35 -காற்றின் நுண்ணுறவு
தர்மதீரனும் முகுந்தும், வேதகீதனுடன் சென்று வாகனத்தில் இருந்தவனைக் கண்டு,” யார் இது?”, எனக் கேட்டனர்.
“எனக்கும் நாச்சியாவுக்கும் மீடியமா இருந்தது இவன் தான் தர்மா…. இவனும் காட்டுக்குள்ளயே நாச்சியா போற இடத்துக்கு எல்லாம் போயிட்டு அவங்கள கவனிச்சிட்டே இருந்தான்”, என நாக் எனும் நாகேஷ்வரனை அறிமுகப்படுத்தினான்.
“இவர் தானா அது? உள்ள போலாமே ஏன் இங்கயே நிக்கணும்”, முகுந்த்.
“உள்ள போலீஸ் கமிஷ்னர் இருக்காரு… அதான் வெளியே வந்துட்டேன்”, வேதகீதன்.
“அவர் ஏன் இங்க வந்தாரு?”, என முகுந்த் சொல்லி கொண்டிருக்கும் போதே அவர் வெளியே வந்தார்.
“முகுந்த்…. நீ போலீஸ் டிபார்ட்மெண்ட்ல வேலை செய்யறியா? இங்க வேலை செய்யறியா? உனக்கு என்ன ட்யூட்டி குடுத்தா நீ என்ன செஞ்சிட்டு இருக்க?”, என கமிஷ்னர் அவனைத் திட்டிக்கொண்டிருந்தார்.
தர்மதீரன் கமிஷ்னர் வெளியே வருவதைக் கண்டு வண்டிக்கு அந்த பக்கம் சென்று நின்றுக்கொண்டான்..
“இல்ல சார் அந்த மிஸ்ஸிங் கேஸ் விஷயமா”, எனச் சமாளித்தான் முகுந்த் தர்மனை மறைத்துக்கொண்டபடி.
“அந்த ஏ.சி கூட சேர்ந்து அத்தனை பேரும் என்னை எதிர்த்து பேசறீங்க…. நீயும் அவனமாதிரி இருக்காத…. ஒழுங்கா ஆபீஸ் வந்து என்னை பாரு “, என அர்ச்சனை நடத்திவிட்டுச் சென்றார்.
“எவனோ எங்கயோ குடையறதுக்கு நான் என்ன பண்ணுவேன்? போயா முதலைவாயா”, என முகுந்த் சத்தமாகவே முணுமுணுத்தான்.
“ஹாஹாஹா… என்னாச்சி முகுந்த்?”, என தேவகீதன் சிரித்தபடிக் கேட்டான்..
“முகுந்த் உள்ள வச்சி பேசிக்கலாம்”, என தர்மன் குரல் கொடுத்துவிட்டு பின்பக்க வாசலுக்குச் சென்றான்.
“நாகேஷ்வர் வாங்க”, என அழைக்க முகம் தெரியாதபடி மறைத்துக்கொண்டு அவர்களுடன் நடந்தான்.
பிறைசூடன் இடத்தில் இருந்துக் கொண்டு வந்த பொருட்களில், அந்த ரோபோவை மட்டும் தனியாக வைத்துவிட்டு சோழன் மற்ற அனைத்தையும் கமிஷ்னர் அலுவலகத்திற்கு அனுப்பினார்.
“இவனுங்களே கடத்திட்டு இவனுங்களே கம்ப்ளையண்ட் குடுப்பானுங்க எச்ச பொறுக்கிங்க”, எனச் சத்தமாகத் திட்டியபடி தர்மன் இருக்கும் அறைக்கு வந்தார்.
“நாம அங்க போனது எப்படி அந்தாளுக்கு தெரிஞ்சது?”, வழுதி.
“ஊருக்குள்ள பொறுக்கறவனுக்கா பஞ்சம்? எவனாவது பொறுக்கறதுக்கு போட்டு குடுத்திருப்பான்…. அந்த ரோபோல இருக்கறத காப்பி பண்ணி இதுல போடு தர்மா”, என ஒரு பென்டிரைவைக் கொடுத்து சிஸ்டமில் போடச் சொன்னார்.
“சார்… விஜய் சௌந்தர் பத்தின டீடைல்ஸ் வந்துடிச்சி”, என ஒருவன் கொண்டு வந்துக் கொடுத்தான்.
