32 – ருத்ராதித்யன்
அர்ஜுனும் யாத்ராவும் அந்த விலங்குகள் அடைக்கப்படும் இடத்தில் இருந்து வேறு இடத்திற்கு மாற்றப்பட்டனர்.
“எங்க கூட்டிட்டு போறானுங்க பேபி?”, அர்ஜுன் சுற்றிலும் பார்த்தபடி யாத்ராவிற்கு மட்டும் கேட்கும்படி பேசினான்.
“நம்மல வச்சி ரிசர்ச் பண்ணுவான்னு நெனைக்கறேன் செழியன்”, அந்த இடத்தை மனதினுள் பதிவு செய்துகொண்டபடியே அவனுக்கு சத்தமாக பதில் கொடுத்தாள்.
“பேசாம போ”, என ஒருவன் அவளை பின்னிருந்து தள்ளினான்.
அர்ஜுனும் யாத்ராவும் அவனை முறைக்க அவன் பயந்து இரண்டடி பின்னால் தள்ளி நின்றான்.
“இல்லண்ணே…. நீங்க பேசினா அவங்க என்னை கொன்னுடுவாங்க”, என தழைத்த குரலில் அவன் கூறவும் யாத்ரா சத்தமாக சிரித்தாள்.
“விடு ரது பேபி…. கண்மயா எங்க காணோம்?”, என் அவனிடம் கேட்டான்.
“எது அந்த அரவேக்காடா?”, என அவன் கேட்ட நொடி அவன் வாயில் இருந்து இரத்தம் வந்தது.
“இவன இழுத்துட்டு போய் அந்த கூண்டுல அடைங்க”, என ரிஷித் கத்திவிட்டு அர்ஜுன் மற்றும் யாத்ராவின் கைக்கட்டுகளை அவிழ்த்துவிட்டு உடன் நடக்க ஆரம்பித்தான்.
அர்ஜுனும் யாத்ராவும் ஒரு நொடி மட்டும் பார்த்துக்கொண்டு அந்த இடத்தை அளக்க ஆரம்பித்தனர்.
“இரண்டு பேரும் ரொம்ப ப்ரைன்-அ ஸ்ட்ரைன் பண்ணிக்காதீங்க.. இந்த இடத்தோட மொத்த மேப் உங்களுக்கு தரேன்… “, என கூறியபடி மரங்கள் அடர்த்தியாக இருந்த இடத்தை நோக்கி நடந்தான்.
“எங்கள எதுக்கு கூட்டிட்டு வந்த ரிஷித்?”, அர்ஜுன் நடப்பதை கவனித்தபடி கேட்டான்.
“கடத்திட்டு வரலியா?”, என சிரித்தபடி கேட்டான்.
“எனக்கு நீ கூட்டிட்டு வந்திருக்க மாதிரி தான் தோணுது…. உனக்கு ரது பேபி?”
“அவரே பேசட்டும் செழியன். பெரிய ஆராய்ச்சியாளர். என்ன என்ன சொல்வாருன்னு நாமலும் கொஞ்சம் பொறுமையா கேக்கலாம்”, யாத்ரா அவனைப் பார்த்து சிரித்தபடி கூறினாள்.
“உனக்கு நல்ல டேஸ்ட் அர்ஜுன்….செம ஸ்ட்ரச்சர்…செம பொண்ணு…. ஐ விஷ்…. நீயும் என்னை மாதிரி இந்த ரிசர்ச் லைன்ல வந்திருக்கலாம்…”, என யாத்ராவை அதிகம் நெருங்கி நின்று முகத்திற்கு அருகே வந்து கூறினான்.
“எனக்கு மிருகங்கள கொல்ல பிடிக்காது ரிஷித். மனுஷனா இல்லாதவங்கள, நடக்காதவங்கள கொல்ல ரொம்ப பிடிக்கும். இப்ப உன்னையும் கொல்லணும்னு ரொம்ப டெம்ப்ட் ஆகுது. ரொம்ப கண்ட்ரோல்ல இருக்கேன்”, என அவளும் அவன் முகத்தை நேருக்கு நேர் பார்த்து கூறினாள்.
