35 – அகரநதி
பஞ்சாயத்திற்கு அனைவரும் ஏற்பாடு செய்து கொண்டிருந்தனர்.
வினய் வன்மமும் கோபமும் பொங்க அங்கு நடக்கும் ஏற்பாடுகளைப் பார்த்துக்கொண்டு இருந்தான்.
அகரனும் நதியாளும் அங்கிருந்தவர்களிடம் சிரித்துப் பேசிக்கொண்டு இருத்தது அவனுள் மேலும் வன்மத்தை சேர்க்க,” நீ எப்படி சந்தோஷமா வாழ்ந்துடுவன்னு பாக்கறேன்”, எனத் தனக்குள் கூறிக்கொண்டு, தூணில் சாய்ந்தபடி கைகட்டுகளையும் வெறுப்பாய் இறுக்கியபடி அமர்ந்திருந்தான்.
“ஹேய் யாள்….. இப்பவாது கொஞ்சம் அச்சம் மடம் நாணம்லாம் என்னனு தெரிஞ்சிட்டு அடக்க ஒடுக்கமா இருக்கப் பாரு”, மீரா நிற்காமல் ஓடிக்கொண்டிருந்த நதியாளை இழுத்து வைத்து ஒரு இடத்தில் உட்காரவைத்தபடிக் கூறினாள்.
“ஏன்?”, நதியாள்.
“கல்யாணம் ஆகிரிச்சிரிச்சி டி. இனிமே குடும்ப பொண்ணா அமைதியா இருக்கணும்”, மீரா.
“கல்யாணம் ஆகிட்டா அமைதியாகிடனுமா? இப்படில்லாம் யார் ரூல்ஸ் போட்டா? என் சுயம் எதுவோ அப்படித் தான் நான் இருப்பேன். ஊருக்கு முன்ன வேஷம் போட என்னால முடியாது. நீ சொல்றமாதிரிலாம் சத்தியமா எந்த ஜென்மத்துலயும் என்னால இருக்க முடியாது மீரா”, நதியாள் சிரித்தபடிக் கூறினாள்.
“கரெக்ட் யாள்….. நம்மள கட்டிக்கறவங்களுக்கு நம்மல பத்தி தெரியணும். கொஞ்ச நாள் அமைதிப்படை சத்யராஜ் அம்மாவாசை மாதிரி வேஷம் போட்டு பின்னாடி நாகராஜசோழனா மாறினப்பறம் சுயரூபம் தெரிஞ்சா அவங்க மட்டும் இல்ல எல்லாருமே பாவம். சும்மா பாட்டி கணக்கா அட்வவைஸ் பண்ணாத. அங்க பாரு எத்தனை பாட்டி இருக்காங்க யாராவது இப்படி சொன்னாங்களா?”, ஸ்டெல்லா நதியாளுக்கு ஒத்து ஊதியபடி வந்து அமர்ந்தாள்.
“ஏன்மா ஸ்டெல்லா….. அந்த புள்ள நல்லவிதமா நாலு நல்ல வார்த்தை சொல்லிகுடுத்தா அதுக்கும் நீ இப்படி இடக்கா பேசிட்டு நதியாளுக்கு சப்போர்ட் பண்ற…. உன்னலாம் யார் கட்டிட்டு அனுபவிக்கப்போறானோ தெரியல?!”, எனக் கூறியபடி மதுரனும் தேவ்வும் அங்கே வந்தனர்.
“உங்களுக்கு அதப்பத்தி கவலை வேணாம் மிஸ்டர் மதுரன். அது நான் பாத்துக்கறேன். என்ன கட்றவன கண் கலங்காம நான் வச்சி காப்பாத்துவேன். உங்கள கட்றவங்கள நீங்க அப்படி காப்பாத்த ட்ரை பண்ணுங்க”, ஸ்டெல்லா கூறிவிட்டு வெடுக்கென்று கழுத்தைத் திருப்பிக்கொண்டாள்.
“பாத்து கழுத்து சுழுக்கிற போவுது. என்னா வாய் உனக்கு…. இத கொஞ்சம் டிசைன் பண்றதுலயும் காட்டினா கொஞ்சமாது சுமாரான டிசைன்ஸ் வரும். வெறும் வாய் தான் போல”, மதுரன் வேண்டுமென்றே அவளை வம்பிலுத்தான்.
“ஹலோ மிஸ்டர் மதுரன்….. நான் செஞ்ச டிசைன் தான் வேணும்னு இரண்டு நாள் முன்னாடி அடம் பண்ணது யாருன்னு உங்களுக்கு நியாபகம் இல்லையா?”, ஸ்டெல்லா கோபமாக கேட்டாள்.
“அது நதியாளும் அகரனும் சொன்னதால அக்சப்ட் பண்ணேன். மத்தபடி அது அவ்வளவு நல்லா இல்ல…. “, மதுரன் வேண்டுமென்றே வம்பை வளர்த்தான்.
“ஆஹான்…. அப்ப அவங்க சொன்ன பழைய டிசைனே உங்க ஹோட்டல்ல பண்ணிக்கோங்க. நான் செஞ்சது எதுவும் உங்க ஹோட்டல்ல இனி வராது”, என ஸ்டெல்லா கூறிவிட்டு எழுந்து சென்றாள்.
