34 – காற்றின் நுண்ணுறவு
கதவைத் தட்டிய ம்ரிதுள், “நாச்சியா ஒரு நிமிஷம்”, என அவளை அழைத்தான்.
அவனுடன் எதுவும் பேசாமல் நடந்தாள்.
இனியன் அவர்களைக் கீழே சாப்பிடும் இடத்திலிருந்துப் பார்த்துக்கொண்டு தான் இருந்தான்.
“என்ன விஷயம்?”, நாச்சியாக் கடுப்புடன் கேட்டாள்.
“ஒரு வாரத்துல நீ இடத்த கண்டுபிடிக்கணும்”, என அவனும் கடுமையாகப் பேசினான்.
“நீ இன்னும் நான் கேட்டத குடுக்கல”, நாச்சியா விட்டேத்தியாக பதில் கொடுத்தாள்.
“முத்தமா?”, ம்ரிதுள் சிரித்தபடிக் கேட்டான்.
“இந்த சீப் டெக்னிக்லாம் என்கிட்ட காட்டாத. நான் டீன் ஏஜ் பொண்ணு இல்ல இப்படி பேசினா வெட்கப்பட்டு ஓடறதுக்கு…. “, அவனைத் துளைக்கும் பார்வைப் பார்த்தபடிக் கூறினாள்.
“நானும் ரோட்சைட் ரோமியோ இல்ல இப்படி பேசறதுக்கு…. நீ கேட்ட போட்டோஸ் வீடியோஸ் கொஞ்ச நேரத்துல உனக்கு வரும். உன் டீம் வந்துடுடிச்சின்னு நீ வேற எதுவும் அதிபுத்திசாலித்தனமா நடந்துக்காத… “, எச்சரிக்கும் குரலில் கூறினான்.
“அதான் என் தங்கச்சிய கடத்திட்டு போய் வச்சிருக்கியா? அவ்வளவு பயமா ம்ரிதுள் உனக்கு?”, நக்கலாகச் சிரித்தபடிக் கேட்டாள்.
“உன்கிட்ட ஒன்னு கேக்கணும்”, அவளைக் கூர்ந்துப் பார்த்தபடிக் கூறினான்.
“என்ன?”
“உனக்கு பயமோ, நடுக்கமோ இல்லையா?”, அவள் என்ன பதில் கொடுப்பாள் என்ற ஆவலில் அவளைப் பார்த்தான்.
“இருந்தாலும் இல்லைன்னாலும் நீ எங்கள விடப்போறது இல்ல…. அது கண்ணுக்கு தெரியாத விஷயம். நீங்களும் அது மாதிரி ஏதோ ஒரு விஷயத்த தான் தேடிட்டு இருக்கீங்க… அதனால எவ்வளவு பிரச்சினை இனிமே வரும்னு நீங்க தான் பயப்படணும்”, நாச்சியா எதையோ உணர்ந்துக்கொண்டக் குரலில் கூறினாள்.
“என்ன சொல்ற?”, ம்ரிதுள் சந்தேகத்துடன் கேட்டான்.
“உனக்கு மேல ஒருத்தன் இருக்கான்.. அவன் சொல்றபடி நீ நடக்கற…. எண்ணம் அவனோடது…. ஆனா செயல் உன்னோடது….. அவன் தேட்ற விஷயம் ரொம்ப விநோதமா இருக்கு. அதுக்கான பதில் எங்களுக்கு கிடைக்கும்னு அவனுக்கு முன்னயே தெரிஞ்சி இருக்கு. அவன் தேட்ற விஷயத்தால அவனுக்கு என்ன லாபம்? இன்னும் எத்தனை பேரை பலி குடுத்து அந்த இடத்துக்கு போவீங்க? இதுல என் தங்கச்சி எதுக்கு அவனுக்கு தேவை? “, அவள் கேட்ட கேள்விகள் ம்ரிதுள்ளின் உள்ளும் முன்பிருந்தே உண்டு.
அமைதியாக இருந்தவனைப் பார்த்துவிட்டு மீண்டும் தொடர்ந்தாள்.