“இந்த திமிர்…. இதான் உனக்கு ஹைலைட் மிஸ் யாத்ரா பூமிநாதன்… இத தனியா பிரிச்சி எடுக்க முடிஞ்சா செமயா இருக்கும்ல…. “, என கூறியபடி அவளையும் அர்ஜுனையும் ஒரு அறைக்குள் அழைத்து வந்து அமரவைத்தான்.
அவர்கள் அமர்ந்ததும் சிலர் அவர்களின் இரத்த மாதிரிகளை எடுத்துக்கொண்டு ஒரு இயந்திரத்தின் அருகில் அழைத்துச் சென்றனர்.
“என்ன பண்ண போற ரிஷித்?”, அர்ஜுன் கோபத்தை முகத்தில் காட்டாமல் கேட்டான்.
“ஐ லைக் யூ டூ அர்ஜுன்.. உன் அமைதி தான் ஆபத்துன்னு எனக்கு நல்லாவே தெரியும்…. இப்ப உங்கள ஒன்னும் பண்ணப்போறது இல்ல…. ஜஸ்ட் ஒரு ஸ்கேன் உங்கள புல்லா எடுத்து சில கொலாபரேஷன்ஸ் செஞ்சி ஒரு புது உயிரினம் உருவாக்க போறேன்… நீங்க ரெண்டு பேரும் செம ஹெல்த்தி அண்ட் ஸ்ட்ராங்… சோ உங்க ப்ளட் சேம்பல்ஸ் எனக்கு ரொம்ப யூஸ்புல்லா இருக்கும்….”, என கூறிவிட்டு அடுத்த அறைக்கு சென்றான்.
சகஸ்ராவும், கண்மயாவும் என்ன செய்வதென புரியாமல் ரிஷித் அருகில் அமர்ந்திருந்தனர்.
அடுத்த அறையில் இருந்து பலமான உறுமல் சத்தம் வந்தது.
மகதனைத் தான் அங்கே அடைத்து வைத்திருந்தார்கள். அதன் கோபத்தின் அளவு அதன் உறுமலில் உணர முடிந்தது.
“அந்த ரூம்ல என்ன இருக்கு?”, யாத்ரா கேட்டபடி அந்த கதவிடம் சென்றாள்.
“கண்டிப்பா பாக்கலாம்… இந்த கண்ணாடி வழியா…”, என முன்னிருந்த கண்ணாடியை திறந்தான்.
அங்கே மகதன் ஒரு கண்ணாடி கூண்டினுள் அடைக்கப்பட்டு இருந்தது.
அதன் உடலில் இருந்து ஒரு பக்கம் உதிரம் வழிந்துக்கொண்டிருந்தது.
“ஒரு கால் பக்கம் ப்ளட் லாஸ் ஆகிட்டு இருக்கு…. நீ அதை சரிபண்ணமாட்டியா?”, என அர்ஜுன் கேட்டான்.
“பண்ணலாம்… அது ரொம்ப ஸ்மார்ட் அனிமல்… உங்கள போல… பலமா அதை அது உணரவே கூடாது.. அதுக்கு தான் இந்த ப்ளட் லாஸ் பண்ண வைக்கிறேன்… அப்பறம் ஒரு முக்கியமான விஷயம்.. உங்க ரத்தத்துல இருந்து சில விஷயங்கள பிரிச்சி எடுத்து இதுக்கு செலுத்தப்போறேன். ஏற்கனவே பல இடத்துல மனுஷ-மிருக ஆராய்ச்சி நடந்துட்டு தான் இருக்கு. இதோட ஸ்மாட்ர்நெஸ் எனக்கு ரொம்ப தேவை…. சப்போஸ் இதுக்கு உங்க இரத்தணுக்கள் ஒத்துப்போனா உங்க ரெண்டு பேரையும் என் வெபனா நான் யூஸ் பண்ணிக்கலாம்ல”, என சிரித்தபடி கூறினான் ரிஷித்.
