3 – வலுசாறு இடையினில்
“என்ன ஜோசியரே ? என்ன ஆனா ?”, ஏகாம்பரம் வெறுப்புடன் கேட்டார்.
“இந்த பொண்ணுக்கு கல்யாணம் பண்றப்போ பெரிய பிரச்சனை நடக்கும். உங்களுக்கு சிரமம் இருக்கறபோ தான் கல்யாணம் முடியும் “, ஜோசியர் தயங்கியபடியே கூறினார்.
“என்ன சிரமம் வரும் ஜோசியரே ? கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க “, காமாட்சி பதற்றமாகக் கேட்டார்.
“எப்டி வேணா வரலாம் மா .. ஆனா இந்த பொண்ணு கல்யாணம் யார் நினைச்சாலும் தடுக்க முடியாது.. இன்னிக்கி இருந்து 3 மாசம் முடியறப்போ கல்யாணம் முடிஞ்சி இருக்கும்“
“யோவ் ஜோசியரே .. என்ன உனக்கு எவ்ளோ பணம் வேணும்னு சொல்லு தரேன். தேவை இல்லாம எங்களுக்கு பிரச்சனை வரும் அதுக்கு அந்த கோவில் போ.. இந்த பரிகாரம் பண்ணுன்னு என்னை மிரட்டாத.. “, ஏகாம்பரம் கோபமாகப் பேசினார்.
“ஐயா இங்க பணம் ஒரு விஷயமே இல்லை.. விதிப்படி தான் நடக்கும். அது முன்னவே இந்த ஜாதாகத்துல தெரியறதால உங்களுக்கு சொல்லி கவனமா இருக்க சொல்றேன் “, ஜோசியர் திடமாக அவர் கண் பார்த்துப் பேசினார்.
“கேட்டியா டி ? இதுக்கு தான் அந்த சனியன் பொறந்ததும் கொல்ல சொன்னேன். என் அம்மாவும் நீயும் சேர்ந்து இவ்ளோ நாள்வரை வீட்ல வச்சிக்கற மாதிரி பண்ணிட்டீங்க .. இப்போ அந்த கருமாந்தறத்தால எனக்கு பிரச்சனை வரும்னு சொல்றான். ஏதோ ஒண்ணுன்னு தள்ளினா போதாதுன்னு ஜாதகம் பாத்து தான் பண்ணனும்னு கூட்டிட்டு வந்த .. இப்போ என்ன ஆச்சி பாரு .. “, இடம் பொருள் அறிதல் ஏதும் இன்றி காமாட்சியைத் திட்டினார் ஏகாம்பரம்.
“ஐயா .. ஒரு நிமிஷம் .. இந்த பொண்ணு பொறந்ததால தான் இன்னிக்கி நீங்க இவ்ளோ நல்ல நிலமைல இருக்கீங்க .. பொண்ண இப்படி பேசறது நல்லது இல்ல .. அதுவே உங்க வம்சத்த பாதிக்கும் ..”, ஜோசியர் நங்கையைப் பற்றி பேசிய பேச்சில் வருந்திக் கூறினார்.
“நீ சும்மா இருய்யா .. என் பையன் பொறந்த அப்பறம் தான் நான் நல்லா இருக்கேன். இந்த சனியனால என் மானம் தான் போச்சி .. மொதலே பொட்டச்சிய பெத்து வச்சி இருக்கான்னு ஊர்ல அத்தனை பயலும் என்னை கேலி பண்ணத இன்னும் நான் மறக்கல.. அத மொதல்ல வீட்ட விட்டு வெரட்டி விட்டா தான் எனக்கு நிம்மதி .. இந்த ஜாதகத்த நீயே வச்சிக்க, பொண்ணு போட்டோவ ரெண்டு நாள்ல கொண்டு வரேன் .. நீயே தரக வேலையும் பாக்கறல்ல .. நீயே சீக்கிரம் ஒருத்தன பேசி முடி .. “
“அப்பறம் என் அந்தஸ்துக்கு ஏத்த இடமா பாரு. அம்பது சவரன் போடுவேன், கூட பத்து இருவது போடணும் நாலும் பிரச்சனை இல்ல .. சீக்கிரம் அந்த சனியன என் வீட்ட விட்டு விரட்ட வேண்டியது உன் பொறுப்பு “, எனக் கூறிவிட்டு மனைவியை இழுத்துக் கொண்டுச் சென்றார்.
