36 – காற்றின் நுண்ணுறவு
“ஹேய் கீழ எறக்கி விடு… விடு டா”, என வல்லகி கத்தவும் ஜேக் அவளை கீழே இறக்கினான்.
“தேங்க்யூ சோ மச் ஸ்வீட்டி…. இதுக்கு நான் இத்தனை நாளா போராடினேன்…. அந்த இடத்த க்ராஸ் பண்ண முதல் க்ளூ கிடைச்சாச்சி”, என உற்சாகத்தில் கத்தினான். (ஆங்கிலத்தில் தான்).
“என்ன இடம்?”, பாலா கேட்டபடி அங்கே வந்தாள்.
“ஹாய்… ஐ ம் ஜேக்…. “, என இருவருக்கும் இரண்டு கையை நீட்டினான்.
“பாத்தியா வகி குசும்ப இரண்டு கைல இரண்டு பேர பிடிக்கறான்… இவன் மூஞ்சிலயே ஒரு குத்து குத்து…. “, என அவன் இடது கையை தட்டிவிட்டு வலது கையை பாலா குலுக்கினாள்.
பின் வல்லகியும் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு அது என்ன இடம் என்றுக் கேட்டாள்.
“கேர்ள்ஸ்…. திஸ் இஸ் நாட் யூவர் ரூம்”, எனக் கூறியபடி ஒருவன் அங்கே வந்தான்.
“இவங்க இங்க தான் தங்க போறாங்களா ?”, என அராபியில் ஜேக் ஆர்வமாகக் கேட்டான்.
“ஆமா புது எலிங்க”,என வந்தவன் இளக்காரமாகக் கூறினான்.
“அவங்கள பாத்தா எலி மாதிரி தெரியல… “, என ஜேக்கும் மீண்டும் கேள்விக் கேட்டான்.
“அவங்கள டைஸி மேம் தூக்கிட்டு வந்திருக்காங்க … நீ அவங்கள அடுத்த இரண்டாவது ரூம்க்கு அனுப்பிடு.. எனக்கு வேற வேலை இருக்கு “, எனக் கூறியபடி அங்கிருந்து நகர்ந்தான்.
“உனக்கு அராபிக் தெரியுமா?”, வல்லகி கேட்டாள்.
“தெரியும்”, என ஒரு மாதிரி குரலில் கூறினான்.
“உன்ன யார் கடத்திட்டு வந்தா?”, என பாலா கேட்டாள்.
“நானே தான்”, எனக் கூறிவிட்டு, “உங்களுக்கு பயமா இல்லையா கடத்திட்டாங்கன்னு?”, என அவர்கள் இயல்பாய் இருப்பதுக் கண்டுக் கேட்டான்.
“பயந்து என்ன ஆகப்போகுது?”, வல்லகி பதில் கூறிவிட்டு ,”சரி இது என்ன இடம் ?”, என விஷயத்திற்கு வந்தாள்.
“இது கினியா வளைகுடா… அங்க ஒரு லொகேஷனுக்கு நாங்க போக வேண்டியது இருந்தது. ஆனா எங்களால கிட்ட நெருங்க முடியல…. 5 கி.மீ ரேடியஸ்ல சுழல் இருக்கு… அதை தாண்டி தான் அங்க போக முடியும். அதுக்கு ட்ரை பண்ணப்ப என் கொலீக் அந்த சுழல்ல மாட்டிகிட்டான். அப்ப எடுத்த வீடியோ இது… இந்த ஹிப்நாடிக் ஸ்வார்ம் தாண்டி என்னால பாக்க முடியல. ஆனா நீ சரியா அதுக்கு பின்னாடி இருக்கறத சொல்லிட்ட… உன்ன அந்த ஸ்வார்ம் மயங்க வைக்கலியா?”, என மொத்தமாகக் கூறிவிட்டு, அவன் ஆச்சரியப்படும் விஷயத்தைக் கேட்டான்.
“இல்ல…. நான் அத பாக்கவே இல்ல… சரி அங்க என்ன இருக்கு?”, வல்லகி.
