34 – ருத்ராதித்யன்
இங்கே அஜகரனைத் தேடி நுவலியும், ரணதேவ்வும் காட்டிற்குள் புகுந்தனர்.
அஜகரன் ரணதேவ் அந்த காட்டின் எல்லைக்குள் காலடி எடுத்து வைத்ததும் சீறியபடி வேகமாக அவரைத் தேடி வந்தது.
காற்றின் வேகத்தில் வந்து நின்ற அஜகரனைக் கண்டு ரணதேவ் திகைத்து நின்றார்.
அதன் கோப சீற்றம் கண்டு நுவலி ரணதேவை மறைத்தபடி முன்னே வந்து நின்றாள்.
“அஜகரா…. உன்னோட உதவி வேணும்….”, நுவலி அஜகரனின் கண்களைப் பார்த்துக் கூறினாள்.
முடியாது என்பது போல அது உடலை அசைத்து வேறு பக்கம் திரும்பிவிட்டு, மீண்டும் ரணதேவை வன்மத்துடன் பார்த்தது.
“வனதேவி கோவிலுக்கு வா…. அங்க பேசிக்கலாம். இவர் என்னோட பாதுகாப்புல என்னோட வந்திருக்காரு. இவருக்கு எதுவும் ஆபத்து நடக்க நான் விடமாட்டேன்….”, எனக் கூறிவிட்டு நுவலி ரணதேவ்வின் கையைப் பிடித்தபடி முன்னே நடந்தாள்.
அஜகரன் அவளை மறித்தபடி முன்னே வந்து நின்றது. ரணதேவ்வை பார்த்தபடி அவளிடம் ஏதோ கூறுவது போல ஸ்ஸ் என சத்தம் எழுப்பியது.
நுவலியும் அதைப் போலவே ஸ்ஸ் என வெவ்வேறு ஒலி அதிர்வெண்ணில் சத்தம் கொடுத்தபடி முன்னே நடந்தாள்.
அவளின் சத்தம் கேட்டதும் அஜகரன் கோபம் கொண்டு வேறு பக்கமாக காட்டிற்குள் சென்றுவிட்டது.
“அம்மாடி…. அது அந்த பக்கம் போயிடுச்சே…. எப்படி நான் சமாதானம் பண்றது? ஆச்சி கிட்ட என்ன சொல்றது?”, ரணதேவ் அஜகரன் சென்ற திசையைப் பார்த்தபடி கேட்டார்.
“மொத நாம வனதேவி கோவிலுக்கு போலாம் வாங்கய்யா…. அவன அப்பறம் பேசிக்கலாம்”, என நுவலி அவரின் கைப்பிடித்து அழைத்துக் கொண்டு அடர்வனத்தினில் நுழைந்தாள்.
“எனக்கு ஒரு மாதிரி இருக்கு … கொஞ்சம் தண்ணி கிடைக்குமா மா?”, தளர்ந்த குரலில் கேட்டார்.
“இன்னும் கொஞ்ச தூரம் போனதும் உங்களுக்கான சுனை இருக்கு. அதுவரைக்கும் தாகத்தை பொறுத்துக்கோங்க ஐயா…. அங்க தான் நீங்க தண்ணி எடுத்துட்டு கோலிலுக்கு வரணும்…. ஆச்சி நீங்க என்னென்ன பண்ணணும்னு என்கிட்ட சொல்லியனுப்பியிருக்காங்க…. பயப்படாம வாங்க”, என அவருக்கு ஆறுதலாக பேசியபடி வேகமாகவே நடக்க ஆரம்பித்தாள்.
நெடுமாறன் காவல்காரனைப் போல வீட்டின் பக்கம் நின்றபடி அங்கு நடப்பதை கவனிக்கலானான்.
மதுரையில் கண்டெடுத்த பல்லாயிர ஆண்டு பழமையான அழிந்து போன வகை தேளின் சாம்பலுக்கும் இங்கிருப்பவர்கள் காரணமாயிருக்கலாம். இவர்களின் தலைவன், செயல்படுத்துபவன், முக்கிய கட்டளைகள் பிறப்பிக்கும் ஆட்கள் எல்லாம் யார் யாரென அறிந்துக்கொள்ள பொறுமையுடன் காத்திருக்க தொடங்கினான்.
“சார்…. நான் லேப்குள்ள வந்துட்டேன்…. இங்க கண்மயா இருக்காங்க…. இன்னும் பத்து பேருக்கு மேல லேப் டெக்கீஸ் இருக்காங்க… என்ன பண்ணட்டும்?”, பாரதி கேட்டாள்.
“என்ன நடக்குதுன்னு மட்டும் வாட்ச் பண்ணு…. சாரதி சிக்னல் அனுப்பிட்டியா? “, நெடுமாறன்.