“ப்பாஆஆஆ…. என்னா கோவம் வருது இந்த பொண்ணுக்கு? ஏன்மா நதியாள் உன் பிரண்ட்ஸ் எல்லாருமே இப்படி தானா?”, மதுரன் நதியாளைக் கேட்க, நதியாள் மதுரனை வித்யாசமாக ஒரு பார்வை பார்த்ததும் அவன் அங்கிருந்து நகர்ந்தான்.
“மீரா… இவங்க பேச்சே சரியில்லையே”, நதியாள் யோசனையுடன் கூறினாள்.
“ஆமா யாள்…. நானும் அப்ப இருந்து பாக்கறேன் அவங்க இரண்டு பேர் பேச்சும் சரியில்லை”, என கூறியபடி தேவ் மீராவிற்கு நெருக்கமாக அமர்ந்தான்.
“இதுகூட சுத்தமா சரியே இல்லை தேவ்”, என நதியாள் தேவ்வை புருவம் உயர்த்தி என்னவென்று கேட்டதும் அவனும் அங்கிருந்து யாரோ அழைப்பது போல பதில் பேசிக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தான்.
நதியாள் மீரா பக்கம் திரும்ப அவள் தேவ்வையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டு இருந்தாள். நதியாள் தொண்டையை சரிசெய்வது போல சத்தம் கொடுக்கவும்,” இதோ கொஞ்ச நேரத்துல வரேன் யாள்…..”, என அவளும் எழுந்துச் சென்றுவிட்டாள்.
“என்னடா நடக்குது இங்க? நான் ஒரு சர்ப்ரைஸ் பிளான் பண்ணா , எனக்கு தான் காலைல இருந்து சர்ப்ரைஸ் மேல சர்ப்ரைஸா நடந்துட்டு இருக்கு…… இதுங்க நாலும் சரியில்லை… நம்ம அண்ணன்காரன் என்ன பண்றான்? எங்க அவன்?”, என நதியாள் தனக்கு தானே பேசிக்கொண்டு சரணைத் தேட, அவனைக் கண்டதும் சிரிப்பு வந்துவிட்டது அவளுக்கு.
சரண் கோவிலில் இருந்த பாட்டிக்களை ஒன்றாக அமரவைத்து அவர்களின் மடியில் மாறி மாறி படுத்தபடிக் கதைக் கேட்டுக்கொண்டு இருந்தான்.
அதில் அவன் சரோஜாபாட்டியின் கன்னத்தில் கிள்ளி முத்தம் கொடுக்கவும் மாந்தோப்பு தாத்தா அவனின் காதை திருகி அவனை எழுப்பிவிட்டார்.
“ஏன் தாத்தா? என் சரோவோட ப்யூட்டிய நான் இரசிக்கறப்ப வந்து சரியா டிஸ்டர்ப் பண்றீங்க…. போங்க… போய் பஞ்சாயத்த பாருங்க……”, என சரண் அவரிடம் சண்டையிட்டுக்கொண்டு இருந்தான். இதைப் பார்த்து தான் நதியாள் சிரித்தாள்.
“இவனுக்கு இந்த ஜென்மத்துல கல்யாணம் ஆகறது கஷ்டம் தான்”, என மனதில் நினைத்துச் சிரித்துக்கொண்டு இருந்தாள்.
“என்னடா கண்ணு அப்படி சிரிச்சிட்டு இருக்க?”, எனக் கேட்டபடி சுந்தரம் தாத்தா நதியாள் அருகில் வந்து அமர்ந்தார்.
“அங்க பாரு சுந்தா சரண் எப்படி மாந்தோப்பு தாத்தாகிட்ட சண்டை போட்டுட்டு இருக்கான்னு”, என அவனிருந்த இடத்தைச் சுட்டிக்காட்டினாள்.
“ஹாஹா…. அவன் இந்த ஜென்மத்துல ஒரு பொண்ணையும் பிடிக்கமாட்டான். நாம தான் அவனுக்கு பொண்ணு தேடனும் போல”, சுந்தரம் தாத்தா.
“சுந்தா….. செம…… அதே தான் நானும் இப்ப நினைச்சேன்…”, என அவரின் தோள்களைக் கட்டிக்கொண்டாள் நதி.
“சரிடா கண்ணு…. இப்ப மனசு எப்படி டா இருக்கு? “, சுந்தரம் தாத்தா அவள் தலையை வருடியபடி கேட்டார்.
“நல்லா தான் இருக்கேன் தாத்தா”, நதியாள்.
“நீ சமாளிக்கற டா. ஆனா உன் கண்ணுல வருத்தம் தெரியுதே அதுக்கு என்னடா அர்த்தம்?”, சுந்தரம் தாத்தா.