“பிறைசூடன் ஒரு சைன்டிஸ்ட். மனுஷங்கள ஆராய்ச்சி பண்றவர். மனுஷ உடம்ப அப்டேட் செய்யமுடியும்னு காட்றதுக்காக பல வருஷமா ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்காரு… அவர்கிட்ட என் தங்கச்சிய எதுக்கு சேக்கணும்? இன்னும் ஒரு வாரம் தான் இருக்குன்னு நீ ஏன் இப்ப வந்து சொல்லணும்?”
“இதுக்கும், நாங்க இதுக்கு மேல நடக்கபோற விஷயத்துக்கு பயப்படணும்னு நீ சொல்றதுக்கும் என்ன சம்பந்தம் நாச்சியா?”, ம்ரிதுள்.
ஒரு நொடி அவனை ஆழமாகப் பார்த்துவிட்டு, “நீ அவ்வளவு முட்டாள் இல்ல ம்ரிதுள் .. நடிக்கவேணாம்…. இந்த கேள்வி எல்லாம் உனக்குள்ளயும் இருக்கு… இதுவரைக்கும் நான் கண்டுபிடிச்சி இருக்கறதவச்சி, அதை மேப் பண்ணினதுல எனக்கு கிடைச்ச விஷயம்…..”, என சிறிது இடைவெளி விட்டாள்.
“என்ன?”
“ஒரு பவர் ப்ளிப் பாயிண்ட்…. இல்லன்னா ட்ரிக்கர்ஆ அது இருக்கணும்….. எதை ட்ரிக்கர் பண்ண போறான் அவன்?”, நாச்சியாக் கிடுக்கியாக கேள்விக் கேட்டாள்.
ம்ரிதுள் ஒரு நொடித் தன்னை ஆழ மூச்செடுத்து சரி செய்துக்கொண்டு, “அங்க போறதுக்கான வழிய கண்டுபிடிச்சிட்டியா?”, எனக் கேட்டான்.
“இல்ல…. நீ குடுக்கப்போற போட்டோஸ் தான் அத தெளிவு பண்ணும்…. ஆனா… இதுல இன்னொரு ரிஸ்க் இருக்கு…. சரியான வழிய கண்டுபிடிக்க நாம கொஞ்சம் அலைய வேண்டியது வரலாம்…. நான் உன்கூட வரேன். மத்தவங்கள நீ அவங்க வீட்டுக்கு அனுப்பிடணும். நாம இங்கிருந்து கிளம்பறதுக்கு முன்னாடியே அத நீ செய்யணும்”, நாச்சியார்.
“நீ சொல்றபடி நடந்துப்பன்னு நான் எப்படி நம்பறது?”, ம்ரிதுள்.
“இங்க வந்து ஒரு வாரம் ஆகுது. நான் நினைச்சா இங்க இருந்து என்னால தப்பிக்க முடிஞ்சிருக்கலாம். நீ அவ்வளவு பாதுகாப்பு எனக்கு போடல. அந்த ஹாலுக்கு தான் அவ்வளவு பாதுகாப்பு போட்டு இருந்த…. கேட்க்கு நேரா பால்கனி ரூம் எனக்கு…. காட்டுக்குள்ள புகுந்தா எப்படி வேணா தப்பிச்சி போகலாம். காட்டுல தான் கொஞ்ச வருஷமா வாழ்ந்துட்டு இருக்கேன். உன்னவிட காடு எனக்கு அதிகம் பழக்கப்பட்ட இடம்…. யோசிச்சி சொல்லு இரண்டு நாள்ல வழிய சொல்றேன்” , எனக் கூறிவிட்டுத் திரும்பி நடந்தாள்.
பின் நின்று , “ம்ரிதுள்… யோகேஷ் போட்ற சில்லியான ரூல்ஸ் என்னால பாலோ பண்ண முடியாது…. ஒரு பையன வேணா பக்கத்துல நிக்கவச்சி நாங்க பண்றத வாட்ச் பண்ண வை. எங்க வேலைய கெடுக்காத”, எனக் கூறிவிட்டு தன் அறைக்குச் சென்றாள்.
ம்ரிதுள் யோசனையுடன் அதித்துடன் வழக்கமாகப் பேசும் அறைக்குச் சென்றான்.
