3 – வேரோடும் நிழல்கள்
நீரஜ் அன்று மாலை வேலை முடிந்து நண்பனுடன் கிளம்பினான். பார்த்திபன் அவனது சிறுவயது முதலே நண்பன். இருவரும் ஒரே தெருவில் வசிப்பதினால் நெருக்கமும் அதிகம். சலீமா அவர்கள் கல்லூரியில் தோழியாகி இன்றும் இருவருடனும் பேசிக்கொண்டு இருக்கிறாள் கணவனுடன் அமர்ந்து..
“டேய் பார்த்தி.. உனக்கு ஏண்டா கிரிஜாவ பிடிச்சிருக்கு ?”, பார்த்திபன் மெல்ல வண்டியை அவனுடன் ஒட்டியபடி காலால் தள்ளிக்கொண்டு கேட்டான்.
“இது என்னடா கேள்வி ? எனக்கு அவள சின்ன வயசுல இருந்தே பிடிக்கும்.. அவகிட அதிகம் சண்டைபோட்டாலும் அவள பாக்காம என்னால இருக்க முடியாது மச்சி.. என்ன தான் காட்டேறி மாதிரி அவளும் என்னை கடிச்சாலும் அந்த மூஞ்சியும், கண்ணும் என்னமோ பண்ணும் டா.. அதான் அவளோட 6 தாய்மாமனுங்கள எதிர்த்து அவள கல்யாணம் பண்றதுன்னு முடிவு பண்ணிட்டேன்.. ஆனா நீ தான் கடைசில எனக்கு வில்லனா வருவ போல .. உன்னால தான் இந்த ஆறு மாசமா எங்களுக்குள்ள சண்டை வந்துட்டே இருக்கு .. ஏண்டா இப்டி பண்ற ?”, எனக் கடைசி வாக்கியத்தைப் பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு கேட்டான்.
“நான் என்னடா பண்ணேன் ? நீ வீட்டுக்கு போய் சேந்தியா இல்ல வழில விழுந்து கெடக்கியான்னு பாக்க தானே அக்கறையா கூப்பிட்டேன்..”
“ஏண்டா ஏன் ? நானே நேத்து பார்ட்டி வந்ததே சொல்லவே இல்லடா.. நீ ஃபோன் பண்ணி மாட்டிவிட்டதும் இல்லாம இப்ப இப்படி நிக்கவச்சிருக்க… உனக்கு நான் என்னடா பாவம் பண்ணேன்?”
“உன்னைய நான் கிரிஜாகிட்ட சொல்லி அவங்க சொந்தக்கார பொண்ண பத்தி விசாரிச்சி சொல்ல சொன்னேன் ஞாபகம் இருக்கா?”, என நீரஜ் நம்பியாரைப் போல கையைத் தேய்த்து கூறவும் பார்த்தி விழிப் பிதுங்கி, “ஏண்டா அதுக்காடா இப்படி செஞ்ச நீ?”
“ஆமா .. உன் நிச்சயத்துல பாத்துட்டு தானே உன்ன கேட்டு சொல்ல சொன்னேன். இப்போ ரெண்டு மாசமாச்சி.. இன்னும் நீ சொல்லவே இல்ல.. அதான் சின்னதா தங்கச்சிக்கிட்ட உண்மைய சொல்லி உனக்கு புத்தி தெளிய வைக்க பிளான் பண்ணேன்…”, என நீரஜ் கூறியதும், பார்த்தி போட்டுக்கொண்டிருந்த தோப்புக்கரணத்தை நிறுத்திவிட்டு கிரிஜாவைப் பார்த்தான்.
“பாத்தியா உங்கண்ணன் பண்ற வேலைய ? இவன நம்பி என்னை பாடா படுத்தற நீ ..” என அரசமர மேடையில் வந்து நின்றவளைப் பார்த்துக் கேட்டான்.
“அவர் சொன்னது இருக்கட்டும், நீ எப்படி என்கிட்ட சொல்லாம பார்ட்டி போலாம் ? நான் போன மாசம் என் சித்தி வீட்டுக்கு போய் நாலு நாள் இருந்துட்டு வந்ததுக்கு என்ன பேச்சு பேசின நீ ? கண்ணு தொறக்கமுடியாத அளவுக்கு குடிச்சிட்டு தள்ளாடிட்டு வீடு போய் சேர்ந்திருக்க.. எங்கப்பாவோ, என் மாமன் பசங்களோ உன்னை அப்படி பாத்தா அடுத்த செகண்ட் இந்த கல்யாணத்தை நிறுத்திடுவாங்கன்னு உனக்கு மனசுல நெனைப்பு இருக்கா இல்லயா ?”, என நீரஜா கேட்கவும் பார்த்தி மீண்டும் தோப்புக்கரணம் போட ஆரம்பித்தான்.
