35 – ருத்ராதித்யன்
சிரஞ்சீவ் நெடுமாறன் இதழியுடன் அந்த கிராமத்திற்கு வந்து சேர்ந்தான். அவர்கள் பின்னாலேயே தாஸ் தேனுவையும், தீரனையும் வண்டியில் கொண்டு வந்து இறக்கினர்.
தீரன் இறங்கியதும் பைரவன் அவனிடம் தாவி ஓடினான். வீரனும் பைரவனைக் கண்டு ஓடிவந்து நாவால் நக்கி தன் அன்பை பரிமாறிக்கொண்டான். பைரவன் உருவத்தில் மிகவும் சிறிதாய் இருக்க, தீரன் அவனை தன் முதுகின் மேல் ஏற்றிக் கொண்டு, தன் தாயிடம் சென்று காட்டினான். தேனுவும் நாவால் பைரவனை அணைத்து அன்பை பகிர்ந்துகொண்டாள்.
“என்ன அதிசயம் பாத்தியா ஆதி? இதுவரை அந்த நாய் குட்டிய தீரன் பார்த்ததே இல்ல ஆனா எப்படி கொஞ்சுது…. எல்லாமே ஆச்சரியமா இருக்கு …..”, கயல் அங்கு அரங்கேறும் காட்சிகளைக் கண்டு கூறினார்.
“எல்லாமே அதிசயந்தான் கயல்….. இந்த பிரபஞ்சத்துல பொறந்த எல்லாமே ஒன்னோட ஒன்னு தொடர்புடையது தான்… அதை உணர நாம பிரபஞ்சத்தோட இணைஞ்சி இருக்கணும்… அப்படி இருந்தா பல விஷயங்கள இப்ப நான் சொல்லாமலே உங்களுக்கும் புரியும்….”, என வனயட்சி ஆட்சி கூறியபடி தீரன் அருகில் சென்றார்.
தேனுவும் தீரனும் வனயட்சி ஆட்சியின் வயிற்றில் தலையை கொண்டு வந்து கொடுத்து கொஞ்சினர்…
“உங்களுக்காக நான் இத்தன வருஷமா காத்துக்கெடந்தேன் கண்ணுங்களா…. இன்னொருத்தனையும் உங்களோட கொண்டு வந்து சேத்திட்டாலே எனக்கு பெரிய கடமை முடியும்…..”, என மூவரையும் கட்டி தழுவியபடி கண்ணீர் உகுத்தார் ஆச்சி.
“ஆச்சி…. “, என் அழைத்தபடி ஆருத்ரா வந்து நின்றாள்.
“சொல்லு சிங்கம்மா…. “
“நானும் ஆதித்யாவும் தனியா போறோம். சிரஞ்சீவ் நெடுமாறன் எங்களுக்கு முன்ன கிளம்பி போகட்டும். அவங்கள சீக்கிரமே இங்க கொண்டு வந்து சேத்திடறோம். தனுப்பாகிட்ட நீங்க சொல்லிடுங்க…. “, என மனதளவில் ஒரு திட்டத்தை வகுத்துக்கொண்டு வந்து கூறினாள்.
“மூனு பேரும் பத்திரம். நான் கொடுத்த பச்சிலைய வாய்ல மென்னுட்டு உள்ள எறங்குங்க. இது இயற்கைய அழிக்க கங்கணம் கட்டியிருக்கறவன அழிக்கற போராட்டம். அதோட முதல் கட்டம் தான் இது… அந்த வனதேவியும், வனகாளியும் உங்க கூடவே வருவாங்க….. “, என ஆசிர்வதித்து அனுப்பினார்.
மூவரும் மற்றவர்களிடம் கூறிக்கொண்டு முதலில் இல்லம் சென்று தேவையான பொருட்களை எடுத்துக்கொண்டு தேனிக்கு விரைந்தனர்.
“மிஸ்டர் ஆதித்யா…. “, என ஆருத்ரா அழைத்ததும், ஆதி திரும்பி பார்த்தான்.
“சொல்லுங்க மேடம்….”