“சொல்லு ம்ரிதுள் அவங்க வேலைய ஆரம்பிச்சிட்டாங்களா?”, அதித் கையில் மதுகோப்பையுடன் பேசினான்.
“அதித்… இத்தன வருஷமா நீ தேட்ற விஷயம் என்ன?”, ம்ரிதுள் முதல் முறையாக நேராக அவனிடம் கேட்டான்.
“என்ன ம்ரிதுள்? பொக்கிஷம் டா…. பல ஆயிரக்கணக்கான வருஷ பழமையான பொக்கிஷம்”, சொல்பவன் கண்கள் ஜ்வாலைக்கொண்டு ஜொலித்தது.
“அங்க என்ன இருக்கு?”
“நிறைய தங்கம், வைரம் , நவரத்தினம் இப்படி நிறைய நிறைய இருக்கு”, திணறியபடிக் கூறினான்.
“உண்மைய சொல்லு அதித்”, ம்ரிதுள் அதிகாரமாகக் கேட்டான்.
“நாச்சியார் கண்டுபிடிச்சிட்டாளா ம்ரிதுள்?”, அதித் வெறியுடன் கேட்டான்.
“இன்னும் இல்ல… அவ போட்ற மேப் பாத்தா அங்க வேற ஏதோ இருக்குன்னு தோணுது….”, ம்ரிதுள் தூண்டில் போட்டான்.
“நாம அறிய விஷயங்கள தேடி போறோம் ம்ரிதுள். அதுல உனக்கு ஏன் இவ்வளவு சந்தேகம்? நீ சொன்னபடி உயிர்பலி குடுக்காம தான் இப்பவரை இந்த விஷயத்தை நான் பண்ணிட்டு இருக்கேன்”, அதித் அடக்கப்பட்டக் கோபத்துடன் கூறினான்.
“நாச்சியாவ ப்ளாக் பண்ண அவ தங்கச்சிய ஏன் பிறைசூடன் கிட்ட நீ அனுப்பற அதித்? “, கிடுக்கியாகக் கேள்விக் கேட்டான்.
“அது… அது…. அவ நம்மல ஏமாத்தக்கூடாதுல்ல அதுக்கு தான்…. அதுக்கு தான்…. “, அதித் விழிகள் ஓரிடத்தில் நிற்காமல் அங்கும் இங்கும் அலைபாய்ந்தது.
அவன் கண்களில் நொடிக்கு நொடி வெறி ஏறிக் கொண்டிருந்தது. அவன் அவனது கட்டுப்பாட்டை இழந்துக்கொண்டிருக்கிறான் என ம்ரிதுள் உணர்ந்ததும், “அதித். அவ ஒரு கண்டிஷன் போட்றா”, என பேச்சை மாற்றினான்.
“என்ன ? என்ன கண்டிஷன்?”, அதித்.
“அவ மட்டும் நம்ம கூட வராளாம். மத்தவங்கள வீட்டுக்கு அனுப்ப சொல்றா…. யாரையும் நாம இனிமே தொந்தரவு பண்ணக்கூடாதுன்னு சொல்றா”, ம்ரிதுள் அவனைக் கூர்ந்துக் கவனித்தபடிக் கூறினான்.
“வேலை முடியாம எப்படி அனுப்ப முடியும்? முடியாது…… முடியாதுன்னு சொல்லு”, அதித் இன்னும் தன்னிலை முழுதாக அடையவில்லை.
“அவங்கள அனுப்பினா தான் வழிய சொல்லமுடியும்னு சொல்றா “, ம்ரிதுள்.
“ஆஆஆஆஆஆ…. ம்ரிதுள்….. எனக்கு தலவலிக்குது….. நீயே இதுல முடிவெடு… நாம சீக்கிரமே அந்த இடத்துக்கு போகணும்… அவ்வளவு தான்”, என அருகில் இருந்தப் பெண்ணை வன்மையாக ஆக்கிரமிக்கும் போது டைஸி உள்ளே வந்தாள்.
திரையில் ம்ரிதுள் நிற்பதைப் பார்த்துவிட்டு , “அதித் டார்லிங் நான் இருக்கேன் உங்களுக்கு… அந்த பூச்சிய விட்றுங்க “, என அந்த பெண்ணை அனுப்பிவைத்தாள்.