“ஆண்டவா .. நீ தான் இந்த மனுஷங்களுக்கு நல்ல புத்தி தரணும் .. “, என ஆண்டவனை வேண்டியபடி, நங்கையின் ஜாதகத்தை எடுத்து சாமிபடம் கீழே வைத்தார் ஜோசியர்.
“ஏய் .. நான் போய் பாங்க்ல பணம் எடுத்துட்டு வரேன் .. நீ உள்ள போய் நகை பாத்துட்டு இரு “, என ஒரு நகைக்கடை வாசலில் காமாட்சியை இறக்கி விட்டுவிட்டுச் சென்றார்.
காமாட்சி கண்களைத் துடைத்தபடி உள்ளே சென்று நகையை தேர்வு செய்ய ஆரம்பித்தார்.
அரை மணி நேரத்தில் வந்தவர் மனைவி எடுத்து வைத்திருந்த நகைகளைப் பார்த்துவிட்டு, “என்ன டி இது ? இவ்ளோ மெலிஸா எடுத்து வச்சி இருக்க ? உன் அப்பனா வந்து பணம் கட்ட போறான் ? என் கௌரவம் ரொம்ப முக்கியம் .. நீ ஓரமா நில்லு .. நான் எடுக்கறேன் “, என அவரே பெரிய அளவிலான நகைகளை தேர்வு செய்ய ஆரம்பித்தார்.
“உங்க பொண்ணு என்ன மாதிரி இருப்பாங்க சார் ? ஒல்லியா ? குண்டா ? உயரமா? இப்படி .. அதுக்கு தகுந்த டிசைன் எடுத்து காட்டுவோம் “, பணிப்பெண் கேட்டார்.
“என் பொண்ணு உன்ன விட கொஞ்சம் உயரம் அதிகம். குண்டும் இல்ல ஒல்லியும் இல்ல .. “, காமாட்சி பதில் கூறினார் .
“சரிங்க மா .. இதுலாம் பாருங்க .. புது டிசைன் .. எல்லாமே உங்க பொண்ணு உருவத்துக்கு சரியா இருக்கும் . நீங்களும் மனசுல யோசிச்சி பாத்து அவங்களுக்கு எது நல்லா இருக்குமோ எடுங்க “, எனக் கடைபரப்ப ஆரம்பித்தார் பணிப்பெண்.
“சீக்கிரம் எடு .. இது எல்லாமே நல்ல கனமா தான் இருக்கு .. “, என ஏகாம்பரம் ஒரு பக்கம் காமாட்சி ஒரு பக்கம் என நகை எடுத்து முடித்தனர்.
“நாளைக்கு போட்டோ எடுக்க போகணும் . அப்போ எல்லாத்தையும் போட்டு பாத்துடு, ஏதாவது சரி இல்லைன்னா கொண்டு வந்து சரி பண்ணிக்கலாம் “, பணம் கட்டி நகை வாங்கிக்கொண்டு வீட்டிற்குப் புறப்பட்டனர்.
“சரிங்க“
“புது புடவை இருக்கா ?”
“இருக்குங்க .. “
“அதுக்கு தேவையான மத்த எல்லாம் சரியா இருக்கான்னு பாத்துக்க .. பக்கத்து வீட்ல குடுத்து ராத்திரி வாங்கிடு..”
“சரிங்க “
“நாளைக்கு காலேஜ் போக வேணாம்ணு சொல்லு .. ஒழுங்கா நேரமா தூங்கி நேரமா எந்திரிக்க சொல்லு .. “
“சரிங்க “
“வேற ஏதாவது வாங்கணுமா ?”
“இல்லைங்க .. ஏங்க .. ஒரு விஷயம் ..”, காமாட்சி தயங்கித் தயங்கிக் கேட்டார் .
“என்ன ?”