“அனுப்பிட்டேன் சார். பரத் சார் வரட்டுமான்னு கேக்கறாரு “
“வேணாம்….. இங்க நடக்கறத மட்டும் கவனிச்சி என்ன விஷயம்னு முழுசா நாம் தெரிஞ்சிக்கலாம்…. அதுவரை யாரும் இங்க வரவேணாம்…. அமைதியா பதுங்கியிருங்க… இங்க ரொம்ப தப்பான விஷயம் பண்றாங்க….”
“ஆமாங்க சார்…. ரொம்ப தப்பான விஷயம் பண்றாங்க….. புலியோட இரத்தத்த அர்ஜுன் சாருக்கும், யாத்ரா மேடத்துக்கும் செலுத்தறாங்க…. அதுவும் கண்மயா தான் பண்றாங்க…. “, என பாரதி அதிர்வுடன் கூறியதும் நெடுமாறன் திகைத்து நின்றான்.
“வாட்…..”, என சாரதியும் அதிர்ந்து கேட்டான்.
“யாரு அந்த மெண்டல்ன்னு தெரியல…. இதனால என்னென்ன பின்விளைவுகள் வரும்னு தெரியல….. ஷிட்…. இப்ப என்ன பண்றதுங்க சார்”, பாரதி சுவற்றின் ஓரத்தில் மறைந்தபடி அங்கு நடப்பதை பார்த்துக் கூறினாள்.
“ஒரு நிமிஷம்…. சாரதி…. பரத்கிட்ட இந்த மெஸேஜ் அனுப்பு… இதுக்கு தகுந்த போர்ஸோட வரச்சொல்லு… சீக்கரமா…..”, என கூறிவிட்டு கோட்சூட்டுடன் வரும் ஒருவனை கவனிக்கலானான்.
“சாரதி…. நான் அனுப்பற போட்டோ யாருன்னு சொல்லு”, என தலையில் இருந்து அதிநவீன கேமராவில் ஒருவனை படம் பிடித்தான். அது சாரதி வைத்திருக்கும் லாப்டேப்பிற்கு தானாகவே சென்றுபதிந்துக்கொள்ளும் படியாக உருவாக்கப்பட்டிருந்தது.
“சார்… இது ராஜ்கர்ணா…. எவிக்ட் ரிசர்ச் லேப் சி.இ.ஓ….. “
“ரிஷித் போட்டோ நம்மகிட்ட இல்லையா?”,
“இல்ல சார்… அவன யாரும் இதுவரை பாத்ததில்ல… ஒரு போட்டோ கூட கிடைக்கல…. “, சாரதி.
“அவனும் இங்க தான் இருக்கணும்… பாரதி.. கண்மயா ஆக்டிவிட்டீஸ் எப்படி இருக்கு? பக்கத்துல யாராவது அவள மெரட்டி செய்ய வைக்கிறாங்களா?”, நெடுமாறன்.
“பக்கத்துல யாரும் இல்ல சார். ஆனா அவங்களுக்கு அப்பப்ப ஒரு கால் வருது. அது வந்தப்பறம் தான் அவங்க அர்ஜுன் யாத்ரா கிட்டயே வராங்க…. மத்தபடி அவங்கள பாத்து அழுதுட்டு இருக்காங்க…. கட்டாயப்படுத்தி தான் செய்யவைக்கற மாதிரி தெரியுது….”, பாரதி மெல்ல மெல்ல புலி இருக்கும் அறைக்குள் புகுந்திருந்தாள்.
“ரிஷித் போட்டோ நமக்கு கிடைக்கணும்…. அவன் தான் கண்மயாவ மிரட்டி செய்ய வச்சிட்டு இருக்கணும்… அந்த கால் மானிட்டர் நீ பாக்க முடியுமா?”, நெடுமாறன்.
“இல்ல சார்… புலி இருக்க ரூம்ல இப்ப நான் இருக்கேன்… அவங்க அடுத்த ரூம்ல இருக்காங்க…. இங்கிருக்க வெண்டிலேட்டர் வழியா போக முடியுமா பாக்கணும்”
“சரி பாரு… ஜாக்கிரதை…. அர்ஜுன் யாத்ராவ விட்டு ரொம்ப தூரம் போகாத… அங்க நடக்கறத கவனிச்சிட்டே இரு….. “, நெடுமாறன்.
“ஓக்கே சார்…..”, மெல்ல மெல்ல கேமிராவில் பதிவாகாமல் மேலே ஏசி வெண்டிலேட்டர் வழிக்குள் புகுந்து கொண்டாள் பாரதி.