“இந்த ஊர்பொறுக்கி இப்ப நாடுபொறுக்கி ஆகிட்டானா?”, என சோழன் அவன் போட்டோவைப் பார்த்துவிட்டு, வழுதியிடம் அதைக் கொடுத்தார்.
“இது…. அந்த போதைமருந்து கடத்தல்ல நாம பத்து வருஷத்துக்கு முன்ன கண்டுபிடிச்ச ஆள் தானே சீப்”, வழுதி யோசித்தபடிக் கேட்டார்.
“அதே பரதேசி தான். அவனுக்கும் இந்த கூட்டத்துக்கும் என்ன லிங்க்னு பாருங்க”, எனக் கூறிவிட்டு அந்த வீடியோவைப் போடச் சொன்னார்.
பிறைசூடனை மடக்கி அடித்து உதைத்தது முதல் அங்கிருந்து அவர்கள் கிளம்பியது வரை அனைத்தும் பதிவாகி இருந்தது.
“இத மல்டி காப்பி பண்ணி வை தர்மா… வழுதி ஒரிஜினல் பத்திரமா இருக்கணும்…. “, எனக் கூறியவர் அந்த வீடியோவில் எதையோ பெரிதுப் படுத்தச் சொன்னார்.
“எது சீப்…?”, வழுதி.
“அவன் வீடியோ கால்ல பேசறான்ல… அது”, சோழன்.
“இது…. இது விஜய் சௌந்தர் சார்… அவனுக்கும் அதித்-கும் என்ன நெருங்கிய சம்பந்தம் இருக்கும்?”, வழுதி.
“நான் கத்தார் போறேன் சார்… “, தர்மதீரன்.
“கத்தாரா? “, வழுதி.
“அவனுக்கு பின்னாடி இருக்க அந்த பில்டிங் தோஹா ல இருக்கு. அங்க தான் அவனும் இருக்கான். அங்க போனா மத்த விஷயம் தெரியும். தவிர வல்லகிய அங்க தானே கொண்டு போயிருக்காங்க…. “, தர்மதீரன் தீர்க்கமானக் குரலில் கூறினான்.
“தனியாவா?”, முகுந்த்.
“நாங்களும் கூட போறோம் சார்”, என வேதகீதனும், நாகேஷ்வரனும் கூறினர்.
“நீ யாரு?”, சோழன் நாகேஷ்வர் பார்த்துக் கேட்டார்.
“நான் நாச்சியா பிரண்ட். ஒரு முக்கியமான விஷயம் சொல்ல வந்தேன்.. ப்ரோபஸர் தசாதிபன் உயிரோட இருக்காரு”, எனக் கூறினான்.
“அவர சுட்டதா தகவல் வந்தது”, வழுதி.
“சுட்டது நிஜம் தான். நான் தான் அவர தூக்கிட்டு போய் காப்பாத்தினேன். நாச்சியாவோட அம்மா அப்பா தான் அதுக்கு ஹெல்ப் பண்ணாங்க”, என நடந்ததை விவரித்தான்.
“நாங்க அவங்கள பாதுகாக்க இவ்வளவு கஷ்டப்பட்டா , எங்களுக்கே தெரியாமா இவ்வளவு வேலை பண்றாங்க….அப்பறம் நாங்க பண்றதுக்கு என்ன அர்த்தம்?”, வழுதிக் கோபமாகக் கேட்டார்.
“கோவப்படாதீங்க மிஸ்டர் வழுதி”, எனக் கூறியபடி தசாதிபன் அங்கே வந்தார்.
“வாங்க தசாதிபன்”, சோழன் எழுந்து நின்று வரவேற்றார்.
“வணக்கம் சோழன்… ரொம்ப வருஷம் கழிச்சி மறுபடியும் சந்திக்கறோம்”, என இருவரும் கைக்குலுக்கிக் கொண்டனர்.
பின் வழுதியைப் பார்த்து, “இதுபோல இக்கட்டான சூழ்நிலைல யாரையும் முழுசா நம்ப மனசு ஒத்துக்காது…. அதான் அவங்க உங்க கிட்ட மறைச்சாங்க… “, எனக் கூறிவிட்டு தர்மனைப் பார்த்தார்.
“நீ தானே தர்மதீரன்?”, என அவனைக் கேட்டார்.
“ஆமா சார்….”