“என்னை பேர் சொல்லியே கூப்பிடலாம் … நீங்க சிரஞ்சீவ் நெடுமாறன் ரைட்… இப்ப முதல் யார் எங்க போறது? நான் என் பக்கமிருந்து உதவிக்கு ஆளுங்கள தயார் பண்ணவா? என்ன ப்ளான்‽”, என கேட்டாள்.
“நீங்க சக்திய மட்டும் வரசொல்லுங்க. மத்தது நாம பாத்துக்கலாம்…”, சிரஞ்சீவ்.
“அவன் உங்களுக்கு பழக்கமா?”
“முன்ன ஒரு கேஸ்ல அவன் ஹெல்ப் பண்ணான் அர்ஜுனுக்கு…. அப்ப தெரியும் சிஸ்டர்”, என சிரஞ்சீவ் லகுவாக அவளுடன் உரையாடினான்.
“இப்ப தேனி போறோம்.. அங்க சில தகவல்களை தெரிஞ்சிட்டு ப்ளான் போட்டுக்கலாம் ருத்ரா… அர்ஜுனையும், யாத்ராவையும் பத்திரமா இங்க கொண்டு வந்து சேர்க்கணும் அது மட்டும் தான் டார்கெட்…”, என ஆதி கூறினான்.
“அந்த புலியையும் கொண்டு வரணும் ஆதி…. அதை விட்டுடக்கூடாது……”, ஆருத்ரா அவன் கூறியதில் விடுபட்டிருந்ததைத் திருத்தினாள்.
ஆதி அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு சாலையில் கவனமானான். வழிநெடுக சிரஞ்சீவ் பரத்திடம் தகவல்களை கேட்டுக்கொண்டே குறிப்பெடுத்தபடி, ஆருத்ராவுடன் சில விஷயங்களை பகிர்ந்து கொண்டு வந்தான்.
ஆதித்யா நந்துவுக்கு தொடர்பு கொள்ள முயன்றபடி வந்துகொண்டிருந்தான்.
நரேன் திவாகர் காசி சென்றவர்கள் மாயமானது பற்றி தீவிரமாக நோட்டமிட்டுக்கொண்டிருந்தான். கதிர் சர்வேஸ்வரனுடன் சென்றது வரை தெளிவாக இருக்க, அதன் பிறகு கூட்டத்தில் அவர்களை ஒருவன் அழைத்து சென்று வண்டியில் ஏற்றியதும் இவர்கள் யார் கண்ணிலும் படாமல் மறைந்துபோனது சற்று திகிலை ஏற்படுத்தியிருந்தது.
“எப்படி நந்து அவனுங்க எந்த வழில போனானுங்கன்னு இன்னும் தெரியல…. ஒரு இடத்துல கூடவா சிக்கல…. “, நரேன் காசி நகரின் வரைபடத்தை பார்த்தபடி கேட்டான்.
“ஆமாங்க சார்…. வண்டில ஏறின வரைக்கும் நம்மகிட்ட ப்ரூஃப் இருக்கு அதுக்கப்பறம் அந்த வண்டி எந்த வழில எங்க போச்சுன்னு இப்ப வரை தெரியல… ஊர விட்டு வெளியவும் போகல… ஊருக்குள்ள எந்த சிக்னல்லையும் தென்படல… ஊருக்குள்ள தான் எங்கயோ வச்சிருக்கணும்…”, நந்து தெளிவாக நடந்து முடிந்தது வரை கூறினான்.
“அர்ஜுன் எங்க இருக்கான்னு தெரிஞ்சதா?”, ஒரு பெருமூச்சை விட்டபடி கேட்டான்.
“இல்ல சார்… அங்க இருந்தும் நமக்கு இன்னும் சிக்னல் வரல… செந்தில் சாரை கேக்கணும்… அவங்க டீம் ஆளுங்களும் இந்த கேஸ் தான் பாத்துட்டு இருக்கறதா கேள்விப்பட்டேன்…..”, நந்து யாத்ராவும் இதில் இருக்கிறாள் என்று சொல்லாமல் சொன்னான்.