அர்ஜுனும் யாத்ராவும் சிறிதும் அசைவில்லாமல் இருப்பது கண்டு கண்மயா பயந்து அவர்களை தட்டித் தட்டி எழுப்பினாள். ஆனால் அவர்கள் முற்றிலும் சுயநினைவை இழந்து படுத்திருந்தனர். அவர்களின் இதய துடிப்பு அதிகமாகிக்கொண்டே இருந்தது.
அத்தனை துடிப்பு இருந்தால் இதய நாளங்கள் விரைவில் வெடித்து நின்றுவிடும். இல்லையேல் மூளை நரம்புகள் வெடித்து இரத்தக்கசிவு ஆரம்பமாகும்.
கண்மயா பதறி மாற்றி மாற்றி மருந்தை ஊசியில் ஏற்றி அவர்களுக்கு செலுத்தியும் இதயத்துடிப்பு சீராகவில்லை. மனிதனின் சராசரி துடிப்பின் எண்ணிக்கையை கடந்து பலமடங்காக ஏறியிருந்தது.
அங்கிருந்த மற்றவர்களும் அர்ஜுன் யாத்ராவிற்கு சிகிச்சைகள் மேற்கொண்டனர். இதற்கிடையில் ரிஷித்திடம் இருந்து ஒரு அழைப்பு கூட வராதது கண்மயாவை பயப்பட வைத்தது. சகஸ்ரா அவனிடம் தான் இருக்கிறாள். அந்த கிறுக்கன் அவளை ஏதேனும் செய்துவிடுவானோ என்ற பயமும் மனதில் தீயாய் பற்றிக்கொள்ள அவள் தலைச்சுற்றி கீழே விழுந்தாள்.
“இங்க என்ன நடக்குதுங்க மேடம்? எனக்கு ஒன்னும் புரியல… நாம கல்யாணம் பண்ணணுமா? அது எப்படி சரிவரும்… இந்த பாட்டி சொல்றது ஒன்னுமே எனக்கு புரியல.. ஆனா இந்த விஷயத்த விட எனக்கு என் அன்ஜுன் யாத்ராவ காப்பாத்தறது தான் இப்ப முக்கியம். தயவு செய்து நெலமைய புரிஞ்சிகிட்டு என்னை போக விடுங்க மேடம்….”, ஆதி இழுத்து வைக்கப்பட்ட பொறுமையுடன் பேசினான்.
“நீ போனா மட்டும் அவங்கள காப்பாத்திட முடியுமா பேராண்டி?”, வனயட்சி ஆச்சி வெற்றிலையை வாயில் போட்டபடி கேட்டார்.
“என்னால ஆன முயற்சிய செய்வேன் பாட்டி”, பல்லைக்கடித்தபடிக் கூறினான்.
“நான் சொல்றது நீ செஞ்சா நீ போகாமலே அவங்கள பத்திரமா நல்லபடியா இங்க வரவைக்கலாம்…. என்ன சொல்ற?”
“அதெப்படி முடியும்… நீங்க இவங்கள கல்யாணம் பண்ண சொல்றீங்க… இவங்க என்ன மாயமந்திரம் செஞ்சி அவங்கள காப்பாத்துவாங்களா?”, என ஆத்திரத்துடன் கேட்டான்.
“அது முழுசா மாயமந்திரம்னு சொல்ல முடியாது… ஆனா பைரவக்காட்டு சாகசம்னு சொல்லலாம்…. “, மர்மமான புன்னகையுடன் கூறினார்.
“பாட்டி…. ப்ளீஸ்… தயவு செஞ்சு புரியற மாதிரி சொல்லுங்க.. எனக்கு நேரமாச்சு….”
“எனக்கும் தான் ராசா நேரமாச்சு…. உங்களுக்காக நான் இன்னும் எத்தன நூத்துவருஷம் காத்திருக்கறது… எங்கடம முடிச்சி என் பிறவியவும் முடிக்கணுமே… “, எனக் கூறவும் ஆதிக்கு அர்ஜுனும், யாத்ராவும் அங்கே படுத்திருப்பதும், புலியின் இரத்தம் ஏற்றப்படும் காட்சி வந்து சேர்ந்தது அழைபேசிக்கு…
அதைக் கண்டவன் என்ன செய்வதென புரியாமல் தலையைப் பிடித்துக்கொண்டு அமர்ந்துவிட்டான் அக்குடிசையின் ஓர் மூலையில்…..
ஆருத்ரா அவன் அழைப்பேசியை வாங்கி அக்காட்சியை பார்த்துவிட்டு ஆச்சிக்கும் காட்டினாள்..
“அவனுங்க வேலைய செய்ய ஆரம்பிச்சிட்டானுங்க… நம்ம வேலைய நாம பாக்கலாம்…. இல்லைன்னா இன்னொரு பேரழிவு ஏற்படும்…. “, என தீவிரமான முகபாவத்துடன் கூறினார் ஆச்சி.