“வருத்தப்பட்டு என்ன ஆகப்போகுது தாத்தா. எப்படி எப்படி எல்லாமோ நடக்கணும்னு நினைச்ச கல்யாணம் கடைசியா எனக்கு கூட தெரியாம என் கல்யாணம் நடக்கும்னு நான் கொஞ்சம் கூட எதிர்பாக்கல தாத்தா. அகன் ஏன் இப்படி பண்ணான்னு எனக்கு தெரியல. அவன்கிட்ட கேட்கவும் தோணல. ஆனா எங்களுக்கு கல்யாணம் நடந்துரிச்சி… அத மாத்தமுடியாது…. “, நதியாள் அவரின் தோள்களில் சாய்ந்தபடிப் பேசிக்கொண்டு இருந்தாள்.
“இன்னும் உன்னால இந்த கல்யாணத்த ஜீரணிக்க முடியலியா நதிகுட்டி?”, சுந்தரம் தாத்தா.
“கொஞ்சம் கஷ்டம் தான் தாத்தா. நிறைய கனவு எதிர்பார்ப்பு இருந்தது எனக்கும் அகனுக்கும் நடக்கிற கல்யாணத்தபத்தி. இப்ப அதுலாம் நடக்க வாய்ப்பு இல்லைல தாத்தா. அதான் மனசு ஏத்துக்க அடம் பிடிக்குது. கொஞ்ச நாள்ல சரியாகிடும் தாத்தா. சரணுக்கு பண்ற கல்யாணத்துல ஒரு சடங்கு முறை கூட மிஸ் ஆகாம எல்லாத்தையும் செய்யணும். அது உங்க பொறுப்பு…. ஓக்கே வா?”, நதியாள்.
“சரிடா கண்ணு. நீ மனச சந்தோஷமா வச்சிக்கம்மா… உங்க சந்தோஷம் தான் எங்களுக்கு முக்கியம். ஊரே அசந்து போற மாதிரி விருந்து வச்சி கொண்டாடிடலாம் உங்க கல்யாணம் நடந்ததுக்கு ….. நாளைக்கு சாமிக்கு திருக்கல்யாணம் அது முடிஞ்சதும் கோவில்ல ஒரு ஹோமம் இருக்கு. அதுல நீங்க தான் உட்காரணும்”, என சுந்தரம் தாத்தா பேசிக்கொண்டு இருக்கும்போதே மாந்தோப்பு தாத்தா பஞ்சாயத்து கூடிவிட்டதாக அழைக்க அனைவரும் அங்கே சென்றனர்.
ஊரின் ஒட்டுமொத்த பெரிய தலைகட்டு ஆட்களும், பஞ்சாயத்து தலைவர் முதல் நண்டு சிண்டு வரை அங்கே கூடியிருந்தது.
“என்னப்பா பஞ்சாயத்து ஆரம்பிக்கலாமா?”, கூட்டத்தில் ஒருவர் கேட்க, விசாரனை தொடங்கியது.
“அந்த பையனை கொண்டு வாங்கப்பா……”, பஞ்சாயத்து தலைவர்.
சந்திரகாந்த், மரகதம்மாள், தேவ், மதி, சரிதா ஐவரும் ஒருபக்கமும் சுந்தரம் தாத்தா முதல் மற்ற நம் சகாக்கள் அனைவரும் இன்னோர் பக்கம் நின்றிருந்தனர்.
“சுந்தரம் ஐயா…. உங்க வீட்டுக்கு நிச்சயம் பண்ண பொண்ணுக்கு இவன் திருட்டுத்தனமா தாலி கட்ட பாத்திருக்கான். இதபத்தி நீங்க என்ன சொல்றீங்க?”, பஞ்சாயத்து தலைவர்.
“பஞ்சாயத்து ஆளுங்களுக்கு வணக்கம்….. இன்னிக்கு நிச்சயம் பண்ணது உங்க எல்லாருக்கும் தெரியும். என் பேரனும் பேத்தியும் ஒருத்தருக்கொருத்தர் விரும்பி தான் கல்யாணம் பண்ண முடிவு பண்ணாங்க. நாங்களும் அவங்க விருப்பத்துக்கு சம்மதம் சொல்லி இஷ்டப்பட்டு தான் நிச்சயம் செஞ்சிகிட்டோம். இப்ப அவங்க கல்யாணமே முடிஞ்சிரிச்சி யாரும் எதிர்பாராத விதத்துல, அதுக்கு இவன் தான் காரணம். நீங்க தான் அவன விசாரிக்கணும் ஏன் இப்படி பண்ணான்னு”, சுந்தரம் தாத்தா.
“தம்பி நீ ஏன் திருட்டுத்தனமா தாலி கட்ட பாத்த?”, பஞ்சாய்த்து தலைவர்.
“நானும் அவளும் விரும்பினோம். இத்தனை நாள் என்கூட சுத்திட்டு இன்னிக்கு அவன கட்டிக்க சம்மதம் சொல்லிட்டா அதான் அவளுக்கு தாலிகட்டி எனக்கு சொந்தமாக்கிக்க நினைச்சேன்”, வினய் வாய் கூசாமல் பொய்யை வரிசைக்கட்டிக் கூறினான்.