தெரியாதென உதட்டைப் பிதுக்கிக் காட்டினான்.
“என்ன இருக்குன்னு தெரியாம ஏன்டா ஒருத்தன காவு குடுத்தீங்க?”, பாலா.
“பத்து பேருக்கு மேல காவு குடுத்துட்டோம். அடுத்த நாள் அதான் நானும் என் கொலீக்கும் இறங்கினோம். என்னை காப்பாத்த வந்து அவன் சுழல்ல உள்ள போயிட்டான்”, எனக் கூறும்போது குரலில் வருத்தம் தொனித்தது.
“வல்லகி பாலா”, என ஏஞ்சல் அவர்களை அழைத்தபடி வந்தாள்.
“ஏஞ்சல்”, என பாலா அங்கிருந்துக் கைக்காட்டினாள்.
“உங்களுக்கு டின்னர் ரெடி… வல்லகி நீ சாப்டவேண்டிய டயட் பிறைசூடன் சார் சொன்னபடி ரெடி பண்ணி இருக்கு.. சீக்கிரம் சாப்டு தூங்கு… நாளைக்கு காலைல இருந்து உனக்கு ட்ரைனிங் ஆரம்பிக்கணும்”, எனக் கூறிவிட்டுத் திரும்பினாள்.
“இவ வேற ….”, பாலா அலுத்துக்கொண்டாள்.
“என்னாச்சி?”, என ஜேக் அவர்கள் பேசியதுப் புரியாமல் கேட்டான்.
வல்லகி அவனுக்குச் சப்டைட்டில் போட்டுவிட்டு, அவனுக்கு டாட்டா சொல்லி அங்கிருந்துக் கிளம்பினாள்.
“இந்த வளந்துகெட்டவன் பாக்க நல்லா இருக்கான்ல”, என பாலா வல்லகியிடம் பேசியபடி நடந்தாள்.
“இருக்கான் இருக்கான்…. அதுக்கு அவனா நம்மல இங்க இருந்து அனுமார் மாதிரி தூக்கிட்டு போய் நம்ம வீட்ல விடப்போறான்…. எல்லாரும் இங்க மோசமானவங்க தான். அதை நியாபகம் வச்சிக்க. நான் இல்லாம நீ எங்கயும் போகாத”, என பாலாவை எச்சரித்தாள்.
“அத நான் சொல்லணும்…. அந்த வெள்ள ஓநாய் கூப்பிடுதுன்னு நீ எங்கயும் போகாத.. முக்கியமா அந்த ஸ்மைலிங் சைக்கோ கிட்ட போகவே போகாத. ஆளும் அவன் பார்வையும்….”, என பாலா அவளை திருப்பி எச்சரிக்கைச் செய்தாள்.
“எல்லாம் என் நேரம் டி… அந்த ஆபீஸ சொல்லணும்…. எந்த நேரத்துல கால் எடுத்து வச்சனோ, நாலு வருஷம் நிம்மதியா இருந்தேன்… இப்ப மறுபடியும் இவகிட்ட மாட்டிகிட்டேன்…. “, எனப் புலம்பியபடித் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அறைக்குச் சென்றாள்.
“வகி….. வகி…..”, பாலா மெல்ல அழைத்தாள்.
“என்ன ?”
“நமக்கு ஒன்னும் ஆகாது தானே?”
“ஆனா என்ன ஆகலன்னா என்ன இப்ப….. பேசாம சாப்டு… பசிக்குது”, என சாப்பிடுவதில் கவனம் செலுத்தினாள்.
“இங்க இவ்வளவு குளிரா இருக்கு”, என ஸ்வெட்டர் ஜிப்பை கழுத்துவரை இழுத்துக்கொண்டாள் பாலா.
“பகல்ல ரொம்ப வெயிலா இருக்கும்”, என ஏஞ்சல் பதில் கொடுத்தாள்.