“இன்னும் நூறு போடு.. அப்போதான் இந்த தப்ப மறுபடியும் நீ செய்ய மாட்ட.. என் நாலாவது மாமன் மகன் ஒருத்தன் எப்படா இந்த கல்யாணம் நிக்கும் எனக்கு வாழ்க்கை குடுக்கறேன்னு வந்து ஸீன் போட ரெடியா இருக்கான்.. இவன் என்னடான்னா கொஞ்சம் கூட பொறுப்பும், அக்கறையும் இல்லாம குடிச்சிட்டு சுத்திட்டு இருக்கான்.. எப்படி அண்ணா இவன் உங்ககூட இருந்தும் குடிக்க ஆரம்பிச்சான்?”, என நீரஜா கேட்டதும் பார்த்தி, “நான் குடிக்க காரணமே அவன்தான். அவனையே போய் கேளு நீ.. எனை விட அதிகமா குடிப்பான் இப்ப அஞ்சு வருஷமா தான் குடிக்கறது இல்ல…” எனக் கூறி திட்டில் மூட்டியைப் பிடித்துக் கொண்டு அமர்ந்தான்.
“அவரு விட்டாருல்ல உனக்கு என்ன கேடு? நீயும் விட்டு தொலைய வேண்டியது தானே?”
“உன்ன கட்டினதும் விட்டுடலாம்ன்னு வேண்டுதல் வச்சிருக்கேன் டி..”
“இதுக்கு மேல உனக்கு கேவலமா சமாளிக்க வருமா மச்சி ”, நீரஜ் அவன் அருகே வந்து கேட்டு சிரிக்க பார்த்தி சிரித்தான்.
“அண்ணா.. நீங்க இந்த பொண்ணப்பத்தி தானே கேட்டீங்க ? “, என கிரிஜா தனது அலைபேசியில் ஒரு புகைப்படத்தைக் காட்டிக் கேட்டாள்.
“ஆமா தங்கச்சி.. இவங்களுக்கு கல்யாணம் ஆகிரிச்சா? இல்ல..?”, என இழுத்தான்.
“இவ பேரு நிழலினி.. ஸ்கூல் டீச்சர்.. கம்ப்யூட்டர் சயின்ஸ் எடுக்கறா… “
“நல்ல பேரு… நிழலாட்டம் கூடவே வராம இருந்தா சரி..”, எனப் பார்த்தி முனகியபடி கூறவும் மற்ற இருவரும் முறைத்தனர்.
“இப்போதான் கல்யாண பேச்சு எடுத்திருக்காங்க.. ஆனா இவ கல்யாணம் வேணாம்ன்னு சொல்றதா கேள்விப்பட்டேன்…”
“ஏன் ?”
“அது தெர்ல அண்ணா.. இவ அப்பா அம்மா இப்போ அவ சொன்னத மீறி மாப்ள தேடறதா அம்மா சொன்னாங்க.. இந்தாங்க அவளோட ப்ரோஃபைல் எனக் கொடுத்தாள்.
“தாங்க்ஸ் மா.. இந்த பொண்ண என் பெரியப்பா பையனுக்கு கேக்கலாம்னு அம்மா சொன்னாங்க, அதான் உன்கிட்ட விவரம் கேக்கச்சொல்லி இவங்கிட்ட சொன்னேன்..”
“உங்களுக்கு இல்லையா?”, கிரிஜா அதிர்வுடன் கேட்டாள்.
“இல்ல மா .. ஏன்?”, அவளின் அதிர்ச்சிக் கண்டு நீரஜ் கேட்கவும், பார்த்தியும் முறைத்தான்.
“அத இங்க குடு மச்சி… நீ கிளம்பு.. அந்த சமோசா தலையனுக்கு இந்த பொண்ணு வேணுமா? அவனுக்கு எல்லாம் கல்யாணம் ஒரு கேடு. அவனுக்கு பொண்ணு இந்த உலகத்துல இல்லன்னு சொல்லிடு.. நான் கூட இவனுக்கு தான் கேக்கறான் போலன்னு பாத்தா, அந்த அரை மெண்டலுக்கு இந்த பொண்ணு வேணுமோ? நானே இத நடக்கவிடமாட்டேன்.. நீ வா செல்லம் போலாம்..”, என நீராஜாவின் தோள் மீது கைப்போட்டு அழைத்துச் சென்றான்.