அவன் கூறி முடிக்கும் முன் அவனின் கன்னத்தில் நதியாள் அறைந்திருந்தாள். பின், ” பொய் சொல்லவும் ஒரு அளவு வேணாம்? நான் உன்கூட சுத்தினேனா? எப்ப? எங்க சுத்தினேன்? என்ன இப்படி சொன்னா நான் அவமானப்பட்டதா நினைச்சி அமைதியாகிடுவேன் மத்தவங்க எல்லாம் என்னை சந்தேகப்படுவாங்கன்னு நினைச்சியா?”, விழிகள் சிவக்க அவனை முறைத்தபடிக் கேட்டாள்.
“என்ன யாளுமா இப்படி பேசற? நானும் நீயும் திருவிழால தோப்பு வீட்ல ஒன்னா இருந்தது எல்லாம் மறந்துட்டியா? அந்த இராத்திரிய தான் நம்மனால மறக்க முடியுமா? எத்தனை எதிர்ப்பு வந்தாலும் என்னை தான் கட்டிக்குவேன்னு சத்தியம் பண்ணியே …அதுலாம் மறந்துட்டியா? என்னவிட பணம் அதிகமா இருக்கறவன் வந்ததும் என்னை கழட்டிவிட்டுட்டியே உனக்கு வெட்கமா இல்ல?”, வினய் உயிரே உருக்கும் குரலில் முகத்தில் உணர்ச்சி பொங்க மூச்சு விடாமல் பேசிக்கொண்டிருக்க, நதியாள் நக்கலாக அவனைப் பார்த்தபடி ,” பெர்பாமன்ஸ் பத்தல”, எனக் கூறிச் சிரித்தாள்.
வினய் வன்மம் பொங்கும் விழிகளில் அவளை முறைத்தபடி நின்றிருந்தான்.
“என்ன தம்பி எங்க வந்து என்ன பேச்சு பேசிட்டு இருக்க? அவ எங்க பொண்ணு… சின்னதுல இருந்து நாங்க வளத்துட்டு வரோம். நாக்குல நரம்பில்லாம ஏதோதோ சொன்னா அப்பறம் பேச நாக்கு இருக்காது பாத்துக்க”, கூட்டத்தில் ஒருவர் வினயை மிரட்டினார்.
“நீங்க வளத்த பொண்ணு தான். ஆனா எத்தனை வருஷம் அவ இந்த ஊர்லயே இருந்தா? படிக்க வெளியூர் தானே அனுப்பினாங்க? அங்க எங்களுக்கு பழக்கம் ஆகி இருக்க கூடாதா? “, வினய் முடிக்கும் முன் அவனின் இருபக்க கன்னமும் எரிச்சல் கொண்டிருந்தது.
“என்னடா விட்டா பேசிட்டே போற? அவ என் தங்கச்சி. எங்க இரத்தம். காதலிச்சா வீட்ல சொல்லி மேற்கொண்டு பேசுவாளே தவிர தனியா எங்கயும் போகமாட்டா…. நீ ஏன்டா இப்படி பண்ணனு கேட்டா எங்க பொண்ணு மேல பழி போட்டுட்டு இருக்க”, சரண் ஆத்திரத்தைக் கட்டுப்படுத்த முயன்றுக் கொண்டிருந்தான்.
“என்னய்யா பஞ்சாயத்து பண்றீங்க நீங்க? ஆளாளுக்கு கைநீட்றாங்க…… நீங்க யாரும் அதுலாம் கேக்கமாட்டீங்களா?”, எனக் கேட்டபடி சரிதா வினய் அருகில் வந்து நின்றாள்.
“சரிதா…. வா இங்க……. இல்ல நடக்கறதே வேற சொல்லிட்டேன்….”, மரகதம்மா கத்தினார்.
“இல்ல பாட்டி என்னால வரமுடியாது….. வினய் என் அண்ணன் அவன ஆளாளுக்கு அடிக்கறாங்க நீங்க யாரும் அத தடுக்கவும் இல்ல ஏன்னு கேட்கவும் இல்ல…. “, சரிதா கோபத்தில் பொங்கினாள்.
“உங்கண்ணன் பண்ண காரியம் அப்படி. ஒழுங்கா பாட்டி பக்கத்துல போயிடு இல்ல நானே உங்கள கொண்ணுடுவேன்”, தேவ் மிரட்டலாக கூறினான்.
“பஞ்சாயத்து ஆளுங்க அந்த பையனுக்கு என்ன தண்டனை குடுக்க போறீங்க?”, மாந்தோப்பு தாத்தா.
“அவன் புள்ள மேல ஏதோதோ சொல்றானே… அதுல்லாம்?”, என ஒருவர் தயங்கித் தயங்கிக் கேட்டார்.
“போதும் நிறுத்துங்க….. நதியாள் எனக்குன்னு நிச்சயம் பண்ணவ….. இப்ப எனக்கு பொண்டாட்டி. அவள பத்தி அனாவசியமா யாரும் பேசுறத என்னால அனுமதிக்க முடியாது. அது என்னையும் எங்க குடும்பத்தையும் பேசறமாதிரி தான் ….. அவன் பண்ணத நான் அப்படியே விட்டுடறேன்…. இத்தோட பஞ்சாயத்த முடிச்சிக்கோங்க…. இதுக்கு மேல என் பொண்டாட்டிய பத்தி யாரும் ஒரு வார்த்தை தப்பா பேசக் கூடாது……..”,எனக் கர்ஜித்தான் அகரன் நதியாளை தன்தோளோடு அணைத்தபடி.