“அப்ப என்ன பண்ணுவ பாலா?”, என வல்லகி கண்சிமிட்டி வேறு அர்த்தத்தில் கேட்க, பாலா முறைத்தாள்.
“வாய மூடிட்டு சாப்டு”, பாலா.
“பழசு தான் ஆனாலும் இப்ப இது தான் சரி… வாய மூடிட்டு எப்படி சாப்பிடறது?”, எனக் கேட்டாள்.
“வேணாம் வகி… நான் ரொம்ப டயர்டா இருக்கேன்”
“இருக்கும். அந்த மருந்து போட்டதுக்கு இவ்வளவு நேரம் ட்ராவல் பண்ணியும் மயக்கம் வராமா இருக்கறதே ஆச்சரியமா தான் இருக்கு”, என ஏஞ்சல் கூறினாள்.
“அய்யய்யோ….. நான் சாதாரண மனுஷி… என்னையும் ஆராய்ச்சி பண்றேன்னு இம்சை பண்ணாதீங்க…. அதுக்குலாம் நான் தாங்க மாட்டேன்…. “, பாலா பதறிப்போய் சொல்லவும், மற்ற இருவரும் சிரித்தனர்.
ஜேக் தூரத்தில் இருந்து வல்லகியைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
அவளிடம் ஏதோ ஸ்பெஷலாக இருப்பதாக உணர்ந்து, அவளைக் கண்காணிக்க ஆரம்பித்தான்.
அதித்-உடன் டைஸியைக் கண்ட யோகேஷ் அதற்குப் பின் தன் அறையை விட்டு வெளியே வரவில்லை.
ம்ரிதுள் அழைத்தும் இரவு முழுக்க அவன் வெளியே தலையைக் காட்டவில்லை.
அதித்-திடம் பேசிவிட்டு ம்ரிதுள் உடைத்தப் பொருட்களை வாங்க, ஒருவன் அதிகாலை நேரம் கிளம்பினான்.
அவனுடன் இனியனுடன் வந்த மற்ற ஒருவனும் உடன் அனுப்பபட்டனர்.
இனியன் லோகேஷனை முகுந்திற்கும் தர்மனுக்கும் அனுப்ப சமிக்ஞைக் காட்டி அனுப்பினான்.
அவனும் தலையசைத்துவிட்டு அவர்கள் சொல்வது போல அனைத்தும் செய்துக்கொண்டு உடன் பயணித்தனர்.
போனில் சிக்னல் கிடைத்ததும் லொகேஷனை அனுப்பிவிட்டு போனை ஆப் செய்து உள்ளே வைத்துக்கொண்டான்.
“ஊருக்குள்ள போகணுமாண்ணா?”, எனக் கேட்டான்.
“யார்ரா நீ புதுசா?”, வண்டி ஓட்டுபவன் கேட்டான்.
“ஆமாண்ணா…”
“இங்க செக் போஸ்ட்ல நம்மாளு இருக்கான்…. அவன் வாங்கிட்டு வந்து தருவான்…. நேத்தே சொல்லிட்டாங்க”, எனக் கூறிவிட்டு வண்டி ஓட்டுவதில் மும்முறமானான்.
“ஓஓ…. சரிண்ணா…. நீங்க எத்தனை வருஷமான்னா இங்க இருக்கீங்க?”, எனத் தூண்டில் போட்டான்.
“இது கான்ட்ராக்ட் வேலை தம்பி. என் முதலாளி வேற ஆளு. அவரு அனுப்பி வைக்கற இடத்துக்கு நாங்க வேலை செய்யணும்…. இங்க அதுமாதிரி ஆறு கூட்டம் ஆளுங்க கலந்திருக்காங்க”, என அவன் விவரம் கூறினான்.
“எப்படின்னா வேற வேற கூட்டத்து ஆளுங்க, ஒருத்தர் கீழே வேலை செய்யமுடியுது”, எனத் தன் சந்தேகத்தைக் கேட்டான்.