“இல்ல .. ஜோசியர் நமக்கு பிரச்சனை வரும்ன்னு சொன்னாரு .. அது ..”
“அந்த ஆளு பணத்துக்காக அப்படி சொல்லுவான் . அதான் அவன்கிட்டயே வரன் பாக்க குடுத்ததும் அமைதி ஆகிட்டான்ல .. கமிஷன் பெருசா குடுத்துக்கலாம் .. என் கௌரவத்துக்கு தகுந்த எடத்த பாக்கட்டும்“
“சரிங்க ..”
மாலை வீட்டிற்கு வந்த நங்கை தாயிடம் சென்றாள்.
“அம்மா .. ஒரு டீ “
“பொம்பள புள்ளை வந்ததும் வேலை செய்யணும்.. இப்படி வேலை வாங்க கூடாது .. போய் மூஞ்சி கழுவிட்டு வந்து போட்டு குடி. தம்பிக்கும் இஞ்சி தட்டி போட்டு வச்சி எழுப்பு .. நேத்து நீ அந்த நோட்ல எழுதாம விட்டதால, இன்னிக்கி அவன் பள்ளிக்கூடம் போகாம லீவு போட்டுட்டான்”, எனக் கூறிய படி அவள் அளவு ஜாக்கெட்டை எடுத்துக்கொண்டு பக்கத்து வீட்டிற்குச் சென்றார்.
“அவன கெடுக்கறதே இந்த அம்மா தான் .. நானே எவ்ளோ நாளுக்கு எழுத முடியும் ? அவன் வேலைய அவன செய்ய விட்றதே இல்ல.. அவன் எப்படி தான் படிச்சி உருப்படுவானோ தெர்ல”, எனத் தனக்குத் தானே பேசிக்கொண்டு முகம் கழுவி வந்தாள் .
“இந்தாடா டீ .. லீவு போட்டியே ஒக்காந்து ரெகார்ட் எழுத வேண்டியது தானே ? தூங்கிட்டு இருக்க “, என அவனைத் திட்டியபடி எழுப்பினாள்.
“நீ எதுக்கு இருக்க ? உன்னால தான் நான் லீவு போட வேண்டியதா போச்சி .. ஒக்காந்து எழுதி குடுத்துட்டு சீக்கிரம் போய் தூங்கு. நாளைக்கும் நான் லீவு போடணும் “, என டீயை குடித்துவிட்டு விளையாடக் கிளம்பிப்போனான் .
“எதுக்கு சீக்கிரம் தூங்கணும் ?”, யோசனையுடன் தாயை தேடி சென்றவளுக்கு அவர் அறையில் இருந்த பைகள் விஷயத்தைக் கூறியது.
“அந்த வினி எருமமாடு இன்னிக்கி தான் சொன்னா .. நான் வீட்டுக்கு வரப்போ இப்படி இருக்கு .. அவள .. “, எனப் பல்லைக் கடித்தாள் நங்கை.
“அம்மா .. இப்போ எதுக்கு நகை துணி எல்லாம் எடுத்து இருக்கீங்க ?”
“எப்போ என்ன பண்ணனும்ன்னு எங்களுக்கு தெரியும் . நாளைக்கு தலைக்கு குளிச்சி இந்த புடவை கட்டி தயாராகு. போய் போட்டோ புடிச்சிட்டு வரணும்”, எனக் கூறிவிட்டு அடுப்படியில் புகுந்துக்கொண்டார்.
“அம்மா .. இன்னும் என் படிப்பு முடிய மூணு மாசம் மேலயே இருக்கு .. நான் இத முழுசா படிச்சிக்கறேன் மா .. அப்பா கிட்ட சொல்லுங்க மா “, என பின்னோடு சென்றுக் கெஞ்சினாள்.
“ஏன் இப்போ முழுசா படிக்கலன்னா என்ன ? நாளைக்கு என் கௌரவத்துக்கு ஏத்த இடம் வந்தா கல்யாணம் உடனே நடக்கும். இன்னிக்கி படிச்ச பொண்ணு தான் வேணும்னு மாப்ளை பசங்க கேக்கறதால தான் உன்னை படிக்க வச்சேன். எதுவும் பேசாம அவனுக்கு ரெகார்ட்நோட் எழுதி குடுத்துட்டு தூங்கு .. “, என தந்தை அதட்டவும் வாய்மூடி அறைக்குள் சென்றுவிட்டாள்.