அங்கு கூடியிருந்த மற்ற அதிகாரிகள் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர்.
“சோ காய்ஸ்…. இதுவரை இந்த கேஸ் போய் இருக்க தடத்தை சொல்லிட்டோம்… இனிமே நீங்க தான் சீக்கிரமா நடவடிக்கை எடுத்து, அடுத்த கட்டத்துக்கு கொண்டு போகணும்… “, எனக் கூறிவிட்டு உன்னிப்பாக அங்கு அமர்ந்திருந்த அனைவரின் முகத்தையும் ஆராய்ந்தார்.
“நரேன் சார்….. கதிர் எதுக்காக காசி போனாரு…? அந்த சர்வேஸ்வரன் கேஸ் நமக்கு எப்ப வந்தது?”, என ஒருவன் கேள்வி கேட்டான்.
“மிஸ்டர் ரன்வீர்… நம்ம ஒரு கேஸ் எடுக்கறப்ப அது சம்பந்தமான பல விஷயங்களை ஆராய்வோம். அப்படியான ஒரு முக்கியமான தடையம் தான் இந்த சர்வேஸ்வரன் கொண்டு வந்த ஃபைல் …. அருணாச்சல்ல நம்ம பாத்த கிப்பான் வகை குரங்குகளோட தோலுறித்த
சடலங்கள் கிடைச்சிருக்கு. அந்த குரங்கோட உடல் ஆய்வுகள் தான் இவர் ஃபைல்ல இருந்தது. அதுக்கும் அவரோட பையனுக்கும் என்ன சம்பந்தம்னு கண்டுபிடிக்கணும். தவிர ஒரு மனுஷனோட உடலும் தோலுறிஞ்ச நிலைல நமக்கு கிடைச்சது. அது போல ஒரு கொடூரம் இதுவரை இங்க நாம பாத்ததே இல்ல.. “, நந்தன் ரன்வீர் அருகில் அமர்ந்தவனை கூர்மையாக கவனித்தபடி கூறினான்.
“இது மருத்துவம் சம்பந்தப்பட்ட குற்றம்னு நீங்க முடிவு பண்ணி சொல்றீங்களா சார்?”, ரன்வீர்.
“இருக்கலாம்… இல்லாமலும் போகலாம் ரன்வீர்… இப்ப உங்க நாலு பேருக்கு நான் குடுக்கற இன்ஸ்ட்ரக்ஷன் …. இரண்டு பேர் காசிக்கு போய் அந்த வண்டி எங்க போச்சு, நம்ம கதிர்கிட்ட இருந்து தகவல் எதாவது வருதான்னு பாருங்க…. மத்த இரண்டு பேர் டோபோரிஜோ போங்க… அங்க தகவல்களை சேகரிச்சு அப்பப்ப எனக்கு அனுப்பனும். கொஞ்சம் கூட லேட் பண்ணக்கூடாது…. சேகரிக்கறது எல்லாம் க்ராஸ் செக் பண்ணிக்கணும்…. வித்தியாசமான பொருட்கள் காட்டுக்குள்ள, காடு சார்ந்து வெளியே பாத்தா எடுத்து வச்சிக்கோங்க…. கேர்புல் காய்ஸ்…. ஆல் த பெஸ்ட்…. “, எனக் கூறிவிட்டு யார் யார் எங்கு செல்லவேண்டும் என கட்டளையிட்டான்.
ரன்வீர், திலக் இருவரும் காசிக்கு செல்ல, அபிஷேக், உதய் இருவரும் டோபோரிஜோ சென்றனர்.
சர்வேஸ்வரனிடம் இருந்து கிடைக்கப்பெற்ற கோப்புகளை வைத்து நந்துவும், நரேனும் சில முக்கிய குறிப்புகளை எடுத்துக்கொண்டு பரிதியிடம் பேச புறப்பட்டனர்.
பரிதியின் அலுவலகம்…..
“குட் ஈவினிங் மேம்…. “, நரேன்.