“டேய் நில்லு டா.. ஏன் இப்ப இவ்ளோ கோவம் உங்களுக்கு?”
“அவள கல்யாணம் பண்ணா நெறைய பொறுமையும், உணர்தல் திறனும் இருக்கறவங்க தான் சமாளிக்க முடியும்.. நீங்கன்னா நானே வீட்ல பேச சொல்வேன்.. அவளப்பத்தி மொதல் தெரிஞ்சி புரிஞ்சிக்க முயற்சி பண்ணா தான் அவக்கூட வாழ முடியும் அண்ணா…”, என கிரிஜா கூறியதைக் கேட்டு நீரஜ் முழு விவரங்களைக் கேட்டான்.
“எனக்கும் முழுசா தெரியாது அண்ணா.. ஆனா அவளுக்கு கல்யாண வாழ்க்கை மேல நம்பிக்கை இல்ல.. அதான் வேண்டாம்ன்னு சொல்றா..”
“பொண்ணுக்கு ஏதாவது ஹெல்த் ப்ராப்ளம் இருக்கா?”
“டேய் .. எந்த காலத்துல டா நீ இருக்க ? அந்த பொண்ணு உன் பெரியப்பன் பையனுக்கு எல்லாம் செட் ஆவாது.. போய் சொல்லிடு போ.. “, எனப் பார்த்திக் கூறிவிட்டு அவளின் விவரங்கள் அடங்கிய தாளை வாங்கிக்கொண்டு கிரிஜாவுடன் கிளம்பினான்.
“சொன்னா தானே என்னன்னு தெரியும் ? இடியட்ஸ்..”, எனக் கூறிவிட்டு இல்லம் நோக்கிச் சென்றான்.
மாலை பள்ளி முடிந்து அனைவரும் கிளம்பிக் கொண்டிருக்க, நிழலினி மட்டும் ஆசிரியர் ஓய்வெடுக்கும் அறையில் அமர்ந்திருந்தாள்.
“என்ன மேடம் இன்னும் கிளம்பலியா ?” எனக் கேட்டபடி வேதியியல் ஆசிரியர் உள்ளே வந்தார்.
“கிளம்பிட்டே இருக்கேன் சார்.. உங்க மனைவி ஏற்கனவே நாலு தடவை ஃபோன் பண்ணிட்டாங்க..” என அவள் கூறியதும் ஃபோன் எடுத்துக் கொண்டு வெளியே ஓடினார்.
“கிளம்பிட்டேன் ம்மா.. வந்துருவேன்.. சரி வாங்கிட்டு வரேன்.” என அவர சொன்னபடி செல்வது கருத்தில் விழுந்தது.
இதுபோலான கணவன் மனைவி உரையாடல்களை எல்லாம் அவள் இன்று வரையிலும் அவளது இல்லத்தில் கேட்டதே இல்லை. அவளுக்கு விவரம் தெரிந்த பின் அவளது அப்பாவும், அம்மாவும் நேரடியாக பேசிக்கொண்டதே அவளது நினைவில் பதிந்திருக்கவில்லை.
“நிலா.. உங்கப்பாவ இந்த லிஸ்ட்ல இருக்கறத வாங்கிட்டு வரசொல்லு.. இதுல இருக்க அளவு குறையாம வாங்க சொல்லு..” என இவளிடம் கொடுத்துவிடுவார்.
“இவ்ளோ வாங்க எல்லாம் காசு இப்ப கைல இல்ல.. இதுல பாதி தான் முடியும்..” என அப்பாவும் கூறியபடி வெளியே சென்றுவிடுவார்.
“இப்போதான் தேதி 5. நேத்து தானே சம்பளம் போட்டாங்க அதுக்குள்ள அந்த காசெல்லாம் எங்க போச்சி? வீட்ல மளிகை சாமான் இல்லாம என்னத்த சமைச்சி போடறதாம் உங்கப்பாவுக்கு? என் சம்பளத்த வச்சி தான் வட்டி கட்டிட்டு இருக்கேன்.. கல்யாணம் பண்ணி வந்த பொம்பளைய சந்தோஷமா வச்சிக்கலன்னாலும், கஷ்டப்படுத்தாம இருக்க தெரியுதா இந்த மனுஷனுக்கு? எல்லாம் என் நேரம்.. இந்த ஆள தான் கட்டுவேன்னு அடம் பண்ணி கல்யாணம் கட்டிக்கிட்டதுக்கு நல்லா அனுபவிக்கறேன்..”, என பாட்டு பாட ஆரம்பித்தால், அவள் பள்ளிக்கூடம் கிளம்பும் வரையிலும், மாலை அவள் இல்லம் வந்தபின்னும் கூட கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும். அவரது புலம்பல்கள் நிற்பதே இல்லை.