“சே இன்னிக்கி வேலை கெடச்ச சந்தோஷம் கூட முழுசா அனுபவிக்க முடியல .. நாளைக்கு போட்டோ மட்டும் தானா இல்ல நிச்சயமே பண்ணிடுவாங்களா தெரியல “, என பல யோசனைகளுடன் ராஜனின் ரெகார்ட் நோட்-ஐயும் எழுதி முடித்தாள்.
“ஏய் நோட்ல எழுதி முடிச்சிட்டியா ?”, எனக் கேட்டபடி ராஜன் உள்ளே வந்தான் .
“இந்தா .. இதான் கடைசி இனிமே நான் உனக்கு எழுதி தர மாட்டேன் “, எனக் கூறியபடிக் கொடுத்தாள்.
“போடி .. உன்ன விட்டா ஆளா இல்ல .. நீ சீக்கிரம் இந்த வீட்ட விட்டு கெளம்பர வழிய பாரு “, திமிராகப் பேசிவிட்டுச் சென்றான் .
“சே .. அக்கான்னு ஒரு மரியாதை அன்பு பாசம் ஏதாவது இருக்கா இவனுக்கு ? வளர்க்கறவங்கள சொல்லணும் .. நம்மல மனுஷியா கூட மதிக்கறது இல்ல அப்பறம் இவன் எப்படி மதிப்பான் ?”, எனப் புலம்பிவிட்டு சமையலறைக்குச் சென்றாள்.
“இந்தா இந்த வெங்காயம் நறுக்கு .. உன் தம்பிக்கு எண்ணெய் பணியாரம் வேணுமாம்.. உன் அப்பாவுக்கு சப்பாத்தி செய்யணும் “, என வேலைகளைக் கூறினார்.
“அம்மா .. ராத்திரி நேரம் எத்தன செய்யறது ? பணியாரம் இல்லைன்னா சப்பாத்தி ரெண்டுல ஒண்ணு செஞ்சா போதும்“
“இந்த பேச்சு எல்லாம் இனிமே பேசாத .. ஒழுங்கா சொன்னத செய்.. உன் அப்பா கடைல இருந்து வர்றதுக்குள்ள எல்லாத்தையும் செஞ்சி இருக்கணும். வெங்காயத்த மலாருன்னு அரிஞ்சிட்டு, சப்பாத்தி மாவு பெச”
நங்கை ஒரு பெருமூச்சை வெளியேற்றிவிட்ட, அவர் சொன்ன வேலைகளை மடமடவென செய்து முடித்தாள்.
தோப்பில் இருந்துக் கிளம்பிய வர்மன், நேராக தன் சூப்பர்மார்க்கெட் வந்தான்.
சமீபமாக வந்த நான்கு வழி சாலையினால் அந்த சுற்றுவட்டாரம் முழுதாக டவுன் ஆக மாறி இருந்தது. மார்க்கெட் தெரு என்று தனியாக மூன்று தெருக்களில் அத்தனை கடைகளும் இடம்பெற்று இருந்தன.
முதல் தெருவில் நகைக்கடை , துணிக்கடை மற்றும் பிரசித்தி பெற்ற பிள்ளையார் கோவில் ஒன்று இருந்தது.
இரண்டாம் தெருவில் பலசரக்கு சாமான் கடைகள், பாத்திரக்கடைகள் போன்ற வீட்டு உபயோக பொருட்கள் இடம் பெற்று இருந்தது .
மூன்றாவது தெருவில் வர்மனின் சூப்பர் மார்க்கெட், உணவகம், ஐஸ் கிரீம் கடை, புத்தக கடைகள், விளையாட்டு பொருட்கள் போன்ற பல கடைகள் இருந்தன.
சுற்றி இருக்கும் பத்து, இருபது ஊர்களுக்கு இது தான் முக்கியமான கடை தெருக்கள்.