ம்ரிதுள் கண்களில் சிவப்பேறி,” பைத்தியக்காரன்…. இவனால……”, என அருகில் இருந்தவற்றை எல்லாம் தூக்கி எறிந்து உடைத்தான்.
அப்போதும் ஆத்திரம் தீராமல் வில் அம்பை எடுத்துக்கொண்டுக் காட்டிற்குள் சென்றுவிட்டான்.
நாச்சியா அவனிடம் பேசிவிட்டு வந்ததில் இருந்து அனைத்தையும் கவனித்துக்கொண்டுத் தான் இருந்தாள்.
அவன் வெளியே சென்றதும் இனியனை மேலிருந்து கைக்காட்டி அழைத்தாள்.
“சிஸ்டம்ல வேலை இருக்கு… இங்கயே நில்லு…. “, என அவனை அழைத்துவந்து பக்கத்தில் நிறுத்திவிட்டு மற்றவர்களைக் கிளம்பச்சொன்னாள்.
“நான் இங்கயே இருக்கேன் நாச்சியா”, இளவெலிழியும் ராகவியும் கூறினர்.
“வேணாம் … ரா நீ இளா கூட போ… எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு… முடிச்சிட்டு நானும் அங்க வந்துடறேன்”, எனக் கூறி அவர்களை அனுப்பி வைத்தாள்.
அவர்கள் சென்றதை உறுதிபடுத்திக்கொண்டு இனியனை அமரச்சொன்னாள்.
வாசலில் இருவரை ம்ரிதுள் காவலுக்கு நிறுத்தி வைத்துவிட்டு தான் சென்றிருந்தான்.
லேப்டாப்பில் எதையோ டைப் செய்து அவனிடம் கொடுத்தாள்..
அவனும் அதற்கு பதில் டைப் செய்து ,” சரியா இருக்கான்னு பாத்துக்கோங்க மேம்…. வேற என்ன பண்ணணும்?”, என லேப்டாப்பை பார்த்துப் பேசினான்.
“இந்த வரிகள் இருக்க போட்டோஸ் இதுல தேடி எடு “, என வேறொரு போல்டர் ஓபன் செய்துக் கொடுத்தாள்.
அவனும் முப்பது போட்டோவை ஒரு போல்டரில் தனியாகப் போட்டுக்கொடுத்தான்.
“இதுக்கு என்ன அர்த்தம் மேம்?”, என ஒரு செய்யுளைக் காட்டி கேட்டான்.
“தமிழ் தானே நீ?”
“தமிழ்நாட்ல இப்ப யாருக்கு மேம் தமிழ் தெரியுது? சொல்லுங்க”, எனச் சகஜமாகப் பேசினான்.
“சரியான பதில் தான்”, ம்ரிதுள் உள்ளே வந்தான்.
“வேலைய ஆரம்பிச்சிட்டியா நாச்சியா?”, அவள் அனைத்தையும் எடுத்து எழுதிப் பார்த்து, எதனுடன் எது இணைகிறது என்றுப் பார்த்துக்கொண்டிருந்தாள்.
“என் வேலைய நான் சரியா தான் பண்ணிட்டு இருக்கேன். நான் உன்கிட்ட சொன்னது என்னாச்சி?”, நாச்சியாப் புருவத்தை உயர்த்தியபடிக் கேட்டாள்.
“யோசிச்சி சொல்றேன்”, இறுக்கமானக் குரலில் கூறினான்.
“உன் பதில் பொறுத்து தான் என் ரியாக்ஷன் வரும்”, எனக் கூறிவிட்டு தன் வேலையில் மும்முறமானாள்.
ம்ரிதுள்ளும் தனக்குத் தெரிந்ததை வைத்து இருக்கும் செய்யுள் பகுதிகளை, இணைத்துப் பார்த்து சோர்ந்து போய் எழுந்துச் சென்றான்.
“மேம்…. இவர் அவ்வளவு மோசமா தெரியலியே”, இனியன் மெல்லக் கேட்டான்.
“எல்லாருக்குமே இங்க இரண்டு முகம் இருக்கு…. “, எனக் கூறிவிட்டு தன் வேலையில் ஆழ்ந்தாள்.