“அதெப்படி தம்பி அப்படியே அவன சும்மா விடமுடியும்? அவன எங்ககிட்ட விடுங்க நாங்க கவனிக்கறோம்”, பரமசிவம் கண்கள் சிவக்க கோபத்தில் கொதித்தபடிப் பேசினார்.
“மாமா….. இதுக்கு மேல அதபத்தி யாரும் பேச வேணாம். அவனுக்கு அவங்க அம்மாவையும் தங்கச்சியையும் காப்பாத்தற பொறுப்பு இருக்கு. அதுமட்டுமில்ல இவன் பண்ண தப்புக்கு சந்திர மாமாவும் மரகத பாட்டியும் தலைகுனிஞ்சி நிக்கறத என்னால பாக்க முடியல. அவங்க முகத்துக்காக இவன விட்றேன். அவங்களே இவனுக்கு என்ன தண்டனை குடுக்கறதுன்னு முடிவு பண்ணிக்கட்டும். இத்தோட இத முடிச்சிக்கலாம்”, அகரன் தீர்க்கமாக கூறினான்.
அகரன் கூறுவதில் இருக்கும் நியாயத்தையும் பண்பையும் நினைத்துப் பார்த்து பஞ்சாயத்தை அத்தோடு முடித்துக்கொண்டனர் ஊர் பெரியவர்கள்.
“அகரா……”, என சந்திரகாந்த் அவனைக் கையெடுத்து கும்பிட்டபடி அருகில் வந்தார்.
“மாமா…என்ன இது? கைய இறக்குங்க…. நீங்க எனக்கு அப்பா மாதிரி என்கிட்ட மன்னிப்பு கேக்கறது நல்லா இல்ல”, அகரன் பதறி அவரை அணைத்தான்.
“இல்லப்பா….. வேற யாராவது இருந்திருந்தா இந்நேரம் குடும்பத்தையே அசிங்கப்படுத்தி வேறமாதிரி போய் இருக்கும். நீ எங்க மானத்த காப்பாத்திட்ட .. எங்கள அசிங்கப்படுத்தாம எங்களுக்காக யோசிச்ச பாரு…. உன் மனசு தங்கம்யா….உனக்கு ஏத்த தங்கமான பொண்ணு தான் வந்து இருக்கு. காலம்பூறா இரண்டு பேரும் சந்தோஷமா இருக்கணும்”, என அவனை வாழ்த்தினார்.
“நன்றி மாமா. எங்கள நீங்க எல்லாரும் ஆசீர்வாதம் பண்ணுங்க”, எனக் கூறி நதியாளுடன் அவர்களின் கால்களில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினான் அகரன்.
“எந்த குறையும் இல்லாம சந்தோஷமா தீர்க்காயுசா இருங்க கண்ணுங்களா”, என மரகதம்மாள் மனதார வாழ்த்தினார் இருவரையும்.
“பாட்டி அழக்கூடாது. வாங்க வீட்டுக்கு போலாம்”, நதியாள்.
“இல்ல கண்ணு. நீங்க போங்க. நாங்க கொஞ்ச வேலைய முடிச்சிட்டு சாயந்திரமா வரோம்”, மரகதம்மாள் ஆத்திரத்தை அடக்கியபடிக் கூறினார்.
“சரி பாட்டி.. தேவ் மாமா அத்தை எல்லாரும் மறக்காம வரணும்….”, நதியாள் கூறி அவர்களுக்கு விடைகொடுத்தாள்.
பெரியவர்களும் அவர்களுக்கு சமாதானம் கூறி விடைகொடுத்து அனுப்பி வைத்தனர்.
“சரி …. கிளம்பலாமா?”, நதியாள் ராதாவைப் பார்த்துக் கேட்டாள்.
“இரு டி. எந்த வீட்டுக்கு போகணும்னு கேக்கணும்”, ராதா.
“நம்ம வீட்டுக்கு தானே போகணும்”, நதியாள் புரியாமல் தன் தாயை பார்த்தபடிக் கேட்டாள்.
“அக்கா … இங்க வாங்க….. இப்ப புள்ளைய எங்க கூட்டிட்டு போறது? அவங்க வீட்டுக்கா நம்ம வீட்டுக்கா?”, ராதா செல்லம்மாவை அழைத்துக் கேட்டாள்.
“ஜோசியர் வராங்கலாம் ராதா. அவர் வந்து நேரம் பாத்து சொன்னப்பறம் தான் தெரியும்”, செல்லம்மா.
“அம்மா…எனக்கு தூக்கம் வருதும்மா…. நான் வீட்டுக்கு போறேன் நீங்க ஜோசியர பாத்துட்டு நாளைக்கு கூட வாங்க”, நதியாள் சிறுகுழந்தை போல அடம் பிடிக்க ஆரம்பித்தாள்.