அதன்பின் வந்த வாக்குவாதங்களில் இருவரும் முகத்தினைப் பார்ப்பத்தைக் கூட தவிர்த்துவிட, ஒரே தொடர்பு நிழலினி மட்டுமே..
இருவரும் போட்டி போட்டுக்கொண்டு நிழலனிக்கு தேவையானதை செய்வதும், கோபம் வந்தால் அவளிடம் தங்கள் கோபத்தைக் காட்டுவதும் வழக்கமானது.
ஒரே பெண்ணான நிழலனி இவர்களின் பிரிவினையினால் மிகவும் உள்ளம் நொந்து பாதிப்புக்குள்ளானாள். அதன் விளைவு அடிக்கடி அவளின் உடல் முடியாமல் போனது. மனதின் அழுத்தம் உடலை அழுத்த உடல்நிலை சீர்கெட்டு, சீக்கு வந்து அடிக்கடி மருத்துவமனை வாசத்தை மேற்கொண்டாள்.
“நீங்க குழந்தை முன்னாடி சண்டை போட்டதால தான் அவ மனசு பாதிக்கபட்டு இப்படி அடிக்கடி உடம்பு கெடுது. உங்க சண்டைய உங்கவரைக்கும் வச்சிக்கோங்க.. உங்க பொண்ணு நல்லா இருக்கணும்னா இத பண்ணுங்க..”, என மருத்துவர் கண்டிப்புடன் கூறியதும் இருவரும் அவளிடம் முறையிட்டு கோபத்தைக் காட்டுவது கொஞ்சம் குறைந்தது.
இன்று வரையிலும் அது முற்றுப்பெறவில்லை. ஆனால் அந்த நாட்களின் தாக்கம் அவளின் ஆழ் மனதில் தங்கிவிட, திருமண வாழ்வின் மீதான நம்பிக்கையின்மையை விதைத்து, இன்று மரமாக நிற்கிறது.
“வா நிலா.. இந்த போட்டோ பாத்தியா? உனக்கு பிடிச்சிருக்கா?” என அவளின் அன்னை விஜயம் ஆர்வமுடன் வந்துக் கேட்டார்.
“எனக்கு பிடிக்கல..” என ஒரே வார்த்தையில் முடித்துக் கொண்டு தன்னறைப் புகுந்துக் கொண்டாள்.
“நிலா.. நல்ல பையன் டா.. நல்ல குடும்பம்.. பையனுக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்லை.. நல்லா விசாரிச்சிட்டேன்… ஏண்டா வேணாம்ன்னு சொல்ற?” என அவளின் அறைக்குள் சென்றுக் கேட்டார்.
“அவளுக்கு பிடிக்கலன்னா விடவேண்டியது தானே.. இந்தா டா இந்த போட்டோ பாரு.. இதுல யார பிடிச்சிருக்குன்னு சொல்லு.. எல்லாருமே கவர்ன்மெண்ட் வேலைல இருக்காங்க.. நல்ல சம்பளம்.. உன்னையும் கவர்ன்மெண்ட் ஸ்கூல்ல ஜாயின் பண்ண வச்சிடலாம்.. லைப் ஸ்மூத் அஹ் போகும்..”, என அவளின் தந்தை ஞானப்பெருமாள் ஒரு கவருடன் உள்ளே வந்தார்.
நிழலனி இருவரையும் பார்த்துவிட்டு வீட்டினை விட்டு வெளியே சென்று, அந்த தெருமுனையில் இருந்த பூங்காவில் நுழைந்துக் கொண்டாள்.
அவளது மனம் அமைதியின்றி தவித்துக் கொண்டிருக்க, நீரஜ் அவளை அந்த பூங்காவில் கண்டு அவளருகே வந்தான்.
“மிஸ். நிழலினி?”
“எஸ் ..”
“என்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதமா ?”, என அவன் கேட்டதும் அவள் அதிர்த்து அவனைப் பார்த்தாள்.