“நாச்சியாவோட அப்பா அம்மா உன்னபத்தி சொன்னாங்க…. நாச்சியாவும் உன்ன பத்தி சொல்லி இருக்கா… உன்னோட இன்டெலிஜென்ஸ் ரொம்ப ஷார்ப்ன்னு… உன் உதவி எனக்கு வேணும்.. செய்வியா?”,எனக் கேட்டார்.
“என்ன உதவி சார்?”, தர்மதீரன் அவர் அருகில் வந்துக் கேட்டான்.
“மேற்கு தொடர்ச்சி மலைல ஒரு இடத்துக்கு நாம உடனே போகணும்.. அங்க ஒன்னு இருக்கு.. அது இப்ப ரொம்ப முக்கியம் நமக்கு”, எனக் கூறினார்.
“போலாம்….”, என எழுந்தான்.
“நில்லு…. நாகேஷ்வர்… நீ நாச்சியா இருக்கற இடத்த கண்டுபிடிச்சி நான் சொல்றத அவகிட்ட சொல்லிடு… நாலு நாள்ல நீ அத பண்ணணும்”, எனக் கூறினார்.
“சொல்லுங்க சார்”, என முன்னே வந்தான்.
“ஒரு பேப்பர் பென் குடுங்க”, எனக் கேட்டார்..
அதில் ஒரு செய்யுளை எழுதி, இதை அவளிடம் கொடுத்துவிடு எனக் கூறிவிட்டு எழுந்தார்.
“சார் ஒரு நிமிஷம்”, என அவரை நிறுத்திய சோழன் வழுதிக்குக் கண்காட்டினார்.
உள்ளே சென்ற வழுதி அவரது டைரியைக் கொண்டு வந்துக் கொடுத்தார்.
“மத்த பொருள் எல்லாம்”, என தர்மன் கேட்க, “அதுல்லாம் எப்பயோ எடுத்துட்டாங்க தர்மா”, எனச் சிரித்தபடிக் கூறினார் சோழன்.
“சரி தான். நமக்கு சுமந்துட்டு போற வேலை மிச்சம்…. அப்பறம் பாக்கலாம் சோழன்.. வழுதி …. நாச்சியா அப்பா அம்மாவுக்கு பாதுகாப்பு இப்பவும் தேவை தான். அவங்க இரண்டு பொண்ணுங்களையும் அவன் தூக்கிட்டு போயிருக்கான்னா அடுத்து அவங்களை தூக்கவும் வாய்ப்பிருக்கு… பாத்துக்கங்க…”, எனக் கூறிவிட்டு வேதகீதனை அருகில் அழைத்தார்.
“உன்ன கடத்திட்டதா சொன்னாலே நாச்சியா”, எனக் கேட்டார்.
“ம்ரிதுள் தான் கடத்தி வச்சிருந்தான். தர்மா என்னை வெளியே கொண்டு வந்தாரு சார்”, என பவ்யமாக நின்றுப் பதிலளித்தான்.
“நல்லது ஜாக்கிரதை”, என அவன் தோளில் தட்டிக்கொடுத்துவிட்டு தர்மனை அழைத்துக்கொண்டுச் சென்றார்.
“நாகேஷ்வர் …”, சோழன் அழைத்தார்.
“சார்… “
“நீங்க அந்த ஆயுத கடத்தல் கும்பல்ல இருக்கறவரு தானே?”, என சரியாகக் கேட்டார்.
“ஆமா சார். ஆனா…..”, என நாகேஷ்வர் இழுத்தான்.
“இவங்களுக்கு கொஞ்சம் வெபன்ஸ் தேவைபடும். உங்களால ஏற்பாடு பண்ண முடியுமா? பணம் நான் தரேன்”, எனக் கேட்டார்.
“முடியும் சார்… நான் ஏற்பாடு பண்றேன்.. பணம் வேண்டாம்…. செய்ய வேண்டியது என் கடமை”, எனக் கூறிவிட்டு முகுந்திடம் சென்றான்.
“முகுந்த் சார்…. இனியன் சார் எங்க இருக்காரு?”, எனக் கேட்டான்.
“ஆந்திரா எல்லை தாண்டி கொஞ்ச தூரத்தால ஒரு அருவி வரும். அங்க இருக்கறதா சொன்னாரு ….”, என லொகேஷனைச் சொன்னான்.
“தேங்க்யூ சார்… தோஹா போக டூப்ளிகேட் பாஸ்போர்ட் நான் ரெடி பண்றேன். யார் யாருக்கு வேணும்?”, எனக் கேட்டான்.
“ஒரிஜினல் இருக்கே”, வழுதி.