உடனே அர்ஜுனும், யாத்ராவும் ஆட்களால் இரண்டு படுக்கையில் கட்டப்பட்டனர்.
மகதன் வலியுடன் அதன் உடலில் ஏறும் இரத்த மாதிரிகளால் ஏற்படும் மாற்றத்தை கட்டுப்படுத்த முடியாமல் முன்னும் பின்னும் இடித்து அதை உடைக்க பிரயத்தனப்பட்டது.
முழுதாக கண்மயா அதன் உடலில் ரிஷித் கூறியபடி இரத்தத்தில் இருந்த சில நுண்ணணுக்களை பிரித்து மகதனின் இரத்தத்தோடு கலந்து இப்போது உடலிலும் கலக்கவிட்டாள்.
மகதன் தன் உடலில் ஏற்படும் மாற்றங்களை உணரமுடியாமல் தவித்தது.
மூளையின் உள்ளே அதற்கு பல்வேறு விதமான கட்டளைகள், அதிர்வலைகள் ஓடிக்கொண்டே இருந்தன.
அர்ஜுன் யாத்ரா இருவரின் மனநிலை, உடல்நிலை தாக்கத்தை, இப்போது மகதன் தன்னுடலில் உணர்ந்து ஏற்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தது.
தொடுதிரையில் அர்ஜுன் மற்றும் யாத்ராவின் உடல்நிலை முழுதாக பதிவு எடுத்துக்கொள்ளப்பட்டுக் கொண்டிருந்தது. மகதன் குழப்பமும், பயமும் கொண்டு கத்திக்கொண்டு இருந்தது.
அதன் உடலில் ஏற்படும் மாற்றங்களினால் முழுதாக சோர்ந்து படுத்துவிட்டது. அதற்கு மயக்கமருந்து செலுத்தியபிறகு அதன் இரத்தப்போக்கு நிறுத்தப்பட்டு ஒருசில மருந்துகள் உடலில் செலுத்தப்பட்டன.
“நீ என்ன பண்ற ரிஷித்?”, அர்ஜுன் மகதன் படும் வேதனைக் கண்டு தாளாமல் கேட்டான்.
“உன் இரத்தம் அதுக்குள்ள போனதும் உனக்கும் அதுக்கும் பந்தம் வந்துடுச்சா அர்ஜுன்? இவ்வளவு கோபம் வருது?”, சிரித்தபடி கேட்டான்.
“நீ பண்றது என்னன்னு புரிஞ்சு தான் பண்றியா ? எந்த உயிரையும் இப்படி வதைபடுத்தக்கூடாது. அதுவும் ஐந்தறிவு மிருகத்த இப்படி நீ வதைக்ககூடாது ரிஷித்”, யாத்ராவும் அடக்கப்பட்ட கோபத்துடன் பேசினாள்.
“ஐந்தறிவு மிருகமா? அதுவா? உங்களுக்கு ஒன்னு தெரியுமா மனுஷனுக்கு இல்லாத புத்திசாலித்தனம் புலிகிட்ட இருக்கு… சூழ்நிலை புரிஞ்சி சாமர்த்தியமா அது நடந்துக்கும் போது யாரும் அதை கட்டுப்படுத்தவும் முடியாது, அழிக்கவும் முடியாது. அந்த சிந்திக்கிற மூளையோட திறன் எனக்கு வேணும். அதை மனுஷனுக்கோ, இல்ல ஒரு பாம்புக்கு வச்சா அது எப்படி இருக்கும்? நம்ம மூளைல இருக்கற அணுக்களோட அதை இணைக்கறப்ப எந்த மாதிரியான வித்தியாசம், குணமாறுபாடுகள், முடிவெடுக்கும் திறன் மேம்படும்னு பாக்கணும் … இப்ப இருக்கறதுலையே இந்த புலி தான் அதீத சாமர்த்தியசாலி, புத்திசாலி. அதனால தான் இதை கடத்திட்டு வந்து சோதனை பண்றேன். உங்களோடதும் கொஞ்சம் அதிகமாக தான் இருக்கு அதான் உங்க மூனு பேரோட இரத்தமும் இணைக்க முயற்சி பண்றேன்… எப்படி இருக்கு என் ஐடியா?”, என கனவில் இருப்பவனைப் போல பேசினான் ரிஷித்.