“குட் ஈவினிங் மிஸ்டர் நரேன்.. வாங்க நந்தன்…. என்ன விஷயம் சொல்லுங்க? “, என நேரடியாக விஷயத்திற்கு வந்தாள்.
தங்களுக்கு கிடைத்த தகவல்களுடன் அர்ஜுனும், யாத்ராவும் கடத்தப்பட்டு இருப்பதையும் கூறிவிட்டு அமைதியாகினர்.
பரிதி முழுதாக எல்லாவற்றையும் கேட்டுவிட்டு செந்திலை அழைத்தாள்.
“நந்தன் மறுபடியும் இத மொதல்ல இருந்து சொல்லுங்க “, எனக் கூறிவிட்டு தனது அறையின் மூலையில் இருக்கும் பலகையில் குறிப்பெடுக்க ஆரம்பித்தாள்.
செந்தில் அனைத்தையும் கேட்டுவிட்டு, ” பரிதி… இது நமக்கு குடுத்த அதே கேஸ் தான்… ஆனா வேற ஒரு கோணத்துல இவங்களுக்கு வந்திருக்கு…. தவிர அர்ஜுனும், யாத்ராவும் தான் அவங்க தேவையாவும் இருந்திருக்கு…..”, செந்தில் ஒரு முக்கிய பகுதியை சுட்டிக்காட்டினார்.
“இருக்கலாம்…… ஆனா ஏன் அவங்க தேவை? “, நரேன்.
“அவங்கள வச்சி ஆராய்ச்சி பண்றதுக்கா கூட இருக்கலாம் நரேன்… இவனுங்க மொத்தமா மனுஷன் மிருகம்னு எல்லாத்தையும் ஆராய்ச்சி பண்றேன்ங்கற பேர்ல கொண்ணுட்டு இருக்காங்க…. “,செந்தில்.
“அப்ப அர்ஜுன் யாத்ரா?”, நந்து உள்ளுக்குள் அதிர்ந்தபடி கேட்டான்.
“நமக்கு இப்பவும் ஒரு பகுதிதான் தெரிஞ்சிருக்கு…. தேனில என்ன நடக்குதுன்னு தெரியணும்… நந்து நீ அங்க பேசினியா? ஜான் என்ன ஆனான்?”, பரிதி.
“நான் அர்ஜுன் யாத்ரா கடத்திட்டாங்கன்னு பரத்கிட்டயும், ஆதிண்ணாகிட்டயும் மட்டும் சொல்லிட்டு வச்சிட்டேன்… அதுக்கப்புறம் என் ஃபோன் காணோம்…. “, நந்து அர்த்தமுள்ள பார்வையை பார்த்தான்.
“சோ…. நமக்குள்ள, நமக்கு மேல, நமக்கு கீழ எல்லா பக்கமும் ஆளுங்க இருக்காங்க…. “, செந்தில்.
“ம்ம்…. அதுல ஒருத்தன தான் காசிக்கு அனுப்பியிருக்கேன்…. “, நரேன்.
“மத்த மூனு பேர் மேல் அவ்வளவு நம்பிக்கை இருக்கா நரேன் உங்களுக்கு?”, பரிதி.
“எப்பவும் முழுசா நம்ப முடியாது மேடம்…. ஆனா அவங்க மூனு பேரும் வேலைய செய்வாங்க… இன்னொருத்தன் நம்ம பண்ற வேலைய கெடுப்பான்…”, நரேன்.
“சரி யாத்ராகிட்ட இருந்து சிக்னல் வந்துச்சா செந்தில்?”, பரிதி.
“எனக்கு நேரடியா இப்பவரை வரல…. “, செந்தில் முகத்தில் சற்றே கவலையின் ரேகை படர்ந்தது.
“சர்வேஸ்வரன் சார்கிட்ட பேசினப்போ வீடியோ ரெக்கார்ட் பண்ணீங்களா?”, பரிதி.
“இருக்கு மேம்… “, என அதை காட்டினான்.
அதைக் கண்டு பரிதி உள்ளுக்குள் ஒரு திட்டத்தை வகுக்க ஆரம்பித்தாள்.