“என்ன பண்றது ஆச்சி? இவங்களுக்கு புலியோட இரத்தம் ஏத்திட்டு இருக்காங்க… இவங்கள எப்படி சரிபண்றது?”, ஆருத்ரா யாதென்றே புரியாத உணர்வில் சிக்குண்டபடி கேட்டாள்.
“தீரன பெத்த தேனு தான் இவங்களுக்கு பெரும் வைத்தியம்…. ஆனா அது உடனே பண்ணமுடியாது… இப்ப அஜகரனோட உதவி நமக்கு அதிமுக்கியமான ஒன்னு. தம்பி ஆதித்யா….. உன் தங்கச்சிய இங்க கொண்டு வந்து விட்டுட்டு உன் மாப்பிள்ளைய அந்த இடத்துக்கு போக சொல்லு. அவங்களையும் அந்த புலியவும் இங்க கொண்டு வரணும்… முடியுமா?”, ஆச்சி அவன் கண்பார்த்துக் கேட்டாள்.
“நானும் போறேன்… முடியும் பாட்டி…. ஆனா எனக்கு ஒன்னுமே புரியல”, குழப்பத்துடன் கூறினான்.
“இதோ சிங்கம்மாவையும் கூட்டிட்டு போ…. ஞாபகம் இருக்கட்டும் … வர அமாவாசை முடிஞ்ச மூணாம் நாள் உங்களுக்கு கல்யாணம் நடக்கணும். இரண்டு பேரும் பத்திரமா இங்க வந்து சேரணும்… அவங்கள கூட்டிட்டு வாங்க மத்த விஷயத்தை சொல்றேன்….”, எனக் கூறிவிட்டு சில மருத்துவ இலைகளை அவர்களுக்கு கொடுத்தார்.
சிரஞ்சீவ் நெடுமாறனும் ஆதி கூறியபடி இதழியுடன் அங்கே வந்து சேர்ந்தான். மூவரும் குடிசையை விட்டு வெளியே வரும்போது ஆதியின் பெற்றோரும் அங்கே நின்றிருந்தனர்.
“ஆதி…. “, கயல் ஓடிவந்தார்.
“ஒண்ணுமில்ல ம்மா…. நீங்க ஜாக்கிரதையா இங்கேயே இருங்க…. நான் அர்ஜுன் யாத்ராவோட வந்துடறேன்….”, பரிதவிப்பும் குழப்பமுமாக இருக்கும் மகன் முகம் கண்டு பெற்றவர்கள் உள்ளம் பதறியது.
“தம்பி… அர்ஜுனுக்கு?”, என தமிழன்பன் ஆரம்பிக்கும்போதே ஆச்சி குறுக்கிட்டு, ” தமிழன்பா… உன் பெரிய மகனையும், மருமகளையும் ஆசிர்வாதம் பண்ணுங்க… வர மூணாம்பிறைல இவங்களுக்கு கல்யாணம் நம்ம வனயட்சி கோவில்ல நடக்க போகுது… அதுக்கான ஏற்பாட்ட பாரு… தீரனும் அவன பெத்த தேனுவையும் இங்க கொண்டு வந்து விடுங்க…. உங்க பொண்ணும் இங்கயே இருக்கட்டும்…. “, என கூறினார்.
“அம்மா… எங்களுக்கு ஒன்னுமே புரியல… இந்த பொண்ணு எப்படி? அவங்க ராஜவம்சத்து ஆளுங்க…. “, என தமிழன்பன் ஆரம்பிக்கும் போதே ஆச்சி ஒரு பார்வை பார்க்க மேற்கொண்டு பேச முடியாமல் வாய்மூடினார்.
“எவன்டா ராஜவம்சம்? மனுஷனா பொறந்த எல்லாரும் சமம் தான். குணம் தான் பேசணும். பணமோ சொத்தோ இங்க பேசக்கூடாது…. இது பிரபஞ்ச காரியம். யாரும் தடுக்கவும் முடியாது… இவங்க கல்யாணம் இந்த விஷயத்தோட முக்கிய பங்கு. நீங்க யாரும் தடுக்க கூடாது… இது அந்த அப்பன் உத்தரவு…. ஆசீர்வாதம் பண்ணி அனுப்புங்க. மத்த ரெண்டு புள்ளைங்கள இவங்க கூட்டிட்டு வருவாங்க… அவங்கள நான் சரிபண்ணி தரேன்…”, என ஆச்சியின் குரல் கர்ஜனையாக ஒலித்தது.
அதையே மறுமொழிவது போல பைரவனும் ஊளையிட்டான் அடர்ந்த காட்டை நோக்கி…..