“சார் மனுஷ இரத்தமும் மிருக இரத்தமும் எப்பவும் ஒன்னாகாது…. தயவு செஞ்சி இத நிறுத்துங்க …”, கண்மயா மகதனைப் பார்த்தபடி கூறினாள்.
“அது எனக்கு தெரியாதா மாயா டார்லிங்? இந்த பாட்டில்ல இருக்கே இந்த திரவம்.. இத கலந்து கொடுத்தா என்னென்ன நடக்கும்னு உனக்கு தெரியுமா?”, என அவள் அருகில் நெருங்கி வந்து கேட்டான்.
‘இல்லை’ என அவள் தலையைசைத்ததும், “இது ஒரு மத்தியஸ்த திரவம். எந்த இரத்தமோ, எந்த வகையாக அணுவோ இதுல கலந்து ஒரு உயிருள்ள தசைல செலுத்தினா அந்த உடம்புக்கு தகுந்த இரத்த அணுவா மாறிடும். இந்த பூமில இருக்க எந்த வகை மிருக இரத்தமும் மனுஷனுக்கு செலுத்தலாம், மனுஷ இரத்தத்த மிருகத்திற்கு செலுத்தலாம் இந்த திரவத்த கொஞ்சமா கலந்துகிட்டா….”, என அவன் அந்த குடுவையை ஆசையாக வருடிவிட்டபடி கூறியது கேட்டு கண்மயா அதிர்ந்து நின்றாள்.
‘இயற்கை’ என்ற ஒன்றை இல்லாமல் ஆக்கும் அவனின் வெறிக்கு இது பெரும் பலம் சேர்க்கும் பொருள் என்று அவளுக்கு புரிந்தது. தன் நண்பர்களை எப்படி காப்பது என்று இப்போது அதிக கவலையும் பிறந்தது.
“சார்…. இது எதுவா வேணா இருக்கலாம்.. ஆனா இதோட விளைவுகள் நமக்கு தெரியாது… வேணாம் சார் இந்த சோதனை… “, என தன்னை திடப்படுத்திக்கொண்டு கூறினாள்.
“அது தெரிஞ்சிக்க தான் டார்லிங் இவங்கள கடத்தினதே…..”, என அவன் சிரித்த சிரிப்பு கண்மயாவை பயத்தில் உறைய வைத்தது.
“சார்….”
“ஷட் அப் …. நான் சொல்றத மட்டும் தான் இனி நீ செய்யணும்… உன் ஃப்ரெண்ட்ஸ்க்கு உன் கையாலேயே இனி எல்லாம் பண்ணணும்.. நான் ரூம் போறேன்… நீ இவங்க பக்கத்துல இருந்து இந்த இன்ஜெக்ஷன் இரண்டு மணி நேரம் கழிச்சி போடணும். அதுவரைக்கும் சகஸ்ரா என்கூட தான் இருப்பா….”, என அவன் கூறியதும் சகஸ்ராவை இருவர் தூக்கிக் கொண்டு அவன் பின்னோடு சென்றனர்.
கண்மயா மொத்தமும் கலங்கி தலையில் கைவைத்து அமர்ந்து கொண்டாள்.
அர்ஜுனும், யாத்ராவும் கொஞ்சம் கொஞ்சமாக மயக்க நிலைக்கு சென்றுக் கொண்டிருந்தனர் முதல் கட்ட சோதனையின் விளைவால்….