.
“இன்னும் பெரியவன் இருக்கான்ல.. அவனுக்கு பொண்ண பாத்து கல்யாணம் பண்ணணும்ல…. அதுக்கப்பறம் இவங்களுக்கு நாள் பாத்தா போதும்”, கயல்.
“ஆமாம்மா…. பொண்ண பார்க்க ஆரம்பிச்சிட்டீங்களா என்ன?”, பூமிநாதன்.
“பாத்துட்டு இருக்கோம் அண்ணா. இன்னும் எதுவும் அமைஞ்சி வரல…. இந்த வாரம் குலதெய்வம் கோவில் போயிட்டு வரணும்னு சொல்லிட்டு இருக்கேன்”, கயல்.
“எப்ப போறீங்க அண்ணி? எந்த ஊர்?”, மாதங்கி.
“கன்னியாகுமரி அண்ணி… அங்க தான் பூர்வீகம்…. இவங்க தாத்தா காலத்துலயே இங்க வந்துட்டாங்க… நீங்களும் வாங்களேன் போயிட்டு வரலாம்”, கயல்.
“இவர் என்ன சொல்றாரோ தெர்லயே அண்ணி….எனக்கு நம்ம தமிழ்நாடு தான் பிடிக்கும். ஆனா வேலை டெல்லில…. எப்ப இவர் வேலைய விடுவாருன்னு இருக்கு”, மாதங்கி தன் ஆதங்கத்தைக் கூறினார்.
“ஐயா….. அம்மா….. இங்க வாங்களேன்……”, என வேலையாள் ஒருவர் வந்து அழைக்க, கயல் சென்றுப் பார்த்துவிட்டு மற்றவர்களையும் அழைத்தார்….
அங்கே…….