“லூசு பக்கி…உனக்கு கல்யாணம் ஆகிரிச்சி. அதான் அவங்க நேரம் பாக்கணும்னு சொல்றாங்க. இது கூட புரியாதா உனக்கு?”, மீரா அவளை தன் பக்கம் இழுத்துக் கூறினாள்.
“ஓஓ…….. அது வேற இருக்கா? சரி இங்கயே ஒரு பெட் அரேஞ்ச் பண்ணி குடேன் நான் தூங்கறேன். டயர்டா இருக்கு மீரு”, நதியாள் அவள் தோளில் படுத்தபடிக் கூறினாள்.
“ஏன் இங்க ஸ்டார் ஹோட்டல்ல சூட் ரூம் போட்டு தரவா?”, மீரா.
“அது கூட ஓக்கே தான். பட் இங்க ஸ்டார் ஹோட்டல் இல்லையே”, நதியாள்.
“அடிச்சேன்னு வை…. ஒழுங்கா உட்காரு. அங்க பாரு ஜோசியர் வந்துட்டாரு”, மீரா அவளை இழுத்துக்கொண்டு பெரியவர்களிடம் சென்றாள்.
“வாங்க ஜோசியரே…. காலைலயே வருவீங்கன்னு பாத்தா இப்ப நாங்க கட்டாயமா வரவைக்க வேண்டியதா இல்ல இருக்கு”, சுந்தரம் தாத்தா.
“ஹாஹா…எல்லாம் பகவானோட செயல்…. விடுங்க சுந்தரம் ஐயா அதான் வந்துட்டேன்ல…. புள்ளைங்க கல்யாணம் ஜோரா நடந்துச்சி போல….. ஊரே அதே பேச்சா தான் இருக்கு”, சிரித்தபடி ஜோசியர் கேட்டார்.
“சிரிக்காதீங்கண்ணே…. நீங்க அவங்களுக்கு கல்யாணம் ஒரு வருஷம் கழிச்சி தான் பண்ணணும் னு சொன்னீங்க….. ஆனா சந்தர்ப்ப சூழ்நிலை இப்பவே கல்யாணம் நடந்துரிச்சி. பசங்களுக்கு ஒன்னும் பிரச்சினை இல்ல தானே?”, மீனாட்சி பாட்டி பரிதவிப்புடன் கேட்டார்.
“பாத்துடலாம் மீனாட்சிம்மா…. நடக்கறது எல்லாமே அந்த ஆண்டவன் செயல். அதுவும் விஷேஷமா ஒரு மண்டலம் கற்பகிரக்ததுல வச்சி பூஜை பண்ண தாலி நம்ம பொண்ணு கழுத்துல ஏறி இருக்கு. அதுக்கே அவ எப்பவும் தீர்க்க சுமங்கலியா இருப்பா… எந்த கண்டமா இருந்தாலும் அந்த தாலி அவங்கள காப்பாத்தும்…. கவலைபடாதீங்க…. “, என தன் கணிப்பைத் தொடக்கினார் ஜோசியர்.
“அய்யா….. கல்யாணம் நடந்தது நல்ல நேரத்துல தானே? அது ஒன்னும் பிரச்சனை இல்லையே?”, ராதா.
“நல்ல கௌரிநேரத்துல தான் திருமாங்கல்யம் குழந்தை கழுத்துல ஏறி இருக்கு. அதுலாம் பிரச்சனை இல்லை ராதாம்மா….. ஆனா…..”, ஜோசியர் அகரன் மற்றும் நதியாளின் முகத்தைப் பார்த்தபடி அமைதியானார்.
“என்ன ஜோசியர் ஐயா சொல்லுங்க?”, மாந்தோப்பு தாத்தாவும் பரமசிவமும் ஒரே குரலில் கேட்டனர்.
“குழந்தைங்க கொஞ்ச நாள் தள்ளி இருக்கணும் … “, எனக் கூறி அவர்கள் முகத்தைப் பார்த்தார் ஜோசியர்.
“எத்தனை நாள் ஜோசியர் ஐயா?”, செல்லம்மா.
“கொறஞ்சது ஆறு மாசம் தனித் தனியா தான் இருக்கணும்”, என ஜோசியர் அகரனின் தலையில் பெரும் இடியை இறக்கினார்.
அகரன் நதியாளின் முகத்தை பார்க்க நதியாள் வேறு பக்கம் திரும்பிக் கொண்டாள்.
சரணும் , மதுரனும் அகரனின் முகத்தைப் பார்த்து சிரிப்பை அடக்க மிகவும் சிரமப்பட்டனர்.
ஸ்டெல்லாவும் மீராவும் திருதிருவென விழிக்க , சஞ்சயும் திலீப்பும் அகரனைப் பார்த்து விழித்தனர்.
“சரிங்க ஜோசியரே. பொண்ணுக்கு இன்னும் ஐஞ்சு மாசம் படிப்பு இருக்கு…. அது முடிஞ்சி பொண்ண நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு போயிக்கலாமா?”, சுந்தரம் தாத்தா.