“இந்த லைனுக்கே நீ புதுசா தம்பி? “, எனக் கேட்டுவிட்டு, “நம்ம லைன்ல மிலிட்டரி ரூல் தான்…. சாதாரண ரவுடி கூட்டம் இல்ல… நல்லா ட்ரைன் பண்ணி தான் வேலைக்கு அனுப்புவாங்க. இதுலையும் ரேங்க் இருக்கு…. கிரேட்க்கு தகுந்த வேலை. நீ புதுசு அதான் எடுபிடி வேலை மட்டும் வாங்கறாங்க”, எனக் கூறிவிட்டு வண்டியை நிறுத்தினான்.
“எங்கண்ணா போறீங்க?”
“இருடா வரேன்…. “, என ஓரமாக ஒதுங்கிவிட்டு வந்தான்.
சிறிது நேரத்தில் செக்போஸ்ட் வந்துவிட, பொருட்களை ஏற்றிக்கொண்டு அங்கிருந்துத் திரும்பினர்.
வந்ததும் பொருட்களை இறக்கிவிட்டு இனியனைத் தேடினான்.
முகுந்திற்கு லொகேஷன் கிடைத்ததும் அதை சோழனுக்கும்,வழுதிக்கும் அனுப்பிவிட்டு நாகேஷ்வருக்கும் அனுப்பினான்.
நாகேஷ்வர் உடனே தேவையானவற்றை எடுத்துக்கொண்டுக் கிளம்பினான்.
கிளம்பும்முன் பாஸ்போர்ட் முதல் இதர ஏற்பாடுகளைச் செய்துவிட்டு தான் கிளம்பினான். தயாராக பாஸ்போர்ட்-ஐ முகுந்திடம் கொடுத்துவிட்டு, அங்கு சென்றதும் இந்த எண்ணில் இருப்பவனைத் தொடர்புகொள்ளுமாறுக் கூறினான். அன்றே தன் சகாக்களை தோஹா அனுப்பி முன்னேற்பாடுகள் செய்யச் சொன்னான். பின்னர் அங்கிருந்து ஆந்திராவை நோக்கிப் புறப்பட்டான்.
அருவிக்கு வந்த பின் பலத் தடைகளை ம்ரிதுள் ஏற்படுத்தி இருந்தான். ஆங்காங்கே கேமிராக்கள் பொருத்தப்பட்டு இருந்தது. அதில் சிக்காமல் அவன் கடப்பது தான் பெரிதாக இருந்தது.
மரத்தில் ஆங்காங்கே ஆட்களும் இருந்தனர்.
அவனைக் கண்டவர்களை சத்தம் வராமல் கழுத்தறுத்துவிட்டு அங்கிருந்து மரத்திற்கு மரம் தாவியபடி சிறிது தூரம் வந்தான்.
இரண்டு மணிநேரம் கழித்து மரக்கூட்டத்தின் நடுவே வெளிச்சம் தெரிய, மெல்லப் பதுங்கி வந்துப் பார்த்தான்.
பங்களாவில் ஆட்கள் ஆங்காங்கே காவல் காத்தபடி இருக்க, எப்படி நாச்சியாவிடம் செல்வது என யோசித்தபடி ஒரு மரத்தில் அமர்ந்திருந்தான்.
ஏதோ சத்தம் கேட்டு நாகேஷ்வர் திரும்பி பார்த்தபோது, ம்ரிதுள்ளும் அவனைப் பார்த்துவிட்டு அம்பெய்கிறான்.
அவனிடம் இருந்து தப்ப மீண்டும் மரத்திற்கு மரம் தாவும் போது, இனியன் ஒரு பக்கம் இருந்து அவனைப் பிடித்துக் கீழே இறக்கினான்.
“குட் ஜாப் 50. அவன இழுத்துட்டு வா”, எனக் கூறிவிட்டு பங்களாவிற்குள் நுழைந்தான் ம்ரிதுள்.
இனியனை நன்றாகத் தெரிந்த காரணத்தால், தசாதிபன் கொடுத்த லெட்டரை, அவன் உடையில் திணித்துவிட்டு, உடன் பொறுமையாக நடந்துவந்தான்.