“ஒரிஜினல்ல போக விடமாட்டாங்க… எல்லாத்தையும் ரெடி பண்ணி தான் ஆகணும் வழுதி…. நம்ம சைட்ல தர்மனுக்கும் சுதாவுக்கும் ஏற்பாடு பண்ணுங்க. தசாதிபன் சாருக்கு பண்ணணும். அதிக ஆளுங்கள அனுப்ப முடியாது”, சோழன்.
“அவங்க போட்டோ மட்டும் குடுங்க சார்”, எனக் கேட்டான் .
“மெயில்ல அனுப்பறேன்”, என வழுதி அவன் மெயில் ஐடி வாங்கிக்கொண்டார்.
நாகேஷ்வர் நேராக தன் இருப்பிடம் வந்தவன், தன் சகாக்கள் நால்வரை அழைத்து தோஹாவுக்குச் செல்ல வேண்டும் எனக் கூறி, மற்ற மூவருக்கும் போலி பாஸ்போர்ட் தயாரிக்கச் சொன்னான்.
“யாருப்பா போறாங்க?”, நாகேஷ்வர் சகாக்களில் ஒருவன் கேட்டான்.
“நம்ம ஆளுங்க தான். கொஞ்சம் பிரச்சினை… பொருளும் அங்க தேவைபடும். இப்ப அங்க நம்மாளு யாரு இருக்கா?”, எனக் கேட்டான்.
“நம்ம முஸ்தபா தான் இருக்கான்”
“சரி அவன்கிட்ட நல்ல புது பொருள் ரெடி பண்ணிக்க சொல்லு… “, எனக் கூறிவிட்டு நாச்சியாவை எங்கிருந்து தேடலாம் என யோசிக்கத்தொடங்கினான்.
“தம்பி…. ஒரு விஷயம்”, என வண்டி ஓட்டிக் கொண்டிருந்த தர்மனை அழைத்தார்.
“சொல்லுங்க சார்”, எனக் கூறினான் சாலையில் இருந்து கண் எடுக்காமலே.
“நான் அங்க இருந்தது உங்களுக்கு தெரியும் தானே?”, எனக் கேட்டார்.
“தெரியும் சார். அரசிம்மா சொன்னாங்க…. நானும் தெரியாதமாதிரி நடந்துகிட்டேன்”
“நீங்க ஒரு தடவை நான் படுத்துட்டு இருந்தப்ப வந்து ஜன்னல் கிட்ட நின்னு பாத்தீங்க தானே”, என நடுவில் ஒருமுறைக் கண்விழித்தபோது கண்ட முகத்தை நினைவில் வைத்துக் கேட்டார்.
“நடுராத்திரில அரசியம்மா நல்லா நடந்து போறப்ப சந்தேகப்பட்டு வந்தேன். அவங்க வந்த வழிலயே வந்து பாத்துட்டு நான் திரும்ப வந்துட்டேன்”, என சாதாரணமாகக் கூறினான்.
“நீங்க ஏன் இன்னும் எந்த டிபார்ட்மெண்ட்லையும் ஜாயின் பண்ணல?”, என அவன் அறிவுக்கூர்மையை மனதுள் வியந்தபடிக் கேட்டார்.
“பணம் இல்ல சார். பணம் இருந்தா தான் வேலை கிடைக்கும்னு சொல்றாங்க… என்கிட்ட பணம் இல்ல. இருந்தாலும் பணம் குடுத்து வேலை வாங்க மனசு இல்ல…. நாம எங்க போகணும் சார்?”, எனக் கேட்டான்.
தன் மொபைலில் ஒரு லொகேஷனைக் காட்டி அங்கு செல்லச் வேண்டும் எனக் கூறினார்.
“நாம அங்க போக இரண்டு நாள் ஆகும் சார். .. அதுக்கு மேல காட்டுக்குள்ள நடக்கணும்னா இன்னும் லேட் ஆகும்”, தர்மன் தூரத்தினையும் நேரத்தையும் மனதில் கணக்கிட்டபடிக் கூறினான்.
“போய் தான் ஆகணும். அதுக்கு தேவையானத எடுத்துக்கலாம் தம்பி… “, எனக் கூறினார்.
தர்மதீரனும் நான்கு நாட்களுக்கு தேவையானவற்றை எடுத்துக்கொண்டு முடிந்தவரைக் காட்டு வழியிலேயே வாகனத்தைச் செலுத்தினான்.