அங்கே இரண்டாவது தெருவில் தான் ஏகாம்பரம் தன் சூப்பர்மார்க்கெட் வைத்துள்ளார்.
வர்மன் தன் சூப்பர் மார்க்கெட்டை இப்போது விரிவுப்படுத்தி இருந்தான். மார்க்கெட்டில் இப்போது “organic “ என்ற வார்தை மோகம் அதிகமாக உள்ளது.
அந்த மோகத்தைப் பணமாக மாற்ற அவன் சில முயற்சிகள் செய்துக்கொண்டு இருக்கிறான்.
இயற்கை உரம் போடும் விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்து, தனது சூப்பர்மார்க்கெட் பெயரில் விற்பனைச் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்துக்கொண்டு வருகிறான்.
அதற்காக தான் கூன் ஆச்சியிடம், கூந்தல் தைலம் முதல் மூட்டு வலி தைலம் வரை வாங்கி இங்கே விற்க தனி தொழிற்சாலையும் நிறுவி வருகிறான்.
“ஏலேய் சாமிகண்ணு .. இன்னும் இந்த ரேக்கு எல்லாம் அடிச்சி முடிக்கலியா ? காலைல வந்து பாத்துட்டு போன மாதிரி அப்புடியே இருக்கு எல்லாம் .. என்னடா பண்றீங்க ?”, அதட்டியபடி வந்தான்.
“பாசங்கள்ல நாலு பேரு இன்னிக்கி வரல வர்மா .. மூணு பேரை வச்சி வேலை செஞ்சிட்டு இருக்கேன்”, சாமிகண்ணு வியர்வையைத் துடைத்தபடிக் கூறினான்.
“நேத்து ஞாயித்து கெழம லீவு தானுடா .. இன்னிக்கி ஏன் வரல ? இன்னும் ரெண்டு மாசத்துல நான் கடைய தொறந்தே ஆகணும் .. எங்கடா அவனுங்க ?”, என அருகில் நின்று இருந்த பையனை அடித்தான்.
“அண்ணே அண்ணே எனக்கு ஒண்ணும் தெரியாதுண்ணே.. “, என அந்த பையன் அலறினான்.
“வர்மா அவன விடு டா… வர்றவன எல்லாம் நீ இப்படி அடிச்சா வேலைக்கு எவனும் வரமாட்டான் டா .. “, சாமிகண்ணு தடுத்தான்.
“சனி கெழம அவனுங்க உன்கிட்ட என்ன சொல்லிட்டு இருந்தாணுங்க ?”, என அந்த பையனின் சட்டையைப் பிடித்து இழுத்துக் கேட்டான்.
“கன்னிகா காலேஜ்ல ஒரு பொண்ண பாக்க போறதா சொன்னாங்கண்ணே”, வலி தாளாமல் கூறிவிட்டான்.
“பாத்தியா ? இரு அவனுங்கள அங்கனயே மிதிச்சி தூக்கிட்டு வரேன் “, என வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டுக் கிளம்பினான்.
“டேய் வர்மா .. வர்மா .. “, என அழைத்தும் நிற்காமல் சென்றவனைப் பார்த்து சாமிகண்ணு தலையில் கைவைத்து அமர்ந்துக்கொண்டான்.
நேராக கன்னிகா காலேஜ் பஸ் ஸ்டாப்பிற்கு சென்றவன் அங்கே நின்று கொண்டிருந்த இரண்டு பசங்களையும் பார்த்துவிட்டு, பைக்கை ஓரமாக நிறுத்தி, நின்று அவர்களைக் கவனிக்க ஆரம்பித்தான்.
அப்போது அவர்கள் இருவரும் ஒரு பெண்ணிடம் சென்று பேச முயற்சித்துக் கொண்டிருந்தனர்.
அந்த பெண்களோ பயந்து ஒதுங்கிச் செல்வது போல தெரிந்தது. அந்த சமயம் ஒருவன் பயந்து பின்னே செல்லும் பெண்ணை கையைப்பிடித்து இழுத்தான்.