“நீ நாகேஷ்வர் தானே?”, என ம்ரிதுள் அவனை விசாரித்தான்.
“ஆமா…. “, சுற்றிலும் பார்வையைச் சுழற்றியபடிக் கூறினான்.
“வெபன்ஸ் கடத்தற உனக்கு இங்கு என்ன வேலை?”, ம்ரிதுள் நெற்றியில் சந்தேக முடிச்சுகள் விழக் கேட்டான்.
“சும்மா மான் வேட்டைக்கு வந்தேன்”, அசால்ட்டாக பதில் கொடுத்தான்.
“மான் வேட்டைக்கைக்கு வர்றவன் எதுக்கு என் ஆளுங்க பத்து பேரை கொன்ன?”, எனக் கேட்டபடி கன்னத்தில் அறைந்தான்.
ஒரே அறையில் அவன் உதட்டில் இரத்தம் வழிந்தது.
“என்னை கொல்ல வந்தா நானும் கொன்னு தான் ஆகணும். நீ யாரு? இங்க என்ன பண்ற?”, எதிர்கேள்விக் கேட்டான்.
“உனக்கு அது தேவையில்லாத விஷயம் ….”, ம்ரிதுள்.
“என்ன நீ கேக்கறதும் உனக்கு தேவையில்லாத விஷயம் தான். சும்மா போறவன கட்டிவச்சி அடிச்சிட்டு இருக்க”, என மீண்டும் எதிர்த்துப் பேசினான்.
யாரையோ பிடித்து அடிக்கிறார்கள் எனக் கேள்விபட்டு அங்கு வந்த நாச்சியா நாகேஷ்வரைக் கண்டு நொடிக்கும் குறைவான நேரத்தில் திகைத்துத் தன்னைச் சமன்படுத்திக்கொண்டாள்.
ஆனால் இளவெழிலி முகத்தில் அப்பட்டமாக சில நொடிகள் திகைப்பைக் காட்டியதை, ம்ரிதுள் ஜன்னல் வழியாகப் பார்த்துவிட்டான்.
“யோகேஷ்…… ஜிதேஷ் இருந்த ரூம் ரெடி பண்ணு”, எனக் கூறினான்.
அதில் என்ன நடக்கும் என்பது தெரிந்ததால் நாச்சியா உள்ளுக்குள் தவித்தாள். இளவெழிலி என்னவென்று புரியாமல் முழித்தபடி, “நாக் எப்படி காப்பாத்தறது நாச்சி”, என வினவினாள்.
“இங்க எதுவும் பேச வேணாம் வா”, என அவளை இழுத்துக் கொண்டுத் தன்னறைக்குச் சென்றாள்.
ம்ரிதுள் டார்ச்சர் அறைக்கு அவனைத் தூக்கிச் செல்ல உத்திரவிட்டு விட்டு நாச்சியாவின் அறைக்கு வந்தான்.
“என்ன நாச்சியா வழிய கண்டுபிடிச்சிட்டியா?”, எனக் கேட்டான்.
“இன்னும் நீ அந்த போட்டோஸ் தரல”, எனத் திடமாகவே பதிலளித்தாள்.
“50……”, எனக் கத்தியதும் இனியன் ஒரு லேப்டாப்பை தூக்கிக்கொண்டு ஓடி வந்தான்.
“சார்”, எனப் பவ்யமாகக் கொடுத்தான்.
“இந்தா இதுல இருக்கு…. இவன் இங்க இருக்கட்டும்…. “, எனத் திரும்பினான்.
“ஒரு நிமிஷம். …..அவன் யாரு?”, எனக் கேட்டாள்.
“தெரியல… இனிமே தான் விசாரிக்கணும்…. ஜிதேஷ விசாரிச்ச மாதிரி”, என மர்மமாகப் புன்னகைத்தபடிக் கூறிச் சென்றான்.
நாச்சியாவும் இளவெலிழியும் மனம் பதைபதைக்க நின்றிருந்தனர்.