“அதெப்படி அத்தனை நாள் நம்ம புள்ளைய வீட்டுக்கு கூட்டிட்டு போகாம இருக்கமுடியும்? இன்னிக்கே அவள நம்ம வீட்ல விளக்கு ஏத்த வைக்கணும்…… அண்ணே வீட்டுக்கு கூட்டிட்டு போகலாம் தானே?”, மீனாட்சி பாட்டி.
“தாராளமா கூட்டிட்டு போலாம். ஆறு மாசம் பையனையும் பொண்ணையும் தனியா வைங்க. அதுக்கப்பறம் நாள் பாத்து சாங்கியம் வச்சிக்கலாம்…. “,ஜோசியர்.
“சரி. நல்ல நேரம் பாருங்கண்ணே… இப்ப வீட்டுக்கு கூட்டிட்டு போக”, சரோஜாதேவி பாட்டி.
“இன்னும் ஒரு மணிநேரத்துல. அதாவது 3 மணிக்கு நீங்க வீட்டுக்கு கூட்டிட்டு போகலாம். சுப முகூர்த்த நேரம் அது. அமிர்த யோகம் நாள் முழுக்க இருக்கு. மேல் நோக்கு நாள் தான் பிரச்சினை இல்ல…..”, ஜோசியர்.
“ஊரு கூட்டி விருந்து குடுக்கவும் நாள் பாத்துடலாமே”, கண்ணனும் சிதம்பரமும் ஒரே குரலில் கூறினர்.
“ம்ம்…ஆமா….ஜோசியரே அதுக்கும் நாள் பாத்து குடுங்க. அகரா நீ பட்டணத்துல தனியா வைக்கணுமா?”, சுந்தரம்.
“ஆமாப்பா….. பிஸ்னஸ் பிரண்ட்ஸ் மத்த பிரண்ட்ஸ் எல்லாரையும் கூப்பிட்டு ரிசப்ஷன் அங்க தான் வைக்கணும்”, அகரன்.
“இரண்டு நல்ல நாள் பாத்துடுங்க ஜோசியரே”, சுந்தரம் தாத்தா.
“அப்படியே பண்ணிடலாம் …… அடுத்த வாரத்துல செவ்வாயும் சனிக்கிழமையும் நல்லா இருக்கு”, ஜோசியர்.
“சென்னைல ரிஷப்சன் வைக்க கொஞ்ச டைம் வேணும். அடுத்த மாசம் இருந்தா பரவால்ல”, சரண்.
“அடுத்த மாசம் இருபதாம் தேதி நல்லா இருக்கு. அன்னிக்கும் நாள் முழுக்க அமிர்த யோகம் சுபமுகூர்த்த தினம் தான். அன்னிக்கு வச்சிக்கோங்க”, ஜோசியர்.
“இன்னும் நாப்பது நாள் இருக்கு. பிராப்ளம் இல்ல. க்ராண்ட்டா வச்சிடலாம்”, சரண்.
“நம்ம மண்டபம் இருக்கு இப்பவே நான் அந்த டேட் பிக்ஸ் பண்ண சொல்லிடறேன் சரண். டெகரேஷன் ஆளுங்க எல்லாம் இருக்காங்க”, மதுரன்.
“அது எல்லாம் எங்க இஷ்டம் தான் சரண். நாங்க சொல்ற மாதிரி தான் டெகரேட் பண்ணணும்”, நதியாள்.
“சரி உன் இஷ்டம் தான்”,சரண் என அவளின் தலையை வருடினான்.
பின் அனைவரும் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்து விட்டு மூன்று மணிக்கு புதுமண தம்பதிகளை அழைத்துக்கொண்டு கிளம்பினர். அவர்களுக்கு முன் திலகவதியும் ராதாவும் செல்லம்மாவும் வீட்டிற்கு சென்று அவர்களை வரவேற்க வேண்டிய ஏற்பாடுகளைச் செய்து இருந்தனர்.
காலையில் வீட்டில் இருந்து கிளம்பும் பொழுது எதேச்சையாக சொன்ன விஷயம் நிஜமாகி இன்று தன் வாழ்வில் அதிமுக்கியமான நாளாக மாறிவிட்டதை எண்ணி அகரன் மனம் பூரித்தான்.
நதியாளின் கைபற்றியபடி தன்வீட்டில் கால் எடுத்து வைத்து உள்ளே சென்றான்.
நதியாளும் அவனின் ஸ்பரிசத்தில் சற்றே மனக்குழப்பங்களை ஓரம்கட்டி, அழகாய் புன்னகைத்து தான் வாழப்போகும் வீட்டில் இறைவனைப் பிரார்த்தித்தபடிக் காலடி எடுத்து வைத்தாள்.
நேராக அகரனையும் நதியாளையும் பூஜையறைக்கு அழைத்துச் சென்று விளக்கு ஏற்ற வைத்து சாமி கும்பிடக் கூறினர்.
பெரியவர்களின் வழிகாட்டுதல்படி நதியாளும் அனைத்தையும் சிரத்தையாக மனம் முழுக்க இறைவனை நிறைத்துப் பிரார்த்தித்து தான் வாழப்போகும் வாழ்விற்காக மனமுருகி வேண்டினாள்.
மணமக்களுக்கு பால் பழம் கொடுக்கும் சாங்கியம் முடித்து அவர்களை ஓய்வெடுக்க அனுப்பி வைத்தனர்.
“அம்மா…. நான் நதியாள் கிட்ட கொஞ்சம் பேசணும். அவள ட்ரஸ் மாத்திட்டு மேல வரச்சொல்லுங்க”, என அகரன் கூறித் தன்னறைக்குச் சென்றான்.
“சரிப்பா…. சரண் அந்த இரண்டு பசங்களுக்கு காபி டீ வேணுமா கேளு”, என திலகவதி சரணிடம் சென்றார்.
“எது குடுத்தாலும் நான் சாப்பிடுவேன்மா. செம பசில இருக்கேன்”,எனக் கூறியபடி திலீப் வந்து நின்றான் அவரருகில்.
“உனக்கு இருக்கிறது வயிறா இல்ல கிணறா? இப்பதானேடா அவ்வளவு சாப்ட? மறுபடியும் பசிக்குதுன்னு சொல்ற?”, என அவனை கிண்டலடித்தபடி ஸ்டெல்லா வந்தாள்.
“உன்ன எதாவது நான் கேட்டேனா?”, திலீப் அவளிடம் சண்டைக்குத் தயாரானான்.
“அடடா…. சின்னப்புள்ளத்தனமா எப்ப பாரு சண்டை போட்டுகிட்டு….. அம்மா…எல்லாருக்கும் காபியோ டீயோ ஒரேதா போட்டு குடுங்க …. இவங்க சண்டை போட ஆரம்பிச்சா நிறுத்தவே மாட்டாங்க”, மதுரன் உள்புகுந்தான்.
“நாங்க சண்டை போட்டத நீங்க எப்ப பாத்தீங்க? என்னமோ பலவருஷம் பஞ்சாயத்து பண்ணமாதிரி பேசறீங்க?”, ஸ்டெல்லா மதுரனிடம் சண்டைக்குத் தயாரானாள்.
“உங்க இலச்சணம் தான் இங்க எல்லாருக்குமே தெரியும். கம்முன்னு வா ட்ரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வரலாம்”, என மீரா அவளை இழுத்துக்கொண்டு நதியாள் சென்ற அறைக்குச் சென்றாள்.
“ப்பா….. சரியான வாயாடி…. ஒரு வார்த்தை பேச முடியாது போல… டேய் மதுரா உன் பாடு கஷ்டம் தான் போல”, என தனக்குத் தானே பேசிக்கொண்டு சரணுடன் அகரனின் அறைக்குச் சென்றான்.
“அகர்… டேய் அகர்…..”, என சரண் அகரனை அழைத்தான்.
“சொல்லு டா….”, அகரன் குரலில் சுரத்தே இல்லாமல் பதலளித்தான்.
“என்னடா டல்லா பேசற….. இவ்வளவு நேரம் முகத்துல டென்தவுசண்ட் வாட்ஸ் பல்ப் எரிஞ்சது இப்ப என்னாச்சி?”, சரண்.
“இல்லடா நதிய நினைச்சி தான். அவ என்ன நினைக்கிறான்னு தெரியலடா. டக்குன்னு நான் தாலி கட்டிட்டேன் ஆனா அது அவளுக்கு இன்னும் அதிர்ச்சியா தான் இருக்கு. குழப்பத்துலயே இருக்கா….”, அகரன் வருத்தக் குரலில் கூறினான்.
“பேசினா குழப்பம் தெளிவாகிடும் டா .…. நீ ஏன் அதுக்கு கவலை படற?”, மதுரன்.
“இல்லடா…அது …..”, என அவன் பதில் கூறும்போது நதியாள் அகரனை அழைத்தபடி உள்ளே வந்தாள்,” அகன்…….. என்னை வரசொன்னியாம் திலாத்தை சொன்னாங்க”, எனக் கேட்டபடி அங்கிருந்த சோபாவில் அமர்ந்தாள்.
“ஆமா நதிமா…. மச்சான்…..”, என அகரன் சரணை பார்க்க மதுரனும் சரணும் அவர்களை தனியே விடுத்து வெளியே சென்றனர்.
“சொல்லு அகன்… என்ன விஷயம்?”, நதியாள் சாதாரணமாகக் கேட்பதைப் போல கேட்டாள்.
அகரன் அவளை ஆழமாகப் பார்த்தான். அவளும் அவனை நேருக்கு நேர் பார்க்க அவன் வேறுபக்கம் திரும்பி நின்றான்.
“நதிமா….. என்மேல கோவமா?”, அகரன்.
“………………….”
“சொல்லு நதிமா……….”, அகரன்.
நதியாள் அவனின் அருகில் வந்து அவனை தீர்க்கமாக பார்த்தாள்…..
அகரனும் அவளைக் கண்ணோடு கண்கலந்து பார்க்க……
அவன் எதிர்ப்பார்க்காத சமயம் படாரென்று ஒரு அறை அகரனின் கன்னத்தில் அடித்தாள்…..
அகரன் கன்னத்தை பிடித்தபடி அவளைப் பாவமாகப் பார்த்தான்…..